
ப்ரியம் 14
காஃபி ஷாப்பின் கதவை மெதுவாகத் தள்ளி வெளியே வந்தாள் தக்ஷா.அவளை கடந்து உள்ளே சென்ற திருமுருகனை அவளுக்கு அடையாளம் கூடத் தெரியவில்லை. ஏனென்றால் அவள் முன் திருமுருகனாய் அறிமுகமாகியது திருநீலகண்டன் தானே.
யோகா தக்ஷாவை பின்தொடர்ந்து சென்றாள். பிரம்மை பிடித்தார் போல் எங்கேயோ பார்த்தபடி நடந்து சென்றாள் தக்ஷா.
மாலை நேர சூரியன் நகரத்தின் மேல் மெதுவாகச் சாய்ந்து கொண்டிருந்தது. கல்லூரி கட்டிடங்களில் விழுந்து பாதைகளில் நிழல் கொடுத்தது.
தென்றல் மெதுவாக அவளின் தலைமுடியை வருடி சென்றது. ஆனால் அவளின் எண்ணங்கள் எங்கேயோ நிலைக்குத்தி நின்றது. பெயரளவில் திருமணத்திற்குச் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டு, அவள் மனம் தடுமாறியது.
மணி சொன்ன வார்த்தைகள், மீண்டும் அவள் செவிகளில் கேட்டு அவளைக் கொல்லாமல் கொன்றது.
அவளின் செயல்களைக் காஃபி ஷாப்பின் கண்ணாடி சுவர்களைத் தாண்டி. அவனின் பார்வை அவள் மீது ஊடுருவியது
அவள் முகத்தில் ஓடிய அந்த மெல்லிய குழப்பத்தைத் திருநீலகண்டனின் பார்வை தவற விடவில்லை.
அவனின் பார்வையின் வீச்சு அவளைத் திரும்பி பார்க்கச் செய்தது.
இருவரின் விழிகளும் ஒரு நொடி தொட்டு இயல்புக்கு மீண்டது.
அடுத்த நொடியில் தக்ஷா பார்வையைத் தளர்த்திக் கொண்டாள்.
தன் மனதில் எழுந்த அந்த விளக்கமற்ற உணர்வை தள்ளி விட முயல்வது போல அவள் மெதுவாக நடக்கத் தொடங்கினாள்.
அவள் தூரம் சென்றாலும் அவளின் உருவம் தடயமின்றி மறைந்து போனாலும், திருநீலகண்டனின் பார்வை மட்டும் அவள் சென்ற திசையிலேயே.சில நொடிகள் நின்று கொண்டிருந்தது.
அவன் கரங்களில் இருந்த காஃபி மெல்ல குளிர்ந்து கொண்டிருந்தது.ஆனால் அவன் மனதில் தக்ஷாவின் குழப்பமான முகம் மட்டும் இன்னும் நிலைத்திருந்தது.
“என்ன ப்ரோஃபசர்! எங்களை வரச் சொல்லிட்டு எங்கேயோ பார்த்திட்டு இருக்கீங்க” என்ற கீதாவின் குரலில் தன்னிலை பெற்றான் திருநீலகண்டன்.
ஒரு நொடியில் தன் எண்ணங்களில் இருந்து வெளியே வந்தவன், முன் அமர்ந்திருந்த கீதாவை பார்த்தான்.
“ஒன்னும் இல்லை” எனச் சுருக்கமாகச் சொன்னான். திருமுருகனோ எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.
“என்ன முருகா காஃபியா? டீயா?” எனத் திருக் கேட்க,
“முருகுக்கு டீ தான் பிடிக்கும்” எனக் கீதா பதில் கொடுக்க, பட்டென நிமிர்ந்த நொடியில் அவளை எரித்து விடுவது போல் பார்த்தான் முருகன்.
“எனக்கு ப்ளாக் காஃபி போதும், டீயை எல்லாம் விட்டு ரொம்ப நாளாச்சு. பாதியில வந்த பழக்கம் பாதியிலே போயிடுச்சு” எனத் திருவிடம் சொன்னாலும் பார்வை முழுக்கக் கீதாவின் மேல் தான் இருந்தது.
“அண்ணா ஒரு ப்ளாக் காஃபி” என ஆர்டர் செய்து விட்டு தன் தம்பி திருமுருகன் புறம் திரும்பினான்.
