அத்தியாயம் – 10
அன்றிரவு தனது அறையில் இருந்தான் தீரஜ், மென்மையான விளக்கின் ஒளியில் அவன் முகம் பாதி நிழலில் மூழ்கியிருந்தது, கையில் அலுவலக கோப்பை வைத்திருந்தாலும், அவன் பார்வை அந்த எழுத்துக்களில் இருக்கவில்லை, சிந்தனையெல்லாம் எங்கோ தொலைவில் அலைந்து கொண்டிருந்தது…
அந்த நேரம் அவனது தந்தை தியாகராஜன் உள்ளே வந்தார்,
வயது முதிர்ந்திருந்தாலும், அந்த முகத்தில் இருந்த கம்பீரம் குறையவில்லை, ஆனால், காலத்தின் சுமை போல, மனதின் வலி அவரது நடையிலேயே தெரிந்தது….
தீரஜ் அவரை கண்டதும், “வாங்கப்பா…” என்று புன்னகைத்தான், அவனது புன்னகை அவன் தந்தையிடம் மட்டுமே வெளிப்படும் ஒரு அரிய பொக்கிஷம்…
தியாகராஜன் மெதுவாக அவனருகில் அமர்ந்தார், அவன் மடியில் இருந்த ஃபைலை பக்கத்திலிருந்த மேஜையில் வைத்து விட்டு அவன் தோளில் கை வைத்தவர்,.. “நாம கொஞ்சம் பேசலாமா தீரஜ்?” என்றார் மெல்ல.
அந்தக் குரலில் இருந்த தயக்கமும், ஆழ்ந்த பாசமும் தீரஜ்க்கு புதிதாக இல்லை, அவர் என்ன பேசப்போகிறார் என்பதை அவன் நன்றாகவே அறிந்திருந்தான்,
ஒரு பெருமூச்சுடன் அமைதியாக தந்தையை நோக்கினான்…
தியாகராஜன் சிறிது நேரம் தாழ்ந்து மெதுவாக.. “உனக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்கேன் தீரஜ், உன்னைப் பத்தி எல்லாம் சொன்னேன், அவளும் அவளது குடும்பமும் ஓகே சொல்லி இருக்காங்க. நீ சம்மதிச்சிட்டா… உடனே கல்யாணத்தை வச்சுக்கலாம்” என்றார்..
அவருக்கும் மகனுக்கு திருமணம் செய்து வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா? ஒரே மகன், செல்ல மகன் அவன் வாழ்க்கை இப்படியே வீணாகிவிடக்கூடாது என்ற துடிப்புதான் அவரை இந்த முடிவுக்கு தள்ளியிருந்தது…
அறையில் ஒரு நிமிடம் அமைதி மட்டுமே நிலவியது, தீரஜ் தன் கைகளைக் கோர்த்து வைத்தபடியே கண்களை சில வினாடிகள் மூடியவாறே இருந்தான்…
அந்த நிமிடம் அவன் மனதில் ஓடியது தந்தையின் ஆசை, தான் இழந்த காதல், தன் உடல் நிலை,
மனிஷாவின் கடுமையான வார்த்தைகள், மற்றும் ‘நீயெல்லாம் வாழ்க்கைக்கு தகுதியில்ல’ என்று உலகம் கூறும் பார்வை…
அவன் மெதுவாக கண்களை திறந்து தந்தையை நேராக பார்த்தான், “அப்பா எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் தேவை” மெல்ல உறுதியுடனான குரலில் சொன்னான்…
தான் கேட்க்கும் போதெல்லாம் ‘வேண்டாம் முடியாது’ என்று மறுத்தவன் இன்று நேரம் கொடுக்க சொல்லி கேட்கவும் அவரால் மாட்டேன் என்று மறுக்க முடியவில்லை,..
தலையை மெதுவாக ஆட்டி.. “சரி, எடுத்துக்கோ… ஆனா ரொம்ப தாமதப்படுத்தாம உன் சம்மதத்தை சொல்லிடுப்பா, உன் கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் மாறும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு, என் மகன் முகத்துல நான் சந்தோஷத்தை பார்க்கணும்னு ஆசைப்படுறேன், அவனோட சந்தோசத்துல தான் அவன் அப்பாவோட சந்தோஷமும் அடங்கி இருக்கு” என்று சொல்லிவிட்டு திரும்பிச் சென்று விட்ட தந்தையின் நிழலை தான் பார்த்துக் கொண்டே இருந்தான் தீரஜ்,..
தந்தை சொன்ன வார்த்தைகள் அவன் காதுகளில் இன்னும் முழங்கிக் கொண்டிருந்தது, அந்த வார்த்தைகளில் இருந்த பாசம், அக்கறை, ஏக்கம் அவனை குழப்பமடையச் செய்தது…
அவன் உள்ளமே இரண்டாகப் பிளந்த உணர்வு தான்..
ஒருபக்கம், ‘தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும்’ என்ற ஆசை, மறுபக்கம், ‘இந்த உடலுடன், இந்த நிலையுடன் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நான் அழித்து விடுவேனோ?’ என்ற குற்ற உணர்ச்சி….
