
இருவருமறியாது ஒருவருக்கொருவர் வீசிய பார்வை வீச்சில் இழுக்கப்பட்டு, உள்ளிருந்து உருவான சுழலில் சிக்கிக்கொண்டனர்.
பேரிடரில் மாட்டிக் கொண்ட உயிர்களை மீட்டெடுப்பது போல அச்சுழலில் மாட்டிக்கொண்ட தங்களை சிரமத்துடனே மீட்டெடுத்தனர்!
விழி ஈர்ப்பிலிருந்து பார்வையை பிரித்தெடுக்க மனமில்லாமல் பார்வையை வேறு பக்கம் செலுத்தினார்கள்.
விழிகள் வேறு புறம் சென்றாலும் மீண்டும் பார்த்துக்கொள்ள மனம் தூண்டிட, மீண்டுமொரு சுழலில் சிக்கிக்கொள்ள தான் எண்ணுமா இந்த மூளை? அதற்கு முரணான மனமோ அச்சுழலில் சிக்கிக்கொண்டால் தான் என்ன? என்று தான் கேட்டுக்கொண்டது.
வைத்தி கேட்ட ஒரே கேள்வியில் ரோசம் கொண்டு வீட்டு வேலைகளை தானே செய்ய முன் வந்து விட்டாள் சம்ருதி. அதில் முதல் வேலையாக அதிகாலையில் எழுந்து கோலம் போட வந்து விட்டாள்.
அவளது சரித்திரத்தில் இல்லாத நாளாக விடியற்காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட அமர்ந்து விட்டாள்.
முதல் புள்ளி வைப்பது போல தான் அவளும் கோலம் போடுவதில் ஆரம்ப புள்ளியில் நின்றாள். யூடியூப்பில் வளைந்து நெளிந்து கோலம் போடுவதை கண்டு இவ்வளவு தானா, என எண்ணியவளுக்கு புள்ளி வைக்க மட்டுமே வந்தது.
முதலில் கோலப்பொடியை பிடிப்பதே அவளுக்கு சிரமாகிப் போனது.
கோபத்தில் உண்டான ரோசத்ததால் நிதானம் இழந்து கைகளையும் கால்களையும் சுட்டுக்கொண்டது தான் மிச்சம். அதே போல தான் முன்னறிவு, அனுபவம் இல்லாது தனியாளாக கோலம் போட அமர்ந்து விட்டாள்.
‘அது வருவேனா’ என்று போக்கு காட்டி கொண்டிருந்தது.
ஏட்டு போல சாலையை நினைத்துக்கொண்டு அழித்து அழித்து அந்த இடத்தை கோலப்பொடியால் அலங்கோலமாக்கி வைத்திருந்தாள்.
வழக்கம் போல கோலம் போட வந்த மாறனுக்கு பேரதிர்ச்சி!
‘நான் காண்பது கனவா?’ என்கிற ரீதியில் கண்களை கசக்கி பார்த்தான்.
கனவு இல்லை நிஜம் தான் என்றது அவனது மூளை. சிரிப்புடன் அவளை நோக்கி வந்தான்.
அவள் அவ்விடத்தை அலங்கோலப்படுத்தியிருக்க முகத்தை சுளித்து விட்டு தலையில் அடித்துக்கொண்டான்.
“மேடம்! கோலம் போடணும்னா முதல்ல நீங்க நோட்ல போட்டு பழகனும் அதுவும் எடுத்ததும் பெரிய கோலமெல்லாம் போடக்கூடாது. ரெண்டு புள்ளி ரெண்டு வரிசையில ஆரம்பிச்சி சின்ன சின்ன கம்பிக்கோலமா போடணும்.
நோட்ல கத்துக்கிட்டதோடு தரையில் போடவும் கத்துக்கணும், முதல்ல தடுமறினாலும் போக போக வந்திடும். ஆனா நீங்க ஸ்ட்ரைட்டா ஸ்பாட்டுக்கு வந்தா எப்படி டாக்டரே வரும்?” என நக்கலாக கேட்டவனை முறைக்க மட்டுமே அவளால் முடிந்தது.
“முதல்ல எந்திரிங்க டாக்டரே!” அவளும் எழுந்து நின்றாள்.
அவனோ மீண்டும் நீர்த்தெளித்து அதை அப்புறப்படுத்தி விட்டு, ‘உட்காருங்க’ என்றான்.
