Loading

ப்ரியம் 11

வீட்டின் முன் நின்றிருந்த கார் அவளின் நடையை ஒரு நொடி நிறுத்தியது.

காலையின் மெல்லிய காற்று அவள் தலைமுடியை தொட்டுச் சென்றது.

இதயம் மட்டும் காரணமில்லாமல் வேகமாகத் துடித்தது.

“யாரு வந்திருக்காங்க…?” என்று மனதுக்குள் ஒரு கேள்வி எழுந்தது.

அவள் மெதுவாக மணியின் வீட்டு வாசலைத் தாண்டினாள். வாசல் கதவு பாதியாகத் திறந்திருந்தது.

அதன் வழியே உள்ளே இருந்து வந்த குரல்கள் காலை அமைதியை மெதுவாகக் கிழித்தது.

ஒரு நொடி மூச்சை இழுத்துக் கொண்டு, தன் வீட்டுக்குள் நுழைந்தாள்.

வீட்டின் உள்ளே ஒளி சற்றே மங்கலாக இருந்தது.

கதிரவன் ஜன்னல் வழியே நுழைந்து தரையில் நீண்ட கோடுகளாகப் படர்ந்திருந்தான்.அந்த ஒளிக்குள்,

அறையின் நடுவில் அமர்ந்திருந்த புதிய மனிதர்களைப் பார்த்த நொடியில் வஞ்சியின் நடை தானாக நின்றது.

அவளின் கண்கள் மெதுவாக அகல விரிந்து. நார் கட்டிலை நோக்கியது. எப்போதும் அதில் அமர்ந்திருக்கும் தன் பாட்டி முத்தம்மையை அவள் விழிகள் தேடியது.

“யார் நீங்க? பாட்டி எங்கே” என அவள் கேட்ட கேள்விக்கு பதில் அவள் முதுகிலிருந்து குரல் கேட்டுப் பட்டெனத் திரும்பினாள்.

“பாட்டியை நாங்க எங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போகப் போறோம். உன்னையும் சேர்த்து தான் வஞ்சி” என அவள் எதிரில் நின்றபடி சொன்னான் ராஜேஷ்.

“முதலில் யார் நீங்க இத்தனை நாள் பாட்டியை பார்க்க ஒரு ஈ , காக்கா கூட வரலை. இப்போ புதுசா நீங்க வந்து உரிமை கொண்டாடுதீய” எனக் கோபமாய்க் கத்தினாள் வஞ்சிக் கொடி.

“இப்போ என்ன நடந்திடுச்சினு நிலையா நிக்கா? முதலில் சொல்றதை முழுசா கேளு. உன் முத்தம்மை பாட்டி இருக்காவல்ல, அவிய எனக்கும் பாட்டி தான். உன்னோட அம்மையும் அய்யனும் செத்துப் போனதும் ஒத்தை பொட்டைப் பிள்ளைய யார் பார்ப்பான்னு மக பிள்ளைய பார்க்க கிளம்பி வந்திடுச்சு” அவளுக்கு இதெல்லாம் புதிதான தகவல். அவளின் தாய் தந்தை புகைப்படம் கூட அவளிடம் இல்லை. தாய் தந்தை என்றால் அவளுக்கு முத்தம்மை பாட்டியின் முகம் தான் அவளுக்கு நினைவில் வரும்.

அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் வஞ்சியின் உள்ளத்தை மெதுவாக உலுக்கியது. இத்தனை நாள் அவள் துயரப்படும் போது வராத சொந்தம் இப்போது எதற்கு வந்திருக்கிறது. பணமில்லாமல் எட்டாம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திய போது எங்கே போனது இந்தச் சொந்தம்.

முதல் முறை அவளின் மாதவிடாய் நிகழ்ந்த போது வராத சொந்தம். அவளுக்கு ஆதரவாய் அரவணைப்பை இருக்க வேண்டிய சூழ்நிலையில் எட்டி கூடப் பாராத சொந்தம் இப்போது எதற்கு வந்திருக்கிறது.

முத்தம்மை பாட்டி உடம்பு சரியில்லாமல் கிடையில் கிடந்த போது வராத சொந்தம் ? என அவள் மனதில் ஆயிரம் கேள்விகள்.

