அத்தியாயம் – 17
அலுவலக கதவைக் கடந்து நடந்து சென்றுகொண்டிருந்தாள் நந்தினி, அப்போது திடீரென,.. “ஹாய் நந்தினி…” என்ற ஓர் அறிமுகமான குரல் அவளது காதில் விழ, தன்னிச்சையாகத் திரும்பினாள்…
அசோக் கையில் கோப்புகளை ஏந்தியபடி, புன்னகையுடன் அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான், அவனும் அப்போது தான் அலுவலகத்திற்க்குள் நுழைந்திருந்தான் போலும், தோளில் லேப்டாப் பேக்கும் தொங்கி கொண்டிருந்தது….
“ஹாய்…” அவளும் மரியாதையோடு பதிலளித்தாள்…
அவளை ஒரு நிமிடம் கவனித்தவன் “இந்த யெல்லோ சல்வார் உனக்கு ரொம்ப நல்லா இருக்கு…” என்று சொல்ல, அவளுக்கோ சங்கடம்,..
தடுமாற்றத்துடன் நின்றாள், ஆனால் முகத்தில் சிறிய புன்னகையைக் கட்டாயப்படுத்தி கொண்டு வந்து சமாளித்தவள்,.. உள்ளுக்குள் ‘இப்போ இந்த காம்ப்ளிமெண்ட்ஸ் அவசியம் தானா’ என்று நினைத்தாலும், வெளியில் எதையும் வெளிப்படுத்தாமல்.. “நான் கேபின்க்கு போறேன்” என்று முன்னே நடந்தாள்,..
“ஒரே ஃப்ளோர் தானே, பேசிக்கிட்டே போகலாம்” என்றவன், அவளோடு இணைந்து லிஃப்ட்டில் ஏறிக் கொண்டான், “நீ ஒன்னு கவனிச்சியா நந்தினி, எல்லா டீம் மீட்டிங்கிலும் நீ பேசுறதை எல்லாரும் ரொம்ப அட்டென்ஷனாக கேக்கிறாங்க. ரொம்ப கிளியர் ஆ பேசுற” என்றான்,… அவளுக்கு புன்னகைக்க வேண்டிய கட்டாயம்,.
“நீ ஹெல்ப் பண்ணின அந்த லாஸ்ட் ரிப்போர்ட் இல்ல, அதுக்கு நான் கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லியே ஆகணும், இல்லைனா என் பிரெசன்டேஷன் பாழாயிருக்கும்.” என்றான்
அவளோ மரியாதையுடன்,
“அதெல்லாம் என் வொர்க் தானே… தேங்க்ஸ் எதுக்கு” என்று சுருக்கமாகச் சொன்னாள்…
ஆனால் அசோக் இன்னும் தொடர்ந்தான்… “வொர்க்ல மட்டும் இல்ல நந்தினி, உன்னோட அடிட்யூட் கூட ரொம்ப வேற மாதிரி இருக்கு, எப்போதும் கல்மான்டா, புரொஃபஷனலா… எனக்கு அதுதான் பிடிக்கும்” என்றான்
அவன் சொல்லும் விதத்தில் எந்த தவறும் இல்லை, நாகரீகமாகவே இருந்தது, ஆனால் அவளுக்கு தான் அவன் ஓவராக புகழ்வது போலவே இருந்தது, அன்று அவன் காதலை மறுத்த பிறகு அவன் எந்தவித செந்திரவும் செய்யவில்லை, அதனால் அவன் இப்போது நட்பாகவே பேசுகிறான் என்று தான் அவள் எண்ணிக் கொண்டாள்…
லிஃப்டை விட்டு வெளிவந்த பிறகு “ஓகே அப்புறம் பார்க்கலாம்” என்று அவள் தன் கேபிணை நோக்கி நகன்று விட, அவனும் போகும் அவளை நின்று ரசித்து பார்த்து விட்டு பிறகு தான் தனது கேபின் நோக்கி சென்றான்..
