Loading

புயல் 4

புயல் அடித்து ஓய்ந்தது போல்தான் இருந்தது உமா மகேஷ்வரிக்கு. நீயும் வா என்று கிளம்பாமல் இருந்த ஆத்விக்கை இவள்தான் வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தாள்.

“மறுபடியும் என் பேச்சைக் கேட்க மாட்டுற இல்ல” என்று கோபமாய் போன ஆத்வியைக் கூட சமாளித்துவிடலாம்தான்.. ஆனால் அம்புட்டு விஷத்தையும் உள்ளே அடக்கிக் கொண்டு சாவகாசமாய் உட்கார்ந்திருக்கும் இவனை சமாளிப்பதுதான் அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவனது அடாவடியைக் கூட ஒருவாறு ஏற்றுக் கொள்ளலாம்.  இந்த தெனாவெட்டோடு கூடிய அமைதியைப் பற்றி அறிந்தவளால் ஆத்வியை அனுப்பி வைக்கத்தான் முடிந்தது.

கடைசியில் நினைத்ததை சாதித்துவிட்டானே என கடுப்பாக அவனையும் பார்க்க பிடிக்காமல் அறைக்குள் சென்றுவிட்டாள் உமா. ஒருகாலத்தில் இதே வார்த்தைகளை பெருமிதத்துடன் தான் அவள் சொன்னாள். கால சுழற்சியில் அந்த பெருமிதம் எல்லாம் காணாமல் போய்விட்டது.

இரு மழலைகளை சுமக்கும் வயிறு இன்னமும் எங்களுக்கு உணவு வரவில்லை என்று சத்தமிட கதவைத் திறந்து உள்ளே வந்தார் மணியம்மாள்.

“எனக்கு ஒன்னும் வேண்டாம். என்னை தனியா விடுங்க” என்றபடி அவள் முகம் திருப்ப பின்னாலேயே வந்தவன் தட்டை வாங்கிக் கொண்டு “இனிமேல் நான் பார்த்துக்கிறேன். நீங்க போங்க” என்றான்.

அவர் சென்றதும்,

“பட்டு லட்டு பசிக்குதாடா. அப்பா சாப்பாடு கொண்டு வந்துருக்கேன் சாப்பிடுங்க” என அவள் வாய் முன்னே கவளம் பிடித்து கை நீட்டினான் அவள் கணவன்.

கையை தட்டிவிட்டு அவள் ஜன்னலோரம் சென்று நின்று விட்டாள்.

“அங்க என்னடி தெரியுது” என அவனும் அவள் பின்னால் நின்றபடி ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான்.

“ஒன்னும் தெரியல.. தள்ளிப் போங்க” என அவள் விலகி நிற்க, “சாப்பிட்டு அப்பறம் வந்து இப்படி வெறிச்சுப் பார்த்துட்டே இரு..” அவள் கையைப் பிடித்து இழுத்து கட்டிலில் அமர வைத்தான்.

“வாயைத் திற” அழுத்தக்காரனின் குரலில் வாயைத் திறந்தாள்.

அவன் பொறுமையாய் இது பட்டுக்கு இது லட்டுக்குன்னு சொல்லி சொல்லி ஊட்ட அவளும் வாங்கிக் கொண்டாள்.

“இதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு. பட்டு லட்டுவை சுமக்க ஆரம்பிச்ச உடனே அவங்க அம்மாவும் நல்ல பொண்ணா மாறிட்டாங்களே.. இப்படியே இருந்தால் எல்லாருக்குமே நல்லது இல்லையா பட்டு லட்டு..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மொபைலில் செய்தி வந்ததற்கான டோன் கேட்டது.

அவன் ஊட்டிவிடுவதால் அதில் கவனம் செலுத்தாமல் இருக்க “மெசேஜ் வந்த சத்தம் கேட்டதே. அதைப் பார்க்காமல் எனக்கு ஊட்டிவிட்டுட்டு இருக்கீங்க. முக்கியமான நபர் முக்கியமான விஷயம் சொல்லியிருக்க போறாங்க” என ஒரு மாதிரியாக அவள் பேசவும் ருத்ர தாண்டவன் இவகிட்ட ஒரு தாண்டவம் போட்டால்தான் சரிப்பட்டு வரும் போலயே.. படுத்துறாளே என நினைத்துக் கொண்டே

“எல்லா முக்கியமான விஷயமும் உங்களுக்கு அடுத்துதான் உமா. இது நீ நம்பலைன்னாலும் எனக்கு அதைப் பத்தின கவலை இல்லை. ஒழுங்கா சாப்பிடு. உனக்கு நிறைய பசிக்குமாம். சரவணன் சொன்னான். அப்பறம் நீ மாடியை விட்டு கீழ இறங்கக் கூடாது. அப்படியும் வெளிய போகணும்னு சொன்னால் நான் வந்து கூட்டிட்டுப் போவேன். என்ன ஆசை இருந்தாலும் என்கிட்ட சொல்லு என்னை விட்டுட்டு போறதைத் தவிர” என முன்னெச்சரிக்கையாய் அவன் சொல்ல அவளோ முறைத்தபடி “அது மட்டும்தான் இப்போதைக்கு எனக்கு இருக்குற ஒரே ஆசை” என்றாள்.

