Loading

அத்தியாயம் 18

“கூத்து பார்க்க தார் பாய் எடுக்க வேணுன்னு ராம் வெளிய கிளம்பிட்டு இருக்காரு அபி. நீயும் அவரோட போ, அவங்க வீட்டுக்கு வந்துட்டு நம்ம இப்படி உட்கார்ந்துட்டு இருந்தா நல்லா இருக்காது…” என்ற சீதாவின் குரலில் நிமிர்ந்து அவரை பார்த்தவன் பதில் பேசாது மீண்டும் அலைபேசியில் மூழ்கினான். 

மகனின் செயலில் கோபம் வந்துவிட்டது சீதாவிற்கு. பட்டென அபியின் கையிலிருந்த செல்லை பிடுங்கி கொள்ள, அவரை முறைத்தான் சீதாவின் புதல்வன்.

“என்ன பாக்குற? எழுந்து போ முதல்ல… இந்த பணம், பகட்டெல்லாம் இப்ப வந்தது தான். பழசை எப்பவும் மறக்கக் கூடாது. நானும் வந்ததுல இருந்து பார்க்குறேன் உட்கார்ந்த கிடையை விட்டு எழ மாட்டாங்கற…” என்றார் கோபமாக.

“ம்மா வந்த இடத்தில என்ன இதெல்லாம். நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் ம்மா. பத்து மணிக்கு மீட்டிங் ஒன்னு இருக்கு. அதை பத்தி தான் பேசிட்டு இருக்கேன்…” என்றான் பல்லைக் கடித்துக்கொண்டு

“பத்து மணிக்கு தானே மீட்டிங். இப்ப எழு மணி தானே ஆகுது. தார் பாய் எடுத்துட்டு வர கால் மணி நேரம் ஆகுமா? போ ராம் வெளிய வந்ததும் அவரோட போயிட்டு வா…” பிடிவாதமாக கூறிய தாயின் மீது அத்தனை கோபம் வந்தது. ஊருக்கு வந்த இடத்தில் என்ன இது என்று சலிப்பாக நினைத்தவன் தாயை பார்த்தபடி எழுந்து நின்றான். 

அதற்குள் ராம் வெளியில் வர

“ராம் இருங்க நானும் வரேன்…” என்றான் கேசத்தை அழுத்தி கோதிக் கொண்டு. 

“உங்களுக்கு மீட்டிங் இருக்கு சார். முதல்ல அதை பாருங்க நான் போயிட்டு வந்துடறேன். இங்க பக்கத்துல தான் நெல் குடோன் இருக்கு போனதும் வந்துடுவேன்…” என்றான் ராம். 

“அதான் நீங்களே சொல்றீங்களே பக்கத்துல தான் இருக்குன்னு. அப்பறம் என்ன வாங்க போலாம்…” என்றவன் அருகில் நின்ற சீதாவிடம் கை நீட்டினான் கைபேசியை கொடுங்கள் என்பது போல.

“தோட்டம் பக்கம் தான் இருக்க்குன்னு ராமே சொல்லிட்டாருல போ. வர வரைக்கும் எங்கிட்டயே இருக்கட்டும். அங்க போயியும் போனை பார்த்து நிக்கலான்னு முடிவு பண்ணிட்டான் போல…” எனக் கூறிய தாயை முறைத்தபடி ராமுடன் கிளம்பினான். 

“இப்ப என்ன பண்றது? இன்னும் கொஞ்ச நேரம் போனால் நல்லா இருட்டிக்கும்…” எனக் கேட்ட ஆனந்தியின் குரலில் தன்னிலைக்கு வந்தவன் அவளை ஒரு பார்வை பார்த்தான். அவனின் பார்வையில் எரிச்சல் மிதுற சட்டென எழுந்து நின்றவள் கதவிருக்கும் திசையை நோக்கி வேகமாக நடந்தாள். 

அவள் என்ன செய்கிறாள் என யூகித்தவனாய் பார்த்துக் கொண்டிருந்தான் அபி.

“யாராவது இருக்கீங்களா? அண்ணா நான் உள்ள மாட்டிகிட்டேன். 

