அத்தியாயம் – 12
மகள் சொன்னதை கேட்டு பார்வதி சில நிமிடங்களுக்கு மேல் பேசவே இல்லை, அவளோ தாயின் மௌனத்தை தாங்க முடியாமல், “உங்களை போல தான்மா, எனக்கும் ரொம்ப அதிர்ச்சியா இருந்தது… இப்போ நான் என்ன பண்ணட்டும்?” என்று தவிப்புடன் கேட்டாள்…
மகளின் முகத்தை நிமிர்ந்து பார்த்த பார்வதி,.. “அது தான்… சம்மதம்னு சொல்லிட்டு வந்துட்டியே?” என்று மெதுவாகக் கேட்டார்…
“எனக்கு வேற வழி தெரியலம்மா, உங்க உயரத்துக்கும் என் உயரத்துக்கும் கொஞ்சமும் பொருந்தாதுனு நான் எவ்வளவோ சொன்னேன், ஆனா… அவர் கேட்கவே இல்ல…” என்று குரல் தளரச் சொன்னாள்….
பார்வதி ஆழ்ந்த யோசனையில் மூழ்கினார், விபத்தில் அவனுக்கு கால்கள் செயலிழந்து விட்ட விஷயம் அவரை மிகவும் வருத்தபடுத்தியது, அவனை எண்ணி கவலை கொண்டார், ஆனால் அவனுடன் மகளுக்கு திருமணம் சரிதானா? அவள் வாழ்க்கை நிம்மதியாக இருக்குமா? என்ற சந்தேகம் அந்த தாயின் உள்ளத்தில் பெரிதாய் வேரூன்றியது…
மகள் சொன்னது போலவே, அவர்களுக்கும் இவர்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத உயரம்.
அந்த வித்தியாசம் ஒருநாள் பிளவாகி விடுமோ என்ற பயம் கிளம்பியது, அதே நேரத்தில், ‘இதில் எதாவது உள்குத்து இருக்குமோ?’ என்ற அச்சமும் மனதை வாட்டியது…
பார்வதி இரவு முழுவதும் யோசித்தார், மனம் ஏதோ சொல்ல, மூளையோ வேறொன்றைச் சொன்னது… ‘என் மகளோட வாழ்க்கை இது, பின்னாடி அவ வருந்த வேண்டிய நிலை வந்துடக் கூடாது, நேரில் பார்த்து பேசினால் தான் உண்மை தெரியும்’ என்று ஒரு முடிவுக்கு வந்தவர், தன்னைத் தானே உறுதிபடுத்திக் கொண்டார்.
காலையில் நந்தினியிடம்,
“நீ சொன்ன விஷயத்தால என் மனசுல நிம்மதி இல்ல நந்தினி, அவரை நான் நேர்லப் பார்த்து பேசணும், அவர் மனசு எப்படி? உண்மையா உன்னை வாழ்நாள் முழுக்க கவனிச்சுக்கனும்னு நினைக்கிறாரா இல்லையானு எனக்கு புரியணும்” என்றார்…
அதிர்ச்சியடைந்த நந்தினி,
“அம்மா… நீங்க அவரைக் பார்க்க போறீங்களா? ஆனா அவர் வேற மாதிரி நினைச்சுக்குவாரோ?” என்று பயப்பட, பார்வதி மென்மையாக,.. “இது என் கடமைமா, உன் வாழ்க்கையை யார்கிட்ட ஒப்படைக்கணும்னு நான் நேர்ல பார்த்து பேசி தான் முடிவு பண்ணுவேன்” என்றார்…
நந்தினி மனம் கலங்கினாலும், தாயின் உறுதியை பார்த்து அமைதியாக ஒத்துக் கொண்டாள், அன்றே அலுவலகத்தில் தீரஜை சந்தித்து, “அம்மா… உங்களைப் பார்க்கணும்னு விரும்புறாங்க சார்…” என்று தயக்கத்தோடு சொன்னாள்…
அவள் வார்த்தைகளில் தெரிந்த பதட்டத்தை கவனித்து சிரித்துக்கொண்டவன்,.. “அப்படியா? நிச்சயமா பார்க்கலாம், எந்தத் தாயும் நேர்ல பார்க்காம திருமணத்தை முடிவு செய்ய மாட்டாங்க, அது எனக்குத் தெரியும்” என்றான் தயக்கமே இல்லாமல்..
