
அத்தியாயம் 15
இன்றோடு ஸ்பின்னிங் மில்லை விலைக்கு வாங்கி இரண்டு மாதங்கள் முடிவடைந்திருந்தது… இந்த இரண்டு மாதமும் இவனின் நிழல் கூட குழந்தைகளின் மேல் விடவில்லை சாரதா. அவர் குழந்தைகளை பார்க்க விடவில்லை என்பதை விட இவன் அவர்களை அதிகம் தேடி செல்லவில்லை என்பது தான் உண்மை. இரண்டு மாதமும் புதிய தொழிலை கற்க ஓடிக் கொண்டிருந்தவன் இன்று தேங்கி நின்றான்.
ஆம் இன்று அபியின் பிறந்த நாள்.. இரண்டு மாதங்களாக மனைவியின் நினைவுகள் அவனை அதிகம் தாக்கவில்லை அதற்கு காரணம் அபியின் வேலை பளு. ஆனால் இன்று அந்த வேலை பளுவையும் மீறி அம்முவின் நினைவுகள் அவனைத் தாக்கியது….
இருக்காத என்ன? இரண்டு மாதங்களுக்கு முன்பே தன் பிறந்த நாள் பரிசிற்கு ஏற்பாடு செய்த மனைவியின் நினைவுகள் அவனை பலமாக வாட்டியது.வெளியில் கூட செல்லாமல் அறையிலேயே முடங்கி கிடந்தவனின் பார்வை அன்று கோபத்தில் டேபிளில் வைத்த டைரியின் மேல் பதிந்தது.
அவனின் பிறந்த நாளைக்கு அவள் கொடுக்க நினைத்த பரிசு அவளின் டைரிகள் தானே… டேபிளின் மேலிருந்த டைரியை எடுத்து மென்மையாக வருடி விட்டவன் படுக்கையில் விழுந்தான்.
அவளின் டைரியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். அவளின் நெஞ்சில் வாகாக பெருந்திய டைரி இவனின் நெஞ்சில் சிறு புத்தகமாக தெரிந்தது. மனைவியின் நினைவில் கண்ணீர் நில்லாமல் வழிந்தது. அன்றும் போல இன்றும் அவனின் கேசத்தை மென்மையாக வருடி விட்டது இளம் காற்று. காற்றின் வருடலில் அபியின் நெஞ்சிலிருந்த டைரியின் பக்கங்கள் திறந்து கொண்டது.
கண்களில் வழிந்த நீரை புறங்கையால் துடைத்து கொண்டவன் அந்த டைரியை தொடக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தான்..
கண்களில் தேங்கிய கண்ணீருடன் இதழில் மலர்ந்த புன்னகையுடன் அவளின் கவிதைகளை மீண்டுமொருமுறை படித்தவன் அதே சிரிப்போடு சண்டையிட்ட நாட்களில் அவள் திட்டி இருந்ததையும் படித்தான்.
பணம் என்ற ஒன்றை துளிக் கூட அவள் எழுதியிருக்கவில்லை, முழுக்க முழுக்க அவன் மீது வைத்திருந்த காதலையும் காதலால் உண்டான சண்டைகளையும் மட்டுமே எழுதியிருந்தாள். முதலில் அவனை ரசிக்க வைத்த அவளின் காதல் பின் யோசிக்க வைத்தது…
“டீவ்ல உனக்கொரு ஸ்கூட்டி எடுக்கலான்னு இருக்கேன் அம்மு…” என்றதும் கண்களில் மின்னல் வெட்டினாலும் அடுத்த நிமிடமே
“அதெல்லாம் வேண்டாம் மாமா, இப்ப வர சம்பளத்துலையே வீட்டு வாடகை கொடுக்கணும். வீட்டு சாமானம் வாங்கணும். பசங்க ஸ்கூல் செலவுக்கு வேணும். தீடிர்னு உடம்பு சரியில்லைன்னா ஹாஸ்பிடலுக்கு ஒரு ஆயிரமாவது எடுத்து வைக்கணும். இதுக்கே உன் சம்பள பணம் பத்தாது இதுல வண்டி வேறயா…” என கேட்ட மனைவியின் பக்குவத்தைப் பார்த்து அன்று பெருமையாக நினைத்தான்.
ஆனால் இன்று அதையே எழுத்துக்களாக படிக்கும் போது அனைத்தும் புரிய வந்தது.
இதுநாள் வரையிலும் இருப்பதை வைத்து வாழ பழகிக் கொண்டாள் என்று தான் நினைத்தான் ஆனால் அவளின் ஆசைகளை தனக்குள் புதைத்துக் கொண்டு வாழ்ந்தாள் என நினைத்திருக்கவில்லை. மனம் ரணமாய் வலித்தது. அந்த வலிகளுடனே அடுத்தடுத்தை படித்தான்..