அவன் மனதில் அந்த பழைய காயம் இன்னும் ஆழமாகக் கொதித்தது, மனிஷா விட்டுச் சென்ற வலி, அவள் சொன்ன அவமான வார்த்தைகள், அவனது நெஞ்சுக்குள் பனி போல உறைந்து இன்னும் உருகாமல் தான் இருந்தது.
ஆனால் இன்று நந்தினி பேசிய அந்தச் சொற்கள் அவனது உள்ளத்தில் மெதுவான ஒளியை ஏற்றியது…
முதல்முறையாக யாரோ அவனை புண்படுத்தாமல் காப்பது போலிருந்தது, அவன் மனதுக்குள் ஒரு விதமான நிம்மதி நுழைந்தது….
****************
மதுநந்தினி அலுவலகத்தில் சேர்ந்து முதல் மாதம் முடிந்திருந்தது, மாத சம்பளம் கையில் வந்து சேர்ந்தவுடன், அவளுக்குள் சந்தோஷம் பொங்கி எழுந்தது, இது தான் அவளது வாழ்க்கையின் முதல் பெரிய சம்பளம், அவள் உழைப்பின் பலன்…
அந்த காசோலையை தாயின் கையில் ஒப்படைத்தபோது, குழந்தை போல ஆனந்தமாய் புன்னகைத்தாள், அவள் முகத்தில் தெரிந்த அந்த மகிழ்ச்சியைப் பார்த்த தாய் மனம் நிறைந்து போனது,.. பின் அதிலிருந்து சிறு தொகையை எடுத்து அவளது கையில் திருப்பித் தர, நந்தினி குழப்பமாக, “எதுக்கும்மா?” என்று கேட்டாள்….
பார்வதி சிரித்தபடி, “மறந்துட்டியா? அந்த தம்பியோட கடனை அடைக்க நீ சேமிக்கறது எனக்கு தெரியாதா? இதையும் அதோட சேர்த்து வை” என்றார்..
அந்த வார்த்தைகள் நந்தினியின் இதயத்தை உருகச் செய்தன, மனதில் எவ்வளவு சுமை இருந்தாலும், தன் தாய் அதை உணர்ந்து, துணை நிற்பதைப் பார்த்ததும் அவளுக்குள் புதிதாய் ஒரு உற்சாகம் பிறந்தது…
அந்த இரவு, அந்த சிறிய பெட்டியைத் திறந்தாள், அதில் இதுவரை சேமித்திருந்த தொகையை எண்ணிக் கொண்டவள், அதனோடு அம்மா கொடுத்த தொகையையும் சேர்த்தபோது, கையில் முழுமையாக ஐம்பதாயிரம் வந்தது….
அந்த பணத்தை பார்த்தவுடன் அவள் இதயம் துள்ளியது, இது அவளுக்கு மிகப் பெரிய தொகை,
அந்தப் பணத்தைத் தொட்டு பார்த்தபோது அது வெறும் நோட்டுகளாக அல்ல அவளது கடமை, நன்றியின் சின்னம், உயிரை காப்பாற்றியவனுக்கான அடைவாக தான் தெரிந்தது..
‘மொத்தமாகக் கொடுக்க எவ்வளவு காலம் ஆகுமோ தெரியல, கொஞ்சம் கொஞ்சமா கொடுத்துட்டே இருந்தா ஒருநாள் நிச்சயமா முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு…’ என்று நினைத்தவள்,… அந்த உறுதியோடு, மறுநாள் காலை, ஐம்பதாயிரம் ரூபாயை தனது பையில் வைத்துக் கொண்டு அலுவலகம் நோக்கி புறப்பட்டாள்…
அவளது அடிகள் இலகுவாக இருந்தாலும், மனம் சற்றே நடுக்கத்தோடு இருந்தது, ‘இந்தப் பணத்தைத் அவரிடம் எப்படி கொடுப்பது? கோபப்படுவாரோ? வேண்டாம்னு சொல்றது அவரோட பெரிய மனசு, ஆனா நான் கொடுத்து தான் ஆகணும், இது எனது கடமை’ என்ற எண்ணத்துடன் பையை இறுக்கமாகப் பிடித்தாள் நந்தினி,
அவளது இதயம் சீராக இல்லாமல் தான் ஓடிக் கொண்டிருந்து,..
அவனிடம் இந்த தொகையை கொடுத்துவிட்டால் தான், உள்ளத்தில் இருந்த பற்று, நன்றி, ஒரு அளவுக்காவது சாந்தம் அடையும் என்று நம்பியவள்,
அவனை சந்திக்கும் தருணத்திற்காக காத்திருந்தாள்…
இறுதியாக அந்த சந்தர்ப்பமும் கிடைத்தது, ஃபைலோடு சேர்த்து பையிலிருந்து பணத்தையும் மறைத்து எடுத்துக்கொண்டு, அவனது அறைக்குள் நுழைந்தாள்…
முதலில் அலுவலக வேலையைப் பற்றிய சில விஷயங்களைப் பேசியவள்.. பின் மெதுவாக,
“சார்…” என்று அழைத்தாள்…
தீரஜ் புருவத்தை உயர்த்தி, “என்ன?” என்ற பார்வை பார்க்க, நந்தினி கையில் இருந்த பணத்தை நீட்டியபடி… “இதுல ஃபிப்டி தவுசண்ட் இருக்கு… மீதியை கொஞ்சம் கொஞ்சமா தந்திடுவேன்” என்று சொன்னவளின் குரல் மென்மையாக இருந்தது…
ஆனால் தீரஜின் முகத்திலோ கடுகடுப்பு… “இதை யாராவது இல்லாதவங்க கிட்ட போய் கொடு” என்றான் சிடுசிடுப்பாக…
அவள் எளிதில் தளரவில்லை,
“நானே எப்படி கொடுக்கிறது, வாங்கி நீங்களே கொடுத்துடுங்களேன் சார்… அப்போ தான் நீங்க கொடுத்த மாதிரி இருக்கும்” என்ற அவளின் சொற்கள், உள்ளார்ந்த நேர்மையை வெளிப்படுத்தின…
அந்த தருணத்தில் தீரஜின் மனம் சற்றே நெகிழ்ந்தது, அமைதியாக அவளை பார்த்தவன், சில நொடிகள் நிலவிய அந்த அமைதியை உடைத்து,.. “ஸோ… பணத்தை கொடுத்து முடிக்காம விட மாட்ட, ரைட்?” என்றான்
“எஸ் சார்…” அவள் மெதுவாக சொல்ல, அந்த கணம் தீர்மானத்துடன்,.. “எனக்கு பணம் தேவை இல்லை… இதற்கு பதிலா நான் சொல்றதை செய்வியா?” என்றான்…
நந்தினி அந்த கேள்வியில் அசந்துபோனாலும், அவனுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தாள்… எனவே “செய்வேன் சார்… என்ன செய்யணும்?” என்று கேட்டாள்,..
ஒரு நொடி அவளை ஆழ்ந்து பார்த்தவன்,.. பின் “என்னை கல்யாணம் பண்ணிக்கனும்…” என்று கூற,.. அவனது வார்த்தைகள் மின்னல்போல வந்து அவளைத் தாக்கியது, நந்தினியின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன,
அவளது மூச்சே சற்று தடைபட்ட உணர்வு தான்,..
‘இவர் இப்போ என்ன கேட்டாரு? என் காதுல சரியா தான் விழுந்ததா?’ அந்த சந்தேகம் அவளை ஒரு மாதிரி உலுக்க, தான் தான் தவறாக ஏதோ கேட்டிருக்கிறோம் என்ற எண்ணத்தில்,.. “சா… சார்… இப்போ என்ன சொன்னீங்க?” என்று தடுமாறிய குரலில் கேட்டாள் நந்தினி…
தீரஜின் முகத்தில் சிரிப்பே இல்லை,
கண் நேராக அவளது கண்களை நோக்கி இருக்க, இந்த முறை அழுத்தமான குரலில், “என்னை மேரேஜ் பண்ணிக்கனும்னு சொன்னேன்” என்றான்….
அந்த வார்த்தைகள் நந்தினியின் செவியில் தெளிவாய் விழுந்தன,
அதிர்ச்சி அவளது உடலை முழுவதுமாக ஆட்கொள்ள
மயக்கமே வருவது போல் இருந்தது,..
‘இது என்ன…? என்கிட்ட விளையாடுறாரா என்ன?’ என்ற கேள்வி மனதைச் சுற்றி வந்தது,
கண்களைப் பெரிதாகத் திறந்து, அவன் முகத்தைக் கவனித்தாள்…
ஆனால் தீரஜ் எந்த விளையாட்டுப் புன்னகையும் இல்லாமல், ஆழமான விழிகளோடு எரியும் தீப்பொறியோடு பார்த்தான்…
அந்த பார்வை, ‘நான் விளையாட மாட்டேன்’ என்று சொல்வதுபோல இருந்தது…
போதாததிற்கு அவள் மனதின் கேள்வியை அவன் படித்தது போன்று.. “ஐம் சீரியஸ் மிஸ் மதுநந்தினி, என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?” மீண்டும் அவன் குரல் கத்தியைப் போல வெட்டியது…
நந்தினிக்கு வார்த்தைகளே வரவில்லை, குரல்வளை தடுமாறியது, இதயம் வேகமாகத் துடித்தது…
பல கோடி சொத்துக்களுக்கு உரிமையாளர், அதிகாரமும் கம்பீரமும் கொண்ட தீரஜ் அரவிந்தன்… என்னிடம் இப்படிக் கேட்க என்ன காரணம்?
அந்த அதிர்ச்சியும், விளக்க முடியாத தவிப்பும் நந்தினியின் முகத்தில் வெளிப்பட்டது,
அவளது கண்கள் நடுங்கிக் கொண்டே அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது,…