அத்தியாயம் 8
கார்த்திகைசெல்வன் பெங்களூர் சென்று இருபது நாட்களை கடந்துவிட்டது. பரமேஸ்வரன் மட்டும் அவ்வபோது அழைத்து பேசுவார்.
கண்ணகி இன்னும் மகன் மேல் இருக்கும் கோபத்தில் அவனுக்கு அழைக்காமல் இருக்க, அதை பயன்படுத்திக் கொண்ட தேவதர்ஷினி அவர் பெயரை சொல்லியே தினமும் ஒருமுறையாவது அழைத்து பேச ஆரம்பித்தாள் கணவனிடம்.
“அத்தை சொன்னாங்க!” என்ற வார்த்தைகளோடு அவளுக்கு தேவையான கேள்விகளை இணைத்துக் கொள்வாள்.
“நிரஞ்சா! மழை அதிகமாகற மாதிரி இருக்கு. தேவா இன்னும் வீட்டுக்கு வர்ல. போய் ஒரு எட்டு பார்த்துட்டு வாயேன்!” கண்ணகி இளைய மகனிடம் சொல்ல,
“கால் பண்ணி எங்க இருக்காங்கன்னு கேளுங்க ம்மா!” என்றான் நிரஞ்சன்.
“கால் போகல டா. தெரிஞ்சா சொல்ல மாட்டேனா? அப்படியே அந்த ஸ்கூல் வர போ. வழில பார்த்துட்டே போ! எங்கேயாவது மழைக்கு ஒதுங்கி நிக்க போறா!” என்று சொல்ல, குடையை கையில் எடுத்துக் கொண்டு நிரஞ்சன் வாசல் வரவும் வேகமாய் ஓடி வந்து வாசலில் நின்றாள் தேவதர்ஷினி.
“ம்மா அண்ணி வந்தாச்சு!” என்று நிரஞ்சன் சத்தமிட,
“தேடிட்டாங்களா? அதனால தான் வேகமா வந்தேனே!” என்றவள் மொத்தமாய் நனைந்திருந்தாள் மாலையில்.
“என்ன தேவா!” என பார்த்ததும் ஓடி வந்து கண்ணகி டவலை எடுத்து கொடுக்க,
“டீச்சர் குடை எடுக்காம போகலாமா? என்ன அண்ணி நீங்க?” என்று சொல்லி சிரித்துவிட்டு சென்றான் நிரஞ்சனும்.
“ப்ச்! இங்க வா நீ!” என அழைத்து வந்து அவள் முடிகளை உலர்த்தி,
“சளி பிடிக்க போகுது! இதுக்கா உன் வீட்டுக்கு என் பொண்ணை அனுப்பினேன்ன்னு கேட்க போறா உன் அம்மா!” என கண்ணகி சொல்ல,
“அம்மா உங்களை எதிர்த்து கேட்குறதா? நடந்த மாதிரி தான்!” என சிரித்தாள் தேவதர்ஷினி.
“சிரிக்குற நீ!” என்று முறைத்த கண்ணகிக்குமே சிரிப்பு வந்தது மருமகள் புன்னகையில்.
“இவ்வளவு நேரமா என்ன பண்ணின நீ ஸ்கூல்ல?” கண்ணகி கேட்க,
“அனுஅல் டே நெருங்கிட்டே அத்தை. ஸ்கூல் முடிஞ்சதும் டான்ஸ் சொல்லி குடுத்துட்டு வர லேட். இதுல மழை வேற!” என எழுந்து கொண்டவள்,
“தூங்கும் போது ஃபேன்ல காஞ்சிடும்!” என்றாள் முடியை மொத்தமாய் க்ளிப்பில் அடக்கி.
“தூங்கும் போது முடியை விரிச்சு போட்டு தூங்க கூடாது. சரி வா சாப்பிடலாம்!” என கண்ணகி அழைத்துக் கொள்ள, சாப்பிட்டு முடித்து ஒன்பது மணிக்கு அறைக்கு வந்தாள்.
கையில் அலைபேசியை எடுத்துப் பார்க்க, அழைப்பு எதுவும் இல்லை. வர போவது இல்லை என தெரியும் தான் ஆனாலும் ஒரு ஏமாற்றம்.
