Loading

மெல்லினம் 37:

கதிரிடம் பேசிய பின், ஆழ்ந்த நித்திரையில் உறங்கியவளுக்கு விடிந்தும், விடியாத அந்த காலைபொழுதில், விழிப்பு தட்டி விட எழுந்து விட்டாள்.

இன்று, கதிரிடம் செல்ல போகிறோம் என்ற நினைவே, அவளின் நாளை புத்துணர்ச்சியாக்க, குதுகலுத்துடன் எழுந்தவளிற்கு நேற்றைய இரவு அவள் செய்தது நினைவு வர, வெட்கம் வந்து கட்டி கொண்டது அவளை.

மனது உற்சாகத்தில் துள்ள வழக்கத்திற்கு மாறாக, நேரமே எழுந்தவள் மங்கை எழும் முன், மளமளவென வேலைகளை பார்க்க தொடங்கியதில், இதழ்களின் ஓரம் வெட்க புன்னகை மிச்சமிருந்தது.

“என்ன முல்லை அதுக்குள்ள எழுந்துட்ட??”இவளின் சத்தம் கேட்டு மங்கை எழுந்து வர,

“ம்ம்ம்ம தெரியலை ம்மா முழிச்சுட்டேன். இந்தாங்க டீ இருக்கு, ப்ரஷ்ஷாகிட்டு வந்து எடுத்துக்கோங்க. அப்பறம் சட்னிக்கு எல்லாம் எடுத்து வச்சுட்டேன்” என்றவளின் முகத்தில் இருந்த வெட்கப் புன்னகை அவளிற்கு மேலும் அழகு சேர்க்க, புதிதாய் தெரிந்தாள் முல்லை.

“என்னவாம் எம் பொண்ணு இன்னைக்கு ரொம்பவே அழகா தெரியுறா??” என் அவர் விஷயம் அறிய கேட்க,

“அப்புடியா??அப்போ உங்க கண்ணை செக் பண்ணனும் ம்மா” என புன்சிரிப்புடன் தனக்கான டீயை எடுத்து கொண்டவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

போகிற போக்கில் “ம்மா எனக்கு லன்ச் வேண்டாம். நான் எங்க வீட்டுக்கு போயிடுவேன் இன்னைக்கு” என சொல்லி கொண்டு செல்ல,

மங்கைக்கு இப்போது புரிந்தது அவளின் சிரிப்பு. “புருஷன பாக்க போறதுல எவ்வளவு சந்தோஷம் எம் பொண்ணுக்கு” என்றவர் அவளிற்கு பிடித்த உணவை தயார் செய்யும் வேலையில் இறங்கினார்.

டீயை எடுத்து கொண்டு தனது ஆஸ்தான இடத்திற்கு வந்து அமர்ந்தவளின் கைகளில் அலைப்பேசி இருக்க “குட்மார்னிங் கதிர்” என்ற மெசேஜ்ஜோடு கிஸ்ஸிங் ஸ்மைலி ஒன்றை தட்டி விட்டாள்.

அப்போது தான் எழுந்து தனது அலைப்பேசியை நோண்டி கொண்டிருந்தவன், முல்லையிடம் இருந்த மெசேஜ் என்றதும் ஆர்வமாக திறந்து பார்த்தான்.

அவளின் இந்த மெசேஜ் அவனிற்கு குறுசிரிப்பை வரவழைக்க, மீண்டும் பதில் மெசேஜ் அனுப்ப நினைத்தவன் பின் கைவிட்டு விட்டான்.

அவளின் ஒரு மெசேஜ் அவனின் நாளை மகிழ்ச்சிகரமாக மாற்றிவிட்டது.

நேற்றைய இரவு அவள் கொடுத்த முத்தம், இன்னும் அவனது செவிகளில் மிச்சம் இருக்க, காதை அழுந்த தேய்த்து விட்டு கொண்டவனிற்கு, முல்லையின் இந்த புதிய மாற்றத்தை அவன் மனம் கொண்டாடி தீர்த்தது.

பின்னே இந்த மாற்றம் கூடிய சீக்கிரம் அவளை அவனிடம் சேர்த்து விடும் அல்லவா.

“என்ன சார் ,பொண்டாட்டி குட்மார்னிங் சொன்னா பதிலுக்கு சொல்ல மாட்டீங்களோ” என முறைக்கும் ஸ்மைலியுடன் அடுத்தது வர,

வந்த சிரிப்பை அடக்கி கொண்டவன் “முடியாது போ டி” என்ற மெசேஜ்ஜீடன், கருப்பு கண்ணாடி அணிந்த ஸ்மைலியை தட்டி விட்டவன், ஆஃப் லைன் சென்று விட்டிருந்தான்.