“நான் உன் தாய்மாமனின் ஒரே மகன் ராஜேஷ். நம்ம இரண்டு பேருக்கும் அடுத்த வாரம் கலியாணம்.” என அவன் சொன்ன வார்த்தைகளில் தலை சுற்றுவதைப்போல் உணர்ந்தாள்

ஒரு நொடியில்,உலகமே சுற்றுவது போல உணர்ந்தாள் வஞ்சி. அவளின் கைகள் தன்னை அறியாமல் நடுங்கின. அவனை எதிர்த்து பேச வார்த்தைகளின்றி உச்சபட்ச அதிர்ச்சியில் நின்றாள் பெண்.

அவள் மனதில் மணிகண்டனின் முகம் நிழலைப் போல் விழுந்தது. அனைத்தையும் மீறி.

அவளின் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியைக் கவனித்தவன் சற்றே புருவத்தைச் சுருக்கினான்.

“என்னம்மா வஞ்சி நாங்க யாரு எவருன்னு தெரியலையா? பார்த்திருந்தா தானே தெரியும். நான் தான் உன் அத்தை சிந்தாமணி” என அவர் வஞ்சியின் அருகில் வர.

“அவிய தான் உன் மாமன். தாய் மாமன் சின்னராசு” எனத் தன் கணவனைக் கைக்காட்டினார் சிந்தாமணி. வெள்ளை வேட்டி சகிதம் முறுக்கு மீசையுடன் வீட்டின் வாசல் பிடியிலிருந்து இறங்கி வந்தார் சின்னராசு.

அவரின் பார்வை பெரிய பெண்ணாக வளர்ந்து நிற்கும் வஞ்சிக் கொடியை. பார்த்து.

“ஏம்மா வஞ்சி இந்த வீடு யாரு பேருல இருக்கு. என் அம்மை பேருல இருக்கா இல்லை உன் பேருல இருக்கா?” என நேராய் விசயத்திற்கு வந்தார் சின்னராசு.

“அது என் பேத்தி பேர்ல தான் இருக்கு. ஆக்க கெட்ட கூவைகளா. இப்போ தான் வழி தெரிஞ்சிதோ? அம்மை இருக்கான்னு வந்த வழியைப் பார்த்து ஓடிருங்க” எனத் தலைவாசலில் நின்று ஆதங்கமாய்க் கத்திய தன் பாட்டியை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள் வஞ்சி.

“பாட்டி” என அழுது கொண்டு ஓடி வந்தவள். முத்தம்மை பாட்டியின் மெலிந்த தோள்களை அவள் இரு கைகளால் சுற்று கட்டிக் கொண்டாள் வஞ்சி.முத்தம்மை மெதுவாக வஞ்சியின் முதுகை தடவினார்.

“ரொம்பப் பயந்துட்டேன் பாட்டி” என்றாள் அவர் தோளில் நாடியை பதித்த படிச் சொன்னாள்.

“நீ ஏன் பயரியா? இப்போ தான் நீ தெளிவான முடிவெடுக்கனும் வஞ்சி. இவிய எதுக்கு வந்திருக்காவன்னு நினைக்கா? பூர பயலுக்கும் சொத்தும் பணமும் வேணும். அடிக்கடி கேட்பீயே நமக்குன்னு சொந்தம் இல்லையா பாட்டின்னு. இந்த ஆக்கம் கெட்ட கூட்டம் தான் உன் சொந்தம். உன் அம்மையும் அப்பனையும் வீட்டோட வச்சி எரிச்ச கூட்டம்.”

“அம்மா என்னத்துக்குப் பழசெல்லாம் கிளறிகிட்டு இருக்க? இப்போ நம்ம எல்லாரும் ஒரே குடும்பம். சொத்து பனத்துக்காக வரலை. என் மருமக வஞ்சிக்காக வந்திருக்கோம்” எனச் சின்னராசு தன் தாயை நெருங்கி வந்தவரை பார்த்த முத்தம்மை.

“தூர போயம்ல, முச பிடிக்க நாயை மூஞ்சிய பார்த்தால் தெரியாது. வந்த வழியே பார்த்து ஒடிடு சொல்லிட்டேன். இவிய பவுசை காட்ட வந்திருக்காவ.”