“அந்த ஆசை நிறைவேற வாய்ப்பே இல்லை”

“மாசமா இருக்கும் போது அவங்களோட ஆசையை நிறைவேத்தி வைக்கணும். இல்லைன்னா பசங்களுக்கு காதுல சீழ் வடியும்”

“அப்படியே வடிஞ்சாலும் பரவாயில்லை உமா.. அதுவும் இல்லாமல் என் பசங்க இந்த ஆசைக்கு எதிராத்தான் நினைப்பாங்க. அதனால எந்த பிரச்சனையும் வராது” ஊட்டி முடித்தவன் வாயைத் துடைக்கவர “நானே போய்க்குவேன்” என்று குளியலைறைக்குள் நுழைந்தாள்.

இத்தனை நாளும் சாப்பிட்ட உடனே வாந்தி வரும் இன்றென்னவோ அப்படியான உணர்வே வரவில்லை. அந்த கேணக் கிறுக்கன் சொன்னது மாதிரி இந்த இரண்டும் அப்பா புள்ளைங்களாவே இருக்குதே.. வாந்தி வரலை.. என பொறுமியவள் கையை வாய்க்குள் விடப் போக கைவிரலை பிடித்து இழுத்தான்.

அவன் வேகத்தில் நெஞ்சின் மீது மோதி நின்றாள் உமா.

“இப்படி வலுக்கட்டாயமாவாடி வாந்தி எடுக்க முயற்சி பண்ணுவ. இதெல்லாம் தப்புடி” என்றவன் நெற்றி முட்டி அவளிடம் கிசுகிசுப்பாய் “ரொம்ப சந்தோஷமா இருக்குத் தெரியுமா?” என்றான்.

அந்த குரல் நிஜமான மகிழ்ச்சியினைத் தாங்கியிருந்தது. அவளுக்கும் அது தெரியுமே.. சில மாதங்களாகவே இருவரது ஆசையும் அதுதானே.. இருந்தும் தற்போதைய சூழ்நிலை அவளை அனைத்திலும் இருந்து விலகி ஓடத்தானே வைக்கிறது.

அவளது முகம் தாங்கியவன் “அவ்வளவு அழகா இருக்க தெரியுமா? பசங்க வயித்துக்குள்ள இருந்தால் இவ்வளவு பளபளப்பா ஆகிடுவாங்களா?” என்று கேட்டான்.

அவனது குரல் சில சங்கடங்களைக் குடுத்தாலும் அவள் அசையாமல் நின்றாள்.

அவளது ஆழ்மனம் இந்த ஒரு தருணத்தினை எதிர்பார்த்திருந்ததோ என்னவோ? அவனை விலக்கித் தள்ள அவள் நினைக்கவில்லை.

அவனுக்கும் இதுவே போதும் என்று தோன்றியது.

“தங்கம்!” மதுரமாய் அவன் அழைக்க அவளையும் அறியாமல் “ம்ம்” என முணங்கினாள்.

“பட்டு லட்டு வந்ததுல உனக்கும் சந்தோஷம்தானே..”

“ஆமா மாமா” என்றவள் அவன் மீது சாய்ந்துவிட்டாள். மாமா.. சொல்லிவிட்டாளே.. குதிக்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு. அவசரப்பட்டு இருக்கும் நிலையைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதால் அமைதியாய் அதை உள்ளுக்குள் அனுபவித்தான்.

அவள் உடல் தளர்வது அவனுக்குப் புரிந்தது. காலையில் இருந்து அவளது அலைச்சல் அவன் அறிந்தது தானே.

படுக்கையில் அவளை படுக்க வைத்துவிட்டு.. “தூங்கு தங்கம்” என்றான்.

விழி மூடி அவள் விரைவிலேயே உறங்கிப் போய்விட அவனோ இப்போது போனை எடுத்து அந்த செய்தியை ஆராய்ந்தான். அவனது இதழ்களில் புன்னகை வந்து ஓட்டிக் கொண்டது.

பட்டென்று அவளையும் பார்த்தான். அவள் உறக்கத்தில் இருக்க மொபைலை எடுத்துக் குளியலறை சென்றான்.

உள்ளே அவன் நுழைந்த உடனே போன் போட்டிருந்தான்.