அவளும் அவனுக்கு எதிரே அமர்ந்தாள்.
“முதல்ல புள்ளி வைக்கணும்!” என வாத்தியாராகிப் போனான்.
அவளும் அவனது பேச்சிற்கேற்ப செய்தாள்.
“இங்க இருந்து இங்க கொண்டு வாங்க!” என அவள் கம்பி இழுக்க வழி சொன்னான்.
அவளும் கஷ்டப்பட்டு கம்பியை அவன் சொன்ன திசைக்கு இழுத்தாள். பாதிபாதியாக கம்பியை இழுத்துக்கொண்டு மீண்டும் அவன் சொன்னபடி வளைத்தாள்.
எதிராக இருந்தவன் பக்கவாட்டில் அமர்ந்து விரலை காட்டி இன்னொரு திசைக்கு இழுக்க அதுவும் அப்படி தான் சொதப்பாலாக வந்தது.
“முதல்ல கோலப் பொடிய இப்படி புடிங்க!” என்று கொஞ்சமாக கோலப்பொடியை எடுத்து கையில் கொடுத்தவன் அவள் மணிக்கட்டை பிடித்து; ‘அ’ போட சொல்லி தரும் அன்னை போல அவளது கைகளை பிடித்துக்கொண்டு கோலம் போட சொல்லித்தர, மிக நெருக்கத்தில் அமர்ந்து சொல்லித் தரும் அவன் சட்டென அன்னையாக தான் தெரிந்தான்.
பெண்பிள்ளைகளுக்கு வீட்டு வேலை கற்றுக்கொடுக்கும் ஆசான் அன்னை தானே!
அன்பாக சொல்லி கொடுக்காத போதிலும் அவன் அவளுக்கு பக்கத்தில் அமர்ந்து கொட்டி கொட்டி, சொல்லிக்கொடுக்கும் மீசை வைத்த அன்னையாக தான் தெரிந்தான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவன் “டாக்டரே! இதென்ன போர்டா திரும்ப திரும்ப அழிச்சிட்டு அழிச்சிட்டு சொல்லிக் கொடுக்க?” என நக்கலோடு மொழிந்தவன் நிமிர்ந்து அவள் விழிகளை பார்த்த நொடியில் அவளது பார்வை சுழலில் மாட்டிக் கொண்டான்.
இருவரும் சுழலில் சிக்கி மீள, உணர்ச்சிவசத்தில் அவளது காயப்பட்ட கையை அழுத்தியிருந்தான்.
“ஸ்ஸ்ஆ..” வலியில் முனங்கினாள்..
“ஓ… சாரி” என்றவன் பிடியை மட்டுமே தளர்த்தினான். அவள் கையை விடவில்லை. கையை திருப்பி காயங்களை ஆராய்ந்தவன், “ஏன் இப்படி?” என்றான்.
“கத்துக்கணும் நினைச்சிட்டா காயங்கள் பார்க்க கூடாது?” என மென்புன்னகையுடன் சொல்ல, அப்புன்னகை அவனை தொற்றிக் கொண்டது போல இதழ்களை விரித்தான்.
“எங்க அம்மாக்காக! நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் ருதி! அவங்க பேசினது அதிகப்படி தான். உன்னை இந்தளவு கொண்டு வந்து நிறுத்தும் நான் எதிர்பார்க்கல சாரி!” என்றான்.
“ம்ம்ம்… ” என்றாள் முக இறுக்கத்துடன்.
அவனோ அவளது இறுக்கத்தை தளர்க்க அவளிடம், “என்ன திடீர்னு இந்த மாற்றம்? வீட்டு வேலை செய்யணும் தோனிருக்கு? எப்போல இருந்து இந்த ஞானோதயம்?” என கிண்டலாக கேட்டான்.
“ம்ம்.. நேத்துல இருந்து தான். என்னோட வருங்கால மாமியாரை கரெக்ட் பண்ண வீட்டு வேலை எல்லாம் கத்துகிட்டு இருக்கேன்!”
“எங்க அம்மாவ கரெக்ட் பண்ணவா இதெல்லாம்?” என ஆச்சர்யமாக கேட்டான்.
“ஹலோ மிஸ்டர்! நான் சொன்னது என்னோட வருங்கால மாமியார! உங்க அம்மாவை இல்லை. அவங்க தான் என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாங்களே! அப்புறம் எப்படி அவங்க வருங்கால மாமியாராவங்க?”
