
ப்ரியம் 10
“இந்த நேரத்துல எங்கே போறீங்க?” திருநீலகண்டனின் குரல் இரவின் அமைதியை வெட்டியது.
அந்த ஒரு குரலுக்கே தக்ஷாவின் இதயம் படபடவெனத் துடிக்க ஆரம்பித்தது.
அவள் நின்ற இடத்திலேயே உறைந்து போனாள்.
மஞ்சள் விளக்கின் கீழ் கைகளை மடக்கிக் கொண்டு நின்றிருந்தான் திருநீலகண்டன். அவன் முகத்தில் வழக்கமான அந்தக் கம்பீரம். கண்கள் மட்டும் நேராக அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது.
“சார்!! சார்!” எனத் தக்ஷாவின் இதழ்கள் தந்தியடிக்க. பயத்துடன் அவனை ஏறிட்டாள். அவனோ அவள் பயத்தைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்தான். அவளின் படபடக்கும் இமைகள் அவனைப் பார்த்துப் பயத்தில் வழக்கத்தைவிட அதிகமாய் துடித்தது
நிமிர்ந்து பார்க்கவே அவளுக்குப் பயமாக இருந்தது.
கைகளைப் பிசைந்து கொண்டு தலை தாழ்த்த்தி நின்றாள்.
“கேள்வி கேட்டா பதில் சொல்லணுமா? இல்லையா?” திருநீலகண்டனின் குரல் சற்றே கடினமானது.
“அது வந்து சார்” என்று ஏதோ சொல்ல முயன்றாள் தக்ஷா ஆனால் வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொண்டு வரமாட்டேன் என அவளிடம் மல்லுக்கட்டியது
அவள் பேச முடியாமல் தடுமாறுவதை அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தான் அவன். அவனின் ஷூ கால்கள் மெல்ல ஒரு அடி எடுத்து முன்னே வைத்து அவளை நெருங்க
அவள் தன்னை அறியாமல் ஒரு அடி பின்வாங்கினாள்.அதைப் பார்த்தவன் புருவத்தைச் சற்றே உயர்த்தினான்.
“என்னைப் பார்த்தால் அவ்வளவு பயமா தக்ஷன்யா?”அவன் மெதுவாகக் கேட்டான். அந்தக் கேள்வி கேட்ட நொடியில் அவளின் இதயம் இன்னும் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.
அவள் பேச முடியாமல் திணறுவதைப் பார்த்த யோகா உடனே முன்னே வந்தாள். தக்ஷாவின் கரத்தைப் பிடித்து இறுக்கமாகக் கையோடு கோர்த்துக் கொண்டாள் யோகா. தக்ஷா நீண்ட பெருமூச்சொன்றை விட்டு தன் தோழியைப் பார்த்தாள்.
“நான் பார்த்துக் கொள்கிறேன்” என்பது போல் இமை அசைத்தாள் யோகா. அவள் தனியாக இல்லை தன்னுடன் தன் தோழி யோகா இருக்கிறாள் என்பதே அப்போது தான் அவளுக்கு நினைவில் வந்தது.
“அது சார். மெஸ்ல சாப்பாடு கொஞ்சம் காரமா இருந்துச்சு. அதான் வெளியே போய்ட்டு ஏதாவது சாப்பிட்டு வரலாம்னு” என்று சொல்லி சமாளிக்க முயன்றாள் யோகா.
“கூட வந்த இந்த இரண்டு பக்கிகளும் பாரு கைய கட்டிட்டு நிக்குதுக. நம்ம தான் சமாளிக்க வேண்டியதா இருக்கு” தக்ஷா காதில் கிசுகிசுத்தாள் யோகா.
“ஹாஸ்டல் ரூல்ஸ் தெரியாதா?” என்று கேட்டான் அவன் சற்றே கடினமான குரலில்.அவனின் குரல் கேட்டதும் தக்ஷா இன்னும் தலை குனிந்தாள்.
யோகாவோ உடனே பேச ஆரம்பித்தாள்.
“தெரியும் சார்., ஆனா நாங்க தூரமா போக மாட்டோம். கேட் வெளியே இருக்குற டீ கடைல இருந்து ஏதாவது வாங்கிச் சாப்பிட்டு வந்துடுவோம்”
திருநீலகண்டன் ஒரு நொடி அமைதியாகத் தக்ஷாவை பார்த்தான்.