“இதோ பாரு டா முருகா! இந்தப் பொண்ணு விட்டுட்டு போயிடுச்சுன்னு குடிக்க ஆரம்பிச்சதா உன் ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க, ஆனால் நான் கீதாவை மீட் பண்ணி பேசினதில். அவங்க சைட் எந்தத் தப்பும் இல்லைன்னு தான் தோணுது. இந்தப் பிரச்சனையை இன்னைக்கி முடிச்சிட்டு. நாளைக்கி ஆடிட்டர் ஆஃபிஸூக்கு போற” என எழுந்தவன் அவர்களுக்குத் தனிமையைக் கொடுத்துவிட்டு காஃபி ஷாப் வெளியே வந்து நின்று கொண்டான் திருநீலகண்டன்.
“டேய் முருகு” கீதாவின் அழைப்பில் அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை.
“நீ இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்கியாடா? உன் மூஞ்சிலையே முழிக்கக் கூடாதுன்னு நினைச்சேன். உங்க அண்ணன் ரெக்வெஸ்ட் பண்ண போயி தான் உன்னைப் பார்க்க வந்தேன். நீ ப்ரேக் அப் பண்ணிட்டு. நான் விட்டுட்டுப் போயிட்டேன் அதனால தான் குடிக்கிறேன்னு சொல்லியிருக்க” எனக் கோபமாய்ப் பேசினாள் கீதா. அவனோ குற்ற உணர்வில் கூனி குறுகி அமர்ந்திருந்தான்.
“முருகு! என்ன நினைச்சிட்டு இருக்க? டான்சிங் என்னோட வேலைடா. அதைப் பார்த்திட்டு அவன் தொடுறான். இவன் தொடுறான்னு சந்தேகப்படுவீயா? எல்லாம் தெரிஞ்சு தானே லவ் பண்ணின? நீ தானே ப்ரோப்போஸ் செஞ்ச? நீ ப்ரேக் அப்னு சொன்னப்ப கூட எதோ கோபத்தில் சொல்லுற திரும்பி வந்திருவன்னு நினைச்சேன்டா” என அனைத்தையும் நினைவில் வைத்து அவள் கேட்க, அவனோ பதில் கூற முடியாமல் திணறிப் போயிருந்தான்.
“டேய் முருகு வாயை திறந்து பேசேன்டா. நான் உன்னைய லவ் பண்ணும் போது நீ சிஏ படிச்சிட்டு இருந்த. எத்தனை முறை அரியர் வச்சிருப்ப. எத்தனை தடவை குவிட் பண்ணப் போறேன் ப்ரஷர் ஹண்டில் பண்ண முடியலைன்னு சொல்லியிருக்க, அந்த நேரத்தில நான் உன்னை ப்ரேக் அப் பண்ணி விட்டுட்டு போறேன்னு சொன்னேனா? ஆனால் நீ நான் டான்ஸ் ஆடுற வீடியோவை பார்த்திட்டு ப்ரேக் அப் பண்ணிட்ட?” எனக் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் திருமுருகனிடம் இருந்து எந்த எதிர் வினையும் இல்லை. மாறாகச் சற்று நிமிர்ந்து கீதாவின் விழிகளை நேராகப் பார்த்தான் ஆனால் அவன் பேசவில்லை.
“வாயை திறந்து பேசேன்டா. நீ இப்போ மட்டும் பேசலை நான் எழுந்து போய்கிட்டே இருப்பேன் நீ நினைச்சா கூட நீ பார்க்க முடியாத தூரத்துக்குப் போயிருவேன்” எனச் சொல்லிவிட்டு எழுந்தவளின் வலதுகரத்தை பிடித்துத் தடுக்க முயன்ற போது. காதலிக்கும் போது அவளுக்கு அவன் பரிசாய் அளித்த இன்ஃபினிட்டி மோதிரம் அவன் கை உரசி. அவள் மனதில் அவன் மீதான காதல் இன்னும் இருக்கிறது என உறுதி செய்திருந்தது.
“சாரி கீத்து!!” என்றவன் எழுந்து நின்று அவள் விழிகளை நேராய் பார்த்தான்.
“என் மேல தான் தப்பு. என்ன செஞ்சாலும் நீ என் கைக்குள்ள இருப்பன்னு நினைச்சுப் பண்ணிட்டேன் கீத்து. என்னோட ஈகோ உன்கிட்ட என்னைப் பேசவிடாமல் செஞ்சிடுச்சு. நீயே வந்து மன்னிப்பு கேட்கணும்னு ஆசை பட்டுச்சு. ஆனால் இப்போ” என அவனின் பார்வை உரிமையாய் அவள் மீது படர்ந்தது.
