Loading

அத்தியாயம் 16 

உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா

இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா… 

எல். ஆர். ஈஸ்வரியின் குரலில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலை காஞ்சனா பட பாணியில் பாடிக் கொண்டே சமையலறையில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தாள் ஆனந்தி. 

அக்கணம், சுள்ளென்ற வலியை முதுகில் உணர,  துள்ளிக் குதித்து முதுகைத் தேய்த்தபடி திரும்பி பார்த்தாள். அங்கு உக்கிரமாக நின்றிருந்தாள் செண்பகம். 

“என்ன அண்ணி…” எனப் பாவமாக கேட்டுக் கொண்டே வலித்த முதுகைத் தேய்த்தாள்.

“என்ன? நொன்ன அண்ணி? என்னடி அங்க சொல்லிட்டு வந்த…” முறைத்தப்படி கேட்டாள் செண்பகம்.

செண்பகத்தின் முறைப்பை கண்டுகொள்ளாமல் “என்ன சொல்லிட்டு வந்தேன்” என அவளிடமே திருப்பிக் கேட்டுவிட்டு மீண்டும் விட்ட வேலையைத் தொடர செண்பகத்தின் கோபம் எகிறியது.

“என்னடி சொல்லிட்டு வந்தேன்னு நான் கேள்வி கேட்டா அதையே திருப்பி கேட்கறயா? என்ன நினைச்சிட்டிருக்க உன் மனசுல…” சற்றே குரல் உயர்த்தினாள் செண்பகம். 

கோவிலில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலும், குழந்தைகளின் சத்தமும் வீட்டை ஆக்கிரமித்திருந்தாலோ என்னவோ இருவரும் பேசுவது மற்றவர்களுக்கு கேட்காமல் போனது. 

செண்பகத்தின் குரல் உயர்ந்ததும் நன்றாக திரும்பி நின்று அமைதியாக தன் அண்ணியை பார்த்தாள். அந்த அமைதியே குற்றம் செய்துவிட்டு பதில் சொல்ல முடியாமல் தயங்கி நிற்பது போல் ஓர் எண்ணத்தை செண்பகத்திற்கு கொடுக்க, அந்த எண்ணமே அவளை மேலும் பேச வைத்தது.

“நீ பாட்டுக்கு கடைசி வரைக்கும் நான் அவங்களோட இருப்பேன்னு சொல்லிட்டு வர. எதை மனசுல வைச்சிட்டு அப்படி சொல்லிட்டு வந்த நீ…” இழுத்து பிடித்தப் பொறுமையுடன் கேட்டாள் செண்பகம்.

“உண்மையை தான் அண்ணி சொன்னேன். நான் அந்த பசங்களை அப்படியே விட மாட்டேன். கடைசி வரைக்கும் அவங்க கூட துணையா இருப்பேன்…” என அழுத்தமாக கூற. அவளின் கூற்றில் எழுந்த கோபத்தை பற்களில் காமித்தாள் ராமின் மனையாட்டி.  

“லூசு மாதிரி பேசாத ஆனந்தி, அந்த பசங்களை பாத்துக்க நீ வேலைக்கு தான் போயிருக்க. அவங்களுக்கு அம்மாவாகவோ இல்லை அவனுக்கு பொண்டாட்டியாகவோ போகல…” கடுமையாகவே கூறினாள் செண்பகம். அண்ணியின் வார்த்தையில் பாத்திரங்களைக் கழுவி கொண்டிருந்தவளின் கைகள் நிமிடம் அப்படியே நின்றது. 

அவள் அந்த கோணத்தில் யோசிக்கக் கூட இல்லை. தன்னைப் போல தாய், தந்தையின் பாசத்திற்கு ஏங்கி நிற்கும் சின்னஞ்சிறு குழந்தைகளின் மீது ஒருவித நேசம் துளிர்ந்திருந்தது. அந்த நேசம் தான் அவர்களுடன் ‘நான் கடைசி வரை இருப்பேன்’ என்று சொல்ல வைத்தது. 

உண்மையை சொல்லபோனால் அவர்கள் மீதான நேசம் எப்பொழுது மலர்ந்தென்று அவளுக்கே தெரியவில்லை. 

