Loading

அத்தியாயம் 20

திருமணத்திற்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி தன்னை ஒரு வார்த்தை கடினமாகப் பேசாத தன் கணவன் இன்று கை நீட்டும் அளவிற்கு வந்திருக்கிறான் என்றால் அதற்கு முற்றிலும் காரணம் ஆனந்தி தான் என நினைத்தவளுக்கு அவளின் மேல் கோபம் பெருகியது. 

தன் கோபத்தை அப்படியே குரலில் தேக்கி “என்னங்க என்ன நடந்ததுன்னு தெரியாமல் பேசிட்டு இருக்கீங்க…” என பேச ஆரம்பிக்க அது ராமனின் முறைப்பில் நின்றது. 

“யாரு தெரியாம பேசிட்டு இருக்கிறது நீயா நானா?…” எனக் கேட்டவன் பின்னால் திரும்பிப் பார்த்தான் ஆனந்தியைத் துரத்தி வந்த நான்கு வாலிபர்கள் நின்றிருந்தனர். 

நால்வரைக் கண்டதும் ஆனந்தியின் உடல் ஒரு முறை தூக்கிப் போட்டது என்றால் அபியின் முகம் கோபத்தில் இறுகியது. இவர்களால் தானே இத்தனையும் என நினைத்தவன் அவர்களை நோக்கி நடக்க, சீதா அபியின் கையை பிடித்துக் கொண்டார். 

தாயைக் கோபமாகத் திரும்பிப் பார்த்தவன் “இப்ப என்னம்மா…” என்று பல்லைக் கடித்தான். மகனின் கோபத்தைப் பொருட்படுத்தாமல் “இங்கேயே நில்லு அபி…” என்றார் சீதா. 

அவரை நன்றாகத் திரும்பிப் பார்த்து “அவனுங்க என்ன பண்ணாங்கன்னு தெரியாம பேசாதீங்க மா…” என்றான் கோபமாக. 

“அவனுங்க என்ன பண்ணிருந்தாலும் பரவாயில்லை நீ இங்கேயே இரு…” என கூறிய சீதாவின் முகம் இறுகி சிவந்திருந்தது. 

அவரை ஆழ்ந்து பார்த்தவனுக்கு நன்றாகவே புரிந்தது செண்பாவின் பேச்சில் இப்படி இருக்கிறார் என்று.

அவரின் கோபம் சரியானதாக இருந்தாலும் அந்த ஆடவர்களை அப்படியே விட மனமில்லை அபிக்கு. இருந்தும் சீதாவின் பேச்சை மீற முடியாமல் குடோன் சுவரில் சாய்ந்து கண்களை இறுக மூடி நின்று விட்டான். 

அதே சமயம் ராமன் அழைத்து வந்த நால்வரையும் பார்த்த செண்பகமோ “யாருங்க இவனுங்க…” எனக் கேட்டாள். 

அதற்கு ராமன் பதில் கூறும் முன்பே “ஓ, உங்க தங்கச்சி பண்ண அசிங்கத்தை மறைக்க இவனுங்க மேல பழியைப் போட்டு கூட்டிட்டு வந்திருக்கீங்களா? இல்லை இவனுங்கனால தான் அவ குடோனுக்குள்ள போனான்னு சொல்ல போறீங்களா?…” என புருவத்தை ஏற்றி இறக்கி நக்கலாகக் கேட்டாள்.  

நிமிடம் மனைவி என்ன கூறுகிறாள் என்றே புரியாதா நிலை ராமனுக்கு. “என்ன?…” நெற்றி சுருக்கிக் கேட்டான். 

“நான் கேட்கிறது புரியலையா? இல்லை புரியாத மாதிரி நடிக்கிறீங்களா?…” என ஏளன குரலில் கேட்டவள் ஆனந்தியைக் கைகாட்டி

“அவ, பண்ண அசிங்கத்தை மறைக்க இந்தளவுக்கு இறங்கி போவீங்கன்னு நினைக்கவேயில்லை. அடுத்தவன் வீட்டு புள்ளை மேல கை வைக்கற அளவுக்கு அப்படியென்ன அவ பண்ணிட்டா?…” என ஆத்திரமாகக் கேட்டாள் செண்பா..