அன்று முக்கியமான மீட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது,
முழு டீமும் காண்ஃபரன்ஸ் ஹாலில் அமர்ந்து, தீரஜின் பிரெஸன்டேஷனை கவனமாகக் கேட்டு குறிப்பெடுத்து கொண்டனர்,
நந்தினியும் அதில் முழுமையாக மூழ்கியிருந்தாள்…
ஆனால், பேசிக் கொண்டிருந்த தீரஜின் கவனம் வேறு இடத்தில் சிக்கிக் கொண்டது, அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த HR அசோக், அடிக்கடி நந்தினியின் மீது பார்வையை செலுத்திக் கொண்டே இருந்தான், சில வினாடிகள் நீண்ட அந்த பார்வை, தீரஜின் கண்களில் விழுந்தது…
ஒருமுறை… இருமுறை… மூன்றாவது முறையும் அவன் கவனித்தபோது, தீரஜின் நரம்புகள் இறுகின, பிரெஸன்டேஷனில் பேசிய வார்த்தைகள் அவனது வாயிலிருந்து வந்தாலும், அவன் மனதில் பதியவில்லை…
விழிகள் சுருங்கி, உள்ளுக்குள் ஒருவித எரிச்சல் கொதித்தது.
‘ஏன் இவனோட பார்வை அடிக்கடி அவமேல தாங்கி நிக்குது?’ என்ற கேள்வி அவனை வாட்ட, அவன் கையிலிருந்த பேனா தன்னிச்சையாக வலிமையாக அழுத்தப்பட்டது….
நந்தினி அந்த பார்வையை அறியாமலே, தன் நோட்ஸில் முழு கவனத்தோடு எழுதிக் கொண்டிருந்தாள், ஆனால் தீரஜின் உள்ளம் மட்டும் அமைதியில்லாமல்
ஏதோ சொல்லிக்கொண்டிருந்தது…
அன்று மீட்டிங் முடியும் வரை தீரஜின் மனதிலிருந்த எரிச்சல் அடங்கவே இல்லை, இதுவரை அவள் மீது எந்தவித ஈர்ப்போ வேறு உணர்வுகளோ அவனுக்கு எழவில்லை, ஆனாலும், தாலி கட்டியவன் என்ற அந்த ஒரு உண்மை, அவனுக்குள் உரிமையின் தீயை எரியவைத்தது..
அவளை நோக்கிய ஒவ்வொரு அசோக்கின் பார்வையும், தீரஜின் மனதில் சொல்லமுடியாத ஒரு தொந்திரவை ஊட்டி கொண்டே இருந்தது…
அன்று இரவு, இருவரும் தோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். வெளியில் மெதுவான தென்றல் வீசியது, சில நொடிகள் அமைதியாக இருந்த தீரஜ் சற்றே தயக்கத்துடன் குரலை செறுமிக் கொண்டு,.. “மதுநந்தினி…” என்று அழைத்தான்,..
தென்றல் காற்றின் இனிமையில் மூழ்கி இருந்தவள் சிறிது முக சுருக்கத்துடன் முகத்தைத் திருப்பி,
“எதுக்காக என்னை எப்போ பாரு முழு பெயர் சொல்லியே கூப்பிடுறீங்க, ஷார்ட்டா கூப்பிடலாம்ல” என்றாள் உதட்டை சுழித்து…
புன்னகைத்தவனோ… “ஏன் ஃபுல் நேம் வச்சு கூப்பிபிறதுனால என்ன” என்று வினவ,.. “நான் ஸ்கூல் படிக்கும் போது சயின்ஸ் மேம் இப்படி தான் கூப்பிடுவாங்க, ஒரு மாதிரி டெரரா இருக்கும், நான் நல்லா தான் படிப்பேன் என்றாலும் அவங்க கூப்பிடும் போதுலாம் ஒரு மாதிரி பயமா இருக்கும், வீக் ஸ்டூடன்ஸை செம்மயா வெளுத்து கட்டுவாங்க, அவங்க அடி வாங்குறத பார்த்து எனக்கு நடுங்கும்” என்றாள்,…
“ஓஹோ… இதுக்கு இப்படி ஒரு ஸ்டோரி வேற இருக்கா” என்று கேட்டவனோ,… “எல்லாருமே உன்னை நந்தினின்னு தானே கூப்பிடுறாங்க, நானும் அப்படியே கூப்பிடட்டுமா” என்று வினவ,.. “இல்ல நீங்க என்னை மதுன்னு கூப்பிடுங்க, அப்படி கூப்பிடுறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும், ஏன்னா என் அப்பா என்னை இப்படி தான் கூப்பிடுவாங்க” என்று சொல்ல,
அவளது குரலில் பாசம் கலந்ததை உணர்ந்தவன், புன்னகையுடன் சாய்ந்து,.. “ஓகே… மது” என்று நிதானமாக உச்சரித்தான்…
அந்தச் சொல்லில் அவளது இதயம் மெதுவாகக் கசிந்து ஓர் இனிமையை உணர்ந்தது…
அதன் பின்னர் அவனோ,..”ஒரு விஷயம் கேக்கணும்” என்று சொல்ல,.. “ம்ம்.. கேளுங்க” என்றாள்,.. “அசோக் உன்கிட்ட நல்லவிதமா பேசுவானா?” என்றான்,.