ஆபரேஷன் செய்து கொள்ளலாம் என்ற பேச்சும் அதற்கு பிறகு நடந்த சம்பாஷனைகளை மீண்டுமொரு முறை படித்தவனுக்கு இதயம் வேகமாக துடித்தது… அடுத்த நாள் மருத்துவமனை வளாகத்தில் இவன் பாடிய பாடலும் காதல் கூறியதையும் அழகிய கவிதைகளாக வடித்திருந்தாள்.
ஆபரேசன் செய்த அந்த நாளை விடுத்து அடுத்த நாள் அவளின் டைரியில் கவிதையாய் இடம் பிடித்து இருந்தது…
அக்கவிதையை வாசிக்காதே என மனம் பலமுறை கூறியும் கேட்காது
அக்கவிதையை வாசித்தான்
உள்ளுக்குள்ளே உருகுகிறேன்
உன்னை எண்ணியே மருகுகிறேன்….
உடலின் வலியால் துடித்தாலும்
உன்னுடன் வாழ எந்த வலியையையும் தாங்குவேன் …
உனை விட்டுச் செல்லும்
நொடிகளை எண்ணி
உயிர் வலியால் வெடிக்கிறேன்…
உண்மை நிலையை எண்ணி
ஊமையாக அழுகிறேன்….
முன்பை போல் வாய்விட்டு கதறி அழவில்லை என்றாலும் மெளனமாய் கண்ணீர் துளிகள் அவனின் கன்னங்களை நிறைத்தது. இந்த கவிதையோடு முடிந்தது என நினைத்தாலும் கைகள் அடுத்த பக்கத்தை திருப்பியது… வெற்று காகிதமாக இருக்குமென எண்ணி திருப்பிட அங்கேயும் அவளின் வரிகள் இருந்தது…
“என்ன டா அவளோட வலிகளை என்கிட்ட சொல்லாம டைரியில எழுதி வைச்சிருக்கான்னு உனக்கு கோபம் கூட வரும்… ஆனா பாரேன் எனக்கு தான் உன்கிட்ட சொல்ல வரல… ஒரு பாட்டு இருக்குமே ஹான்
‘எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது…’
“இந்த பாட்டு லைன் உனக்கு எப்படியோ எனக்கு தெரியாது மாமா. ஆனா எனக்கு அடிக்கடி இந்த பாட்டு ஞாபகம் வரும். எனக்கு ஒன்னுன்னா நீ துடிச்சு போயிடுவன்னு தெரிஞ்சு தான் அத்தை கிட்ட கூட என்னோட வலியை சொல்லாம இருக்கேன்…”
சிறு இடைவெளிக்கு பிறகு “சரி சரி இதெல்லாம் நீ படிச்சு ஃபீல் பண்ண கூடாது. இப்ப அனிதாக்கு என்னாச்சு? ஒன்னும் ஆகல… இப்போதானே ஹாஸ்பிடலிருந்து வந்து இருக்கேன். சோ தூங்கி எழுந்தா இந்த வலியெல்லாம் சரியா போயிடும்…” என்ற வரிகளோடு அம்மு என்ற அத்தியாயமும் முடிந்திருந்தது…
‘தூங்கி எழுந்த இந்த வலியெல்லாம் சரியா போயிடும்…’ என்ற வரிகளை படித்தவனுக்கு கடைசியாக அவள் டைரியை வைத்திருந்த தினம் நினைவு வந்தது..
மருத்துவமனையிலிருந்து வந்த அன்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியை பார்த்தவனின் விழிகளை நிறைத்தது அவளின் நெஞ்சை மஞ்சமாக்கி கொண்டிருந்த டைரி…
“உனக்கு வந்த வாழ்வை பாரேன்… ஹாஸ்பிடலிருந்து வந்து கூட உன்னை தூக்கி கை வைச்சுட்டு தூங்கிட்டு இருக்கா…” என முறைத்து கொண்டே கூறியவன் அனிதாவின் மேலிருந்த டைரியை மெல்ல எடுத்தான்.
பட்டென்ற சத்தத்தோடு டைரியினுள் இருந்த பேனா விழுந்தது… “ஐயோ…” என முனகி கொண்டே பேனாவை டைரியினுள் வைத்தவன் அருகிலிருந்த டேபிளில் நோட்டை வைத்துவிட்டு நகர்ந்தான். அதற்கு பின் நடந்த இரண்டு நாட்களுமே நாம் அறிந்தவை தான்.
கையில் வைத்திருந்த டைரியை மெல்ல வருடிக் கொடுத்தவன் மனம் முழுக்க ரணமாய் வலித்தது. அந்த வலியை மறக்க தொழிலின் பின் ஓடினான்.
