Loading

அத்தியாயம் – 20

 

தந்தையுடன் உரையாடலை முடித்துவிட்டு  மெதுவாகத் தன் அறைக்கு வந்தான் தீரஜ், அறையின் அமைதியை கிழித்தது குளியலறையிலிருந்து வந்த நீர் சத்தம்,..

நந்தினி உள்ளே இருப்பது அவனுக்குப் புரிய, அவள் வெளியே வரும் வரை சும்மா உட்கார்ந்து இருக்காமல், ‘இப்போ ஓரளவுக்கு முன்னேற்றம் வந்திருக்கு, இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தா எழுந்து நிற்க முடியும்’ என்ற உற்சாக எண்ணம் மனதுக்குள் வந்து போனது…

வீல்சேரையும் அருகிலிருந்த கட்டிலின் விளிம்பையும் தாங்கிக் கொண்டு மெதுவாக எழுந்தான் வலியைப் பொருட்படுத்தாமல், கால் சற்றே நிலை நிற்கும் அந்தக் கணம் அவனுக்குள் வெற்றியின் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது, ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு கணம் கூட நீடிக்கவில்லை, உடல் சோர்ந்து, தாங்க முடியாமல் தொப்பென்று தரையில் விழுந்தான்….

“அம்மா!” என வலியில் கலந்த அவனது அலறல் அறையை முழுவதும் அதிர வைத்தது, அந்த சத்தம் குளியலறைக்குள் இருந்த நந்தினியின் காதிலும் விழுந்தது, எதைப் பற்றி சிந்திக்காமல், உடலில் தூவாலையை சுற்றிக் கொண்டு கதவை திறந்து வெளியே வந்து பார்க்க, தீரஜ் தரையில் விழுந்து கிடந்தான்,…

அடுத்த கணம்… “ஐயோ என்னாச்சு” என்று கேட்டபடி தன் நிலை மறந்து வேகமாக ஓடிவந்தாள், தரையில் விழுந்து கிடக்கும் தீரஜை பார்த்ததும் அவளின் இரத்தமே உறைந்து போனது, பதட்டமாய் அவன் அருகில் முழங்கால் மடக்கி அமர்ந்தவள்,.. “எப்படி விழுந்தீங்க” என்று கேட்டாள்,..

“நிக்க… ட்ரை பண்ணேன், விழுந்துட்டேன்” என்று மூச்சுக்குச் சிரமப்பட்டபடி சொன்னான் அவன்…

“தனியா ஏன் ட்ரை பண்ணீங்க?” சிறிதாய் கடிந்து விட்டு,.. “வாங்க… எழுந்துடுங்க” என்று அவன் தோளில் கைகளைச் சுற்றி மெதுவாகத் தூக்கி கட்டிலில் அமரவைத்தாள்…

அவள் முகத்தில் தெரிந்த கவலை, குரலில் ஒலித்த அதிர்ச்சி அவள் இதயம் எவ்வளவு கனிந்திருக்கிறது என்பதற்குச் சாட்சி…

“எங்காவது அடி பட்டதா?” என்று அவள் மீண்டும் மீண்டும் கேட்டபடி பார்வையால் அவனை தொட்டு பார்த்தாள், அந்த நொடியில் தான் தீரஜின் பார்வை நந்தினியிடம் விழுந்தது…

அவள் இன்னும் குளியல் பாதியில் இருந்தாள், உடலை மூடியிருந்தது வெறும் தூவாலை மட்டுமே, முகத்தில், தோள்களில், கைகளில் முத்துக்களாய் ஜொலித்த நீர்த்துளிகள் அவளை இன்னும் அழகாகத் தோற்றமளிக்கச் செய்தன, சோப்பின் மணமும் குப்பென்று அவளிடமிருந்து வீசியது….

