Loading

அத்தியாயம் 10 

தேர் திருவிழாவிற்கு சீதாவையும் அபியையும் முறையாக அழைத்து விட்டு அடுத்த நாளே தங்களது சொந்த ஊரான அத்தாணிக்கு கிளம்பியிருந்தாள் ஆனந்தி.

தினமும் காலையிலும் மாலையிலும் குழந்தைகளுடன் அலைபேசியில் பேசினாலும் அவர்கள் அருகில் இல்லையென்ற ஏக்கமிருந்தது. அந்த ஏக்கம் முழுவதும் அவளை ஆக்கிரமிக்க விடாமல் வீட்டு வேலைகள் அவளை சூழ்ந்து கொண்டது. 

இதோ அப்படி இப்படியென நேரம் போக, இன்று திருவிழாவும் வந்துவிட்டது… குழந்தைகள் வருவார்கள் என்ற நினைப்பே அவளுக்கு ஆனந்தத்தை கொடுக்க, அவர்களுக்காக காத்திருந்தாள்.

அவளை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் அன்று மதியமே குழந்தைகளுடன் அபியும்,சீதாவும் வந்திறங்கினர். சீதா மட்டுமே வருவார் என நினைத்தவளுக்கு அபியும் வந்தது ஆச்சரியத்தை கொடுத்தது… விழிகள் விரிய வாசலில் நின்றுருந்தவனை பார்த்தாள்.

ஆறடி உயரத்தில், ஆண்களுக்கு உரிய கம்பீரத்தில்,மெல்லிய புன்னகையோடு நின்றிருந்தவனை ஆவென பார்த்தவர்களில் ஆனந்தியும் ஒருவள்… 

“வாங்க சார் வாங்க வாங்க” என்ற ராமின் குரலில் தன்னிலைக்கு வந்தவள் “ச்ச… என்ன டேஸ்ட் டி உனக்கு…” என தலையிலடித்து கொண்டே குழந்தைகளை பார்த்தாள்.   

அவர்களும் இவளின் பார்வைக்கு காத்திருந்தது போல இவளை நோக்கி ஓடி வர, சட்டென மண்டியிட்டு இருவரையும் வாரி அணைத்துக் கொண்டாள்… 

இருவரின் கன்னங்களையும் முத்ததால் ஈரம் செய்தவள் அருகில் நின்ற சீதாவிடம் “வாங்க மேம்…” என்றாள் 

“அப்பாடி இப்பவாவது உன் கண்ணுக்கு நான் தெரிஞ்சனே…” என்றார் சிரிப்போடு.. 

“ஐயோ மேம் அப்படியெல்லாம் இல்லை மேம் சாரி…” என்றவள் அவரை அணைத்து விடுவித்தாள். 

“அழகா இருக்க ஆனந்தி மா…” என்றார் உச்சி முகர்ந்து. அதில் கன்னக்குழி விழ சிரித்தவள் “வாங்க மேம்…” என்றவள் ராமிடம் பேசிக் கொண்டிருந்த அபியை பார்த்தாள். 

அக்கணம் அவனும் அவளைத் தான் பார்த்தான் “வாங்க சார்…” என்றாள் வரவேற்பாக. அவளின் தன்னடக்கம் ஏனோ அவனுக்கு சிரிப்பை கொடுக்க,மெல்லிய புன்னகையுடன் வரேன் என்பதை போல் தலையசைத்தான். 

அவனது புன்னகையை இமைக்காமல் பார்த்தவளின் மனமோ “அவன் சிரிச்சு பார்க்காதவ மாதிரியே பார்த்து வைக்காத’ என சத்தமிட, மீண்டுமொருமுறை மானசீகமாக தலையிலடித்துக் கொண்டாள். 

அபியின் வீட்டிலிருக்கும் வரைக்கும் அவனை அவள் கண்டுக் கொண்டதே இல்லை. ஏன் இங்கு வந்த நாட்களில் கூட பெரிதாக அவனைப் பற்றி எண்ணாதவள் நேற்று ராமனிடம் பேசியதிலிருந்து தான் அவன் மீதிருந்த எண்ணத்தை சற்றே மாற்றிக் கொண்டாள். தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டதாலோ என்னவோ அவன் சிரிப்பை கூட அதிசயமாக பார்த்துக் கொண்டிருக்கிறாள். 

