Loading

அத்தியாயம் 37

அந்த மிகப்பெரிய மண்டபம் முழுவதும் குட்டி குட்டி மின் விளக்குகளால் மிளிர்ந்து கொண்டிருந்தது…

சொந்த பந்தங்களின் ஆர்ப்பரிப்பும், குழந்தைகளின் சந்தோஷ கூச்சலும் அந்த மண்டபத்தை நிறைத்திருந்தது. ஒரு பக்கம் இளைஞர்களின் ஆர்ப்பாட்டமிருக்க, மற்றொரு பக்கம் அவர்களை மயக்கும் வண்ணம் இளம் பெண்கள் வலம் வந்தனர்..

அதே நேரம் இவை அனைத்தும் முறியடிக்கும் வண்ணம் டிஜேவின் இசை மணமகளுக்காய் ஒலித்தது.

நீ கட்டும் சேல மடிப்புல நா

கசங்கி போனேன்டி

உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல

கெறங்கி போனேன்டி… 

என்ற பாடலில் இளைஞர் பட்டாளம் “ஹே ஹேய்” என்ற கூச்சலிட்டு கத்த டிஜேவின் இசையிலும், இளைஞர்களின் கூச்சலிலும் வெட்க புன்னகையோடு மேடையில் நின்ற அபிநயனை பார்த்தாள் ஆனந்தி. 

அவனோ வாயில் கைவைத்து கேலி செய்ய, மொத்த வெட்கமும் டாட்டா காட்டிவிட்டு சென்றது அவளிடத்தில்… மேடையேறும் படியிலேயே நின்றவள் மேலே செல்லாமல் இடுப்பில் கை வைத்து அபியை முறைத்தாள். 

மங்கையில் முறைப்பில் மெல்லிய சிரிப்போடு அவளை நெருங்கியவன் வா என்பதை போல் கை நீட்ட, அவனது கையில் முதலில் அடித்து பின் தனது கைகளை வைக்க, இறுக்கமாய் பற்றிக் கொண்டான் அபிநயன்.. அதில் மீண்டும் ஆர்ப்பரிப்பு சத்தம் கேட்டது… 

மணமக்கள் இருவரும் மெல்லிய புன்னகையோடு மேடையில் நின்றனர்…கீழே அமர்ந்திருந்த அனைவரின் பார்வையிலும் மணமக்களின் மேல் தான் இருந்தது…ஆள் பாதி, ஆடைப் பாதி என்பது போலத் தான் இருந்தனர் இருவருமே… 

சர்தோஷி வேலைப்பாடுகளுடன் கூடிய அடர் நீல நிற லேஹங்காவில் வானத்து நட்சத்திரமாய் ஜொலித்தாள் ஆனந்தி… அவளுக்கு சற்றும் குறையாமல் அதே நிறத்தில் கோட் சூட்டுடன் கம்பீரமாய் நின்றிருந்தான் அபிநயன். 

அக்கணம் 

சின்ன சின்ன கண்கள்

சிரிக்கிறதோ..

கருவறை மீண்டும்

மணக்கிறதோ… 

என்ற பாடல் ஒலிக்க, சட்டென அனைவரின் பார்வையும் அங்கே வந்து கொண்டிருந்த பிள்ளைகளின் மேல் தான் இருந்தது… 

பெரியவர்களின் பிரதிபலிப்பாய் வந்து நின்ற பிள்ளைகளை கண்டு இளையவர்கள் இன்னும் ஆர்ப்பரிக்க, அந்த சத்தத்தில் மிரண்டு நின்ற பிள்ளைகளை ஓடி சென்று அள்ளிக் கொண்டனர் தம்பதிகள் இருவரும்… 

இத்தனை கொண்டாட்டத்தையும் கண்களில் ஆனந்த கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தார் சீதா. 

‘அம்மா, அன்னைக்கு மாதிரி ரெஜிஸ்டர் ஆஃபீஸரை வீட்டுக்கே வர சொல்லுங்க… நாங்க இங்கேயே சைன் பண்ணிடறோம்… ரொம்ப கிராண்ட்டாயெல்லாம் பண்ண வேண்டாம்…’ என்ற அபியை தொடர்ந்து ஆனந்தியும் 

“ஆமாம் மேம்.. ரொம்ப பெருசா கிராண்ட்டா பண்ண வேண்டாம்…” என்றாள். 

