அத்தியாயம் 23
“சரி நீயே சொல்லு! என்ன பண்ணலாம்? ஊருக்கு போவோமா?” என கணவன் கேட்க, பாவமாய் பார்த்தாள் தேவா அவனை.
“நிஜமா தான் தேவா! உனக்கு போகணும்னு இருக்கு தானே?” என கார்த்தி கேட்க, உண்மை தான் என்றாலும் ஆமாம் என்று கூறிவிட முடியவில்லை அவனிடம்.
ஒரு வாரம் தான் ஆகிறது வந்து. அதற்குள் எப்படி? என அவள் விழித்தாள்.
“ஓகே! டிக்கெட் பாக்குறேன்! போகலாம். உனக்கும் கோல்டு சரியாகல தானே? நீயும் அத்தை கூட ஒரு வாரம் இருந்துட்டு வா. நான் அப்புறமா கூப்பிட வர்றேன்!” என சொல்லியவன்,
“அம்மாகிட்ட சொல்லிடலாம்!” என சொல்லி கண்ணகிக்கு அழைத்தான்.
தேவதர்ஷினியை பிரிந்தது தான் லீலாவின் உடல்நிலை பாதித்ததற்கு பெரிய காரணமே!
நித்தமும் மகளின் நியாபகம். இத்தனை நாள் என்பதை போல வீட்டிற்கு தூரமாய் எங்கும் சென்றதே இல்லையே அவள். என மகளின் நியாபகம் தான் எப்பொழுதும்.
அதுவும் எதையும் யாரிடமும் சொல்லி பழக்கமில்லை எனும் போது தனக்குள் வைத்து அழுத்திக் கொண்டது தான் லீலாவிற்கு.
தேவதர்ஷினியும் அன்னையை போல தான் அழுகையை அடக்கிக் கொண்டு கணவனைப் பார்த்தபடி இருந்தவள் தவிப்பு புரிந்து தானே கேட்டுவிட்டான் கார்த்திகைசெல்வன்.
ஆறுதலாய் கூடவே இருந்தாலும் அவள் மனமும் புரிய தான் செய்தது அவனுக்கு.
“சொல்லு கார்த்தி! என்ன பண்ற? தேவா எப்படி இருக்கா?” என எடுத்ததும் கண்ணகி கேட்க,
“அத்தை எப்படி இருக்காங்க ம்மா?“ என கேட்டவன் பேசிவிட்டு தாங்களும் வர இருப்பதாய் கூறினான்.
“சரி தான். இப்படி கை வலி கால் வலினு எல்லாம் எல்லாரையும் பார்க்க சுத்திட்டு இருந்தா எப்படி?” என கண்ணகி சொல்ல,
“ம்மா! தேவாவும் கேட்டுட்டு இருக்கா!” என்றான் கார்த்தி.
“கேட்கட்டுமே டா! உங்களை அங்க தங்க வச்சுட்டு வந்து ஒரு வாரம் ஆகலை நாங்க வீடு திரும்பி. அதுக்குள்ள வரேன்னு சொன்னா நான் என்ன சொல்ல? ஆமா லீலாக்கு முடியலைனு உங்களுக்கு யார் சொன்னா?” என அவர் கேட்கவும்,
“அப்பா தான் சொன்னாங்க!” என்றாள் தேவா கம்மியாகிவிட்ட குரலில்.
“பசுபதியா? அவனை…” என அங்கே தம்பியை கண்ணகி திட்ட ஆரம்பிக்க, அழுகை நின்று பாவமாய் பார்த்தாள் மீண்டும் தேவதர்ஷினி.
“ஒரே பொண்ணுன்னு கைக்குள்ள வச்சு பார்த்துட்டு இப்ப அவளை அனுப்பி வச்சுட்டு பிபியை கூட்டி வச்சிருக்கா. நீ வந்தா மட்டும் சரியா போயிருமா? இன்னும் இழுத்து வச்சுப்பா அதுக்குள்ள உன் புருஷன் கூட நீ சண்டையோன்னு பயந்து. ஏன் நாங்க எல்லாம் பார்த்துக்க மாட்டோமா?” என தேவாவிடம் கேட்ட கண்ணகி,
“அவனுக்கு என்னவாம்? இங்க கை வலி கால் வலினு அங்க போன் போடுவானா ஒவ்வொரு முக்குக்கும்?” என பசுபதியை விடவில்லை.