“ஏலே சின்னப் பயவுள்ள, என் பேத்திக்கிட்ட பேசுற வேலை எல்லாம் வச்சிக்காதே” என ராஜேஷை நேரடியாய் பார்த்து மிரட்டினார் முத்தம்மை. பாட்டியின் அரவணைப்பில் பாதுகாப்பாய் உணர்ந்தாள் வஞ்சி.

“அத்தை நீங்க இன்னும் கோபமா இருக்கியளா? நாங்க அதெல்லாம் மறந்து தான் வந்திருக்கோம். நம்ம வீட்டு சொத்து வெளிய போயிட கூடாது பார்த்தியளா? எங்க மேலை இருக்கக் கோவத்தில சொத்தை உங்க மக செண்பகம் பேருல எழுதி வச்சுபுட்டிய. கேட்க ஆளில்லாமல் அந்த வீடு பாழடைஞ்சி கிடக்கு அத்தை. ஊர்காரணுக சொத்துக்கு உரியவகளைக் கூட்டிட்டு வரச் சொல்றானுவ.” என இடைநிறுத்திய சிந்தாமணி இருமினார்.

“வந்தவியளுக்குத் தண்ணி கூடத் தராமல் நிக்க வச்சி கேள்வியா கேட்குறீய” எனச் சலித்துக் கொண்டார்.

“அப்போ மூணு பேரும் உறுதியா தான் வந்திருக்கீய?” மூத்தம்மை கேட்க,

“ஆமா அத்தை. எத்தனை நாள் தான் வீராப்பை பிடிச்சி தொங்கி கிட்டு இருக்கிறது. நாங்க உங்க மக செண்பகமமும், உங்க மருமவன் நாரயணனும் நம்ம குடும்பத்தை அவமான படுத்தினதை மறக்க போயி தான் இந்த வீட்டு வாசலை மிதிச்சிருக்கோம்.” எனச் சிந்தாமணி பேசி முடிக்க.,

“நீ தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் என் வீட்டு பொட்டைபிள்ளைய இந்தக் கொலைகார கூட்டத்துக்குக் கொடுத்து தவிக்க விடமாட்டேன்.

முத்தம்மையின் குரல் கணீரென ஒழிக்க,ஒரு நொடி அங்கே இருந்த அனைவரும் அமைதியாக நின்றார்கள்.

சின்னராசு மெதுவாகச் சிரித்தான்.

“இதோ பாரு பாட்டி நாளைக்கி செத்து போனன்னு வையேன். என் அப்பாவோ இல்லை நானோ தான் கொல்லி வைக்கனும். பொட்டை பிள்ளைய கொல்லி வைக்கும்.” என்ற ராஜேஷை முறைத்த முத்தம்மை.

“நான் செத்தா என்ன செய்யனும்னு என் பேத்திக்கு தெரியும்டா. கொலைகார பாவிகளா உங்க நிழல் கூட என் பொனத்து மேல படக் கூடாது” எனச் சொன்னவர் வஞ்சி கொடியின் கைகளை இறுக பிடித்தார்.

“பாட்டி நான் இருக்கும் போது அப்படிச் சொல்லாதீய. எனக்கு நீ நல்லா இருக்கனும் பாட்டி” என்ற வஞ்சி தேம்பி ஆழ ஆரம்பிக்க, வாஞ்சையுடன் அவளின் தலையைக் கோதிவிட்டார் முத்தம்மை.

“இத்தனை வருசம் இந்த உசிரை கையில பிடிச்சிகிட்டு இருக்கிறதே உனக்காகத் தான் வஞ்சி. அவிய என்னமோ சொல்லிட்டு போகட்டும். உன் மனசுக்கு பிடிச்சவனோட தான் உன் கல்யாணம் நடக்கும்” என அவர் சொல்லிக் கொண்டிருந்த பொழுதே.

“வஞ்சி” என்ற குரல் வாசலில் இருந்து கேட்க, முத்தமையிடம் இருந்து விலகிய வஞ்சிக் கொடி. வெளியே எட்டிப் பார்த்த படி, “யாரது” எனக் குரல் கொடுத்தாள்.

“நான் தான் வஞ்சி கோகிலா” எனச் சொன்னபடி தட்டி போன்ற கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த சமயம் அவரைத் தொடர்ந்து வந்த மணிகண்டனை பார்த்து வஞ்சியின் முகம் பளிச்சிட்டது.