“ஹிஹிம், இந்த ஒரு விஷயத்துல மட்டும் நான் சொல்றதை கேளு.. எனக்கு,உன் கல்யாணத்தை நல்ல விமரிசையா நடத்த வேணும்னு ஆசை. அனிதாக்கும், உனக்கும் தான் நான் நினைச்சது மாதிரி நடக்கல, இப்பவாவது நான் நினைச்ச மாதிரி நடத்திக்கிறேன்.இதுல நீங்க இரண்டு பேருமே தலையிட கூடாது…” என்றார் பிடிவாதமாக. 

“சரி, கல்யாணமும், ரிசப்ஷனும் ஒரே நாள்ல வைப்போம்” என்றதும் சரியென்றவர் உடனே திருமண வேலைகளை ஆரம்பித்தார். 

இதோ இன்று காலையில் திருமணமும் முடிந்து மாலையில் ரிசப்ஷனும் வந்திருந்தது.

*****

அதே நேரம், அங்கே முன் வரிசையில் அமர்ந்திருந்த சாரதாவின் முகம் அவரையும் அறியாமல் இறுகி கிடந்தது. 

‘எனக்கு அப்பா,அம்மான்னு யாருமே இல்லை மா, அவங்க ஸ்தானத்திலிருந்து நீங்க என் கல்யாணத்தை பண்ணி வைக்கணும்னு ஆசைப்படறேன்…’ என்ற ஆனந்தியின் பேச்சில் பெரிதாக உருகி விடவில்லை சாரதா. 

ஆனால் இந்த திருமணத்திற்கு சென்றால் பேரப் பிள்ளைகளோடு சற்று நேரம் இருக்கலாம் என்று யோசித்து தான் காலையிலேயே வந்திருந்தார். ஆனால் இங்கு வந்த சில நிமிடங்களிலேயே அவரால் சாதாரணமாக இருக்க முடிவில்லை.. ‘மகள் வாழ வேண்டிய வாழ்க்கை இது’ என்ற எண்ணம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. கண்களை இறுக மூடித் திறந்தார்.

அக்கணம் “அம்மா…” என்ற அழைப்போடு வந்து நின்றான் ராமன். புருவங்கள் சுருங்க “இப்ப என்ன” என்பதைப் போல் பார்த்தார்.

 மெல்லிய தயக்கத்தோடு “ஏதோ சீர் செய்யணும்னு சொல்றாங்க மா… எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல… கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா?” எனக் கேட்டு நின்றவனை அழுத்தமாக பார்த்தார். 

அவரது பார்வைக்கு பதில் சொல்லும் விதமாக ” வேற யாராவது கிட்ட கேட்கலாம் தான். ஆனால் என் தங்கச்சி, அம்மா ஸ்தானத்ததுலிருந்து என்ன பண்ணறதா இருந்தாலும் உங்ககிட்ட கேட்க சொன்னா…” என்றான். காலையிலிருந்து இதே புராணத்தை தான் பாடிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தவர் எரிச்சலோடு ஆனந்தியை பார்த்தார்.

பிள்ளைகளோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். பிள்ளைகளின் முகத்திலிருந்த சிரிப்பும், பூரிப்பும் சாரதாவின் இறுகிய மனதை மெல்ல தளர்த்துவதாய் இருந்தது. 

நீண்ட நெடிய பெருமூச்சுடன் ராமோடு நடந்தார். அங்கே அதே இடத்தில் பிள்ளைகளோடு அமர்ந்திருந்த செண்பகத்தின் பார்வை ஏக்கத்தோடு கணவனை தழுவியது… 

அன்றைய இரவிற்கு பின் முதல், இரண்டு வாரம் இவளும் கோபமாக தான் சுற்றிக் கொண்டிருந்தாள். ஒரு எல்லைக்கு மேல் கணவனின் விலகல் புரிய ஆரம்பித்தது. அதனை முற்றும் முழுதாக உணர்ந்து கொள்ளும் முன்பே விவகாரத்து பத்திரத்தை நீட்டி விட்டான் ராமன்… 

உண்மையாக அவனிடத்தில் இதனை எதிர்பார்க்கவே இல்லை திகைத்து விட்டாள்… அதன் பிறகு அவள் செய்த சமாதானங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியது. 