அவனது எளிய பதிலில் நந்தினியின் மனம் சிறிது நிம்மதி அடைந்தது…
பார்வதியின் உடல்நலம் கருதி அவனே அவரை பார்க்க சென்றான், ஆனால் காரிலிருந்து இறங்கி கொள்ளவில்லை, இறங்கி ஏறும் அளவிற்கு அவன் கால்கள் தான் ஒத்துழைக்காதே, எனவே காரினுள்ளேயே தான் அவர்களின் அறிமுகம் நடந்தது,… “எப்படி இருக்கீங்கமா” அவன் தான் முதலில் விசாரித்தான்,..
“நான் நல்லா இருக்கேன்ப்பா…” என்று தொடங்கியவர், சற்றே நெகிழ்ந்து, தன்னுடைய உணர்வுகளை வார்த்தைகளில் கட்டிக்கொள்ள முடியாமல் தவித்தார்…
“உன்னை நான் பார்க்கனும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டேன், ஆனா அது இப்போ தான் நடந்திருக்கு, சத்தியமா சொல்றேன்… உன் மனசு யாருக்கும் வராதுப்பா, பணம் இருந்தாலும் சொந்த பந்தங்களுக்கு கூட உதவிக்கரம் நீட்டுற அரிதான இந்த காலத்துல, எங்களை யாருன்னே தெரியாத நீ… அவ்வளவு பணம் கொடுத்து உதவி பண்ணிருக்க ரொம்ப நன்றிப்பா” அவரின் குரல் நடுக்கத்துடன் வெளிவந்தது, வெறும் வார்த்தையாக மட்டும் இல்லாமல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறினார்,..
தீரஜோ அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான், அவர் நன்றியை மனப்பூரவமாக ஏற்றுக் கொண்டான்,.. பின்னர் மெதுவாக,..
தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் கூறினான், தந்தையை பற்றி நிறைய கூறினான், அத்துடன் நடந்த விபத்தைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போனான், அவன் குரலில் இருந்த வலியை மறைக்க முடியாமல் போனாலும், அது தளர்ச்சியாய் அல்லாமல் உறுதியாய் ஒலித்தது….
அவன் விபத்தை பற்றி கேட்டதும் மனமெல்லாம் ரணமாகியது பார்வதிக்கு, அவரின் பார்வை அவனது கால்களை நோக்கியது, “டாக்டர் என்னப்பா சொன்னாரு” என்றார் அக்கறையுடன்,..
“ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கேன்ம்மா, கால் குணமாக வாய்ப்பிருக்குன்னு டாக்டர் சொல்லி இருக்காரு. ஆனா எப்போன்னு சொல்ல முடியாது. மாதங்கள் ஆகலாம்… வருடங்கள் ஆகலாம்… எனக்கு நல்ல நேரம் இருந்தா சில நாட்கள்ல கூட குணமாக வாய்ப்பிருக்குன்னு சொல்லி இருக்காரு, ஸோ… காலம் பூரா உங்க மகள் கால் இல்லாதவன் கூட வாழ்வானு நீங்க கவலைப்பட தேவை இல்லை” அவன் சொல்லும் அந்தத் தெளிவும் நம்பிக்கையும், பார்வதியின் இதயத்தை வருடிச் சென்றது, தாயின் மனம் மகளின் வாழ்க்கையைப் பற்றி கணக்கிட்டு வியப்பில் திளைத்தது. ஆனால் அதே வேளையில், அந்த இளைஞனின் உறுதியான முகத்தைப் பார்த்தபோது, ஒரு வித்தியாசமான நிம்மதி அவருள் பெருகியது…
சில நொடிகள் அமைதியாக அவனை நோக்கி இருந்த பார்வதி,
“உடம்புல குறை இருந்தா அது பெரிய விஷயம் இல்லப்பா… அந்தக் குறையை சமாளிக்கிற திறன் இருந்தா சமாளிக்கலாம், ஆனா மனசுல குறை இருந்தா தான் வாழ்வே துன்பமா மாறிடும், உன்னோட மனசு தூயமா இருக்குது” என்றார் கனிவான பார்வையோடு…
அந்த ஒரு வாக்கியமே தீரஜின் உள்ளத்தில் வருடங்களாக தேடிய வலிமையாய் ஒலித்தது…
பார்வதிக்கு அந்தச் சில நிமிடச் சந்திப்பிலேயே மனதில் ஒரு தெளிவு பிறந்தது, அவன் வார்த்தைகளில் தெரிந்த அக்கறை, முகத்தில் ஒளிந்திருந்த நேர்மை, சொன்ன ஒவ்வொரு வரியிலும் பளிச்சென தெரிந்த பணிவு அனைத்தும் சேர்ந்து அவரை ஆச்சரியப்பட வைத்தது, அவனது நற்குணமும் முழுதாய் கண்முன்னே விரிந்தது, மனதில் இருந்த சந்தேகங்களும் அச்சங்களும் அந்தச் சிறிய உரையாடலிலேயே மெல்ல கரைந்து மறைந்தது…
ஆனால் மனதின் ஓரத்தில் இன்னும் ஒரு குழப்பம் அலைமோதிக் கொண்டே இருந்தது, ‘அவனது உயர்ந்த வாழ்க்கை வசதிக்கும்… எங்க சாதாரண நிலைக்கும் சரியாக பொருந்துமா?’ என்பதே அந்த பயம்.
