
அத்தியாயம் 17
சுட்டெரிக்கும் சூரியன் கூட அழகாய் காட்சியளிக்கும் மாலை பொழுது அது… குளிரை சுமந்துக் கொண்டிருந்த தென்றலும் சரி, தென்றலோடு வந்த பக்தி பாடலும் சரி அவளின் கவனத்தைத் துளியும் கவரவில்லை.
உங்களால் முடிவில்லையா என கேலி செய்த சூரியக் கதிர்களோ அவளின் வதனத்தை மெல்ல வருடி விட்டது… ஹிஹிம் அதன் ஸ்பரிசமும் அவளின் மனதைத் துளியும் அசைக்கவில்லை…
பாவையின் மனம் முழுக்க வலிகள் மட்டுமே நிரம்பியிருந்தது.அதனால் தான் என்னவோ இயற்கையின் அழகும், செழிப்பும் அவளின் கண்களுக்குள் பதிந்தாலும் கவனத்தில் பதியவில்லை…
செண்பகத்தின் மீதிருந்த கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறியவள் நேராக வந்தது என்னவோ அவர்களின் தோட்டத்திற்கு தான்.
தன் கோபமோ, அழுகையோ இரண்டிற்கும் தனிமையின் துணையை நாடி இப்படியான இடத்திற்கு வந்து விடுவாள். எப்போதும் அமரும் கல் திட்டில் அமர்ந்து கொண்டவளின் எண்ணம் முழுவதும் செண்பகம் பேசியதிலயே உழன்றது.
செண்பகத்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மங்கையின் மனதை குத்தி கிழித்தது. கண்களில் குளம் போல் தண்ணீர் நின்றும் அதனை கீழே விடக் கூடாதென வீம்புகென்று அமர்ந்திருந்தாள். இருந்தும் கண்களில் தேங்கி நின்ற கண்ணீர் அவள் அனுமதியின்றி வெளியேறியது.
ஆனந்திக்கு பதிமூன்று வயதிருக்கும் போதே அவளது தாய், தந்தை இருவரும் சாலை விபத்தில் இறந்து விட, அதன் பிறகு அவளைத் தாய், தந்தைப் போல் பார்த்துக் கொண்டது அனைத்தும் அண்ணன் தான்.
அதே சமயம் இருவருக்கும் பத்து வருட இடைவெளி இருந்ததால் என்னவோ அதிகளவு பேச்சு இருவருக்கிடையே இருந்ததில்லை.
வாடா போடா என்றழைக்கும் அளவிற்கு இருவருக்கும் நெருக்கம் இல்லையென்றாலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருந்ததில்லை. அது ராமின் துணைவி வந்த பின்பும் தொடர்ந்தது. ஆம் தாய், தந்தை இறந்த சில மாதங்களிலயே தான் காதலித்த செண்பகத்தை மணம் முடித்திருந்தான் ராம்.
எல்லா அண்ணிமார்களை போல் செண்பகம் கொடுமைப் படுத்தியதில்லை என்றாலும் சில சமயம் தேள் கொடுக்கு போல வார்த்தைகளைக் கொட்டுவார் இதோ இன்று போல…
மாலைப் பொழுதின் வெளிச்சம் மங்கத் தொடங்கியிருந்த நேரம் “ஹேய் பொண்ணு இங்க என்ன பண்ற?…” என்ற குரலில் திடுகிட்டு எழுந்து நின்றாள் பெண். ஆடவர்கள் நான்கு பேர் நின்றிருந்தனர் அனைவருமே குடித்திருந்தது நன்றாகவே புரிந்தது அவளுக்கு..
“அது அ…து நான்…” துளியும் பேச வரவில்லை. நால்வரின் சிவந்த கண்களும் அவளுக்கு ஒருவித பயத்தை கொடுக்க, எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர பார்த்தாள்.
“இந்த தோட்டத்தில தனியா இவ மட்டும் இருக்கான்னா என்ன அர்த்தம் ண்ணா…” ஒருவன் கிசுகிசுவென கேட்பது ஆனந்திக்கு நன்றாகவே கேட்டது.