அவள் தன்னைக் கவனிக்காமல் அவனருகில் பாய்ந்து வந்ததை நினைத்தபோது, தீரஜின் மனம் அடக்க முடியாத உணர்ச்சிகளால் திகைத்துப் போனது…

நந்தினி அப்போது தான் அவன் பார்வையின் கனத்தை உணர்ந்தாள், தன் நிலையை உணர்ந்தவளுக்கு வெட்கத்தில் உடலெல்லாம் சிவந்தது, இரத்தம் முகம் முழுவதும் ஏறியதுபோல் தோன்றியது…

அடுத்த கணம், எந்தச் சொல்லும் இன்றி அவள் வேகமாக எழுந்து குளியலறைக்குள் பாய்ந்து கதவை அடைத்துக் கொண்டாள்,..

அறை முழுவதும் அவள் மணம் மட்டுமே நிறைந்திருந்தது, கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த தீரஜ் மூச்சை  இழுத்து விட்டபடி… ‘என்ன மாதிரி ஃபீலிங் இது, உடம்பெல்லாம் ஒரு மாதிரி முறுக்குது’ அவன் உள்ளம் துடித்தது…

மனிஷாவை அவன் நேசிக்கும் காலத்தில் அவளோடு நெருங்கி பழகிருக்கவில்லை, அவன் நேசம் தொலைவிலிருந்தே மரியாதையோடு வெளிப்படும், அவள் கரத்தைத் தாண்டி வேறெதையும் தொட்டதில்லை, அவள் கையைத் தொட்ட தருணங்களில் கூட இதுபோன்ற பரபரப்போ, இதுபோன்ற தீண்டலின் உணர்வோ ஒருபோதும் வரவில்லை…

ஆனால் நந்தினியிடம் அவன் உணர்வுகள் கரைபுரண்டு ஓடியது,
அவளது முகத்தில் துளிர்த்த நீர் முத்துகள், அவள் அருகே வந்து அவனை எடுப்பதில் தோன்றிய அக்கறை, இப்போது அவனது மூச்சில் கலந்த சோப்பு மணம் அனைத்தும் அவனுள் புது விதமான உணர்ச்சிகளை கிளப்பியது….

அவளை நெருங்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு செல்லிலும் பரபரத்தது, அந்த ஈர்ப்பு அவனுக்கே புரியாதபடி வலுவானதாக இருந்தது…

‘ஏன் நான் இப்படியெல்லாம் யோசிக்கிறேன்? அவளை நெருங்கணும்னு நினைக்கிறேன்… அவ மேல காதல் உணர்வெல்லாம் இன்னும் வரலை, ஆனா வேற மாதிரி உணர்வுகள் எல்லாம் வருது, என்ன தான் நடக்குது எனக்குள்ள?’

ஒரு பக்கம் குழப்பமும், இன்னொரு பக்கம் அடக்க முடியாத ஈர்ப்பு கலந்த உணர்ச்சியும், தீரஜின் உள்ளத்தை அமைதியாக இருக்க விடாமல், கடல் போலக் குலுக்கியது…

இங்கு குளியலறைக்குள் வந்து கதவை மூடிக்கொண்ட நந்தினி சுவரில் சாய்ந்து நின்றாள், இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது,…. ‘ஐயோ… என்ன பண்ணிட்டேன் நான்? இந்த நிலையிலேயே ஓடி போயிட்டேனே’ என்று வெட்கத்தில் முகத்தை கைகளால் மூடிக்கொண்டாள்…

உடலிலிருந்து சொட்டிய நீர் துளிகளே அவளுக்குப் பாரமாய் இருந்தது, தீரஜின் பார்வை இன்னும் கண்முன் தெளிவாக நின்றது, அந்த பார்வையில் இருந்த அதிர்ச்சியும், தன்னைக் கவர்ந்த ஈர்ப்பும், சொல்லாமல் சொல்லும் ஏதோ ஒரு உணர்வும் அவளுக்கு புரியாமல் இல்லை,..