அந்த ஓட்டம் தான் மேலும் தொழிலை கற்க வைத்தது.. தொழிலை கற்ற இரண்டு வருடங்களில் வட்டிக்கு வாங்கிய பணத்தையும் மனைவியின் பெயரில் வந்த பணத்தையும் திருப்பி கொடுத்துவிட்டான்.
அந்த வருடத்திற்குள்ளயே அவர்களின் வாடகை வீட்டையும் அந்த வீட்டிற்கு பின்னாலிருந்த கார்டனையும் கூட விலைக்கு வாங்கி விட்டான். நாட்களும் மாதங்களும் ஓட, ஒன்றாக வாங்கிய கம்பெனியை இரட்டிப்பாக்கினான். அதே சமயம் வங்கியில் கடன் வாங்கி அரண்மனை போன்ற வீட்டை வாங்கியிருந்தான். வீட்டை வாங்கி முடித்த கையோடு தன் பிள்ளைகளையும் அழைத்து வந்து விட்டான்.
பிள்ளைகளை அழைத்து வருவது சாதரணமாக முடியவில்லை அதற்கு சற்று அதிகமாகவே போராட வேண்டியதிருந்தது. குழந்தைகளை பிரிந்த இந்த இரண்டு வருடமும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு மட்டுமே அவர்களை சென்று பார்த்திருந்தான். அதுவே சாரதாவிற்கு அதீத கோபத்தைக் கொடுத்திருந்தது. அதனாலயே அபி கேட்டதும் குழந்தைகளை அவனிடம் அனுப்பவில்லை…
ஒற்றையளாக என் மகளை வளர்த்த எனக்கு என் பேர பிள்ளைகளையும் வளர்க்க தெரியும். நீ மறுமணம் செய்து உன் வாழ்க்கையை பார். நான் உன்னிடம் அவர்களை அனுப்ப மாட்டேன் என்பதை போல் கூறிவிட்டார். அவர் கூறுவதை நினைத்து வருந்த அவன் சாதாரண அம்முவின் அபி இல்லையே தொழிலதிபர் அபிநயன் அல்லவா குழந்தைகளுக்காக அவரிடம் போராடினான். அதன் விளைவு சில நாட்களிலயே சாரதாவின் சம்மதத்தோடு குழந்தைகள் அவனிடத்தில் வந்திருந்தனர்.
****
அனைத்தும் கூறி முடித்த சீதாவின் கண்களிலிருந்து கண்ணீர் கன்னத்தை நனைத்தது என்றால் வெளியில் நின்றிருந்த அபியின் கண்களில் தேங்கி நின்ற கண்ணீர் வெளியில் வரவா வேண்டாமா என்பதை போல் காத்துக் கிடந்தது..
“என்ன தான் புள்ளைங்களை எங்க கூடயே கூட்டிட்டு வந்துட்டாலும் அதுங்க அம்மா, அப்பாக்காக ஏங்கி நிக்கறது அவனுக்கு தெரியல. வழக்கம் போலவே வேலை வேலைன்னு ஓடிட்டே இருந்தான்.
அபியோட இந்த ஓட்டத்தை நிப்பாட்ட தான் அவனோட கல்யாணத்தை பத்தி பேசினேன்.
‘எனக்கும் வயசாகுது நீயும் குழந்தைகளை கண்டுக்கவே மாட்டேங்குற. பேசாம இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ. வர போற புள்ளையாவது பசங்களை பாத்துக்கட்டும்ன்னு சொன்னேன்…”
“அப்படி சொன்ன அடுத்த நாளே பிள்ளைகளை பார்த்துக்க வேலைக்கு ஆள் எடுத்துட்டான்.
நான் எதை மனசுல வைச்சு சொன்னனோ அது நடக்கவே இல்லை…”
“இன்னும் எத்தனை நாளைக்கு வேலையாளை வைச்சு பிள்ளைகளை பார்த்துக்க முடியும். அவங்களுக்கு தேவை வேலையாட்களோட அன்பில்லை… அப்பா, அம்மாவோட அன்புன்னு எப்ப புரிஞ்சிப்பான் இவன்…”
“புள்ளைங்க இவனுக்காக ஏங்கி நிக்குதுங்க, மூணு வருஷமா ஸ்கூலுக்கு கூட அனுப்பாம கூடவே வைச்சி பார்த்துக்கிட்ட சாரதா அண்ணியை கூட தேடலை. அனிதா மாதிரியே இவனை தான் தேடுதுங்க இரண்டும். ஆனால் இவன் இன்னும் பொண்டாட்டி நினைப்பிலேயே சுத்திட்டு இருக்கான்… இப்படியே போனா பசங்க வாழ்க்கை ஆகும்னு நினைக்கவே பயமா இருக்கு..” என்றவருக்கு மலுக்கென்று கண்ணீர் கண்களை சூழ்ந்து கொண்டது.
