Loading

அத்தியாயம் 21

 

“தேவா?” என சுத்தமாய் எதிர்பாராத தேவதர்ஷினியின் கேள்வியில் கார்த்தி அதிர்ந்து நிற்க,

 

“சொல்லிருக்கலாமே த்தான்!” என்றாள் கலங்கிவிட்ட கண்களோடு தேவா.

 

“இப்ப தான் புரியுது எல்லாமே! நீங்க பேசின ஒவ்வொரு வார்த்தைக்கும் இப்ப தான் எனக்கு அர்த்தம் புரியுது” என்றவள்,

 

“எனக்கு இப்ப என்ன பண்ணனும் என்ன பேசணும்னு கூட தெரியல” என்றவள் சொல்லிலும் அவள் கண்களில் தேங்கி நின்ற கண்ணீரிலும் என சுதாரித்தான் கார்த்திகைசெல்வன்.

 

அவளுக்கு எப்படி தெரிந்திருக்கும் என நினைத்து நின்றவனுக்கு புரிவது போல தோன்ற,

 

“மேடம் எப்ப ஒட்டு கேட்கவெல்லாம் ஆரம்பிச்சீங்க?” என கேட்டு அருகில் வந்து அமர்ந்து புன்னகைக்க, அதுவும் அதிகமாய் வலித்தது தேவாவிற்கு.

 

“உன்னால எப்படி என்னை புரிஞ்சிக்க முடியும்னு நான் பயந்துட்டு இருந்தேன். புரிஞ்சிப்பியா கோபப்படுவியா உன் ரியாக்ஷன் என்னவா இருக்கும்னு நிறைய டைம் யோசிச்சு யோசிச்சு ரொம்ப குழம்பிட்டு இருந்தேன். ஆனா நீ வேற ஒரு அங்கிள் போயிருக்க!” என்று சொல்லி மென்மையாய் புன்னகைத்தான்.

 

“அஷ்வினி பாவம் த்தான்!” தேவதர்ஷினி சொல்ல,

 

“அன்னைக்கு மண்டபத்துல இதையே தான் அஷ்வினியும் என்கிட்ட சொன்னா தேவா. தேவாக்கா பாவம்னு” என்றவன்,

 

“எனக்கும் என்ன சொல்றதுன்னு தெரில. ஆனா இனி அதையே பேச வேண்டாம் நினைக்குறேன். அஷ்வினி நல்ல பொண்ணு. நிச்சயம் அவ நல்லா தான் இருப்பா!” என்றவன் தேவாவின் தலையில் வாஞ்சையாய் கை வைக்க, அத்தனை தவிப்பு தேவதர்ஷினியின் கண்களில்.

 

“என்னையும் கொஞ்சம் யோசிச்சுக்கோ டி! நானும் பாவம் தான்” என்றவன் கை தேவாவின் தலையில் இருந்து கழுத்திற்கு வந்து காதுமடலை நீவிக் கொடுக்க,

 

“த்தான்!” என்றவள் திரும்பிக் கொண்டாள்.

 

“என் மேல உனக்கு….. “ என்றவன் நம்பிக்கை என்ற வார்த்தையை சொல்லவும் கொஞ்சம் தவித்து தான் போனான்.

 

“த்தான்! என்ன நீங்க!” என்றவள் அவன் கையைப் பற்றி இருந்தாள்.

 

“ஹ்ம்!” என்றவன் கைகள் அப்படியே அவளிடமே இருக்க, இருவருக்குள்ளுமே நிமிடங்கள் தொடர்ந்தது மௌனம்.

 

“அப்போ ஃபீவர் கூட அதனால தான் இல்ல?” என்றவன் முறைப்பில் தேவா அவன் முகம் பார்த்து பின் இமை தாழ்த்த, 

 

“ரெண்டு நாளா அதை நினைச்சுட்டே சுத்திருக்க?” என்றும் கேட்க,

 

“ப்ளீஸ் த்தான்!” என்றாள் கெஞ்சலாய்.

 

அஷ்வினி கார்த்திகைசெல்வன் இருவரும் பேசியதை கேட்டதில் இருந்து அத்தனை அதிர்ச்சி தேவதர்ஷினிக்கு.