“அவங்க தான் ரிஜெக்ட் பண்ணினாங்க நான் இல்லையே!” என்றான் கன்னத்து மேடையில் நாக்கை உயர்த்தி.
அவன் அவ்வாறு சொன்னதும் சட்டென நிமிர்ந்து அவனை பார்த்து “வாட் யூ மீன்?” என்றாள்.
“இன்னுமா புரியல டாக்டரே?” என்றான் அடக்கிய சிரிப்போடு. அவளொன்றும் மக்கு இல்லையே அவனது பதிலை புரிந்து கொண்டாள் தான்.
“இது உங்க அம்மாக்கு தெரியுமா ரைடரே?”
“ம்ம்.. சொல்லிடலாமா?” என புருவங்கள் உயர்த்தி உதட்டை கடித்து சிரிப்பை அடக்கியபடி கேட்ட தோரணையில் விழுந்து தான் போனாள்.
சட்டென தன்னை சுதாகரித்து கொண்டவள், “உங்க பேச்சே சரியில்ல..” என்றாள்.
“தப்பா ஒன்னும் பேசிடலையே !” என மாறாக இவன் சொல்ல..
“உங்க அம்மா ரிஜெக்ட் பண்ண பொண்ணு நான். வீண் பேச்சுகளும் கற்பனைகளும் வேண்டாமே!” என்று நாசூக்காக அந்த விஷயத்தை.
கத்திரிக்க நினைத்தாள்.
“மனுஷங்களோட மனசு எப்பவும் போல இருக்காது ருதி. நேத்திக்கு வேணாம் சொன்னது இன்னைக்கு பிடித்ததாக மாறலாம் இல்லையா?” என்றான்.
அவன் சுருக்கி அழைக்கும் அவளது பெயரை கேட்டு உள்ளுக்குள் அதிர்ந்தாலும் அதை பெரிதாக்கிட வேண்டாம் என்று கண்டும் காணாதது போல இருந்து கொண்டாள் அவனிடம்.
“நாளைக்கு மறுபடியும் பிடிக்காம போனா என்ன பண்றதாம்?” என்றாள் புருவங்களை உயர்த்தி.
“ஏன் நெகடிவ்வா யோசிக்கணும்? பாசிடிவ்வா யோசிக்கலாமே!” என்றவனை கூர்ந்து நோக்கியவள், “பிடிக்கல சொன்ன இடத்துல எப்படி சுய மரியாதை தொலைச்சிட்டு வாழ்றது?” என அவன் முன்னே கை கட்டி கேட்டாள்.
அவனால் பதில் சொல்ல முடியவில்லை சற்று தடுமாறினான்.
அவன் அமைதியை கண்டு தலையை இருபக்கமும் ஆட்டி விட்டு உள்ளே செல்ல இருந்தவளை நிறுத்தியது அவனது குரல்.
“பிடிக்கிலன்றது ரொம்ப பிடித்தமா மாறி நாளைக்கு சுய மரியாதையோடு தாங்கிப் பிடித்தால்? எல்லாத்தையும் மறைந்துட்டு வாழலாமே?” என்றான் அவளது கேள்விக்கு பதிலாக.
அவளும் திரும்பி, “நடக்குற காரியமாக்கும்?” எனக்கேட்டாள்.
“நடந்துட்டா!”
அவளும் இதழுக்குள் சிரிப்பை மறைத்துக் கொண்டு, “நடந்துட்டா பாக்கலாம்..” என்று உள்ளே சென்று விட்டாள்.
இவனும் அதே சிரிப்புடன் தன் வீட்டிற்கு கோலம் போட்டு விட்டு சென்றான்.
நேற்றிரவு தாமதமாக உறங்கிய வைத்தி காலையில் தாமதமாக தான் கண் விழித்தார். அதுவும் குக்கரிலிருந்து வந்த விசில் சத்தத்தால் படக்கென்று எழுந்தவர் மணியை பார்த்தார்.
அவர் எழும் நேரத்தை கடந்து ஒரு மணி நேரமாகியிருந்தது. அடித்து பிடித்து வெளியே வந்தார்.
சமையல் அறையில் சம்ருதி தான் அலைபேசியில் ஏதோ அளவளாவியப்படி சமைத்துக்கொண்டிருந்தாள்.
