Loading

அழகான ஒரு காலைப் பொழுதில் நடைபயிற்சி மேற்கொண்ட ஆண்கள், பெண்கள் என அனைவரும் வைத்தியையும் மாறனையும் ஒருப்பார்வை பார்த்துவிட்டு கை வீசி நடக்க, அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருவரும் பேசி சிரித்தபடி கோலம் போட்டுக் கொண்டிருந்தனர்.

 

அதில் வயதான ஒருவர் மட்டும் நின்று வைத்தியிடம், “என்ன வைத்தி புது தோஸ்தா? உனக்கு ஏத்தது போலவே பிடிச்சிருக்கப்பா நீ! புது பையனா இருக்கானே, உனக்கு தெரிஞ்ச பையனா?” என மூக்கு கண்ணாடியை கீழே இறக்கி மாறனை நோட்டம் விட்டபடி கேட்டார்.

அவனோ, அவரை பார்த்துவிட்டு வைத்தியை தான் பார்த்தான்.

வைத்தி சிரித்துக் கொண்டே, “நேத்து தான் இந்த வீட்டுக்கு குடி வந்திருக்காங்க கிருஷ்ணா! தம்பி பேரு வெற்றிமாறன். தம்பியும், என் இனம் தான். அதான் உடனே தோஸ்து ஆகிட்டோம்..”

“ஏற்கனவே உன்னால வீட்ல திட்டு வாங்குறது பத்தாதுன்னு உன் கூட்டணில ஆள் சேக்குறீயா வைத்தி? இளந்தாரியா வேற இருக்கான்! வீட்டு வேலையும் பார்ப்பான் போலையே? காலையில மட்டும் திட்டிட்டு இருக்கவ இனி நைட்டும் திட்டுவாளே! நீ நடத்து வைத்தி!” என்று அவர் ஆதங்கத்தை கொட்டிவிட்டு நடந்தார்.

“என்ன பாட்னர் இப்படி பேசிட்டு போறார்?”

“நான் தானே சொன்னேனே பா! நான் வீட்டு வேலை பார்க்கிறது பார்த்து அக்கம் பக்கத்துல இருக்க வீட்டம்மாங்க எல்லாரும் அவங்க

புருஷன்மார்களை இடிக்க, அவனுங்க என்னை வந்து கடிப்பானுங்க!

இப்ப நீ எனக்கு கூட்டா சேர்ந்திருக்கிறது பார்த்து டபுள் இடில கிடைக்கும். அதான் அந்த ஆதங்கத்தை மனுஷன் கொட்டிட்டு போறான்.

இவனுங்களும் பொண்டாட்டிக்கு உதவி செய்ய மாட்டானுங்க! பாக்குற நம்மளையும் செய்ய விட மாட்டானுங்க வன்மம் பிடிச்சவனுங்க..” என்று திட்டினார்.

“அதானே! சரியா சொன்னீங்க பாட்னர்.. வீட்டு வேலை செய்றதுல, வீட்ல இருக்கிறவங்களுக்கு உதவி செய்றதுல என்ன இருக்கு? சரியான ஈகோ பிடிச்சவனுங்களா இருப்பானுங்க போல பாட்னர்.

தானும் செய்றது இல்ல அடுத்தவனையும் பேசி செய்ய விடுறதும் இல்ல. இந்த பேச்சுக்கெல்லாம்  அசரக்கூடாது பாட்னர்! நமக்கு நம்ம  கொள்கை தான் முக்கியம்.. இவனுங்கல டீல்ல விடுங்க!” என்றவனை கண்டு புன்னகை செய்தார். இருவரும் நேரம் ஆவதை கண்டு அடுத்தடுத்து வேலையை பார்க்கச் சென்றனர்.

வேலையெல்லாம் முடித்து விட்டு தனது கடைக்கு செல்ல அவன் ஆயத்தமாக, சுடச்சுட அவனுக்கு தோசை வார்த்தார் கோமதி.

‘அதையாவது நானே செய்கிறேன்’ என்று கேட்டு வாங்கி செய்கிறார். மகன் சூடாக சாப்பிடட்டுமென்று.

கிளம்பி வந்தவன் தோசையை வேகமாக பிய்த்து நாலு வாயில் உள்ளே தள்ளி விட்டு, எழுந்தவன் பூஜை அறையில் நின்று ஒருநிமிடம் கடவுளை வணங்கி, சாவியை எடுத்துக்கொண்டு வாசலில் வந்து நின்றான்.

கோமதியும் அவனோடு வாசலில் வந்து வழக்கமான, ‘பத்திரம்’ பாட்டை அவனிடம் பாடினார். அவனும் சலிக்காமல் கேட்டுக் கொண்டான்.

தள்ளு வண்டியில் காய் விற்றுக் கொண்டிருந்தார் பெரியவர். அவர்களை சுற்றி பெண்கள் காய் வாங்கிக் கொண்டிருந்தனர். அதை கண்ட கோமதி இவனிடம், “என்ன காய் இல்லைனு சொல்லு வெற்றி! வாங்கி வைக்கிறேன்..” என்றார் சமையல் மகனின் பொறுப்பு என்பதால்.

அவனும் வண்டியை வெளியே எடுத்துக் கொண்டு வீட்டிற்கு தேவையான காய்கறிகளின் பெயரை சொல்லி எப்படி பார்த்து வாங்க வேண்டுமென்று பாடம் எடுத்து விட்டுச் சென்றான். அதை கேட்ட அங்கிருந்த பெண்கள் வாய் பிளந்து கை வைத்தனர்.

கோமதியும் உள்ளே சென்று கூடையும், பணத்தையும் எடுத்து வந்து அவன் சொன்ன காய்களை எல்லாம் பார்த்து எடுத்தார்.