அவளோ.. புருவம் சுருக்கிக் கொண்டு அவனைப் பார்த்தவள்.. “ஏன் அப்படி கேட்கிறீங்க?” என்றாள்,..
“மீட்டிங்க்ல இருந்தப்போ கவனிச்சேன்… அவன் பார்வை அடிக்கடி உன்மேல வந்து விழுது” அவன் வெளிப்படையாக கூறி இருக்க,.. அதிர்ந்தவளோ,… “அ.. அப்படினா” என்றாள் புரியாமல்,..
மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவனோ,… “ஒரு பையனோட பார்வை ஒரு பொண்ணு மேல அடிக்கடி விழுதுன்னா காரணம் என்னவாக இருக்கும்னு உனக்கு புரியலயா?” என்று வினவ,.. “இல்ல அது,..” அவள் சற்றே திணறியபடி மூச்சை இழுத்து விட்டு மெதுவாக,.. “அன்னைக்கு ஒருநாள் என்னை காதலிப்பதாக சொன்னார், ஆனா நான் முடியாதுன்னு நேரா மறுத்துட்டேன், அதுக்கப்புறம் அதை பத்தி ஒரு வார்த்தையும் பேசல” என்றாள்..
அவனோ.. சற்றே கடுமையாக, “இதைப்பத்தி முன்னாடியே ஏன் என்கிட்ட சொல்லல?” என்று கேட்டான்…
“இது பெரிய விஷயம்னு தோணல, நான் மறுத்ததுல இருந்து அவர் என்னை தொந்திரவு செய்யல, மறந்துட்டாருன்னு நினைச்சேன், மத்தபடி உங்ககிட்ட சொல்லவேணாம்னுலாம் நினைக்கல” என்றாள்
தீரஜ் பார்வையை விலக்கி, மெதுவாக, “அவன் பார்வை இன்னும் அடிக்கடி உன் மேல படுது” குரல் சற்றே இறுக்கமாயிருந்தது…
“அது சாதாரண பார்வையா இருக்கலாம்ல…” என்று மெதுவாகச் சொன்னாள் நந்தினி..
அவனோ இல்லை தலையசைத்து, கண்களில் உறுதியோடு, “எனக்கு அப்படி தோணல, அவன்கிட்டருந்து நீ விலகியே இரு,” என்றான்…
அந்த ஒரு வாக்கியத்தில் அவன் கணவனாகிய உரிமையும் கவலையும் வெளிப்பட்டது, அவளுக்கோ அதனை நினைத்து மனதில் ஒரு இனிய இன்பம் பரவியது, அவன் பாதுகாப்பில், தான் இருக்கிறேன் என்ற உணர்வு அவளை மகிழ்ச்சியடையச் செய்தது…
பதில் பேசாமல் சற்று மெதுவாக தலையசைத்துக் கொண்டாள், அந்த தலையசைவிலேயே அவன் வார்த்தைக்கு அளித்த ஒப்புதல் மட்டுமல்ல, அவனது அக்கறையை ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியும் தெரிந்தது….
அந்த நாளுக்குப் பிறகு நந்தினி, அசோக்கிடம் எப்போதும் மரியாதையுடன் ஒரு இடைவெளியைப் பேணினாள்,
ஆனால், அதை கவனிக்க முடியாத அளவிற்கு வேலை பளு அசோக்கை மூழ்கடித்திருந்தது,
அவன் முழுதாகச் சிக்கி இருந்த கணக்குகள், டார்கெட்கள், ரிப்போர்ட்களின் நடுவே நந்தினியின் இடைவெளி அவனுக்குத் தெரியாமலேயே போய்விட்டது,…
*************
அன்று டைனிங் டேபிளில் அமர்ந்தபடி கணவனுக்காக காத்திருந்தாள் நந்தினி, சாப்பிட வரவேண்டிய நேரத்தில், தீரஜுக்கு ஒரு முக்கியமான போன் வந்துவிட்டது… எனவே அவன் “நான் பேசிட்டு வர்றேன், நீ போய் சாப்பிடு” என்று அவளைப் போகச் சொலலிட, அவளும் வந்துவிட்டாள்…
ஆனால் தனியாக சாப்பிட தான் மனம்வரவில்லை, அதனால் தான் அவனுக்காக காத்திருந்தாள்,
இன்னும் தியாகராஜனும் வீடு திரும்பவில்லை, அவள் சிந்தனையில் மூழ்கியிருந்த அந்த நேரத்தில், மனிஷா உள்ளே வந்தாள்….