மறுபக்கம், அவள் மனமும் ‘அந்த பார்வைனால என்னோட உடம்பெல்லாம் ஏன் சூடாகுது? என்னெமோ ஆகுது எனக்குள்ள’

அவன் கீழே விழுந்த நிலையைப் பார்த்த அச்சம்தான் முதலில் மனதை குலுக்கியது, ஆனால் அடுத்த கணம், அவன் பார்வையில் ஒளிந்திருந்த விருப்பம், அது அவளுக்கே குழப்பத்தைத் தந்தது….

‘அவரோட கண்களில் அது என்ன உணர்ச்சி? என்னைப் பார்த்த விதம் வேற மாதிரி இருந்தது… ஆனா… நான்? நானும்.. எனக்குள்ளேயும் ஏன் ஒரு மாதிரியாகுது?’ என்று  சுவரில் தலையை சாய்த்தாள்…

அவள் இதயத்துக்குள் மெதுவாக…
‘இது தான் காதலா… இல்லை வேற ஏதாவது உணர்வா? அவரை அந்த பார்வையை பார்த்தவுடனே எனக்கே கட்டுப்படுத்த முடியாதபடி கை காலெல்லாம் நடுங்குது…, அவர் பார்வை காந்தமா கட்டி இழுக்குது’ நீர் சொட்டும் சத்தத்தோடு, அவளது உள்ளத்திலும் உணர்வுகள் துளிர்த்துக் கொண்டிருந்தது, வெட்கமும் ஈர்ப்பும் கலந்த புதிய உணர்ச்சி அவளை விட்டு விலகவேயில்லை…

குளியலறையிலிருந்து உடை மாற்றிக் கொண்டு வெளிவந்தவளுக்கு தீரஜின் முகத்தை நேர்கொண்டு பார்க்கவே முடியவில்லை, அவனது பார்வை தன் மீது நிலைகுத்திக் கொண்டிருப்பதை உணர்ந்தவளுக்கு, சுவாசிக்க கூட முடியவில்லை, ஒவ்வொரு மூச்சும் கனத்துப் போய், அவளது உள்ளத்தை திடுக்கிட வைத்து, உடம்பெல்லாம் நடுங்கியது….

அதற்கு மேலும் அங்கு இருக்க முடியாதவளாய் அறையை விட்டு வெளியே போய் விடலாம் என்று நினைத்தவள் மெல்ல அடி எடுத்து வைத்தவுடனே, “எங்கே போற மது” என்ற தீரஜின் குரல் அந்த நிமிட அமைதியைத் துளைத்தது….

அவன் கேட்ட கேள்வி அவளது இதயத் துடிப்பை மேலும் தீவிரமாக்கியது, முகம் சிவந்து போனவள்  தடுமாறிய குரலில்,
“வே… வேல இருக்கு… கொஞ்ச நேரத்துல வரேன்… ராமு அண்ணாவையும் வரச் சொல்லிட்டு போறேன்…” என்று சொல்லிவிட்டு, ஒரே மூச்சில் கதவைத் திறந்து வெளியேறி ஓடி விட்டாள்,..

அவள் ஓடிச் சென்ற பாதையை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்த தீரஜின் உதடுகளில் மந்தகாச புன்னகை ஒன்று மலர்ந்தது….

அன்று காலை உணவு நேரத்தில் கூட, நந்தினி தீரஜின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை, தலை குனிந்தபடியே அமைதியாக சாப்பிட்டு எழுந்தாள், அந்த நாளில் அலுவலகத்தில் வேலை காரணமாக அவனது அறைக்கு வந்தபோதும், பார்வையை உயர்த்தி அவனை நோக்காமல் குனிந்த தலையை நிமிர்த்தாமலேயே பேசிவிட்டு வெளியேறிவிட்டாள்…

அவளது இந்த செயல் தீரஜின் உள்ளத்தில் ஒரு புதுமையான சுவாரஸ்யத்தை கிளப்பியது, கண்களை மூடினாலே, காலையில் அவள் நின்ற கோலம் தான் நினைவில் வந்தது, அந்த சித்திரம் மறையாமல் அவன் கண்முன்னே மிதந்தது…

உடலெல்லாம் ஒரு மாதிரி முறுகேறிக் கொண்டே இருந்தது,
அவளை நெருங்க வேண்டும் என்ற ஏக்கத்தில் மனமும் உடலும்  துடித்தது,..