“ஏன் உங்க ஃப்ரெண்ட்டுக்கு பேச தெரியாதா? அவங்களை எந்தக் கேள்வி கேட்டாலும் நீங்க பதில் சொல்றீங்க”
திருநீலகண்டனின் பார்வை நேராகத் தக்ஷாவைத் துளைத்தது.
‘இவளுக்கா பேச தெரியாது. விட்டால் ஊரையே வித்துட்டு வந்திருவா. சாரை பார்த்ததும் அமைதியான புள்ளை மாதிரி ஆக்டிங் விட்டுட்டு இருக்குது’ என மனதில் நினைத்தவள் வெளியில் சொல்ல முடியாமல்.
“அவ கொஞ்சம் பயந்துவ சார். உங்க நிழலை பார்த்து பேய்னு பயந்து தான் சார் ஓடி வந்தா” எனச் சமாளிப்பாய் எதோ சொல்ல முயல, தக்ஷாவோ இதழுக்குள் சிரிப்பை அடக்கினாள்.
சரண்யாவும் திவ்யாவும் அதே நிலையில் தான் இருந்தார்கள். யோகாவிற்கோ பயம் பற்றிக் கொண்டு வந்தது.
“சிரிச்சி கிரிச்சுத் தொலைச்சி என்னை மாட்டி விட்டுடாதீங்க பக்கிகளா” என வாய்விட்டு புலம்பினாள் யோகா.
“பேய்னு பயந்து பேய் மேலையே வந்து மோதுவிங்களா தக்ஷா” என அவன் சாதாரணமாய்க் கேட்க அடக்கி வைத்திருந்த சிரிப்பு இப்போது பீறிக்கொண்டு வர. பட்டெனச் சிரித்திருந்தாள் தக்ஷா. தக்ஷா சிரித்த நொடியில் சரண்யாவும், திவ்யாவும் சிரித்து விட,
“சோலிய முடிச்சு விட்டுடாளுக. இனி இவர் என்னைய தான் கேள்வி கேட்பாரு”
“இப்போ சிரிக்க முடியுதே அப்படின்னா பேசவும் முடியும் இல்லையா?” என்று அவன் அமைதியாகக் கேட்டான் தக்ஷாவை நோக்கி,
அந்தக் கேள்வி கேட்டதும் தக்ஷாவின் சிரிப்பு உடனே நின்றது. அவனை நிமிர்ந்து பார்த்தவள்.
“சார் நான் உங்களைப் பேய்னு சொல்லலை”
“அப்போ யார் சொன்னது” என்றான் தீவிரமாக.
“இவள் தான்” என யோகாவை கைகாட்டினாள் தக்ஷா. அவன் பார்வை இப்போது யோகா மீது திரும்ப,
“சார்! சார் ஒரு நிமிசம் சார் கோவபட்டுறாதீங்க சார். இவ கிட்ட இரண்டு வார்த்தை மட்டும் கேட்டுக்கிறேன் சார்” எனத் திருநீலகண்டனை பார்த்து சொன்ன யோகா தக்ஷா புறம் திரும்பியவள்.
“இப்போ யாரு பேய்னு சார் கேட்டாரா டீ நீ எதுக்குடி என்னைய கோர்த்துவிடுற. நிதமும் இதையே பொழப்பா வச்சிருப்பியோடி.” எனத் தக்ஷாவை அவள் திட்ட தக்ஷா சிரித்த முகமாய் நின்றிருந்தாள்.
“சார் ஹாஸ்ட்டல் சாப்பாடு சரியில்லை அதனால தான் சார் வெளிய சாப்பிடலாம் வெளியே கிளம்பினோம். இப்போ உங்க கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறோம்” என யோகா ஓரே மூச்சாய் சொல்லி முடித்தாள்.
“ஹாஸ்டல்ல ஃபுட் சரியில்லையா? அப்படினா மேனேஜ்மென்ட்ல கம்ப்ளைன்ட் பண்ணுங்க. இப்போ போய்ச் சாப்பிட்டுட்டு பத்து மணிக்குள்ள ஹாஸ்டல் குள்ள வந்திருக்கணும்” என எச்சரிக்கையாய் சொல்லி வெளியே நகர்ந்தான் திருநீலகண்டன்.