“ஆனால் இப்போ” எனக் கேட்டவள் இதழ் விரித்துக் சிரித்தாள். அவளின் சிரிப்பை ரசித்துப் பார்த்தான் திருமுருகன்.
“ஆனால் இப்போ இந்த நெருக்கம் காலம் முழுக்க வேணும்னு தோணுது. இதை விடப் பெரிய போதை வேற எதுவும் இல்லைன்னு தோணுது. என்னோட கீத்துவ இந்தச் சிரிப்போட ஆசை தீர பார்த்துகிட்டே இருக்கணும்னு தோணுது” என மேலும் அவளைத் தன்னோடு இழுக்க அவளோ நாணத்தில் சிவந்து போனாள்.
அவர்கள் நெருக்கமாய் நின்று பேசுவதைக் கண்ணாடி சுவற்றின் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்த திருநீலகண்டன்.
முருகனின் முகத்தில் மீண்டும் தோன்றிய அந்தச் சிரிப்பை பார்த்தப் போது அவன் மனதிற்குள் ஒரு நிம்மதி பரவியது.
தன் புல்லட்டை ஸ்டார்ட் செய்து கிளம்பியிருந்தான்.
தம்பியின் காதலை கரம் சேர்க்க தெரிந்தவனுக்கு. அவனுடைய காதலை கைத்தலம் பற்ற தெரியாமல் போனது தான் விசித்திரம்.
தக்ஷா திருமணத்திற்குச் சம்மதம் சொன்னது அவன் செவிகளில் தெள்ள தெளிவாய் விழுந்தும், தன் காதலைப் பற்றி அவளிடம் சொல்ல முடியாமல் போனதை நினைத்து வருந்தினான்.
இதற்கு மேலும் அமைதியாய் இருப்பது முட்டாள் தனம் என்பதை உணர்ந்தவனாய். மனதில் உறுதியுடன் சில முடிவுகளை எடுத்திருந்தான் திருநீலகண்டன்.
அதே சமயம் பிரம்மை பிடித்தவள் போல் அமைதியாகக் கல்லூரி விடுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் தக்ஷா.
அவளுக்கு யார் மீதும் காதலோ பிடித்தமோ வந்ததில்லை.ஆனால் முதல் முறை அவள் சென்னை வந்து தவித்து நின்ற போது உதவி கரம் நீட்டிய திருவின் மீது மென்மையான பிடித்தம் அவளுக்குள் இருக்கத் தான் செய்தது.
திருமண வாழ்கை பற்றி அவள் தயாராக இல்லை என்பதை மட்டும் உணர்ந்திருந்தாள் தக்ஷா. தன்னை மேல் படிப்பிற்காகச் சென்னை அனுப்பிய அண்ணனே. திருமணம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தும் நிலை வரும் என்று அவள் ஒரு போதும் நினைத்து பார்த்திருக்கவில்லை.
தன் எண்ணத்தோடு போர் புரிந்துக் கொண்டிருந்தவளின் தோளை உலுக்கினாள் யோகா.
“எம்புட்டு நேரம்டி தக்ஷா தக்ஷான்னு கத்திகிட்டு இருக்கேன் உன் காதில கொஞ்சமும் விழலையா? இப்போ என்ன கல்யாணம் பண்ணிகிறேன்னு சம்மதம் சொல்லிட்ட அவ்வளவு தானே. எப்படியும் மாப்பிள்ளை பார்த்து ஓகே பண்ணுறதுக்குக் குறைஞ்சது ஒரு மாசமாவது ஆகும். பார்த்துக்கலாம் விடுடி” எனத் தோழியைத் தேற்றினாள் யோகா.
“இல்லைடி அண்ணேன் இரண்டு வாரத்துக்குள்ள கல்யாணத்தை முடிக்கணும் சொல்லுச்சு. உனக்கு எங்க அண்ணா லவ் பண்ணுற பொண்ணு தெரியும்ல. உன்கிட்ட வஞ்சின்னு சொல்லிருக்கேன்ல டி யோகா”
“ஆமா சொல்லியிருக்க ஞாபகம் இருக்கு” எனப் பதில் கொடுத்தாள் யோகா.
“வஞ்சி குடும்பத்தில இருந்து தான் எதோ பிரச்சனை பண்ணியிருக்காங்கடி அதான் அண்ணா அவசர படுது” எனப் பிரச்சனையைப் பற்றித் தக்ஷா சொல்ல,
“நீ உங்க அண்ணிகிட்ட பேசி பாருடி தக்ஷா. எதுக்குச் சொல்றேனா. என்ன பிரச்சனை ஏதுன்னு கேட்டு தெரிஞ்சுக்கோ” என யோகா சொன்னதைக் கேட்டு வஞ்சிக்கு அழைப்பு விடுத்திருந்தாள். அழைப்பு உடனே ஏற்கபட,
“வஞ்சி! தக்ஷா பேசுறேன்” என்றாள்.