அண்ணனிடம் பேசியபடி நின்ற அபியை ஒரு பார்வை பார்த்துவிட்டு குழந்தைகளையும், சீதாவையும் அழைத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் ஆனந்தி. 

அவர்களது வீடு, அந்த காலத்து தொட்டி வீடு அமைப்பிலிருந்தது. வீட்டின் நடுவில் தொட்டி போன்ற அமைப்பிருக்க, தொட்டியைச் சுற்றி சமையலறை, உணவறை, முற்றம், இரண்டு சிறிய அறைகள் இருந்தது. முற்றத்திற்கு அருகில் மாடிக்கு செல்லும் வழியிருந்தது… 

“இவ்வளவு பெரிய வீட்டை விட்டுட்டு தான் அங்க வந்திருக்கீங்களா மா?” என்றவர் தொடர்ந்து “இவ்வளவு பெரிய வீட்டை வாடகைக்கு விட்டாவே மாச மாசம் காசும் வரும். வீடு சுத்தமா இருக்கிற மாதிரி இருக்குமே ஆனந்தி…” வீட்டைச் சுற்றிலும் பார்த்துக் கொண்டே கேட்டார் சீதா.  

“ஆமாம் மேம், அண்ணாக்கு வேலைக்கு போயிட்டு வர சிரமமா இருந்ததால தான் அங்கேயே வந்துட்டோம் மேம். இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு வர தான் நினைச்சோம்” 

“ஆனால் இங்க நோம்பிக்கு வந்தா தங்க இடம்ன்னு ஒன்னு வேணும்ல மேம். வீட்டை சுத்தியும் சொந்தக்காரங்க இருந்தாலும் நம்ம வீட்டுல இருக்கிற மாதிரி இருக்காது.நினைச்சது சமைக்கவும் முடியாது, சாப்பிடவும் முடியாது. அதான் யாருக்கும் வாடகைக்கு கொடுக்கல…” என்றாள் மெல்லிய புன்னகையுடன்

“நீ சொல்றதும் சரிதான் மா…” என்றவர் பேசியபடியே வீட்டை சுற்றி பார்த்தார்.  

வீடு சிறியதாக இருந்தாலும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்தது. அதை வெளிப்படையாக பாராட்ட செய்தவர் “உன்னோட ரூம் எது மா?” எனக் கேட்டார். 

“என்னோட ரூம் மேல இருக்கு மேம்” என்றவள் சீதாவை அழைத்து செல்ல, பிள்ளைகள் இருவரும் ராமனின் மகன், மகளோடு ஐக்கியமாகி விட்டனர்.

ஆனந்தியின் அறைக்குள் நுழைந்ததும் எவ்வித தயக்கமுமின்றி படுக்கையில் அமர்ந்தவர் “ரொம்ப கால் வலி மா, கொஞ்ச நேரம் காலை நீட்டி உட்கார்ந்தா என்னன்னு தோணுச்சு. அதான் ரூம் எதுன்னு கேட்டேன்” என்றவர் கால் நீட்டி அமர்ந்து கொள்ள, அவரை மெல்லிய புன்னகையோடு பார்த்தாள் ஆனந்தி.

அதே நேரம் “ஆனந்தி வந்தவங்களுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டாமா? உட்கார வைச்சே அனுப்பி விட்டுடலாமா…” என்றபடி செண்பகம் வர, அதற்கு ஆனந்தி பதில் சொல்லும் முன்பே 

“இல்லை மா, நான் தான் கொஞ்சம் நேரம் போகட்டும்னு சொன்னேன்…” என்றார் சீதா

“அங்கிருந்து இங்க வரவே உங்களுக்கு சோசோன்னு ஆயிருக்கும். கொஞ்சம் சாப்பிட்டுட்டு உட்கார்ந்தா நல்லாயிருக்கும்னு சொன்னேன்…” தயங்கியபடி கூறினாள் செண்பகம்.

