Loading

அத்தியாயம் 12

அடுத்த நாள் காலையிலயே கணவன், மனைவி இருவரும் மருத்துவமனைக்கு வந்துவிட்டனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆப்ரேசனுக்கு தேவையான அனைத்தும் துரிதமாக நடந்தது. சிறிது நேரத்தில் ஆப்ரேஷன் செய்ய அழைத்து சென்று விடுவார்கள் என்ற நிலையில் அனிதாவின் அருகில் சென்றவன்

” ஜில்லு, கொஞ்சம் வலியா இருக்குமுன்னு கேள்விப் பட்டேன். பொறுத்துக்கோ டி…” என அவளின் கேசத்தை வருடிக் கொண்டே கூறினான்.

“பாத்துக்கலாம் மாமா…” என்றாள் இதழில் மலர்ந்த சிரிப்போடு

“என்ன பண்ற நீ, இங்க எல்லாம் வர கூடாதுன்னு தெரியாத? கிளம்பு முதல்ல…” துளியும் மரியாதை இல்லாமல் பேசிய பியூனை முறைத்து பார்த்தான். 

அபியின் பார்வையிலிருந்த கோபத்தை உணர்ந்த அனிதாவோ 

“மாமா…” என்றழைத்தாள். 

மனைவியின் அழைப்பில் 

கண் மூடி தன்னை சமன் செய்துக் கொண்டவன் அவளின் கேசத்தை வருடி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.  

சில மணி துளிகளிலயே அனிதாவை ஆப்ரேஷன் தேட்டருக்குள் அழைத்து சென்றனர். இதுவரை இல்லாத பயம் அவளை சூழ்ந்து கொள்ள மனதை திடப்படுத்திக் கொண்டவள் ஆப்ரேஷனக்கு தயாரானாள். 

அரைமணி நேரத்தில் செய்ய வேண்டிய ஆப்ரேஷன் சில மணி துளிகள் அதிகமானாலும் நன்றாகவே முடிந்தது. ஒரு மணி நேரத்தில் மயக்கதிலிருந்து கண் விழித்தவளுக்கு ஆப்ரேசன் செய்யப்பட்ட இடத்தில் சுள்ளென்ற வலியை உணர “ஸ்ஸ்…” என்ற முனகலுடன் முகத்தை சுளித்தவள் தன் அருகில் அமர்ந்திருந்த சீதாவை பார்த்து புன்னகைத்து கண்களால் அபியை தேடினாள்.  

“முக்கியமான வேலைன்னு வெளிய போயிட்டான் ம்மா…” அவளின் பார்வைக்கு பதில் கூறினார். அனிதாவின் சிகிச்சைக்காக தாயை அழைத்திருந்தான் அபி, அதன்படி ஊரிலிருந்து நேராக மருத்துவமனைக்கே வந்து விட்டார் சீதா… 

மருமகளின் தேடலில் “உனக்கு ஏதாவது வேணுமா?” என அக்கறையுடனும் விசாரித்தார். வேண்டாம் என்பதை போல் தலையாட்டியவளுக்கு அடி வயிற்றில் உயிர் போகும் வலியைக் கொடுக்க அவளையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது. 

பாவையின் கண்ணீரை கண்டதும்

“என்னாச்சும்மா…” எனப் பதட்டத்துடன் கேட்டார் சீதா.

“வலிக்குது த்தை…” வலியை பொறுத்துக்கொண்டு பேசுவது நன்றாகவே தெரிந்தது அவருக்கு. 

‘அந்தளவுக்கு இது வலிகாதே’என நினைத்துக் கொண்டே அறைக்கு வெளியிலிருந்த செவிலியரை அழைத்து தன் மருமகளின் வலியை பற்றி கூறினார்.

“ஏதாவது கேஸ் பிராப்ளமா இருக்கும். நாளைக்கு சரியா போயிடும்…” என அலட்சியமாக பதில் கூறிவிட்டு நகர்ந்தார் செவிலியர். 