 

இப்படி ஒன்றை சுத்தமாய் எதிர்பார்க்கவே இல்லை என்பதாய் உறைந்து தான் போயிருந்தாள்.

 

மொட்டைமாடியில் கண்ணகி, சுந்தரி, லீலா, அஷ்வினி என நின்று கதை பேசிக் கொண்டிருந்த நேரம் தற்செயலாய் மேலே வந்திருந்தான் கார்த்திகைசெல்வனும்.

 

வெயிலே இல்லாது அந்த நேரம் அத்தனை குளிர்வாய் இருக்கவும் நேரம் சென்றதே தெரியாமல் பேசி நின்ற பெரியவர்கள் சமையலைப் பற்றி பேசியபடி எழுந்து செல்ல, அவர்களோடு படிக்கட்டு வரை சென்ற அஷ்வினி நின்று திரும்பிப் பார்க்க, கார்த்திகைசெல்வன் அங்கிருந்த கட்டை சுவற்றில் கைவைத்து அங்கிருந்த சுற்றுப் புறத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“அத்தான்!” என அழைத்து அஷ்வினி அருகில் வந்து நிற்கும் வரை அவளை கவனிக்கவே இல்லை அவன்.

 

திரும்பியவன் என்ன என்பதை போல பார்த்து வைக்க, “வாழ்த்துக்கள் த்தான்” என்றாள் உளமாற புன்னகைத்து.

 

“ஹ்ம்!” என்றவன் கைகட்டி நிற்க,

 

“நான் பண்ணினது தப்புன்னு உங்களுக்கு தோணலாம். ஆனா இது தான் சரி!” என அவளே விளக்கம் கொடுக்க,

 

“என் முகத்தை பார்த்து பேச இவ்வளவு நாள் ஆச்சு இல்ல உனக்கு?” என்ற கேள்வி தான் அவனிடன் இருந்து முதலில் வந்தது.

 

“அப்படி இல்ல த்தான். முன்னாடியே வந்து பேசி இருந்தாலும் இப்படி சாதாரணமா நம்ம ரெண்டு பேராலயுமே நின்னு பேசி இருக்க முடியாது. ரிசெப்ஷன்லேயே பார்த்தேன். ரொம்ப சந்தோசமா இருந்திங்க. அப்பவே நீங்க தேவாக்காவை புரிஞ்சிகிட்டிங்கனு தெரிஞ்சுக்கிட்டேன்” என்று அஷ்வினி சொல்ல,

 

“நீ இப்ப வந்து பேசினதை வாழ்த்து சொன்னதை நான் எப்படி எடுத்துக்கணும் அஷ்வினி?” என்றவனை புரியாமல் அஷ்வினி பார்க்க,

 

“இன்னும் தேவாகிட்ட என்னோட கடந்த கால காதலை சொல்லல” என்றதுமே,

 

“ஏன் த்தான் சொல்லணும்? அது வேண்டாமே! அது முடிஞ்சி போனது. நீங்க இப்ப சந்தோசமா தானே இருக்கிங்க? போதுமே! இதை சொல்லி உங்களுக்குள்ள…. “ என்றவளைக் கண்டு இதழ் விரிக்காமல் புன்னகைத்தவன்,

 

“நாங்க சந்தோசமா இருக்கோம்னு எதை வச்சு அஸ்வினி சொல்ற? நாங்க சிரிக்குறதை வச்சா? இல்ல மத்தவங்ககிட்ட பேசுறதை வச்சா? அப்படி தான்னா அதுல என்னை விட உன் அக்கா தேவா எக்ஸ்பெர்ட். அவ அம்மா அப்பாக்காக எவ்வளவு வேனா வெளில சிரிச்சுட்டு இருப்பா!” என்றவனை விழி அகல பயந்து அஷ்வினி காண,

 

“வேற ஏதோ ஒரு பொண்ணை காதலிச்சு சந்தர்ப்பம் சூழ்நிலைனு நான் தேவா ஹஸ்பண்ட் ஆகி இருந்தா அது எந்த மாதிரி லைஃப் குடுத்திருக்குமோ எனக்கு. ஆனா இது அப்படி இல்ல அஷ்வினி. உன்னை காதலிச்சு உன்னால தான் தேவாவை கல்யாணம் பண்ணி இருக்கேன். இதை சொல்லாம என்னனு நான் தேவாவோட வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும்?” என்றவனை இன்னும் அதிர்ந்து அவள் காண,

 

“ஐ மீன் இட்!” என்றவன் சொல்லில் சிலையாய் நின்றிருந்தாள் அஷ்வினி.