“சரி தான் மா,இப்ப தானே வந்தோம் கொஞ்சம் நேரம் பேசிட்டு போகலாம். நீயும் இப்படி உட்காரு…” படுக்கையை கைக் காட்டி கூறிட

வீட்டு வேலைகளை காலையிலேயே முடித்து விட்டதாலோ? இல்லை பெரிதாக விருந்தினர்கள் வரவில்லை என்பதாலோ என்னவோ செண்பகமும் அவருடன் அமர்ந்து கொண்டாள். மூன்று பெண்கள் ஒன்றாக கூடி விட்டால் சொல்லவா வேண்டும் ஊர் கதை உலக கதையென்று ஆரம்பித்து தற்போது அபியின் கல்யாணப் பேச்சில் வந்து நின்றது… 

“நானும் அவனுக்கு இன்னொரு கல்யாணத்தை பண்றதுக்கு தான் போராடிட்டு இருக்கேன் மா. வேண்டாம்னு ஒத்தக்கால்ல நிக்குறான்…” என சலிப்பாக கூறினார். அதற்கு இருவருமே பதில் பேசவில்லை அமைதியாகவே இருந்தனர்… அதெல்லாம் கண்டு கொள்ளாமல் சீதா தொடர்ந்தார். 

“உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன மா, அவனை இன்னொரு கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க நான் பட்ட கஷ்டம் இருக்கே…” என்று அவரும், சிறுவர்கள் இருவரும் இணைந்து செய்த நாடகத்தை சோகமாக கூறினார்.

அவர் கூறிய விதமும் முக பாவனையும் இருவருக்கும் சிரிப்பை கொடுக்க செண்பகம் மெல்லியதாக சிரித்தாள் என்றால் ஆனந்தி சத்தம் போட்டு சிரித்தப்படி “அப்ப நான் வந்து தான் உங்க பிளேனை பிளாப் பண்ணிட்டேனா…” என்று கேட்டாள். 

“இல்லை இல்லை மா. அவன் அப்படி பண்ணுவான்னு எனக்கு தெரியும். சோ வேலைக்கு வர ஆளைத் தொரத்தி விடணும் தான் நாங்க பிளேன் போட்டோம்…” என்றதும்  

“ஆத்தி…” என வாயில் கை வைத்து விட்டாள் ஆனந்தி.

“என்ன பண்றது மா, அவன் இன்னொரு கல்யாணம் வேண்டவே வேண்டான்னு மறுத்துட்டான். அவன் எப்படியோ போயிட்டு போறான். ஆனால் என் பேர பசங்களுக்கு அம்மா வேணும்ல. இந்த காலத்தில பொட்ட புள்ளைக்கும் சரி,ஆம்பளை புள்ளைக்கும் சரி அம்மான்னு ஒருத்தி இருக்கணும். அவ இல்லைன்னா குழந்தைங்க வாழ்க்கை கேள்வி குறி தான்…” என்றவர் பெருமூச்சுடன் மீண்டும் தொடர்ந்தார். 

“ஆம்பளை துணையில்லாம கூட பொம்பளைங்க குழந்தைகளை வளர்த்திட முடியும். ஆனால் வீட்டு பொம்பளை துணையில்லாம ஒரு ஆம்பளையால தன்னோட பசங்களை பாத்துக்க முடியாது. அதுக்கு பெஸ்ட் எக்ஸாம்பல் எங்க அபி தான். அனு செத்து போயி மூணு வருஷமாச்சு இன்னும் அவளை நினைச்சுட்டு பசங்களை கண்டுக்கறதே இல்லை…சர்வம் அம்மு மயமுன்னு சொல்ற போல தான் இருக்கான்…” என்றதும்

“அவர் அப்படி இருக்கறதுல என்ன தப்பிருக்கு…” என இடையிட்டாள் ஆனந்தி. அவள் அப்படி கேட்டதும் வெளியே நின்றிருந்தவனின் கண்கள் சற்றே இடுங்கியது. ஆம், சீதாவை சாப்பிட அழைக்க வந்த அபி இவர்கள் பேசுவதை கேட்க நேரிட அப்படியே நின்று விட்டான். 