அவன் சற்றுத் தூரம் சென்றதும் தான் யோகா நீண்ட பெருமூச்சு விட்டாள்.
“ஆத்தாடி உயிரே போய்ட்டு வந்த மாதிரி இருக்கு டி!” என்று மார்பை பிடித்துக் கொண்டாள் யோகா.அதை கேட்டதும் சரண்யாவும் திவ்யாவும் சிரித்து விட்டார்கள்.
தக்ஷாவோ இன்னும் அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னடி தக்ஷா அவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா?” என யோகா கேட்டாள். ஆம் எனத் தக்ஷா தலையசைக்க,
“கொன்னுருவேன் உன்ன. இம்புட்டு நேரம் இங்கணத் தான் நிலையா நின்னுட்டு இருந்தாரு. ஆனா நல்லா கோர்த்து விடுறடி தக்ஷா” என யோகா சொல்ல, நால்வரும் வெளியே வந்து கேட்டை தாண்டியிருந்த கடையில் சிக்கனும் பாரோட்டாவும் ஆர்டர் செய்து அமர்ந்து சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, காரை ஓட்டியபடி திருநீலகண்டன் செல்ல.
“ஏய் யோகா அங்கே பாருடி” என விழி அகல ஆச்சரியத்துடன் சொன்னாள் தக்ஷா.
“என்னடி” சற்று எரிச்சலுடன் கேட்டாள்.
“நம்ம சார் கார்ல போறாருடி”
“யாரு நம்ம ஹிட்லரா? அவர் கார்ல போனா எனக்கென்ன.? பைக்ல போனா எனக்கென்ன? இப்போ எனக்குப் பசிக்குது சாப்பிடனும் அவ்வளவு தான்” என யோகா தோளை உலுக்கியபடி சொன்னாள்.
“அடியே! அது திருவோட கார்டி” எனச் சொன்னவள் சற்றுக் குழம்பி போனாள்.
யோகா உடனே சாலையை நோக்கி பார்த்தாள்.
“அட ஆமாம் பக்கி. அந்தத் திரு ஓட்டுற கார் தானே இது?” என்றாள் அவள். தக்ஷா மெதுவாகத் தலையசைத்தாள்.
“ஆமாம்” என
ஒரு நொடி இருவரும் சாலையைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
“ஆனால் அந்தக் கார்ல இப்போ” என்று யோகா சொல்லி தக்ஷாவை நோக்கிப் பார்த்தாள்.
“திருநீலகண்டன் சார்” என்று தக்ஷா மெதுவாகச் சொன்னாள்.
“உன்கிட்ட தான் திருவோட நம்பர் இருக்கே கால் பண்ணி பாரு” என யோகா யோசனைக் கொடுக்க. நொடி தமாதிக்காமல் அன்று அவன் கொடுத்த எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள். அழைப்பு ஏற்கப்பட்டது.
“ஹலோ” என்றக் குரல் கேட்க மறுபுறம்.தக்ஷா ஒரு நொடி யோகாவை பார்த்தாள்.
“திரு! நான் தக்ஷா பேசுறேன்…” என்றாள் மெதுவாக.
“ஆஹா தக்ஷா மேடம்! சொல்லுங்க… இந்த நேரத்துல கால் பண்ணிருக்கீங்க?” என்றான் அவன் சாதாரணமாக.
“இல்லை ஃப்ரீயா இருக்கீங்களா?” எனப் பேச்சை ஆரம்பித்தாள்.
“ஃப்ரீ தான் மேடம், சொல்லுங்க. இந்த நேரத்துல கால் பண்ணீங்கன்னா ஏதாவது முக்கியமான விஷயமா?” என்றான் திருநீலகண்டன் சிரிப்புடன். தக்ஷா சற்றுத் தயங்கினாள்.
‘தக்ஷூ என்னைய செக் பண்ணுறீங்க? உனக்கு என் மேல சந்தேகம் வந்திடுச்சா?’ என நினைத்தவன் காரை இயக்கிக் கொண்டிருந்தான்.