அந்தக் குழப்பத்தை பார்வதியின் கண்கள் வெளிப்படுத்தியது,
அதை உணர்ந்தவன் மெதுவாக…
“நீங்க எதற்காகவும் கவலைப்படாதீங்க, சொசைட்டியை நினைச்சும் பயபடாதீங்க, அவங்க வார்த்தைகள் உங்களையும் உங்க மகளையும் தொட முடியாது, அதுக்கு முன்னாடியே நான் நிற்பேன், யாரும் உங்க மனசை பாதிக்கவோ, கஷ்டப்படுத்தவோ நான் விடமாட்டேன்” அவனது குரலில் இருந்த அந்தத் தன்னம்பிக்கையும், உறுதியும் பார்வதியின் மனதில் இருந்த அச்சத்தை சிறிது சிறிதாக கரைத்துவிட்டது,..
அந்த நொடியிலே பார்வதி தனது சம்மதத்தையும் வெளிப்படையாகக் கூறி விட்டார்,
மகளின் வாழ்கைக்கு ஒரு நல்ல துணையை கண்டுபிடித்துவிட்டேன் என்ற நிம்மதி அவரது முகத்தில் தெரிந்தது…
அதற்குப் பின் தீரஜ் தந்தையிடம் இதனைப் பற்றி சொல்ல, அவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்,
மகனின் திருமணம் தானே அவரின் நீண்ட நாள் கனவாக இருந்தது, மகனின் சந்தோஷம் தான் அவரின் உயிர்நாடி போலிருந்தது, அவன் திருமணம் செய்து கொள்ள போகும் செய்தியை கேட்டு திக்குமுக்காடி போனார்,…
மேலும் தீரஜ்,.. “இந்த வாரத்திலேயே கல்யாணம் நடந்தாக வேண்டும்,
ஆனா யாருக்கும் சொல்ல தேவையில்லை, ரெஜிஸ்டர் ஆபிஸ்லயே சிம்பிளா முடிச்சுடலாம்…” உறுதியாகக் கூறி இருக்க, தியாகராஜனும் மகனின் விருப்பத்திற்கேற்பவே
ஏற்பாடுகள் அனைத்தையும் ஆரம்பித்து விட்டார்,..
********************
அந்த ரெஜிஸ்டர் ஆபிஸில்
சாட்சிகளின் சின்னச் சின்ன பேச்சுகளும், அதிகாரியின் பேனா உராயும் சத்தமும் கலந்திருந்தது…
சிவப்பு நிற புடவையில் எளிமையான அலங்காரத்தில் நின்றிருந்தாள் மதுநந்தினி, அவளது முகத்தில் சங்கடமும் ஆனந்தமும் கலந்த ஒளி மிளிர்ந்தது, அவளருகே வீல்சேரில் அமர்ந்திருந்தான் தீரஜ்…
அனைவரின் பார்வைகளும் கூடிய அந்த நொடியிலேயே, இருவரும் மலர்களால் ஆன மாலையை மாற்றிக்கொண்டனர், அந்தச் சிறிய நிகழ்ச்சியே அங்கே இருந்த அனைவரின் இதயத்தையும் நிறைவு செய்தது…
மாலை மாற்றி கொண்டவர்களோ அந்த நொடியில் பார்வைகள் பரிமாறிக் கொண்டன, ஆனால், எந்த உணர்ச்சி வெளிப்பாடுகளும் இல்லை, சிரிப்பு இல்லை, நாணம் இல்லை, அன்பின் பாசம் இல்லை, மனதின் ஆழத்தில் அமைதியே நிரம்பி இருந்தது அது வெறும் கடமைக்காகவும், நிச்சயிக்கப்பட்ட நிகழ்ச்சிக்காகவும் நடந்தது போலவே தோன்றியது…
பிறகு தீரஜ் தாலியை எடுத்து, நந்தினியின் கழுத்தில் கட்டினான், நந்தினியின் கண்கள் கீழே இறங்கின, அந்தச் செயல் ஒரு வாழ்க்கையின் முடிவாக இருந்தாலும், இருவருக்குமே உள்ளத்தின் ஆழத்தில் எந்தத் திடீர் உணர்ச்சிகளும் எழவில்லை..
