மரம் தேடும் மழைத்துளி 2

Loading

மரம் தேடும் மழைத்துளி 2

 

அழுது கொண்டே படுத்து இருந்த ருக்மணி, எப்போது உறங்கினாள் என்று அவளே அறியா வண்ணம் உறங்கி விட்டாள்.

 

வீதியில் உலாத்திக் கொண்டிருந்த முருகன், வீட்டுக்கு வரும்போது, எப்படி அந்த அறை இருந்ததோ அப்படியே இருந்தது. கதவடைக்கப்படாமல், லைட் அணைக்கப்படாமல், ஏற்றி வைத்த குத்துவிளக்கில் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, திரி முழுவதும் எரிந்து அணைந்த நிலையில், அப்படியே இருந்தது.

 

அதேபோல தள்ளிவிட்டபோது விழுந்து கிடந்த ருக்மணியும், அதே நிலையில், சிறிதும் அலுங்காமல் அப்படியே உறங்கிக் கொண்டிருந்தாள்.

 

அவளை நின்று பார்த்த முருகனுக்கு சிறிதும் இரக்கம் தோன்றவில்லை. “செத்து கித்து போயிருப்பாளா? போனால் போகட்டும்.” என்று பல்லை கடித்தவன், எரிந்து கொண்டிருந்த லைட்டை அணைத்துவிட்டு. அருகில் இருந்த தலையணையை இழுத்து தலைக்கு வைத்து படுத்துக்கொண்டான்..

 

மறுநாள் காலையில் சூரியன் எழும் முன்பே மாடி அறை கதவை தட்டினாள் கோமதி. “ருக்கு கதவை திற. எந்திரிச்சிட்டியா? ருக்கு…” என்று கதவைத் தட்ட.

 

ருக்மணி, “இதோ வாரேன் மதினி.” என்றபடி எழுந்தவள், அருகில் படுத்திருந்த முருகனை பார்த்து திடுக்கிட்டு போனாள். தனது நெஞ்சுக்கூட்டில் கை வைத்துக் கொண்டு, “இவர்தான் வந்து படுத்திருக்கிறாரா? இவர் எப்ப வந்தாரு?” என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு எழுந்து சென்று கதவை திறந்தாள்.

 

கோமதி கையில் இருந்த தூக்குவாளியையும், இரண்டு டம்ளர்களையும் ருக்மணியிடம் கொடுத்துவிட்டு. “அண்ணனுக்கு கொடுத்து, நீயும் குடி. ரெண்டு பேரும் சீக்கிரமா கீழே வாங்க.” என்று சொல்லிவிட்டு வந்த வழியே திரும்பி சென்றாள்.

 

சரி என்று வாங்கிக் கொண்ட ருக்மணி, மீண்டும் அறைக்குள் சென்று, தூக்குவாளியிலிருந்த காபியை இருவருக்கும், இரண்டு டம்ளர்களில் ஊற்றி வைத்துவிட்டு. முருகனை எழுப்ப கையை உயர்த்தியவள், அப்படியே நின்று விட்டாள். “எழுப்பினால் ஏதாவது சொல்லுவாரோ? இப்போ என்ன கூத்து பண்ண போறாரோ? வயிறு வேற பசிக்குது. இந்த காப்பிய நம்ம குடிச்சிட்டு எழுப்பினால் அதுக்கும் ஏதாவது குற்றம் கண்டுபிடிப்பாரோன்னு பயமா இருக்கே” என்றெண்ணியவள்.

 

அவன் அருகில் தலை குனிந்து, “என்னங்க” என்று கூப்பிட்ட மறுநொடியே மூக்கை பிடித்துக் கொண்டு நிமிர்ந்து விட்டாள். “அந்த ராத்திரில எங்க போய் குடிச்சிட்டு வந்தாரோ. இன்னும் வீச்சம் போகலயே. ஒருவேளை இப்பத்தான் குடிச்சு முடிச்சுட்டு வந்து படுத்து இருப்பாரோ? எல்லாம் அந்த மாரியை சொல்லணும். இப்படி கொண்டாந்து விட்டுட்டு, எனக்கு என்னனு போயிட்டாளே…” என்று தன்னுடைய தாய் மாரியம்மாளை மனதிற்குள் திட்டிக்கொண்டு அதே வேகத்தில் அவனை தட்டி எழுப்பினாள்.

