Loading

புயல் 7

“இதுதான் சரியான சமயம் இதுக்கும் மேலயும் இங்க இருந்தால் இவங்க டிராமாவை பார்க்குற கொடுமை நமக்குத்தான் உமா. கிளம்பிடு” ருத்ரன் கிளம்பி பதினைந்து நிமிடங்கள் கழித்து அவள் மெல்ல எழுந்தாள்.

தலை லேசாக சுற்றியது.

பட்டு லட்டு… ப்ச் அவனைப் போலவே அழைத்துப் பின் மாற்றினாள்.

“குட்டீஸ்.. உங்க அப்பா வர்றதுக்குள்ள நாம கிளம்பணும். அம்மாவுக்கு இங்க இருக்க விருப்பமே இல்லை உன் அப்பா நல்ல..” என்று சொல்ல வந்தவள் அதைச் சொல்ல மனமில்லாமல் “கிளம்பலாம் குட்டீஸ்” என்று வயிற்றினைத் தடவிக் கொண்டாள்.

அவன் தடவியது நினைவில் ஆடியது.

“எப்படியெல்லாம் இருந்திருக்க வேண்டிய வாழ்க்கை ருத்ரா இது. நீ இப்படியொரு துரோகம் பண்ணுவன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. உனக்காக எல்லாத்தையும் தாங்குன என்னால இதைத் தாங்கிக்க முடியல. நீ எனக்கு மட்டும் சொந்தமானவனா ஏன் இல்லாமல் போன டா” கண்ணைக் கரித்தது பெண்ணவளிற்கு.

கண்களைத் துடைத்துவிட்டு “இன்னைக்கு இருந்ததே ஒரு மாதிரி இருக்கு. குழந்தை பிறக்குற வரைக்கும் இருந்தால் கண்டிப்பா நான் பையித்தியம் பிடிச்சு செத்துடுவேன்..” அதனால் உடனே ஆத்விக்கு மெசேஜ் போட்டாள்.

அதைப் பார்த்தவன் “ஓகே” என அனுப்பியிருந்தான்.

இன்னும் தலை சுற்றுவது போல் இருந்தது.

“பேபிஸ் அம்மாவைப் போட்டுப் படுத்தாதீங்க. நாம இப்போ ஆச்சிட்ட போகலாம்.. மாமனும் வந்துடுவான்” மெல்ல மெல்ல பேச்சுக் கொடுத்துக் கொண்டே தலையைத் தாங்கிப் பிடித்தாள்.

முடியவில்லை.

வயிற்றுக்குள் இருக்கும் அவனது உயிர்கள் இந்த வீட்டை விட்டு நீ வெளியேப் போகக் கூடாது என்பதற்காகவே இப்படியான எதிர்வினைகளை அவளது உடம்பில் காட்டிக் கொண்டிருந்தது போல.

அவளால் பாதத்தினை கீழே கூட ஊன்ற இயலவில்லை. தலை கிறுகிறுவென சுழல ஆரம்பித்தது‌. மொபைல் தள்ளி விழுந்து விட

படுக்கையிலேயே சாய்ந்துக் கொண்டாள். இமைகள் அழுந்த மூடிக் கொண்டது.

அப்படியே அவள் சோர்ந்து போய் விட்டாள்.

எழுந்து போக வேண்டும் என்ற நினைப்பு மாறி இப்படியே இருந்துவிட வேண்டும் என்பதாக மாறிவிட்டது. ஆதலால் வாகாய் சாய்ந்து உறங்கியும் போய்விட்டாள்.

ஒருகட்டத்தில் விழிப்பு நிலைக்கு அவள் வர அதன்பின்னரே இங்க இருந்து போகலாம் என்ற நினைப்பு ஞாபகம் வந்தது.

மொபைல் இங்கதானே இருந்தது. படுக்கையில் இருந்தபடியே அவள் துழாவினாள்..

துழாவியவளின் கரங்களுக்கு தட்டுப்பட்டது என்னவோ வேறு ஒன்றுதான்..

கையை பட்டென்று எடுக்கப் பார்க்க அந்த கரத்தினை விடாமல் அழுத்தமாய் பிடித்துக் கொண்டான் ருத்ரன். அடுத்த நொடி விளக்கு எரிந்தது. கண்கள் கூச சமாளித்து அவள் பார்க்க அவனது கண்களோ மோகத்தின் பிடியில் இருந்தது.