தியாகராஜனும், பார்வதியும் இணைந்து சிரித்தபடி, மனமார்ந்த வாழ்த்துகளுடன் அர்ச்சனை தூவி ஆசீர்வதித்தனர், அருகில் இருந்த தீரஜ்ஜின் உதவியாளன் ராமும் சிரிப்போடு கைகூட்டி வாழ்த்தினான்…
பின் ரெஜிஸ்டர் காகிதத்தில் கையெழுத்திட்டனர், அவர்களின் பெயர்கள் ஒன்று சேர்ந்தன, அந்த கணமே சட்டப்படியும் கணவன் மனைவியாகி விட்டனர்…
ஆனால் அந்த நொடி, அவர்கள் மனதில் காதலின் தீபம் எரியவில்லை, அது ஒரு புதிய பக்கத்தின் தொடக்கமாக மட்டுமே தோன்றியது…
ஆனால் யாருக்குத் தெரியும்?
இன்றைய அமைதிக்குப் பின்னால் நாளைய அன்பின் மெல்லிய விதைகள் புதைந்து இருக்கலாம்.
காதல் இப்போது மலரவில்லை…
ஆனால் எதிர்காலத்தில் நிச்சயமாக அது அவர்களின் வாழ்க்கையை நிறைக்கும் என்று எதிர்பார்க்கலாம்….
அனைத்தும் முடிந்து ரெஜிஸ்டர் ஆபிஸ் வாசலைத் தாண்டி வெளிவந்தனர், சுற்றிலும் சில முகங்கள் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாலும், மனங்கள் கனமாய் இருந்தது…
“நீயும் வீட்டுக்கு வாம்மா…” என்று மெதுவாக சொன்னார் தியாகராஜன்…
பார்வதி தலையை ஆட்டிக் கொண்டு, கண்ணீர் துளிகளை அடக்க முடியாமல், “இல்ல அண்ணா… இன்னொரு நாள் வரேன், இப்போ வந்தா அப்புறம் என் பொண்ணை விட்டு வர மனசு வராது…” என்று குரல் தளர்ந்து பேசினார்,..
அந்தச் சொல்லில் புதைந்த வலி நந்தினியின் இதயத்தையும் கிழித்தது, அத்தனை நேரம் தாயை விட்டுப் பிரியப் போகும் வேதனையை அவள் உள்ளத்திலே சுமந்திருந்தாலும், அந்தக் கணமே அது வெடித்தது, தாயின் கழுத்தை கட்டிக் கொண்டு குழந்தை போலக் கண்கலங்கி அழுதாள்….
இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த தீரஜின் முகத்தில் மென்மையான புன்னகை விரிந்தது, தாய் மகள் அன்பில் நெகிழ்ந்து போனான்,..
தியாகராஜன் அருகே வந்து,.. “பேசாம எங்க கூடவே வந்திடலாமேம்மா, உங்க அழுகையை பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு…” என்றார்.
பார்வதி தன் கண்ணீரை துடைத்து, இன்னும் துயரம் மறைக்காத சிரிப்புடன், “சும்மா இருங்கண்ணா… முதல் தடவை பிரியுறோம் இல்ல, அதான் இப்படி… போகப் போக சரியாயிடும்” என்றவர்,.. மகளின் கரத்தை மெதுவாகப் பிடித்து, தீரஜ்ஜின் கைகளில் ஒப்படைத்தார்,
அந்தச் சிறிய செயலே ‘இனி அவள் உன் பொறுப்பு’ என்ற பெரிய அர்த்தத்தை சொல்லியது..
அதன் பின் கண்களில் கண்ணீரோடு, மனதில் பயமும் எதிர்பார்ப்பும் கலந்த நிலையில், நந்தினி தீரஜ்ஜின் வண்டியில் ஏறினாள், பழைய வாழ்க்கையின் கதவை மூடி, புதிய வாழ்க்கையை நோக்கி, கண்கலங்கிய மனதோடு அவளின் பயணம் தொடங்கியது…