Loading

மெல்லினம் 30

தேன்முல்லையின் நினைவுகளில் சிக்கி தவித்தவன், எப்போது உறங்கினானோ?

“டேய் கதிரு, எந்திரிடா சாமி தோப்புக்கு போக ரெடியாகிடுச்சு. உன் கூட்டாளிங்க, எல்லாம் வந்துட்டு வந்துட்டு போறானுங்க” என்ற அப்பத்தாவின் குரலில், அடித்து பிடித்து எழுந்தவன், அவசர அவசரமாக கிளம்ப ஆரம்பித்தான்.

அவசரகுளியல் ஒன்றை போட்டவன், தடதடவென ரெடியாகி “அப்பத்தா நா போய்ட்டு வரேன்” என்ற கத்தலுடன் கிளம்பி விட்டான்.

சாமியை பார்க்கும் ஆவலை விட, அவனின் ஹனிடால்லை பார்க்கும் ஆவலே அவனுள் நிறைந்திருந்தது.

வேகமாக தோப்பிற்கு சென்றவனின் கண்கள், சதீஷின் வீட்டாள்களை தேடின,

“டேய்..! எருமை, வாடா சீக்கிரம். அழகர் ரெடியாகிட்டாரு” என விஷால் அவனை அடித்து இழுத்து செல்ல,

அலைமோதிய கூட்டத்தில், அவளை காண முடியாது ஏமாற்றம் அடைந்தவன், முகம் தொங்கிவிட சாமி இருந்த இடத்திற்கு சென்றான்.

அங்கே அவனிற்கு முன்பு சதீஷ் நின்றிருக்க ‘இவன் வந்துருக்கானே, அப்போ கண்டிப்பா அவளும் வந்திருப்பா’ என துள்ளியவன், சதீஷை கண்டு ஈஈஈ என இளிக்க, இவனின் இளிப்பின் காரணம் தெரியாது அவனும் புன்னகைத்தான்.

ஆற்றில் இறங்குவதற்கு தோதாக இளைஞர்கள், ரதத்தினை தூக்கி கொள்ள உடன் கதிரின் பட்டாளமும்.

அந்த கூட்டத்திலும் அவளை தேடி அவன் கண்கள் அலைபாய “டேய் கதிரு இது தப்பு, அவ இன்னும் ஸ்கூல் கூட முடிக்கலடா??” என அவனின் நியாய மனம் இடித்துரைக்க, அதில் உள்ள‌ உண்மை புரிந்தவன் சோர்ந்து போனான்.

‘ச்சே, அவளும் காலேஜ் படிச்சிருக்க கூடாதா’ என நினைத்து வருந்தியவன் மனம், இவனின் உணர்வுகளுக்கும், அவளின் வயதிற்கும் இடையை சிக்கி தவித்தது.

ஆனால் அவனின் இந்த உணர்வுகளின் போராட்டம் எல்லாம், முல்லையை கோயிலின் அருகே காணும் வரை மட்டுமே.

அவளை கண்டதும் மனம் தன்னை போல் சிறகடிக்க ஆரம்பித்து விட, “டேய் திரும்புடா இது தப்பு அவ படிக்கிற பொண்ணு” என மனதின் எச்சரிக்கையில் முயன்று தன்னை கட்டுப்படுத்தி கொண்டு, அவளை பார்க்காது திரும்பி கொண்டவனிற்கு முழுதாக பத்து நிமிடங்கள் கூட அதனை பின்பற்ற முடியவில்லை.

அவனின்‌ கட்டுப்பாட்டையும் மீறி, கண்கள் அவளின் புறம் திரும்பிட ஒரு கட்டத்தில் மனதின் எச்சரிக்கையை கிடப்பில் போட்டவன், அவளை பார்வையால் கொள்ளையிட ஆரம்பித்தான்.

இந்த அளவிற்கு அவளின் மேல் பித்து பிடித்து அலைவோம், அதுவும் காலையில் கண்ட ஒருவளிடம், என அவன் நினைத்து கூட பார்க்கவில்லை ஆனால் நடந்து விட்டதே.

ஒருவழியாக அழகரை ஆற்றில் இறக்கிட, பூஜை பூனஸ்காரங்கள் எல்லாம் முடித்து அடுத்து ரதம் ஊர்வலம் செல்ல தயாராகி விட்டது.