இத்தனை நாட்களில் ஒருமுறை கூடவா தனக்கு அழைக்க அவனுக்கு தோன்றவில்லை என ஒரு ஏக்கம்.
“தேவா!” என அறைக் கதவை தட்டும் சத்தத்தில் அவள் கதவை திறக்க,
“இந்த விக்ஸை தேய்ச்சிக்கோ எதுக்கும். காலைல கஷாயம் போட்டு தர்றேன்!” என்ற கண்ணகியை கனிவாய் கண்டாள் தேவதர்ஷினி.
“போன்ல யாரு?” கையில் போனை வைத்தபடி நின்ற தேவதர்ஷினியிடம் கேட்ட கண்ணகி,
“கார்த்தியா?” என கேட்கயில் அவர் கண்களில் தான் அத்தனை ஆர்வம்.
“ஏன் அத்தான்கிட்ட பேசனுமா த்தை?” தேவதர்ஷினி கேட்க,
“நான் ஏன் அவன்கிட்ட பேச போறேன். ஆமா நீ பேசுற தானே? உனக்கு பன்றான் தானே?” என சந்தேகமாய் பார்த்து அவர் கேட்க,
“ம்ம் பேசிட்டு தான் இருக்கேன் த்தை. இப்ப கூட அவங்களுக்கு தான் கால் பண்ண போறேன். வாங்க பேசலாம்!” என்று சொல்லி அவர் கைகளை பிடிக்க,
“அவன்கிட்ட நான் பேச என்ன இருக்கு? பேச கூடாதுன்னு தான் பேசாம இருக்கேன்” கோபமாய் சொல்லியவரை விடுத்து கார்த்திக்கு அழைத்துவிட்டு இருவரும் கேட்க தேவதர்ஷினி ஸ்பீக்கர் ஆன் செய்து காத்திருக்க,
“சொல்லு தேவா!” என்ற மகனின் குரலில் கண்கள் எல்லாம் விரிந்து மலர்ந்தது கண்ணகிக்கு.
தேவதர்ஷினியும் அதில் நம்பாமல் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் என போனைப் பார்க்க,
“பேசு தேவா!” என வாயசைத்தார் அவர்.
‘சொல்லு தேவாவாமே!’ என அவன் இத்தனை இயல்பாய் சாதாரணமாய் அழைக்கிறானே. இவர்களுக்குள் பிரச்சனைகள் எல்லாம் இல்லை போல என அத்தனை மகிழ்ச்சியை அந்த இரண்டு வார்த்தைகள் பெற்றவருக்கு கொடுத்துவிட்டது.
“ஹ்ம்! இப்ப ஓகே! இதை முடிச்சு அனுப்பிடுங்க!” என அங்கே யாருடனோ கூறிய கார்த்திகைசெல்வன்,
“ஹெலோ!” என போனில் அழைக்க,
“ஹான்! நான் தான்!” என்றாள் தேவதர்ஷினி.
“ஹ்ம்!” என்று மட்டும் இப்பொழுது வர, தான் இடைஞ்சலாக வேண்டாம் என கிளம்பப் பார்த்தார் கண்ணகி.
அவர் கைகளைப் பிடித்துக் கொண்டவள், “வேலையா இருக்கீங்களா?” என கேட்க,
“ஹ்ம்! ஆபீஸ்ல இருக்கேன்!” என்றான்.
“அத்தை பேசுறாங்க!” என பேச மாட்டேன் என்றவர் கைகளில் கொடுத்துவிட்டாள் மொபைலை.
“ஆபீசை எத்தனை வருஷத்துக்கு குத்தகைக்கு எடுத்திருக்க கார்த்தி?” கண்ணகி கேட்க,
“ம்மா!” என்றான் அவர் கிண்டல் புரிந்ததில்.
“நான் கோவமா பேசலைனா நீயும் என்னை கண்டுக்க மாட்ட இல்ல. சரி தான் அப்படியே இருந்துக்க. இப்ப என்ன ராத்திரி ஒன்பது மணிக்கு ஆபீஸ் வேலை?” என்றார்.
“ப்ராஜெக்ட் முடிச்சு குடுக்கணும் ம்மா. இன்னும் ஒரு ஒரு வாரம் அப்படி தான் இருக்கும்” என்றான் கார்த்திகைசெல்வனும்.
