Loading

அத்தியாயம் 19

ஊரார் கூறிய செய்தியைக் கேட்டதும் ‘இது என்ன டா புது தொல்லை…’ என்று தான் முதலில் நினைத்தாள் செண்பகம். “நான் அவர் வந்ததும் சொல்றேன் அண்ணா…” என அவர்களை அனுப்பி விட்டு திரும்பியவளுக்கு அப்போது தான் அபி நினைவு வந்தான்.

‘இருவரும் சேர்ந்து தானே தார் பாய் எடுக்க சென்றனர் வரும் போது அவர் மட்டும் தானே வந்தார்…’ என எண்ணிக் கொண்டே அருகில் நின்ற சீதாவிடம் “ம்மா சார் எங்க?” மெல்ல கேட்டாள்.

அப்போது தான் நினைவு வந்தவராய் மகனை கண்களால் தேடினார். அவன் அங்கில்லாமல் போக “ராமன் கூட அபியும் போயிருப்பான் நினைக்கிறேன் ம்மா. எதுக்கும் மாடியில இருக்கானான்னு பாக்குறேன்…” என்றவர் அவசரமாக மாடிப்படியை நோக்கி விரைந்தார்.

மூச்சு வாங்க மேல சென்றவர் அங்கு அபியைத் தேட அவனில்லை… ‘ஆனந்தியை தேட ராமனுடன் சென்றிருப்பான்’ என நினைத்தவர் கீழறங்கி வந்தார். ஆனால் செண்பகம் எதற்காக அபியை விசாரிக்கிறாள் என்று யோசிக்கவில்லை

“அங்க இல்லைம்மா, ஆனந்தியை தேட ராம் கூட அவனும் போயிருப்பான் நினைக்கிறேன்…” என்றதும் “அவரோட உங்க பையன் போகலை மா, அவர் தனியா தான் போனார்…” என்றாள் அடக்கி வைத்த கோபத்துடன். 

“ராமன் கூட போகலன்னா எங்க போயிருப்பான்…” என முனகிக் கொண்டே யோசித்தவரின் காதில் செண்பகத்தின் நாரசமான பேச்சு விழுந்தது. நான் கேட்டது உண்மையா என்பதை போல செண்பகத்தைப் பார்த்தார். நீ கேட்டது சரி தான் என்பதைப் போல மீண்டும் அதையேக் கூறினாள் செண்பகம். “ஆனந்தியும் இங்கில்லை, சாரையும் காணோம். அப்ப குடோனுல அந்த அசிங்கத்தைப் பண்ணிட்டிருக்கறது இதுங்க இரண்டும் தானா?…” என்றாள் முகத்தை அருவருப்பாக வைத்துக் கொண்டு.  

செண்பகம் அப்படிக் கேட்டதும் அதிர்ந்து விழித்தவர் அடுத்த நிமிடமே முகம் இறுக “என்ன பேசிட்டிருக்க நீ? உன் மனசுல இப்படியொரு எண்ணம் இருக்குன்னு தெரிஞ்சிருந்தா நாங்க இங்க வந்திருக்கவே மாட்டோம். அவ உன் வீட்டு புள்ளைன்னு கொஞ்சம் கூட யோசிக்காம இப்படி வார்த்தையை விடற. தப்பு மா நீ பேசறது ரொம்ப தப்பு…” என்றார் அடக்கி வைத்த கோபத்துடன்.

“நான் பேசறதுல என்ன தப்பு இருக்குன்னு சொல்றீங்க நீங்க…” குரல் ஏகத்திற்கும் உயர்ந்தது செண்பகத்திற்கு 

“அவளும் இங்கில்லை, உங்க மகனையும் காணோம். அவரோட தானே குடோன் போனாரு. இப்ப அவர் வந்து கூட வெகு நேரமாயிடுச்சு இன்னும் உங்கப் புள்ளையை காணோம். அப்ப என்ன அர்த்தம் நேக்கா திட்டம் போட்டுட்டு அவளைக் குடோனுக்கு வர சொல்லிட்டு இவரு அதுக்கு அப்புறம் போயிருக்காரு…” என செண்பகம் கூற… சீதாவிற்கு பேச்சே வரவில்லை இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா என்று தான் பார்த்தார். 