இத்தனைக்கும் ஆரம்ப நாட்களில் பெரிதாக பிள்ளைகளிடம் ஒட்டிக் கொள்ளவில்லை. நாட்கள் செல்ல செல்ல அவளையும் அறியாமல் அவர்கள் மீது அளவுக் கடந்த பாசத்தை வைத்து விட்டாள்.

அந்த பாசம் தான் அன்று சோழா விழுந்ததும் பதற வைத்தது. அந்த பாசம்  தான் இன்று சீதாவிடம் அப்படி பேச வைத்தது… 

ஆனால் தன் பேச்சிற்கு இப்படியொரு கோணம் இருக்குமென்று நினைக்கவில்லை. அதுவும் தன் அண்ணியே இப்படி யோசிப்பார் என்று துளியும் எண்ணவில்லை. ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு தன்னை நிலைப்படுத்தி கொண்டவள் இறுக்கிப் பிடித்த கோபத்துடன் பாத்திரங்களை தேய்த்தாள். 

ஆனந்தியின் முக இறுக்கத்தையும், கோப முகத்தையும் கண்டும் காணாமல் மெல்லிய குரலில்  

“இங்க பாரு ஆனந்தி. நீ மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கேன்னு எனக்கு தெரியலை. இருந்தாலும் சொல்றேன் அடுத்தவன் வீட்டுக்கு போக போற பொண்ணு நீ. இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கறது வெளிய தெரிஞ்சா காதும் காதும் வைச்சு கண்டதையும் பேசுவாங்க…” அமிலமாய் வந்து விழுந்தன வார்த்தைகள். அண்ணியின் வார்த்தையில் கண்களை இறுக மூடித் திறந்தாள் ஆனந்தி.. 

“பெரிய பணக்காரன், பொண்டாட்டி வேறயில்லை. வேலைக்கு போறேன்னு சாக்கு சொல்லிட்டு இவனை வளைச்சு போட்டுட்டான்னு பேசுவாங்க. நரம்பு இல்லாத நாக்கு என்னவேணா பேசும். நீதான் அடக்க ஒடுக்கமா இருக்கணும் அவன் ஆம்பளை ஆயிரம் தப்பு பண்ணாலும் ஆம்பளைன்னு போயிடும். நீ இன்னொருத்தன் வீட்டுக்கு வாழ போறவ, இப்பவே இப்படியான கெட்ட பேர் வந்தா உனக்கு மட்டுமில்லை எங்களுக்கும் அசிங்கம்…” எனக் கூறிய செண்பகத்தின் முகத்தில் அத்தனை அருவருப்பு… 

செண்பகத்தின் முகத்தில் தெரிந்த அருவருப்பு ஆனந்திக்கு அத்தனை வலியை கொடுத்தது. அந்த வலி மங்கையின் கண்களில் அப்படியே பிரதிபலித்தது. அது செண்பகதிற்கு துளியும் புரியவில்லை. அப்போதென்று பார்த்து செண்பகத்தின் நாவில் சனி பகவான் இருந்திருப்பார் போலும் அன்று ஆனந்தியை நோகடிக்கவே பேசினார். 

“என்னடி இத்தனை சொல்றேன். சரி அண்ணி இனிமே இப்படி பேச மாட்டேன்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டேங்கற? எனக்கு என்னவோ நீ அமைதியா இருக்கிறத பார்த்தா அந்த எண்ணத்துல தான் இருக்க போலயே? அந்த வீட்டையும், காசையும் பார்த்ததும் உனக்கு ஆசை வந்துருச்சா?” என்றதும் பற்களை கடித்தபடி பக்கவட்டாக நின்றிருந்த தன் அண்ணியை பார்த்தாள். 

எப்பவும் செண்பகம் சிலது இப்படி பேசுவார் என்றாலும் அதற்காக இந்தளவிற்கு தன்னை மட்டமாக நினைத்து வைத்திருப்பார் என்று துளியும் எண்ணவில்லை. ராம் இருக்கும் போது தேன் தடவிய வார்த்தைகளால் பேசுபவர் ராம் இல்லாத போது அவர் வார்த்தைகளில் தேள் கொடுக்கு இருக்கும். 