 

கண்கள் இரண்டும் கோவை பழமாக சிவந்திருக்க, படுத்திருந்தபடியே விழித்து பார்த்தான் முருகன்.

 

“அடியாத்தி இவரை தட்டிவிட்டோமா.” என்று பதட்டத்தோடு “காபி குடிங்க” என்றாள்.

 

.”காப்பி வேண்டாம். என்னை எழுப்பாமல் போயிரு.” என்று சொல்லிவிட்டு திரும்பி படுத்து கொண்டான்.

 

“ரொம்ப சந்தோசம்.” என்று மனதிற்குள் நினைத்தவள், ஒரு டம்ளர் காப்பியை எடுத்து குடித்துவிட்டு. மிச்சம் இருந்த காப்பியை அதே வாளியில் ஊற்றிக் கொண்டு கீழே இறங்கி சென்றாள்.

 

பார்வதி சமையல்கட்டில் இட்லி அவித்து கொண்டிருந்தார். ருக்மணியை பார்த்ததும், “வா… ருக்கு, முருகன் எந்திரிச்சிட்டானா? ரெண்டு பேரும் காப்பி குடிச்சிங்களா?”

 

ருக்மணி, பதில் சொல்ல முடியாமல் நின்று கொண்டு இருந்தாள்.

 

பெற்றவளுக்கு தெரியாதா பிள்ளையின் நடவடிக்கை, ருக்குவின் முகத்தை பார்த்தே புரிந்து கொண்டார் பார்வதி. “அவன் இன்னும் எந்திரிக்கலையா? சரி நீ… மசமசனு நிக்காம, மாடிப்படிக்கடியிலே பாத்ரூம் இருக்கு, போயி குளிச்சு முடிச்சிட்டு வந்துரு. அப்படியே நீ கட்டி இருக்க துணிமணியை தப்பி போட்டுரு. நான் அவனை எழுப்பிட்டு வாரேன்.”

 

ருக்மணி, “மதினீ…”

 

பார்வதி, “மதினி கோலம் போடுறா, மதினி முதுகு தேச்சு விட்டாதான் குளிப்பியா?”

 

ருக்மணி, “இது என்னடா கொடுமையா இருக்கு. யாருகிட்டேயும் ஒரு வார்த்தை பேச முடியல.” என்று எண்ணிக் கொண்டவள் வாசலுக்கு வெளியே இருக்கும் குளியல் அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டாள்.

 

ருக்மணி குளிக்கும் நேரத்தில், பார்வதி சென்று முருகனை எழுப்பிவிட்டு கீழே வரும்படி உத்தரவிட்டுவிட்டு வந்தார். அதைப்போல கோமதி வாசலில் கோலம் போட்டு முடிக்கும் தருவாயில் ருக்மணியின் தாயார் மாரியம்மாள் வந்து சேர்ந்தார்.

 

பார்வதி, “வா… மாரீ, விடிஞ்சும் விடியாமலும் எந்திரிச்சு ஓடியாந்துட்ட போல இருக்கே?”

 

“ஆமா மதினி, கறிக்கடைலே முதல் கறியா 10 கிலோ, வெட்ட சொல்லிட்டு வந்து இருக்கேன். எங்க ரவி வாங்கிட்டு வந்துருவான். அப்படியே காலை சாப்பாட்டுக்கு உங்ககிட்ட கொஞ்சம் பணம் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்.” என்று முந்தியில் முடித்து வைத்திருந்த பணத்தை பிரித்தார்.

 

“போ…இவளே, நான் உன்கிட்டக்க சாப்பாட்டுக்கு துட்டு கேட்டேனாக்கும்?.”

 

“நீங்க கேட்காட்டிலும் செய்ய வேண்டியது என் கடமை இல்லையா மதினி. “

 

“என் தம்பி பொண்டாட்டி, பொண்ணை கொடுத்ததும், சம்மந்தகாரி பவுசை காட்டுறியாக்கும்.”

 

மாரியம்மா, “உங்க தம்பி மட்டும் உயிரோட இருந்தால் இந்த நேரத்துக்கு எம்புட்டு சீர்செஞ்சு, நகை நட்டு போட்டு கட்டி கொடுத்திருப்பாரு.” என்று பெருமூச்சு ஒன்றை விட்டபடி வாசல் படியில் அமர்ந்தார்.

 

குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்த ருக்மணிக்கு, தாயின் சத்தம் கேட்டவுடன். வாளியில் இருந்த தண்ணீரை அள்ளி தலையில் ஊற்றிவிட்டு. வேக வேகமாக வேற்றுடை அணிந்து கொண்டு, கதவைத் திறந்து வந்து வாசலில் அமர்ந்திருக்கும் அம்மாவை பார்த்து, “எம்மே… என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போயிரு. என்னால இங்க இருக்க முடியாது.” என்று அழுதபடி அவரது மடியில் முகம் புதைத்து, கடைசி படியில் அமர்ந்து அழத்தொடங்கி விட்டாள்.

 

மாரியம்மாள், “அடிக்கழுத, என்னடி இப்படி அழுகுற? என்னடி நடந்துச்சு? எதுக்குடி தேம்புற? என்னை பெத்தவளே? என்னன்னு சொல்லிட்டு அழுகுடி?” என்று பதறிவிட்டார்.

 

பார்வதிக்கும் பதட்டம் ஒட்டிக்கொண்டது. இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “ஒத்த நாளு பிரிஞ்சி இருந்ததுக்கு உம்மகள் இப்படி ஒப்பாரி வைப்பாளாக்கும்.”

 

மாரியம்மாள், “நீ… யாருன்னு தெரியாதவங்க வீட்டிலையா வாக்கப்பட்டு வந்திருக்கே. உங்க அப்பன் கூட பிறந்த அத்தை வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்து இருக்கேடி. எட்டி நாலு எட்டு வச்சா… நம்ம வீட்டுக்கு வந்துட போறே. நாளைக்கு குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வந்ததும். நம்ம வீட்டுக்கு வந்துட போறே. அடுத்து ஒரு வாரம் நம்ம வீட்ல இருந்துட்டு. அத்தை வீட்டுக்கு வா. எப்ப எல்லாம் தோணுதோ அப்ப எல்லாம் நம்ம வீட்டுக்கு வா. இதுக்கு போய் அழுவாகளா ம்மா? ஏலே என் தங்கதொரச்சி?” என்று அழுதவளை தேற்ற, ஆறுதல் மொழி சொல்லிக் கொண்டிருந்தார்.

 

தாயின் பதட்டத்தையும், பயத்தையும், அவரது ஆறுதல் மொழியில் புரிந்து கொண்ட ருக்கு. தன்னைத்தானே ஒருவாறு தேற்றிக்கொண்டு. எழுந்து கண்களை துடைத்துக் கொண்டாள். அருகில் நின்ற அத்தையையும், அத்தை மகளையும் நிமிர்ந்து பார்க்க. பார்வதியின் கண்கள், ருக்குவிடம் இறைஞ்சி, “வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டது. அதற்கு மதிப்பு கொடுத்து, தாயின் கையைபிடித்து எழுப்பி, “வீட்டுக்குள்ள வாம்மா.” என்று அழைத்து சென்றாள் ருக்கு.

 

அடுத்த நொடியில் மாடியில் இருந்து இறங்கி வந்த முருகன், மாரியம்மாளை பார்த்து “வாங்க அத்தை” என்று மரியாதைக்கு சொல்லிவிட்டு. “நான் குளிச்சிட்டு வந்துடறேன்”. என்று துண்டை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வெளியேறி சென்றான்.

 

பார்வதி, “வீட்டுல குளிடா… கிணத்துக்கு போக வேண்டாம். உன் மேல பூவாசம் அடிக்கும்.”

 

முருகன், சிரித்தபடி, “என்கிட்ட எந்த பேயும் அண்டாது.” என்று சொல்லிவிட்டு வெளியேறி சென்றான்.

 

 

ருக்கு, அவன் சொன்ன வார்த்தைக்கு பதிலாக, “மனுசரே அண்ட முடியாது.” என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.

 

பார்வதி, ருக்குவின் மனதை மடை மாற்ற “ருக்கு அம்மாவுக்கு காபி போடுய்யா…” என்று சமையல் கட்டுக்கு அனுப்பி வைத்தார். ருக்குவுக்கு உதவியாக கோமதியும் உடன் சென்றாள்.

 

மாரியம்மாள் ருக்குவின் அழுகைக்கான காரணம் விளங்காமல் அமைதியாக அமர்ந்து விட்டார்.

 

பார்வதி, “என்ன மாரி? வந்த ஒத்த நாளிலேயே… நாங்க உன் பிள்ளையை கொடுமைப்படுத்தி இருப்போம்னு நினைக்கிறேயா? புதுசா ஒரு வீட்டுக்கு வந்திருக்கிறா, அத்தை மகனா இருந்தாலும் அவனோட தனியா இருந்து பழகல. நேத்துதான் தனியா தங்கி இருக்கா,. புது அனுபவம், அதனால பயந்திருப்பா. இவ்வளவு நேரமும் எதுவும் பேசாம இருந்தாள். ஆத்தாளை பார்க்கவும் அடக்கமாட்டாமல் அழுதுட்டாள். அதுக்கு போய் நீ வருத்தப்படுறியே…”

 

“இல்ல மதினி. என் புள்ள ரொம்ப தைரியசாலி. உங்க தம்பி, எங்களை விட்டுட்டு போன பிறகு, நான் ஒத்தையில கிடந்து சீரழியிறேன்னு, என் பிள்ளை பள்ளிக்கூடத்துல எட்டாப்பு படிச்சதோட என்கூடவே மெல்லுக்கு வேலைக்கு வந்துட்டா. எவ்வளவு கஷ்டமான வேலையை கொடுத்தாலும், சலிக்காமல் சிரிச்சுக்கிட்டே செஞ்சு முடிப்பா. அப்படிப்பட்டவ இன்னைக்கு அழுது, என்னை இங்கிருந்து கூட்டிட்டு போயிறேன்னு சொல்றான்னா எனக்கு ஏதோ தப்பா படுது. நான் அவசரப்பட்டுட்டேனோனு தோணுது.”

 

“நான் அப்படி எதுவும் தப்பா நடக்க விட்டுடுவேணா மாரி. என்னை நீ நம்ப மாட்டியா?”

 

“நான் யாரையும் குறை சொல்லல மதினி. என் புள்ள மனசுல என்ன இருக்குன்னு முதல்ல தெரிஞ்சுக்கணும். அதுக்காக இப்ப அவளை என்னோட கூட்டிட்டு போறேன். அவ மனசு சரியாகி, அவ மனசுல உள்ளதை என்கிட்ட சொல்லிட்டால் போதும். அதுக்கு ஏதாவது பரிகாரம் பார்க்க முடிஞ்சா பார்த்து அனுப்பி வைக்கிறேன். என் பிள்ளையை கஷ்டப்பட விட்டுட்டு. என்னால அங்க நிம்மதியா இருக்க முடியாது மதனி. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க.”

 

“மாரி அவசரப்படாதே மாரி. கறி வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கேல்ல. இருந்து சமைச்சு சாப்பிட்டுட்டு போங்க. அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இருதாயி.”