“அப்ப எப்ப தான் வீடு பார்த்து இவளை கூட்டிட்டு போக போற? இவ இங்க வேலைக்கே போக ஆரம்பிச்சுட்டா டா என் பேச்சை கேட்காம!” என சொல்ல, பதில் சொல்லவில்லை அவன்.
“வெளில கேட்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியல. லீலா உன் மாமியாரா இருக்க போய் நீ ஆடுற! சுந்தரி மாதிரி மாமியார் வாச்சிருந்தா தெரியும் உனக்கு!” என்றும் சொல்ல,
“அய்யோ த்தை! என்ன அவங்களை போய் பேசிகிட்டு!” என போனை வாங்கியவள்
“ஓகே பாருங்க!” என்று சொல்லி வைத்துவிட்டாள்.
“புருஷனை காப்பாத்துறியோ?” என அதற்கும் கண்ணகி முறைக்க,
“என்னத்தை நீங்க? அவங்க பிஸியா இருக்க நேரம் போய் சொன்னதையே சொல்லிட்டு இருக்கீங்க. அவங்களா கூட்டிட்டு போகும் போது போய்க்கிறேன். ஏன் நான் இங்க இருக்க கூடாதா?” என திருப்பிவிடப் பார்த்தாள் தேவதர்ஷினி.
“இருக்க கூடாது தான். அவ அவ புருஷன் கூட தான் அவ அவ இருக்கனும். அது தான் அழகு!” கண்ணகி முறைத்துக் கொண்டே சொல்ல,
“அதெல்லாம் பார்த்துக்கலாம். இப்படி உம்முன்னு போகாதீங்க” சமாதானம் செய்தாள்.
கார்த்திகைசெல்வனும் அதைப் பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தான்.
நேற்று கூட பரமேஸ்வரன் அழைத்து தேவதர்ஷினியை அழைத்து செல்ல சொல்லி கூறி இருந்தார்.
லீலா பேசுபதி பேசவில்லையே தவிர அவர்களுக்காக என சுந்தரியும் கணேசனும் இடையில் அழைத்து, “வீடு பார்த்துட்டியா கார்த்தி? அடுத்த மாசத்துல ஆறு நல்ல நாள் இருக்கு. நீ பார்த்துட்டன்னா தேவாவை என்னைக்கு பெங்களூர் கூட்டிட்டு போகனு நாங்களும் நல்ல நாள் பார்க்க ஆரம்பிச்சுடுவோம்” என்று கூறி இருக்க,
“பார்த்துட்டு சொல்றேன் மாமா!” என்று சொல்லி வைத்துவிட்டான்.
திருமணமான இந்த ஒரு மாதத்தில் ஓரளவு அமைதியாகி இருந்தான் கார்த்திகைசெல்வன்.
அனைவரும் பேச பேச அவனுக்குமே புரிந்துவிட்டது இனி தான் தனியே இருப்பது சரி இல்லை என்று.
அடுத்த இரண்டு நாட்களுக்கு சுத்தமாய் எழுந்து கொள்ளவில்லை தேவதர்ஷினி. காய்ச்சலில் சுருண்டு விட்டாள்.
“படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டாளா? இப்படி மழைல நனைஞ்சுட்டு வந்து முடியாம படுத்து… தேவையா? லீலா என் பொண்ணை என்ன பண்ணீங்கன்னு கேட்க போறா!” என சொல்லி சுடுதண்ணீர் வைத்து மாத்திரை கொடுத்து தூங்குபவள் கைகால்களைப் பிடித்துவிட்டு என கூடவே இருந்து தேவதர்ஷினியை பார்த்துக் கொண்டார் கண்ணகி.
மூன்றாம் நாள் காலை தான் கொஞ்சமாய் தேறி வந்தாள். ஆனாலும் வேலைக்கு அனுப்பவில்லை கண்ணகி.
அன்று மதியம் வரை கண்ணகியுடன் அமர்ந்து பேசிக் கொண்டு அவர் கொடுப்பதை சாப்பிட்டு என நேரத்தை கடத்தியவள் அதன்பின் சோர்வாய் இருக்கவே உறங்கலாம் என மாடிக்கு வந்தாள்.