இரவு பணிக்கு வந்த செவிலியரை அதிகாலையிலே அவர் எழும் நேரமறிந்து அழைத்து, காலை உணவை மட்டும் எப்படி சமைக்க என்று கேட்டு ஒவ்வொன்றாக செய்து கொண்டிருந்தாள்.
கண் விழித்ததும் இந்த அதிசயத்தை பார்த்து ஆவென வாயைப்பிளந்தார் வைத்தி.
சூடுபட்ட கையை வைத்து கொண்டு மகள் கஷ்டப்படுவதை அவரால் பார்க்க முடியவில்லை வேகமாக உள்ளே நுழைந்தவர், “நான் பார்த்துக்கிறேன் பாப்பா! நீ போய் கிளம்பு!” என்று அங்கு வந்து நின்றார்.
அவரை கண்டு கொள்ளாமல் சாம்பார் வைப்பதில் மும்மரமாக இருந்தாள்.
“விசில் முடிந்து குக்கரை இறக்கி வச்சுட்டேன்.. அடுத்து என்ன பண்ணணும்?”
“ஓ காய்கறிய வேகப்போடணுமா? மிளகாய் பொடியா? எத்தனை ஸ்பூன்? ஓ கரண்டியா? வெந்ததும் பருப்ப கொட்டணுமா? சரி சரி லைன்லே இருங்க நான் செஞ்சிட்டு அடுத்தது என்ன கேக்குறேன்..” என்றவள் செவிலியர் சொன்ன காய்கறிகளை எடுத்து நறுக்கி சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி மிளகாய் பொடியை தேட, வைத்தி தான் எடுத்துக்கொடுத்தார்.
அவரை முறைத்து விட்டு வாங்கி திறந்தவளின் மூக்கில் நெடி ஏறி இரண்டு தடவை தும்மினாள். மூக்கை துடைத்து விட்டு கரண்டியில் கொஞ்சமாக அள்ளி அதில் போட்டு கலந்தாள்.
மகள் இப்படி பொறுப்பாக மாறியது அவருக்கு சந்தோசமாக இருந்தாலும் அவரை கண்டு கொள்ளாமல் அவருடன் பேசாமல் இருப்பது தான் உள்ளுக்குள் வலித்தது அவருக்கு..
“பாப்பா!” என அழைத்து பார்த்தார் அவருக்கு பதிலளிக்கவே இல்லை. அப்படி ஒரு மனிதன் அங்கே இல்லாதது போல தன் வேலையை மட்டும் பார்த்தாள்.
அவரும் வலியுடன் அங்கிருந்து செல்வதை வெறித்து பார்த்து நின்றார். சமையலறையிலிருந்து வந்தவர் தன் காலை கடன்களை முடித்து மீண்டும் வந்து பார்த்தார்.
வெந்து வேகாத இட்லி பிசுபிசுவென மாவு கையில் ஒட்டியது. வைத்தியின் மல்லிகை பூ இட்லியை கிண்டல் செய்தவளுக்கு தண்டனையாக வந்தது இந்த வேகாத இட்லி.
சாம்பார் ஏதோ பரவாயில்லை.. முதல் நாள் சமையலறைக்குள் நுழைந்து சமைத்ததுமே சமையல் வந்திடுமா என்ன?
வாய்க்குள் வைக்க முடியாத சமையல் முதல் நாளே ருசியாக சமைத்திடலாம் என்று எண்ணி வந்தவளுக்கு கோலம் போலவே சிறு ஏமாற்றம்.
அப்படியே போட்டு விட்டு வேலைக்கு செல்ல கிளம்ப சென்றாள்.
அவரும் மகளின் சமையலை வாயில் வைத்ததும் முகம் சுளித்தார். பின் அதை வைத்தே சிறிது பக்குவம் பார்த்து அவள் சாப்பிட எடுத்து வைக்க சாப்பிடாமலே வேகமாக வாசலுக்கு சென்றாள்.
“பாப்பா! என்ன இது? என் மேலே தானே கோபம் சாப்பாடு மேல ஏன் காட்டுற ? சாப்புட்டு போ பாப்பா!” என்றார் அதட்டலாக.
‘அந்த இட்லிய மனுஷன் திம்பானா?’ என எண்ணிக்கொண்டு அவருக்கு பதிலாளிக்காது வாசலுக்கு வந்துவிட்டாள்.