 

“இப்பவும் சொல்றேன் நீ அன்னைக்கு மண்டபத்துல பண்ணினது தப்பு தான். என்னோட வாழ்க்கையை என்னோட சம்மதம் இல்லாம உன்னை காதலிச்சதுக்காக நீ முடிவு பண்ணினதை என்னால ஏத்துக்க முடியாது. பட் ஸ்டில் நான் அங்கேயே நின்னா என்னை கல்யாணம் பண்ணின பொண்ணுக்கு நான் பண்ற துரோகம் அது. சில விஷயங்கள் லேட்டா தான் புரிஞ்சது. என் பிரண்ட் நந்தா தான் புரிய வச்சான். இன்னும் அப்படியே இருக்க விரும்பல. நானும் வாழனுமே! தேவா இனி என் மனைவி. நான் பாத்துக்குவேன்!” என்றான் கார்த்திகைசெல்வன்.

 

அவன் பேச ஆரம்பிக்கும் பொழுது இருந்த அதிர்ச்சி அவன் முடிக்கும் பொழுது இருந்த அந்த முதிர்ந்த பேச்சில் மறைந்து ஒரு புன்னகையையும் நிம்மதியையும் கொடுத்தது அஷ்வினிக்கு.

 

“தேவாகிட்ட உண்மையை சொல்லாம என்னால இருக்க முடியாது. நிச்சயம் அவ என்னையும் புரிஞ்சிப்பா அவ சிஸ்டரையும் புரிஞ்சிப்பா” என்றவனை,

 

“தேவா லக்கி! நீங்களும் தான் த்தான்!” என்றவளை கண்டவன்,

 

“ஆனா ஒண்ணு மட்டும் சொல்லணும் நினைச்சேன் அஷ்வினி உன்கிட்ட” என்றவனை என்னவென்று அவள் கேள்வியாய் பார்க்க, 

 

“உன்னோட மேரேஜ்!” என்றான் பதில் பார்வையில்.

 

“தேவாக்கு உண்மை தெரிஞ்சதும் எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் வர போறதில்ல. அதுக்காக இதை நான் சொல்லவும் இல்ல. உன்னோட வாழ்க்கையும் எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப முக்கியம்!” என்று சொல்ல, தலையசைத்தாள் எதுவும் சொல்லாமல்.

 

இதில் எங்கிருந்து எப்பொழுது தேவா தங்கள் பேச்சை கேட்டாள் என்றெல்லாம் கார்த்திக்கு தெரியவில்லை. அது தேவையுமில்லை அவனுக்கு.

 

“சோ என்னால தான் ஃபீவர் இல்ல?” என மீண்டும் கார்த்திகைசெல்வன் தேவதர்ஷினியிடம் கேட்க,

 

“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு த்தான். என்னை சுத்தி இருக்குற எல்லாருமே எனக்காக எவ்வளவோ பண்ணிருக்காங்க. ஆனா நான் யாருக்கும் கெட்டது பண்ணலைனாலும் இப்படி அஷ்வினிக்கு…..“ என்றவள் சொல்ல தெரியாமல் கலங்கி நிற்க,

 

“சில விஷயங்கள் வாழ்க்கைல இப்படி தான்னு இருக்கு தேவா. அதை யார் நினைச்சாலும் மாத்திட முடியாது. நாம சேர்ந்ததும் அப்படி தான்!” என்றான் அவள் தலைகோதி.

 

தானாய் அவன் நெஞ்சம் சாய்ந்தவள் மனம் எங்கும் விம்மி வெந்து நின்றது.

 

இதை என்னவென்று சொல்ல? அஷ்வினி தனக்காக இப்படி ஒரு முடிவை எடுத்தாள் என்பது இன்னுமே வெளிவர முடியாத அதிர்ச்சி தான் தேவதர்ஷினிக்கு.

 

அக்கா தங்கைகள் என்பதை தாண்டி தோழிகளாய் பழகியவர்கள் தான் என்றாலும் இப்படி ஒன்றை நிச்சயம் எதிரிபார்க்கவே இல்லை.