தன் மீது சுமத்தப்பட்ட பழியிலிருந்து மீண்டு வர சில நிமிடங்கள் தேவைப்பட்டது ராமனுக்கு… அதே மனநிலையில் தான் ஆனந்தியும் நின்றாள் அவளுக்கு பேச வாய் வரவில்லை… செண்பா கூறுவது பொய்யாக இருந்தாலும் அந்த நிமிடம் இப்படி கூட யோசிக்க முடியுமா? என்று தான் தோன்றியது ஆனந்திக்கு. செண்பகம் கூறியதை ஜீரணிக்க சில நொடிகள் தேவைப்பட்டது இருவருக்கும்.

முதலில் அதிலிருந்து வெளிவந்தது என்னவோ ராமன் தான் ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு ” என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாத…” என பல்லைக் கடித்தபடி கூறினான். 

ராமனின் கோபம் செண்பகத்திற்கு இன்னும் தூபம் போட்டது “நான் என்னவோ இல்லாததை சொல்றது போல பேசறீங்க உண்மையைத் தானே சொல்றேன்…” என்ற செண்பகத்தை அழுத்தமாகப் பார்த்தவன் அவளுக்குப் பதில் கூறாமல் சிலடி தூரத்தில் நின்ற நால்வரையும் பார்த்து “இங்க வாங்க டா…” என்று அழைத்தான்.

“நான் கேட்கறதுக்கு பதில் சொல்லுங்க முதல்ல, அதுக்கு அப்பறம் அவனுங்களை கூப்பிடுவீங்களாம்…” என ராமனின் முன் சென்று நின்றாள் செண்பகம். 

அவளைக் கோபமாக பார்த்து “கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இரு இல்லை…” ஒற்றை விரல் நீட்டி எச்சரிதான். 

” நான் ஏன் அமைதியா இருக்கணும்? உங்க தங்கச்சி பண்ண அசிங்கத்தை விட நான் ஒன்னும் பெருசா பண்ணலை… உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது…” எனக் கேட்டவள் ராமனை ஏறயிறங்கப் பார்த்தபடி 

“ஒருவேளை நீங்க தான் அவனுக்குக் கூட்டிக் கொடு…”அடுத்த வார்த்தை பேசும் முன் அவளின் கன்னத்தை ராமனின் கை அதீத வேகத்தில் தொட்டு மீண்டது. 

உண்மையாகவே மனைவியின் பேச்சை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை அவனால். எப்படியெல்லாம் பேசுகிறாள் என்ற ஆதங்கமும்,கோபமும் போட்டிப் போட்டு நிற்க நிமிடம் யோசிக்காமல் மீண்டுமொருமுறை கை நீட்டிவிட்டான். 

ராமன் அடித்தடியில் சுருண்டு விழுந்தாள் செண்பகம் “இதுக்கு மேல பேசன கொன்றுவேன் ராஸ்கல்… ” என்றவன் தங்கையைப் பார்த்தான். கண்களில் தேங்கிய நீருடன் சிலைப் போல் நின்றிருந்தாள். அவளிடம் செல்ல துடித்த கால்களை அப்படியே அடக்கியவன் தாமதிக்காமல் நால்வரிடமும் சென்றான். 

நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்தாலும் அடுத்த கணம் எழுந்து அவிழ்ந்த கூந்தலை முடிந்தபடி “உன் தங்கச்சி உத்தமின்னா இப்பவே என்னோட ஹாஸ்பிடல் வர சொல்லுய்யா…” எனக் கத்தினாள். 

அவளின் கத்தலை பொருட்படுத்தாமல் “டேய் வாங்க டா. எல்லாத்தையும் சொல்லணுன்னு தானே கூட்டிட்டு வந்தேன். இங்க வந்து வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க…” என அதட்டி கொண்டே முன் சென்றான். 

ஆம் அவர்களைத் தேடி பிடித்து அதட்டி உருட்டி உண்மைகளை வாங்கிய நேரம் செண்பாவின் செயல் தெரிய வந்தது. விசாரிக்க மட்டுமே சென்றவன் அவர்கள் வந்தால் சரியாகிருக்கும் என்று அழைத்து வந்தான். ஆனால் அவர்களை அழைத்து வந்ததுக்கு இப்படியொரு காரணத்தை மனைவி கூறுவாள் என்று துளியும் நினைக்கவில்லை…  

இத்தனை வருடத்தில் அவன் காட்டாத உதாசீனத்தையும், கோபத்தையும் ஒரே நாளில் கண்டதில் உண்டான கோபமா? இல்ல ஊராரின் முன் கணவன் அடித்து விட்டான் என்ற அவமானமா? இல்லை ஆனந்தியின் மேல் எழுந்த வன்மமா? ஏதோ ஒன்று செண்பக்தை மொத்தமாக மதியிழக்க செய்திருந்தது. 

