
அத்தியாயம் 34
இத்தனை நேரம் இதழ்களை விரித்து சிரிப்பேனா என்றிருந்த அந்தி மாந்தாரைக் கூட்டம் நிலவைக் கண்டதும் மெல்ல இதழ் விரித்து சிரிக்க, தன்னவளின் சிரிப்பை கண்ட நிலவோ வெட்கம் கொண்டு மேகக் கூட்டத்திற்குள் நுழைந்து கொண்டது.
அங்கே, அந்த வீட்டின் மாடியில் நின்றபடி நிலவையும்,மேகக் கூட்டங்களையும் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அபிநயன்.
அவனது மனம் நிலைக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. மாலையில் ஆனந்தியிடம் நெருங்கி நின்றது கண்களுக்குள் விழுந்து அவனை குற்றவுணர்வில் தள்ளியிருந்தது.
“என்ன செய்ய நினைத்தேன் நான்…” எனத் தன்னை தானே கேட்டுக் கொண்டவனுக்கு நன்றாகவே தெரியும் அவன் செய்யவிருந்த செயல் என்னவென்று…
‘என்னை நம்பி என் அருகில் நின்ற பெண்ணின் நம்பிக்கையை ஒரு நிமிடத்தில் குழைத்து இருப்பேன் அல்லவா?…’ என நினைத்தவன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.
‘அனிதா இருக்க வேண்டிய இடத்துல ஈசியா ஒருத்தரை உன்னால கொண்டு வர முடியுது இல்லையா? உன்னோட காதல் அவ்வளவு தானா?’ ஏளனமாக கேட்ட மனதிற்கு பதில் சொல்ல விரும்பவில்லை அவன்.
அனிதாவின் மேல் இவனுக்கு இருக்கும் காதல் வேறு… இப்பொழுது ஆனந்தியின் மீது எழும் உணர்வுகள் வேறு… இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க துளியும் விருப்பமில்லை… வெவ்வேறு சூழ்நிலையில், வெவ்வேறு சந்தர்பங்களில் உருவாகும் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கிறான் அவ்வளவே…
ஒருவேளை அனிதா இருந்திருந்தால் இப்படியான உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்திருப்பாயா? எனக் கேட்டால் அதற்கு அவனிடத்தில் பதில் இல்லை…
உண்மையை சொல்லப்போனால்
அப்படியான சூழ்நிலை அவனுக்கு வந்ததே இல்லை… அனிதாவின் மேல் அவனுக்கு இருந்த காதல் அவனை வேறு எதையும் யோசிக்க விட்டது இல்லை… ஏன் அவள் இறந்த பிறகும் கூட தனிமையைத் தான் தேடிக் கொண்டானே தவிர, வேறு உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தது இல்லை.
ஆனால் இன்று,ஆனந்தியின் மேல் எழும் மெல்லிய உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்க நினைக்கிறான்… ஆம் மதிப்புக் கொடுக்க நினைக்கிறான் தான் ஆனால் அதற்கு காதல் என்றோ காமம் என்றோ பெயர் வைக்க விரும்பவில்லை…
“அப்பா…” என்ற பிள்ளைகளின் கத்தலில் தன்னிலைக்கு திரும்பியவன் பின்னால் திரும்பி பார்த்தான்…
சோழாவும், குந்தவியும் முன்னால் ஓடி வர, அவர்களுக்கு பின்னால் ஆனந்தி வந்து கொண்டிருந்தாள்…
கணம் அவள் மீது அழுத்தமாய் பதிந்து மீண்டது அபியின் பார்வை…
ஆடவனின் அழுத்தமான பார்வை இவளுக்கு கோபப் பார்வையாக தெரிந்து தொலைக்க “எப்பா டேய், ஏதோ தெரியாம ஓடி பிடிச்சு விளையாடிட்டேன் டா… அதுக்காக பார்க்கும் போதெல்லாம் முறைப்பியா டா” முனகி கொண்டே அபியின் அருகில் சென்று நின்றாள்…
இருட்டில் வரி வடிவமாக தெரிந்த கட்டிடங்களை இலக்கின்றி வெறித்தவனை “சார்” என்றழைத்தாள். அவளைத் திரும்பியும் பாராமல்
“ம்ம் சொல்லுங்க மேடம்” என்றான்.