“வளரோட அக்கா தானே நீங்க?” என கைகள் வேலை செய்ய, வாய் அதன் பாட்டிற்கு பேச ஆரம்பித்தது.

“ஆமா மா..”

“வீட்ல எல்லா வேலையும் உங்க புள்ளை தான் பார்பாராமே!” எனக் கேட்டிட, “ஆமா மா! எனக்கு உடம்பு முடியாம போனதுல இருந்து, தம்பி தான் பார்க்கிறான்..” என்றார் தக்காளியை பார்த்தபடி.

“உங்க வீட்டுக்கு வர போற மருமக கொடுத்து வச்சவ?” என்றதும் அவர் சிரிக்க, “வரன் எதுவும் பார்க்கலியா?” என்றார் பதிலுக்கு.

“இனி தான் மா வரன் பார்க்க ஆரம்பிக்கணும். பொண்ணு இருந்தா சொல்லுங்க…”

“அதுக்கென்ன சொல்லிட்டா போச்சி! நான் பார்த்து கட்டி வச்சதெல்லாம் ரெண்டு, மூணு புள்ளை குட்டிய பெத்து சந்தோஷமா இருக்குதுங்க..” என தன் புகழ் பாடினார்.

கோமதியும் வியப்புடனே, “அப்போ என் பையனுக்கு ஒரு வரன பார்த்து சொல்லுங்க, என் பையன் ரொம்ப நல்லப்பையன் எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல. வேலை முடிஞ்சா வீடுனு இருப்பான். மெக்கானிக் கடை வச்சிருக்கான், இது போக கார் வாங்கி, விற்கனு தொழிலும் பண்றான். கை நிறைய சம்பாதிக்கிறான்..” என்று மாறனின் புகழை பாடியவர், “நல்ல பொண்ணா வீட்டு வேலை  பார்க்க தெரிஞ்ச பொண்ணா இருக்கணும்! பொறுப்பா இருக்கணும். ஒரு டிகிரி இருந்தா போதும்.. “என அவரது எதிர்பார்ப்புகளை அடுக்கி கொண்டே போனார் .

“ம்ம்… கண்டிப்பா சொல்றேன் மா.. நம்ம பக்கம் பொண்ணு இருக்கா பார்க்கிறேன்!” என இவரும் சொல்ல, இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை கேட்டபடி நின்றிருந்த சம்ருதியும் வைத்தியும் பார்த்துக் கொண்டனர்.

“ஏ திமிங்கலம்.. அதெப்படி ஒரு கெட்டபழக்கமும் இல்லாத நல்லவனா இருப்பான்? அதுவும் இந்தக் காலத்துல? நம்ப முடியலயே!” என சந்தேகமாக கேட்டாள்.

“அந்தம்மா சொன்னது போல மாறன் தம்பி ரொம்ப நல்லா பையனா தான் தெரியுறான் பாப்பா!” என்றார் அவளது வண்டியை துடைத்தபடி.

“ஓஹோ!!” என்றவள் மேற்கொண்டு பேசவில்லை என்றாலும் உள்ளுக்குள், ‘அதெப்படி ரொம்ப நல்லவனா இருக்க முடியும்? அதுவும் நேத்து அவனோட முழியும் பார்வையும் சரியில்லையே!  கண்டு பிடிக்கிறேன்..’ என்றாள் தனக்குள்.

“வண்டிய துடைச்சிட்டேன் பாப்பா” என்று எழுந்தார்.

“ஆங்.. நான் வர்றேன் வைத்தி! நேரத்துக்கு சாப்பிடு. பழைய பூத் கேங்…”என ஆரம்பித்தவள் அவரது முறைப்பில், “சரி! உன் பழைய யூத்  கேங்கோட அரட்டை அடிச்சிட்டு லஞ்ச் ஸ்கிப் பண்ணிடாத. கவனமா இரு எதுனாலும் கால் பண்ணு!” என்று மிரட்டலும் எச்சரிக்கையுமாக செய்துவிட்டு புறப்பட்டாள்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவள் செல்வதை பார்த்து நின்றவர் உள்ளே சென்றிட, அவர்கள் இருவரையும் நோட்டம் விட்ட கோமதி வண்டியை கூட துடைக்காது, பெரிய மனுஷனை வேலை பார்க்க சொல்வதை கண்டு மேலும் அவள் மீது அவருக்கு அதிருப்தி.

‘இதெல்லாம் கல்யாணம் பண்ணிட்டு என்ன பண்ண போகுதோ?’ என தலையில் அடிக்காத குறையாக புலம்பி, வீட்டிற்குள் சென்று விட்டார்.

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த மிகப்பெரிய மருத்துவமனைக்குள் நுழைந்தவள் தனது வருகையை பதிவு செய்து விட்டு தனது அறைக்கு சென்றாள் சம்ருதி.

பொதுநலம் மற்றும் இருதய மருத்துவர் என்பதால் அவளை பார்க்க நிறைய நபர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.

அவர்களில் ஒரு சிலர் மட்டுமே வந்திருக்க, பரிசோதனை செய்து தேவையான அறிவுரைகளும் மருந்து மாத்திரைகளை எழுதிக்கொடுத்தபடி இருந்தாள்.

பின் இடைவெளியில் அவள் சிகிச்சை அளித்த உள் நோயாளிகளை பார்வையிட்டவள், செவிலியரிடம் அவர்களுக்கு தேவையான மாத்திரைகளையும் மருந்தையும் கொடுக்கும்படி பணித்து விட்டு வெளியே வந்தாள்.

விபத்தில் அடிப்பட்டு காலில் இரத்தம் வழிய தாயுடன் வந்தவனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் வந்திடாத பட்சத்தில் சம்ருதி தான் அவனுக்கு சிகிச்சை அளித்தாள்.