வைத்தியோ மனைவியின் முகத்தை பார்த்து விட்டு, ‘அப்படியே உன்னை மாதிரி பிடிவாதக்காரி!’ என முணுமுணுத்து விட்டு வாசலுக்கு வந்தார்.
வழக்கமாக வண்டியை வெளியே நிறுத்தி துடைத்து வைத்திருந்தார்.
அதில் ஏறி அமர்ந்தவள் வண்டியின் பிடியை திருக, சூடு பட்ட இடம் வலித்தது. கையை உதறியவளுக்கு தெரிந்தது இன்று தன்னால் வண்டி ஓட்ட முடியாது என்று.
“ச்ச…” வண்டியை விட்டு கீழே இறங்கினாள்.
“நான் உன்னை ட்ராப் பண்ணவா பாப்பா?” என அவசரமாக அவள் அருகே வந்து கேட்டார்.
அவரை முறைத்து விட்டு, நேரத்தை பார்த்தாள். இங்கிருந்து பேருந்து நிறுத்தம் கொஞ்சம் தூரம் நடக்க வேண்டும்.
நேரம் வேறு ஓடிக்கொண்டிருந்தது. அகரனையும் அழைக்க முடியாது கல்லூரிக்கு சென்றிருப்பான்.
‘என்ன செய்யலாம்?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே தான் வண்டியை வெளியே எடுத்தான் மாறன்.
“மாறன் தம்பி!” என வைத்தி அழைக்க , “சொல்லுங்க பாட்னர்” என்றான்.
“இல்ல! பாப்பா கையில காயம் இருக்கிறதால வண்டி ஓட்ட முடியல கொஞ்சம் ட்ராப் பண்றீங்களா தம்பி?” எனக் கேட்டிட, “ஓ.. பண்ணிடலாமே!” அவளை கண்டு இழுத்தபடி சொல்ல, அவளோ புரியாமல் அவனை பார்த்தாள்.
அப்படியே வட்டமடித்து அவள் அருகே வந்து வண்டியை நிறுத்தினான்.
‘சர்க்கஸ்காரனுக்கு நல்லா சர்க்கில் வருது!’ என நினைத்துக்கொண்டு ஏறி அமர்ந்தாள்.
அவனும், “பை பாட்னர்” என்று மீண்டும் வட்டமடித்து அப்படியே சென்றான்.
கொஞ்சம் தூரம் சென்றபின் அவனது அலைபேசிக்கு வைத்தி அழைத்திருக்க, வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு அழைப்பை எடுத்தான்.
“சொல்லுங்க பா..” என ஆரம்பிக்கும் முன்னே வைத்தியோ, “தம்பி நான் பேசறேன் காட்டிக்காதீங்க! ஒரு உதவி மட்டும் பண்ணுங்க தம்பி..” என்றார்.
“உதவியா? என்ன உதவின்னு சொல்லுங்க பண்றேன் சார்!” என்றான் கண்ணாடியூடே அவளை பார்த்தபடி.
“அவ சாப்பிடல தம்பி! ஒரு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் சாப்பிட வச்சி கூட்டிட்டு போங்க தம்பி! நான் உங்களுக்கு அமௌன்ட் போட்டு விடறேன்! அவளை சாப்பிட வச்சி கூட்டிட்டு போங்க தம்பி..” என்றார் கெஞ்சுதலாக.
அவனோ, “எதுக்கு அதெல்லாம்? நான் பாத்துக்கிறேன் சார். நான் வேலைய முடிச்சிட்டு உங்களுக்கு கால் பண்ணி சொல்றேன்!” என்று வைத்து விட்டு “போலாமா?” என்றான் திரும்பி.
“வேற என்ன பண்ணலாம் இருக்கீங்க மிஸ்டர்?” என கிண்டலாக கேட்க, அவனும் வழிந்து கொண்டே “போலாம்..” என்றான்.
வண்டியை எடுத்தவன், நேராக நிறுத்தியது என்னவோ சரவணபவனுக்கு தான்.
“இங்க எதுக்கு நிறுத்திருக்கீங்க?” என அவனிடம் வினவ,
“காலையில சாப்டல! பசிக்குது! சாப்ட்டு போலாமா?”