‘அவன் பொண்டாட்டி இல்லாதவன் வயசு புள்ளையை அங்க அனுப்பி ஏடாகூடமாக ஏதாவது நடந்துட்டா என்ன பண்றதுன்னு…’அப்பவே இந்தாளுகிட்ட சொன்னேன். இந்த கூறுக்கெட்ட மனுசன் கொஞ்சம் கூட நான் சொன்னதை காதுல வாங்கிக்கலை. இப்ப பாரு ஊருல எல்லாருக்கும் தெரியற மாதிரி குடோனில போயி ச்சீ… ஒரு வாரம் தானே தனித்தனியா இருந்தாங்க… அதுக்குள்ள அப்படி என்ன கேட்குது இரண்டு பேருக்கும்…” என்றவளின் முகத்தில் அத்தனை அருவருப்பு… சாக்கடையை கடந்து செல்லும் போது முகத்தில் தோன்றுமே ஓர் பாவனை அதே பாவனையில் தான் செண்பகம் பேசினாள். அவளின் பேச்சில் அப்படியே நின்று விட்டார்.

‘என்ன பேசுகிறாள் இந்த பெண். ஒரு வாரம் தான் தனியாக இருந்தனர் என்று எந்த அர்த்தத்தில் பேசுகிறாள். அவள் வீட்டு பெண் என்று கூட பார்க்க வேண்டாம் சாதாரண பெண் என்று கூடவா நினைக்க தோன்றவில்லை” என நினைத்தவருக்கு அத்தனை ஆதங்கமாக இருந்தது.

அதே நேரம் சீதாவின் அமைதியில் தான் பேசுவது சரி தான் என்ற எண்ணம் மேலோங்கியது செண்பகத்திற்கு. ‘செய்வதையும் செய்து விட்டு எப்படி முழித்துக் கொண்டிருக்கிறார் பார். குற்றம் உள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும். உன் மகனின் அரிப்புக்கு என் வீட்டு பெண் தான் கிடைத்தாளா…’ தன் போக்கில் நினைத்து கொண்டாள். 

உண்மையில் அந்த நேரம் செண்பா தான் படித்தவள் என்பதையும் மறந்து போனாள். ஆனந்தி தன் வீட்டு பெண் என்பதையும் மறந்து போனாள். ’என் பேச்சை கேட்கவில்லை என்னையே எதிர்த்து பேசிவிட்டாளே’ என்ற கோபம் அவளுக்கு. அந்த கோபமும், வன்மமும் மேலும் பேச தூண்டியது..

“என்ன மா பேச மாட்டீங்கீறிங்க? குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குதோ? 

குறுகுறுக்க தானே செய்யும்.

வயசு புள்ளையை வளைச்சு போட்டுட்டோமேன்னு நெஞ்சு குருகுறுக்க தானே செய்யும். அதுவும் இன்னைக்கு நீங்க செஞ்சிருக்கற விசயம் இருக்கே எப்பா யாரும் செய்ய கூடாத விஷயம். மகனுக்கு அம்மாவே கூட்டிக் கொடுக்கறது…” என்றதும் அதிர்ந்தார் சீதா. 

அவரது அதிர்ந்த முகத்தை பார்த்துக் கொண்டே “இனி அதை ஊரே பாக்கும். அப்பறம் என்ன? நீங்க பிளேன் போட்ட மாதிரி இரண்டு பேருக்கும் ஈசியா கல்யாணம் முடிஞ்சுரும். நல்லா போடறீங்கம்மா பிளேன்னு…” செண்பகமே ஏதோ ஓர் கதையை கட்டிவிட்டு பேசினாள்.

ஒரு புறம் செண்பாவின் பேச்சு முகச் சுழிப்பையும் கோபத்தையும் கொடுத்தது என்றால் மற்றொரு புறம் அவமானமாகவும், வேதனையாகவும் இருந்தது.

“நான் வரலை மா, நீங்க போயிட்டு வாங்க மா, எனக்கு வேலை இருக்கு” என்று திடமாக மறுத்தவனை அடம் பிடித்து அழைத்து வந்தது மட்டுமல்லாமல் இன்று இரவு இங்கேயே தங்கிக் கொள்வோம் என்று இருக்க வைத்ததும் இவர் தானே… தன் செயலை எண்ணி வெட்கி போனார் சீதா. 