அவனுக்கு சிகிச்சை தர, பக்கத்தில் நின்றிருந்த அவனது தாய் அழுது கொண்டிருந்தார்.

“எப்படி ஆச்சி?”

“பைக்ல இருந்து கீழ விழுந்துட்டேன்.”

“எப்படி விழுந்த?”

“சட்டுனு ராங் வே’ல ஒரு மினி வேன் வந்துடுச்சி, மோதி கீழ விழுந்துட்டேன்..” என்றான் வலியோடு.

கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த தாயோ “பொய் சொல்றான் மா! வண்டிய வேகமா ஓட்டிட்டு போய் எதிர்த்து வர்ற வண்டியில விட்டுருக்காம்மா.. எதிரே வந்த வண்டி சின்ன வண்டினால இதோட போச்சி பெரிய வண்டி எதுவும் வந்து ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சினா என்னம்மா பண்றது நானு? ஒத்தப்பிள்ளைய வச்சுட்டு என்னம்மா பண்ணுவேன்?” என்று கண்கள் கலங்கியபடி பேச, அவரது அழுகையும் தலை குனிந்து அமர்ந்திருக்கும் அவரது மகனையும் பார்த்தாள்.

அவளுக்கு விபத்தில் சிக்கிய அண்ணனின் நியாபகம் வந்தது. கண்களை மூடி திறந்து தன்னை சமன் செய்தவள்.

“என்ன வண்டி வச்சிருக்க?”

“கே.டி.எம்!”

“என்ன வயசு உனக்கு?”

“இருப்பத்தி ஒன்னு”

“ம்ம்.. படிச்சி முடிச்சிட்டீயா?”

“ம்ம்.. முடிச்சிட்டேன்..”

“இப்போ என்ன பண்ற?”

“சும்மா…” என இழுத்தவனால் அவளது அடுத்த பார்வையில் பேச்சு வரவில்லை.

“நீ யூஸ் பண்ற பைக் நம்மூருக்கு சுத்தமா செட் ஆகாத பைக். ஆனாலும், பைக் மோகத்துல உன்னை போல ஆட்களோட ஆசை தான் அந்த வண்டிய விக்கிரவனோட பேராசையா மாறுது!

அந்த வண்டி வச்சிருந்தா ஹீரோவா நீ? இப்ப வரைக்கும் நீ ஜீரோ ஸ்டேஜ்ல தான்  இருக்க!” என்று விரலை வைத்து காற்றில் வட்டம் போட்டுக் காட்டினாள்.

“உன் அம்மாவ பாரு. உன்னோட போராடி உனக்காக வாங்கிக் கொடுத்துட்டு தினம் தினம் செத்து பொழச்சிட்டுக் இருக்காங்க. அந்த கவலை உனக்கு இல்லேல? உன் படிப்புக்கு உன் தேவைக்குனு பணத்தை கொட்டினதுக்கு அவங்க அவங்களை  கவனிச்சிட்டு இருந்திருக்கலாம். பாரு அவங்களை..” என்று அவரை நோக்கி கை காட்ட, அவனும் தன் தாயை பார்த்தான்.

“நல்லா சொல்லுங்க டாக்டர். இவன் ஒவ்வொரு நாளும் பைக்ல போகும் போது திரும்பி பத்திரமா வரணும் வேண்டிக்காத கடவுளே இல்லை. இவன் வீட்டுக்கு வந்ததும் தான் மா எனக்கு உயிரே வரும். அடம் புடிச்சி பைக்க வாங்கிட்டான் மா. இப்போ அதுக்கும் சேர்த்து உழைக்கிறேன் நான்..” என்க அவனை துட்சமாக பார்த்து விட்டு கைகளுக்கு மருந்து போட்டு விட கைச்சட்டை உயர்த்தினாள்.

அதில் “night_hero” என்று தலைக்கவசம் போட்ட படி ஒருவனின் உருவத்தை பச்சை  குத்தி இருந்தானவன்.

” இது யாரு?”

“இவர் தான் நைட் ஹீரோ இவரோட ஃபேன் நானு!” என்று ஆர்வமாக சொன்னவனின் பேச்சி அப்படியே இறங்கியது அவளது முறைப்பில்

“என்ன பண்ணான் இவன்?”

“இவர் பைக் வச்சி போடுவார் பாருங்க ஸ்கிட் சான்சே இல்ல! இவர் போடுற வீடியோ செமையா இருக்கு. ஒருபக்கம் பைக் வச்சுட்டே சுத்துவார். எப்படி தான் இவரால முடியுமோ!” என அவனை பற்றி பேசியதும் குதூகலமாக சொன்னான்.

அவளும் “ஓ…  சர்க்கஸ் காரனா?” என்றாள். அவன் அப்படியே நிமிர்ந்து பார்த்தான்.

பல்லைக் கடித்தபடி, “இந்த நாயை செருப்பால அடிச்சா தான் அவனை ஃபாலோ பண்ற நீங்க திருந்துவீங்க. கொஞ்ச நேரம் கழிச்சி வீட்டுக்கு கூட்டிட்டு போங்க மா..” என்று கோபத்தோடு அங்கிருந்து சென்று விட்டாள்.

*****

தன் முன்னே வண்டியை தடவிக்கொண்டே அழுபவனை  கண்டு மாறனுக்கு சிரிப்பு தான் வந்தது.

“அண்ணே!! பைக் சரியாக ஒருவாரம்  ஆகுமா?” என பத்தாவது முறையாக கேட்டு விட்டான்.

அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் வண்டிகள் வேலை பழுது அதிகம் இருந்த போதிலும், தன் முன்னே அழுது பேசுபவனிடம்  தன்மையாக பேசிக் கொண்டிருந்தான் மாறன்.