“என்ன தப்பிருக்கா?” எனக் கேட்டவர் விரக்தியாக சிரித்தபடி 

“என் வீட்டுக்காரர் என்னை விட்டு போயி இருபத்தஞ்சு வருஷமாயிடுச்சு. அப்ப அபிக்கு நாலு வயசு தான். அந்த சமயம் நான் என் வீட்டுக்காரரை நினைச்சுட்டு இவனை கண்டுக்காம இருந்திருந்தா இந்நேரம் அபின்னு ஒருத்தன் இருந்திருக்க மாட்டான்…” 

“அதே சமயம் செத்து போனவங்களை நினைச்சு நினைச்சு நாளை கடத்திட்டு இருக்கறது முட்டாள்தனம் தான்…” என்றார் சற்றே கோபமாக… 

அவர் கூறுவதும் ஒரு வகையில் உண்மை தானே. மீண்டு வர முடியாத இடத்திற்கு சென்றவளை நினைத்து கொண்டே வாழ்க்கையை கழிப்பது அவனுக்கு பாதிப்பில்லை என்றாலும் அவனை சார்ந்தவர்களுக்கு அது மிகப்பெரிய பாதிப்பு தானே… 

“கேட்கறேன் தப்பா எடுத்துக்காதீங்க மா, உங்க மருமவ எப்படி இறந்தாங்க…” சற்றே தயக்கமா கேட்டாள் செண்பகம்… 

“இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு மா…” என்றவர் கூற ஆரம்பிக்க, வெளியில் நின்றிருந்தவனின் நினைவுகளும் அன்றைய நாளை நோக்கி பயணித்தது.

******

அதிகாலை கதிரவனின் கதிர்களை தரணியின் மேல் விழாமல் காவல் காத்து கொண்டிருந்தது கருமேகங்கள். காலை கதிரவனின் வெளிச்சம் எத்தனை அழகோ அதை விட பேரழகு கருமேகங்களின் ஆட்சி, நால்புறமும் கருமேகங்களால் சூழ்ந்த அக்காலை பொழுதை ரசிக்கும் மனமில்லை போலும் அந்த குட்டி வாண்டுகளுக்கு. காலை விடிந்தும் ஓடியாமல் தன் தாய்,தந்தையை தேடி வந்து விட்டனர்… 

“சோழா, குந்தவி மெல்லம்மா போங்க, கீழே விழுந்திட போறீங்க…” என்ற அம்மாச்சியின் குரல் கூட மூன்று வயது பிள்ளைகள் இருவருக்கும் கேட்கவில்லை போல, அத்தனை அவசரமாக தங்களின் வீட்டை நோக்கி நடந்தனர். 

” தட் தட்…” என்ற கதவு தட்டும் சத்தம் அவ்வீட்டை முழுவதும் நிறைத்திருந்தது. கதவு தட்டும் சத்தத்தில் மெல்ல கண் விழித்தவள் 

“மாமா, கதவு தட்டற சத்தம் கேட்குது யாருன்னு பாரு…” என கண்களை முடியப்படியே கூறினாள். கணவனின் சத்தம் இல்லாது போக மெல்ல கண் விழித்து பார்த்தவள் 

“மாமா, மாமா” எனக் கத்தி அழைத்தாள். 

“இங்க தான் டி இருக்கேன். இரு வரேன்…”குளியலறையில் இருந்து சத்தம் மட்டுமே வந்தது.

“ம்ம்…” என்றவள் தன் தூக்கத்தை தொடர, மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் ஊருக்கு சென்றிருந்த அத்தை வருவார் என்பது சாத்தியமில்லை என்பதால் அசட்டையாக கண்களை மூடி உறக்கத்திற்கு செல்ல ஆரம்பித்தாள். 

இவள் அனிதா இருபத்திரண்டு வயதான அரிவை. பார்த்ததும் பிடித்துவிடும் பேரழகி. அவ்வழகியில் மயங்கி தான் அனிதாவை திருமணம் செய்து கொண்டான் அபிநயன். 