ராமண்ணா…” எனக் கதவை தட்டிக் கொண்டே கத்தினாள். 

“நீ எவ்வளவு கத்தினாலும் வெளிய கேட்காது. ஊரு முழுக்க மைக் செட் போட்டு இருக்காங்க.. இப்ப வரைக்கும் பாட்டு ஓடிட்டு இருக்கு காது கேட்கலயா உனக்கு…” என அமைதியாக கேட்டான் அபி. 

“ஐயோ…” என தலையில் கைவைத்து அமர்ந்தவள் பாவமாக அபியைப் பார்த்தாள். இப்போது இருவருக்கும் இருட்டு பழகி இருந்தது. 

“முதல்ல லைட் சுவிட்ச் எங்க இருக்குன்னு சொல்லு…” எறிந்து விழுந்தான் அபி. அவனின் எரிச்சலையெல்லாம் துளியும் கண்டுகொள்ளவில்லை அவள்.

“ஆமால, லைட் போட்டா வெளிய இருக்கிற யாராவதுக்கு தெரியும். அவங்க என் அண்ணன் கிட்டயோ எங்க பங்காளி வீட்டுலயோ சொல்லுவாங்க. அவங்க இங்க வந்து பார்ப்பாங்க செம்ம,குட் ஐடியா…” என படபடவென கூறிக் கொண்டே அவசரமாக எழுந்தவள் ஸ்விட்ச் இருக்கும் இடத்தை நோக்கி ஓடினாள்.

“அங்க எரியறதுக்கு முன்னாடி இங்க எரிஞ்சுடுச்சு டூப் லைட்…” என முனகலாக கூறியவன். 

“ஹேய் இருட்டல ஓடி கீழ விழுந்து வாரிக்காதா…” அதையும் எரிச்சலோடும் குரலில் தான் கூறினான். 

“ஹான் சரி…” என்றவள் குடோனிலிருந்த ஸ்விட்சை பட் பட்டென்று சத்தத்தோடு தட்டினாள். 

“என்ன சுவிட்ச் போடற சத்தம் தான் வருது. லைட் எரியக் காணோம்…” என இங்கிருந்தபடியே அபி கத்தினான். 

“அதான் எனக்கும் தெரியல சார். எந்த லைட்டும் எரியல…” என்றாள் உள்ளே சென்ற குரலில். 

“மெயின் ஆன் பண்ணு இடியட்…” எனச் சொல்லவும் 

“ரொம்ப பேசாதீங்க சார். இடியட்டாம் இடியட். தெரியலன்னா சொல்லுங்க அதுக்காக ரொம்ப பேச வேண்டாம் சொல்லிட்டேன்…” என்றவள் மெயின் ஆன் செய்ய போக,நினைவு வந்தவளாய் தலையில் கைவைத்து “ஐயோ…” என்றாள்.

“என்னாச்சு…” என்று பதட்டமாகவெல்லாம் கேட்கவில்லை. அவளின் பேச்சில் உண்டான கடுப்போடு தான் கேட்டான். 

“அது மெயின் பிளக் மோட்டார் ரூம்ல இருக்கும் நினைக்கிறேன். அண்ணா அதை ஆப் பண்ணிட்டு போயிருப்பார்…” என்றாள்.

“இவனை…” என ராமை ஆங்கில கெட்ட வார்த்தையில் திட்டியவன்

“மேடம் அங்கேயே நிக்கறதா உத்தியேசமா…” எனக் கத்தினான். ராமின் மீதிருந்த கோபத்தை இவளின் மேல் காட்டினான். 

“இப்ப எதுக்கு இந்த கத்து கத்தறீங்க. இருங்க வரேன்…” என அவனை போலவே கத்தி கூறியவள் அவனை நோக்கி நடந்தாள். 

“எப்படி கத்தறா பாரு இடியட்… உடம்பு முழுக்க திமிரு…” என மெல்லிய குரலில் ஆனந்தியை திட்ட, அது அவளின் காதில் நன்றாகவே விழுந்து தொலைத்தது.. 