கூட்டமும் மெல்ல மெல்ல கலைந்து விட்டது. காலையில் இருந்து, இரவு வரை வரும் சாமி ஊர்வலம். இரவு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு, ரதமானது முன்பிருந்த அந்த திடலில் போய் நின்று விடும்.

அப்படி ரதம் வரும்பொழுது மக்கள் அபிஷேகமும் செய்து கொள்வர். இன்னும் பிறர் கடைசி நாளில் அந்த திடலில் சென்று அபிஷேகம் செய்து கொள்வர். அன்று கூட்டம் எக்குத்தப்பாக இருக்கும்.

கதிரின் குடும்பம் நாளை வர இருப்பதால், அவர்கள் கடைசி நாளில் அபிஷேகம் செய்து கொள்ளலாம்‌ என விட்டு விட்டனர். சதீஷின் குடும்பம் முல்லையின் அப்பாவின் வரவினை பொருட்டு, அவர்களும் கடைசி நாளிலேயே அர்ச்சனை செய்து கொள்ளலாம் என்றிருந்தனர்.

சாமி வைத்திருந்த திடலின் நேர் எதிரே மேடை கட்டப்பட்டிருந்தது. அங்கே தான் ஐந்து நாட்களும் ஆடலும் பாடலும் நடைபெறும். மேடையின் பக்கவாட்டில் இருந்து காலி இடத்தில் ராட்டின வகைகள் அனைத்தும் போட பட்டிருக்க, அப்பள கடையில் தொடங்கி ஆபரண கடை வரை அனைத்து கடைகளும் ஒன்று விடமால் நிரப்பட்டிருந்ததில், காலை வேளையே‌ அந்த இடம் ஜெகஜோதியாக இருந்தது.

கதிர்‌, முல்லையின் வரவை எதிர்நோக்கி கோயிலே கதி என்று கிடக்க, அவன் எதிர்பார்த்தது போல் முல்லையும் சதீஷ் மற்றும் அவனின் தங்கை மதுமலர் உடன் வந்திருந்தாள்.

இவர்களை கண்டதும் சதீஷ் அவர்கள் இருவரையும் கடைவீதியில் விட்டுவிட்டு இவர்களிடம் வந்து விட்டான்.

“ஏண்டா சதீஷூ, ரொம்ப வேலையா காலையில அழகர் இறங்குற வரை இருந்த அப்பறம் பாத்தா ஆளையே காணோம்”?? என ரமேஷ் விசாரிக்க

“ஆமாம் டா ஆளுங்க எல்லாம் வந்துருக்காங்களா ரொம்ப வேலை. இதுல இன்னைக்கு நைட்டு ஆடலும் பாடலும்ல, நம்ம ஏரியா சார்பா மலரும், முல்லையும் ஆட போறாங்க அதுக்கு தேவையான நகை செட்டு வாங்க வந்தோம். மல்லிகாவ கூட காலையில் இருந்து பாக்கல” என அவன் சலித்து கொண்டு சொல்லிய செய்தி, கதிருக்கு தித்திப்பான செய்தியாக மாறியிருந்தது.

“என்னடா சொல்லுற நிஜமாவா உன் தங்கச்சிக்கு ஆட தெரியுமா??” என் விஷால் ஒரு மாதிரி இழுக்க,

“அவளுக்கு எங்கடா இது எல்லாம் தெரியும். நல்லா திங்க மட்டும் தெரியும். முல்லைக்கு பரதநாட்டியம் தெரியும்டா, அவ கூட இவளும் ஒப்புக்கு சப்பாணியா ஆடுறா” என அவன் சிரிக்க, முல்லையும் மலரும் கடையை விட்டு வெளியேறி சதீஷை தேடி வர, அவர்களை கண்டு அங்கிருந்த இருவரின் மனமும் துள்ளியது.

“சரிடா நான் வரேன் நைட்டு பாக்கலாம்” என அவன் கிளம்பி விட, இரவு வேளைக்காக இரண்டு ஜீவன்கள் அப்போதிருந்தே காத்திருக்க ஆரம்பித்திருந்தன.

ஐந்து நாட்களும் மூன்று வேளையும் கோவிலில் தான் உணவு ஊர்மக்கள் அனைவருக்கும்.