 

இனி நம் வாழ்க்கை அவ்வளவு தானோ என்று நினைத்த கணம் “என் தங்கச்சியும், அவ புருஷனும் சொன்னதால தான் உன்னை மன்னிக்கிறேன்… ஆனால் நீ செஞ்சதை ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன்” என்றவன் அதற்கு பிறகு பேசவில்லை… 

இதோ இரண்டு நாட்களுக்கு முன்பு “என் தங்கச்சிக்கு கல்யாணம். அங்க வந்து எதுவும் பேச மாட்டேன்னு நினைக்கிறேன். அப்பறம் முன்னாடி வந்து அதை செய்யறேன் இதை செய்யறேன்னு நிக்காத… எல்லார் முன்னாடியும் உன்னை அவமானப்படுத்த ஒரு செகண்ட் போதாது எனக்கு” என்றவன் செயலிலும் காட்டினாள்.

‘நீ ஆனந்தியை அவமானப் படுத்தினதை விட இது கம்மி தான்’ என்றது அவளது மனது. அதுவும் சரிதான் என்று நினைத்தவள் விலகியே நின்று கொண்டாள்.

***

அதே நேரம் இங்கு மணமேடையில் அமர்ந்திருந்த அபியின் பார்வை முழுக்க ஆனந்தியின் மீதும் பிள்ளைகளின் மீதும் தான் இருந்தது. எப்பொழுதும் போல ஏதோ ரகசிய குரலில் வளவளத்துக் கொண்டிருந்தனர் மூவரும்.

 ‘அப்படி என்ன டா பேசுவீங்க’ என நினைத்துக் கொண்டானே தவிர, அவர்கள் பேசுவதை கவனித்துக் கொள்ளவில்லை.. 

அவர்களது பேச்சு எப்படி இருக்குமென்று அவனுக்கு நன்றாகவே தெரியும். ‘மஞ்ச கலருக்கு ஏன் மஞ்ச கலருன்னு பேர் வைச்சாங்க’ என்பதில் ஆரம்பித்து ‘ஊசி குத்தினா ஏன் இரத்தம் வருது’என்பது வரையிலான கேள்விகள் நீளும். 

பிள்ளைகளின் கேள்விக்கு அவளும் பெரிதாக யோசித்தெல்லாம் பதில் சொல்ல மாட்டாள் “ஒருவேளை மஞ்ச கலருக்கு மஞ்ச காமாலை இருக்குமோ?” 

“யாரு ஊசி குத்தினாங்கன்னு பார்க்க வருது” என்ற பதில்களை கூறுவாள். அவளது பதிலில் கிளுக்கி சிரிக்கும் பிள்ளைகளோடு சேர்ந்து கவனிக்கும் நாமும் சேர்ந்து வேண்டியதாக இருக்கும் என்பதால் அதிகம் அவர்களது பேச்சைக் கவனித்து கொள்ள மாட்டான்.

 கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே வந்தவர்களை கவனித்தப்படி அமர்ந்தவனிடம் “சார் பசங்க இரண்டு பேரையும் தனியா போட்டோ எடுக்கணும்” என்றார் புகைப்பட கலைஞர்.

“ஒரு நிமிசம்” என்றவன் ஆனந்தியிடம் கூறிவிட்டு அன்னையை அழைத்தான். அவர் வந்ததும்”சோழாவையும்,குந்தவியையும் தனியா போட்டோ எடுக்க கூப்படறாங்க மா… கூட்டிட்டு போங்க” என்றதும் பிள்ளைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார். 

மண்டப்பத்திற்கு வெளியில் பிள்ளைகள் இருவரையும் புகைப்படம் எடுக்க, உள்ளே அபியையும், ஆனந்தியையும் புகைப்படம் எடுத்தனர்.  

அடுத்த சில நிமிடங்களுக்கு “சார் கொஞ்சம் நெருங்கி நில்லுங்க” “இல்லை சார், அப்படியில்லை இப்படி பண்ணுங்க” என்ற புகைப்பட கலைஞரின் பேச்சு சத்தம் மட்டுமே அந்த மணமேடையை நிறைத்தது.