“நீங்க போட்ட சாப்பாட்ட தின்னு தின்னு தான் உடம்பு முழுக்க திமிரும் கொழுப்பும் ஏறி நிக்குது…” என்றாள் மூக்கு விடைக்க… அவளை மேலிருந்து கீழாக பார்த்தவன் பதில் பேசாது கிழே அமர்ந்தான். 

அவனையே குறுகுறுவென பார்த்தவள் அருகிலிருந்த சாக்கு பையை விரித்து அதில் அமர, அவளை நக்கலாக பார்த்து வைத்தான். 

“என்னவாம்…” என புருவம் உயர்த்தி கேட்டாள். 

“மேடம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கீழே விழுந்து வாரினது மறந்து போச்சா…” என்றதும் பதில் பேசாது சுற்றி முற்றி பார்த்தாள். குடோன் இருட்டாக தான் இருந்தது அதையும் மீறிய இரவின் வெளிச்சம் உள்ளே வந்து கொண்டு தான் இருந்தது. தற்போது வரை அந்த வெளிச்சத்தை கவனிக்காமல் விட்டமே என தன்னை தானே நொந்து கொண்டவள் 

“சார்…” என அழைத்தாள். 

” ம்ம்ச் இம்சை… என்ன…” என்றவனின் குரலில் அத்தனை எரிச்சல் மண்டிக் கிடந்தது.

“விண்டோ இருக்கு…” என ரூஃப்பிற்கு கிழே பொருத்தியிருந்த வெண்டிலேஷனை பார்த்து சொல்ல… அதன் உயரத்தை மேலிருந்து கீழாக ஆராய்ந்தேன் அபி.

“தெரிஞ்சு தான் பேசறயா இல்லை தெரியாம தான் பேசறயா? அது வெண்டிலேஷன் அதுவும் எங்க இருக்கு பாரு. சினிமால வர மாதிரி என்னால ஸ்டன்ட் எல்லாம் பண்ண முடியாது…” பல்லை கடித்தபடி கூறினான். 

“நீங்க உங்க டீத்துக்கு கோல்கட் டூத் பேஸ்ட் யூஸ் பண்றீங்களா? இல்லை டாபர் ரெட் பேஸ்ட்டா?…” என்று கேட்டவளை பலமாக முறைத்தான் அபி. 

அவனின் முறைப்பையெல்லாம் கண்டு கொள்ளாமல் “இல்லை சும்மா சும்மா பல்லை கடிச்சுட்டே இருக்கீங்களே அதான் கேட்டேன்…” என்றதும் தலையில் அடித்துக் கொண்டவன் வேறு பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டான். 

அவன் அப்படி திரும்பி கொண்டதும் உதட்டை சுழித்து அழகு காமித்தவள் அடுக்கி வைத்திருந்த மூட்டைகளையும் ஜன்னலையும் மாறி மாறி பார்த்தாள். 

‘எத்தனை மரம் ஏறி இருப்போம் சாதாரண மூட்டை மேல ஏற முடியாதா?…’ என தோன்றிய நிமிடம் மனதில் ஓர் குருட்டு நம்பிக்கையொன்று முளைத்தது. அதற்கு பிறகு துளியும் யோசிக்கவில்லை மூட்டையை நோக்கி நடந்தாள். 

கொஞ்சம் முயற்சித்தால் நிச்சியம் ஏறி விடலாம் என்று நினைத்தப்படியே நெல் மூட்டையின் மீது கால் வைத்து ஏற ஆரம்பித்தாள். 

அவளின் செய்கைகளை கவனிக்காத அபியோ தான் நினைவில் மூழ்கியிருந்தான். மனம் முழுவதும் இங்கிருந்து எப்படி வெளியே செல்ல என்ற எண்ணம் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது. 

‘போன் எடுத்துட்டு வந்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன்…’ என நொந்துக் கொண்டவன் நினைவு வந்தவனாய் 

“ஹேய் உன் போன் எங்க…” என திரும்பி ஆனந்தியிடம் கேட்க அவளோ அவ்விடத்தில் இல்லை… 

“ஏய் எங்க போயி தொலைஞ்ச…” எனக் கத்தினான். 