“தங்கம்” என அவன் அழைக்க அவள் “அது மொபைலை எடுக்க” என தடுமாறினாள்.

“நீ என்னைத் தொட்டதே இல்லையா என்ன? ரொம்ப பண்ணாத?” குரலில் குழைவு இருந்தது.

“கையை விடு ருத்ரா”

“எனக்கு நீ வேணும் தங்கம்” அவன் குரலோடு சேர்ந்து உஷ்ணம் வேறு அவளைத் தீண்டியது.

“ப்ச் கையை விடு”

“நான் பாட்டுக்குச் சிவனேன்னு தானேடி படுத்திருந்தேன். நீதானே என்னைத் தொட்டு எழுப்புன. இப்போ வந்து கையை விடுங்கிற.. புருஷன்காரன் பாவம்டி.. இந்த பாவம் எல்லாம் சும்மா விடாது தங்கம்” அவளோடு நெருக்கமாக வேண்டும் என்று அவனது ஆவி துடித்ததில் அவனுக்கு என்று அவன் போட்டு வைத்திருந்த கட்டுப்பாடுகள் எல்லாம் தகர்ந்து போனது.

அவனது பேச்சு அவனது செயல் அவனது பார்வை அனைத்தும் அவளை பலவீனப்படுத்த இங்கிருந்து செல் உமா என மூளை எச்சரித்தது.

அவனிடம் இருந்து கையை உருவியெடுக்க பார்க்க கரத்தினை இழுத்தவன் அவளை அணைத்துக் கொண்டான்.

“என்னை விடுடா..” அவள் கத்த

“ஷ்ஷ் கத்தாதடி” என அடக்கிக் கொண்டு அவனது அணைப்பினை இறுக்கினான்.

அவளை முழுதாய் உணர வேண்டுமென அவனது ஆண்மை கேட்க அவளோ அவனது நெருக்கம் தந்த அவஸ்தையில் படாத பாடு பட்டுப் போய்விட்டாள்.

அவனோடு ஒன்றிவிட அவளுக்கு ஒரு நொடி ஆகாது. ஆனால் நடந்தது எல்லாம் இல்லை என்றாகிவிடும். அதன்பின் இதுவே தொடர்கதையாகி விடும். இது சாத்தியப்படாது என்பதால் அவள் முயன்று பழையதை நினைவுக்குக் கொண்டு வந்தாள்.

உடல் உடனே இறுக “தள்ளிப் போ ருத்ரா. என்னைத் தொட்டால் அவ்வளவுதான். இன்னொருத்தியைத் தொட்டவன் என்னைத் தொட வேண்டாம். அது எனக்கு அசிங்கம். இல்லை அசிங்கப்படுத்தியே ஆவேன்னு நீ நினைச்சால் தாராளமா தொடு..” அவளது குரலில் உள்ளே அலை அலையாய் கிளம்பியது எல்லாம் நொடியில் அடங்கிப் போனது.

கல்நெஞ்சக்காரி மனதுக்குள் திட்டிக் கொண்டவன் குளியலறைக்குள் நுழைந்தான்.

‘என்னடா ருத்ரா இது பிடி கொடுக்கவே மாட்டுறா..” என்ற போதே அவனுக்கு மொபைலில் மெசேஜ் வந்தது.

 

“ப்ச் இதுவேற” மொபைலில் டைப் பண்ண ஆரம்பித்தான்.

“ஏற்கனவே உமாவோட பிரச்சனைப் போய்ட்டு இருக்கு. இதுல நீ வேற ஏன் அர்த்த ராத்திரியில மெசேஜ் பண்ணி உசுரை வாங்குற. கொஞ்சம் கூட அறிவே இல்லையா?” காய்ந்தான் ருத்ரன்..

 

“உமா ஓகேவா” எதிர்புறம் மெசேஜ் செய்தது.

 

“அவளுக்கென்ன என்னை வச்சு செய்யுறா?”

