Loading

அத்தியாயம் 14

தரையில் மடங்கி அமர்ந்தவன் நிலத்தை குத்திக் கொண்டே 

“ஏன் ஏன், ஏன் டி உன் வலியை என்கிட்ட சொல்லாம மறச்ச… இவ்வளவு வலியை தாங்கிட்டு எப்படியிருந்த? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே, கூடயே இருந்தும் உன்னோட வலியை கூட புரிஞ்சுக்காத முட்டாளா இருந்திருக்கேனே…” காற்றாய் கலந்தவளிடம் கதறினான்.

இவன் கதறல் காற்றில் கலந்துவிட்டவளுக்கும் கேட்டதோ என்னவோ தென்றலாய் வந்து தன்னவனின் கேசத்தை மென்மையாய் வருடி விட்டாள். அவன் கேசத்தைத் தழுவி சென்ற காற்று அம்முவின் டைரியையும் வருடி விட்டது.

காற்றின் வேகத்தில் டைரியின் பக்கங்கள் ஒன்றோடு ஒன்று மோதி அந்த நிசப்த அறையில் சத்தத்தைக் கொடுத்தது. காகிதங்களின் சத்தம் கேட்டதும் தரையில் கிடந்த டைரியை பார்த்தான். 

கண்களில் நீர் நில்லாமல் வழிய தோள்பட்டையில் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டவன் காற்றினால் திருப்பப் பட்டப் பக்கத்தைப் பார்த்தான். அது கவிதைகளாக இல்லாமல் பேச்சு வழக்கில் இருந்தது. 

காதலிக்கும் நாட்களில் சாரதாவிடம மாட்டிக் கொள்ளாமல் இருக்க கவிதை வரிகளை மட்டும் எழுதியவள் அபியை மணந்த பின்பு சந்தோசத்தையும், அழுகையும் கவிதை வரிகளாகவும் மற்ற உணர்வுகளை சாதரணமாக பேச்சு வழக்கிலும் எழுதியிருந்தாள். 

சிறு புருவ முடுச்சுடன் அவ்வரிகளை படிக்க ஆரம்பித்தான் “எனக்கு நாலு குழந்தை இல்ல ஐஞ்சு குழந்தைப் பெத்துகணுன்னு ஆசை மாமா… நீயும்,நானும் வீட்டுக்கு ஒரே புள்ளைங்க துணைக்கு ஆள் இல்லாம இருந்தோம். நம்ம பசங்க அப்படி தனியா இருக்கக் கூடாது நாலாஞ்சு இல்லைனாலும் ஒரு மூணு குழந்தையாவது வேணும். இப்ப எனக்கு ஆபரேசன் வேண்டான்னு உன்கிட்ட கேட்க மனசு ஏங்குது. ஆனா நீ அடுத்த குழந்தை வேண்டான்னு இருக்கும் போது என்னால அதை மறுக்க முடியல…” என்ற வார்த்தைகள் இவனின் இதயத்தை கிழித்து ரணமாக்கியிருந்தது. 

தன் விருப்பதிற்காக மட்டும் தான் இதனை செய்ய ஒப்புக் கொண்டாளா?என நினைத்தவனுக்கு நெஞ்சம் விம்மித் துடித்தது. அவளின் விருப்பத்தை அவனிடம் கூறியிருந்தால் நிச்சியம் அதற்கு மறுத்திருக்க மாட்டான். 

‘ ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லணுன்னு தோணலையா அம்மு…’ மானசீகமாக மனைவிடம் கேட்டவன் ஆழ மூச்செடுத்து மீண்டும் படிக்க ஆரம்பித்தான். 