“சார் இங்க…” என மேலிருந்தப் படி கத்தினாள். 

“அடிப்பாவி, ஹேய் மெண்டல் அங்க என்ன பண்ற? கிழே விழுந்து தொலைச்சுடாதா. முதல்ல இறங்கு…”எனக் கிழிருந்தப்படியே கத்தினான். 

“கிழே இறங்கவா ஏறினேன். கொஞ்சம் நேரம் இருங்க யாராவது வராங்களா பாக்கலாம்…” என்றவள் சரளத்தைப் பார்க்க ஆரம்பித்தாள். 

“கடவுளே…” என தலையிலடித்து கொண்டவன் பல்லைக் கடித்தபடி அவளையே பார்த்து கொண்டிருந்தான். 

ஆனந்தி கூறியது போல சில நிமிடங்களில் அவ்விடத்தை நோக்கி இருவர் வர அவர்களை முடிந்த மட்டும் கத்தி அழைத்தாள். 

“அண்ணே, அண்ணே. இங்க பாருங்க… நான் இந்த குடோன்ல மாட்டிக்கிட்டேன். அண்ணே அண்ணே கொஞ்சம் இங்க பாருங்க…” என கத்த அவர்களுக்கு துளியும் இவளின் குரல் கேட்கவில்லை போல, அவர்கள் வந்த வேலையை செய்ய 

“ச்சீ ச்சீ…” என திரும்பி அபியை பார்க்க, அவனோ இவளை தான் முறைத்து பார்த்தான். அவனின் முறைப்பை கண்டுகொள்ளாமல் கையிலிருந்த கவரிங் வளையலை கழட்டியவள் குறிபார்த்து அவர்களின் மீது எறிந்தாள்.

அது சரியாக அவர்களின் மீது விழ “ஐய்யா…” குதுகளித்தவள் “அண்ணே, அண்ணே இங்க நான் மாட்டிகிட்டு இருக்கேன் அண்ணே, ஹெல்ப் மீ…” எனக் கத்த, இவளின் குரலா இல்லை வானத்திலிருந்து விழுந்த வளையலா? ஏதோ ஒன்று அவர்களுக்கு பயத்தை கொடுக்க, அவ்விடத்தில் நொடி நேரம் நிற்காது விழுந்தடித்து ஓடினர். 

” பயந்தாங்கோலி பசங்க… தலை தெறிக்க ஓடறானுங்க பாரு…” என திட்டியவள் அடுத்த நபர் வருவதற்காக காத்திருந்தாள். 

அவளின் கூத்தை கீழிருந்தப்படியே பார்த்து கொண்டிருந்தவனின் கோபம் எல்லையைத் தாண்டி சென்றது… சிறிது நேரம் பொறுத்திருந்து பார்த்தவன் 

“ஹேய் மெண்டல் முதல்ல கிழ இறங்கி வா…” எனக் கத்தினான். அவனை திரும்பி பார்த்தவள் அப்போது குடோனிற்கு அருகில் வந்தவர்களை கவனிக்க மறந்து விட்டாள் அதே சமயம் கோவிலில் பாடிய பாடலும் நின்றிருந்தது… 

“ஏன் சார் நீங்க தான் மேல ஏறி கேட்க மாட்டேன்னு சொல்றீங்க. நான் மேல ஏறி ஹெல்ப் கேட்டுட்டு இருக்கேன் அதுக்கும் வேண்டா கிழே இறங்கு இறங்குன்னு சொல்லிட்டு இருக்கீங்க என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க…” என இவள் கத்திய கத்தல் நிச்சியம் வெளியில் இருந்தவர்களுக்கு கேட்டிருக்கும் 

“இப்ப நீ வர போறயா இல்லையா…” இவனும் அவளை மிரட்ட, தப்பாது வெளியில் நின்றவர்களுக்கு கேட்டது.