 

இப்பொழுது நினைத்துப் பார்த்தால் தான் கார்த்தியின் அன்றைய ஒவ்வொரு பேச்சும் செயலும் பார்வையும் என அர்த்தம் விலங்குவதாய் இருந்தது.

 

அவனின் மாற்றம் குறித்து அஷ்வினியிடம் கூறும் போது கூட பெரிதாய் தோன்றவில்லை. செயலில் காட்டிய பொழுதும் பெரிதாய் தெரியவில்லை. இப்பொழுது நினைத்துப் பார்த்தால் அவனுமே தனக்காகவே தன்னிடம் வந்திருக்கிறான் தானே! என்று நினைத்தவளுக்கு கண்ணீரோடு புன்னகையும் வந்தது.

 

ஆனாலும் என்ன செய்திட முடியும் தான்? இவர்களை எல்லாம் எந்த காலத்திலும் தான் விட்டுவிட கூடாது என வேண்டுவதை தவிர!.

 

“ஓய்! இன்னும் என்ன?” என நெஞ்சில் சாய்ந்திருந்தவளை தலை சாய்த்துப் பார்த்து கார்த்தி கேட்க, எதுவுமில்லை என்பதாய் தலையசைத்தாள்.

 

“நானே சொல்லணும் நினைச்சது. இப்ப தான் எனக்கும் பிரீயா இருக்கு. எனக்கு தெரியும் தான் நீ புரிஞ்சிப்பன்னு. ஆனாலும் ஒரு பீல் இருந்துச்சு. அதை எப்படி சொல்லனு எல்லாம் தெரியல. இப்போ தான் நான் ரொம்ப தெளிவா இருக்கேன்!” என இன்னுமாய் அவளை தன்னோடு அவன் அணைக்க, கொஞ்சமாய் கூச்சம் வந்து விலகினாள் அவனிடம் இருந்து.

 

“நான் ஒன்னும் ஒட்டு கேட்கல!” தலை தாழ்த்தியபடியே அவள் சொல்ல,

 

“நீ எப்படி கேட்டிருந்தாலும் ஓகே தான்! உனக்கு தெரியாம என்ன!” என எழுந்தவன்,

 

“இன்னும் ரெண்டு நாள் தான் லீவ்! உனக்கு இங்க கம்ஃபோர்ட் பண்ணி தர தான் லீவ் போட்டிருந்தேன். அதெல்லாம் ஃபீவரோடவே போச்சு. ரெண்டு நாள்ல நான் என்ன சொல்லி தர?” என கேட்டு யோசித்து பெட்ஷீட்டை எடுத்து வர, அவள் பார்வை முழுதும் அவனிடம் தான்.

 

திரும்பியவன் அவளைக் கண்டதும் புருவம் சுருக்கி யோசித்தவன், “ஹே தேவா!” என சிரித்து,

 

“சொல்லி தர மீன்ஸ் இந்த ஏரியால எங்க என்ன இருக்குன்னு பார்க்கணுமே! கூடவே வீட்டுக்கு தேவையான கிராஸரிஸ் எல்லாம் வாங்கி வைக்கணுமே! அதை சொன்னேன்!” என்றான் புன்னகையோடே.

 

“நீ என்னவோ நினைச்ச போல?” என்றவனிடம் நிச்சயம் கள்ளப்புன்னகை தான்.

 

“ச்சோ! த்தான்! நான் சும்மா தான் பார்த்தேன்!” என்றவள் முகமுமே சிவந்துவிட்டது அவன் பார்த்த விதத்திலும் சிரித்த முகத்திலும் என.

 

“ஓகே! அப்படியும் இருக்கட்டுமே! என்ன இப்ப!” என்றவன் படுத்துக் கொண்டு அவளையுமே கைநீட்டி அழைக்க, தானும் அவனோடு இணைந்து கொண்டாள்.

 

முதல் நெற்றி முத்தம் கணவனிடம் இருந்து என்பதில் இன்னுமே அவன் நெஞ்சோடு தேவா சேர, நெற்றி முட்டியபடி நிம்மதியாய் தொடர்ந்தது அவர்களது தூக்கம்.

 

தொடரும்..

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
21
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்