கதிர் நண்பர்களுடன் உண்டு விட்டு, தனது அப்பத்தாவிற்கு பாத்திரத்தில் உணவினை வாங்கி கொண்டு செல்ல, மற்றவர்களும் தங்கள் வீட்டிற்கு வாங்கி கொண்டு சென்றனர்.

ஒருவழியாக நேரம் மெதுவாக நகர்ந்து, அந்த இரண்டு ஜீவன்கள் எதிர்பார்த்த இரவு வேளையும் வந்து விட, ஆளுக்கு முன்னே அங்கே சென்றிருந்தனர்.

சில பல பேச்சுக்களின் பின் ஆடல் பாடல் நிகழ்ச்சி தொடங்கி விட முதல் நடனமே முல்லையில் வரவேற்பு நடனம் தான். அவள் மட்டுமே ஆடினாள்.

பாரதநாட்டியத்திற்கு ஏற்ற உடையணிந்து, அதற்கேற்ற சிகை அலங்காரமும், கண்களில் போட்டிருந்த மையும், அவளை அந்த இரவு வேளையிலும் பளிச் என்று காட்ட, நடனத்துடன் சேர்த்து அவளையும் ரசித்தவன் தன் மனப்பெட்டகத்தில் அவளை சேமித்து கொண்டான்.

அதன் பிறகு சில நடனங்கள் முல்லையும் மலரும் சேர்த்து ஆடியிருந்தனர்.

கதிருக்கு சட்டென ஏதோ உறுத்த, தன் பார்வையை பக்கவாட்டாக திருப்ப, அவனை போலவே கண்களில் ரசனையுடன் விஷாலும் நடனத்தை பார்த்து கொண்டிருக்க இவனிற்கு பக்கென்று ஆனது. 

விஷாலின் பார்வை அவனிற்கு பல கதைகளை உணர்த்த, இவனிற்கு அடிவயிற்றில் ஏதோ உருண்டது.

விஷாலின் பார்வை முல்லையை தொடுவதை கூட அவன் விரும்பவில்லை. அவள் அவனுக்கு மட்டுமேயான ஹனிடால்! என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.

அவள் பள்ளி படிப்பை முடிக்கும் வரையில், தன் மனதினை திறக்காது இருந்து கொள்வோம். என அவன் முடிவெடுத்த வேளை, விஷாலின் பார்வையில் அவனிற்கு பிடித்தமில்லை.

தன்னை யாரோ உற்று பார்ப்பது போல் இருந்ததில், விஷால் திரும்ப கதிரின் பார்வையை கண்டு கொண்டான்.

முதலில் திகைத்து பின் லேசான பயத்துடன், “நான் பார்த்தது தெரிஞ்சுடுச்சாடா??” என அசடு வழிந்தவன், பின்

“ப்ளீஸ் மச்சான் இதை யாருகிட்டயும் சொல்லிடாதடா, முக்கியமா சதீஷ் கிட்ட, அவ சின்ன பொண்ணுன்னு தெரியுது. ஆனா என் மனசையும் அடக்க முடியலைடா, அவ கிட்ட இதுவரை பேசுனது கூட இல்லைடா”

என அவன் கூற, கூற இங்கே கதிருக்கு நிலை கொள்ள முடியவில்லை. எங்கே அவன் தேன்முல்லையை கைகாட்டி விடுவானோ, என அவன் நினைத்ததில் கண்கள் கூட லேசாக கலங்குவது போல் இருந்தது கதிருக்கு.

“எப்போ இருந்துடா??” என கேட்ட கதிரின் குரல் லேசாக கரகரத்தது.

“இது இப்போ இல்லை மச்சி அவளை சின்னதுல இருந்தே பிடிக்கும். அப்போ எல்லாம் இது மாதிரி தோணுனது இல்லை, ஆனா அவ பெரிய மனுஷி ஆனப்போ, எங்க அப்பா மாமான்றன்ல என்னை கூப்டு அவளுக்கு மாலை போட வச்சாங்கடா, அப்போ இருந்து தான்டா எனக்கு அவ மேல எண்ணம் வர ஆரம்பிச்சது. இதுவரை அவளை பார்வையால கூட நான் தெந்தரவு பண்ணது இல்லைடா, அவ படிச்சு முடிச்சதும் எங்க அப்பாவ விட்டு பொண்ணு கேட்க வைப்பேனே தவிர, அவளை தொந்தரவு எல்லாம் பண்ண மாட்டேன்டா??” என அவன் கூற கூற ஆரம்பத்தில் அவன் கூறுவதை உன்னிப்பாக கேட்டு கொண்டிருந்த கதிருக்கு, அவனின் பேச்சில் குழப்ப மேகங்கள் சூழ்ந்தது.