 

“எல்லாம் சரியாகிடும்”

 

“அவ ஒவ்வொரு தடவையும் என்கிட்ட இருந்து விலகும் போது எதுவுமே சரியாகாதுன்னு தான் தோணுது” என சொல்லும் போதே அவனது போன் அதிர்ந்தது.

 

உடனே பைப்பை திருகிவிட்டவன் “அறிவில்லை போன் பண்ணுற?” கோபமாய் கத்தினான்.

 

“கத்தாதீங்க. எப்படித்தான் உமா இத்தனை வருஷமா தாக்குப் பிடிச்சாளோ..”

 

“ஏய் போனை வை மொதல்ல”

 

“நான் சொன்னது என்னாச்சு?”

 

“எல்லாம் நாளைக்கு பேசிக்கலாம்”

 

“அப்போ நாம வழக்கமா மீட் பண்ணுற இடத்துக்கு வரட்டுமா?”

 

“ம்ம் ஓகே” எனும் போதே செகண்ட் காலில் தங்கம் என்று வந்துவிழ அவ்வளவுதான் அரண்டே போய்விட்டான்.

 

“அய்யய்யோ அவ கூப்பிடுறா.. போனை வை. இன்னைக்கு செத்தேன். உன்னால என்ன பண்ண முடியுமோ அதை சிறப்பா பண்ணிட்ட” என்று வைத்தவன் முகத்தில் தண்ணீரை ஓங்கி ஓங்கி அடித்துவிட்டு மெல்ல தலை நீட்டி வெளியே எட்டிப் பார்த்தான்.

 

இப்படி மாட்டிக் கொள்ளுவோம் என்று அவனே எதிர்பார்க்கவே இல்லை.

 

“காளியாத்தா மாதிரி இருக்காளே.. டேய் ருத்ரா.. உன் மேல ஏறி இன்னைக்கு அவ ஆடுற தாண்டவத்துல அகில உலகமே அதிரப் போகுது” மனம் அவனை போட்டுப் பயமுறுத்தியது.

 

‘சமாளிக்கலாம் ருத்ரா’ என அவன் தன்னைத்தானே தேற்றி கதவைத் திறந்து வெளியே வந்தான்.

 

அதுவரை கோப முகத்தோடு இருந்தவள் சட்டென முகத்தினை மாற்றிக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

 

ருத்ரனுக்கு சப்பென்று ஆனது.

 

“உமா அது வந்து லோடு இறக்கிட்டு வந்தோம்ல” என்று சொல்ல காதின் மீது கரம் வைத்தவள் “உங்களோட விளக்கம் எதுவும் எனக்குத் தேவையே இல்லையே மிஸ்டர் ருத்ரன். நான் எதுவும் உங்ககிட்ட கேட்கவே இல்லை. கேட்டால் நீங்க பதில் சொல்லுங்க. இப்போ எனக்குத் தூக்கம் தான் வருது” என்றதும் இவனுக்கு இதயத்தில் அப்படியொரு வலி.

 

கண்டுக்காமல் அவள் விலகி செல்வது அவனால் ஏற்க முடியவில்லை. இதேது இந்நேரம் அவள் சட்டையை பிடித்து நாலு அறை விட்டிருந்தாள் கூட அவனுக்கு அவ்வளவு ஆனந்தம் இருந்திருக்கும். நீ என்ன வேணும்னாலும் செய். நான் எதுவும் கேட்டுக்க மாட்டேன் என்று அவள் விலகி இருக்க அது அவனின் நிம்மதியை அடியோடு பறித்தது.

 

“தங்கம்” குரல் கம்ம அழைத்தான்.

 

“பேசாமல் படு.. எனக்குத் தூக்கம் வருது. நான் நல்லாத் தூங்குனாத்தான் குட்டீஸ் நல்லா இருப்பாங்க”

 

“ஏன்டி இப்படி இருக்க. என்னை நாலு அடி கூட அடிடி”

 

“அதுக்கு எனக்கு ஏதாவது உரிமை வேணுமே ருத்ரன்”

“உனக்கில்லாத உரிமை என்னடி இருக்கு. நீ என்னோட பொண்டாட்டி..”