“கொஞ்சம் பொறுத்துக்கோ மா, ஏதோ கேஸ் புடிச்சு இருக்குன்னு சொல்றாங்க. கொஞ்சம் நேரம் சரியாகிடும் இல்லைன்னா டாக்டரை வர சொல்றேன்…” அவளின் தலையை வருடிக் கொண்டே கூறினார்.

“ம்ம்…” என்றவள் பதில் பேசாது கண் மூடி படுத்துக் கொண்டாள். ஒரு நாள் முழுவதும் மருத்துவமனையில் இருந்தவளுக்கு அடிக்கடி வயிற்றில் வலி ஏற்பட்டது. வயிற்று வலிக்காக மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொண்டாள்.  

மருந்தின் வீரியத்தில் அனிதாவின் வலி சிறிதே மட்டுபட்டது. ஒரு நாள் முழுவதும் மருத்துவமனையில் இருந்தாள். அடுத்த நாள் தங்களின் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். வழமை போல் நடமாட முடிவில்லை என்றாலும் குழந்தைகளுடனும் அபியுடனும் தான் தன் நேரத்தை நெட்டி தள்ளினாள். 

என்னதான் முகத்தை கலகலப்பாக வைத்து கொள்ள முயற்சித்தாலும் அவளின் வயிற்று வலி மட்டும் குறையவே இல்லை. ஆப்ரேஷன் செய்த இரண்டாவது நாள் அனிதாவின் வயிற்று பகுதி வீங்கி உயிர் போகும் வலியைக் கொடுக்க, குழந்தைகளை பெரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு மீண்டும் அதே அரசு மருத்துவமனைக்கு அனிதாவை கொண்டு சென்றான்… 

அரைமணி நேரம், ஒரு மணி நேரமென்று நேரம் நீண்டு கொண்டே போனது. ஏதோதோ அவர்களுக்குள்ளயே பேசிக் கொண்டு பரபரப்பாக தான் இருந்தார்கள் ஆனால் அதை ஒரு துளியும் அவனிடம் காட்டிக் கொள்ளவில்லை. அவளுக்கு என்னானதென அந்த நிமிடம் வரை ஒருவரும் கூறவில்லை.. 

சிறிது நேரத்திலேயே அபியிடம் வந்த செவிலி பெண் “இவங்களுக்கு ரொம்ப கேஸ் பிடிச்சுருக்கு. நீங்க பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க. அங்க இதை விட ஸ்பேசிலிட்டி இருக்கு. சீக்கிரம் சரி பண்ணிடுவாங்க. நாங்களே ஆம்புலன்ஸ் ரெடிப் பண்ணிட்டோம் அரை மணி நேரத்தில அங்க போயிடும்…” எனக் கூற அவர்களை கண்கள் இடுங்க பார்த்தவன் தன்னவளிடம் ஓடினான். அவன் உள்ளே செல்லவும், அவளை ஸ்ரேச்சரில் அழைத்து வரவும் சரியாக இருந்தது.

“அம்மு…” உயிரை உலுக்கும் குரலில் அழைத்தான். அவனின் அழைப்பில் மெல்ல கண்களை திறந்தவள் அவனை பார்த்து சிரிக்க முயற்சித்தாள்.

“கொஞ்சம் நேரம் டி, பெரிய ஆஸ்பத்திரி போனதும் எல்லாம் சரியாகிடும்…” எனக் கூறினான். முன்பே அவளுக்கும் அவளின் நிலை தெரிந்ததோ என்னவோ பதில் பேசாது கண்களில் கண்ணீருடன் பார்த்தாள். 

“ஒன்னும் இல்லை டி, சரியாகிடும். நான் இருக்கேன் டி…” என்றவனின் கண்களில் கண்ணீர் கோடுகள். அவனை அழ வேண்டாம் என்பதை போல் தலையாட்டினாள் “இல்லை நான் அழல…” என்றவன் அவசரமாக கண்களைத் துடைத்தான். அவனை ஏக்கப் பார்வை பார்த்தவளின் கண்கள் மயக்கத்தில் தன்னாலேயே மூடிக் கொண்டது.