“ஆனாலும் நீ சொல்றதுலையும் உண்மை இருக்கு தானே… நீ வேலைக்கு போகலன்னா அடுத்த மாசம் சாப்பாட்டுக்கு வழியில்ல நமக்கு. ரெண்டு பசங்க ஸ்கூல் செலவே ரொம்ப அதிகம்.இன்னும் ஒன்னு வந்தா கண்டிப்பா சமாளிக்க முடியாது அதான் நானும் ஆபரேஷனுக்கு சரின்னு ஒத்துக்கிட்டேன்”

“நாளைக்கு ஆபரேசனுக்கு அம்மா துரை ஆஸ்பத்திரிக்கு போன்னு சொல்றாங்க. அங்க போனா ஊறபட்ட செலவாகும். அந்த காசை மிச்சம் பண்ணா அடுத்த மாசம் வீட்டு வாடகைக்கு,வீட்டு மளிகை செலவுக்கு ஆகும். அதை மனசுல வைச்சுட்டு தான் கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு போகலான்னு உன்கிட்ட சொன்னேன்…” என்ற வரிகளைப் படித்ததும் சொல்லாமல் கொள்ளாமல் அன்று சாரதா பேசியது நினைவிலடியது… 

‘ஆஸ்பத்திரி செலவுக்கு கூட காசு இல்லாதவனுக்கு எதுக்கு கல்யாணம்? பொண்டாட்டி, புள்ளைங்களை நல்லபடியா பாத்துக்கக் கூட துப்பில்லாத உனக்கு எதுக்கு கல்யாணம்…’ என்ற வார்த்தைகள் இப்போது விடாமல் கேட்க, கண்களை அழுத்தமாக மூடிக் கொண்டான். உண்மையில் கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு செல்லலாம் என அடம் பிடித்தது அம்மு தான்.

“உங்கம்மா சொல்றது போல துரை ஆஸ்பத்திரிக்கு போவோமா அம்மு…” என்றவனிடம்

“அங்கெல்லாம் வேண்டாம் மாமா.. 

இப்ப கவர்மெண்ட் ஆஸ்பத்திரிலயே நல்ல ஸ்பெசிலிட்டி வந்துருக்கு. பிரைவேட் ஹாஸ்பிடல் விட இங்க நல்லா தான் இருக்கு. சோ அங்கேயே போயிட்டு வந்துடலாம்…” என்றதோடு முடித்து கொண்டாள் அனிதா… 

ஆக என்னிடம் பணமில்லாமல் தான் கவர்மெண்ட் ஹாஸ்பிடல் போலாம் என அடம் பிடித்திருக்கிறாள் என நினைத்தவனின் உள்ளம் சொல்லென வலியைக் கொடுத்தது. ஹாஸ்பிடல் செலவுக்கு கூடவா பணம் இல்லாமல் இருப்பேன். என் மேல் அவளின் நம்பிக்கை இவ்வளவு தானா?” என்ற கேள்வி தானாகவே எழுந்தது… 

அந்த கேள்வியே அவனுள் ஒருவித வலியை கொடுத்தது. இவனிடம் பணத்தை பற்றியோ இல்லை குழந்தை பற்றியோ பேசியிருந்தால் நிச்சியம் யோசித்திருப்பான். அக்கணம் மனைவியின் வரிகளும், மாமியாரின் வார்த்தைகளும் மாறி மாறி நினைவில் வர ஏதோ நிரூபிக்கும் வேகம் அவனிடம்.

அந்த வேகத்துடன் கையில் வைத்திருந்த டைரியை மேலும் படிக்காமல் மூடியவன் அருகிலிருந்த டேபிளில் பட் என்ற சத்தத்தோடு வைத்துவிட்டு குளியலறையை நோக்கி நடந்தான்… 

இருபது நாட்களுக்கு மேலாக வளர்ந்திருந்த தாடியை மலித்து விட்டு தலைக்கு ஊற்றியவன் வெளியில் வந்தான். தாயும் சில உறவினர்கள் மட்டுமே ஹாலில் அமர்ந்திருந்தனர். குழந்தைகள் இன்னும் சாரதாவிடம் தான் இருந்தனர். தன்னை நிரூபிக்கும் வரை குழந்தைகள் அவரிடமே இருக்கட்டும் என நினைத்தான்.

