அத்தியாயம் – 16
நாட்கள் மெல்ல நகர்ந்தன, அன்று வழக்கம்போல் காலை உணவுக்குப் பிறகு, தீரஜின் அறைக்கு பிசியோதெரபிஸ்ட் வந்தார், இது புதிதல்ல, வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை அவர் வந்து சிகிச்சை அளித்து செல்வார்….
அன்றைய நாள் முதல் முறையாக அதனை நெருக்கமாகக் கண்டாள் நந்தினி, தீரஜ் வீல்சேரிலிருந்து படுக்கைக்கு மாற்றப்பட்டான்,
பிசியோதெரபிஸ்ட் அவனது கால்களை மெதுவாக உயர்த்தி வளைத்து, சில பயிற்சிகளைச் செய்தார், ஒவ்வொரு முறையும் தசைகள் கஷ்டப்பட்டு இறுகியபோது, தீரஜின் நெற்றியில் வியர்வைத் துளிகள் மிதந்து, உதடுகள் கடினமாய் சுருங்கின…
நந்தினிக்கு அவனை அந்த நிலையில் பார்த்தபோது மனம் பிசைந்தது,.. ‘நடக்க முடியாதது அவருக்கு வலிதான், ஆனா இந்த சிகிச்சைனால தினமும் நினைவூட்டப்படுற மன வலி இன்னும் கொடுமையா தானே இருக்கும்’ என்று யோசித்தபடி
எதுவும் சொல்லாமல் ஒரு பக்கத்தில் நின்றவள், தன்னால் இயன்ற அளவுக்கு பிசியோதெரபிஸ்டுக்கு உதவி செய்தாள்..
சில நிமிடங்கள் கழித்து சிகிச்சை முடிந்தது… பிசியோதெரபிஸ்ட்.. “முன்னேற்றம் நிறைய தெரியுது, தசைகள் சற்று மென்மையாகிருக்கு, தொடர்ந்து பயிற்சி செய்தா இன்னும் நல்ல பலன் வரும்” என்றார் உற்சாகமாக.
அவரது வார்த்தைகளில் உருவான உணர்வை தீரஜ் வெளியில் எதுவும் காட்டவில்லை, ஆனால், அந்த நிமிடத்தில் நந்தினி அவனது கண்களில் மின்னிய ஒளியைக் கவனித்தாள், மனதில் இருந்த நம்பிக்கையின் சிறு தீப்பொறி மீண்டும் ஒளிர்ந்தது போல இருந்தது,..
“தேங்க்யூ சார், அடுத்த முறை வரும்போது இன்னும் நல்ல பலன் சொல்லுவீங்கனு நம்புறேன்” என்று பிசியோதெரபிஸ்டை வழியனுப்பிய தியாகராஜனும் மனநிறைவு அடைந்தார்…
அன்றைய இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தீரஜிற்க்கு
இயற்கை உபாதையினால் திடீரென்று விழிப்பு தட்டியது, சாதாரணமாக இத்தகைய நேரங்களில் ராமுவே உதவி செய்வான், அந்த வீட்டிலேயே தங்கி இருப்பதால், ஒரு அழைப்புக்கே வந்து விடுவான் அவன்…
அவன் அருகில் குழந்தையைப் போல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நந்தினியை தொந்திரவு செய்யாமல் அருகில் இருந்த போனை எடுக்க முயன்றான்,
ஆனால் இன்று போன் எட்டிப் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்ததால் அவனால் சுலபமாக எடுக்க இயலவில்லை, அதை எடுக்க முயன்றபோது, அருகிலிருந்த பொருளை தவறுதலாக தட்டி, அது தரையில் விழுந்து சத்தம் எழுப்பி விட,. அந்த சத்தத்தால் விழித்துக் கொண்ட நந்தினி, தீரஜ் விழித்திருப்பதை கண்டு,… “என்னாச்சு?” என்று கவலையுடன் கேட்டாள்…
“ஒன்னுமில்லை… நீ தூங்கு” என்று அவன் சொல்ல, ஆனால் அவள் உடனே புரிந்து கொண்டாள் அவனுக்கு ஏதோ தேவை இருக்கிறது என்று… “பரவாயில்லை… சொல்லுங்க” என்றாள் மெதுவாக…
“என் ஃபோனை கொஞ்சம் எடுத்து தரியா…” தீரஜ் சொல்ல,. “சரி…” என்று எழுந்து கொண்டவள்,.. “ஆனா இந்த நேரத்துல போன் எதுக்காக?” என்று கேட்க,
“ராமுவை கூப்பிடனும்” என்றான் அவன் சற்றே தயக்கத்துடன்…
அவன் தேவையை உடனே புரிந்த நந்தினி, சற்று யோசித்தவாறு,..
