Loading

புயல் 16

விஷயம் இதுதான். உமாவுக்காக பார்த்துப் பார்த்து வாங்கியதை எல்லாம் மணியம்மாள் நக்கலாகப் பார்த்துவிட்டு இது எல்லாம் நீங்க வாங்கித் தரலைன்னு இங்க யார் அழுதது? வாங்கிக் குடுத்து அசிங்கப்படுத்துறீங்க. என் பையன் மட்டும் நான் பார்த்த பொண்ணைக் கல்யாணம் பண்ணியிருந்தால் இந்நேரம் அவன் வாழ்க்கையே மாறியிருக்கும் என்று நொடித்துக் கொண்டு செல்ல பதிலுக்குப் பதில் கொடுத்துவிடும் வேகம் பிறந்தாலும் ஆத்விக் எதுவும் பேசாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்றிருக்க உடன் ஆத்விக் சென்றிருந்தான்.

பால் பழம் சாப்பிடும் சடங்கு நடக்க இருவரும் தங்களை அதில் மொத்தமாக ஈடுபடுத்தியிருந்தார்கள்.

ஆத்விக் காதில் படுமாறு மணியம்மாள் மட்டும் அடிக்கடி பையன் கேட்டு வந்த அந்த சம்பந்தத்தின் பெருமையை யாரிடமாவது உரைத்துக் கொண்டே ஆத்வியை நக்கல் பார்வைப் பார்க்க ஒரு கட்டத்தில் அது உமாவிற்கும் தெரிய வந்துவிட்டது.

சுள்ளென்று ஏறியது. அருகே ருத்ரன். அவனோ எதுவும் அறியாதவனாய் கல்யாணம் முடித்த களையோடுதான் இருந்தானே தவிர அவளுக்கு சாதகமாக எதுவும் பேசினான் இல்லை.

“நீங்க அந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணியிருக்க வேண்டியதுதானே.. நிறைய அள்ளிக் கொடுத்துருப்பாங்களே”

உண்மையிலேயே அவனுக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது புரியவில்லை. அவன் தான் அவளது அருகாமையில் தன்னையே இழந்துக் கொண்டிருக்கிறானே.

“தங்கம்” பாவமாய் மொழிந்தான்.

“தங்கம்னு சொன்ன வாயை உடைச்சுடுவேன்”

“இப்போ என்னாச்சுன்னு இவ்வளவு கோபப்படுற தங்கம். நானே நீ நம்ம வீட்டுல இருக்குறதுல எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? ஏய் உம்மா.. என்னைக் கொஞ்சம் பாரு உம்மா..” எதற்காக கோபப்பட்டோம் என்பதைக் கூட மறக்க வைத்த பெருமை ருத்ர தாண்டவனையே சாரும்.

அவளது முகத்தில் இருந்த அந்த வெட்கச் சிவப்பினைப் பார்த்தவன் அவளது கோபத்தின் காரணம் பற்றி ஆராயாமல் அவளைக் கொஞ்சுவது குறித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கிவிட்டான்.

அவன் உமாவினை வெகு எளிதாக மயக்கிவிட அதன்பின்னும் கூட அவள் ஏன் கோபப்பட்டாள் என்பதைப் பற்றி யோசிக்கவே இல்லை. யோசித்திருக்க வேண்டுமோ?

“மணி! நாங்க எல்லாருமே அந்த சம்பந்தத்தை தான் முடிப்பேன்னு நினைச்சுட்டு இருந்தோம். நீ என்னடான்னா கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் இப்படி முடிச்சுருக்க. சரி இப்போ என்ன சின்ன பையனுக்காகவது அந்த வீட்டுல சம்பந்தம் பேசு. அதுதான் சரியா இருக்கும்” வந்திருந்த உறவினர் ஒருவர் சொல்ல,

“நீ வேறக்கா நானும் யோசிச்சு சொல்லுவோம்னு சொல்லி இதை நிறுத்திடுவோம்னு நான் நினைச்சேன். எங்க நான் பெத்த மூத்தது இருக்கே என்னமோ இவதான் உலகத்துலயே அதிசயமான பொண்ணு மாதிரி இவளைத்தான் கட்டுவேன்னு சலங்கை இல்லாமல் ஆடுறான். அவன் அம்மா புள்ளைதான். இருந்தாலும் இந்த நேரத்துல அவனை என் பேச்சைக் கேட்க வைக்க முடியல. சரி சாதகத்தையாவது சாக்கு வச்சு ஒத்து வராதுன்னு பிரிச்சு விடலாம்னு பார்த்தால் அதுக்குள்ள சாதகம் எல்லாம் பார்க்காதம்மான்னு வர்றான். அவனை மீறி எதுவும் பண்ண முடியலைன்னு நானே வயித்தெரிச்சல்ல இருக்கேன்” மணியம்மாள் கொட்டிக் கொண்டிருக்க ருத்ரன் தண்ணீர் கேட்டான் என்று எடுக்க வந்தவள் காதில் இது மொத்தமும் விழுந்தது.