இன்னும் பேசினால் அவன் வாயலே‌ அவளை அழைக்க வைத்து விடுவாள்‌ என சுதாரித்தவன் ஆஃப்லைன் சென்றிருந்தான்.

அவனின் திருகுத்தளம் உணர்ந்தவள் “ம்ம்ம்ம ஓடுங்க ஓடுங்க எவ்வளவு மணி நேரம் என்கிட்டு இருந்து தப்பிப்பீங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க இருப்பேன்” என புன்னகையுடன் உரைத்தவள் அத்விதனிடம் சென்றாள்.

எழ மறுத்து அடம்பிடித்தவனை “அதி கண்ணா உன்னோட அங்கி கிட்ட போக வேண்டாமா??இப்புடியே தூங்கினீன்னா நா மட்டும் உன் அங்கி கிட்ட போய்டுவேன்” என்ற நொடி பட்டென்று எழுந்து அமர்ந்தவன்

“ம்மா…ம்மா…நெஜமா…நெஜமா அங்கி கிட்ட போறோமா??”

“ஆமாடா குட்டி”

“ஏய்ய்ய்….” என் குதுகலித்தவன் “இப்போ போலாம், போலாம்” என குதிக்க,

“ம்ஹீம் இப்போ இல்லை, இன்னைக்கு சமத்தா ஸ்கூலுக்கு போவியாம். ஈவ்னிங் உன்னோட அங்கி வந்து உன்னை‌ பிக்கப் பண்ணிட்டு அங்க நம்ம வீட்டுக்கு வருவாராம்” என

சிறிது நேரம் கண்களை சுருக்கி அவளை பார்த்தவன் “ம்ம்ம்” என சுரேத்தேயில்லாமல் எழ முல்லை அவளை கிளப்பினாள்.

அத்விதனுடன் முல்லையும் சேர்ந்து உண்டு விட்டிருந்தாள். அவனை பள்ளியில் விட்டுவிட்டு அங்கிருந்து அவளின் வீட்டிற்கு செல்வதாக ஏற்பாடு.

அத்விதனை கிளப்பி பள்ளியில் விட்டவள், நேரத்தை பார்க்க ஒன்பது பதினைந்து.

இப்போதே வீட்டிற்கு சென்றால் கதிருக்கு தெரிந்து விடும் அவனிற்கு சர்ப்ரைஷாக இருக்கட்டும் என நினைத்தவள், அருகிலிருந்த அங்காடியில் சில மணி நேரங்களை வீணடித்து, கதிர் மற்றும் அத்விக்கு உடைகளை வாங்கியவள், பதினொரு மணி போல் கதிரின் வீட்டிற்கு கிளம்பினாள்.

“ஹேய், முல்லை வா, வா இன்னும் கொஞ்ச நேரம் முன்னாடி வந்துருக்கலாம்‌. இப்போ தான் கதிர் கிளம்பி போனான்” என சீதா அவளை வரவேற்க,

‘அதுக்கு தானே லேட்டா வந்தது’ என மனதில் நினைத்தவள், சீதாவிடம் பேசியபடி உள்ளே சென்றாள்.

இவள் வந்தது அறிந்து ஞானமும் வந்து சேர, மூவரும் அமர்ந்து அரட்டை அடிக்க தொடங்கி விட்டனர்.

ஞானத்திற்கு இவர்கள் இடையே நடந்த போர் தெரியாததால், எப்போதும் போல் இயல்பாகவே இருந்தார்.

அவள் வந்து பல மணி நேரங்கள் கடந்தும், ஸ்ருதியை காணாததால் முல்லை அவளை விசாரிக்க.

“தெரியலை முல்லை, காலையில எங்கயோ அவசர அவசரமா கிளம்பி போனாங்க. பிராகஷ் மாமா தான், அவுங்க தங்கச்சிக்கு உடம்பு சரியில்லையின்னு சொன்னாரு” என்க

“ஓஹ்ஹ்” என்ற வார்த்தைகளோடு அதற்கு முற்று புள்ளி வைத்து விட்டாள்.

சிறிது நேரம் பேசி விட்டு முல்லை எழுந்து அவளின் அறைக்கு சென்று விட்டாள். உள்ளே நுழைந்தவள் கண்டது கட்டிலில் கிடந்த ராதை சிலையை தான்.