அந்த ஒரு நொடியிலே, அவளின் கண்களில் இருந்த பயமும் குழப்பமும் எங்கோ மறைந்து போனது.வாசல் அருகே நின்றபடிஅனைவரையும் ஒரே பார்வையில் அளந்தான் மணிகண்டன்.

இத்தனை வருடங்களில் எதிர் வீடாக இருந்தாலும் ஒரு நாள் கூடக் கோகிலாவோ. அல்லது அவர்களின் வீட்டை சார்ந்தவர்களோ வஞ்சிக் கொடியின் வீட்டிற்குள் வந்ததில்லை. அவளின் தோழி தக்ஷன்யாவை தவிர.

கோகிலா உள்ளே வந்ததும், அங்கே இருந்தவர்கள் அனைவரும் ஒரு நொடி அவரை நோக்கிப் பார்த்தனர்.

ஆனால், வஞ்சியின் பார்வை மட்டும் அவரின் பின்னால் நின்றிருந்த,மணிகண்டனின் மேல் தான் இருந்தது.

பாட்டியின் அருகில் நின்றுகொண்டிருந்தாள் அவள். அவளின் கண்ணீர் வற்றியிருந்தாலும், அதன் தடமும். வஞ்சிக் கொடி முகத்தின் வாட்டத்யையும் சரியாகக் குறித்துக் கொண்டான் மணி.

அவள் கைகளில் இருந்த கண்ணாடி வளையல்கள் மெல்ல சிணுங்கின. அந்தச் சின்னச் சத்தம் அந்த வீட்டின் அமைதியை மெல்ல கலைத்தது.

வஞ்சியின் கூர்மையாகப் பார்வை மணிகண்டனை மோதி நின்ற சமயம். அவனின் பார்வையும் தன்னவளின் மேல் நிலைக்குத்தி நிற்க. இருவரின் விழிகளும் ஒரே நேரத்தில் சந்தித்துக் கொண்டது.

இவர்கள் இருவரையும் முறைத்துப் பார்த்தபடி நின்றிருந்தான் ராஜேஷ்.

இவனுடன் தானே நேற்றிரவு வஞ்சி சுற்றிக் கொண்டிருந்தாள் என்பதை மணியைப் பார்த்த நொடியில் உறுதிச் செய்திருந்தான் ராஜேஷ். அவர்களைப் பார்த்தபடி தன் தாயின் காதில் எதையோ கிசுகிசுத்தான் அவன்.

“வராதவிய வீட்டுக்கு வந்திருக்கிய, வாம்மா கோகிலா” என முத்தம்மை கோகிலாவை வரவேற்றதில் அதீத கோபத்தில் நின்றிருந்தார்கள் சின்னராசு குடும்பத்தினர்.

 

******

வழக்கம் போல் கல்லூரி செல்ல தயாராகிக் கொண்டிருந்தான் திருநீலகண்டன்.

வீட்டில் தன் அறையின் கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்தான் திருநீலகண்டன்.

அவன் அறையிலிருந்த மேசையில் காப்பி டம்ளரை டொக் என்ற சத்ததுடன் வைத்தார் பூரணி. அந்தச் சத்தத்தில் திரும்பி தன் தாயை ஏறிட்டான் திருநீலகண்டன்.

“சாப்பாடு ரெடி ஆயிடுச்சு” எனத் தகவலாய் சொன்னவர் வெளியே செல்ல முற்பட,

“அவன் எங்கே இருக்கான்” எனத் தம்பி திருமுருனுகனைப் பற்றிக் கேட்டான் அவன்.

“ரூம்ல தான் தூங்கிட்டு இருக்கான்” என்றார் பூரணி.

திருநீலகண்டன் கண்ணாடி முன் நின்றபடியே

“காலை எட்டு ஆயிடுச்சு இன்னும் என்ன தூக்கம் அவனுக்கு?” என்று தலையைச் சற்றே ஆட்டியவன். அவன் கையில் இருந்த சீப்பை மெதுவாக மேசையின் மேல் வைத்தான்.