“இல்லை சார் பசங்களுக்கு ஒரு வாரம் லீவு… அவங்க ஸ்கூல்ல ஏதோ வெக்கிஷன் மாதிரி போயிட்டு வர சொன்னாங்கலாம்” அவள் இழுக்க, அவனோ ‘முழுசா சொல்லி முடி’ என்பதை போல் அமைதியாக நின்றான்.
“ஊட்டி, இல்லை கொடைக்கானல் மாதிரி எங்காவது கூட்டிட்டு போலாமா?” தயங்கியபடி கேட்டாள்.
கண்களை இறுக மூடித் திறந்தவன் அவள் புறம் திரும்பி “ம்ம்…” என்று மட்டும் சொல்ல…
ஆனந்தியின் விழிகள் மகிழ்ச்சியில் விரிய, தங்களையே ஆர்வமாக பார்த்தபடி நின்ற பிள்ளைகளிடம் திரும்பி சக்ஸஸ் என்பது போல் கைக் காட்டினாள்.
“ஹே….” என்று சந்தோஷ கூச்சலில் பிள்ளைகள் கத்த, அவர்களின் கத்தலோடு ஆனந்தியின் சந்தோஷ சிரிப்பும் இணைந்து கொண்டது…
****
விசாகப்பட்டினத்திலிருந்து லம்பசிங்கி நோக்கி சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது அந்த நான்கு சக்கர வாகனம்…
ஆனந்தி கேட்டதும் சரியென்றவன் அடுத்த நிமிடமே லம்பசிங்கி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டான்.
அதன்படி அதிகாலை கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து கிளம்பியவர்கள், அடுத்த சில மணி நேரங்களிலேயே சென்னை வழியாக விசாகப்பட்டினம் வந்தடைந்திருந்தனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த உற்சாகம் குறையாமலேயே, அங்கிருந்து வாடகைக்கு எடுத்த காரில் உடனே லம்பசிங்கி நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.
விசாகப்பட்டினத்தின் கடற்கரைக் காற்றையை ரசித்துக் கொண்டே மெல்லக் கடந்து, மலைப்பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருந்த நேரம் “சார், வண்டியை கொஞ்சம் நிறுத்துங்க” என்று அவசரமாக கூறினாள் ஆனந்தி…
சட்டென பின்னால் திரும்பி பார்த்தான்… சோழா வாந்தி எடுக்க தயாராக இருந்தான்…
தன் அருகில் “அம்மா கவர் எடுத்துக் கொடுங்க” என்றவன் சரியான இடம் பார்த்து வண்டியை நிறுத்தினான்… வண்டியை நிறுத்தியதுமே சோழனை அழைத்து கொண்டு கிழே இறங்கி விட்டாள் ஆனந்தி…
பின்னோடு இறங்க போன சீதாவிடம் “நீங்க இருங்க மா… நான் போறேன்” என்று விட்டு கீழே இறங்கி நின்றான்.
சோழாவின் தலையை அழுத்தி பிடித்தபடி நின்றிருந்தவளிடம் வாட்டர் பாட்டிலை நீட்ட,அதனை வாங்கியவள் சோழாவின் முகத்தில் தெளித்து, அழுத்தி துடைத்து விட்டபடி “போற வழியில பார்மசி இருந்தா டேப்லெட் வாங்கிட்டு போயிடலாம் சார்” என்றாள்.
“ம்ம்…” என்றவன் கண்கள், ஆனந்தியின் அலைப்புறும் கண்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தது…
அவனது ஆழ்ந்த பார்வை, இவளுக்கு முறைப்பது போலத் தோன்ற ‘உரிமையா மாத்திரை வாங்கலாம்ன்னு சொல்லிட்டானமா? அதுக்கு இந்த முறைப்பு’ என நினைத்துக் கொண்டவள் சோழவோடு காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
நீண்ட நெடிய பெருமூச்சுடன் “என்ன பண்ற அபி…” எனக் கடிந்து கொண்டே வாகனத்தை உயிர்ப்பித்தான்.
கடந்த சில நாட்களாக அவனை அதிகமாகக் கவர்ந்து கொண்டிருந்தாள் பெண்… எங்கே தன்னையும் மீறி அவளிடம் நெருங்கி விடுவோமோ என்று பயந்தவன் அவள் பக்கம் திரும்பவே இல்லை…
அடுத்து அவர்கள் கார் நின்றது என்னவோ நர்சிபட்டினத்தில் தான்… ஆனந்தி கூறியது போல சோழவிற்கு மாத்திரை வாங்கிவிட்டு கையோடு முதலுதவி பெட்டியையும் வாங்கிக் கொண்டான்.