“ இந்தா புள்ளை கொஞ்சம் நில்லு… நாலு பேர் இருக்கோம். ஆளுக்கு எவ்வளவுன்னு சொல்லு பேசி முடிச்சிடலாம்…” என்றான் அந்த கூட்டத்தில் ஒருவன். அவன் அப்படி கேட்டதும் ஆனந்திக்கு கை,கால்கள் எல்லாம் வெலவெலத்துப் போனது…
முடியும் மட்டும் வேகமாக நடந்தவள் அப்போது தான் அந்த இடத்தை கவனித்தாள். தென்னை மரங்கள் சூழ, ஒரு பக்கம் கரும்பு சாகுபடியும் மற்றொரு பக்கம் சோளமும் சாகுபடி செய்திருந்தனர். இதை வைத்து தான் அந்த ஆடவர்கள் தன்னை தவறாக நினைத்திருக்க கூடும் என நினைத்தவள் வெடுவெடுவென நடந்தாள்.
அவளின் பின்னாலயே அந்த ஆடவர்களும் நடக்க, நன்றாகவே பயந்து போனாள் பெண். முதலில் வேகமாக நடந்தவள் தற்போது ஓட்டம் எடுத்தாள்.
சிறிது வயதிலிருந்தே பழகிய இடம் தான் என்றாலும் மனதை பயம் ஆட்கொண்ட பிறகு, நன்றாக தெரிந்த இடம் கூட சூனியமாக தெரிந்தது…
சிறிது தூரத்தில் தோட்டத்து குடோன் தெரியவும் தான் மூச்சே வந்தது அவளுக்கு. குடோனில் மின் விளக்கு எரிய அண்ணன் தான் இருப்பான் என்று நினைத்து உள்ளே சென்றாள்.
அதே நேரம் அவளை பின் தொடர்ந்து வந்த ஆட்களும் அவ்விடத்தை அடைந்திருந்தனர். இதற்கு மேல் பயமில்லை என நினைத்தவள் குடோனில் நுழைந்து ராமை தேடினாள்.
‘இது என்ன அதுக்குள்ள போகுது?’ நால்வரில் ஒருவன் கேட்க
” எங்க போனா என்ன? ஜோலியை முடிக்க இதுவும் வசதியான இடம் தான். முதல்ல நான் உள்ள போயி முடிச்சுட்டு வரேன். அடுத்தடுத்து நீங்க போங்க…” எனக் கூறி ஒருவன் முன்னால் நடந்தான்.
“ஹேய் யார்ரா நீங்க?” என்ற குரல் கேட்க, குரல் வந்த திசையை பார்த்தான் முன்னால் வந்தவன்.
“ஒன்னுமில்லைங்…”குடோனிற்கு பின்னாலிருந்து வந்து கொண்டிருந்த ராமைக் கண்டதும் பதறியபடி பதில் கூறினான்.
கோவிலில் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒலிப்பெருக்கியின்
சத்தத்தில் அவனது பதில் துளியும் கேட்கவில்லை ராமனுக்கு.
“அங்கேயே நில்லுங்க டா வரேன்” என்றவன் குடோனிற்குள் கவனிக்காமல் அதன் கதவை பூட்டிவிட்டு அவர்களை நோக்கி நடந்தான்.
“டேய் நீ பார்வதி அத்தை பையன் தானே? பொழுது போன நேரத்தில இங்க என்ன பண்ற? ” முன்னால் வந்தவனிடம் கேட்டான்.
அவன் பதில் கூறும் முன்பே ராமின் பார்வை பின்னால் நின்றிருந்தவர்களின் மேல் விழுந்தது.
“இவனுங்க யாரு? உன்னோட வந்தவனுங்களா?…” எனக் கேட்டு அனைவரையும் உற்று பார்த்தவன் அவர்களின் தாயின் பேரையும், தனக்கு அவர்கள் என்ன முறையென்றும் சொல்ல நால்வரின் போதையும் சற்றே இறங்கியிருந்தது.
“என்னடா திருத்திருன்னு முழிச்சிட்டு இருக்கீங்க? உங்களுக்கு இங்க என்ன சோலி? …” எனக் கேட்டு குடோனின் சாவியை கை விரல்களுக்கு நடுவில் சொருகியப்படி கேட்டான்.