பூரணி அவனை ஒரு நொடி பார்த்தார். எப்போதும் திருமுருகனை பற்றி விசாரிக்காதவன் துளைத்தெடுக்கும் கேள்விகள் கேட்கிறான். அவன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கான் என்பதை எப்படிக் கேட்பது என்ற தயக்கத்துடன்

“நேத்து ராத்திரி லேட்டா தான் வந்தான்.” என்று சொன்னவர், தன் மூத்த மகனை நிமிர்ந்து பார்த்தார். அவன் கனவுகளை நோக்கி ஓட வேண்டிய வயதில் இருந்தே தன் குடும்பத்திற்காக ஓடிக் கொண்டிருக்கும் மகனை பார்க்க பாவமாக இருந்தது.

தந்தை இறந்த பிறகு குருவி தலையில் பணங்காயை வைத்தது போலக் குடும்பப் பாரம் அவன் தோளில் இறங்கியது. திருமுருகன் மீது அவனுக்கு இருக்கும் கோபம் நியாயமானது என்று பூரணி அறிந்திருந்தாலும். செல்லமாக வளர்க்கப்பட்ட இளைய மகனை அவருக்கு விட்டுக் கொடுக்க மனம் வந்ததில்லை.

“எங்கே போயிருந்தான்?” எனக் கேட்டவன் பூரணியைப் பார்த்தான்.

“யாருக்குத் தெரியும் திரு? எதையும் சொல்றதில்லை. என் கிட்ட கூடச் சரியா பேசுறதில்லை. உன்னை மாதிரி தான் முகம் கொடுத்து கூடப் பேச மாட்டேன்றான். உங்க அப்பா தனியா போனதுக்கு என்னையும் சேர்த்து கூட்டிட்டுப் போயிருக்கலாம்” பூரணி சொல்லும் போதே அவரின் குரல் உடைந்து கண்களில் நீர் கோர்த்து நின்றது. அந்தக் கண்ணீரை பார்த்ததும்

திருநீலகண்டன் முகம் சற்று மாறியது. “அம்மா” என்று மெதுவாக அழைத்தான். அவன் குரலில் முன்பு இருந்த கடினம் இலை மேலிருந்த பனித்துளி சூரிய ஒளி பட்டு கரைவது போல் கரைந்திருந்தது.

“எதுக்கு இப்படிப் பேசுறீங்க?” என்று அருகே வந்து நின்றான். பூரணி தன் கண்ணீரை விரலால் துடைத்துக் கொண்டார்.

“பின்னே என்னடா உங்க அப்பா இறந்ததற்கு அப்பறம் நீயும் சரியா பேசமாட்டேன்ற. அவன் என்னடான்ன வாழ்க்கையைப் பத்தின பயம் இல்லாமல் தினமும் போதையில தான் வாரான். நான் யார்கிட்ட போய்ச் சொல்லி அழறது திரு, சொல்லு நான் யாருக்காக இந்த உயிரை பிடிச்சிகிட்டு இருக்கணும்” என மகனின் தோள் சாய்ந்து அழுதார்.

அந்த அழுகை அவர் குரலில் மட்டும் இல்லை பல வருடங்களாக அவள் உள்ளத்தில் சுமந்து வந்த கவலையின் குரலாக அறை முழுக்க எதிரோலித்தது.

திருநீலகண்டன் ஒரு நொடி அசையாமல் நின்றான்.அவன் கைகள் மெதுவாகத் தன் தாயின் தோள்களைத் தொட்டது.

“நீங்க கவலைப்படாதீங்க.”திருநீலகண்டன் குரல் மெல்ல உறுதியானது.

“அவனை நான் பாத்துக்கிறேன்.”அவன் சொல்லிய அந்த வார்த்தை அறையில் ஒரு வித்தியாசமான அமைதியை பரப்பியது. பூரணி அவனை ஒரு நொடி பார்த்தார்.

“நிஜாமாதான் சொல்றீயா திரு? அவன் கூட நீ பேசுவியா? நம்ம வீடு அப்பா இருந்தப்ப கலகலப்பா இருக்குமே அப்படி மாறுமா திரு” என்று மெதுவாகக் கேட்டார் பூரணி.

“அப்பா உங்க கிட்ட கடைசியா என்ன பேசினாங்கன்னு நியாபகம் இருக்கா மா?” தாயை தன் தோளில் இருந்து விலக்கியவன் அவரின் முகத்தைப் பார்த்து கேட்டான்.

பூரணி அவன் கேட்ட கேள்வியில் ஒரு நொடி திகைத்துப் பார்த்தார்.

“என்னடா கேட்கிற? ”என்று மெதுவாகக் கேட்டார்.