“ராமு அண்ணா இப்போ தூங்கிட்டு இருப்பார்… நான் வேண்டும்னா ஹெல்ப் பண்ணுறேன்” என்றாள்
“என்னை உன்னால வீல்சேர்ல உட்கார வைக்க முடியுமா என்ன?” என்று சந்தேகமாக கேட்க,.. “நான் ட்ரை பண்ணுறேன்” என்றாள் அவள் தன்னம்பிக்கையுடன்…
சங்கடமாக இருந்தாலும், அவனுக்கு மறுக்க தோன்றவில்லை, அவள் வீல்சேரை அருகே கொண்டு வந்தாள், அவனிடம் எங்கு பிடித்தால் பாதுகாப்பாக இருக்கும் என்பதை கேட்டுக் கொண்டு, அவனை மெதுவாகத் தாங்கி எழுப்பினாள், மொத்த எடையையும் அவள் தூக்க தேவையில்லை, அவனே கொஞ்சம் முயற்சி செய்தான், ஆனாலும் அவள் மிகுந்த கவனத்துடனே செயல்பட்டாள்,..
சில நொடிகளில் அவனை வீல்சேரில் அமர்த்தி விட்டாள், அந்தச் செயலைச் சரியாக முடித்துவிட்டேன் என்ற நிம்மதி அவளின் மனதில் பரவியது,
ஆனால் தீரஜோ மனதுக்குள் வேறு விதமான உணர்வோடு இருந்தான், அவள் உதவிக்காக செய்திருந்தாலும் ஒரு பெண்ணின் உடல் தன் உடலில் பட்டதும் அவள் தொடுதலில் அவனுக்கு ஒரு மாதிரியான அவஸ்தையும் சொல்ல முடியாத ஒரு வித்தியாசமான உணர்வும் உருவானது…
அதன் பிறகு அவனே வீல்சேரை தள்ளிக்கொண்டு வாஷ்ரூமுக்குள் சென்றான், அதற்க்கு மேல் அவனுக்கு உதவுவது அவளுக்கே சங்கடமாக இருந்ததால், வெளியேவே நின்றவாறு காத்திருந்தாள் நந்தினி…
சில நிமிடங்களில், தன் தேவையை முடித்து விட்டு திரும்பி வந்தனை மீண்டும் படுக்கைக்கு மாற்ற அவளே முன்வந்தாள், தேவையான இடத்தில் கைகளால் தாங்கி, மெதுவாக அவனைப் படுக்கையில் அமரவைத்து, பின்னர் படுக்க வைத்தாள்..
அந்த நொடியிலும், அவன் மனதுக்குள் ஒரு விசித்திரமான உணர்வு பரவியது, அவள் தொடுதலில் அவனது உடலுக்குள் பாய்ந்த சிலிர்ப்பு, அவனுக்கே புது அனுபவமாக இருந்தது, அந்தச் சங்கடத்தை மறைக்க, முகத்தை சற்றே திருப்பிக் கொண்டான்,..
அவளோ அவன் உணர்வுகளை அறியாமல்,.. “மறுபடியும் ஏதாவது தேவைப்பட்டா தயங்காம என்னை எழுப்பி விடுங்க” என்று சொல்ல,
அவளது வார்த்தைகள் அவன் உள்ளத்தை எங்கோ தொடுவதை உணர்ந்து மூச்சை ஆழமாக இழுத்து விட்டவன், அவளது முகத்தை நோக்கி, சற்று மெதுவாக,.. “தேங்க்ஸ்…” என்று சொன்னான்….