‘ உனக்கென்ன பைத்தியமா? உன்னை அவங்க கிட்ட நிரூப்பிக்க வேணுன்னு எந்த அவசியமுமில்லை. ஒழுங்கா பசங்களை கூட்டிட்டு வர வேலையை பாரு…’ என அவனுள் இருந்த கருப்பு மனம் சற்று திமிராகவே பதில் கூறியது.

அதற்கு நேர் மாறாக ‘சரி உன்னை ப்ரூப் பண்ண என்ன செய்ய போற? என்ன செஞ்சு உன்னை ஃப்ரூப் பண்ணுவ? என்ன செய்ய இருக்கு உன்கிட்ட? உன் அத்தை சொன்னது போல உன்கிட்ட என்ன டா இருக்கு? உன்னை ஃப்ரூப் பண்ண நினைச்சு உன் பசங்களை அப்படியே விட போறயா?…’ வெள்ளை மனம் கேட்டக் கேள்விக்கு துளியும் பதில் கிடைக்கவில்லை.

இரண்டு மனங்களின் போராட்டங்களுக்கிடையே 

ஹாலை தாண்டி வெளியில் சென்றான். அனைவரின் பார்வையும் அபியின் மேல் தான் இருந்தது. இத்தனை நாட்கள் ஏதோ போல் நடமாடிக் கொண்டிருந்தவன் இன்று எப்போதும் போல் வெளியில் வரவும் அனைவரிடத்திலும் சின்ன சலசலப்பு. 

அதில், சீதாவின் அருகில் அமர்ந்திருந்தவர் “அக்கா, தம்பிக்கிட்ட சொல்லுங்க…” என முணுமுணுக்க, அந்த குரல் இவனுக்கும் கேட்டது. அதில் இரண்டு மனங்களும் இன்ஸ்டன்ட்டாக விடைப்பெற்றது. 

நிச்சியம் மறுமணத்தை பற்றி தான் பேசுவார்கள் என நினைத்தவன் வேகமாக வெளியேற “அபி கொஞ்சம் நில்லுப்பா…” என்ற சீதாவை திரும்பி பார்த்தான். 

“மாமா உன்கிட்ட பேசணும்னு சொல்றாரு இங்க வா…” என இருக்கையை கை காட்டினார் . தாயை ஆழ்ந்து பார்த்தவன் எதுவும் பேசாது அவரின் அருகே சென்றான். 

அபி அருகே வரவும் சீதாவின் அண்ணன் முறையாகப்பட்டவர் “தம்பி இது உனக்கு பெரிய இழப்பு தான் ப்பா. அதுக்காக நடந்தையே நினைச்சிட்டிருந்தா சரியாகிடுமா சொல்லு. உனக்கும் பசங்க இருக்காங்க…” அவனின் மாமா எனக் கூறப்பட்டவரின் வார்த்தையில் புருவங்கள் சுருங்கியது அபிக்கு.

அதே நேரம் தான் நினைத்ததை தான் அடுத்து பேச போகிறார் என நினைத்தவனின் முகம் கோபத்தில் இறுகியது. அவனின் அமைதியைப் பார்த்து தயக்கத்துடனே தொடர்ந்தார் வந்தவர்.

“உனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க ப்பா. இனி புத்தியா பொழைக்க பாரு. உன் வாழ்க்கையோட சேர்த்து பசங்க வாழ்க்கையும் உன் கையில தான் இருக்கு.இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்ல மாட்டேன் அது உன்னோட தனிப்பட்ட விருப்பம். இதுல நானும் தலையிட மாட்டேன். ஆனால்…” என்றவர் சிறிது மெளனத்திற்கும் பிறகு

“நான் நேரா விஷயத்துக்கே வரேன் தம்பி. இந்த சமயத்துல இப்படி கேட்கறன்னு தப்பா எடுத்துக்காத. உன் கையிருப்புல இருக்கற பணத்தை நீ வேற ஏதாவதுக்கு இன்வஸ் பண்ணிடுவீயோன்னு தான் இப்பவே பேசிடலாம்னு வந்தேன்…” என்றதும் அவனின் முகம் மேலும் இறுகியது.