திருநீலகண்டன் அவரின் கண்களை விட்டு பார்வையை எடுக்கவில்லை.

“அப்பா கடைசியா உங்க கிட்ட என்ன பேசினாங்கன்னு கேட்டேன்”அவன் மீண்டும் கேட்டான்.

அந்தக் கேள்வி பூரணியின் உள்ளத்தில், பழைய நினைவுகளைத் தொண்டி எடுக்க ஆரம்பித்தது.

“ஆடிட்டர் ஆபிஸ்ல இருந்து மதியம் போன் பண்ணி முருகன் வீட்டுக்கு வந்தானா நீ சாப்பிட்டியான்னு கேட்டார். நான் சாப்பிட்டேன்னு சொன்னேன் சரி வேலை இருக்குது வையின்னு சொல்லி வச்சிட்டாருடா” எனச் சொன்னவர்,

“ஏன்டா திரு இப்படிக் கேட்கிற”

திருநீலகண்டன் ஒரு நொடி அமைதியாக நின்றான். அவன் முகத்தில் சின்னச் சிந்தனை நிழல் தோன்றி மறைய.

“அப்பாவோட கடைசி ஆசை என்னன்னு தெரியுமா” என்றவன் மேசையில் இருந்த காஃபியை எடுத்து பருக ஆரம்பித்தான்.

“என்ன திரு இப்படிக் கேட்கிற அவரோட கடைசி நிமிசத்துல நீ தானே கூட இருந்த. இப்போ என்கிட்ட வந்து கேட்கிற. காலையில அயர்ன் பண்ணின சட்டையைப் போட்டு ஆஃபீஸூக்கு கிளம்பி போனவரை கடைசியா ஆம்புலன்ஸில அவரு உடம்பை மட்டும் தானடா கொண்டு வந்தீங்க?” தலையில் அடித்துக் கொண்டு அழுதவர் ஏதோ யோசனையில் அழுகையைத் திடீரென நிறுத்தியவர் தன் மகனை நேராகப் பார்த்தார்.

“அப்பா சாகுறதுக்கு முன்ன என்னடா திருச் சொன்னாரு. அதை ஏன்டா இத்தனை வருசமா நீ என்கிட்ட மறைச்ச” அழுகையும் கோபமும் கலந்து, திருநீலகண்டனின் சட்டை காலரை பிடித்து உலுக்கி கேட்டார் பூரணி.

“நம்ம முருகனை நல்ல வழிக்கி கொண்டு வரணும். அவனும் என்னைய மாதிரி நல்ல வேலைக்கி போகணும்னு அப்பா ஆசைப்பட்டாருமா. அப்பறம்…” என அவன் இடைநிறுத்த,

“அப்பறம் உன் கல்யாணத்தைப் பத்தி பேசியிருப்பாரு” எனப் பூரணி கேட்க திருநீலகண்டனோ அதிர்வுடன்.

“உங்களுக்கு எப்படித் தெரியும்” என அவன் கேட்டான்.

“அப்பாகிட்ட நான் தான் பேச சொன்னேன்” எனச் சொன்னவர் “என் கூடவா” எனச் சொன்னவர் திருநீலகண்டனை அழைத்துக் கொண்டு தன்னறைக்குச் சென்று. அவரின் பீரோவில் லாக்கர் பிரிவை திறந்தவர். அதிலிருந்த தன்னுடைய தாலியை வைத்திருக்கும் நகைப் பெட்டியை எடுத்தவர் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றை அதிலிருந்து எடுத்து திருநீலகண்டனின் கையில் கொடுத்தார்.

நேர் வகிடு எடுத்து படிய வாரிய தலையுடன் அவள் சூடியிருந்த மல்லிகைப்பூ இன்று வாடாமல். நீல நிற சுடிதாரில் இருபுறமும் பின் செய்யப்பட்ட துப்பட்டாவுடன். குழந்தை சிரிப்புடன் பருவப் பெண்ணாய் அந்தப் புகைப்படத்தில் எழில் கொஞ்சும் அழகுடன் இருந்தாள் தக்ஷன்யா.

“தக்ஷூ”என அவனின் செவ்வதரங்கள் அவளின் பெயரை உதிர்க்க, மகனின் முக மாற்றத்தை கவனித்தபடி நின்றிருந்தார் பூரணி.

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்