அதனை கண்டதும் கதிரின் புகைப்படம் நினைவு வர, ஓடி சென்று அதனை எடுத்தவள் “என்னை விட, அவ்வளவு ஸ்பெஷலா நீ? அவருக்கு. அவர் நெஞ்சு மேலயே சொகுசா தூங்குற” என சிறு முறைப்புடன் கூறியவள் அதனை வைத்து விட்டு, அவளிடம் இருந்து கண்ணன் சிலையை எடுத்தவள், அதனை நெஞ்சோடு கட்டி அணைத்து அதற்கு ஒரு முத்தம் பதித்தாள்.

இரு சிலைகளையும் கண்டதும் அவளிற்கு சட்டென ஒரு ஐடியா வர, அதனை செயல்படுத்தும் முன் கண்ணன் சிலையினை நெஞ்சோடு அணைத்து, அதற்கு முத்தமிடுவது போல் ஒரு புகைப்படம் எடுத்தவள், அதனை கதிருக்கு அனுப்பி வைத்தாள்.

அவள் இங்கு வந்துவிட்டதை, அவன் கண்டுபிடித்து விட கூடாது என, அவனிற்கு புகைப்படம் அனுப்பும் முன் செட்டிங்சில் சென்று, அவளிற்கு பின் இருந்த பேக்ரவுண்டினை மாற்றி அனுப்பி வைத்தாள்.

இரண்டு சிலைகளையும் எடுத்து கொண்டு, ஞானத்திடம் வேலையாக வெளியே செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டு விட்டாள்.

முக்கியமான பைலை குறிப்பெடுத்து கொண்டிருந்தவனுக்கு, நோட்டிபிக்கேஷன் சத்தம் வர திறந்து பார்த்ததில் முகம் கடுகடுத்தது.

“இவளை.!!!” என பல்லை கடித்தவன்,

“அதை கொடுத்தவன் இங்க குத்துக்கல்லாட்டம் உட்காந்துருக்கேன். என்னை விட்டுட்டு அதுக்கு முத்தம் கொடுக்குறா” என புலம்பியவனிற்கு, அந்த சிலை இருந்த இடத்தை கண்டு மூச்சடைத்தது.

“டேய் அது நான் இருக்க வேண்டிய இடம் டா” என மனதினுள் அலறியவனுக்கு, நேரம் கெட்ட நேரத்தில் அன்று ஊரில் அவளை இதழணைத்ததும், நேற்றைய இரவு முல்லை அலைப்பேசி வழியாக அளித்த இதழ் முத்தமும் நினைவு வர, அவனின் தேகம் சூடாகி போனது.

அவள் செய்யும் செயல்களில் இப்போதே, அவளை சென்று தூக்கி வரும் வேகம் வர, கரையுடைக்க தயாராய் நின்ற உணர்வுகளை, பெரும் பாடுபட்டு அடக்க அதன் விளைவாய் அவனது கண்கள் இரண்டும் சிவந்து போயின.

“ஸ்டெடி, ஸ்டெடிடா கதிரு அந்த ராட்சஸி உன்னை கவுக்க பாக்குறா கவுந்துடாத? என்ன ஆனாலும் சரி, அவளாதான் வரணும், நீ போய் கூப்பிட கூடாது.

அப்போ தான் இன்னொரு தடவை உன்னை விட்டு போக மாட்டா” என தனக்கு தானே கூறி கொண்டு மனதை இறுக வைக்க முயல,

காதல் கொண்ட மனம், நேற்றைய இரவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இளகி கொண்டிருக்க, அவனின் வீம்பும் ஆட்டம் கண்டிருந்தது.

நேற்றைய இரவில் இருந்து முல்லை கேட்டு கொண்டிருந்ததை இப்போது கூறினான்.

“சீக்கிரம் என்கிட்ட வந்துடு முல்லை. நீ இல்லாம என்னால இருக்க முடியல டி” என்றவனின் குரல் உணர்ச்சி வேகத்தில் தழுதழுக்க, தனது கவனத்தினை வேலையில் திருப்பினான்.

முல்லை சென்ற வேலை நீண்டு கொண்டே சென்று, ஒரு வழியாக மதிய உணவினை தாண்டி முடிவடைந்தது.

அவள் வீட்டிற்கு திரும்பிய நேரம் அத்விதனும் ரேஷ்மியும் வந்திருந்தனர்.

“ஏய், என்ன ஸ்கூல் டைம் முடியலை அதுக்குள்ள வந்துட்டீங்க??” என அவள் கேட்க,

“முல்லை வந்துட்டியா, வா, வா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஊருல இருந்து போன் வந்தது. அங்க யாரோ மாமாவோட சொந்தத்துல இறந்துட்டாங்களாம்.

அத்தையும் மாமாவும் அங்க போக கிளம்பிட்டு இருக்காங்க. நான் சொல்லுவேன்ல என்னோட பெரியப்பா பையன் ராகுல், அவரோட பொண்ணு பெரிய மனுஷி ஆகிட்டாளாம், இப்போ தான் போன் வந்தது. அத்தை முறைக்கு நான் அங்க போயாகணும்.

நீ போய் அத்தைக்கு கிளம்ப ஹெல்ப் பண்ணு, நா சமைச்சதை எல்லா எடுத்து வைக்கிறேன்” என்றபடி சீதா சமையலறை விரைய,

அடுத்த அரை மணி நேரத்தில், முல்லையை தவிர்த்து அனைவரும் கிளம்பியிருந்தனர். சீதா, முல்லையை நாளை சீதாவின் அண்ணன், நேராக வந்து அழைப்பு விடுத்த பிறகு கதிருடன் வருமாறு கூறியவள் ரேஷ்மி செல்வதால் அழுத அத்விதனையும், உடன் அழைத்து சென்று விட்டாள்.

ஸ்ருதியும் இன்றைக்கு வீடு வருவது போல் தெரியவில்லை. பிரகாஷ் வேலை விடயமாக வெளியூர் சென்றிருக்க, ராகேஷ் அலுவலகத்தில் இருந்து அப்படியே சீதாவின் அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டான்.

வேலை இல்லாமல் அவளிற்கு போர் அடிக்க, வீட்டினையும் சமையல்கட்டினையும் ஒதுங்க வைத்தவள், அறைக்கு சென்று அந்த சிலைகளை எடுத்து வெளியே வைத்தாள்.

தனித்தனியாக இருந்த சிலையை கடையில் கொடுத்து ஒன்று சேர்ந்திருந்தாள். இரண்டு சிலைகளையும் ஒன்றாக்கியதால் ஏற்பட்ட நெளிவுகளை மறைக்க அதன் மேல், தான் வாங்கி வந்திருந்த சிறு சிறு போடி கற்களை கொண்டு அலங்கரிக்க ஆரம்பித்து விட்டாள்.

இரண்டு சிலைகளையும் இணைக்கும் பாலமாக ஒரு கோல்டன் கலர் மெல்லிய பட்டை சங்கிலியினையும் அதில் மாட்டினாள். அதில் குட்டி குட்டியாக இதயங்கள் இருக்க, உற்று நோக்கினால் முதல் நான்கு இதயத்தில் கதிரின் பெயர் தனிதனி எழுத்துக்களாகவும், அடுத்த நான்கு இதயங்களில் முல்லையின் பெயரும் பொறிக்கப்பட்டு இருந்தது.

எந்த ஒரு இடத்திலும் சிறு நெளிவு தெரியக்கூடாது என கவனம் எடுத்து சிலையினை அலங்கரித்தவளுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை.

அறையில் இருந்த வெளிச்சம் வற்றி, இருள் சூழ ஆரம்பித்த நேரம், சுற்றுப்புறம் உரைக்க பட்டென எழுந்தவள் நேரத்தை பார்க்க ஏழு.

“அய்யோ!!” என் தலையிலடித்தவள் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டு விட்டு எழுந்து சமையலைறையினுள் ஓடினாள்.

ஞானம் இரவிற்கு சமைத்து கொள்ள சொல்லி சென்றிருந்தார்.

இன்னும் சிறிது நேரத்தில் கதிர் வந்து விடுவான்‌, என தெரிந்ததால் அவசர அவசரமாக இரவு உணவினை தயார் செய்ய ஆரம்பித்திருந்தாள்.

இவள் வந்தது இன்னமும் கதிருக்கு தெரிந்திருக்கவில்லை. முல்லையும் சொல்லவில்லை முல்லை சொல்லியிருப்பாள் என வீட்டினரும் சொல்லியிருக்கவில்லை.

கதிருக்கு பிடித்த உணவாக சமைக்க வேண்டும், என நினைத்திருந்தவள் நேரத்தை கவனிக்க தவறியிருக்க, இப்போது வேலை நீண்டு கொண்டே சென்றது.

இருந்தும் நேரம் எடுத்தாலும் கதிருக்கு பிடித்தவையே சமைத்தாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
15
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. இன்னும் ஏன் கதிர் வீட்டுக்கு வரல? எனக்கென்னமோ இதுவே குடும்பமே சேர்ந்து அவங்களை ஒண்ணு சேர்க்க பண்ற பிளான் மாதிரி தான் தெரியுது. பார்க்கலாம்