 

“இல்ல மதனி. நீங்க ஆக்கி சாப்பிடுங்க. எனக்கு மனசு சங்கடமா இருக்கு..”

 

“மாரி தெரியாம பேசாதே. நேத்து தாலி கட்டுன பிள்ளையை, இன்னைக்கு ஒத்தையில கூட்டுட்டு போறேன்னு சொல்லுறியே! பக்கத்துல யாரும் கேட்டா என்ன பதில் சொல்லுவ?”

 

என்னத்தையாவது சொல்லிக்கிறேன் மதனி. உடம்புக்கு சுகம் இல்லை. , தேவல ஆக்கிக் கொண்டு வந்து விடுகிறேன்னு கூட்டி வந்து இருக்கேன்னு. என்னத்தையாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன். என்ன தடுக்காதீங்க.” என்று கெஞ்சி கேட்டுக் கொண்ட மாரியம்மா, ருக்மணியை “ஏலா… ருக்கு வாலா… நம்ம வீட்டுக்கு போகலாம். என்று கூவிஅழைத்தார். தான் செய்தது தவறு என்று அப்போதுதான் ருக்மணிக்கு தோன்றியது.

 

சமையல் கட்டில் எதிலும் கவனம் இல்லாமல் நின்று கொண்டிருந்தவள், தாயின் அழைப்பை கேட்டதும் வேகமாக வெளியே வந்து, “ஏம்மா அண்ணே கறி வாங்கிட்டு வரேன்னு சொன்னானே வந்துடட்டும். சமைச்சு சாப்பிட்டு போகலாம்.”

 

“ருக்கு, என்னை முளை கெட்டவன்னு நினைச்சியா? இப்பதான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுனே. வீட்டுக்கு வா போகலாம்னு கூப்டே… மாத்தி பேசுறே. என்ன நடந்துச்சுன்னு இதே தைரியத்தோட சொல்லுடி.”

 

அவர்கள் வீட்டில் இருந்து கொண்டே அவர்களை எப்படி குறை சொல்ல முடியும்? என்ற யோசனை ஒரு புறம். ஆனாலும் இவனோடு சகித்து வாழ முடியாது என்ற யோசனை மறுபுறம். அம்மாவோடு புறப்பட்டு சென்று விட்டால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், தப்பும், தவறுமாக பேசி அம்மாவை நோகடித்து விடுவார்களோ என்ற அக்கறை ஒருபுறம். நல்லபடியா திருந்தி வந்து விடுவானா என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம். என்று ருக்குவின் மனது அலை பாய்ந்து எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறியது. இறுதியில் ருக்குவின் நாத்தனார் முன்வந்து முடிவு சொன்னாள்.

 

கோமதி, “அத்தை நீங்க ருக்குவ வீட்டுக்கு கூட்டிட்டு போங்க. நாங்க எங்க அண்ணன் கிட்ட பேசி பெறக்கி அனுப்பி வைக்கிறோம். அப்படியே உங்க கூட வச்சிருந்து விருந்து சோறு போட்டு முடிச்சு நிதானமா அனுப்பி வையுங்க. நீங்களும் மகளுக்கு நல்லது பொள்ளது எடுத்துச் சொல்லுங்க. நாங்க எங்க அண்ணனுக்கு நல்லது பொள்ளத சொல்லி அனுப்பி வைக்கிறோம். எங்க அண்ணனோட நடவடிக்கை உங்களுக்கு பிடிக்காட்டி நீங்க என்ன முடிவு எடுத்தாலும் நாங்க கட்டுப்படுவோம்.”

 

மாரியம்மா, “சரி கோமு. நீ சொல்றதும் சரிதான். மருமகன் வரவும் சொல்லி அனுப்பி வையுங்க. நான் இப்போ என் புள்ளைய கூட்டிட்டு கிளம்புறேன்.” என்று ருக்குவை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார்.

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்