“டேய்  தம்பி! அழுதா மட்டும் பைக் தானா சரியாகிடுமா? நான் தான் சொல்றேனே! உன் பைக் பார்ட் லோக்கல் இல்ல. ஆர்டர் போட்டு வாங்கி, பிறகு தான் உன் பைக் சரி பண்ணா முடியும். ஓன் வீக் ஆகும் தம்பி..”

“சரிண்ணே!  முடிஞ்சா சீக்கிரமா கொடுத்துடுங்கண்ணே! என்னால பைக் இல்லாம முடியல. பைத்தியம் பிடிக்குதுண்ணே. சீக்கிரமா சரி பண்ணி தாங்க அண்ணே..” என்றவன் வண்டியை மீண்டும் ஒரு முறை தடவிக்கொடுத்து விட்டுச் சென்றான்.

இவனும் சிரித்துக் கொண்டேன் தனது வேலையை பார்க்க, “ம்ம்… என்ன சொல்லு பசங்களுக்கு பைக்னாலே தனி ஸ்பெஷல் தான்ல! காதலிக்கு இணைய பீல் பண்றான் பார்றேன்..” என விஷால் கூறினான்.

“பசங்களுக்கும் பைக்குக்கும் இருக்க  அட்டாச்மெண்ட் வேற டா! உயிரினத்துல சேர்க்கலனாலும் உறவுகளை விட காயப்படுத்தாத ஆறுதல் பைக் கொடுக்கும் டா.  ஒரு ரவுண்ட் போனாலே போதும் மனசுல என்ன துக்கம் இருந்தாலும் பஞ்சா பறந்திடும். மனசு லேசாகிடும். புத்துணர்ச்சி கொடுக்கும்..”

விஷாலோ, “ஒரு சாயா போல” என்று அவன் கையில் டீயை கொடுக்க, வாங்கிக் கொண்டான்.

“உனக்கு பைக்! எனக்கு டீ! “என்று ருசிக்க ஆரம்பித்தான்.

வேலை பழுவிலிருந்து இடைவேளை எடுத்துக் கொண்டு தனியாக அமர்ந்து இருவரும் பேசியபடி தேநீர் பருகினார்கள்.

“அப்புறம் மச்சி! எப்போ பைக் ரேஸ் தேதி அன்னௌன்ஸ் பண்ண போறாங்க?”

“சீக்கிரமே சொல்லப் போறாங்க. ஒரே எக்ஸைடட்டா இருக்கு டா. நான் கலந்துக்க போற முதல் நேஷனல் லெவல் கம்பெடிஷன்.. ட்ரைனிங் அகாடெமில நிறைய சப்போர்ட் இருக்கு கண்டிப்பா நீ ஜெயிப்ப சொல்லிட்டு இருக்காங்க.. ஜெயிக்கனும் டா!” என்று குதூகலமாக சொல்லிக் கொண்டிருந்தான் மாறன்.

“நீ தான்டா ஜெயிப்ப! எனக்கு அந்த நம்பிக்கை நிறையவே இருக்கு. இதுக்காக நீ எடுத்துக்கிட்ட ட்ரைனிங் கொஞ்ச நஞ்சமா! கண்டிப்பா நீ கப் அடிக்கிறத நாங்க பார்க்கணும் மச்சி. என் நண்பன் கப் ஜெயிச்சா எனக்கு பெருமை மச்சி..” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாறனின் முகம் வாடி விட்டது.

” என்ன மச்சி என்னாச்சி?”

“இல்ல மச்சி அம்மாக்கு தெரியாம மறைச்சு பண்றத நினைச்சா தான் கஷ்டமா இருக்கு. எனக்கு இதுல அம்மா சப்போர்ட் கிடைச்சா? டபுல் எனர்ஜியோட போட்டியில கலந்துட்டு இருந்துப்பேன்.

ஆனா, அவங்க நான் சாதாரணமா பைக்கில் போனலே பயந்து போறாங்க.

கொஞ்சம் ஸ்பீட் ஏத்தினாலே தம்பிங்கறாங்க. இதுல நான் மோட்டார் ரேசில் கலந்துக்க போறேன் சொன்னா மயக்கம் போட்டே விழுந்திடுவாங்க. அவங்களுக்கு ஹார்ட் சர்ஜரி வேற பண்ணி இருக்கோம் அதிர்ச்சியான எதையும் சொல்லக்கூடாது.

அதனாலே இப்படி மறைச்சி கலந்துக்க போறத நினைச்சா தான் குற்றவுணர்வா, பாரமா இருக்கு மச்சி!” என நெஞ்சை பிடித்துக்கொண்டு வலியுடன் கூறினான்.

“மச்சி கவலை படாத! நீ மட்டும் ஜெயிச்சிட்டா, அதை வச்சே மெல்ல மெல்ல அம்மா கிட்ட சொல்லி கன்வின்ஸ் பண்ணிடலாம் டா. அதுவரைக்கும் பீல் பண்ணாத, மனசை தெளிவா வச்சிரு. எல்லாம் நன்மையில் முடியும் நினை..” என ஆறுதல் சொல்லித் தேற்ற சரியென தலையசைத்தான்.

சென்னையில புகழ்பெற்ற மோட்டார் ரேஸ் அகாதமியில் சேர்ந்து பயிற்சி எடுத்து, தகுதி ஒன்று இரண்டை வெற்றிகரமாக முடித்து fmsci உரிமம் பெற்று இந்திய அளவில் வைக்க போகும் போட்டியில் கலந்து கொள்ள போகிறான். ஆனால் இதெல்லாம் மதிக்கு தெரியாது. அவரிடம் சொல்லாமல் தான் அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறான்.

மகன் வண்டியில் சற்று வேகத்தை கூட்டினாலே பயம் கொள்பவர். மகன், பைக் ரேசில் கலந்து கொள்ளப்போகிறான் என்று தெரிந்தால் அவ்வளவு தான் அந்த நிமிடம் இதயத்தில் பெரும்வலி உண்டாகி சரிந்து விடுவார். அதற்கு பயந்து தான் அவனும் அவரிடம் விஷயத்தை சொல்லாமல் மறைத்து வைத்திருக்கிறான்.

ஆனால் எவ்வளவு காலம் மறைத்து வைத்திருப்பது. ஒரு நாள் தெரிய வர தான் போகிறது. அதற்கு முன்னே போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்துவிட்டு மெல்லமாக சொல்லி அவரை மாற்ற வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறான் விதி அவன் முடிவுக்கு இசைந்து கொடுக்குமா? இல்லை எதிர்த்து நிற்குமா? படைத்தவனுக்கே வெளிச்சம்!

வீடு மாறி வந்து ஒரு வார காலம் சடுதியில் ஓடி விட, கோமதியும் மாறனும் அத்தெரு மக்களுடன் நன்றாக பழக ஆரம்பித்து விட்டார்கள்.

அதுவும் வீட்டு வேலை, சமையல், கோலம் போடும் மாறனை அங்கிருக்கும் பெண்களுக்கு பிடிக்க ஆரம்பித்து விட்டது.

சமையலில் அவனுக்கு தெரிந்த புதுமையான விஷயங்களை அவர்களுக்கு கூறுவான். சத்தான உணவுகள் எப்படி சமைத்து  சாப்பிட வேண்டும் என்று சொல்லுவான்.

வீட்டிலிருக்கும் நேரம் எல்லாம் தாய்மார்கள் கூடி பேசும் வேளையில் அவன் சொல்ல கேட்டுக் கொள்வார்கள்.

வயது வித்தியாசம் பார்க்காமல் வைத்தியுடன் கொஞ்சம் நெருக்கமாக நட்பு பாராட்டி வருகிறான். அவரும் அவனிடம் மனசு விட்டு பேச ஆரம்பித்தார். அவர்களது நட்பை கண்டு ஆச்சரியப் பட்டாள் சம்ருதி!

மகன் இல்லாத ஏக்கம் உள்ளுக்குள்  அழுத்தி அவரை முடக்கி வைத்திருந்த நாட்களில் இருந்து சம்ருதி தான் அவரை வெளியே கொண்டு வந்தாள்.

மகன் இல்லை என்ற விஷயத்திலிருந்து அவர் கடந்து வந்தாலும் ‘இருந்திருக்கலாம்’ என்ற ஏக்கம் தான் மிச்சம் சொச்சமாக அவருக்குள் இருக்கிறது.

அதை மகளிடம் மறைக்க சமாளிப்பாக நகைச்சுவையாக பேசுவது ஒருவரை ஒருவர் கலாய்த்து வாரிக்கொள்வது என தன் நாட்களை மகளுக்காகவே ஓட்டுகிறார்.

மிச்ச சொச்ச ஏக்கத்தை போக்க வந்தவனாக மாறன் வைத்தி உறவு நட்பு ரீதியாக நாளுக்கு நாள் அவர்களது நெருக்கம் கூடிக்கொண்டே போனது

கோலத்தில் ஆரம்பித்து இரவு சமையல் வரை கலந்து பேசும் அளவிற்கு அவர்கள் முன்னேறிருக்க, தந்தையின் மாற்றத்தை கண்டு அவளுக்குள் திருப்தி தான்.

ஆனாலும் தந்தையிடம் நெருக்கமாக பழகுவது அவளுக்குள் கொஞ்சம் பொறாமையை தூண்டு விடுகிறது. அதை மறைமுகமாக வைத்தியிடம் காட்ட அவரும் மகளை எண்ணி சிரிப்பார்.

தினமும் வைத்தி மாறனின் புகழைப் பாட, இவளுக்கு அவன் மீது சலிப்பும் கோபமும் தான் வந்தது. இது போல கோமதி வேறு மகனின் திருப்புகழ் வேறு ஒருபக்கம் பாட, காதில் புகை வராத குறையாக கொலைவெறியானாள் சம்ருதி.

அவள் மட்டுமல்ல அந்த தெருவில் வசிக்கும் இளசுகள் அனைவருக்கும் மாறன் மீது கோபமாக இருந்தனர். காரணம் அவர்களது தாய்மார்கள் அவனை எடுத்துக்காட்ட சொல்லி இவர்களை திட்டுவதால் வரக் கோபம் தான்.

அவனை ஒப்பிட்டு சொல்லி அவர்களை வேலைவாங்க கொதித்து  போய் விட்டனர், அச்சிறுவர்கள்.

மாலை ஆறு மணி அளவில் சனிக்கிழமையில் சம்ருதியோடு அரட்டை அடிக்க அத்தெருவில் வசிக்கும் வாண்டுகளும், இளசுகளும் ஒன்று கூடுவார்கள் இன்றும் அவ்வாறு கூடி இருப்பதோடு சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அமர்த்திருப்பதை பார்த்த சம்ருதி, அவர்கள் பக்கத்தில் அமர்ந்தாள்.

அவள் வந்து அமர்ந்தது கூட தெரியாது சோகமாக இருக்க, தன் அருகே இருந்த ஒருவனை சுரண்டி, “என்னடா ஹாப்பியா இருக்கலாம் வந்தா.. எல்லாரும் அன்ஹாப்பியா இருக்கீங்க? வாட் ஹாப்பெண்ட்?”

“ப்ராப்ளம் ஹாப்பெண்ட்!”

“என்ன ப்ராப்ளம்? யாரு பண்ணா? என்ன டா பண்ணி வச்சீங்க?”

“நாங்க எந்த ப்ராப்ளமும் கிரியேட் பண்ணல எங்களுக்கு தான் ப்ராப்ளம் கிரியேட் ஆகியிருக்கு?” என இன்னொரு வாண்டு சொல்ல..

“அப்படி என்ன ப்ராப்ளம்?”என ஆர்வமாக கேட்டாள்.

“இதுவரைக்கும் வேலையே சொல்லாத மம்மி வேலை பார்க்க சொல்றாங்க. ஒழுங்கா வேலை பார்க்கலேன்னு கம்பேர் பண்ணி திட்டுறாங்க!” என பின்னே இருந்த வாண்டு சோக குரலில் சொன்னாள்.

“அப்படியா யாரோட கம்பேர் பண்ணி திட்டுறாங்க?”

“உன் வைத்தியோட புது பிரண்ட்  இருக்கானே அவனோட தான் கம்பேர் பண்றாங்க..” என்று அருகே இருந்த இளசு ஒன்று சொல்ல..

“உன்னை, எல்லாரையும் அவனை வச்சா திட்றாங்க?”

“ஆமா..” என அனைவரும் தலையாட்ட, வாயில் கை வைத்து அதிர்ந்தாள்.

“ஏய் சின்ன குட்டி உன்னையுமா?”

“ஆமா… நா கடைக்கு போய் ஏதாவது மறந்துட்டு வந்தா, அவனை சொல்லி என்னை திட்டுது மம்மி!” என்று உதட்டை பிதுக்க, இவளுக்கு உள்ளுக்குள் சிரிப்பு  வந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

“இதுவரைக்கும் நீ ஒழுங்கா படிச்சா மட்டும் போது சொன்னாங்க சம்மு. இப்போ என்னடானா.. உன் துணிய துவை, வீட்டை கூட்டு கடைக்கு போயிட்டு வா.. தோசை ஊத்து  ஒவ்வொரு வேலையா நாளுக்கு நாள் சொல்லிட்டே இருக்காங்க..

செய்ய முடியாதுன்னா, மாறன் தம்பிய பாரு.. அவங்க அம்மாக்கு உடம்பு முடியலன்னு வீட்டு வேலை எல்லாம் செய்யுது.. நீ நான் முடியாம கிடந்தாலும் செய்ய மாட்டா நானே தான் செய்யணும் இங்கனு கத்துது சம்மு!” என்றான் அகரன். பொறியியல் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறான்.

“ஆம்பிள்ளையே எல்லா வேலையும் செய்யும் போது உனக்கு என்ன டி சொல்லி திட்டிட்டு எல்லா வேலையும் என் கிட்டையே சொல்றாங்க அக்கா!” என சோககீதம் வாசித்தாள் பிரின்சி பத்தாம் வகுப்பு படிக்கிறாள்.

அவரவர் வீட்டில் வாங்கும் திட்டிட்டுகளை எல்லாம் சம்ருதியிடம் முறையிட்டனர்.

“ஓகே  விஷயம் கொஞ்சம் சீரியஸ் தான். என்ன பண்ணலாம் யோசிக்கணும்?”

“சம்மு! அந்தாள் ரொம்ப நல்லவனாம் நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடுவானாம்.. சொல்லி என்னையும் நேரத்துக்கு வீட்டுக்கு வா! வெளிய ஊர் சுத்தாத, அந்த தம்பிய பார்த்து கத்துக்கனு பேச்சு! வேற பேச்சே எடுக்க மாற்றாங்க, வீட்ல இருக்கவே பிடிக்கல..” என்றான் குரல் கமற.

“அகரா, பீல் பண்ணாத! இதுக்கு ஒரு  சொலுயுசன் கண்டு பிடிப்போம். நிச்சயம் இவ்வளவு பண்றவன் கிட்ட ஏதாவது ஒரு சீக்ரட்டோ இல்ல தப்போ இருக்கும். அதை கண்டு பிடிச்சாலே போதும் அவனை முன்னுதாரணம் காட்ற உங்க அம்மாங்க கிட்ட சொல்லி அதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைச்சிடலாம். ஆனா அதை எப்படி கண்டுபிடிக்கிறது தான் தெரியல !”

“ஒரு வேள அவன் கிட்ட அப்படி எதுவும் இல்லைன்னா என்ன பண்றது?” என பிரின்சி சந்தேகமாக கேட்டாள்.

“இல்லைன்னா இருக்கிறது போல உருவாக்குவோம்!” என்று சொல்லி சம்ருதி கண்ணடிக்க, அங்கிருந்த அனைவரின் முகமும் பிரகாசமானது.

“ஆமா கண்டிப்பா சொல்றேன் அவன் கிட்ட ஏதோ ஒரு தப்பு இருக்கு. அதை கண்டுபிடிக்கணும்..”

“ஓகே தான். ஆனா கண்டுபிடிக்கிற வரைக்கும் ஒரு சொலுஷன் சொல்லு தினமும் என்னால வீட்ல திட்டு வாங்க முடியல!” என வாண்டு பொங்கிட..

“சொலுஷன்” என்று இவள் யோசித்து கொண்டிருக்க, மாறன் தன் வீட்டின் முன்னே பைக்கை நிறுத்தினான்.

எல்லோரும் அவனை தான் கொலைவெறியோடு பார்த்திருந்தனர். சிட்டிகை செய்த செய்தபடி வண்டியிலிருந்து இறங்கியவன், அவர்கள் அமர்ந்திருப்பதை கண்டு அவர்கள் அருகே வந்தான்.

“ஹாய் குட்டீஸ்! இன்னைக்கி தான் உங்க எல்லாரையும் பார்க்கிறேன். எப்பவும் இங்க தான் மிட்டீங்கா? உங்க மீட்டிங்கல நானும் ஜாயின் பண்ணிக்கவா?” என அழகான சிரிப்புடன் கேட்டான்.

அதற்குள் ஒரு வாண்டு வேகமாக “நோ!” என்றது.

“நோவா? ஏன்?”

“ஏன்னா உன்னால தான் நாங்க வீட்டில திட்டு வாங்குறோம். சோ உன்னை எங்களோட சேர்த்துக்க மாட்டோம்..” என குட்டியாக இருந்த அந்த வாண்டு கோபமாக சொல்லி முகத்தை திருப்பிட, இவனுக்கு சிரிப்பு தான் வந்தது, அடக்கிக் கொண்டு,

“உங்க பேர் சார்?”

“சதீஷ்!” என்று முகத்தை வெட்டினான்.

“மிஸ்டர் சதீஷ் என்னால நீங்க எதுக்கு திட்டு வாங்குறீங்க? புரியலையே!”

“வீட்ல கார்டூன் சேனல் பார்க்க வேண்டிய என்னை கடைக்கு அனுப்புறாங்க என் மம்மி! அவங்க சொன்னதுல ஒன்னு மிஸ் பண்ணாலும், உன்னை கம்பேர் பண்ணி என்னை திட்டுறாங்க!

என்னை மட்டுமில்ல இங்க இருக்க எல்லாரையும் உன்னை சொல்லி தான் திட்டுறாங்க. உங்க மேலே நாங்க கோபமா இருக்கோம்..” என மழலை மொழியில் படபடவென பட்டாசை பொரிந்து விட்டு மூச்சு வாங்கினான்.

“கூல் படி கூல்..” என அருகே இருந்த சின்ன குட்டி அவனது நெஞ்சை நீவி விட்டது.

“ஓ…” என்றவன் நாடியை தேய்த்தபடி தன்னை முறைக்கும் அனைவரையும் நோக்கினான்.

“சோ சேட்! ஆனா, நான் என்ன பண்ணேன்? எதுக்கு என்னை உங்களோட கம்பேர் பண்ணனும்?”

“நீ ஏன் மென் வீட்டு வேலை எல்லாம் பார்க்குற?”

“ஏன் பார்க்க கூடாதா?” என நக்கலாக கேட்டான்.

“நீ பார்க்குறதால தான் எங்களையும் பார்க்க சொல்றாங்க…”

“அதுக்கு?”

“நீ பார்க்காத!”

“முடியாது நான் பார்ப்பேன்” என்றான்.

“நீ ஏன் வீட்டு வேலை பார்க்கிற? அம்மா தானே வீட்டு வேலை பார்க்கணும்? பாய்ஸ் வீட்டு வேலை பார்க்க மாட்டாங்க!”

“ஓ… ஆமால! அம்மா தானே வீட்டுல எல்லா வேலையும் பார்க்கணும். பாய்ஸ் வீட்டு வேலை பார்க்க கூடாதுல!” என்று  யோசிப்பது போல பாவனை செய்தான்.

“ஓகே… என் கேள்விக்கு பதில் சொல்லுங்க! உங்க வீட்ல உங்க அம்மாக்கு முடியலைன்னா? யாரு வீட்டு வேலை எல்லாம் பார்ப்பா ?”

“அப்பா!”என ஒரு வாண்டு சொல்ல..

“கரெக்ட் அம்மாக்கு முடியலைன்னா அப்பா தானே பார்க்கிறார். அப்பா பாயா இருந்தாலும் பார்க்கிறார்ல. எங்க அம்மாக்கு முடியல. எனக்கு அப்பா இல்ல சோ நான் பார்க்கிறேன் இதுல என்ன இருக்கு?”

“இதுல உனக்கு என்ன இருக்கு? எங்களுக்கு தானே இருக்கு. எதுக்கு எடுத்தாலும் உங்களை கம்பேர் பண்ணில எங்களை தானே திட்டுறாங்க!” என அகரன் சலித்து கொண்டு சொன்னான்.

“அதுக்கு நான் என்ன பண்ண?”

“கம்பேர் பண்ணாதீங்க நீங்க அவங்க அம்மாங்க கிட்ட சொல்லணும்..” என்று சம்ருதி வாயை திறந்தாள்.

“ஓ.. டாக்டர் மேடம் நீங்களும் இங்க தான் இருக்கீங்க போல!” என கேலி செய்ய, அவனை முறைத்தாள்.

“உங்க எல்லாரோட வீட்டுக்கு போய் உங்க அம்மாங்க கிட்ட,  என்னை வச்சி கம்பேர் பண்ணாதீங்க சொல்லனுமாக்கும்? அதற்கெல்லாம் சான்சே இல்ல! வேணும்னா வேற ஐடியா ஒன்னு சொல்லவா?”

“என்ன அது?”

“உங்க அம்மா சொல்ற வேலையை எல்லாம் சரியா பாருங்க. உங்க அம்மாக்கு ஹெல்ப் பண்ணுங்க. நிச்சயம் உங்கள கம்பேர் பண்ண மாட்டாங்க, என்ன எப்படி என் ஐடியா?” என புருவம் உயர்த்தி கேட்க, அவனை வெட்டவா குத்தவா ரீதியில் பார்த்தனர்.

என்ன பதிலை காணோம்?” என நமட்டுச் சிரிப்புடன் கேட்டான்.

“வேலை பார்க்குற வயசா மேன் எனக்கு?” என்று கதிரையின் மீது ஏறி நின்று கேட்க, அவனது கால் அளவுக்கு கூட இல்லாத அந்த குட்டி புருவம் சுருங்கி அவனை நோக்கி கை நீட்டிக் கொண்டு கேட்பதில் இவனுக்கு சிரிப்பு பொதுக் கொண்டு வந்தது.

“எதுக்கு சிரிக்கிற எங்களை பார்த்தால் காமெடி பண்றது போலவா தெரியுது உனக்கு?”

“ஓகே ஓகே சிரிக்கல சிரிக்கல” என்று சிரிப்பை அடக்க முயன்றான்.

“ம்ம்.. இப்போ நான் என்ன பண்ணனும்?”

“எங்க அம்மாங்க உங்களை வச்சி எங்களை கம்பேர் பண்ண கூடாது! அதுக்கு நீங்க ஏதாவது பண்ணனும்?”

“அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. நீங்க தான் உங்க அம்மாங்க கிட்ட கம்பேர் பண்ணாதீங்க சொல்லணும்! இல்ல உங்க அம்மா சொல்ற வேலைய சொல்லணும். இரண்டாவது சொன்னது தான் பெட்டர்னு தோணுது.

இல்ல முதலாவது சொன்னது பெட்டர்னு நினைச்சால் கடவுள் தான் காப்பாத்தனும் உங்களை.. என்னை திட்டக்கூடாது!” என்று நக்கலாக மொழிந்து விட்டு மீண்டும் சிட்டிகை செய்தபடி வீட்டுக்குள் சென்றுவிட்டான்.

“சம்மு! இதுக்கு மேலே என்னால பொறுக்க முடியாது! இவனை ஏதாவது செய்யணும்!” என பொங்க..

“பொறுமையா இரு சதீஷ்! இவன் வசமா சிக்க போற நாள் வந்தே தீரும்.. அப்ப வச்சுக்கலாம் இவனை!” என வில்லி போல பேசினாள் சம்ருதி.

*****

புது வீட்டிற்கு வந்த ஒரு வாரமும் கடை, வீடு என இருந்தாலும் மாறனுக்கோ  இரவில் தனது பைக்கை எடுத்துக்கொண்டு தன்னை உற்சாகம் செய்யும் ரசிகர்களை காண, யூடியூப்பிலும் இன்ஸ்டாகிராமிலும் வீடியோ பகிர என இல்லாமல் வெறுமையை தனக்குள் உணர்ந்தான்.

அதற்கு மேல் அவனது ரசிகர்கள் அவனை காணாத ஏக்கத்தில் இருப்பதோடு புலனத்தில் குறுஞ்செய்தி அனுப்பி விஷாலை ஒருவழி ஆக்கி விட்டனர்.

விஷால் மாறனிடம் தன் நிலமையை சொல்லவும். யோசித்தவன், ரசிகர்களை காண ஒரு நாளை தேர்வு செய்து சந்திக்க வேண்டிய இடம், நேரம் என அனைத்தையும் விஷாலிடம் சொன்னான். அவனும் குரூப்பில் பதிவு செய்து விட ரசிகர்கள் உற்சாகமானார்கள்.

அந்த நாளும் வந்து விட, வழமையான நாட்களை போல தனது வேலையை முடித்து விட்டு சீக்கிரமாக இல்லம் வந்திருந்தான்.

இரவு உணவு தயாரித்து இருவரும் உண்டு முடித்திருந்தனர் கோமதிக்கு தேவையான மாத்திரைகளை எல்லாம் கொடுக்க, வாங்கி போட்டவர் உறங்கச் சென்றார். அவனும் அவனது அறைக்குள் சென்று  உறங்குவது போல நடித்தான்.

கோமதி, ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றதுமே எழுந்தவன் முன்பக்க கதவை திறந்து வெளியே வந்து வீட்டை பூட்டினான். அவனை தெரு நாய்கள் சுற்ற, அதற்கெல்லாம் தீனியை போட்டு விட்டு மெல்ல நடந்தான்.

மொட்டை மாடியில், தனது வெளிநாட்டில் வசிக்கும் தோழியிடம் பேசிக் கொண்டிருந்த சம்ருதி, மாறன் வெளியே செல்வதை கண்டு அதிர்ந்தாள், தன் தோழியிடம் பேசுவதை நிறுத்தி விட்டு அவனை நோட்டம் விட்டவள், அழைப்பை துண்டித்து விட்டு அகரனுக்கு அழைத்தாள்.

அவனும் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாக சொல்ல தெருமுக்கத்தில், அவனை நிற்க சொல்லி விட்டு இவளும் கிளம்பி வெளியே வந்தாள்.

இருவரும் மாறனை பின் தொடர்ந்தனர். விஷாலுடன் பயணித்தவன் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்த, அவனை தொடர்ந்து வந்தவர்களும் மறைவாய் நின்றுக் கொண்டு அவன் செய்வதை எல்லாம் வீடியோவாக பதிவு செய்தனர்.

தலைகவசம், கருப்பு ஜாக்கெட் மட்டும் கை உறை போட்டவன் வண்டியின் முன் அமர, விஷாலும் அவனோடு பின்னே அமர்ந்தான். விஷாலும் தலைக்கவசம் போட்டு முகத்தை தான் மறைத்திருந்தான்.

இருவரும் தங்கள் முகத்தை யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை. வண்டியை எடுக்க, இவர்களும் பின் தொடர்ந்தனர். கூட்டமும் கூச்சலுமான இடத்தில் மாறனின் வண்டி ஸ்டைலாக வந்து நின்றது. ஆரவாரத்தோடு அவனை வரவேற்றனர்.

“சம்மு! மாறன் தான் நைட் ஹீரோ! என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் இவரை பிடிக்கும். பைத்தியமான ஃபேன்ஸ் அவங்க நைட்_ ஹீரோ மேல. ஹீரோ ஒர்க்ஷிப் பண்ணுவாங்க.. இவர் முகத்தை யாருக்குமே காட்ட மாட்டார். யாரும் பார்த்ததும் இல்லை..”

“ஆனா நமக்கு இவர் யாருனு காட்டிட்டாரே!” என்க அவளை புரியாமல் பார்த்தான் அகரன். அவளோ அவன் செய்யும் அனைத்தையும் தனது அலைபேசியில் பதிவு செய்தாள்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்