பின் வேறு எதுவும் வேண்டுமா எனக் கேட்டு அதனையும் வாங்கியவன் அடுத்து அவர்களை அழைத்து சென்றது நாயுடு கறி குண்டா பிரியாணி ரெஸ்ட்டாரண்டிற்கு தான்… இங்கு மண் பானையில் செய்யப்படும் பிரியாணி மிகவும் பிரபலம் என்பதை அறிந்து தான் அழைத்து வந்திருந்தான்.
அன்னைக்கும்,பிள்ளைகளுக்கு பிடித்த உணவுகளை வாங்கிக் கொடுத்தவன் ஆனந்தியிடமும் என்ன வேண்டுமென்று உரிமையாக கேட்டு வாங்கி கொடுத்தான்.
அரைமணி நேரத்தில் உணவை முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர். அடுத்து அவர்களது வாகனம் லம்ப்சிங்கி ஹில் டாப் வியூ பாயிண்ட்டில் நின்றது.அங்கிருந்து மொத்த பள்ளத்தாக்கும் அழகாய் காட்சி அளித்தது…
இத்தனை நேரம் பயணக் களைப்பில் அமர்ந்திருந்த பிள்ளைகள் கூட உற்சாகமாகி விட, அடுத்தடுத்து வே டூ லம்ப்சிங்கீ வியூ பாயிண்ட், சேருவுல வேணம் வியூ பாயிண்ட்டையும் பார்த்துவிட்டு லம்ப்சிங்கியிலுள்ள பிரபல ரிசார்ட்டிற்கு சென்றனர்…
அபியும் பிள்ளைகளும் ஒரு அறைக்குள் நுழைந்து கொள்ள, ஆனந்தியும், சீதாவும் அருகிலிருந்த அறைக்குள் நுழைந்து கொண்டனர். பயணக் களைப்பு தீரக் குளித்துவிட்டு, இளையவர்கள் இருவரையும் குளிக்க வைத்துவிட்டு உறங்க ஆரம்பித்தவர்களை பதினொரு மணி போல எழுப்பினான் அபி…
“அம்மா… அம்மா…” மெல்லிய குரலில் அவர்களது அறையை தட்டினான்…
“வரேன் ப்பா…” என்றவர் கதவை திறக்க,
“கேம்ப் போட்டு இருக்காங்க மா.. வாங்க போலாம்” என்றதும்
“இல்லை ப்பா, எனக்கு ரொம்ப சலுப்பா இருக்கு… நீ ஆனந்தியை கூட்டிட்டு போ” என்றவர் ஆனந்தியை எழுப்ப தோன்றாமல் படுக்கையில் விழுந்தார். தாயை ஒரு பார்வை பார்த்துவிட்டு அரைவாசலில் நின்றபடியே ஆனந்தியை அழைத்தான்.
சின்ன சத்தம் வந்தாலும் எழுந்து
கொள்ளும் ஆனந்தி இன்றைக்கு அபி கத்தி அழைத்தும் எழவில்லை… பயணக் களைப்பில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்…
கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே அறைக்குள் நுழைந்தவன் “குளோரி… குளோரி” என்றழைக்க, “ம்ம்” என்ற முனகலோடு புரண்டு படுத்தாளே தவிர எழவில்லை…
“இவளை…” எனப் பல்லைக் கடித்தவன் அறைக்குள் நுழைந்து அவளை தட்டி எழுப்ப, “ ம்ம்…” என்ற பெரிய முனகலோடு திரும்பி படுத்தாள்..
“சரியான இம்சை…” முனகி கொண்டே அவளைப் பார்த்தான்… மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் அவளது வதனம் மின்னியது… சட்டென ஓர் உணர்வு அவனைப் பெரிதாக அழுத்த,
“அடியே…ஆனந்தி…” சீதா ராம் பட பாணியில் துல்கர் அழைப்பது போல் தான் அழைத்தான்..
ஆனால் அவளுக்கோ அருந்ததி பட பசுபதி அழைப்பது போல் இருந்திருக்க வேண்டும் “ஆ…ஆ” என்று துள்ளி குதித்து எழுந்தாள்…
அவளது பயத்தில் இத்தனை நேரம் அவனை ஆட்கொண்டிருந்த மொத்த உணர்வுகளும் எகிற குதித்து வெளியே ஓடி இருந்தது…
“ஷ்… நான் தான் டி” என்றான். அந்த டி- யில் தான் எத்தனை உரிமை…
“என்னாச்சு சார், கை வலிக்குதா?” கண்களை தேய்த்துக் கொண்டே கேட்டவளை இடுப்பில் கைவைத்து முறைத்தான்..