அரை மணி நேரத்தில் பெரிய ஆஸ்பத்திரிக்கு அனிதாவை அழைத்து வந்திருந்தனர். சில நிமிடங்களிலேயே அனிதா ஐ.சி.யூவிற்கு மாற்றப்பட்டாள். அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவளின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்க்க அதில் எதுவும் இல்லாமல் போக மீண்டும் அபியை நாடினர் மருத்துவர்

“மிஸ்டர் அபிநயன் அவங்களுக்கு ஸ்கேன் எடுத்து பாத்தோம். அண்ட் அவங்க ரிபோர்ட் அண்ட் டீடைல்ஸ் பாத்தோம்.ஸ்கேன் ரி்போர்ட்லயும் அவங்க கொடுத்த ரிப்போர்ட்லயும் எதுவும் தெரியல.சோ மறுபடியும் ஆப்ரேஷன் செஞ்சு தான் என்ன பிராப்ளமுன்னு பாக்கணும்…” என திட்டவட்டமாக கூறிவிட

“ஒகே டாக்டர் பாருங்க…” என்று விட்டான்.

சிறிது நேரத்திலயே மீண்டும் ஆப்ரேஷன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. வெளியில் அமர்ந்திருந்தவனின் துடிப்புகள் அனைத்தும் தவிப்புகளாக மாறி கொண்டிருந்த சமயம் அங்கிருந்த நர்ஸ் முதற்கொண்டு மற்ற சில மருத்துவர்களும் அனிதா இருந்த அறையை நோக்கி ஓடினர்.

கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் உணர்ந்தான் அபி. ‘அவளுக்கு என்னாச்சு..’ எனக் கத்த தோன்றியது அவனுக்கு. இருந்தும் மனதைத் திடப்படுத்தி கொண்டுக் காத்திருந்தான். 

முன்பு பேசிய அதே மருத்துவர் மீண்டும் அவனின் அருகில் வர 

“என்னாச்சு சார்…” பதட்டமாகவே கேட்டான். 

“அந்த ஹாஸ்பிடல்ல பண்ண சின்ன அலட்சியத்தால இப்ப உங்க மனைவி உயிருக்கே ஆபத்தை கொண்டு வந்திருக்கு சார். அங்க ஆப்ரேஷன் சரியா பண்ணல…” என சொல்ல, கண்களைத் துடித்துக் கொண்டு 

“நீங்க சொல்றது எனக்கு புரில…” என கேட்டான். 

“அது எப்படி சொல்றது. ஆப்ரேஷன் பண்ண வேண்டிய பெளோப்பியன் டுப்பை கட் பண்ணாம, மலக்குடலை கட் பண்ணிட்டாங்க சோ மலகழிவு எல்லாம் பாடி முழுக்க ஸ்பிரீட் ஆயிருச்சு. அண்ட் செஸ்ட்ல அடச்சு…” அதற்கு மேல் அவரை பேச வேண்டாம் என்பது போல் தலையசைத்தவனின் கைகள் நடுங்க தொடங்கியது. துக்கம் தொண்டையை அடைக்க முகத்தை அழுத்தி தேய்த்து கொண்டான். 

“சார் நீங்க இதுல சைன் பண்ணுங்க” என மருத்துவர் சொல்லவும், அவரைக் கண்களில் கண்ணீருடன் ஏன் என்பதைப் போல் பார்த்தான்

“சார் மலகழிவெல்லாம் பிளட்டுலயும் ஸ்பிர்ட் ஆயிருக்கு.சோ பிளட் சேஞ்ச் பண்ண வேணும்…” என கூற, வார்த்தை துளியும் வரவில்லை அவனுக்கு. 

 நெஞ்சைத் தடவி கொண்டவன் ‘இல்லை வந்துருவா, நல்லா வருவா…’ என நினைத்து கொண்டவன் அவர் நீட்டிய ரீப்போட்டில் கையெழுத்திட்டான்.