எதுவும் பேசவில்லை. அப்படியே திரும்பி வந்துவிட்டாள். அதன்பின்
தங்களது வீட்டிற்கு அழைத்து வருவதற்குள் ஆத்விற்குத் தான் போதும் போதுமென்றாகிவிட்டது.

எதை நினைத்து அவன் யோசித்தானோ அதைத் திவ்யமாக மணியம்மாள் செயலாற்றிக் கொண்டிருக்க அந்த பொம்பளையோட இவ எப்படித்தான் குப்பைக் கொட்டப் போறாளோ பார்க்கலாம் என்பதே ஆத்விக் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

“ஆத்விக் உன்னை யாராவது ஏதாவது சொன்னாங்களா என்ன? ஏன் இப்படியே மூஞ்சை வச்சுட்டு இருக்க?” அவனை தனியே இழுத்துப் போய் ருத்ரன் கேட்டான்.

“சொன்னாலும் உங்களால எதுவும் செய்ய முடியாது மாமா.. நீங்க போய் அக்கா கூட இருங்க. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” அவன் நழுவப் பார்க்க அவனை இழுத்துப் பிடித்தவன் “சொல்லியே ஆகணும்” என்று நின்றான்.

“உங்களவுக்கு எங்களுக்கு வசதி இல்லைதானே. அதுல சின்ன பிரச்சனை. இதெல்லாம் வரும்னு எங்களுக்குத் தெரியும்தானே மாமா. நாங்க மேனேஜ் பண்ணிப்போம். நீங்க இதைப் பத்தி நினைச்சு இந்த நாளுக்கான சந்தோஷத்தைக் கெடுத்துக்காதீங்க” பெரிய மனித தோரணையுடன் அவன் பேசவும் ருத்ரனுக்குள் எரிச்சல் வந்துவிட்டது.

அம்மா இதை விடவே மாட்டாங்களா.. கோபம் வந்துவிட அந்த கோபம் குறைவதற்குள் மணியம்மாளை அழைத்துத் திட்டியும் விட்டான்.  அது மணியம்மாளின் எரிச்சலை இன்னும் அதிகப்படுத்தியது.

அன்றைய நாளுக்கான அலங்காரத்துடன் உள்ளே வந்தவளைப் பார்க்கையில் நியாயமாக ஆசைதான் அவனுக்கு வர வேண்டும்.‌ வரவில்லை. காரணம் அவளது உணர்வுகளைத் தொலைத்திருந்த முகம்.

‘ஏதோ இழவு வீட்டுக்கு வர்றதை போல வர்றா பாரு பையித்தியம்’ அவளை மனதுக்குள்ளயே வறுத்தெடுத்தவன் அவளையே முறைத்துப் பார்த்தான். அவள் நிமிர்ந்துக் கூட பார்க்கவில்லை. பால் டம்ப்ளரை டொக்கென்று வைத்தவள் மூலையில் இருந்த சோபாவில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.

“ரொம்ப பண்ணுறடி?” ருத்ரனிடம் இருந்து வந்தது வார்த்தைகள்.

பதில் இல்லை.

“திரும்பி பாரு உமா”

அவள் திரும்பவும் இல்லை.

இதற்கு மேல் பொறுமை இல்லாதவன் அவள் முன் சென்று நின்றான்.

“இப்போ என்ன உனக்கு? ஏதோ உன்னை வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ண மாதிரி முகத்தை வச்சுருக்க”

“ருத்ரன் போய் தூங்குங்க. நான் பேசுற நிலையில இல்லை”

“நானும் தான் பேசுற நிலையில இல்லை” இடுப்பினையே வித்தியாசமாக அசைத்து பேசியவனை கொலை வெறியில் முறைத்து வைத்தாள்.

‘ஆத்தாடி இதென்ன இவ பிள்ளையே பொறக்க விடாமல் குடும்பக் கட்டுப்பாடு பண்ணுறவ மாதிரியே பார்க்குறா.. ருத்ரா சூதானமா உயிரைக் காப்பாத்திக்கோ’ நினைத்தவன் அவளிடம் சமாதானம் பேச எண்ணி குரலில் குழைவைக் கொண்டு வந்தான்.

“அடியே தங்கம்”

“தூங்க சொன்னேன் ருத்ரன்”

“மனசாட்சி இல்லாதவளே”

“எனக்கு இல்லைதான். உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் தான் நிறைய இருக்கும் போலயே”

“அதையெல்லாம் பேசுற நேரமாடி இது. நாம இந்நேரம் பல தடைகளைக் கடந்து வாழ்வோட லட்சியத்தை எட்டிப் பிடிச்சுருக்க வேண்டாமா?”