‘ இந்தம்மா பேர பிள்ளைகளுக்காக வருத்தப்பட்டு பேசற மாதிரி தெரியல. கல்யாணம் பண்ற வயசுல பையன் பொண்டாட்டியை இழந்துட்டு நிக்கறானேன்னு நினைச்சு ஃபீல் பண்ணுது…’ என நினைத்தபடியே சீதாவை கவனித்தாள் செண்பகம்.
“நானும்,சாரதா அண்ணியும் இருக்கிற வரைக்கும் கவலைப்படத் தேவையில்லை தான். எங்களுக்கு அப்பறம் அவங்க நிலைமை? இப்ப குந்தவிக்கு ஆறு வயசு ஆகுது. இன்னும் ஆறு, ஏழு வருஷம் போனா புள்ளை வயசுக்கு வந்துடுவா. அவ்வளவு நாள் வரைக்கும் நாங்க இருந்தோன்னா பரவாயில்ல இல்லைன்னா புள்ளை யாருக்கிட்ட போயி நிக்கும். குழந்தை துடிச்சு போயிட மாட்டாளா…” என்றவருக்கு கண்ணீர் நின்றபாடில்லை. பல நாட்கள் தேக்கி வைத்திருந்த ஆதங்கமும், துக்கமும் இன்று கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்தது.
‘ ஹிக்கும் இப்ப இருக்கற பிள்ளைங்க உலகத்தையை வாங்கிட்டு வந்துருங்க. தூரமாயிட்டா துணி வைக்கவா தெரியாது. இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணிட்டு இருக்கு இந்தம்மா…’ என மனதில் நினைத்தாலும் வெளியில் அதை காட்டிக் கொள்ளாமல்
“இப்ப எல்லாம் ஸ்கூலயே இதை பத்தி சொல்லி தராங்க மா…” என்றாள் செண்பகம்…
அவளின் கூற்றை ஆமோதிப்பது போல் தலையாட்டியவர் “ஆயிரம் தான் ஸ்கூல்ல சொல்லிக் கொடுத்தாலும் அந்த நேரத்துல அம்மா தேவைப்படும் மா, உனக்கு தெரியாதது ஒன்னுமில்லையே” எனக் கேட்க ஆமென்பதை போல் தலையாட்டுவது தவிர வேறு வழி இருக்கவில்லை செண்பகத்திற்கு.
நொடி நேர அமைதிக்கு பிறகு
“அபியும், அனிதாவும் தான் அப்பா இல்லாம வளர்ந்தாங்கன்னா அவங்க பெத்த புள்ளைங்களும் அப்படியே வளர போறாங்கன்னு நினைக்க நினைக்க மனசே ஆர மாட்டேங்குது” என்றவருக்கு அவரையும் மீறி அழுகை வந்துவிட, சட்டென அவரின் கையைப் பற்றினாள் ஆனந்தி.
“இங்க பாருங்க மேம், இத்தனை நாள் எப்படியோ, இனிமே நான் அவங்களை விட மாட்டேன். கடைசி வரைக்கும் அவங்களோட நான் இருப்பேன்… நீங்க ஃபீல் பண்ணாதீங்க” என்ற ஆனந்தியின் பதிலில் அதிர்ச்சியானது செண்பகம், சீதா மட்டுமல்ல வெளியில் நின்ற அபியும் தான். நிமிடம் அவள் கூறிய சொற்கள் புரிய வர அபியின் முகம் கோபத்தில் இறுகியது.
“நீங்க பேசிட்டு இருங்க தண்ணி எடுத்துட்டு வரேன்” என்றவள் சட்டென அங்கிருந்து வெளியில் வந்தாள்.
வேகமாக வெளியில் வந்தவள் கார்டரில் நின்றிருந்த அபியை கண்டாள். அபியின் இறுகிய முகமே அவன் அனைத்தையும் கேட்டு விட்டேன் என்பதை சொல்லாமல் சொல்லியது ‘நீ என்னவோ நினைத்து கொள்…’ என நினைத்தபடி அவனை கடந்து சென்றாள்.
தன்னை தாண்டி செல்லும் காரியதரிசியை முகம் இறுக பார்த்தான். மனமோ ‘இந்நிலை மேலும் தொடர்ந்தால்’ என்ற கேள்வியை எழுப்ப, ‘இனி தொடர விட்டால் தானே…’ மனதின் கேள்விக்கு பதில் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
+1