மருத்துவமனையின் அலட்சியத்தால் நடந்த இறப்பிற்கு அரசாங்கமும், சில அறக்கட்டளைகளும் பண உதவி செய்திருந்தது… தற்போது அதன் மூலம் கிடைத்த பணத்தை தான் கடனாக கேட்க வந்திருக்கிறார் போல என நினைத்தான். 

இத்தனை நாட்கள் தள்ளி நின்று வேடிக்கை பார்த்த உறவுகள் கூடியிருப்பது இந்த பணத்திற்காக தான் என நினைத்தவனின் மனதில் அத்தனை வெறுப்பு. 

பாவம் அப்போது அவன் எண்ணியிருக்கவில்லை அந்த உறவினரால் தான் அவனின் வாழ்க்கை பாதை மாற போகிறதென்று… 

“பெருந்துறை பக்கம் ஒரு ஸ்பீனிங் மில் ஒன்னு விலைக்கு வந்திருக்கு தம்பி. நீ வேணா அதை விலைக்கு பேசி பாக்கறயா. அந்த கம்பெனி ஓனர் என் நண்பர் தான். அவர் வெளிநாட்டுல செட்டில் ஆகறதுனால இதை வித்துட்டு போகணும்னு நினைக்கிறார். அதான் உன்கிட்ட ஒரு வார்த்தை விசாரிச்சிட்டு போகலான்னு வந்தேன் ப்பா, என்ன சொல்ற…” எனக் கேட்டதும் அவனின் விழிகள் அகலதிற்கும் விரிந்தது. அவன் நினைத்ததற்கு நேர் மாறாக அவர் கூறியது இவனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது அதே சமயம் அத்தனை பணம் தன்னிடம் இல்லையே என நினைக்கவும் செய்தான்.

“இல்லைங் மாமா பணம் அந்தளவுக்கு என்கிட்ட இல்லைங்…” என தயங்கினான்.

“இப்ப உன்கிட்ட இருக்கறதோட சேர்த்து பத்து, பதினைஞ்சு லட்சம் மேலே வரும்னு சொல்றாங்க தம்பி. அதை நான் தரேன். உனக்காக ஊருல வாங்கி போட்ட நிலத்தை வித்திட்டு மீதி பணதுக்கு நான் வேலை செய்யற வீட்டுலயே வட்டிக்கு பணத்தை வாங்கி தரேன்…” என்றார் சீதா. 

சாரதாவின் பேச்சு சீதாவின் மனதையும் காயப்படுத்திருந்தது. அதன் விளைவு மகனை எப்படியாவது முன்னுக்கு கொண்டு வர வேண்டுமென்ற வைராக்கியத்தை கொடுத்தது. ‘தாங்கி பிடிக்க நான் இருக்கிறேன் தயங்காமல் மேலேறு என்று சொல்லாமல் சொன்னார் சீதா…

அதே நேரம் அபியும், பெரியவர்கள் கூறியதைத் தான் யோசித்தான். ஸ்பின்னிங் வேலைப் பற்றி அடிப்படை அறிவு கூட நமக்கு இல்லையே. வெறும் மேனேஜ்மென்ட் அறிவும், மார்க்கெட்டிங் உத்தியும் மட்டுமே இருக்கிறது. இதை மட்டுமே நம்பி இவ்வளவு பெரிய கம்பனியை வழி நடத்த முடியுமா? என்ற கேள்வி அவனுள்… 

அபியின் யோசனையை பார்த்த சீதாவின் அண்ணனோ “நல்லா ரன்னாயிட்டு இருக்கற கம்பெனி தான் அபி. இப்ப நீ வாங்கினாலும் முதலாளி மட்டும் தான் மாற்றம் மத்தப்படி எப்படி இருந்ததோ அப்படியே தான் எல்லாமே நடக்கும். லாபன்னு பெருசா இல்லை அதுக்காக ரொம்ப மோசமும் இல்லை… வரவுக்கும், செலவுக்கும் சரியா இருக்கும். அதுல லாபம் பாக்குறது உன்னோட திறமை…” என்றதும் மேலும் குழப்பம் அவனுக்கு.

