Loading

அத்தியாயம் 32 

வெள்ளைத் துணியில் அங்காங்கே நீல நிறமும், அடர் மஞ்சள் நிறமும் தெறித்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அதிகாலை வானம்… வானத்தின் அழகை கண்களால் பருகிக் கொண்டே கையிலிருந்த தேநீரை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி… 

“குளோரி அப்பா உன்னை கூப்பிட்டார்…” மங்கையின் செவியில் செவ்விதழ்கள் உரச, ரகசிய குரலில் கூறிய இளையவளிடம் “அப்பா எங்க இருக்காரு” அவளைப் போலவே ரகசிய குரலில் கேட்டாள் ஆனந்தி. 

“அப்பா ஹால்ல லேப்டாப் பார்த்திட்டு இருக்காரு” குந்தவியை பார்த்து காப்பி பேஸ்ட் செய்த சோழாவின் செயலில் கிளிக்கி சிரித்தவள் கையிலிருந்த தேநீர் கோப்பையை கல் திட்டில் வைத்து விட்டு எழுந்து நின்றாள்… 

“இப்ப யாரு அப்பாவை போயி ஃபர்ஸ்ட் டச் பண்றங்களோ அவங்க தான் வின்னு” ஓடுவதற்கு தயாராகி நின்றபடி கூற, சட்டென தொற்றிக் கொண்ட பரபரப்போடு சரியென்றனர் பிள்ளைகள்…

“ஒன்.. டூ…” த்ரீ சொல்லும் முன்பே இளையவர்கள் ஓட,

“ஹேய் பார்த்து போங்க…” என்றவளின் குரல் அவர்களுக்கு கேட்கும் முன் அபியை நெருங்கி இருந்தனர்.

“ஹேய் குளோரி… நாங்க வின் பண்ணிட்டோம்” என்று குதித்த பிள்ளைகளின் காதில் ஏதோ கூறினான் அபி… 

அடுத்த நிமிடம் “பாட்டி…” எனக் கத்திக் கொண்டே இருவரும் சீதாவின் அறையை நோக்கி ஓட, இருவரையும் சிரிப்போடு பார்த்தான் அபிநயன்.

அதே நேரம் அவனது சிரிப்பை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி… அவன் சிரித்தால் அழகாய் இருப்பது போலொரு எண்ணம் அவளுக்கு. அதுவும் சிரிக்கும் போது குழி விழும் அந்த கன்னத்தை சுண்டு விரல் கொண்டு அளந்து பார்க்க ஆசை..

‘எப்ப இருந்து இதெல்லாம்’ பல முறை அவளுக்கு அவளே கேட்டுக் கொண்டது உண்டு.உண்மையாகவே அதற்கு பதில் தெரியவில்லை… 

எப்பொழுதிலிருந்து அவனை ரசிக்க ஆரம்பித்தாலென்று துளியும் புரியவில்லை. ஒருவேளை! சோழவை போல் சிரிக்கிறார் என்று கவனித்து கவனித்து பின் தன்னாலேயே அந்த சிரிப்பை ரசிக்க ஆரம்பித்து விட்டாளோ என்னவோ? 

“மிஸ் குளோரி, இன்னைக்கு நீங்க ஃப்ரீயா இருந்தா என்னோட ஆஃபீஸ்க்கு வர முடியுமா?” என்றவன் குரலில் தன்னிலைக்கு வந்தவள் 

“என்ன சார்” எனக் கேட்டாள்.. 

“இன்னைக்கு ஃப்ரீயா இருந்தா என்னோட ஆஃபீஸ்க்கு வர முடியுமான்னு கேட்டேன்” என்றான் மீண்டும்

‘அதெல்லாம் என்னால வர முடியாது சார்… அன்னைக்கு ஏதோ கை வலிக்குதுன்னு சொன்னீங்களேன்னு ஹெல்ப் பண்ணேன். அதுக்காக சும்மா சும்மா வேலை பண்ண சொல்லுவீங்களா? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?’ முந்திக் கொண்டு பதில் கூறிய மனதினை தாண்டி 

“ம்ம் வரேன் சார்” என்றிருந்தாள்… 

‘ அடியே’ பல்லைக் கடித்த மனதினை கண்டுக் கொள்ளாமல் ‘தங்களது உத்தரவிற்காக காத்திருக்கிறேன் அரசே’என்பதை போல் நின்றவளை காரி துப்பிவிட்டு சென்றது அவளாக மனது.. 

“பத்து மணி போல கிளம்பிடலாம்” என்றவன் மடிக்கணினியில் பார்வையை திருப்பிக் கொண்டான்.

அதே நேரம் இங்கே, மங்கையின் மனமோ அவளை வறுத்தெடுக்க ஆரம்பித்திருந்தது… ‘கொஞ்சமும் படிக்கிற எண்ணம் இல்லை உனக்கு… மூணு வாரமா சரியா படிக்கவே இல்லை… இன்னைக்கு படிக்கிறேன் நாளைக்கு படிக்கிறேன்னு நாளை தள்ளிப் போட்டுட்டே இருக்க…’

‘ஒருவேளை பெரிய பணக்காரனா சிக்கவும் அப்படியே செட்டில் ஆக நினைச்சுட்டியா? உனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்க நினைக்கவே இல்லையா நீ?’ என்ற மனதின் கேள்வியில் பெரிதாக அடிவாங்கிய உணர்வு அவளுக்கு…

கடந்த மூன்று வாரமாக படிக்கும் நிலையிலா இருந்தாள். ஏதோ பித்து பிடித்தவள் போல் தானே சுற்றிக் கொண்டிருந்தாள்… உண்மையை சொல்லப்போனால் கடந்த சில நாட்களாக தான் அவள் அவளாக இருக்கிறாள். அதற்கும் தற்பொழுது பெரிய ஆப்பாக வைத்து விட்டது அவளது மனது. 

*****

ஜன்னல் வழியே உள்ளே நுழைந்த காற்று மங்கையின் கேசத்தை மென்மையாக வருடிக் கொண்டிருந்தது. காற்றிலாடும் கேசத்தை சேவியோரம் ஒதுக்கியப்படி வந்தவளை ஓரக்கண்ணால் பார்த்தான் அபிநயன்… 

அவளது அதீத அமைதி அவனை தொந்தரவு செய்ததோ என்னவோ? 

குரலை செருமியப்படி “பசங்க ஸ்கூலுக்கு போனதுமே புக்கை எடுத்து வைச்சுக்கிறயே? லவ் ஸ்டோரியா படிக்கிற ” வாகனத்தை லாவகமாக இயக்கியப்படி கேட்டான். 

 

பின்னால் நகரும் மரங்களையும், கட்டிடங்களையும் வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவள் ஆடவனின் கேள்வியில் சட்டென அவன் புறம் திரும்பினாள்… 

அவனோ புருவத்தை உயர்த்தி “பதில் சொல்லு” என்பதை போல் பார்க்க, அந்த புருவத் தூக்களில் பொத்தென்று விழத் துடித்த மனதினை அடக்கியப்படி 

 “லவ் ஸ்டோரியெல்லாம் இல்லை சார். கவர்மென்ட் எக்சாம்காக படிக்கிறேன்” என்றாள் மெல்லிய குரலில்… 

தனது கேள்வியில் தாம்தூமென்று கத்துவாள் என்று எதிர்ப்பார்த்தான் ஆனால் அவளோ பொறுமையாக பதில் சொல்ல, சிரிப்பு வந்தது அவனுக்கு. அவன் அறிந்த ஆனந்தி அமைதியானவள் இல்லையே… 

‘இந்தாளு வேற சும்மா சும்மா சிரிச்சு நம்மளை டெம்ப்ட் பண்ணிட்டு இருக்காரு,..’ என நினைத்தவள் 

கண்களை இறுக மூடித் திறந்து “என்னாச்சு சார்” என்று கேட்டாள். 

“ஒண்ணுமில்லை மா…” என்றவன் அமைதியாகி விட, அந்த அமைதியை 

ஊடலான மார்கழி

நீளமான ராத்திரி… 

நீ வந்து ஆதரி.. 

இது மௌனமான நேரம்

இள மனதில் என்ன பாரம் என்ற பாடல் வரிகள் நிரப்பியது…

நொடிகள் நிமிடங்களாக கரைய

 “ஜஸ்ட் படிச்சா மட்டும் போதுமா? டெஸ்ட் எழுத வேண்டாமா?” எனக் கேட்க அவனைப் புரியாமல் பார்த்தாள். 

“புதுசா படிக்க வர எல்லாரும் பண்ற தப்பை தான் நீயும் பண்ற…படிச்சதை டெஸ்ட் எழுதி பார்க்கணும். அண்ட் இப்ப நிறையா ஆன்லைன் கோச்சிங் இருக்கு ட்ரை பண்ணி பாரு” என்றான்.

“ம்ம் சரிங்க சார் பார்க்குறேன்… ஆனால் எனக்கு என்ன கோச்சிங் சென்டர் பெஸ்ட்டா இருக்குன்னு தெரியல”என்று ஆரம்பித்த அவர்களது பேச்சு அலுவலகம் வரும் வரைக்கும் நீடித்தது… 

****

 வானளான உயர்ந்து நிற்கும், ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட கண்ணாடி சுவர்களை கொண்ட கட்டிடங்களில் அமைந்திருந்த

 ஏ-ஸ்கொயரின் தலைமை நிறுவனத்தை விழிகள் விரிய பார்த்தாள் ஆனந்தி… 

அவளது விழி விரிப்பை புன்னகையோடு பார்த்தவன் “நான் கார் பார்க் பண்ணிட்டு வரேன். இங்கேயே வெயிட் பண்றையா?” எனக் கேட்க, சரியென்றவள் அவனது லேப்டாப் பேக்கை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள். 

சுற்றிலும் பார்வையை சுழல விட்டவளுக்கு ‘பிரான்ச் ஆபீஸ் எல்லாம் சிம்பிளா தான் இருக்கும் பாப்பா… ஹெட் ஆபீஸ், இதை விட செம்மையா இருக்கும்’ என்ற அண்ணனின் பேச்சு நினைவிலாடியது. 

ஊரிலிருந்து வந்ததிலிருந்து அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. இத்தனைக்கும், அவன் தினமும் அழைத்து கொண்டு தான் இருக்கிறான். இவள் தான் அண்ணனின் மேலுள்ள கோபத்தில் அழைப்பை ஏற்பதில்லை… 

ஆம் கோபம் தான் தன்னை இக்கட்டான சூழ்நிலையில் நிற்க வைத்து இந்த திருமணத்தை செய்து வைத்து விட்டான் என்ற கோபம். மற்றவர்களிடம் இந்த கோபத்தை காட்டிக் கொள்ளாதவள் அண்ணனிடம் மட்டுமே அவளது கோபத்தை காட்டிக் கொண்டிருக்கிறாள். 

அக்கணம், அவளது தலையில் அழுத்தமாக தடவிக் கொடுத்த கரத்தை நிமிர்ந்து பார்த்து பின் பக்கவாட்டில் நின்றவனைப் பார்த்தாள்… 

“பாப்பா…” கண்களில் நீரோடு அழைத்த அண்ணனை கண்கள் விரிய பார்த்தாள்… 

தன் அண்ணனா இப்படி இருக்கிறான். கம்பீரம் குறையாமல் இருக்கும் அண்ணன் இன்றைக்கு கலையிழந்து,ஏதோ பல நாட்கள் உண்ணாமல் கிடப்பவன் போல் இருக்கவும் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.  

“அண்ணா…” என்றவளுக்கும் அதற்கு மேல் பேச வரவே இல்லை..

“எப்படி இருக்க பாப்பா, அண்ணா மேல கோபமா? அன்னைக்கு சூழ்நிலையில நீ மட்டும் தான் முக்கியமா தோணுச்சு… சோசியல் மீடியா முழுக்க உன் பேர் அசிங்கபட்டு போச்சேன்னு தான் உன் விருப்பத்தையும் மீறி உனக்கு கல்யாணத்தைப் பண்ணி வைச்சேன்” என்றவனிடம் 

“அதை விடு, நீ ஏன் இப்படி இருக்க? வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்கல்ல? அண்ணி நல்லா இருக்காங்காளா? அவங்க உன்னை இப்படி இருக்க விட மாட்டாங்களே?” எனக் கேட்டுக் கொண்டே எக்கி அண்ணனின் கலந்திருந்த கேசத்தை கோதிக் கொடுத்தாள். 