“நீ வேணா சாப்ட்டு வா! நான்
ஆட்டோல போய்க்கிறேன்..” என்று நகர இருந்தவளின் கையை பற்றி, “ப்ளீஸ் போகாத! தனியா சாப்ட ஒரு மாதிரி இருக்கும் கம்பெனி குடேன்..” என விழிகளால் கெஞ்ச, மறுக்க முடியாமல் அவளும் ஒத்துக்கொண்டாள்.
இடத்தை தேடி அமர்ந்தார்கள். அவர்கள் அருகே வந்த சிப்பந்தி, “என்ன வேண்டும் ?” என்று கேட்க, மாறன் வெறும் இரண்டு இட்லி ஆர்டர் செய்தவன் “உனக்கு?” என்றான்.
“எனக்கு எதுவும் வேணாம். நீ சாப்டு!” என்று மறுத்தாள்.
“பார்க்க வச்சி தின்னா எனக்குல வயிறு வலிக்கும். அதுனால நீயும் சாப்டு!”
“யார் சொன்னா நாம சாப்டும் போது மத்தவங்க பார்த்தா வயிறு வலிக்கும். இங்க எத்தனை பேர் பார்க்க நாம சாப்டுறோம்! வயிறு வலிக்குதா என்ன? சும்மா யாரோ ஏதோ சொன்னாங்கனு கூட்டத்தோடு சொல்லிக்கிறது..” என சலிப்பாக சொன்னாள்.
“ம்ம் சரி தான்.. யாரோ ஏதோ சொல்லிட்டு போகட்டும் நல்லதா இருந்தா எடுத்துக்க போறோம்.. கெட்டதா இருந்தா ஒதுக்க போறோம் அவ்வளவு தான்!”
“சார் இதுல என்ன நல்லத கண்டீங்க?”
“இந்த டயலாக் வச்சி! சாப்ட மாட்டேன்னு பிகு பண்றவங்களை சாப்ட வச்சிடலாமல! அதுக்கு தான் நல்லது சொன்னேன்!”
“ம்ம்… அது சரி அதுக்காக அவனை சாப்ட வச்சி அவன் தலையிலே சேர்த்து பில்லையும் கட்டி விட்டுடாதீங்க!” என நகைச்சுவைக்காக பேச, அதற்கு சிரித்தவன், “உனக்கு என்ன வேணும் சொல்லு..” என்றான்.
அவளும், “இட்லியை தவிர பொங்கல் வடை ஒரு தோசை ஒரு செட் பூரி, ஒரு செட் சப்பாத்தி..” என சொல்லிக்கொண்டிருந்தவளை விழிகள் தெறித்து விழுமளவிற்கு விரித்து பார்த்தான்.
“என்ன பசி இல்லைன்னு சொல்லிட்டு இவ்வளவு ஆடர் போட்டு இருக்கேன் பாக்குறீயா?” என்று கேட்டவளிடம் முதலில் இல்லை என்று தலையாட்டியவன் ஆமென்று ஆட்டினான்.
“வாங்கி தர்றேன்னு வான்டட்டா சொன்னதுக்கு அப்புறம் எதுக்கு பிகு பண்ணிட்டு இருக்கணும் சொல்லு? எனக்கும் கொலபசி! ரோசபட்டு சாப்டாம வேற வந்துட்டேன்..
வயிறு வேற சோறு சோறுனு கூப்பாடு போட்டதுக்கு அப்புறம் உனக்கு இந்த ரோசம் தேவையானு பட்டது? சரி வந்துட்டோம் கேண்டீன் தான் போகணும் நினைச்சேன். ஆனா சாமி சரவண பவனுக்கு வழி காட்டும்ன்னு நான் எதிர்பார்க்கல!” என வாயெல்லாம் பல்லாக இளித்தபடி சொன்னாள்.
“சரி தான்..” என்று அவளை மார்க்கமாக பார்த்தபடி சொன்னான். அவர்கள் கேட்டதும் வந்து விட, இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.
அவன் இரண்டு இட்லியை விழுங்க முடியாமல் தவிக்க, அவளோ அசால்ட்டாக அத்தனை உணவுகளையும் வீணாக்காமல் உள்ளே இறக்கி கொண்டிருந்தாள்.
கன்னத்தில் கை வைத்த அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவளும் பூரியை தின்றபடி, “என்ன ஹெல்த் கான்ஸ்சியஸ் இல்லாம இப்படி திங்கிறாளே பார்க்கிறீயா?” என சிரித்துக்கொண்டே கேட்டாள்.