சில நேரம் அதனை கண்டுகொள்ள மாட்டாள். என்ன பேசினாலும், திட்டினாலும் தன் படிப்பை நிறுத்தவில்லையே என்ற எண்ணம் ஆனந்திக்கு. அதனாலயே செண்பகம் என்ன பேசினாலும் பொறுமையாகவே செல்வாள். சில சமயங்களில் அந்த பொறுமை கூட அதன் எல்லையை கடந்துவிடும். ஆனால் அவளை எதிர்த்து பேசியது இல்லை.

“நான் அப்பவே உங்கண்ணன் கிட்ட சொன்னேன். இவளும் வயசு புள்ளை. அந்தாளும் பொண்டாட்டி இல்லாம இருக்கான். இவளை அங்க விட்டு ஏடாகூடமா ஏதாவது நடந்தா அம்மான்னாலும் வராது அப்பான்னாலும் வராது சொன்னேன். உன் அண்ணன் தான் கேட்கலை. என் தங்கச்சி அப்படியில்லை இப்படியில்லைன்னு சொல்லிட்டு உன்னை அங்க அனுப்பி வைச்சுட்டாரு”

“இப்ப பாரு எனக்கு அந்த பசங்க முக்கியம் அந்தாளு தான் முக்கியன்னு’ வந்து நிக்கற” ஆனந்தியின் அமைதியை வைத்து இவளே ஓர் முடிவை எடுத்துக் கொண்டு பேச, ஆனந்தியின் கோபம் அதன் எல்லையை கடந்தது… 

கையில் வைத்திருந்த பாத்திரத்தை பட் என்ற சத்தத்தோடு கிழே போட்டவள் “என்ன நினைச்சிட்டு இதெல்லாம் பேசிட்டிருக்கீங்க அண்ணி. இத்தனை வருஷமா உங்களோட இருக்கேன். கொஞ்சம் கூடவா என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லை? எப்படியெல்லாம் பேசறீங்க நீங்க. அம்மான்னாலும் வராது அப்பான்னாலும் வராதுன்னு சொல்றளவுக்கு அப்படி என்ன நடந்துச்சு சொல்லுங்க. உங்களோட கற்பனையை அப்படியே நிறுத்தி வைச்சுட்டு நான் அங்க என்ன சொன்னேன்னு நல்லா யோசிச்சு பாருங்க” 

“நீங்க சொன்ன மாதிரியா சொல்லி இருந்தேன். கடைசி வரைக்கும் அந்த பசங்களை பார்த்துப்பேன்னு சொன்னேனே தவிர அந்தாளுக்கு பொண்டாட்டியா போவேன்னு சொல்லவேயில்லை. அந்த பசங்கக் கூட இருப்பேன் சொன்னதுல என்ன தப்பு இருக்குன்னு நீங்க இப்படி கண்டதையும் பேசறீங்க?” எனக் கேட்டவள் அடிவயிற்றிலிருந்து கிளம்பிய பெருமூச்சுடன் “இனிமே இப்படி பேசறதை நிறுத்திடுங்க அண்ணி, அதையும் மீறி பேசனா நல்லா இருக்காது சொல்லிட்டேன்…” என விரல் நீட்டி எச்சரித்தவள் வீட்டை விட்டு வெளியேறியிருந்தாள். 

இதுநாள் வரையிலும் ஒரு வார்த்தை எதிர்த்து பேசாதவள் இன்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு போகவும் செண்பகத்தின் கோபம் வன்மமாய் உருப்பெற்றது. அந்த வன்மம் ஆனந்தியின் வாழ்க்கையே புரட்டிப் போட போகின்றதென்று அவள் அப்பொழுது அறிந்திருக்கவில்லை.

**** 

அடுத்த அரைமணி நேரத்தில், வீட்டிற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவருக்கும் விருந்து உபசரிப்பு முடிந்திருந்தது. 

 “சரி ராம், நாங்க கிளம்பறோம்…” என கையிலிருந்த அலைபேசியை பார்த்தபடி எழுந்து நின்றான் அபிநயன். 

“என்ன சார் சடன்லி கிளம்பறேன் சொல்றீங்க? நீங்க நைட்டு தங்கறது போல வருவீங்கன்னு நினைச்சேன்…” தயங்கியபடி கூறினான் ராம். 