பெண்ணைத் துரத்தியப்படி வந்தோமென்றா கூறுவார்கள் திருடனுக்கு தேள் கொட்டியது போல நால்வரும் திருதிருவென விழித்து நின்றனர்.
அவர்களின் பார்வையும் பம்பிக் கொண்டு நிற்கும் விதமும் ராமனுக்கு சந்தேகத்தைக் கொடுக்க
“என்னடா பதில் சொல்லுங்க…” என உதட்டைக் கடித்து வேட்டியை மடித்து கட்டியப்படி முன்னால் வந்தான்.
அவன் முன்னால் வரவும் கதவு தட்டும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது. ஒலிப்பெருக்கியின் சத்தத்திலும் அவர்களின் மீதிருந்த கவனத்திலும் கதவு தட்டும் சத்தமும் அதற்கு பின் வந்த குரலும் துளியும் கேட்கவில்லை இராமிற்கு.
“இல்லைன்னா வெளிக்கு வந்தோம்…” என தயங்கி ஒருவன் சொல்லவும் அதே தான் என்பதை போல மற்றவர்களும் தலையாட்டினர்.
“வெளிக்கு வர இடமா இது? வீட்டுக்கு வீடு டாய்லெட் இருக்கும் போது இங்க என்ன டா வெளிக்கு வந்தேன்ன்னு சொல்லிட்டு இருக்கீங்க. நீங்க சொல்றதை அப்படியே நம்பறளவுக்கு நான் முட்டாளுன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா? உங்க கண்ணைப் பாத்தாலே குடிச்சிருக்கீங்கன்னு தெரியாதா…” என்றவன் நால்வரையும் மேலிருந்து கீழாக பார்த்தபடி
“தண்ணியடிக்கற வயசைப் பாரு” பல்லைக் கடித்தான்.
“இனிமே இந்தப்பக்கம் பாத்தேன்…” என விரல் நீட்டி மிரட்டிட, நால்வரும் வேகமாக அங்கிருந்து நகர்ந்தனர். அவர்களின் பின்னாலயே தார் பாயை எடுத்தபடி ராமும் சென்றான்.
“பாயெல்லாம் என் கையில இருக்கு. இவரு என்னத்தை எடுத்துட்டு போனாருன்னு தெரியலையே? சொல்லாம கொள்ளாமக் கிளம்பி போகவும் மாட்டாரு. முக்கியமான கால் வரும் சொல்லிட்டு இருந்தாரு. அது வந்துரும்ன்னு கிளம்பி போயிட்டாரோ என்னவோ…” என தனக்குள் புலம்பியப்படியே முன்னால் சென்றான்.
கூத்து பார்க்க தார் பாய் எடுத்து வர அபியும், ராமும் தோட்டத்தில் இருக்கும் நெல் குடோனிற்கு வந்திருந்தனர். ராம் தார் பாயை எடுத்துவிட்டு வெளியில் வரவும் அபி அவ்விடத்தில் இல்லாமல் இருக்க, குடோன் உள்ளே சென்று அழைத்து பார்த்தான். ஒலிபெருக்கியின் சத்தத்தை தாண்டி ராமன் அழைப்பு அபியை சென்று சேரவில்லை போல, அவன் பதில் அளிக்காமல் போகவும், குடோனிற்கு பின்னால் சென்றிருப்பார் என நினைத்து அங்கு சென்று பார்த்தான் ராம். அவ்விடத்தில் அபி இல்லாமல் போக, வீட்டிற்கு சென்றிருப்பாரோ என நினைத்தபடியே வந்தவன் அங்கு நின்றவர்களை பார்த்ததும் அவர்களோடு பேச்சுக் கொடுத்தப்படியே உள்ளிருந்த ஆனந்தியை கவனிக்காது கதவை பூட்டிவிட்டான்.
***
அது நெல் மூட்டைகளை அடுக்கும் குடோன். அகலத்திலும், நீளத்திலும் சற்றே பெரியதாக இருந்தது. ஆனந்தி உள்ளே சென்ற சிறிது நேரத்திலேயே மின் விளக்குகள் அனைத்தும் அணைந்து விட,யாரோ நடக்கும் காலடி சத்தம் நன்றாகவே கேட்டது.