என்ன செய்கிறோம்? எதை நிரூபிக்கப் போராடுகிறோம் எதற்காக இதெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் தன் வீட்டுப் பெண்ணின் பெண்மையைப் பரிசோதிக்க மருத்துவமனை அழைத்தாள். 

“நீங்க அவளை ஹாஸ்பிடலுக்கு அனுப்பலைன்னா? நான் ஏதாவது செஞ்சுப்பேன்…” எனக் கத்த ராமின் கால்கள் அப்படியே நின்றது. திரும்பி செண்பாவை அற்பப் பார்வைப் பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் முன்னால் நடந்தான். 

கணவனின் பார்வை சொன்ன செய்தியை புரிந்து கொண்டவளுக்கு நிமிடம் இதயம் தாறுமாறாக துடித்தது. அந்த கணம் அவளின் தவறு புரிந்திருக்க வேண்டும் ஆனால் புதியதாக ஆனந்தியின் மேல் உதிர்த்த வன்மமும் கணவனின் மேல் கொண்ட கோபமும் கண் முன் நிற்க, தன் பிள்ளைகளைப் பற்றிக் கூட சிந்திக்காமல் தோட்டத்திலிருந்த கிணற்றை நோக்கி ஓடினாள். 

“அண்ணி, நில்லுங்க அண்ணி…சரி நான் ஹாஸ்பிடல் வரேன்…” என செண்பாவின் பின்னாலயே சென்றபடி ஆனந்தி கத்தவும் நடப்பிற்கு வந்தது ஊரார் மட்டுமல்ல அபியும் தான்.

சில நிமிடங்கள் என்றாலும் ராமனின் மூதாதையர் வரை இழுத்துப் பேசிக் கொண்டிருந்த ஊரார் தங்களின் பேச்சை அந்தரத்தில் விட்டுட்டு செண்பாவை நோக்கி ஓடினர். 

ஆனந்தி அவளை நோக்கிச் செல்லும் முன்னே செண்பாவை தடுத்து நிறுத்தியிருந்தனர் ஊரில் உள்ளவர்கள். நேராக செண்பாவிடம் சென்றவள் “நான் ஹாஸ்பிடல் வரேன் அண்ணி. என்ன டெஸ்ட் பண்ண வேணுமோ பண்ணிக்கலாம். நீங்க இப்படியெல்லாம் பண்ணாதீங்க. அப்பா, அம்மா இல்லாமல் வளர்ந்தா எப்படி இருக்குன்னு ஒவ்வொரு நாளும் அனுபவிச்சு இருக்கேன். அதை சாய்க்கும், சசிக்கு கொடுத்திடாதீங்க அண்ணி” கைக் கூப்பி வணங்கியவள், 

“ மறுபடியும் இப்படியொரு தப்பை பண்ணாதீங்க அண்ணி, வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்..” கண்களில் தேங்கிய நீருடன் செண்பாவின் கையை பற்றி இழுத்தாள் ஆனந்தி. 

பட்டென ஆனந்தியின் கையை உதறி விட்டு தங்களை நெருங்கும் கணவனை வெற்றி பார்வையோடு பார்த்தாள் செண்பகம்.  

அவனோ தன்னை கர்வமாகப் பார்க்கும் மனைவியைப் பொருட்படுத்தாமல் தங்கையின் அருகில் சென்று “பாப்பா…” என்றழைத்தான். 

இத்தனை நேரம் கம்பீரமாக ஒலித்த தன் அண்ணனின் குரல் தற்போது கலங்கி ஒலித்தது போல் தோன்றியது ஆனந்திக்கு. அவனை அண்ணார்ந்து பார்த்து “ண்ணா…” என்றாள்.

அவளின் உச்சந்தலையில் கைவைத்து அழுத்தி ‘வேண்டாம்ம் டா…’ என்பதைப் போல் தலையாட்டினான்.

அவனது மனம் அடங்க மறுத்தது. தன் தாய்,தந்தை இருந்திருந்தால் என் தங்கைக்கு இந்த நிலை வந்திருக்குமா? என்ற எண்ணம் அவன் மனதைச் சூழ்ந்து கொண்டது.

இத்தனை வருடங்களாக என் மனைவி என் தங்கையை தாய்க்கு தாயாகத் தாங்குகிறாள் என்று நினைத்து கர்வம் கொண்டிருக்கிறான் ஆனால் இன்று அனைத்தும் பொய்யாய் போனதில் சர்வமும் அடங்கியது போலிருந்தது ராமனுக்கு. கலங்கிய கண்களுடன் தங்கையைக் கண்டான். 