“தாலி கட்டுனதால அப்படிச் சொல்லுறயா ருத்ரன். அப்போ தாலி கட்டாமல் வாழ்ந்துட்டு இருக்குற அந்த பொண்ணுக்கு பேர் என்ன? அவளோட உரிமை என்ன ருத்ரன்? நீ தொட்டதே இல்லையான்னு கொஞ்சம் முன்னாடி கேட்டயே.. இப்போ நானும் கேட்குறேன். நான் மட்டும்தான் உன்னைத் தொட்டேனா..?” வார்த்தை ஒவ்வொன்றும் அவனை ஈட்டியாய் குத்த அவன் பட்டு லட்டு என்று சொல்லிச் சொல்லி தன்னை கட்டுப் படுத்தினான்.

“இப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு தான் நான் விலகிப் போய்ட்டேன். என்னை விடாமல் மறுபடியும் கூட்டிட்டு வந்தது நீ பண்ண தப்பு ருத்ரன். ஆமா நீ என்ன லேட் நைட் தான் வருவேன்னு சொல்லியிருந்த. இப்போ என்ன வேகமாவே வந்துட்ட”

“நான் இப்படிக்கா போனதும் நீ அப்படிக்கா போகலாம்னு தானே நினைச்ச தானே உமா அதான் வந்தேன்” குரல் இறுக்கமாக இருந்தது.

“நான் ஒன்னும் நினைக்கல”

“என்கிட்ட ஆதாரம் இருக்கே தங்கம்”

“இங்க பாரு நீ இல்லாத நேரம்தான் வீட்டை விட்டுப் போகணும்னு இல்லை. நான் நினைச்சா இப்பவே போக முடியும்”

“ஆஹ் அப்படியா.. அப்பறம் ஏன் இப்படியொரு மெசேஜ்” என்று அவன் தனது மொபைலை அவளிடம் காட்டினான்.

மயக்கக் கலக்கத்தில் ஆத்விக்கு அனுப்புவதாக எண்ணி இவனுக்கே அனுப்பி வைத்திருந்தாள் உமா.

“நானும் சரி நீ போயிருப்பயோன்னு நினைச்சு வந்து பார்த்தால் நல்லாத் தூங்கிட்டு இருக்கேயே டி.. ஏன் மாமனை விட்டுப் போக முடியலையோ?” சற்று முன் பேசிய கசப்பான பேச்சிலிருந்து வெளிவந்து அவன் இயல்பாக பேச

“மண்ணாங்கட்டி.. மயக்கமா வந்தது. அப்படியே தூங்கிட்டேன் போல” என்றாள் அவள்.

“உனக்கு காலையில இருந்து ஏன் இப்படி இருக்கு உமா.. நாளைக்கு நாம சரவணனைப் போய் பார்க்கலாமா?”

“ப்ளீஸ் நான் எங்க வீட்டுக்குப் போயிடுறேனே” அவள் பாவமாய் கேட்டாள். அப்படியொரு நிலையில் அவளை வைத்திருப்பதை நினைத்து அவனுக்கே அவன் மீது கோபம் வந்தது.

“இதுதானேடி உன் வீடு”

“குட் ஜோக்..” என்று சிரிக்க அவன் முறைத்தான்.

“இங்க இருக்க எனக்கு எந்த உரிமையும் இல்லை ருத்ரன். என்னை விட்டுடுங்களேன் ப்ளீஸ். நான் பாட்டுக்கு அங்க இருந்துக்கிறேன்”

“அது சரிவராது தங்கம். நான் என்னோட முடிவைத்தான் ஏற்கனவே சொல்லிட்டேன்ல சும்மா சும்மா சின்னப்பிள்ளை மாதிரி அதையே சொல்லாத”

“உனக்கு தேவையானது வெளியவே கிடைக்குதே. போதாதுக்கு இதோ இந்நேரத்தில் கூட கால் பண்ணி பேசுற. பின்ன ஏன் நான் தண்டமா? “

“ஏன்டி இப்படிப் பேசுற?” ஆயாசமாக வந்தது.

“வேறெப்படி பேசணும்.. நீங்க எத்தனை பேரை வேணும்னாலும் வச்சுக்கோங்க என்னை மட்டும் விட்டுடாதீங்கன்னு சொல்லணுமா?”

“என்ன நடந்ததுன்னு நீ என்கிட்ட கேட்க மாட்டயா?”