தன்னை துரத்திய ஆடவர்கள் தான் வந்துவிட்டனர் போல என நினைத்தவளுக்கு பயம் பிடித்து கொண்டது.
பட் பட்டென்று துடிக்கும் இதயத்தின் ஓசையும், கதவு தட்டும் ஓசையும் மாறி மாறி கேட்டது. சில நிமிடங்கள் மட்டுமே கேட்ட சத்தம் தற்போது இல்லையென நினைத்தவள் மெல்ல பின்னால் திரும்பி பார்க்க ஓர் உருவம் அவள் முன் நின்றது.
மதியம் சாப்பிடாமல் இருந்தாலும் ஓடி வந்ததின் சோர்வாலும் தற்போது எதிரில் நின்ற உருவத்தை பார்த்த அதிர்ச்சியாலும் சட்டென மயங்கினாள் பாவை…
ஆனந்தி கிழே விழுவதற்குள் அவளை தாங்கி பிடித்திருந்தான் அபி. தார் பாயை எடுக்க உள்ளே நுழைந்தவன் குடோனின் உள் அமைப்பு பெரியதாகவும் நீளமாகவும் இருந்ததை கவனித்தான். திரும்பி ராமை பார்த்தான் அவன் மும்மரமாக தார் பாயை எடுத்தப்படி இருக்க, அவனிடம் சொல்லாமல் கூட உள்ளே நடக்காரம்பித்தான்.
குடோன் முழுவதும் நெல் மூட்டைக்களும், பருத்தி மூட்டைகளும் நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்ததை பார்த்தபடியே சென்று கொண்டிருந்தவன் வெளியில் செல்ல திரும்பிட, ஆனந்தி ‘அண்ணா…’ என அழைத்தப்படி வேறொரு பக்கம் செல்வது தெரிந்தது.
“இவ இங்க என்ன செய்யறா?…” என நினைத்தவன் ஆனந்தி இருக்கும் திசை நோக்கி நடக்க,வெளியில் கதவு மூடப் பட்டிருந்தது.
“அடக் கடவுளே…” என வாய்விட்டு புலம்பியவன் மூடப்பட்ட கதவையும் ஆனந்தியின் குரல் வந்த திசையையும் பார்த்தான்.
அவளை கண்டுக் கொள்ளாமல் கதவிருக்கும் திசையை நோக்கி நடந்தவன் ” ராம் ராம்…” என கத்தி அழைத்தப்படியே கதவை முடிந்த மட்டும் தட்டினான்.
அந்தக்கால மரக் கதவு நன்றாகவே வலிமையாக இருந்தது… குடோன் அல்லவா தரமான கதவுகளை தான் வாங்கி போட்டிருந்தான் ராம். சிறிது நேரம் தட்டி பார்த்தவன் ஆனந்தி இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தான்.
அவளோ இவனை பார்த்ததும் மயங்கி விட, அவள் கிழே விழாமல் இருக்க சட்டென ஆனந்தியை தன் கைகளில் தாங்கியிருந்தான்.
“ஷிட்…” என பற்களை கடித்தவன் “ஹேய்…” கன்னத்தை தட்ட,அவளிடம் துளியும் அசைவில்லை.
“இடியட் இங்க பாரு…ஹேய் பொண்ணே…” சற்று பலமாக அடித்து எழுப்ப,மெல்ல கண் திறந்தவள் எதிரில் தெரிந்த உருவத்தைப் பார்த்ததும் வீல்லென்று அலறி விட்டாள்.
“கடவுளே…” என தலையில் அடித்துக் கொண்டவன்
“ஹேய் இடியட், எதுக்கு இப்படி கத்தற? நான் தான்…” என இவனும் கத்தினான்.
அபியின் குரலில் தன்னாலேயே ஆசுவாசம் பிறக்க, ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவள் எதிரில் நின்றவனை பார்த்தாள். அவனும் இவளை தான் முறைத்து பார்த்து கொண்டிருந்தான்.