“என்ன மேடம்? இவ்வளவு நேரம் அமைதியா இருக்கீங்க?” என்றான் மறுபுறம் சிரிப்புடன்.தக்ஷா சற்றுத் தயங்கி பேச ஆரம்பித்தாள்.
“திரு!! நீங்க இப்போ எங்கே இருக்கீங்க?”காரை ஓட்டிக் கொண்டிருந்த திருநீலகண்டன் ஒரு நொடி சிரித்தான்.
“எனக்கு கொஞ்சம் வேலை இருந்தது மேடம். வெளியே தான் இருக்கேன்” என்றான் சாதாரணமாக.
“இல்லை கேப் புக் பண்ணலாம்னு பார்த்தேன்” என அவள் தயங்கி சொல்ல,
“கேப் அண்ணா எடுத்திட்டு போயிருக்கான். வர முடியாதே” என அவன் சொல்ல.
“அப்படியா? சரி திரு நான் வச்சிடுறேன்” என்றவள் அழைப்பை துண்டிக்க.
“எனக்கென்னவோ இரண்டு பேரும் ஒரே ஆளுன்னு தோணுதுடி யோகா” குழப்பத்துடன் தோழி யோகாவை பார்த்தாள்.
யோகா உடனே சிரித்தாள்.
“ஏய் பக்கி! உனக்கு ரொம்பக் கற்பனை அதிகமா போய்ட்டு இருக்கு. ஒரு ஆள் காலேஜ்ல ஹிட்லர் மாதிரியும்.நைட்ல கேப் ஓட்டவும் முடியுமா?” என்றாள் கிண்டலாக.
சரண்யாவும் திவ்யாவும் சிரித்தார்கள்.
ஆனால் தக்ஷாவின் மனதில் மட்டும் அந்தச் சந்தேகம் அங்கேயே நின்றுகொண்டே இருந்தது.
திருநீலகண்டன் ,திருமுருகன் இருவரும் உண்மையிலேயே வேறு ஆள்களா? என்ற கேள்வியில் அவள் தொக்கி நின்றாள்.
அங்கேயே சாலையில் காரை ஓட்டிக் கொண்டிருந்தான் திருநீலகண்டன்.
அவன் உதட்டில் மெதுவான சிரிப்பு.
எத்தனை நாள் தான் இந்த இரட்டை வாழ்க்கை?
ஒரு நாள் உண்மை வெளிவரும். அப்போது அவளின் சம்மதத்தையும் அவளின் இதயத்தையும் ஒரே நேரத்தில் வெல்வானா திருநீலகண்டன்?
************
தச்சன்விளை கிராமம்…
அந்தக் காலையின் மென்மையான அமைதியில் மெதுவாக விழித்துக் கொண்டிருந்தது.
இரவின் பனித்துளிகள் இன்னும் நெற்பயிர்களின் நுனியில் மினுமினுத்துக் கொண்டிருந்தது. கிழக்கே சூரியன் மெல்ல உயர்ந்து, தங்க நிற ஒளியை வயல்களுக்கு மேலே பரப்பிக் கொண்டிருந்தான்.
எப்போதும் கடையைத் திறந்து வைத்து விட்டு வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் கோகிலா. இன்று கடையையும் திறக்கவில்லை. அடுக்களையில் எந்த வேலையும் நடந்த பாடில்லை.
கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த மணிகண்டனை முறைத்தபடி அமர்ந்திருந்தார். எப்போது விழிப்பான் காத்துக் கொண்டிருந்தவர் முதலில் மின்விசிறியின் ஸ்விட்ச்சை அழுத்தி அதன் இயக்கத்தை நிப்பாட்டி இருந்தார். மின்விசிறி நின்றதும் அறையில் இருந்த காற்று மெதுவாகக் குறைந்தது.
சில நிமிடங்களில் மணிகண்டன் சற்றே அசைந்தான். முகத்தைச் சுளித்தபடி திரும்பிப் படுத்துக் கொண்டான்.
“ஏலே மணி எந்திடா” என்று கோகிலா மெதுவாக அழைத்தாள். அவனோ ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.
“மணி எந்திடா” என்று இம்முறை சற்றுச் சத்தமாகக் கூப்பிட்டார் கோகிலா.