“ஏன் கேட்கணும்? “

“நீ என் பொண்டாட்டி உமா. நீதான் கேட்கணும்”

“அந்த உறவுக்கு அடித்தளமே நம்பிக்கைதான் ருத்ரன். அதுவே ஆட்டம் காணும் போது என்னென்னு கேக்குறது.‌ எனக்கு காரணம், உங்களோட சுயவிளக்கம் இது எதுவுமே தேவையில்லை. என்னை என் போக்குல விட்டாலே புண்ணியமா போகும். எனக்கு எதுவுமே பிடிக்கலை. இப்படியே இருந்தால் இன்னும் இன்னும் வெறுப்பு ஜாஸ்தி ஆகுமோன்னு பயமா இருக்கு. இந்த முகத்தை நான் எவ்வளவு ஆசையாய் காதலிச்சேன்னு என்னை விட உங்களுக்கே நல்லாத் தெரியும். இப்போ இதைப் பார்க்குறப்போ எனக்கு எனக்கு.. சொல்லத் தெரியலை.. என்னை விட்டுடுங்களேன்”

“ஏன்டி விடுறதுக்காகவா நாம காதலிச்சோம்”

“அதுதான் நான் பண்ண பெரிய தப்பு ருத்ரன். அதை நான் பண்ணியிருக்கவே கூடாது. இப்போ வலிக்குது ருத்ரன். இங்க வலிக்குது..” என அவள் நெஞ்சினைத் தொட்டுக் காட்ட அவனுக்கும் நெஞ்சம் வலித்தது.

“என் மேல நம்பிக்கையே இல்லையா உமா” ஆழ்ந்த அந்த குரலில் அவளுக்கு என்னவோ போல் இருந்தாலும் மௌனமாக இருந்தாள்.

“உன்கிட்ட தான் கேட்கிறேன் பதில் சொல்லு”

“பதில் சொல்லியே ஆகணுமா? நம்பிக்கை இல்லை. போதுமா?” அவள் கத்தினாள். அவளது குரல் மணியம்மாளை உறக்கத்தில் இருந்து எழ வைத்தது.

“என்னாச்சு மணி” அவருக்கு அருகே படுத்திருந்தவரும் எழ “பெரியவன் ரூம்ல இருந்துதான் சத்தம் கேட்டதுங்க. என்னென்னு பார்க்கணும்” என்றார் அவர்.

“அதெல்லாம் காலையில பேசிக்கலாம் நீ அமைதியாய் இரு” என்றுவிட்டு ருத்ரனின் அப்பா கண்ணாயிரம் உறங்கிவிட மணியம்மாள் மெல்ல எழுந்து மேலே வந்தார்..

அறையின் கதவின் மீது காதினை வைத்து அவர் என்ன பேசுகிறார்கள் என்பதை கவனிக்க ஆரம்பித்தார்.

வெகுநேரம் சத்தமே இல்லை.

என்ன இது உமாவோட சத்தம் கேட்டதே. அவ பேசுன பேச்சுக்கு இவனும் கோபப்பட்டு கத்தி இந்த ராத்திரியிலேயே அவ வீட்டை விட்டுப் போயிடுவான்னு எதிர்பார்த்து வந்தால் இங்க என்ன ஒன்னுமே நடக்கலை.. அதுக்குள்ளயா ஒன்னு சேர்ந்துடுச்சுங்க.. இருக்காதே. அவளுக்கு ரோஷம் எல்லாம் இருக்குமே..  சரி காலையில பார்க்கலாம் என்று நகரவும் கதவு பட்டென்று திறந்தது.

வெளியே வந்தது ருத்ரன். அவனிடம் மாட்டிக் கொண்ட மணியம்மாள் “அது உமா சத்தம் போட்டது கீழ வரைக்கும் கேட்டது ருத்ரா. அதான் வந்தேன்” என்றவர் நேராக உள்ளே போய்

“எதுக்கு உமா இப்படிச் சத்தமா பேசுற?” என்று அவளிடமே கேட்டுவிட்டார்.

எப்படியாவது இவளது பிரச்சனையை இன்றோடு முடிக்க வேண்டும் என்றதில் இந்த வாய்ப்பினை இறுகப் பிடித்துக் கொண்டார்.

புயல் தாக்கும்…

 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
16
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்