அவளோ “உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்கு தானே ண்ணா எனக்கு அது போதும்…” என்றாள். 

அவன் ஏதோ சொல்ல வரும் முன்பே “நம்ம அம்மா, அப்பா இல்லாம வளர்ந்த மாதிரி, சசிக்கும், சாய்க்கும் அந்த நிலமையை கொடுத்திடக் கூடாது அண்ணா. அதுக்கு நான் காரணமாகிட கூடாதுன்னு நினைக்கிறேன்…” என்றவள் கண்களை அழுத்தி துடைத்தாள். 

“போலாம் அண்ணி…” என்றாள் செண்பகத்திடம் திரும்பி. 

அதற்குள் சீதா இவர்களை நெருங்கி வந்திருந்தார். வந்தவர் நேராக ஆனந்தியிடம் “எங்க மா?..” எனக் கேட்டார். 

இத்தனை நேரம் அமைதியாக நின்றது செண்பகத்துடன் சரிக்கு சமமாக பேசி தன்னை கீழ் இறக்கிக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணத்தில் தான். ஆனால் ஆனந்தியை மருத்துவமனை அழைத்தது அவரால் துளியும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அதனாலேயே வாய் திறந்தார். 

“சர்வ சாதாரணமா ஹாஸ்பிடல் போலான்னு சொல்றயே அங்க என்ன டெஸ்ட் பண்ணுவாங்க அது எப்படி பண்ணுவாங்கன்னு தெரியுமா மா…” எனக் கேட்டவரின் பார்வை செண்பாவை எரித்தது. அவரை நிமிர்ந்து பார்த்தவள் பதில் பேசாது கீழ் இதழ்களை அழுத்தமாகக் கடித்தபடி குனிந்து கொண்டாள்…

ஆனந்தியை அழுத்தமாகப் பார்த்தவருக்குச் சட்டென மதியம் ஆனந்தி கூறிய வார்த்தைகள் நினைவு வந்தது. அந்த நிமிடம் எதைப் பற்றியும் யோசிக்காமல் “உன் அண்ணனே ஹாஸ்பிடல் போக சரின்னு சொன்னாலும் என் வீட்டு மருமகளை எங்கேயும் விட மாட்டேன் மா…” என்றதும் பட்டென நிமிர்ந்து சீதாவைப் பார்த்தாள். 

“மேம்,அம்மா…” இரு வேறு குரல்கள் ராமனிடமிருந்தும், அபியிடமிருந்தும் அதிர்ச்சியாக வெளிவந்தது…

“என் பையனுக்கு உன் தங்கச்சியைக் கட்டித் தருவியா ராம்…” அவனின் அதிர்ச்சியைத் துளியும் பொருட்படுத்தாமல் கேட்டார் சீதா… 

“இப்படிக் கேட்க உங்களுக்கே வெட்கமா இல்லையா? வயசு பிள்ளையை மொத்தமா…” ஏதோ சொல்ல வந்த செண்பாவின் குரலை மீறி வெளிவந்தது ராமின் “சரிங்கம்மா…” என்ற பதில். 

“ராம்…” அதட்டலாக அழைத்தான் அபி. 

“அபி…” அவனை விட அழுத்தமாக அழைத்தார் சீதா. தாயின் அதட்டலில் கண்களை இறுக மூடி திறந்தவனுக்கு மதியம் ஆனந்தி பேசியது மின்னலாய் வந்து மறைந்தது…

 மதியம் அவளின் பேச்சும் அதற்கு பின்னான நிகழ்வுகளும் ஒன்றன்பின் ஒன்றாக நினைவு வந்தது.தற்போது வரை அனைத்தும் எதார்த்தமாக நடக்கிறது என நினைத்தவனுக்கு இது ஏன் இவர்களின் திட்டமாக இருக்கக் கூடாது என்று தோன்றியது அது தோன்றிய அடுத்த நிமிடம்

“ம்மா…”என்று அபி ஆரம்பிக்க ஆனந்தி இடையிட்டாள்.

“எனக்கு இவர் மேல துளியும் இன்ரஸ்ட் இருந்ததில்லை மேம். இதுக்கு மேலையும் அப்படியான எண்ணம் வராது. என்னை மன்னிசிடுங்க. இதுக்கு மேல கல்யாணம் அது இதுன்னு பேச மாட்டீங்கன்னு நம்புறேன்..” என்ற ஆனந்தியை விழி விரித்துப் பார்த்தான் அபி.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
11
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்