‘இவன் யார சொல்லுறான். முல்லை இன்னும் பெரிய மனுஷி ஆகலையே” என நினைத்தவன் அதனை அவனிடம் கேட்டும் விட்டான்.

“நீ யாரடா சொல்லுற விஷால்??”

“யாரு? யாருடா..??”

“இப்போ நீ சொன்னது யாரைப் பத்தி??”

“மலரை பத்தி தான்டா சொல்லிட்டு இருக்கேன்.” என்ற நொடி கதிரின் மனதில் ஐஸ்கட்டியை வைத்தாற் போன்ற உணர்வு.

அதுவரை அவன் பயத்திருந்த விஷயம் புஸ்வனமாகி விட, அதில் ஏகபோக மகிழ்ச்சி.

‘பாவிபய கொஞ்ச நேரத்துல என் உசுரு போக தெரிஞ்சுச்சு இவன் பேச்சுனால’ என ஆசுவாசம் அடைந்தவன்,

“ஹி..ஹி அப்புடியா மச்சான்” என சிரிக்க,

“ஆமாடா நீ ஏன் இப்புடி‌ சிரிக்கிற? டேய் தயவு செஞ்சு நம்ம பசங்க யாருகிட்டயும் சொல்லிடாதடா, யாருக்குமே தெரியாது உன்கிட்ட தான் மாட்டிகிட்டேன்.தயவு செஞ்சு சதீஷ் கிட்ட சொல்லிடாதடா” என அவன் கெஞ்ச,

“டேய் விடுடா, விடு பயப்படாத நான் யாருகிட்டயும் சொல்ல மாட்டேன். நீயும் படிச்சு முடிக்கிற‌ வரை மலரை தொந்தரவு பண்ண கூடாது” என்றவன் தனக்கும் சேர்த்து அதை கூறி கொண்டான்.

அவனிற்கு முல்லையை பிடித்திருப்பதை விஷாலிடம் கூறிவிடலாமா, என யோசித்தவன் உடனே அதை அழித்தும் விட்டான்.

ஆனால் இவள் கூறாமலேயே இவனின் நடவடிக்கைகளை வைத்தே விஷால் கண்டுபிடித்து விடுவான்‌ என்பதை இவன் அறிந்திருக்கவில்லை.

ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் முடிவடைய, முல்லையின் நடனத்தை பாராட்டி அவளிற்கு வெண்கலத்தால் ஆன ராதை சிலை வழங்கப்பட்டது.

பிறகு முல்லையும் மலரும் கடைகளில் நுழைய, பின்னோடு விஷாலும் கதிரும்.

அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்குவதை இருவரும் கவனித்து கொண்டு தான் இருந்தனர். பொருட்கள் வாங்கியதும் அவர்கள் கிளம்பி விட,

பின் நண்பர்களுடனே கடைவீதியில் சுற்று கொண்டிருந்தவனின் பார்வையில், கற்கள் பதித்து அந்த இரவில் மின்னிய குட்டி கண்ணன் சிலை கருத்தை கவர‌, தாமதிக்காது அதனை வாங்கியும் விட்டிருந்தான்.

இரவில் தனதறையில் அந்த கண்ணன் சிலையை பார்த்து கொண்டிருந்தவனுக்கு, அப்போது தான் முல்லைக்கு கொடுத்த ராதை சிலை நினைவு வர கள்ளச் சிரிப்பு சிரித்தவன் உறங்கியும் விட்டிருந்தான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
34
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. நானும் உன்னோட காதலை எவ்ளோ தான் பாராட்டுறது கதிர். அவ சின்ன பொண்ணா இருக்கறப்போ இருந்து லவ் பண்றதெல்லாம் ஓகே. ஆனா இப்போ வரைக்கும் அவளுக்காக காத்துக்கிட்டு இருக்கிறது தான் சூப்பர்