“இந்த அத்தை உன் அம்மாவை நல்லா பார்த்துப்பேன்னு நம்புறியா இல்லையா நீ?” என கேட்க,
“அத்தை!” என்றாள் அதிர்ச்சியோடு.
“அவ்வளவு தான் சொல்ல முடியும். அவளும் வாயில்லா பூச்சியா இருந்து உன்னையும் அப்படியே வளத்து வச்சிருக்கா. இப்படி இருந்தா எப்படி? உன் அம்மாவை அவ கூட இருந்து இனி நான் பாத்துக்குறேன் போதுமா?” என கண்ணகி பேசவே விடவில்லை.
“ம்மா! சரி தான். ஆனா முதல் தடவையா தேவாவை பார்க்காம அத்தை இவ்வளவு நாள் தனியா இருக்குறது தான் அவங்களுக்கு முடியல போல. இந்த ஒரு டைம் வர்றோம். அப்புறம் அவங்களே புரிஞ்சிப்பாங்க!” கார்த்தியும் கூற,
“நீங்க சும்மா இருங்க. அதான் அத்தை சொல்றாங்க இல்ல?” என்ற தேவா,
“அப்புறம் உங்களையும் திட்டுவாங்க!” என கிசுகிசுவென கண்ணகிக்கு கேட்காத குரலில் மெதுவாய் கணவனிடம் சொல்ல, அந்த குரலில் சிரித்துவிட்டான் அவன்.
“அப்படி சொல்லு தேவா! தேவா பெரிய பொண்ணு. புரிஞ்சி நடந்துப்பா. ரெண்டு மாசம் போகட்டும். நாங்க யாராவது வருவோம். அதுவரை மூச்!” என சொல்லி கண்ணகி அங்கே கணவனிடம் எதுவோ சொல்ல,
“ரெண்டு மாசமா?” என கணவனை விரிந்த கண்களோடு கண்டாள் தேவதர்ஷினி.
‘சொன்னேனா?’ என கிண்டலாய் புருவம் உயர்த்தினான் கார்த்திகைசெல்வன்.
“அப்புறம்! முக்கியமான விஷயம்! நீங்க இப்படி அடிக்கடி வந்து போய் எல்லாம் எங்க உடம்பு நோய்வாய்படாம இருக்காது” என்று அவர் சொல்லவும் புரியாமல் இருவரும் பார்க்க,
“நானும் சரி லீலாவும் சரி! ஆம்பள பையன் பொண்ணுன்னு எல்லாம் பார்க்க மாட்டோம். எங்களுக்கு தேவை ஒரு பேரனோ பேத்தியோ தான். பெத்து குடுத்தா நாங்க அந்த புள்ளைய எங்களோட வளத்துகிட்டு சந்தோசமா இருந்துக்குவோம்!” என சொல்ல, அப்படியே தலையை கவிழ்ந்து கொண்டாள் தேவா.
இதழ்பிரியா புன்னகையுடன் அவளைக் கண்ட கார்த்தியும் சிறு வெட்கத்தில் நெற்றியை நீவிக் கொள்ள,
“கேட்குதா டா? சரி போய் வேலையை பாருங்க. இங்க எல்லாரும் நல்லா தான் இருக்கோம். இந்த பசுபதியை நேர்ல போய் அவ்வளவு தூரத்துல இருக்க புள்ளைட்ட இதை எல்லாம் சொல்லுவியோ நீனு நாலு கேள்வி கேட்டுட்டு வர்றேன்!” என்று சொல்லியபடியே தான் போனை வைத்தார்.
“அய்யோ அத்தை. அப்பா பாவம்..” என தேவா சொல்லும் போதே போனை அவர் வைத்திருந்தார்.