லாபம் பார்க்கும் அளவிற்கு தன்னால் ஓர் கம்பெனியை ரன் செய்ய முடியுமா? என்ற கேள்வி தன்னாலேயே தோன்றியது. அதே சமயம் ‘அதெல்லாம் பாத்துக்கலாம் இன்னும் எத்தனை நாளைக்கு மாச சம்பளத்துக்கு போயிட்டிருப்ப? பேசாம அந்த காசை வைச்சு இந்த கம்பெனியை வாங்கிடு…’ என ஒரு மனம் இடைப் புகுந்தது..

ஆனால் மற்றொரு மனமோ சாரதா இதற்கு என்ன கூறுவர் என்று கேட்க அவனிடம் அதற்கு பதிலில்லை… நிச்சியம் நல்ல விதமாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்பது அவன் அறிந்தது தான். இரு மனங்களும் மாறி மாறி பேச மேலும் குழப்பத்தில் ஆழ்ந்தான்..

“என்னாச்சு தம்பி…” எனக் கேட்டவரின் குரலில் தன்னிலைக்கு வந்தவன் 

“எனக்கு இதை பத்தியெல்லாம் அந்தளவுக்கு தெரியாதுங் மாமா…” வேண்டாமென மறுக்க காரணம் தேடினான்.

“தெரியாதுன்னா தெரிஞ்சுக்க தம்பி. உனக்கு அங்க என்ன சந்தேகம்ன்னாலும் என்னை கேளு. நான் பல வருசமா ஸ்பின்னிங் மில்ல தான் மேனேஜரா இருக்கேன்…” என்றதும் தயக்கமாக அவரைப் பார்த்தான். 

“நல்ல யோசிச்சு முடிவை சொல்லு. நானும் அவங்க கிட்ட உன்னைப் பத்தி சொல்லி வைக்கிறேன்…” என்றவரிடம் சரியென தலையாட்டினான். 

‘எப்படி ப்ரூப் பண்ணுவ…’ என்ற மனதின் கேள்விக்கு விடைக் கிடைத்தாலும் அதுதான் விடையா என்ற கேள்வியும் எழுந்தது. 

‘மனைவியின் இறப்பிற்கு கிடைத்தப் பணத்தை வைத்து தொழில் தொடங்க வெட்கமாக இல்லையா…’ என அவனின் கருப்பு மனம் ஒருபுறம் காறி உமிழ்ந்தது.

‘அப்ப இப்படியே முப்பதாயிரம் சம்பளத்துக்கு போக போறயா? உன் மாமியார் சொன்னதை யோசிச்சா நீ இதை வேண்டான்னு முடிவெடுக்க மாட்ட…’என மற்றொரு மனமும் இடை புகுந்தது… 

ஒரு மனம் காறி உமிழ்ந்தது என்றால் மற்றொரு மனமோ சாரதாவின் பேச்சையும்,மனைவின் வரிகளையும் மாறி மாறி நினைவு படுத்திக் கொண்டே இருந்தது… 

அதன் விளைவு இரண்டு வாரங்களில் அபியின் உறவினர் கூறிய ஸ்பின்னிங் மில்லை விலைக்கு வாங்கியிருந்தான்… 

அவனின் ஸ்பீன்னங் மில் விசயத்தை கேள்விப்பட்டு சாரதா பேசிய பேச்சு கொஞ்ச நஞ்சமல்ல.. அவரையும் மீறி தான் அந்த தொழிலை கற்க ஆரம்பித்தான்.

முதலில் பலமாக தடுமாறினான். அதற்கு பின் அனைத்தும் ஏறு முகம் தான். முதலாளியாக நின்று தொழிலை கற்க வேண்டிய இடத்தில் முதலாளியாகவும்.தொழிலாளியாக கற்க வேண்டிய இடத்தில் தொழிலாளியாகவும் அந்த தொழிலை கற்றான். 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்