அவளை கண்டதும், வழக்கம்போல் சினேகமாக புன்னகைத்தாள் நந்தினி.. ஆனால், மனிஷாவின் முகத்தில் எந்தப் புன்னகையும் இல்லை, அவள் அலட்சியமாக ஒரு பார்வை வீசிவிட்டு, திமிரோடு அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்…
மனிஷா சில நேரங்களில் வார்த்தை மீறிப் பேசுவாள்,
அந்தச் சமயங்களில் எல்லாம் சண்டையைத் தவிர்க்க நந்தினி எப்போதும் அமைதியாக சமாளித்துப் போவாள்,
அதனால்தான் இப்போதும் அவள் புன்னகைத்தாள், ஆனால், மனிஷா பதிலுக்கு கூட புன்னகைக்காமல், திமிர் பார்வையை மட்டும் வீசியது நந்தினியின் மனதில் கசப்பை ஏற்படுத்தியது…
“என்ன இன்னைக்கு… மகாராணி மட்டும் தனியா ராஜ்யம் பண்ற மாதிரி இருக்கீங்க?” அந்த வார்த்தைகளில் ஒளிந்திருந்த கிண்டல் நந்தினியின் காதில் பளீரெனப் பட்டது, ஆனால், அவள் ஒன்றும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள்..
ஆனால் மனிஷா விடவில்லை,..
“சரி… நான் ஒன்னு கேக்கறேன், மறைக்காம நேர்மையா பதில் சொல்லுறியா?” என்றாள் கண்களில் ஒரு வித கூர்மையுடன்.
நந்தினி சிறிது குழம்பினாள்,
ஆனாலும் அமைதியை இழக்காமல், மெதுவாக “கேளுங்க…” என்று சொல்ல… “கல்யாணமாகி இப்போ ஒரு வாரத்துக்கு மேல ஆகுதே, இந்த நாட்கள்ல… ஏதாவது ரொமான்ஸ் நடந்ததா?” என்றாள்
அவளின் அந்த கேள்வி நந்தினியின் இதயத்தில் கல்லெறிந்தது போல பட்டது, முகமே சுருங்கி போனது.
‘என்ன மாதிரி கேள்வி இது? எங்களுடைய அந்தரங்க விஷயங்களை கேட்கும் தகுதி இவளுக்கு யார் கொடுத்தது?’
என்று மனதிற்குள் கொந்தளித்தாள்….
ஆனால் மனிஷா அங்கேயே நின்றுவிடவில்லை. “பதில் சொல்ல முடியலையா? எனக்கு தெரியும் உன்னோட கஷ்டம், நகர முடியாதவனால உன் பக்கத்துல வந்து ஹக் பண்ண முடியாது, ஆசையா ரொமான்ஸ் பண்ண முடியாது, நீயே வேணும்னா அவனை நெருங்கி தொடங்கிக்கலாம்…” என்று சிரித்துக்கொண்டு நெருப்பை ஊற்ற,..
அதற்கும் மேல் அவள் வார்த்தைகளை சகிக்க முடியாத நந்தினி… “போதும் நிறுத்து” சத்தமிட்டப்படி வெடித்தாள்…
“இன்னொரு வார்த்தை என் புருஷனைப் பத்தி உன் வாயில இருந்து வந்தா… நல்லா இருக்காது சொல்லிட்டேன், மற்றவங்க வாழ்க்கைக்குள்ள எட்டி பார்க்க நினைக்கிறது உனக்கே அசிங்கமா தெரியலையா?” அவள் குரலில் துள்ளிய கோபம் இருந்தது….
ஆனால் மனிஷாவோ சிரிப்பை நிறுத்தவில்லை,.. “நான் என்ன அசிங்கமா சொன்னேன்? உண்மையைதானே சொன்னேன்? நீயே சொல்லு… இத்தனை நாட்கள்ல உனக்கு அவனால சின்ன சுகத்தையாவது தர முடிஞ்சுதா?” என்று வினவினாள்.
அந்த வார்த்தைகள் நந்தினியின் உள்ளத்தில் நெருப்பைச் சிந்தின,
அவள் கைகள் நடுங்க, உதடுகள் பதறின, ஆனால் அந்தக் கோபத்தை வார்த்தையாக்க மிகவும் கஷ்டப்பட்டாள்….