“ராம் உனக்கு சொல்லணுன்னு இல்லை நிறையா வொர்க் பெண்டிங் இருக்கு.நம்ம இரண்டு பேரும் ஆபீஸ்ல இல்லன்னா அங்க வொர்க் கரெக்ட் டைமுக்கு முடியாது…” என்றான் நேராக நிமிர்ந்து.

அபி கூறுவதும் சரியாக தான் தோன்றியது ராமிற்கு. இருவரும் இல்லையென்றாலும் வேலைகள் எப்பொழுதும் போல நடக்கும் தான் ஆனால் அனைத்தும் ஆமை வேகத்தில் நடக்கும். கம்பெனி மேனேஜர் கூட பொறுப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருப்பான் என நினைத்த ராமோ ‘சரிங்க சார் நீங்க’ என ஆரம்பிக்க, 

இருவரின் சம்பாட்சனைகளையும் கவனித்துக் கொண்டிருந்த சீதா சட்டென மகனின் முன் வந்து “தம்பி, இன்னைக்கு நைட்டு கூத்து போடறாங்கன்னு சொன்னாங்க. நானும் கூத்து பார்த்து ரொம்ப வருசமாச்சு. நைட்டு இங்கேயே இருந்து கூத்து பார்த்துட்டு காலையில கிளம்புவோமா…” எனக் கேட்க,அதற்கு பதில் சொல்லாமல் அமைதியாக நின்றான். 

அவன் நின்ற விதமே வேண்டாமென்ற செய்தியிருக்க, அதை தூசியாய் தட்டிவிட்டு “சரிப்பா பேசிட்டிருங்க. நான் பசங்கக்கிட்ட நைட்டுக்கு இங்க தான் இருக்க போறோம்ன்னு சொல்லிட்டு வந்துடறேன்…” என்றபடி அங்கிருந்து நகர்ந்தார் சீதா.

செல்லும் தாயை பல்லைக் கடித்தபடி பார்த்தவன், எதிரில் நின்ற ராமை பார்க்க, அவனும் அபியை தான் பார்த்துக் கொண்டிருந்தான். 

அவனுக்கு அபியின் பதில் தான் தேவையாக இருந்தது. 

ராமனின் கேள்வி நிறைந்த பார்வையில் “அதான் அம்மா சொல்லிட்டாங்களே… நைட்டு கூத்து பார்த்திட்டு ஏர்லி மார்னிங் இங்கிருந்து கிளம்பறோம்…” என்றவன் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

இவர்களையே வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்த செண்பகத்திற்கு தான் அத்தனை எரிச்சலாக இருந்தது. பின்னே ‘போறேன்’ என்று நிற்பனை வழியனுப்பி வைக்காமல் தலையை சொரிந்து கொண்டு நிற்கும் கணவனை கண்டால் எரிச்சலாகாத என்ன? 

 அதே நேரம் கிளம்புகிறேன் என்ற அபியிடம் தங்கி விட்டு செல்லுங்கள் என்றும் கூறவில்லை அமைதியாகவே நின்று கொண்டாள்.

 செண்பகத்தின் அமைதியை கவனித்திருந்தால் நிச்சியம் இரவு தங்கி விட்டு செல்லலாமென்று சீதாவும் கூறியிருக்க மாட்டார். அப்போதைக்கு அவரது கண்களை விதி மறைந்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும்… 

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், அத்தாணி அருள்மிகு செல்லியாண்டியம்மன் திருக் கோவில், மாலை நான்கு மணி என்று ஒலிப்பெருக்கியின் சத்தத்தில் சட்டென நினைவு வந்தவளாய் ஆனந்தியை கண்களால் தேடினாள் செண்பகம். 

அவள் எங்கும் இல்லாமல் போக  

‘மூஞ்சியை இழுத்துட்டு வெளிய போனவ இன்னும் வீட்டுக்கு வரல, மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கான்னு தெரியல, வரட்டும் பேசிக்கிறேன் ‘ முணுமுணுத்தவள் சமையலறைக்குள் நுழைந்தாள். 

அதே நேரம் செண்பகத்தின் முணுமுணுப்பிற்கு காரணமானவளோ நான்கு கயவர்களிடமிருந்து தப்பித்து ஓடிக் கொண்டிருந்தாள்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
8
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்