வந்ததும் அலைபேசியை கையில் எடுத்துப் பார்க்க, கார்த்திகைசெல்வனிடம் இருந்து மூன்று தவறிய அழைப்புகள்.
நேரத்தைப் பார்த்தவள் உடனே அவனுக்கு அழைத்து வைக்க, “எவ்வளவு நேரமா கூப்பிடுறது? அம்மாவும் போனை எடுக்கல. என்ன பண்றீங்க?” என்றான் எடுத்ததும்.
“நானும் அத்தையும் பின்பக்கமா முருங்கை இலையை பறிச்சுட்டு இருந்தோம் த்தான். என் போன் மேல இருந்துச்சு. அதான் கவனிக்கல. அத்தை எங்க வச்சிருக்காங்கன்னு தெரிலயே!” என பதட்டமாய் வேகமாய் பேசினாள்.
“இன்னும் சரியாகலையா?” அவன் கேட்க,
“என்ன?” என்றாள் புரியாமல்.
“ஃபீவர் இன்னும் சரியாகலையா?” என்றான் அவள் குரல் தடித்து வந்ததில். அதற்கே அத்தனை மகிழ்ந்துவிட்டது தேவாவின் மனம்.
நேற்றுக்கு முந்தைய நாளே பரமேஸ்வரன் அவளுக்கு காய்ச்சல் என சொல்லி இருக்க, இரண்டு நாட்களாய் எழுந்து கொள்ளாதவள் அவனிடமும் பேசியிருக்கவில்லை.
இன்று அவனே அழைத்ததோடு நலம் விசாரிக்க, அத்தனை மகிழ்ச்சி தேவதர்ஷினிக்கு.
“ஹெலோ!” அவன் மீண்டும் அழைக்க,
“ஹான் த்தான்! எனக்கு ஒண்ணுமில்ல. இதோ அத்தைகிட்ட கொடுக்கறேன்!” என அறையில் இருந்து வெளிவரப் பார்க்க,
“இருக்கட்டும்! நான் அப்புறமா பேசிக்குறேன்!” என்று சொல்ல,
“எதுக்குத்தான் கூப்பிட்டீங்க?” என்றாள்.
“ஹ்ம்!” என்றவன் அமைதியாகிவிட,
“அத்தைகிட்ட சொல்லலாமேன்னு தான் கேட்டேன். நீங்களே கூட பேசிக்கோங்க!” என அவன் தயக்கத்தை வைத்து தேவதர்ஷினி சொல்ல,
“இங்க போன வாரம் ஒரு வீடு பார்த்தேன். அதான் சொல்லலாம்ன்னு!” என்றதில் அவள் கண்கள் எல்லாம் விரிய,
“நெக்ஸ்ட் மந்த் லாஸ்ட் நீ வர்ற மாதிரி இருக்கும். இப்ப கொஞ்சம் வேலை அதிகமா இருக்கு!” என்றதில் கண்கள் கூட இமைக்கவில்லை இவளுக்கு.
“ஹெலோ! இருக்கியா?” என அவன் அழைக்கவும்,
“ஹ்ம்! இருக்கேனே!” என்றாள் இதழ் விரிந்த நிலையில்.
“ஓகே! அம்மாகிட்ட சொல்லிடு!” என்று சொல்லி வைத்துவிட்டான்.
உடனே அலைபேசியோடு அவள் கீழே இறங்கி ஓடிவர,
“என்ன தேவா? ஏன் இப்படி ஓடி வர்ற?” என ஹாலில் இருந்து பார்த்த கண்ணகி கேட்க,
“த்தை! அத்தான் பேசினாங்க. வீடு பார்த்தாங்களாம். அடுத்த வாரம் கூட்டிட்டு போறதா சொல்ல சொன்னாங்க!” என்று கூறுவதற்குள் தேவதர்ஷினி முகமெல்லாம் சிவந்து கிடக்க, கண்ணகிக்கு அதில் தான் சந்தோசமே!.
‘இதே மாதிரி எப்பவும் இவ இருக்கணும்! பார்த்துக்க டா கார்த்தி!’ என மனதார நினைத்துக் கொண்டார்
தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
18
+1
+1
2