“இல்லை.. இன்னைக்கு எல்லாம் என்னால மீட் பண்ண வர முடியாது. தங்கம் மாசமா இருக்கு.. அவளை இந்த நிலையில விட்டுட்டு வர்றது சரியில்லை. எனக்கு குழந்தைங்க முக்கியம். அது உனக்கே நல்லாத் தெரியும். அய்யோ..படுத்தாத.. நான் நாளைக்கு வர்றேன். சரி சரி வந்துடுவேன்.. என்ன அமவுண்ட்டா.. சரி உன் அக்கவுண்ட்க்கு போட்டுவிடுறேன். எடுத்துக்கோ. ஆனால் ஒன்னு என்னை நல்லா வச்சு செய்யுற. ஏன்தான் உன்கிட்ட மாட்டுனேனோன்னு இருக்கு.. சரி போனை வை. இனி நீயா கூப்பிட்டு வைக்காத. மெசேஜ்ஜும் பண்ணாத. நானே கூப்பிடுவேன். வச்சுடுறேன்” என்று சொன்னவன் ஊ..ப்ப் என பெருமூச்சு விட்டபடி கண்ணாடியில் பார்த்தான் தன் முகத்தினை.

பின் மொபைலில் அழைப்பின் தடத்தினை அழித்துவிட்டு வெளியே வந்தான்.

இதுவரை இருந்த ஒருவித அழுத்தம் உமாவின் முகத்தினைப் பார்த்ததும் இன்னும் அதிகமானது.

அவன் மெல்ல அவளருகே அமர, “என்கிட்ட இருந்து மறைக்க இது என்ன புது விஷயமா.. இனிமேல் எதுவா இருந்தாலும் இங்கேயே பேசுங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை. அதையும் ஏத்துக்கிற அளவுக்கு மனசு மரத்துப் போச்சு..” கண்ணீர் தடத்தோடு அவள் பேச அவனோ இடுங்கிய விழிகளோடு அவளைப் பார்த்தான்.

“தூங்கலையா நீ..”

“தூங்கிட்டே இருந்தால்தான் உங்களுக்கு வசதியோ..?”

“பேசாமல் தூங்கு தங்கம். இதைப் பத்தின யோசனையை நீ விட்டுரு”

நான் அப்போ இந்த வீட்டுல யாரு? எனக் கேட்க வந்தவள் என்ன நினைத்தாலோ கண்களை இறுக மூடிக் கொண்டு திரும்பிப் படுத்துவிட்டாள்.

அவளையேப் பார்த்தவன் இறங்கி கீழே வந்தான். அவன் வரும் சத்தம் கேட்டதும் காதில் வைத்திருந்த மொபைலை வைத்துவிட்டு ஒன்னும் தெரியாதவராய் இருந்தார்.

இவன் வாசல் பக்கம் செல்லும் போது “ருத்ரா” என்றார்.

“என்னம்மா?”

‘என்னப்பா இது இப்படி ஒரு நிலைமையில் உமாவை நீ இங்க இருக்க வைக்கணுமா என்ன? அவ அவங்க வீட்டுலயே இருக்கட்டுமே”

“அது அவங்க வீடா.. அப்போ இது யார் வீடும்மா?” என்றான்.

“ருத்ரா.. அதாவது அவங்க அம்மா வீட்டுல இருக்கட்டும்னு சொல்ல வந்தேன்ப்பா. இந்த நேரத்துல அங்க இருந்தால் கொஞ்சம் உடம்புக்கு தெம்பா இருக்கும்ல..”

“ஏன்ம்மா என் பொண்டாட்டியை நீங்க பார்த்துங்க மாட்டீங்களா. என் பசங்களும் இந்த வீட்டோட வாரிசுங்க தானே. அதை நீங்க பார்த்துக்க மாட்டீங்களா என்ன? எங்களை விட எவ்வளவு ஆசையாய் நீங்கதானே இருந்தீங்க. இப்போ என்ன அவங்க அம்மாகிட்ட விடலாம்னு சொல்லுறீங்க”

“இல்லைப்பா நடந்த பிரச்சனையில..” என இழுக்க..

“அந்த பிரச்சனையை எப்படிச் சமாளிக்குறதுன்னு எனக்குத் தெரியும். நீங்க அப்போ அப்போ அவளுக்குத் தேவையானதை செஞ்சு கொடுங்க. அது போதும். அவ ஒரு வேலையும் செய்யக் கூடாதும்மா.. என்னம்மா பார்த்துக்குவீங்கதானே.. அதெல்லாம் பார்த்துக்குவீங்க. உங்க சின்ன மகன் பொண்டாட்டி மாசமா இருந்தப்ப என்னென்ன செஞ்சீங்கன்னு நான் லிஸ்ட் போட்டு வச்சுருக்கேன். அதுல ஒன்னு குறைஞ்சது அப்பறம் அவ்வளவுதான்” மிரட்டும் தொனியில் பேச “என்னடா இப்படிப் பேசுற” கண்கள் கலங்கிட முந்தானை எடுத்து துடைத்துக் கொண்டார் அவர்.

