Loading

அத்தியாயம் 30

என்னதான் பூனை நடையிட்டு மெல்ல சென்றாலும் பெண்ணின் கையிலிருந்த காரப் பாக்கெட்டின் காகிதம் மடமடவென சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்தது. அதனை பொருட்படுத்தாமல் மாடியை அடைந்தவள் கேட் கதவைத் தாண்டி மெல்ல எட்டிப் பார்த்தாள். அக்கணம் அழுத்தமான காலடி சத்தம் கேட்க நிமிடம் திக்கென்றானது பெண்ணிற்கு.

மனதின் பயத்தினை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பட்பட்டென அடித்த மனதினை அடக்கிக் கொண்டே ஈரெட்டு முன்னால் நடக்க மாடியின் கடைசியில் ஓர் உருவம் நிற்பது தெரிந்தது… நொடி நேரம் தேவைப்படவில்லை அங்கு நிற்பது யாரென்று அறிய.. 

‘இவரா…’ மனம் தன்னாலேயே ஆசுவாசமடைய “ஊப்…” என்று காற்றை வாயில் நிரப்பி வெளியிட்டவள் பின்னால் திரும்பி நடந்தாள். 

அந்நேரம் “ஷ்… ஊப்…” என்ற சத்தமும் “ப்ச்…” என்ற சத்தமும் கேட்டது. சட்டென திரும்பி ஆடவனைப் பார்த்தாள். கையை உதறியப்படி நின்றான். தற்பொழுது இவளது கண்கள் இருட்டிற்கு நன்றாக பழகி இருந்ததால் மறவோனது கசங்கிய முகம் நன்றாகவே தெரிந்தது. 

அவனது வலி நிறைந்த முகத்தைப் பார்த்துவிட்டு அப்படியே விட்டு செல்ல முடியவில்லை ஆனந்தியாள். அதற்கு காரணம் அவளுள் இருந்த மனிதாபிமானமாக கூட இருக்கலாம். அக்கணம் அவளையும் அறியாமல் அவனை நோக்கி நடந்தாள். 

“என்னாச்சு சார்…” எனக் கேட்டபடி அவன் முன் சென்று நின்றாள். 

சட்டென கேட்டக் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தவன் எதிரில் நின்றவளை கண்டதும் கண்களில் கோபம் மின்ன “இன்னும் என்ன ஆகணும் உனக்கு…” வெடுக்கென கேட்டான். 

“பேய் உலாவற நேரத்தில முழிச்சுட்டு இருக்கீங்களேன்னு பாவம் பார்த்து வந்து கேட்டது என் தப்பு தான்…” பல்லைக் கடித்துக்கொண்டு கூறியவள் 

“என்னமோ பண்ணிக்கோங்க எனக்கென்ன வந்தது…” என்று திரும்பி நடந்தாள். 

அக்கணம் இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளியை குளிர் காற்று நிரப்பிட முயற்சித்தது மட்டுமல்லாமல் ஆடவனின் கேசத்தை மென்மையாக கோதி விட்டது. 

அதில் இன்னும் இன்னும் கோபம் வந்தது அபிக்கு. காற்றிலாடும் கேசத்தை கோதிக் கூட விட முடியவில்லையே என்று. 

ஒரு பக்கம் தன்னுடைய இயலாமையை நினைத்து எரிச்சலாக வந்தது. கண்களை இறுக மூடித் திறந்தவன் “ப்ச்… கை ரொம்ப வலிக்குது…” என்றான்.அவனது குரலில் கோபத்தையும் மீறி வலியின் சாயல் தெரிந்தது.  

அபியின் குரலில் திரும்பி பார்த்தவள் “இதை முதல்லே சொல்றதுக்கு என்ன?…” எனக் கேட்டப்படி ஆடவனை நோக்கி நடந்தாள்.

“ப்ச்..அதான் இப்ப சொல்லிட்டேன்ல…” வலித்த கையை உதறி கொண்டே கடுப்பாக கூறினான். 