ஆரம்பத்தில் இவர்களின் திருமணத்தை முற்றிலும் எதிர்த்தனர் சீதாவும், சாரதாவும். பேரன் பேத்தியின் வருகையை அறிந்த பின்பே அவர்களுக்காக இவர்களை ஏற்றுக் கொண்டனர்.  

கதவு தட்டும் சத்தம் விடாமல் கேட்டுக் கொண்டே இருக்க, அரக்க பறக்க குளியலறையிலிருந்து வெளி வந்தவன் தன்னவளின் நிலையை கண்டு வெட்கி “அம்மு, போர்த்தி படு…” என கூறிக் கொண்டே அவசரமாக கதவை திறந்தான். 

இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டிருந்தனர் அவனின் உயிரணுவில் உருவான இரட்டையர்கள். இருவரையும் ப்ளே ஸ்கூலில் சேர்த்திருந்தனர்… நான்கு நாட்களுக்கு  பள்ளி விடுமுறை என்பதால் பக்கத்து ஊரிலிருக்கும் சாரதாவின்  வீட்டிற்கு  அனுப்பி வைத்திருந்தனர். ஒரு நான்கு நாளாவது அங்கிருந்துவிட்டு தான் வருவார்கள் என அபி நினைத்திருக்க, இரண்டே நாட்களில் குழந்தைகள் வந்தது கொஞ்சம் ஆச்சரியம் தான். 

“அது அபி, நைட்டு முழுக்க இரண்டும் தூங்கவேயில்லை, அம்மாகிட்ட போகணும்னு ஒரே அடம். நானும் அந்த இந்த சமாதானம் சொல்லி பாத்தேன். இரண்டும் கேட்கிற மாதிரி இல்லை அதான் அழைச்சுட்டு வந்துட்டேன்…” அவனின் பார்வைக்கு பதில் கூறுவது போல் கூறினர் அனிதாவின் தாய் சாரதா. அவருக்குமே காலையில் அழைத்து வந்தது சிறிது சங்கடத்தை தான் கொடுத்தது. 

“அதெல்லாம் ஒன்னுமில்லைங்க அத்தை. உள்ள வாங்க…” என்றவன் தன்னையே முறைத்தப்படி நின்ற குட்டி வாண்டுகளை நமட்டு சிரிப்புடன் அள்ளிக் கொண்டான்.

“ப்பா, அம்மா எங்க…” மழலை மொழியில் வார்த்தைகளை ஒவ்வொன்றாக கோர்த்து கேட்டான் சோழன். 

“அம்மா தூங்கிட்டிருக்காங்க…” என்றவன் “நீங்க இப்படி சோபாவில உட்காருங்க நான் போயி ஹார்லிக்ஸ் எடுத்துட்டு வரேன்…” என்றவன் சங்கடமாக தன் அத்தையை பார்த்துவிட்டு கிச்சனுக்குள் நுழைந்துக் கொண்டான். 

சோபாவில் அமர்ந்த சாரதாவோ சுற்றிலும் பார்வையை சுழல விட்டார். ஒற்றை படுக்கையறை கொண்ட சாதாரண வீடு தான் என்றாலும் அத்தனை நேர்த்தியாக இருந்தது. மகளை மெச்சிக் கொண்டே சமையலறையில் நின்ற மருமகனை பார்த்தார். 

மாதம் முப்பதாயிரம் சம்பளத்திற்கு அருகிலுள்ள பனியன் கம்பெனியில் மேனேஜராக பணி புரிந்து கொண்டிருக்கிறான். குறைந்த சம்பளமே என்றாலும் மகளிற்கு தேவையான அனைத்தையும் வாங்கி வைத்திருக்கிறான் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்குகிறான் என்பதே அவருக்கு அத்தனை பெருமையாக இருந்தது…

நடுத்தர குடும்பங்களுக்கு மாதம் முப்பதாயிரம் என்பது அதிகம் தான் மருத்துவச் செலவு என்பது வராத வரை… 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்