சிறு வயதிலிருந்தே அண்ணனிடம் விலகி நிற்பவள் இன்றைக்கு உரிமையாக பேசி,அவனது கேசத்தை கோதிக் கொடுக்கவும் உருகி போனான் அண்ணன்காரன்.. 

“ஒண்ணுமில்லை பாப்பா நான் நல்லா தான் இருக்கேன்… ரெஸ்ட் இல்லாம வேலை வேலைன்னு இருக்கிறதால இப்படி இருக்கும்ன்னு நினைக்கிறேன்” என்றான். 

“ம்ம், ஒரு இரண்டு நாள் லீவ் கேட்டுட்டு ரெஸ்ட்டெடு ண்ணா” அவனது கசங்கிய சட்டையை சரி செய்தபடி கூறினாள். 

“அப்ப, இங்க இருக்கிற வேலையெல்லாம் யார் செய்வாங்களாம்” எனக் கேட்டுக் கொண்டே அங்கு வந்தான் அபி… 

“நீங்க இல்லாத நேரமெல்லாம் அண்ணன் தானே எல்லாமே பார்த்துக்கிட்டார். ஒரு இரண்டு நாள் லீவ் தர மாட்டீங்களா சார்?” பழைய ஆனந்தியாக சண்டைக்கு கிளம்பியவளை கைகள் கட்டிக் கொண்டு அமைதியாக பார்த்தான். 

அவனது பார்வையை கண்டு கொள்ளாமல் “நீ லீவ் எடுத்துக்கோ அண்ணா. வரது வரட்டும் பார்த்துக்கலாம். இந்த வேலை இல்லைன்னா வேற வேலை” வீரப்பாக கூறிவிட்டு அபியை முறைத்தாள் ஆனந்தி.. 

பாவையின் முறைப்பில் மெல்ல சிரித்தவன் “ராமன் நீங்க வேணும்னா லீவ் எடுத்துக்கோங்க… அதுக்கு பதிலா உங்க தங்கச்சி எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க” எனக் கூறிவிட்டு முன்னால் நடந்தான்… 

அன்றைய இரவிற்கு பின் ஆனந்தி என்ன பேசினாலும் ஒரு சிரிப்போடு கடந்து விடுகிறான். அன்றைய இரவிற்கு பின்னா? இல்லை பிள்ளைகளோடு இவன் உறங்க ஆரம்பித்த நாளிலிருந்து தான் இந்த மாற்றம்… 

மாற்றம் வராமல் இருந்தால் தான் அதிசயம்…ஆம், முப்பொழுதும் குளோரி குளோரி என்று இவளது புராணத்தை தான் பாடிக் கொண்டிருந்தனர் இவனது பிள்ளைகள்.

“ அப்பா இன்னைக்கு குளோரியோட விளையாடினோமா” என்று ஆரம்பிக்கும் குளோரி புராணம் அவர்கள் தூங்கும் வரைக்கும் தொடரும்.

 உண்மையில், பிள்ளைகள் இவள் மீது வைத்திருக்கும் அன்பு தான் ஆனந்தியின் மீது இவன் வைத்திருந்த பார்வை மாறியதற்கு காரணம் கூட… 

“ராம்…” என்ற அபியின் அழைப்பில் 

“வரேன் சார்” என்றவன் தங்கையை அழைத்துக் கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்தான்.

இன்றைக்கு ஏதோ முக்கியமான மீட்டிங் இருந்தது அபிக்கு.. அதில் அவனது கவனம் முழுக்க சென்றுவிட, மற்ற வேலைகள் அனைத்தும் அண்ணன், தங்கையின் தலையில் விழுந்தது.. 

அது அன்றைக்கு மட்டுமல்ல எப்பொழுதெல்லாம் அபிக்கு மீட்டிங் இருந்ததோ அன்றைக்கெல்லாம் ஆனந்தியின் வருகை இருந்தது… 

அதேநேரம் அலுவலகம் முழுவதும் அபியின் மனைவியாக அறியப்பட்டாள் ஆனந்தி.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 57

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
45
+1
4
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்