 அடுத்து வந்த நிமிடங்கள் அனைத்தும் தவிப்புகளாக மட்டுமே சென்றது. அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவர்களும் சரி, செவிலியர்களும் சரி முன்பை விட அதீத பதட்டத்துடன் அறையிலிருந்து வெளி வருவதும் உள் செல்வதுமென இருந்தனர், இவனின் இதயம் படபடவென துடிக்க ஆரம்பிக்க, கால்கள் இரண்டும் தன்னாலேயே தன்னவள் இருக்கும் அறையை நோக்கி நடந்தது. 

அவளின் மார்பில் டிஃபிபிரிலேட்டரை வைத்து அழுத்தம் கொடுத்தபடி இருந்தனர் மருத்துவர்கள். அவர்கள் கொடுத்த அழுத்தத்தால் நிமிடமெனும் மேலே சென்று கீழே விழுந்தது அவளின் பட்டு தேகம். இதற்கிடையில் உள்ளிருக்கும் மருத்துவர்களின் பேச்சும், செவிலியரின் பேச்சும் இவனின் செவிகளில் கேட்க தான் செய்தது. அது கருத்தில் பதிந்தாலும் கவனத்தில் பதியவில்லை மனம் முழுவதும் தன்னவள் மட்டுமே இருக்க ஆப்ரேஷன் அறைக்குள் நுழைந்தான்.

“சார் நீங்க இங்க வர கூடாது,..” என்ற செவிலி பெண் தடுக்க, மருத்துவரின் பார்வையில் செவிலி பெண் ஒதுங்கி கொண்டாள். 

“அம்மு,…” உயிர் உறைய வைக்கும் குரலில் அழைத்தான். தன்னவனின் மூச்சு காற்றும், அவனின் குரலும் அவளின் உணர்வைத் தொட்ட அடுத்த நிமிடம் அவனுக்கான அவளின் உயிர் அவளின் உடலை விட்டு பிரிந்தது. அவளையே இமைக்காது பார்த்து கொண்டிருந்தவனிடம் திரும்பி

“சாரி சார், ஷீ இஸ் நோ மோர்..” எனக் கூற. “ இல்லை சார் அவ என்னைவிட்டு போக மாட்டா…” என்றவன் தன்னவளின் அருகில் சென்றான். அவளின் தாடையில் இருந்த தன் பற்களின் தடத்தைப் பார்த்ததும் 

‘ப்ச்,எப்ப பாரு, அங்கேயே கடிச்சு வை.. உன்னோட பல்லு பட்ட இடத்தை கதவுல இடிச்சுட்டேன்னு சொல்லி சொல்லி சமாளிச்சுட்டு வரேன்…” எனச் சிணுங்களுடன் அவன் மார்பில் தஞ்சம் கொண்டவளை மேலும் இறுக்கிக் கொண்டவன் “அதுக்கு நான் என்னடி செய்யட்டும்.உன்ன பாத்தாலே அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான் மாமனுக்கு. அதை விடு இதையெல்லாமா கேக்கறாங்க…” என சந்தேகமாக வினவியவன் நெஞ்சில் வேகமாக அடித்தாள்… அவள் அன்று கூறியது இப்போதும் நினைவிலாட கண்களில் கண்ணீருடன் அவளையே பார்த்தான். 

அவளையே சில நிமிடங்கள் பார்த்து கொண்டிருந்தவனின் மனம் தற்போது மருத்துவரும் செவிலியரும் பேசியது நினைவு வந்தது..