“டேய் நோம்பி நேரத்துல ஊருக்கு ஒதுக்குப்புறமா வந்து அசிங்கம் பண்ணிட்டிருக்கானுங்க பாரு டா. திருப்பூர்ல இருக்கற தர்மனோட பங்காளி குடோன் தானே டா இது? பூட்டினா குடோனை உடைச்சு உள்ள போயிருக்காங்க பாரு. அவங்க நம்ம நோம்பிக்கு வந்துருப்பாங்க தான் நினைக்கிறேன் வா போயி சொல்லுவோம். ஊருல காப்பு கட்டியிருக்குன்னு கொஞ்சம் கூட விவசத்தை இல்லை பாரேன் இதுங்களுக்கு. இதுக்கு ஒரு முடிவை கட்டணும் டா…” என வெளியில் நின்றவர்கள் குடோன் விஷயத்தை ஒளிபரப்ப ராமின் வீட்டை நோக்கி நடந்தனர். 

இதையறியா இருவரும் ஒருவருக்கொருவர் வாதாடி கொண்டிருந்தனர்

“சாரி சார்… என்னால கிழே இறங்க முடியாது. இப்பவே நைட் ஒன்பது மணி ஆயிடுச்சு. இதுக்கு மேல உங்க கூட என்னால இருக்க முடியாது…” என்றாள் அழுத்தமாக.

” நிமிசத்துக்கு நிமிசம் நீ கிறுக்கின்னு ப்ரூஃப் பண்ணாத இடியட்… கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாயா? இந்த நேரத்துல உன் அண்ணனை தவிர வேற யார் வந்து டோர் ஓபன் பண்ணாலும் நம்ம இரண்டு பேரை பார்த்து தப்பா தான் நினைப்பாங்க… உன் மரமண்டைக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா? உன் வீட்டுக்கு வந்த பாவத்துக்கு உன்கூட சேர்த்து வைச்சு எனக்கும் கெட்ட பேர் வரும்…” என்றான் இறுகிய முகத்துடன்…

 அவன் கூறுவது உண்மை தானே.

 சாதாரணமாகவே இவனை தன்னுடன் இணைத்து பேசும் அண்ணி தற்போது இருவரையும் ஒன்றாக பார்த்தால்? நினைக்கவே அத்தனை பயமாக இருந்தது அவளுக்கு. 

அதுவும் மதியத்திலிருந்து வீட்டு பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை எத்தனை கதைக் கட்டி வைத்திருக்கிறாரோ என நினைத்தவளின் உடல் ஒருமுறை தூக்கிப் போட, பட்டென கிழே இறங்கியவள் விரித்து வைத்திருந்த சாக்கில் அமர்ந்தாள். 

அதற்கு மேல் ஆனந்தி துளியும் பேசவில்லை மனம் முழுவதும் அவளின் அண்ணியின் மேல் தான் இருந்தது.

அதே நேரம் இவளது பயம் உண்மை என்பதை போல் தான் செண்பகத்தின் செயலும் இருந்தது. பொழுது கிளம்பும் வரை அமைதியாக இருந்தவள் பொழுது கிளம்பியதுமே முணுமுணுக்க ஆரம்பித்து விட்டாள். வெறும் முணுமுணுப்போடு போகவில்லை…

வழியில் போவோர் வருவோரையெல்லாம் அழைத்து ‘ஆனந்தியை பார்த்தீர்களா?’ என்று வேறு கேட்டு வைத்தாள். சீதா குழந்தைகளுடன் இருந்ததால் செண்பகத்தின் செயல்களை கவனிக்கவில்லை… 

நேரம் செல்ல செல்ல செண்பகத்தின் கோபம் எல்லையை கடந்தது.. கணவனின் முன் இதனை காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் மனம் முழுவதும் வன்ம தீப் பற்றி எரிந்தது… 

கணவனை தார் பாய் எடுத்துவர அனுப்பி விட்டு வீட்டை ஒருமுறை அலசியவள் சத்தமாகவே திட்ட ஆரம்பித்தாள். 