“அதெல்லாம் தேவை இல்ல… நான் உங்க மனைவிதானே” என்று சொல்ல, அவளின் அந்த வார்த்தைகள் அவனது உள்ளத்தில் புதிதாய் ஓர் உறுதியையும், தெரியாத ஓர் இனிமையையும் பரவச் செய்தது…
***************
அப்போது தான் அலுவலகம் விட்டு வந்திருந்தான் தீரஜ், மணி மாலை ஏழு இருக்கும், வீட்டினுள் நுழைந்ததுமே மனிஷாவின் சிரிப்போடு ஷ்யாமின் சிரிப்பும் காதை தீண்ட, அவனுக்கோ ஒருவித எரிச்சல்,.. ‘இதை வீடுன்னு நினைச்சாங்களா? இல்ல பார்க்னு நினைச்சாங்களா?’ என்று கடுகடுத்தவனுக்கோ வெளியே எதுவும் சொல்ல முடியாத நிலை தான், தந்தையிடம் இதனை பற்றி பேச வேண்டும் என்று நினைத்தான்,…
லிஃப்டை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தவனை,.. “ஹாய் தீரஜ்… வாயேன், கொஞ்சம் பேசலாம்” என்று அழைத்தான் ஷ்யாம்…
அவனுக்கோ ஷ்யாமோடு பேச்சு நடத்த விருப்பமே இல்லை… “நாட் இன்ட்ரஸ்ட்” என்று கடுகடுப்புடன் சொல்லி விட்டு நகரப் பார்க்க ஷ்யாம் விடவில்லை,..
“அட சும்மா வாப்பா… மேரேஜ் ஆகிடுச்சுன்னு கேள்விப்பட்டேன். சொல்லவே இல்லையே!” என்று புன்னகையுடன் சினத்தைக் கிளப்பும் குரலில் கேட்டான்,,..
தீரஜ் பொறுமையைப் கடைபிடித்தபடி, “யாருக்கும் சொல்லல” என்று எளிமையாகச் சொல்லிவிட்டு விலக முயல, அந்தச் சமயம் ஷ்யாம் கிண்டலோடு,
“சரி, உன்னை எப்படி ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டா, இருந்தாலும் பாவம்ப்பா அந்த பொண்ணு…” என்று சிரித்தான்…
அவன் சொன்ன அர்த்தம் புரிந்த தீரஜின் நரம்புகள் புடைத்துக் கிளம்பின,..
மனிஷாவும் அனைத்தையும் கேட்டு கொண்டு அமைதியாக சிடித்துக் கொண்டிருந்தாள், அந்த நேரம் ஷ்யாம் ரகசியமாக அவளிடம் ஏதோ சொல்ல, அவளும் சிரித்தபடி,.. “உண்மை தான்… அதனாலதானே நான் வேண்டாம்னு விலகிக்கிட்டேன், ஒரு பெண்ணுக்கு எல்லா ஃபீலிங்ஸும் இருக்கும் தானே? நீங்க சொன்ன மாதிரி அவ பாவம் தான்…” என்றாள்…
அந்த வார்த்தைகள் தீரஜின் காதிலும் விழ, அவன் உடலே இறுகிப்போனது, அவனது உள்ளம் தாங்க முடியாத சுமையை சுமப்பது போல கனத்தது….
அதற்கு மேலும் அங்கு ஒரு நொடி கூட இருக்க விருப்பம் இல்லாமல் தனது அறைக்கு நகர்ந்திருந்தான் அவன், நந்தினி அறையில் தான் இருந்தாள், மாதவிடாய் வலியால் அவள் இன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வீட்டிற்கு வந்துவிட்டாள், வருவதற்கு முன்பே தீரஜிடம் சொல்லியிருந்தாள்…
கையில் நாவல் புத்தகத்துடன் படுத்திருந்தவள், தீரஜை கண்டு புன்னகையுடன் எழுந்து கொண்டு,.. “காஃபி எடுத்துட்டு வரவா, அரவிந்த்…” என்று மெதுவாக கேட்டாள்….
ஆனால், அவன் கண்களோ அவளை வெறித்துப் பார்த்தன, சில நொடிகள் அவளை அசையாமல் பார்த்தவன் குரல் இறுக்கத்துடன்,..