“ஞாபகப்படுத்துறேன்ம்மா.. செஞ்சுடுவீங்கதானே..” என்று சொல்ல தலை மட்டும் ஆடியது வேகமாய்.

“நல்ல அம்மா. அப்பறம் அவ தூங்குறா. அவகிட்ட போய் எதுவும் பேச வேண்டாம். அவளுக்குத் தேவையானதை மட்டும் செஞ்சு வச்சுட்டு எனக்குப் போன் பண்ணுங்க நான் உடனே வந்துடுறேன்” என்று சொன்னவன் வெளியேறிவிட மேலே வன்மத்துடன் பார்த்துக் கொண்டவரின் கண்கள் மீண்டும் அந்த மொபைலை எடுத்துக் காதுக்குக் கொண்டுப் போனது.

மீண்டும் குசுகுசுவென்று அவரது பேச்சு வார்த்தை ஆரம்பம் ஆனது.

கிளம்பிச் சென்ற ருத்ரன் வண்டி ஒரு இனிப்பகத்தின் முன் நின்றது.

அவனது கடையில் வேலைப் பார்ப்பவர்களுக்கு எல்லாம் இனிப்பை வாங்கிக் கொண்டு வெகு சந்தோஷமாக அவன் உள்ளே நுழைந்தான்.

கடையில் இருந்தவர்கள் கிசுகிசுப்புடன் அதையேப் பார்த்திருக்க அவர்களை அழைத்தவன் ஸ்வீட் பாக்ஸை அவர்களுக்கு கொடுத்துவிட்டு “நான் அப்பா ஆகப் போறேன்” என்றான். சிலர் அவனது மகிழ்ச்சியில் தங்களும் மகிழ்ச்சியாக அவனை வாழ்த்தினார்கள்.

வாங்கிக் கொண்டு வந்ததில் இருவர் மட்டும் தங்களுக்குள் “பொண்டாட்டி மாசமா இருக்குமா இல்லை இப்போ கூத்தடிச்சுட்டு இருக்குற அந்த பொண்ணா..?” எனச் சொல்ல “பொண்டாட்டிதான் இப்போ இவரோட வண்டவாளம் தெரிஞ்சு வீட்டை விட்டே போயிடுச்சே.. அதனால இரண்டாவதா சொன்னயே அவளாத்தான் இருக்கும்” நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.

அந்த சிரிப்போடு வாயில் இனிப்பை வைக்க அவன் கை போகும் போதே கையில் கனமான ஒன்று வந்து மோதி அதோடு உதட்டினையும் கிழித்துவிட்டு தரையில் சென்று விழுந்தது.

“அம்மா” என்ற அலறலில் கடையில் இருந்தோர்கள் எல்லாம் பதறிப் பார்க்க ருத்ரன் அவனது தாண்டவத்தினை ஆரம்பித்திருந்தான்.

இரத்தம் தோய்ந்து தரையில் கிடந்த அந்த படிக்கல்லை எடுத்தவன் மீண்டும் அவனை பிடித்தபடி கோபத்துடன் பார்த்தான்.

பேசியவனுக்கு வலியோடு சேர்ந்து உடலெல்லாம் நடுங்கியது.

“என்னைப் பத்தி பேசுற அளவுக்கு வந்தாச்சா.. வாயை உடைச்சுடுவேன்”

“இல்லை சார் தெரியாமல்” இரத்தம் வழிந்த வாயோடு அவன் பேச “இன்னொரு தடவை என்னைப் பத்தி எவனாவது வாயைத் தொறங்க திங்குறதுக்கு கூட அடுத்து வாயைத் தொறக்க விடாமல் பண்ணிடுவேன். உங்களுக்கு எல்லாம் ஸ்வீட் கொடுக்க வந்த என்னைச் சொல்லணும்” மற்றதை எல்லாம் விட்டெறிந்துவிட்டு அந்த இருவரையும் அடி பிழிந்தெடுத்துவிட்டான்.

காலையில் இருந்து உமா சொல்லிச் சொல்லி அவள் மீது காட்ட கூடாதென்று அடக்கியிருந்த கோபம் இப்போது இவர்களும் அதையே பேசியிருக்க அவன் அடக்க மாட்டாமல் கொட்டிவிட்டான்.

நல்லவேளை பாக்கெட்டில் இருந்த போன் அதிரவும் அவர்களை விட்டவன் “இரண்டு பேரும் இனி கண்ணு முன்னாடியே இருக்கக் கூடாது” என்றெச்சரித்துவிட்டு உள்ளே வந்தமர்ந்தான்.

அந்த கோபம் எதிரே பேசிய நபரையும் விடவில்லை..

புயல் தாக்கும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
21
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment