
மரம் தேடும் மழைத்துளி1
ஊதுபத்தியின் உபாயத்தால், அந்த அறை முழுவதும் சந்தன நறுமணம் வியாபித்து இருந்தது. அந்த அறையின் வாயிலுக்கு நேர் எதிரில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு அதன் முன்பு தேங்காய், பழம், தாம்பூலம், பால் சொம்பு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு இரண்டு அடி தள்ளி புத்தம் புதிய ஜமுக்காளம் விரிக்கப்பட்டு, பச்சையும் மஞ்சளுமாய் தலையணை இரண்டு போடப்பட்டிருந்தது. ஜமுக்காளத்தில் மல்லிகை பூக்கள் தூவி விடப்பட்டு இருந்தது. அந்த ஜமுக்காளத்தில் இடக்கை ஊன்றி, காலை வளைத்து அழகோவியமாய் ருக்மணி அமர்ந்து, புது வாழ்வை தொடங்க காத்திருந்தாள். அவளுக்கு துணையாக அவளது நாத்தனார் கோமதி உடன் இருந்தாள்.
கோமதி, “ருக்கு, கீழ உன்னோட அண்ணன் (கோமதியின் கணவன்,) சத்தம் கேட்குது நீ… இங்க இரு. நான் போய் பார்த்துட்டு வந்துடறேன்.” என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
மௌனமாய் தலையசைத்தாள் ருக்மணி. ஆனால் மனது படபடப்பாய் உணர்ந்தாள். புதிதாய் தனியறையில் தனியாக அமர்ந்திருப்பதன் காரணம் விளங்கினாலும், ஏதோ ஒரு சொல்ல முடியாத படபடப்பு அவளுக்குள் இருந்து கொண்டே இருந்தது. அந்த படபடப்பே அவளது கழுத்து வளைவுகளில், கண்ணீராய் வியர்த்து வழிந்தது. சொந்த அத்தை மகன், பழக்கமானவன் என்றாலும் தற்போது புதியவனாய் தோன்றினான்.
கல்யாண பந்தலிட்ட அந்த வீட்டின் முன்பு, போக்குவரத்துக்கு இடையூறாய் நான்கு சேர்களில், நண்பர்கள் நால்வர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அன்றைய காலகட்டத்தில் சேத்தூர் என்னும் ஊரில் அவ்வளவாக போக்குவரத்து நெரிசல் இல்லாததும், இரவு நேரமாக இருப்பதாலும் இவர்களை யாரும் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை.
முருகன், “மாப்பிள்ளைகளா போதுண்டா. ரொம்ப ஊத்திட்டிங்க. இதுக்கு மேல குடிச்சு குப்புற அடிச்சு விழுந்துட்டீங்கன்னா… உங்க அம்மாமாருக என்ன சும்மா விட மாட்டாவோ. கிளம்பிரியளா.”
கணேசன், “நீ கல்யாண மாப்ள. அதனால குடிக்காம இருக்கே. அதைக் கூட விட்டு தள்ளு. என்னோட கல்யாணத்துல உங்களை எல்லாம் எப்படிடா கவனிச்சேன்? உங்கள முழுசா தண்ணியிலேயே குளிப்பாட்டி உறங்க வச்சதுக்கு அப்புறம்தான், நான் சாந்தி முகூர்த்தத்துக்கே போனேன். அதெல்லாம் நினைச்சு பார்த்தியாடா மாப்ள?” என்றான் குளறலாக.
கருப்பு, “நீ.. இப்போ எங்களை உறங்க வைக்காம போனேனா… நான் உனக்கு விடிய விடிய போன்பண்ணி, சாந்தி முகூர்த்தம் நடக்க விடாமல் பண்ணிடுவேன் பார்த்துக்கோ.” என்றான் தடுமாறியபடி
கதிர், “மாப்ள நீ உன்னோட போனை சைலன்ட்ல போட்டுடு.”
முருகன், ”சைலன்ட்ல போட்டாலும் லைட் எரியுமேடா.”
கதிர், “கருப்புவோட உபகாரத்தால உனக்கு இருட்டு இல்லாமல் இருக்குமேடா. சந்தோசமா இரு.”
கணேசன் பலமாக சிரித்தபடி, கருப்புவை கைகாட்டி, “அவன் சொல்றது விளங்குதா… நீயி விடிய விடிய விளக்கு பிடிக்கப்போன்னு அவன் சொல்றான். பேந்த பேந்த முடிச்சுட்டு இருக்கியேடா?” என்றான்.
கருப்பு எழுந்து கதிரை நோக்கிப்பாய. தடுமாறி கீழே விழுந்தான்.
முருகன், பல்லை கடித்துக் கொண்டு. “சத்தம் போட்டு பேசாதீங்க, சலம்பல் பண்ணாதீங்கன்னு சொல்லிக்கூட்டிட்டு வந்தும். மானத்தை வாங்குறீங்கடா. ரெண்டு பேரும், இவனை, அவன் வீட்டில விட்டுவிட்டு கிளம்புங்கடா.” என்று எரிச்சலோடு சொல்லிவிட்டு, வீட்டுக்குள் சென்றான்.
கதிரும், கணேசனும், முருகனை “மாப்பிள சாரிடா…” என்று வெளியில் இருந்து சத்தமாக சொல்லிவிட்டு. கருப்புவை அழைத்துக் கொண்டு சென்றார்கள்.
வீட்டுக்குள் சென்ற முருகனை அவனது தங்கை கோமதி, “இன்னைக்கு உனக்கு கல்யாணம். இன்னைக்கும் இவங்கள கூட்டிட்டு பாதிராத்திரி வரைக்கும் அலைஞ்சின்னா… என்னண்ணா அர்த்தம்?”
முருகன் தங்கையின் தலையில் செல்லமாய் தட்டியவன், “இன்னைக்கு வந்த பொண்டாட்டிக்காக, காலங்காலமா இருக்க நட்பை விடச்சொல்றியா?”
“உன்னைய விசாரிச்சவேன், பொண்ணு குடுக்க மாட்டான். ஏதோ என் தம்பி பொண்டாட்டி ஏமாந்தவளா இருக்கப் போய் கட்டிக் கொடுத்துட்டா. போவனே (போ இவனே) போய் படுக்க பாரு”. என்று பல்லை கடித்தார் அவனது தாய் பார்வதி.
முருகன், “உன் தம்பி பொண்டாட்டிக்கு, காலணா காசு செலவழிச்சு கட்டிக் கொடுக்க கெதி இல்லை. அதனால நம்ம தலையில கட்டி வச்சிருக்காவோ. நீ என்னம்மா பெருமையா பேசறே”.
கோமதி, “சத்தத்தை குறைச்சு பேசுங்க. மாடியிலே புது பொண்ணு இருக்கு. மாடி கிலோமீட்டர் தூரம் இல்லை.”
முருகன் அமைதியாக, தன்னுடைய தங்கையிடம், “மாமா, பிள்ளைகளை காணும்மா?” என்று கேட்க
“நீயும் உன் கூட்டாளிகளும் அடிச்ச கொட்டத்துல, மாமா, பிள்ளைகளை கூட்டிட்டு அப்பதயே(அப்போதே) போயிட்டாரு.”
“எலி ஏன் அம்மணமா போகுதுன்னு கேட்டாலும், அதுக்கும் என் அண்ணன் தான் காரணம்னு சொல்வ போல இருக்கே. நீ ஏன் வீட்டுக்கு போகல?”
“சாந்திமுகூர்த்தம் முடிஞ்சதும், உன் பொண்டாட்டியை, காலையில் நான்தான் எழுப்பி விட வரணும். அது சம்பரதாயம் அதுக்குதானிருக்கேன். போகச் சொன்னா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. எம்மோய்… நான் கிளம்புறேன். உன் மகன், புது மாப்பிள்ளை திமிர காட்டுறான். ”
பார்வதி, “கோமு, கோமு. இருடி. அவன் கிடக்கான். நான் ஒத்தைல கெடந்து சீரழியுறேன்னு சொல்லி நிப்பாட்டி வச்சிருக்க புள்ளைய வெரட்டுறியேடா. ஒரு மாமன் மச்சான் வந்தால் மரியாதையா நடந்துக்கணும். நீயி நடந்துகிட்டது எப்படினு உனக்கே தெரியும். அதை கேட்ட பிள்ளைய வெரட்டுறேயே “ஏலேய் குறுக்கு விசாரணை செஞ்சதெல்லாம் போதும்டா. போய் படுடா சாமி. குறிச்ச நேரம் தப்பிட போகுது.”
முருகன், “சாந்தி முகூர்த்தத்திற்கு எந்த வீட்டுலையும், பெத்தவளும், பிறந்தவளும், வழி அனுப்பி வச்ச சரித்திரம் இல்ல. நம்ம வீட்டுல மட்டும்தான் எல்லாம் தலைகீழா நடக்குமே. இவளை கட்டின மாப்பிள்ளை இருந்திருந்தால், அவர் கிட்ட சொல்லிட்டு போயிருப்பேன். அவரு, என்ன சாக்குபோக்கு சொல்லி நழுவிக்கலாம்னு ஓட்டமா ஓடிட்டாரு. ச்சை.” என்று சலிப்பாய் சொல்லிக்கொண்டு மாடிப்படி ஏறினான்.
‘“அரை மணி நேரத்துக்கு ஒருக்கா அவனுக்கு, அவன் அப்பன் புத்தி வந்துரும் போல.” என்று சொன்ன பார்வதி. வாசல் கதவை அடைத்து விட்டு கோமு வீட்டை தூத்து பேருக்கு. நம்மளும் படுக்கலாம்.” என்று உறங்க ஆயத்தமானார்கள்.
மாடியில் இருக்கும் தனியறை கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான் முருகன்.
முருகனை பார்த்த ருக்மணி தடால் என்று எழுந்து நின்றாள். பரவால்ல உட்காரு என்று சொல்லுவானென்று எதிர்பார்த்து ஏமார்ந்து போனாள்.
“பரவாயில்லையே மாமன் மகளுக்கு மரியாதை எல்லாம் தெரியுதே” என்று மனைவியை மனதிற்குள் மெச்சி கொண்டான். சுவற்றின் அருகில் சென்று நின்ற முருகன், தனது சட்டையை கழற்றி அங்கே அடிக்கப்பட்டிருந்த ஆணியில் மாட்டி வைத்துவிட்டு வேகமாக அவள் அருகில் வந்து நின்றான்.
ருக்மணி, ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்தாள். ஆனால் முருகனுக்கு பேசும் எண்ணம் துளியும் இல்லை. ஜில்லிட்டு இருந்த அவளது இரண்டு கைகளை வேகமாக பற்றி பிடித்தான்.
முதல் தொடுகையிலேயே மிரண்டு விழித்தாள் ருக்மணி.
முருகன், அவளது பார்வை தொடுக்கும் கேள்வியின் அர்த்தம் புரிந்து கொண்டு, “நம்ம ரெண்டு பேரும் குழந்தையிலிருந்தே, நிறைய பேசிட்டோமே. இப்போ பேச என்ன இருக்கு? என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னவன். அவளது இரண்டு கைவிரல்களையும் தனது உதட்டின் அருகில் கொண்டு வந்தான்.
அடுத்து நடக்க இருப்பதை அறிந்த ருக்மணி கண்களை இறுக முடி கொண்டாள்.
அவளது இரு கை விரல்களில் அழுத்தமாக இதழை பதித்தபடியே, அவள் முக வசீகரத்தை முகர்ந்து பார்த்தான்.
கூரிய மூக்கின் வலப்புறத்தில், ஒற்றைக் கல் பதித்த மூக்குத்தி. அந்த மூக்கின் அழகை இருமடங்காய் காண்பிக்கிறது. அழகிய நெற்றி அளவாய் இரண்டு புருவங்களும் அத்தை மகன் செய்கையில் சுருக்க முடிச்சுகளாய் இருந்தாலும் பார்க்க அழகாகவே இருக்கிறது.
சின்ன இதழ்கள் குவிந்து, தீயை தீண்டியது போல பாவனை காட்டியது.
அவளது இரு கைகளையும், தனது இரு தோள்களின் மேல் வைத்துவிட்டு. அவளது இடைய பிடித்து தன்னோடு நெருக்கி இறுக்கி அணைத்தான் முருகன்.
பிடிக்கவில்லை என்றாலும், உடன்பட்டு நின்றிருந்தாள் ருக்மணி.
அவளது இடப்புறம் கழுத்தில் முருகனின் இதழ்கள் மேய்ந்து கொண்டிருக்க, வாகாய் சாய்ந்து கொடுத்தாள் ருக்மணி.
மெல்ல அவளது முகம் முழுவதையும் உதட்டால் அளந்து முடித்த முருகன், தனது இதழால் ருக்மணியின் இதழ்களை சிறை பிடித்தான். அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் தவித்து நின்று கொண்டு இருந்தாள் ருக்மணி.
முருகன். அவளது உதட்டை கடித்து, இழுத்து விட்டவன். அவளது முகத்தை, முகத்தின் அருகில் வைத்து ஆராய்ந்து பார்த்தான்.
ருக்மணி முகம் சுண்டி போய், கண்களை மூடிக்கொண்டு இருந்தாள்.
முருகன், அவள் காதுகளில், “நான் உன்ன தொட்றது உனக்கு அவ்வளவு அருவருப்பா இருக்கா?” என்று கேட்க.
இறுக்கமாய் முடிய விழிகள் இரண்டையும் விரைவாய் திறந்து பார்த்தாள் ருக்குமணி.
“என்னடி பார்வை? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. நான் தொடுறது உனக்கு பிடிக்கலையா?|” என்று தன்னுடைய கைகளுக்குள் அடக்கிப் பிடித்துக் கொண்டு, அவளிடம் கேட்டால் எப்படி பதில் சொல்வாள்? என்ன பதில் சொல்வாள்.? வாயடைத்து போய் மிரட்சியாய் பார்த்தாள்.
ருக்மணி, அவளது கைகள் இரண்டையும் முருகனின் மார்பில் ஊன்றியபடி, அவன் முகத்தை உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
முருகன், “என்னை தள்ளிவிட்டு போக தயாரா நிக்கிறே போல.” என்றும் கேட்க
ருக்மணி, தனது கையை தளர்த்திக் கொண்டாள். எந்த புறத்தில் கைகளை பாேடுவது என்று தெரியாமல், பதில் ஏதும் சொல்லாமல் அரண்டு விழித்தாள்..
“நான் எவ்வளவு ஆசையா வந்தேன். அந்த ஆசையை, அடியோடு துடைக்கிற மாதிரி நடந்துக்கிட்டு. இப்போ ஒன்னும் தெரியாத பச்சை புள்ள மாதிரி மூஞ்ச வெச்சுகிட்டு இருக்கிறே. என்னை உனக்கு பிடிக்கலையா டி?”என்று ருக்மணியை உலுப்ப.
“பிடிச்சிருக்கு, பிடிச்சிருக்கு. பிடிச்சிருக்கு”. என்று அடுக்கு மொழியில் வேகமாய் சொன்னாள்.
“யாரை பிடிச்சிருக்கு?”
ருக்மணி, “அடிப்பாவி, சண்டாளி. இவன்கிட்ட கொண்டுவந்து விட்டுட்டு போயிட்டயே.” என்று தனது தாயை மனதுக்குள் வசை மொழிந்தாள்.
முருகன், தன்னுடைய பிடியை தளர்த்தி, அவளை விட்டு விட்டு. “உன்னை பார்த்தாலே எனக்கு கோபம்தான்டி வருது. என்று தள்ளிவிட்டு. கதவைத் திறந்து கொண்டு வெளியேறி சென்றான்.
முருகன், தள்ளியதில் தடுமாறி கீழே விழுந்த ருக்மணி, “இவன் ஏன் இப்படி நடந்துக்கிறான்? ஆயுள் தண்டனைல வந்து சிக்கிட்டோமே. எப்படி இதில் இருந்து மீண்டு வெளில போகப்போகிறோம். கடவுளே… என்னை ஏன் இப்படி கொண்டு வந்து கோர்த்து விட்டுட்டே? நான், யாருக்கு என்ன துரோகம் செஞ்சேன்?” என்று எண்ணிக் கொண்டே கண்ணீர் சிந்தினாள்.
வெளியேறி சென்ற முருகன், மாடியில் இருந்து தன்னுடைய வீட்டின் வாயிலை எட்டிப் பார்த்தான். கதவு அடைக்கப்பட்டதால் வெளிச்சம் தெரியவில்லை. வேகமாக கீழே இறங்கி வந்து, தன்னுடைய பைக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குவாட்டர் பாட்டிலை கையில் எடுத்து, அப்படியே திறந்து வாயில் ஊற்றிக் கொண்டான். ஆள் அரவம் அற்று இருந்த வீதியில், சிகரட்டை பற்ற வைத்துக்கொண்டு அங்கும் இங்குமாக உலார்த்திக்கொண்டு இருந்தான்.