“நான் கேட்கிறதுக்குப் பொய் சொல்லாம பதில் சொல்லுவியா?” என்றான்,…
அவன் முகத்தின் இறுக்கம் ஏதோ தவறு நடந்திருக்கு என்பதை அவளுக்கு உணர்த்த,. சற்றே அஞ்சியபடி,.. “ம்ம்…” என்று தலையசைத்தாள்….
“என்னால உன்னோட இன்டிமேட்டா இருக்க முடியாது, அதனால நீ ஃபீல் பண்ணுறியா?”
அவன் வார்த்தைகள் அவளை சங்கடத்தில் ஆழ்த்தின, பதில் சொல்ல உதடுகள் துடித்தும் வார்த்தைகள் வரவில்லை, பார்வையை தாழ்த்திக்கொண்டாள்.
அவள் தயக்கம் அவன் விழிகளில் பட்டது…கண்களை சுருக்கியவன் “சே ‘யெஸ்’ ஆர் ‘நோ’…” அழுததமான குரலில் கேட்டான்,…
அவளோ உதட்டை கடித்து, ” அ… அது…” என்று இழுத்தாள்…
உண்மையில், அவனது நெருக்கம் பற்றிய எண்ணமே அவளது மனதில் பிறக்கவில்லை, திருமணம் நடந்திருந்தாலும், அவனை கணவனாக அணுகி உறவாட வேண்டும் என்ற எண்ணம் கூட வரவில்லை, இப்போது திடீரென்று அவன் இப்படி கேட்கவும் ஒரு மாதிரியாக இருந்தது,…
அவன் கேள்வியே அவன் வருத்தம் கொள்வது போல யாரோ எதுவோ பேசி இருக்கிறார்கள் என்பதை புரிய வைக்க, மூச்சை ஆழமாக இழுத்து விட்டுக்கொண்டு, அவன் கண்களை நோக்கி மெதுவாக, “இல்ல அரவிந்த் நான் ஃபீல் பண்ணல” என்று தெளிவாகச் சொன்னாள்…
அவள் சொன்ன அந்த வார்த்தைகள், இறுகிக் கிடந்த தீரஜின் மார்புக்குள் ஓர் இலகுவான அலை போல பாய்ந்தன, அவன் கண்களில் இருந்த கோபக் கீற்றுகள் மெதுவாகக் குறைந்து, அவனது முகம் சற்று தளர்ந்தது…
“உண்மையாவா சொல்றே?”என்று குரலில் இன்னும் சிறிது உறுதி தேடி கேட்டான்,..
“ம்ம்… சத்தியமா” என்று அவள் தலை அசைக்க,.., அவளது குரலில் இருந்த நேர்மையும், கண்களில் தெரிந்த உண்மையும் அவனை நம்ப வைத்தது, அவனது உள்ளத்தில் இருந்த சுமை ஓரளவு குறைந்து, மனதில் ஒரு நிம்மதியின் அலை பரவியது…
“எ… என்னாச்சு?.. ஏன் திடீர்னு இப்படி கேட்டீங்க?” அவள் மெல்ல வினவ,. “சில பேரோட வார்த்தைகள் என்னை கேட்க வச்சிடுச்சு,… ஐ ஆம் ஸாரி” என்று அவன் மெதுவாகக் கூறினான். குரலில் இருந்த சோர்வு, மனதிலிருந்த புணர்ச்சி எல்லாம் வெளிப்பட்டது…
“ஸாரி எல்லாம் வேண்டாம்…” என்று மென்மையாகத் தடுத்தவள்… “நீங்க ஃபிரஷ் ஆகிட்டு வாங்க, நாம கொஞ்ச நேரம் கார்டன் போயிட்டு வரலாம்” என்றாள்,..
நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் தோட்டத்தில் சென்று நடக்க பழக்கப்பட்டிருந்தார்கள், இன்று அவன் மனநிலையை மாற்ற அவள் அதைத்தான் யோசித்தாள்…
அவள் சொன்னதை கேட்டு தீரஜின் பார்வையில் மெதுவாக அமைதி வந்து சேர்ந்தது, சிறு தலையசைப்புடன், “ஃபைவ் மினிட்ஸ்…” என்று சொன்னவன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்,…