“இதோட அந்த ஹாஸ்பிடல்ல இருந்து வர நாலாவது கேஸா டாக்டர்…” என ஒருவர் கேட்க

“எஸ்,என்ன பண்ண முடியும், ரொம்ப கவனமா பண்ண வேண்டிய ஆப்ரேஷன் இப்படி பண்ணிட்டாங்க…”என்றார் அவர்

“ஏன் டாக்டர் அந்த ஹாஸ்பிடல் மேல கம்பிளைன்ட் கொடுக்கலாமா இல்லை எப்படி கேஸ் போகும்…”

“மெடிக்கல் கவுன்சில்ல (Inquiry) எங்க்யூரி வைப்பாங்க, யார் இருந்தாங்க அவங்க சொல்றதை பொறுத்து சஸ்பென்ஷன் இல்லன்னா பட்டத்தை வாங்கிட்டு விடறது.இப்படி பண்ணுவாங்க அதுவும் காசு இருக்கறவங்க இதை பண்ணலாம் ஆக்சன் எடுக்கலாம். ஆனா ஏழைங்கனால என்ன பண்ண முடியும்…” என அவர் கேட்டது இப்போதும் காதில் ஒலிப்பது போல் இருந்தது அபிக்கு.. 

ஏழையால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு பதில் தன்னையே கேட்டுக் கொண்டவன் சட்டென அவளை கைகளில் ஏந்தி கொண்டான்.

“ஐயோ சார் என்ன பண்றீங்க? இது தப்பு, பார்மாலிட்டிஸ் முடிக்காம அவங்களை நீங்க எடுத்துட்டு போறது தப்பு…” என மருத்துவர்கள் தடுத்தும் அனிதாவை கையில் ஏந்தியப்படி வெளி வந்தான்.

 தன்னவள் பேசியது, சிரித்தது, தன்னை ரசித்தது என அனைத்தும் ஒன்று விடாமல் நிழற் படம் போல் மாறி மாறி வர, கண்களில் கண்ணீருடன் நடந்தவன் மருத்துவமனை வாளகத்திலயே மடங்கி அமர்ந்து தன்னவளை தன் மடியில் தாங்கிக் கொண்டான். 

பெரிய மருத்துவமனைக்கு மருமகளை மாற்றி விட்டனர் என்று அறிந்த சீதா உடனே கிளம்பி வந்து விட்டார். மருத்துவ வளாகத்தை அடைந்ததும் அங்கே தன் மகன் தன் மருமகளுடன் அமர்ந்திருப்பதை பார்த்ததும் அவசரமாக அவனிடம் ஓடினார்

“தம்பி என்னாச்சு…” என கேட்டதும் தான் இதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் பீறிட்டு வெளியில் வந்தது..l

“ம்மா, என் அம்மு என்னைவிட்டு போயிட்டான்னு சொல்றாங்க ம்மா.

அவளை எழ சொல்லுங்க ம்மா.அவ இல்லாம நான் எப்படி இருப்பேன் அவளை எழப்பி விடு மா.” ஓர் குழந்தை போல் கேட்டவன் அவன் மடியிலிருந்த அனிதாவிடம்

“அம்மு விளையாடாத டி, எழுந்துடு டி, ஒரு நாள் கூட நீயில்லாம இருந்ததே இல்லை, எழு டி எழுந்து மாமா நல்லா இருக்கேன்னு சொல்லு. ஐயோ பசங்க கேட்டா என்னடி பதில் சொல்லுவேன். அம்மா எப்ப வரும்னு கேட்டா என்ன பதில் சொல்லுவேன். உன்னை நானே கொன்னுட்டேன் ..” என வாய்விட்டு கதற, அவனின் கதறலில் கூட்டம் கூடியது.

கூட்டம் கூடிய சில நிமிடங்களில் தொலைக்காட்சி மற்றும் யூ டுப் என அனைவரும் கூடிவிட்டனர்… அவன் மனதில் இருந்த கவலை, ஆற்றாமை, தன் ஏழ்மை நிலையால் இங்கு வந்தது அதனால் அவளுக்கு உண்டான அநிதி என அனைத்தும் நிழற்படம் போல் கண்களுக்குள் விரிய, கண்களை அழுத்தி துடைத்துக் கொண்டே அவர்களை பார்த்தான். 