“ச்ச ச்ச.. பட்டும் படாம பிடிச்சது கூட ஏக்கமா பார்த்து, வாய கட்டிப் போடுற வழக்கலாம் நமக்கு கிடையாது நல்லா சாப்புடணும். அதுக்கு ஏத்து மாதிரி வேலை பார்க்கணும்..”
“நீ திருப்தியா சாப்ட்டாலே போதும் எனக்கு.. நீ சாப்டுறதுக்கும் உன் உடம்புக்கும் சம்பந்தமே இல்ல! நோஞ்சானா தான் இருக்க!” என்று அவளை மேலிருந்து கீழ்வரைக்கும் பார்த்தபடி சொன்னான்.
அவளுக்கு கூச்சமாக இருந்தது. அதை வெளிக்காட்டாதபடி உண்டவள், முழு உணவையும் சாப்பிட்டு முடித்து கைகழுவ சென்ற வேளையில் வைத்தியின் புலனத்தில் அவள் என்ன சாப்ட்டாள் என்ற வரைக்கும் பேசி அனுப்பி வைத்திருந்தான், அவரும் பதிலுக்கு ‘நன்றி’ குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தார்.
அவள் வந்ததும் சரியாக பில்லும் வர அவளே எடுத்துக்கொண்டாள்.
“கொடு நான் பே பண்றேன்.”
“வேணாம் ரைடரே! நானே பே பண்றேன். நிறைய சாப்ட்டது நான் தான் அதுனால நானே கொடுக்கிறேன்..” என்றாள் பை திறந்து பணத்தை எடுத்தபடி.
“ஏன் மேடம் நிறைய சாப்பிட்டவங்க தான் கொடுக்கணும் இருக்கா ஏன்னா, அழைச்சிட்டு வந்தது நானு! நான் தான் கொடுக்கணும்” என்று பணத்தை எடுத்தான்.
“அழைச்சிட்டு வந்தாலும் அதிகம் சாப்ட்டது நான்ல.. நானே கொடுக்கிறேன்..” என்றாள் இவளும்.
“இல்ல நான் தான் கொடுப்பேன்!”
“இல்லப்பா அமௌன்ட் அதிகமா இருக்கும் நானே தர்றேனே!”
“ஏன்? என் கிட்டலாம் பணம் இருக்காதா? இவன் மெக்கானிக் தானே அவ்வளவு பணம் வச்சிருப்பானான்ற சந்தேகமா?” என முகத்தை கொஞ்சம் இறுக்கமாக வைத்துக் கொண்டு சொல்ல..
“அட! யோவ் நிறைய சாப்ட்டது நானுன்றதால தான் பணம் கட்ட வந்தேன். நீ என்ன வேற குற்றவுணர்வுல பீல் பண்ண வச்சிடுவ போல! இந்தாயா நீயே கட்டு எனக்கு என்ன?” என அவன் கையில் பில்லை வைத்து விட்டு வெளியே சென்றாள்.
அவனும் சிரித்துக்கொண்டே பணத்தை கட்டி விட்டு அவள் அருகே வந்தான்.
“போலாமா டாக்டரே!”
அவளோ அவனை திரும்பி பார்த்து, “பணம் உன் கிட்ட குறைச்சலா தான் இருக்கும் எடை போட்டு நான் தர்றேன் சொல்லல மாறன்! இன்னைக்கி ஏதோ ஒரு தேவைக்காக பணம் வச்சிருப்ப!
அதை நான் அதிகப்படியா சாப்பிட்டதால எனக்கு செலவு பண்றியோனு யோசிச்சதுனால உனக்கு கஷ்டமா நினைச்சி தான் அப்படி சொன்னேன்.
நீ மெக்கானிக் உன் கிட்ட என்ன சம்பாத்தியம் இருக்க போகுதுனெல்லாம் நான் நினைக்கல.
உன் தேவைக்கான பணம் எனக்காக வேஸ்ட்டா செலவாகிட கூடாதுனு தான் நான் கட்டுறேன் சொன்னேன். ப்ளீஸ் என்கிட்ட இப்படி பேசாத!” என பட்டென்று சொல்லி விட, அவ்வளவு தான் அதற்கே அவன் மனம் அவளுக்கு சிவப்பு கம்பளம் நீட்டி அவள் அமர சிம்மாசனத்தை காட்டியது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
9
+1
+1