******

அடர் நீல நிறத் துணியில் ஆங்காங்கே தங்க மணிகள் கோர்க்கப்பட்டது போலிருந்தது நள்ளிரவு வானம்.. 

அங்கே, அந்த வீட்டின் பால்கனியில் நின்றபடி, காற்றிலாடும் கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டிருந்த அபியின் மனம் முழுக்க ஆனந்தியே வலம் வந்து கொண்டிருந்தாள்.

அவள் இங்கு வந்த நாளிலிருந்து தற்பொழுது வரை நடந்த அனைத்தும் நிழற்படம் போல் கண்களுக்குள் விழுந்தது. 

‘எத்தனை சண்டைகள்எத்தனை முறைச்சல்கள், எத்தனை பேச்சுகள்…கொஞ்சமாவது அடங்கியிருந்தாளா? கடைசியில் நான் தானே அடங்க வேண்டியதாக இருந்தது’ என நினைத்தவன் இதழ்களில் மெல்லிய புன்னகை.. 

அதே புன்னகையோடு “புளிமூட்டை” என்றவன் திரும்ப, அங்கே அந்த பெயருக்கு சொந்தமானவள் வந்து நின்றாள்… 

அங்கே பட்டுப் புடவை சரசரக்க நின்றிருந்தவளை கண்டதும்

மெல்லிய புன்னகையோடு அவளை நெருங்கியவன் அவள் கைகளில் இருந்ததைக் கண்டு புருவங்கள் உயர “என்னடி இதெல்லாம்” எனக் கேட்டான். 

“பால்” என்றவள் அருகிலிருந்த மேசையில் பாலை வைத்தாள். 

“அதை கேட்கலை… அந்த கையில இருக்கிறது என்ன?” எனக் கேட்கவும் 

“ஐ திங்க் தேங்காய் எண்ணெய்… உங்ககிட்ட குடுக்க சொன்னாங்க” என்றதும் வெறும் வாயிலேயே புரையேறியது அவனுக்கு.

“அச்சோ பார்த்து பார்த்து” அவனது தலையை தட்டியவள் பாலை எடுத்துக் கொடுப்பதற்கு பதிலாக, கையிலிருந்த தேங்காய் எண்ணெயை அவனிடம் நீட்ட, “இடியட்…” என்று பல்லைக் கடித்தான். 

அவனது இடியட்டில் கடுப்பானாவள் ‘என்ன டா இடியட் என்ன இடியட்… நீதான் டா இடியட்… அப்படியே இருமிட்டு கிட’ என்று விட்டு செல்லாமல் “அச்சோ சாரி” என்றபடி தேங்காய் எண்ணெயை மேசையில் வைத்துவிட்டு பாலை நீட்டினாள். 

“எதுக்குன்னு சொல்லி விடலையா?” இருமி கொண்டே கேட்டான்.

“அது எனக்கே தெரியுமே… அதை ஏன் கேட்டுக்கிட்டு..” என்றதும் இன்னும் அவனுக்கு புரியேறியது.

“வாட்” தலையை தட்டிக் கொண்டே கேட்டான்… 

“என்ன வாட்? காலையில இருந்து இரண்டு பேரும் நின்னுட்டே இருக்கோம். சுடு பிடிச்சுக்குன்னு குடுத்து விட்டு இருக்காங்க. இதுக்கு போயி சாக் ஆயிட்டு… தள்ளுங்க..” என்றவள் தேங்காய் எண்ணெயை மேசையில் பட்டென்ற சத்தோடு வைத்துவிட்டு குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள். 

திருமண நாள் அல்லவா இன்றைக்காவது அடக்கம் ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் அவனது இடியட் என்றதற்கு கூட பேசாமல் அமைதியாக நின்றாள். ஆனால் இப்பொழுது “வாட்டு கிட்டு” என்றதும் கடுப்பாகி விட்டாள். அதன்விளைவு கொஞ்சமே கத்திவிட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள். 

செல்லும் அவளையே “ங்…” என்பதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான் அபிநயன். 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 51

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
45
+1
5
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்