அவன் இன்னும் கண் திறக்காமல் போர்வையை முகம் வரை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.அதைப் பார்த்த கோகிலாவின் பொறுமை சற்றுக் குறைந்தது.
“கலெக்டர் மவேன்னு நினைப்பு. ஆவாத வேலையெல்லாம் செஞ்சுபுட்டுத் தூக்கத்தைப் பாரு” என்று முணுமுணுத்தபடி கட்டிலின் அருகே வந்தவர்,
போர்வையை இழுத்தார். அவனை ஒரு நொடி கவனமாகப் பார்த்தார்.தூக்கத்திலேயே மணிகண்டன் மெதுவாக ஏதோ முணுமுணுத்தான்.
“அடியே கொடி! என் தங்க மயிலு” என்ற அந்த வார்த்தை கோகிலாவின் காதில் தெளிவாக விழுந்தது.அவரின் புருவம் உடனே சுருங்கியது.
“கனவுல அவ கூடத் தான் குதியாட்டம் போடுதீயோ?” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டார். அவன் தோளில் மெதுவாகத் தட்டி,
“மணி எந்திடா விடிஞ்சு வெள்ளக் கோழி கூவிட்டு” என்றார் கோகிலா.
மணிகண்டன் சற்றே அசைந்தான். மெதுவாகக் கண்களைக் கசக்கி கோகிலாவை பார்த்தான்.
“ஏம்மா இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடலாம்ல” என்று சலிப்பாகச் சொன்னவன் மீண்டும் போர்வையை இழுத்தி போர்த்திக்கொண்டு படுத்தான்.
“என்ன காரியம்ல செஞ்சிட்டு வந்திருக்க? ஊருக்குள்ள கேவலப்படுத்தினது பத்தாது. சீமைக்கே தெரியட்டும்னு ஆடுதீயோ” எனக் கோகிலா சொன்னவுடன் போர்வையை விலக்கிக் கொண்டு பட்டென எழுந்து அமர்ந்தான்.
“என்ன இழவுக்குக் காலையில காத்துகிட்டு கிடக்கா? எவ உன்கிட்ட வந்து என்ன சொன்னா?” என்றான் மணி.
“ஏலே! நேத்து ராத்திரி எங்கே போயிருந்த?” அந்த ஒரு கேள்வி காலை அமைதியை உடைத்தது.மணிகண்டன் கண்களைச் சற்றே சுருக்கினான்.
“எங்க போயிருப்பேன்? டவுனுல வேலை இருந்தது.” என்றான் சாதாரணமாக.
“இதோ பாருலே. இனி இந்த வீட்டுல சமையல் ஆகாது. கடையிலையும் நிக்க மாட்டேன். நீயும் அப்பாவும் பொங்கி திண்ணுங்க” எனக் கோபமாய்ச் சொன்னார்.
“இப்போ என்ன நடந்திட்டுனு எந்த வேலையும் பார்க்காமல் அவனைப் பேசிகிட்டு இருக்க?” என்றார் சந்திரன்.
“நேத்து ராத்திரி அந்து எதிர் வீட்டு சிறுக்கிக்கு சீலை வாங்கிக் கொடுத்து கையில வளையல மாட்டி விட்டு., ஒன்னுமே செய்யாத ஈரக்கோழி மாதிரி மழையில நனைஞ்சு வந்திருக்கான். அவ வீட்டு வாசல்ல பைக்ல இறக்கி விட்டுட்டு வாரான்” என்ற கோகிலா மகனை முறைத்தார்.
“என்ன மணி இதெல்லாம். உன்னால தக்ஷாக்கு மாப்பிள்ளை கிடைக்காம போயிட்டா என்ன பண்ணுறது?” எனச் சந்திரன் வருந்தினார்.
“அதெல்லாம் கவலை படாதீய மாமா. தக்ஷா கல்யாணத்தை அவ படிப்புக் கெடாமல் முடிக்கிறது எங்க பொறுப்பு. ஒன்னும் சாப்பிடாம இருப்பீய சோறு பொங்கி கொண்டு வந்திருக்கேன் சாப்பிடுங்க” எனக் கட்டை பையைக் கோகிலாவின் அருகில் வைத்தாள் வஞ்சிக் கொடி.