அதே நேரம், செண்பகத்தின் பேச்சிற்கு சீதா பொறுமையாக நிற்கிறார் என்றால் அது ராமிற்காகவும் ஆனந்திக்காவும் மட்டுமே. செண்பா பேசுகிறாள் என்று இவரும் பதிலுக்கு பேச போயி இன்னும் பிரச்சனை பெரியதாகி விடக் கூடாதே என்ற எண்ணம் மேலோங்க பல்லைக் கடித்துக்கொண்டு அமைதியாக நின்றார். சீதாவின் அமைதியை 

ஒரு வித முகச் சுளிப்போடு பார்த்துவிட்டு குடோனை நோக்கி வெடுவென நடந்தாள் செண்பகம். 

செல்லும் வழயெங்கும் ஆனந்தியை திட்டிக் கொண்டே சென்றாள். இவளின் வேகமும்,பேச்சுகளும் ஒரு சிலரை கவனிக்க வைத்தது என்றால் ஒரு சிலரை என்னவோ ஏதோயென்று இவளின் பின்னாலயே நடக்கவும் வைத்தது. செண்பகத்தின் இந்த செயலை சீதா துளியும் எதிர்பார்க்கவில்லை… 

“இங்கிருந்த வரைக்கும் எங்க பொண்ணா தான் இருந்தா… அங்க எப்ப போனாளோ அப்பவே அவ கெட்டுப் போயிட்டா. பணத்தைக் காட்டி மயக்கிட்டாங்க. இவங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டாங்க… நாசமா போயிடுவாங்க…” என தன் போக்கில் திட்டியப்படியே சென்றாள். 

அவளின் பின்னால் போவாத வேண்டாமா என்ற குழப்பத்தில் நின்றார் சீதா… மனம் ஏனோ அடித்துக் கொண்டது. தற்போது மகன் வளர்ந்து நிற்கும் உயரம் மலையளவு அல்லவா. இப்போது அவனுக்கு இப்படியான பெயர் வந்தால் நிச்சியம் அவனின் தொழிலும், நற்பெயரும் பாதிக்கப்படும் என்று நினைத்தவர் எப்படியாவது செண்பகத்தை தடுத்திட வேண்டுமென்று அவள் பின்னாலயே சென்றார். 

அவருக்கு மகனின் மேல் மிகுந்த நம்பிக்கை இருந்தது. அங்கிருப்பது மகனே என்றாலும் அவனின் மேல் துளியும் சந்தேகம் எழவில்லை. அவன் அம்முவின் மீது வைத்திருந்த காதல் அவரை அப்படி நினைக்க வைக்கவில்லை… 

சில நிமிட பயணத்திற்கு பின்பு தோட்டத்து குடோனும் வந்திருந்தது… அந்த குடோன் வெளியில் பூட்டியிருந்தது அதை கவனிக்கும் நிலையில் செண்பகம் இல்லை..  

நேராக கதவின் அருகில் சென்றவள் வேகமாக கதவைத் தட்டினாள். பட் பட் என்ற சத்தத்தோடு உள்ளே அதிர்ந்தது அந்த கதவு… ” யாரோ வந்துட்டாங்க…” எனக் குதுகலமாக கூறியவள் கதவை நோக்கி நகர

“ஹேய் வெயிட்…” என்றவன் கதவு தட்டும் ஓசையை கூர்ந்து கவனித்தான். அது சாதாரணமாக தெரியவில்லை அபிக்கு. 

“நம்ம உள்ள தாள் போட்டு இருக்கோன்னு நினைச்சு கதவு தட்டிட்டு இருக்காங்க. நீ,இரு நான் பேசறேன்…” என்றவன் எழுந்து கதவின் அருகில் செல்ல 

“கதவ தொறடி, ஏய் ஆனந்தி கதவ தொற…” எனக் கத்திய செண்பகத்தின் குரல் உள்ளிருந்த இருவருக்கும் நன்றாகவே கேட்டது. செண்பகமா என நினைத்தவளுக்கு பகீரென்றது. கண்களை இறுக மூடி திறந்தவள் இனி என்ன நடந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்ற முடிவோடு “நீங்க இருங்க சார் நானே போறேன்…” என்றவள் கதவை நோக்கி நடந்தாள். 

“நீ, இரு அவங்க பேசறதே தப்பா இருக்கற மாதிரி இருக்கு…” அவளை பின்னால் விட்டு முன்னால் சென்று “ஏங்க கதவு வெளிய லாக் பண்ணி இருக்குங்க. ஃபர்ஸ்ட் கதவை ஓபன் பண்ணுங்க…” எனக் கத்தினான்.  