” இந்த நேரத்தில இங்க என்ன பண்ற நீ…” கோபத்தை அடக்கிய குரலில் கேட்டான்.
ஏற்கனவே பயந்திருந்தவள் இவனின் கோபத்தில் நன்றாகவே பயந்து போனாள். வார்த்தைகள் வர மறுக்க தொண்டைக் குழியில் ஏதோ சிக்கி கொண்ட உணர்வு. அவளின் அமைதியே அவள் பயந்திருக்கிறாள் என்பது புரிந்தது அவனுக்கு…
“இந்த நேரத்துல குடோனுக்கு எதுக்கு வந்த…”குரலில் மென்மையை தேக்கி கேட்கவில்லை என்றாலும் கோபமாக கேட்கவில்லை. அவன் குரலிலிருந்த ஏதோ ஒன்று அவனிடம் அனைத்தும் கூற வைத்தது.
“அது தோட்டத்துல இருந்தேன். நாலு பேர் தப்பா கேட்டு…” என்றவளுக்கு மழுக்கென்று கண்ணீர் சூழ்ந்து கொண்டது.
அதனுடனே “அவங்கக்கிட்டயிருந்து தப்பிச்சு வந்த போது குடோன் ஓபன்ல இருந்தது. இந்த நேரத்துல அண்ணா தான் இருப்பாருன்னு நினைச்சு உள்ள வந்தேன். உள்ள வந்ததும் கரெண்ட் கட் ஆயிடுச்சு கதவும் பலமா தட்டற சத்தம் கேட்டுச்சு… என்னனு திரும்பி பார்க்கும் ஒரு உருவம் தெரிஞ்சது அந்த பசங்க தான் வந்துட்டாங்களோன்னு பயந்துட்டேன்…” என்றதும் அவளை தீ பார்வை பார்த்தான்.
“அவனுங்க தப்பா கேட்டதும் பயந்து ஓடி வந்துட்டன்னு சொல்ற…” வாயில் காற்றை நிரப்பி வெளியில் விட்டான்.
“பின்ன என்ன செய்ய சொல்றீங்க… அவங்க கேட்ட மாதிரி பேரம் பேச சொல்றீங்களா? இல்லை ஃபைட் பண்ண சொல்றீங்களா?..” பதிலுக்கு அவளும் கோபமாக கேட்டாள். தற்போது நன்றாகவே மயக்கம் தெளிந்திருந்தது ஆனந்திக்கு.
“அவனுங்க நாலு பேரும் குடிச்சிட்டு வந்திருந்தாங்க தெரியுமா…இந்த நேரத்துல அவனுங்க கிட்ட வாய் கொடுத்தா என்ன வேணுன்னாலும் நடக்கும். அதான் பதில் பேசாம ஓடி வந்தேன். இங்க குடோன் ஓபனா இருக்கவும் அண்ணா இல்லைன்னா எங்க பங்காளிங்க யாராவது இருப்பாங்கன்னு நினைச்சு உள்ளே வந்தேன்…” என்றாள் இன்னும் எரிச்சல் குரலில்.
“நல்லா நினைச்ச போ, இப்ப எப்படி வெளிய போறது… உங்கண்ணன் இடியட் டோரை க்ளோஸ் பண்ணிட்டு போயிட்டான்…” என்றதும் அவனை பாவமாக பார்த்தாள்.
“என்ன பாக்குற…” என முறைப்பாக கேட்டான்.
“அண்ணாக்கு கால் பண்ணுங்க சார்…” என்றாள் அமைதியாக
“இது எனக்கு தெரியாது பாரு. என் மொபைல் வீட்டுல இருக்கு…” என்றான் கடுப்பாக
“என்ன வீட்டுல இருக்கா? ஆமா நீங்க எதுக்கு தேவையில்லாம குடோனுக்கு வந்தீங்க…” புருவத்தை உயர்த்தி மிதப்பாய் கேட்டாள்.
“எனக்கு மட்டும் இங்க வர வேணுன்னு வேண்டுதலா?…”
என்றவன் கேசத்தை அழுந்த கோதி சற்று முன் நடந்த நிகழ்வுகளை அசைப்போட்டான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
14
+1
1
+1