“என்னத்தை அப்படிப் பார்க்குதீய? மாமாவுக்கு எடுத்து வச்சி கொடுங்க” என்றவள் கோகிலாவின் கையில் ஒரு கவரை கொடுத்தாள்
“இந்தாங்க இந்தச் சீலை உங்களுக்கு வாங்கினது தான். ராத்திரி முழுக்க முழிச்சு இருந்த ஜாக்கெட்டை தச்சிட்டேன். அளவு சரியா இருக்கான்னு போட்டு பார்த்திட்டு சொல்லுங்க. உங்களுக்குப் பிடிச்ச ஸ்பேஸ் சில்க் அத்தை வாங்கனும்னு சொல்லிட்டே இருந்தீயல்ல, உங்க மவன்ட்ட சொன்னதும் உடனே வாங்கிட்பாவ” எனச் சொன்னபடி மணியை ஏறிட்டாள் வஞ்சிக்கொடி. அவனோ அவளை முறைத்தபடி அமர்ந்திருந்தான்.
கோகிலாவோ வாயடைத்து அமர்ந்திருந்தார்.
“ஏம்மா வஞ்சி. எதுக்குச் சோறெல்லாம் பொங்கி கொண்டு வந்திருக்க?”
“காலையிலேயே பார்த்தேன் மாமா கடை திறக்கலை. அத்தைக்கி மேலுக்கு முடியலையோன்னு சேர்த்துப் பொங்கிட்டேன் மாமா. இதுக்கு முன்னாடி எப்படியோ? இப்போ இந்த வீட்டு மருமகளா என்னால சும்மா இருக்க முடியலை மாமா. தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க. வரேன் மாமா. வரேன் அத்தை” எனச் சொல்லி வாசலை நோக்கி சென்றாள் வஞ்சி. கட்டிலில் இருந்து எழுந்தவன் அவளைத் தொடர்ந்து சென்றான்.
“ஏய் கொடி! நில்லு” என அவன் அழைக்க, அவளின் நடை தடைப்பட்டது.
“உனக்குக் கிறுக்கெதும் பிடிச்சிட்டோ? என்னத்துக்குச் சீலையை அம்மைக்கி கொடுத்த? உனக்குன்னு நான் ஆசையா வாங்கிக் கொடுத்தது” என்றான் கோபமாக.
“கிறுக்கி தான்னு நினைச்சுக்கோங்க. நான் எந்தத் தப்பும் செய்யலை என்னுடைய மனசுக்கு இது தான் சரின்னு பட்டுச்சி அதான் கொடுத்திட்டேன்.”
“என்ன கொடி!” என்றவனின் பார்வையில் இப்போது கோபம் இல்லை ஆனால் வருத்தம் நிரம்பி வழிந்தது.
“எனக்கு இது போதும்.என்னோட பிறந்தநாள் பரிசு” என மென்மையாகச் சிரித்தாள் வஞ்சி.
அவள் கைகளை மெதுவாக உயர்த்தினாள். நேற்றிரவு மழையில் நனைந்த கண்ணாடி வளையல்கள் காலை வெளிச்சத்தில் சிறிய வானவில் போல மின்னியது. அவை சிணுங்கிய சத்தம் மணிகண்டனின் இதயத்தை மெதுவாகத் தொட்டது. மணிகண்டன் சில நொடிகள் பேசாமல் நின்றான்.
அவன் வாங்கிக் கொடுத்த பீச் நிற சீலை இப்போது அவன் அம்மாவின் கையில்.ஆனால் அவன் கொடுத்த வளையல்கள் வஞ்சியின் கைகளில்.அவனின் மனதில் ஒரு விசித்திரமான அமைதி மெல்ல பரவியது.
வஞ்சிக் கொடியின் இந்தச் செயலை எதிர்பாராத கோகிலா. இன்னும் அந்த நொடியிலிருந்து மீளவில்லை. வீடே அமைதி நிறைந்திருக்க வஞ்சி மணியைப் பார்த்தபடி வெளியே வந்தாள்.
அவள் வீட்டின் முன் கார் வந்து நின்றிருக்க, அவள் வீட்டிற்குள் இருந்து புதிய மனிதர்களின் குரல் கேட்டது, வீட்டிற்குள் விரைந்து ஓடினாள் பெண்.