“எதுக்கு இப்படி சும்மா சும்மா முறைக்கிறீங்க” உறக்க கலக்கத்தில் மூக்கு விடைக்க கேட்டவளிடம்
“கை சரியாகி ஒரு மாசம் ஆயிடுச்சு… இப்ப வந்து கை வலியான்னு கேட்டா முறைக்காம என்ன பண்றது” புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டவனை அசட்டு சிரிப்போடு பார்த்தாள்..
“சரி வா போலாம்” என்றழைக்க, எங்க?என்பதை போல் கண்களால் கேட்டாள்… அவளைப் போலவே “வெளியில வா” என்று கண்களால் சொல்ல,சற்றே தடுமாறி பின் அவனோடு சேர்ந்து நடந்தாள்.
இரவு நேரம்…லம்ப்சிங்கில் குளிர் சற்று கடுமையாகவே இருந்தது… ஊசியாய் உடலைத் துளைத்த குளிரை பொருட்படுத்தாமல், டென்ட்டுக்குள் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தனர் சோழவும், குந்தவியும்…
பிள்ளைகள் இருவரும் உறங்கவில்லை என்பது அவர்களது ஆரவாரத்திலும், கூச்சலிலும் தெரிய, புன்னகை மின்ன அவர்களை நோக்கி நடந்தவளின் கையை சட்டெனப் பிடித்தான் அபி.
அவனது செயலில் அதிர்ந்து விழித்தாள் ஆனந்தி… அவளது அதிர்ந்த பார்வையை கண்டுக் கொள்ளாமல் “நம்ம ஃபயர் கேம்ப் போலாம்…” என்றான்.
“பசங்க” பிள்ளைகளை பார்த்தபடி கேட்டாள்.
“அவங்க விளையாடிட்டு வரட்டும்.. நம்ம போலாம்” என்றான் அமைதியான குரலில்…
அந்த குரல் இவளை ஏதோ செய்ய
சரியென்று தலையாட்டியவள் அவனோடு சேர்ந்து நடந்தாள்…
பனி விழும் இரவு
நனைந்தது நிலவு…
இளங்குயில் இரண்டு
இசைக்கின்ற பொழுது
என்ற பாடல் அங்கே ஒலித்துக் கொண்டிருக்க,சட்டென நின்று அபியை அதிர்ந்து பார்த்தாள் பெண்..
அவளது அதிர்ந்த விழிகளை ஆழ்ந்து பார்த்தவன் “என்னாச்சு” எனக் கேட்க, அவனது ஆழ்ந்த பார்வை, இவளுக்கு முறைப்பது போல் தோன்றியது…
அவரசமாக ஒன்றுமில்லை என்று தலையாட்டியவள் பின்னால் திரும்பி பிள்ளைகள் அமர்ந்திருந்த டென்ட்டை பார்த்தாள்.
“அவங்க வருவாங்க… நம்ம போலாம்” என்றான் மீண்டும்…
“ம்ம்…” என்றவளுக்கு கால்கள் பின்னியது.
சில நிமிடங்களில்
ஃபையர் கேம்ப்பை அடைந்திருந்தனர் இருவரும்… அங்கிருந்த கல் திட்டில் அபியோடு அமர்ந்தாள்…
இருவருக்கும் இடையில் சோழா குந்தவி அமருமளவிற்கு இடைவெளி இருந்தது தான்…
அந்த இடைவெளி ஒலித்துக் கொண்டிருந்த பாட்டின் ஒவ்வொரு வரிகளிலும் குறைந்து கொண்டே போனது…
விரகமே ஓர் நரகமோ சொல்
பூவும் முள்ளாய் மாறிப் போகும்…
அந்த வரிகளில் அபியின் கைகள் ஆனந்தியின் கைகளை அழுத்தி பிடித்து, பின் தன்னை நோக்கி வேகமாக இழுத்திருந்தது..
விழிகள் விரிய அவனைப் பார்த்தாள். அவனோ அவளது அதிர்ந்த விழிகளுக்குள் ஊடுருவி “ஐ காண்ட்” என்றவன் சட்டென அவளது செவ்விதழை மென்மையாக முற்றுகையிட்டான்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
47
+1
3
+1
1