“வயசு புள்ளை வீட்டுல அடக்க ஒடுக்கமாக இருக்கணுமா இல்லையா? பொழுது கிளம்பி ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சு இன்னும் எங்க வீட்டு அஞ்சலதேவியை காணோம். ‘போனை எடுத்துட்டு போனா கால் பண்ணிட்டே இருப்பேன்னு வீட்டிலேயே போனை வைச்சுட்டு போயிட்டா. கொஞ்சம் கூட பயம் இல்லை என்மேல…” என சத்தமாக திட்டிக் கொண்டே சமையலறை பாத்திரத்தை பட் பட்டென்ற சத்தத்தோடு வைத்தாள். 

செண்பகத்தின் பேச்சு வெளியில் வரைக்கும் கேட்க ‘என்னாச்சுன்னு தெரியலையே…’ என நினைத்தப்படியே சீதா உள்ளே சென்றார்.

“எங்க போயி தொலைஞ்சான்னு தெரியல. எல்லாம் இவன் கொடுக்கிற செல்லம். ஊர் மேய போயிட்டா…” என்ற செண்பகத்தின் வார்த்தை காதில் விழுந்ததும் சீதாவின் முகம் ஒரு போலானது. 

“என்னாச்சு செண்பா… யாரை தேடிட்டிருக்க…” எனக் கேட்டதும் 

விறைத்த முகத்துடன் “ஆனந்தியை தான் மா காணோம். மத்தியத்திலிருந்து எங்க போனான்னு தெரியலை. ஒரு பக்கம் விடாம அலசி பார்த்துட்டேன் ஆளையே காணோம்…” எனக் கூறிவிட்டு திரும்பிக் கொள்ள சீதாவிற்கு தான் பக்கென்றானது.

“என்னமா சொல்ற? மதியத்திலிருந்து ஆளையே காணோமா? ராம் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருந்தா தேட போயிருப்பார் தானே…” எனக் கூற கூறவே ராமனும் வந்து விட்டான். 

“செண்பா ஆனந்தியை காணோன்னு பக்கத்துல விசாரிச்சியா?…” எனக் கேட்டான் வந்தும் வராமல். 

“ஆமாங்க…”  

“என்ன பழக்கம் இது?வயசு புள்ளையை காணோம்னு விசாரிச்சிருக்க… அவனுங்க என்னடான்னா அவ சொல்லாம கொள்ளாம ஓடி போயிட்ட மாதிரி பேசிட்டு இருக்காங்க. கொஞ்சம் கூடவா இதெல்லாம் யோசிக்க மாட்ட…” 

“இங்க இல்லைன்னா கோவிலுக்கு போயிருப்பா, அங்க இல்லன்னா நீ என்கிட்ட தானே சொல்லிருக்கணும். என்கிட்ட சொல்லாம போறவன் வரவன்கிட்ட விசாரிச்சு வைச்சிருக்க? நீ செஞ்சது கொஞ்சமும் நல்லா இல்லை…” என்றவன் செண்பாவின் பதிலை கூட கேட்காமல் பைக் சாவியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றிருந்தான். 

ராமின் மனம் முழுக்க தங்கை மட்டுமே நினைவில் இருக்க, அபி என்றவனை மறந்து போனான் .. 

இளம் பெண்ணல்லவா சற்றே பயம் தான் அவனுக்கு. தங்கையின் மேல் சந்தேகப்படவில்லை. ஏன் உலகிலுள்ள புழு, பூச்சுக்கு கூட பயப்படவில்லை ஆனால் சில அற்ப மனிதர்களை கண்டு பயந்தான். பெண்களுக்களின் சதைக்காக அலையும் நாய்களை நினைத்து தான் பயந்தான். 

நாய்கள் என்றதுமே சட்டென தோட்டத்தில் கண்ட நால்வரும் நினைவில் வந்தனர். அவர்களின் பார்வையும், தயங்கி நின்ற விதமும் ஏதோ சொல்லாமல் சொல்ல, எதை பற்றியும் யோசிக்காமல் அவர்கள் இருக்குமிடைத்தை நோக்கி பயணித்தான். 

அதே சமயம் குடோனில் அரங்கேறிக் கொண்டிருந்த அசிங்கம்(?) ஊராருக்கும், செண்பகத்திற்கும் தெரிய வந்திருந்தது…

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்