அன்றைய இரவு உணவு நேரத்திலும் நந்தினி தலையை நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்க்கவே இல்லை, எப்போதும் கலகலப்பாக சிரித்து பேசும் மருமகள் அன்று வித்தியாசமாக அமைதியில் மூழ்கி இருப்பதை கண்டு கவலை கொண்ட தியாகராஜன்.. “என்னாச்சு மா நந்தினி? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்க,..

“அதெல்லாம் ஒன்னுமில்ல மாமா… நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று அவள் புன்னகையை வரவழைத்து காட்டியவுடன் தான் அவரின் மனமும் சமாதானமடைந்தது…

உணவுக்கு பிறகு அவளுக்கு அறைக்குள் செல்லவே  சங்கடமாக இருந்தது, செல்லாமலும் இருக்க முடியாதே, தயக்கம் நிறைந்த அடிகள் அவளைக் அறைக்குள் கொண்டு வந்து சேர்த்தது,..

தீரஜ் படுக்கையில் சாய்ந்து, கையில் ஒரு மேகஸின் புத்தகத்துடன் இருந்தான்,
அந்த தருணத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நந்தினி, வேகமாக வந்து தன் இடத்தில் படுத்துக் கொண்டாள்…

ஆனால், அவள் நகர்வுகளை எல்லாம் கவனித்திருந்தான் தீரஜ்,
இதழ்கள் புன்னகையுடன் இருந்தாலும், அவளின் மணம் அந்த அறையையே மூடி, அவனை ஆழ்ந்த ஈர்ப்பில் கட்டியிழுத்தது…

தன் உள்ளத்தில் எரியும் ஆசையை அடக்க முடியாமல், நந்தினியிடம் நெருங்க வேண்டும் என்ற பேராவலில் கால்களை தூக்க முயன்றான், ஆனால் அந்தக் கணம் கால்கள் சலனமின்றி கிடப்பதை உணர்ந்ததும், உள்ளம் கொதித்தது, ஒரு கணம் அந்த இயலாமை மீது கோபமும், துயரமும் புயல் போல் எழுந்தது….

விழிகளை மூடி சுவாசத்தை சமன்செய்து கோபத்தை கட்டுப்படுத்தியவன், பக்கவாட்டாக திரும்பி பார்த்தான், அவள் முதுகை காட்டியபடி அமைதியாக படுத்திருந்தாள்…

குரலை சற்றே செருமியபடி.. “மது” என்று அவளை அழைத்தான்..

திரும்பியவளோ, “ம்?” என்றாள், அவள் கண்களில் அவனுக்கு எதுவும் தேவையா? என்ற கேள்வி மின்னியது….

அவனோ மெதுவாக.. “பக்கத்துல வா…” என்றான்.. அந்த வார்த்தை நந்தினியின் மனதை ஒருசில நொடிகள் பதட்டத்தில் மூழ்கடித்தது, இப்படியெல்லாம்
அவன் இதுவரை அழைத்ததில்லை, மேலும் அவன் கண்களில் பொங்கி வழிந்த அன்பும் அடக்கமறுக்கும் உணர்ச்சிகளும் வேறு அவளின் நெஞ்சை தடுமாறச் செய்தது…

செல்லலாமா? செல்லக்கூடாதா? என்ற குழப்பத்தில், அவள் விரல்களை ஒன்றோடொன்று பிசைந்து கொண்டாள்,..

“வர மாட்டியா?” என்ற அவனது மெல்லிய கேள்வி, அவள் மனதில் இருந்த தடைகளைக் கரைத்தது, மெல்ல தயக்கத்துடன், நடுங்கும் இதயத்தோடு, அவனருகில் அவள் நகர்ந்து வந்தாள்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
39
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்