“நம்பர் அழிக்கலை அப்படியே தான் வச்சிருக்கேன். சொல்லு தக்ஷா” என்றாள் வஞ்சி.அவளின் குரலில் இருந்த மென்மை தக்ஷாவின் மனத்தைச் சற்று அமைதிப்படுத்தியது.
“வீட்டில என்ன தான் நடக்குது? அண்ணா ரொம்ப அவசரமா எனக்குக் கல்யாணம் செய்யணும்னு சொல்லிட்டு இருக்கு.அதுவும் இரண்டு வாரத்துக்குள்ள பண்ணணும்னு சொல்லுது.”அந்த வார்த்தையைக் கேட்டவுடன் வஞ்சி சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
“உன்கிட்ட எப்போ சொன்னாவ தக்ஷா” என்றாள்.
“இப்போ தான் ஒரு பத்து நிமிசம் இருக்கும். அண்ணாவ உங்க சொந்தகாரவிய அடிச்சுட்டாங்கன்னு வேற சொல்லுச்சு” எனக் தக்ஷா சொன்னவுடன்.
“என்ன சொல்லுத தக்ஷா” என முற்றிலும் பதற்றத்துடன் கேட்டாள் வஞ்சி.
“அதனால் தான் உனக்குத் தெரியுமான்னு கேட்க கூப்பிட்டேன். அம்மாகிட்ட பேசினால் எதாவது சொல்லுவாங்க அதான் நான் வீட்டுக்கு போன் அடிக்கலை” எனத் தக்ஷா சொன்னபின் நடந்தவற்றை வஞ்சி ஒவ்வொன்றாய் சொல்லி முடித்தாள்.
“தக்ஷா இரு உங்க அண்ணா வண்டி சத்தம் கேட்கு என்னன்னு பாக்குதேன்” என வீட்டை விட்டு விட்டு வெளியே வந்தவளின் விழிகளில் யாரோ ஒருவர் மணிகண்டனின் வண்டியை ஓட்டி வருவதையும், மணி பின்னால் அமர்ந்து வருவதையும் பார்த்தவள்,
“தக்ஷா உங்க அண்ணேன் வண்டியை வேற யாரோ ஒட்டிட்டு வரவா, இவிய பின்னாடில உட்கார்ந்து வரவா” என வஞ்சி சொல்ல,
“அது சாரதி அண்ணாவ இருக்கும். அவிய கூடத் தான் இருக்கேன்னு அண்ணா சொல்லுச்சு” எனப் பதில் கொடுத்தாள் தக்ஷா. அப்போது வண்டியை விட்டு இறங்கிய மணியைப் பார்த்தாள் வஞ்சி. கையில் சிறு கட்டுப் போடப்பட்டிருந்தது.
“தக்ஷா! அவிய கையில கட்டுல போட்டிருக்கு. நான் என்னன்னு பார்த்திட்டுப் பிறவு கூப்பிடுதேன்” எனச் சொன்ன வஞ்சி அழைப்பை பட்டெனத் துண்டித்திருந்தாள்.
அந்த ஒரு நொடி தக்ஷாவின் வாழ்க்கையில் கற்பாறையை யாரோ தூக்கி போட்டதைப் போல் உணர்ந்தாள். அழைப்புத் துண்டிக்கப்பட்டது கூடத் தெரியாமல்
“வஞ்சி! வஞ்சி!” அழைத்துப் பார்த்தவளுக்கு அழைப்பு ஏற்கனவே துண்டிக்கப் பட்டிருந்ததை அப்போது தான் உணர்ந்தாள்.
அலைப்பேசியின் திரை மெல்ல மங்கி இருளுக்குச் சென்றிருந்தது
அவள் மனம் மீண்டும் அமைதியை இழந்தது. அண்ணன் மீது இருந்த அக்கறை ஒரு புறம் என்றால்,திடீரென அவள் வாழ்க்கையை நோக்கி விரைந்து வந்த திருமண முடிவு மற்றொரு புறம்,
இதற்கிடையில், அவள் மனதில் வேரூன்றிக் கொண்டிருந்தஅந்த பெயரற்ற பிடித்தம் இன்னொரு புறம் என அனைத்து சேர்ந்து அவளை முடிவெடுக்க முடியாமல் திணற செய்தது.