“இனி மாமாவை தான் காப்பாத்த முடியாது!” கார்த்தி சிரித்தவன்,
“சரி நீ சொல்லு! உனக்கு போனுமா?” என மீண்டும் அவன் கேட்க,
“இதுக்கு மேல நான் போகணும்னு சொல்ல முடியுமா? அவ்வளவு தான். அத்தை இப்பவே இவ்வளவு பேசுறாங்க. அவங்க முன்னாடி போய் நின்னுட்டேன்!” என்றவள்,
“ம்ம்ஹும்ம்!” என தலையசைக்க, சிரித்தவனும்,
“அப்போ அம்மா சொன்ன மத்ததையும் யோசி!” என அவள் தலையில் சின்னதாய் தட்டிவிட்டு குடித்து முடித்த காபி கப்பை கீழே வைத்துவிட்டு எழுந்து கொண்டான்.
“வேறென்ன சொன்னாங்க?” என்றவளுக்கு சட்டென நியாபகத்தில் வரவில்லை.
“முக்கியமானது தான் சொன்னாங்க!” நடந்தப்படியே கூறியவன் குரல் கொஞ்சம் சின்னதாய் கேட்க, சில நொடிகளில் புரிந்துவிட்டவளுக்கு முகமெல்லாம் மெல்லிய அதிர்வுடன் சிவந்து நின்றது.
“நான் வேணும்னு சொல்லல க்கா! ஏதோ பேச்சுவாக்குல வந்துடுச்சு!” என பசுபதி கண்ணகியிடம் கெஞ்சலாய் சொல்லியும்,
“பிள்ளைங்க விசனப்படும் பசுபதி. இனி பேசும் முன்ன கொஞ்சம் யோசிச்சுக்கோ!” என அறிவுரையோடு தான் முடித்திருந்தார்.
“அம்மா நல்லாருக்கேன் தேவா! நீ கார்த்தி கூட சந்தோஷமா இருந்தா எங்களுக்கு அது தான் வேணும். எங்களை நினைச்சு நீ எதுவும் வருத்தப்படாத!” என லீலாவும் அன்று மாலையே அழைத்து பேசி இருந்தார்.
“உன் அப்பாக்கு அவ்வளவு பேச்சு. கண்ணகி சும்மா வெளுத்து வாங்கிட்டாங்க உன் அப்பாவை!” லீலா சொல்ல,
“அப்பா பாவம் ம்மா. உங்களுக்கு முடியலைனதும் அப்பா குரலே வாடிப் போச்சு!” தேவதர்ஷினி சொல்ல,
“பின்ன? நான் இல்லைனா யாரு துவைச்சு சமைச்சுனு வீட்டை பாக்குறது? அந்த கவலை தான் உன் அப்பாக்கு” என சொல்லி மகள் மனதை மாற்றி இருந்தார்.
அடுத்த இரண்டு நாட்களும் அமைதியாய் கழிந்தது. காலையில் அவனை அலுவலகம் அனுப்பி விடும் வரை பரபரப்பாய் வேலையில் ஈடுபடுபவள் அவன் கிளம்பிய பின் அமைதியாய் அமர்ந்துவிடுவாள்.
அடுத்து அவன் மாலை வரும் வரை வீட்டிற்கு பேசுவதும் தன் வீட்டிற்குள் சுற்றி வருவதும் என நேரமே செல்லவில்லை என்பதாய் தான் அவளுக்கு இருந்தது.
இரவுகளில் எல்லாம் இருவருக்கும் இடையான இடைவெளி இன்னுமாய் குறைந்திருந்தது. குறைத்திருந்தான் அவள் கணவன்.
அவளை அணைத்தபடி அத்தனை நிம்மதியான உறக்கம் என கார்த்திகைசெல்வன் கடக்க, அந்த அணைப்பின் கதகதப்பில் ஒரு இன்பமான அவஸ்தை தான் தேவதர்ஷினிக்கு.
அன்று மாலை எதிர்பாரா வண்ணமாய் மழை அதிகமாய் பிடித்துக் கொள்ள, வெகு நேரம் கழித்து தான் வீடு வந்தான் கார்த்திகைசெல்வன்.
“என்ன த்தான் இவ்ளோ நேரம்? நனைஞ்சுட்டீங்களா?” என தேவா கேட்க,
“ஹ்ம் டா! வெளில செம்ம மழை!” என்றான் உடைகளை மாற்றிக் கொண்டு.