அவன் கத்துவது துளியும் செண்பகத்தின் காதில் விழவே இல்லை. விடாமல் கதவைத் தட்டிக் கொண்டே இருந்தாள். அது அபிக்கு எரிச்சலைக் கூட்டியது “ஷிட்…” என்றவன் கேசத்தை அழுத்தி கோதிக் கொண்டு பொறுமையான குரலில் அதே சமயம் சற்றே சத்தமாக “ஏங்க, நான் பேசறது உங்களுக்கு கேக்குதா இல்லையா? நாங்க உள்ள மாட்டிக்கிட்டோம். ப்ளீஸ் கதவ தொறங்க…” என்றான் மீண்டும். இப்போது அந்த குரல் வெளியில் நின்ற அனைவருக்கும் நன்றாகவே கேட்டது…

அனைவரிடமும் சின்ன சலசலப்பு அதே சமயம் அங்கு வேக நடையுடன் வந்த சீதாவோ கதவின் பூட்டை தான் முதலில் கவனித்தார். கீழிருந்த பெரிய கல்லை எடுத்து கொண்டவர் 

“ஏம்மா வெளிய பூட்டியிருக்கறது கூடவா உனக்கு தெரியல? புள்ளையை உள்ள வைச்சு பூட்டிட்டு வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு இருக்க, ஒழுங்கா தள்ளிக்கோ இதுக்கு மேல ஏதாவது பேசின நடக்கறதே வேற…” எனக் கூறிக் கொண்டே பூட்டை உடைத்தார். 

சீதாவின் குரல் கேட்டதும் தான் இருவருக்கும் மூச்சே வந்தது. “எது நடந்தாலும் நீ பயப்படாம தைரியமா நில்லு. யாரா இருந்தாலும் இந்த நிலைமையில பார்த்தா தப்பா தான் புரிஞ்சுக்குவாங்க. நம்ம தான் எடுத்து சொல்லணும் புரியுதா…” அபிக் கூறியதும் 

“எதுக்கு தப்பா புரிஞ்சுக்க போறாங்க, வெளிய பூட்டு போட்டு இருக்குன்னு கூடவா தெரியாது அவங்களுக்கு” என்ற ஆனந்தியை நிதானமாக திரும்பி பார்த்தான். 

“இரண்டு பேரையும் கையும் களவுமா பிடிக்கிறதுக்காக பூட்டு போட்டோம்னு சொன்னா என்ன பண்ணுவ?” எனக் கேட்டதும் விழிகளை விரித்து ஆடவனை பார்த்தாள். 

“ஒன்னுமில்லை பயப்பட வேண்டாம். எதுவா இருந்தாலும் தைரியமா ஃபேஸ் பண்ணு” என்றான். அதற்கு பதில் பேசவில்லை ஆனால் தன் பக்கம் தவறில்லை என்ற போது நான் ஏன் பயப்பட வேண்டும் என்ற எண்ணம் அபி பேசிய பின் அவளது மனதில் ஆழமாய் வேரூன்றி நின்றது.  

இரண்டு, மூன்று முறை தட்டியதும் பூட்டு உடைந்து கொள்ள கதவை திறந்தார் சீதா. கதவு திறந்ததும் முதலில் வெளிவந்தது அபி தான். வெளியில் நின்ற கூட்டத்தைப் பார்த்ததும் மானசீகமாக தலையில் அடித்து கொண்டப்படி வெளியில் நின்றவர்களை அழுத்தமாகப் பார்த்து நின்றான். அபியின் அழுத்தமான பார்வையும் நிமிர்ந்து நின்ற தோரணையே அவன் தவறு செய்யவில்லை என்று பறைசாற்றியது. அபி வெளிவந்த சில நொடிகள் கழித்து ஆனந்தியும் வெளியில் வந்தாள். 

அவள் வெளி வந்தும் வராமலேயே மங்கையின் கைப் பற்றி தன் புறம் இழுத்த செண்பகம் “குடும்ப மானத்தையே வாங்கிட்டயே டி…” என்று கை நீட்டியிருந்தாள். 

செண்பகத்தின் அடியைத் துளியும் எதிர்பார்க்கவில்லை ஆனந்தி. நிமிடம் ஆணி அடித்தது போல் நின்றாள். அந்த சில நொடிகள் போதாதா செண்பகத்திற்கு 

“ஒரு வாரம் தானே தனித்தனியா இருந்தீங்க அதுக்குள்ள கேட்குதா?…” எனக் கேட்கவும் சட்டென திரும்பி செண்பகத்தை பார்த்தான் அபி. 