“சார்,என்னாச்சு உங்க மனைவிக்கு…” என்ற ஒரு கேள்வி தான் பல விதமாக ஒவ்வொருவரும் கேட்க, முகத்தை அழுத்தி தேய்த்து கொண்டு பத்திரிகை செய்தியாளர்களிடம் தங்களின் நிலையை கூற ஆரம்பித்தான். 

“ஃபேமிலி பிளானிங் பண்ண வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற கவர்மென்ட் ஹாஸ்பிடலுக்கு போனோம் சார். அங்க போனதும் அத்தனை அலட்சியம். அதையும் மீறி ஆப்ரேஷன் பண்ணிட்டு வந்தோம். ஆப்ரேஷன் பண்ணதுல இருந்தே வயிறு வலிக்குதுன்னு தான் சொல்லிட்டு இருந்தா. இரண்டு நாள் போனா சரியாகிடும் சொல்லி மருந்து கொடுத்து வீட்டுக்கு அனுப்பிட்டாங்க”

“மருந்து வீரியம் போகற வரைக்கும் நல்லாயிருந்தா, அப்புறம் வயிறு வலிக்குதுன்னு படுத்துட்டா, காலையில ரொம்ப வலிக்குதுன்னு சொல்லவும் அதே ஹாஸ்பிடலுக்கு மறுபடியும் போனோம். அங்க போயி ரெண்டு மணி நேரமா எதுவும் சொல்லவேயில்லை…அப்பறம் சாவுகாசமா வந்து பெரிய ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லிட்டாங்க”

“இங்க வந்த அரைமணி நேரத்திலயே ஆப்ரேஷன் பண்ணும் போது ஏதோ டுயுப்பை கட் பண்ணாம மலகுடலை கட் பண்ணிட்டாங்கன்னு டாக்டர்ஸ் சொன்னாங்க, அது உடம்பு முழுக்க ஸ்பிரீட்…” என ஒரு மூச்சு அழுது தீர்த்தவன் மீண்டும்

“பிரைவெட் ஹாஸ்பிடல் போனா ரொம்ப அமௌண்ட் ஆகும்னு தான் சார் இங்க வரோம். ஆனா இங்கேயும் இப்பிடி அலட்சியமா ட்ரீட்மெண்ட் பண்ணா நாங்க எங்க தான் சார் போவோம்? எங்களை போல நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவங்களுக்கு என்ன சார் வழி? எனக்கு ஒரு நியாயம் கிடைக்கற வரைக்கும் நான் இங்க இருந்து நகர மாட்டேன் சார்…” இத்தனை நேரம் அழுது கரைந்தவனா என்பதை போல் நிமிர்ந்து நின்று கூறினான். 

கலங்கிய கண்களோடு, துக்கம் நிறைந்த முகத்தோடு, நிமிர்ந்து நின்று கேள்விக் கேட்ட அபியின் காணொளி சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது 

அந்த நாள் முழுவதுமே அபியின் செய்தி தான் தலைப்பு செய்தியாக இருந்தது. 

அபியின் வீடியோ காட்டு தீயாக பரவ,உடனே அந்த அரசு மருத்துவர் மீதும் ஆப்ரேஷனின் போது உடனிருந்த அனைவரின் மீதும் நடைவடிக்கை எடுக்கப்பட்டது… மேலும் சில இடங்களிலிருந்தும், அரசிடமிருந்தும் பண உதவியும் கிடைத்தது…

அம்மு இறந்த அந்த நாள் மட்டுமே பேசப்பட்ட அபி என்பவன் அடுத்த நாள் மக்கள் மனதில் மட்டுமல்ல செய்தியாளர்கள்,பத்திரிக்கையாளர்கள், பல யூடூப் சேனல்கள் என அனைவரின் மனதிலிருந்தும் மறைந்து போனான்.

இது அபிக்கு மட்டுமல்ல நிஜத்திலும் அனைவருக்கும் பொருந்தும்… மக்களிடையே தீயாக பரவும் ஒரு செய்திக்கு ஆயுள் காலம் ஒரு பொழுதிற்கும் மட்டும் என்பது நிதர்சனமான உண்மை… 

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்