அவனுக்கான காபியை அவள் எடுத்து வர, “டேபிள்ல வச்சுடு தேவா!” என சொல்லவும் அவள் வைத்துவிட்டு அவனுக்காக செய்து வைத்த பஜ்ஜியை எடுத்துவர அவனைத் தாண்டிக் கொண்டு திரும்பி நடக்க, மழையில் நடந்துவந்த கார்த்தியின் கால்களின் ஈரத்தில் தேவதர்ஷினி கால் வைக்கவும் அந்த தரைக்கு வழுக்கிவிட,
“அம்மா!” என்றவள் விழும் முன் சட்டென்று சுதாரித்து “தேவா!” என பிடித்து நிறுத்தி இருந்தான் கார்த்தி.
“ப்ச்! நான் ஒருத்தன். எல்லா பக்கமும் ஈரமாக்கி வச்சிருக்கேன்!” என அவளை பத்திரமாய் விட்டபின் சொல்ல, மனம் பலமாய் அடித்துக் கொண்டது தேவாவிற்கு.
விழ இருந்தது ஒரு பக்கம் அத்தோடு கணவன் தன்னை தாங்கிக் கொண்ட விதம் என முழுதாய் கலங்கி இருந்த நேரம் அது.
பாதுகாப்பாய் மனைவியைப் பிடித்து நிறுத்திவிட்டு அவள் முகம் பார்க்கவுமே புரிந்து கொண்டவனும் தன்னிலையில் இல்லை என்றாலும் அவளுக்காகவே பேச்சை மாற்றி நிற்க, தேவாவால் அந்த நிமிடம் அப்படி மாறிவிட முடியாமல் தடுமாறிவிட்டாள்.
இருவரிடமும் அசாத்திய மௌனம் தான் அடுத்து தொடர்ந்தது. சாப்பிட்டு முடித்து கார்த்தி படுக்கைக்கு சென்றுவிட, இடியோடு மின்னலும் என இன்னுமே வேகம் பிடித்திருந்தது மழை.
“ப்ச்! இந்த க்ளைமேட் வேற!” என தலையணையில் முகம் புதைத்து தூங்கிவிட போராடினான் கார்த்திகைசெல்வன்.
வேலைகளை முடித்துக் கொண்டு வந்தவளும் அந்த குளிரை உணர தான் செய்தாள்.
ஏசி அணைக்கப்பட்டு மெலிதாய் சுற்றிக் கொண்டிருந்தது ஃபேன்.
போர்வைக்குள் தன்னை நுழைத்துக் கொண்டு படுக்கையில் விழுந்தவளை உணர்ந்த பின் பறிபோன உறக்கம் வந்துவிடுமா என்ன!.
சில நொடிகள் தான் எண்ணங்களும் சிந்தனைகளும் அவனுக்கு. “ம்ம்ஹ்ம்ம்! இது சரி வராது!” சொல்லிக் கொண்டவன் என்னவோ முணுமுணுப்பாய் சொல்கிறான் என்ற அளவுக்கு மட்டுமே புரிந்தாலும் அவன் பக்கம் திரும்பிட முடியவில்லை தேவாவிற்கு.
என்னவோ புரிவது போலவும் தான் இன்று அதிகத்திற்கும் நிஜத்தில் இல்லாதது போலவும் என கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
“தேவா!” என ஹஸ்கி குரலில் அடித்துக் கொண்டு விழிகள் உடனே திறக்க, அப்போதும் திரும்பிப் பார்க்கவில்லை அவள். அந்த குரலே என்னவோ கதை சொல்வதாய் இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாய் அவன் தன்னை நெருங்குவதும் கைகளை இடையை சுற்றி வளைப்பதும் என கடந்த சில தினங்களாக நடப்பது தான் என்றாலும் இன்று அதற்கு மேலும் என்னவோ என மனம் அலைபாய, அதற்கெல்லாம் உயிர் கொடுத்து மொத்தமாய் அவளை அணைத்து கழுத்தில் முகம் புதைத்தவன் செயலில் மயக்கமே வரும் போலானது தேவதர்ஷினிக்கு.
“த்தான்!” என்றவள் படபடவென்று அவன் பக்கம் திரும்ப, அத்தனை தவிப்பையுமே அந்த கண்களில் கண்டுகொண்டவள் மூச்சைடைத்து அசையாமல் இருக்க, முதல் இதழ் முத்தத்தை துவங்கிவைத்தான் அவள் விழியசைவின் பாஷைகளோடு!.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
14
+1
1
+1