“அவன் தான் பொண்டாட்டி இல்லாம எந்நேரமும் அலையறான்னா உனக்கு எங்க டி போச்சு புத்தி…” எனக் கேட்டு மீண்டும் அடித்தாள். 

“என்ன பேசற நீ, கொஞ்சமாவது யோசிச்சு பேசு… நீ சொல்ற மாதிரி தப்பா இருந்திருந்தா உள்ள தானே லாக் பண்ணிருப்போம். வெளிய லாக் பண்ணிட்டு உள்ள இருப்போமா? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீயா?” எனக் கோபத்தை அடக்கிய குரலில் அபிக் கேட்டான். செண்பகத்தின் பேச்சு அவனுக்கு கோபத்தை கொடுத்திருக்க துளியும் மரியாதை தரவில்லை அவளுக்கு..

அவனை ஏறயிறங்க பார்த்தவள் 

“அப்ப இவ இப்படி நிக்கறதுக்கு காரணமென்ன…” என அருகில் நின்ற ஆனந்தியை கை காட்டிக் கூறினாள். 

மயங்கி விழுந்ததாலும், அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகளின் மேல் ஏறியதாலும் அவளின் உடையில் வெள்ளை நிற திட்டுகள் தெரிந்தது அதை செண்பகத்திடம் சொன்னாலும் நம்பப் போவதில்லை என்று நினைத்தவன் அவளை அமைதியாக பார்த்தான்.

“என்ன சொல்லுங்க? வாய் கூசுதோ உள்ள என்ன நடந்துச்சுன்னு சொல்ல வாய் கூசுதோ?வயசு புள்ளையை வளைச்சு போட வெட்கமா இல்லைடா உனக்கு. இன்னைக்கு தான் இந்த கூத்து நடக்குதா இல்லை அங்க வந்ததுல இருந்தே…” என பேச பேசவே 

“போதும் நிறுத்துங்க…” என்று கத்தியிருந்தாள் ஆனந்தி. 

“என்னடி என்ன கத்தற இவனோட படு…” அந்த வார்த்தையை முடிக்கும் முன் செண்பகத்தின் கன்னங்களில் ஆனந்தியின் கைரேகை அழுத்தமாய் பதிந்து மீண்டது. 

ஆனந்தியின் செயலில் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களின் முகத்தில் அதிர்ச்சியின் சாயல் அதே நேரம் அபியின் பார்வை ஆனந்தியின் மேல் தான் அழுத்தமாய் விழுந்தது… 

 “போதும், இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசனீங்க நல்லாருக்காது சொல்லிட்டேன்…” ஒற்றை விரலை நீட்டி மிரட்டினாள். 

“இவரு வீடு இல்லாம வேற வீட்டுக்கு நான் வேலைக்கு போயிருந்தா நீங்க சொல்ற மாதிரி தான் நடந்திருக்கும்… இத்தனை மாசத்துல ஒரு நாள் கூட என்னை தப்பான பார்வையில பார்த்ததுல இல்லை. அவரை போயி ச்சீ உங்க புத்தி எங்க போகும்…” எனக் கூறியவளின் குரலில் மிதமிஞ்சிய கோபமிருந்தது…

“இவன் கூட படு** வந்து இப்படியெல்லாம்…” என அடுத்த வார்த்தை முடிக்கும் முன் ராமின் ஐந்து விரல்களும் செண்பகத்தின் கன்னத்தில் தன் தடத்தை பதித்திருந்தது…  

“மூச்சு வெளி வந்துச்சு வெட்டிருவேன் ராஸ்கல்…” எனக் கை நீட்டி எச்சரித்தவன் ஆனந்தியை பார்த்தான். அண்ணனை பார்த்ததும் இதுவரை இருந்த தைரியம் மொத்தமாய் வடிய சின்ன கேவல் அவளிடம், ஓடிவந்து அண்ணின் கையைப் பிடித்து நின்றாள். 

“என்னங்க என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாதீங்க…” என செண்பகம் ஏதோ சொல்ல வர, அது ராமின் முறைப்பில் அப்படியே நின்றது. 

“யாரு தெரியாம பேசறா? நானா நீயா…” என்றவன் பின்னால் திரும்பி பார்த்தான் ஆனந்தியை துரத்தி வந்த நால்வரும் நின்றனர்…

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
11
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்