“எதுக்கு இப்படி கையை உதறிட்டே இருக்கீங்க? உங்களுக்கு சோழாவே பரவாயில்லை. கையில அடிப்பட்டா கையை உதற கூடாதுன்னு அவனுக்கே தெரியும். அவனை விட மோசமா இருக்கீங்க நீங்க…” எனக் கூறிக் கொண்டே அவன் உதறிய கையை சட்டெனப் பிடித்து கொண்டாள்.

சோழாவுடன் தன்னை வைத்து பேசியதில் கடுப்பானவன் அதற்கு பதில் கூறும் முன்பே பாவை கையைப் பிடித்தது எரிச்சலாகி விட்டது. “ஒன்னுமில்ல விடு…” என்றவன் பாவையின் பிடியிலிருந்த கையை உறுவ முயல இன்னும் கை வலியெடுத்தது. 

அபியின் செய்கையில் கடுப்பானவள் “உங்க கையை பிடிச்சு வைச்சுக்க எனக்கும் ஆசையில்லை சார்.அதனாலே கொஞ்சம் நேரம் சும்மா இருங்க…” என்றவள் ஒரு கையால் அவனது கையை இதமாக பிடித்து விட்டுக் கொண்டே மற்றொரு கையிலிருந்த காரப் பொடி பாக்கெட்டை தனது பேண்ட் பாக்கெட்டில் போட்டாள். 

அப்பொழுது தான் பெண்ணின் கையிலிருந்ததை கவனித்தான். கண்கள் இரண்டும் விரிய “கையை ஓடச்சது பத்தாதுன்னு கண்ணையும் புடுங்கி எறியலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா?…” எனக் கோபமாக கேட்டான். 

அவனது பேச்சில் கடுப்பானவள் “ரொம்ப பேசறீங்க சார். உங்க கையை நானா உடைச்சேன். நீங்க திமிரொடுத்து பண்ணதுக்கெல்லாம் நானா பொறுப்பு…” என்றதும் பல்லைக் கடித்தான் அபி. 

அவனது முறைப்பை சட்டே செய்யாமல். “அப்பறம் இந்த காஸ்ட்லி காரப்பொடி உங்களுக்காக இல்லை. திருடனுக்காக…” என்றதும் “எதே திருடனா…” எனக் கேட்டவனின் குரலில் அதிர்ச்சி இருந்ததோ? 

“பின்ன அர்த்த ராத்திரியில மொட்டை மாடியில சத்தம் கேட்டா திருடன்னு நினைக்காம வேற என்னனு நினைக்கிறது. அதான் செஃப்டிக்கு இதை எடுத்துட்டு வந்தேன்…” என்றதும் “விவரம் தான்…” என்பதை போல் ஒரு பார்வை பார்த்தான். 

அதற்கு கெத்தாக பதில் பார்வை பார்த்துவிட்டு அபியின் வீங்கிய கையை இரண்டு கைகளாலும் இதமாக பிடித்து விட்டாள். விண் விண்ணென்று வலித்த கைகள் அவளின் அழுத்தத்திற்கு நன்றாக இருக்க மேலும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டான்.

நிமிடங்கள் கடக்க, மங்கையின் இதமான அழுத்தத்தில் கண்கள் இரண்டும் சொக்கியது அபிக்கு. முன்பை போல் பேசிக் கொண்டிருந்தாலாவது தூக்கம் வந்திருக்காதோ என்னவோ. தற்பொழுது இரவின் குளிரும், பாவை கையைப் பிடித்து விடும் இதமும், இத்தனை நேரம் இல்லாத உறக்கம் தற்பொழுது மறவோனை தழுவியது. 

தலையை குலுக்கி விட்டு

“கொஞ்சம் அப்படி போயி உட்கராலாமா?…” மாடியின் மறு கடைசியிலிருந்த ஊஞ்சலைக் கை காட்டினான். 

‘இப்பாவது மனசு வந்துச்சே…’என நினைத்தவள் சரியென்று தலையாட்டினாள். ஊஞ்சலில் இருவரும் இடைவெளிவிட்டு அமர்ந்து கொண்டனர். பாவையின் புறம் கையை நீட்டியபடி கண்களை மூடி அமர்ந்து கொண்டான். 

அபியை ஏறயிறங்க பார்த்தவள் தன்னை தானே நொந்து கொண்டப்படி அவனது கையை மெல்ல பிடித்து விட ஆரம்பித்தாள். அவள் கைகளை அழுத்திக் கொடுத்த விதத்தில் அடுத்த சில நிமிடங்களில் அமர்ந்தபடியே உறங்கி போனான் ஆடவன். 

அவன் உறங்குவதை கண்டவள் மெல்லிய குரலில் “சார்,இப்ப ஓகேயா?…கீழ போலாமா?…” சற்றே நெருங்கி அவன் தோள் தொட்டு கேட்டாள்.

“ம்ம்…” என்றவன் பெண்ணின் தோளில் சாய்ந்து கொண்டான். 

ஆடவனின் செயலில் பல்லைக் கடித்தவள் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள். அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். 

“தேவையா டி இது உனக்கு? இல்லை தேவையான்னு கேட்கிறான்…” தன் முகத்திற்கு முன்புக் கையை நீட்டி சத்தமாக கேட்கவும் “ம்ம்…” என்று சிணுங்கியப்படி அவளின் தோளில் ஆழ புதைந்தான் ஆடவன். 

அக்கணம் மங்கையின் கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்து நொடியில் கலங்கியும் போனது. தொண்டை குழி ஏறி இறங்கியது மூச்சு விடவும் மறந்தவளாக பக்கவாட்டில் அமர்ந்திருந்தவனை பார்த்தாள். அவனோ இன்னும் உறக்கத்தில் இருக்க சட்டென மூண்டது ஓர் கோபம். 

பல்லைக் கடித்தப்படி “சார்… கொஞ்சம் எழுங்க. கீழே போலாம்…” என்றாள் சத்தமாக. அவனிடம் துளியும் அசைவில்லை. வீங்கிய கையில் இரண்டடி போடலாமா என்று கூட நினைத்தாள். சற்று முன் அவன் கை வலியில் துடித்தது நினைவு வர, அந்த எண்ணத்தை கைவிட்டவளாக மீண்டும் மறவோனை எழுப்ப முயன்றாள்.

ஆனால் அவனோ “பிளீஸ் ஜில்லு… தூங்க விடு…” என்று பெண்ணின் முதுகை தட்டிக் கொடுத்தான். அவனது செய்கையில் கடுப்பின் உச்சிக்கே சென்று விட்டாள் ஆனந்தி… வெடுக்கென அபியை விட்டு விலகி எழுந்தவள் அவனை பார்க்க, அவனோ விழுவது போல் மறுபுறம் சாய்ந்து இருந்தான். 

“கடவுளே…” என சலித்து 

கொண்டவள் மீண்டும் ஊஞ்சலில் அமர்ந்து ஆடவனின் தலையை தன் தோளில் சாய்த்து கொண்டாள். 

‘அப்படியே விழுந்து எழுந்து வரட்டும்ன்னு போக வேண்டியது தானே…பாவம்னு நினைச்சு செய்யற இந்த வேலைக்கு அவன் வேற பேர் வைச்சுட்டு போவான் வேணும்னா பாரு…’ கடுமையாக கூறிய மனதிற்கு பதில் சொல்லாமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

அது கூறுவதும் தவறில்லையே. அபி அப்படி கூறவில்லை என்றால் தான் அதிசயம்.

நடந்து முடிந்த திருமணத்திற்கும் தனக்கும் எந்த சம்மதமும் இல்லையென்று அவனுக்கும் தெரியும். அப்படியிருந்தும் மொத்த பழியையும் தூக்கி தன் மீது தானே போட்டான். நிச்சயம் அதனை தான் இப்பொழுதும் செய்வான்..என நினைத்தவளுக்கு அவனை அப்படியே விட்டு செல்ல தான் தோன்றவில்லை.உதவி செய்கிறேன் என்று வந்துவிட்டு அப்படியே கிட என்று விட்டு செல்ல மனம் வரவில்லை..

இரு மனங்களும் மாறி மாறி அவனுக்கு எதிராக பேசிக் கொண்டிருக்க, இதற்கிடையில் மூன்றாவதாக ஒரு மனம் ஆடவனின் ஜில்லு என்ற அழைப்பில் வந்து நின்றது. அதனை இப்பொழுது நினைத்தாலும் கடுப்பாக வந்தது ஆனந்திக்கு. பல்லைக் கடித்து கொண்டாள். மூன்று மனங்களும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி சண்டை பிடித்துக் கொண்டிருக்க இதற்கிடையில் சக்கரத்தில் மாட்டிய சருகானாள் ஆனந்தி. 

தன் எண்ணங்களுக்கு மத்தியில் உழன்று கொண்டிருந்தவளுக்கு அன்றைய இரவு முழுவதும் தூங்கா இரவாகி போனது. 

****

அதிகாலையின் அதீத குளிரோ இல்லை பறவைகளின் கீச்சடும் சத்தமோ இல்லை தன் அருகில் அமர்ந்திருந்தவளின் சூடான மூச்சுக் காற்றோ ஏதோ ஒன்று அபியின் உறக்கத்தை களைத்து இருந்தது. கண்களை தேய்த்து கொண்டே சோம்பல் முறித்தவனின் கைகள் யாரோ மேல் பட்டது. “ஸ்ஸ்…” என்ற முனகளோடு பக்கவாட்டில் திரும்பி பார்த்தான். இவனைத் தான் முறைத்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி. 

‘இவ எங்க இங்க…’ மனம் கேள்வி எழுப்ப அதை அவளிடமே கேட்டான்.

“நீ,இங்க என்ன பண்ற…”என்று

அபியின் கேள்வியில் மூக்கு விடைக்க பார்த்தவள் “இதுவும் கேட்பீங்க இதுக்கு மேலயும் கேட்பீங்க. அர்த்த ராத்திரியில முழிச்சுட்டு இருக்காரேன்னு ஹெல்ப் பண்ண வந்தேன் பாருங்க என்னை சொல்லணும்…” என கண்களை உருட்டி கத்தினாள். 

காரிகையின் கத்தலில் அவசரமாக சுற்றும் முற்றும் பார்வையை சுழல விட்டான் அபி. அப்பொழுது தான் மொட்டை மாடியில் இருப்பது புரிந்தது. அந்நேரம் நேற்றைய இரவின் நினைவுகள் தாமதமாக கண்முன்னே வந்தது. நெற்றியை பெருவிரலால் கீறி கொண்டே மங்கையை ஒரு பார்வை பார்த்தான். 

அவனது புரியாத பார்வையில் கோபம் வர “இனிமே உங்க காத்து இருக்கிற பக்கம் கூட வர மாட்டேன். பாவமேன்னு ஹெல்ப் வந்தா என்மேலேயே சாஞ்சு ஹாயா படுத்தாச்சு. சரி தூக்கத்துல தெரியாம படுத்துட்டீங்க போலன்னு நினைச்சு எழுப்பி விட்டா…’பிளீஸ் டி ஜில்லுவாம்…’ இனிமே இந்த ஜில்லு, ஜொல்லுன்னனு சொல்லிட்டு என் பக்கம் வந்தீங்க வெட்டிடுவேன் ஜாக்கிரதை…” ஒற்றை விரலை நீட்டி மிரட்டி விட்டு சென்றவளை கண்களில் கோபம் மின்ன பார்த்தான் அபி. 

மடவோள் பேசியதற்கு பதிலுக்கு பதில் பேச இவனுக்கு நொடி நேரம் தேவைப்படாது தான். ஆனால் இரவில் காரிகை செய்த உதவி அவன் கண்முன்னே வந்து அப்போதைக்கு அவனது கோபத்தை தணித்து இருந்தது. 

“ஏதோ வேணும்ன்னு இவ மேல சாஞ்சு படுத்தது போல திட்டிட்டு போறா… இதுல மேடத்தை தான் ஜில்லுன்னு கூப்பிட்டு இருப்பேன்னு நினைப்பு வேற.

புளி மூட்டை…” என்று முணுமுணுத்து கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் அபி.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்