“வேண்டாம்”

“என்னடி இப்படிப் பொசுக்குன்னு சொல்லிட்ட”

“வேறெப்படி சொல்லணும் போங்க”

“காதலிக்குறப்போத்தான் கெஞ்சிக் கெஞ்சி முத்தம் வாங்கிட்டு இருந்தேன். இப்பவும் கெஞ்ச விடாதடி பாவி. நாம வீணாக்குற நேரம் எல்லாம் நம்மளை சபிச்சுட்டு போகும்டி.. “

“எனக்கு அதைப் பத்தி எல்லாம் கவலை இல்லை. உன்னை யாரு என்னைக் கல்யாணம் பண்ணச் சொன்னது. அந்த பணக்கார வீட்டுப் பொண்ணைக் கல்யாணம் பண்ண வேண்டியது”

“நீ மஞ்சள் தடவலைன்னா அது தான் நடந்துருக்கும்”

“அப்போ உன் வாழ்க்கை வீணாப் போனதுக்கு நான்தான் காரணம் இல்லையா ருத்ரன்”

“வாயைக் குறைடி.. இப்போதைக்கு பேசாத” அவளை நெருங்கி அமர அவனை உதறிவிட்டு “தள்ளிப் போடா..” என்றாள்.

“தள்ளிப் போனா நம்ம சந்ததியை எப்படி பார்க்குறது.. சீக்கிரமா நாம சந்தோஷமா இருந்தால்தானே‌. நம்ம பசங்களும் சீக்கரம் பொறப்பாங்க”

“லேட்டாவே பொறக்கட்டும்.. நீ மொத தள்ளி உக்காரு.. “

“அப்படியெல்லாம் பேசாத வாயிலயே அடி” என அவளது இதழ்களைப் பிடித்துக் கொண்டவன் “ரொம்ப பேசுற நீ.. இனி பேசவே கூடாது..” என்று அவள் உதட்டினையே நெருங்கி வந்தவனைக் கண்டு அவளது விழிகள் பிதுங்கியது.

இரவு நேரத்தில் ருத்ரனின் கரங்களுக்குள் அடங்கி விடியலில் கண்விழித்த உமாவிற்கு காதலின் அடுத்த கட்டம் கண்டு வெட்கம்தான் வந்தது.

அவள் எழப் பார்க்க “தங்கம்” என மீண்டும் இழுத்துப் போட்டவனின் கரங்கள் அவளது தேகத்தில் தங்களது தேடலைத் தொடங்கியது.

“ருத்ரன் போதும்..”

“மாமான்னு கூப்பிடு விடுறேன்”

“ம்ம் என் தம்பி வருவான் மாமான்னு கூப்பிட.. என்னை விடு ருத்ரா” அவள் எழுந்தோடிட இருவரும் குளித்து கீழிறங்கி வந்த போது ஆத்விக் கண்ணிலேயே படவில்லை.

வீட்டில் விருந்து முடித்துக் கொண்டு அவன் அன்றைய தினமே அவளோடு தன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டான்.

அன்றைய தினத்தில் இருந்து ஆரம்பித்தது உமாவிற்கான சோதனைக் காலம்.. மணியம்மாளின் அவதாரத்தினைப் பார்த்து அவளே மிரண்டு போய்விட்டாள்.

வேர்க்க விறுவிறுக்க வேலை செய்வதெல்லாம் உமாவின் வேலை. ஆனால் இவள் அசந்த நேரம் உள்ளே நுழைந்து பரபரவென வேலை செய்வது போல் காண்பித்துக் கொள்ளும் மணியம்மாளின் திட்டம் முழுதாய் விளங்க அவளுக்கு  சில மாதங்கள் பிடித்தது.

எப்போதும் தங்கம் தங்கம் என்று சுற்றி வரும் ருத்ரனின் அன்பில் அவள் திகட்ட திகட்ட நனைந்ததாலோ என்னவோ இந்த விஷயங்கள் எல்லாம் பெரியதாக தெரியவே இல்லை. அதோடு ஆத்விக் உடனான ருத்ரனின் உறவும் அவளுக்கு மனமகிழ்வை அளித்திருக்க திருமணத்தின் உண்மையான சந்தோஷம் அவள் முகத்தில் நிலைத்திருந்தது.

அவ்வப்போது மணியம்மாள் ஏதாவது செய்தாலும் அதை ருத்ரன் பெரியதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதிலேயே தெரிந்துப் போனது முக்கிய வரிசையில் முதலிடம் வகிப்பது அவர் என்று.. அம்மா பிள்ளையான அவனிடம் அதைத்தவிர வேறன்ன எதிர்பார்க்க முடியும்.

அப்படித்தான் ஒரு நாள்.. மணியம்மாள் கணவனுடன் வண்டியில் சென்ற போது கீழே விழுந்துவிட வலது கையில் எலும்பு விலகி பெரியதாக மாவுக் கட்டுப் போட்டு வந்துவிட்டார்.

அதன்பின் ஒட்டுமொத்த வேலையும் அவளே பார்க்கும் படி ஆகிவிட்டது

அத்தனை வேலையையும் முடித்துவிட்டு இனி இரவு உணவு மட்டும்தானே ஏழு மணிக்குச் செய்து கொள்ளலாம் என்று நினைத்தவள் கொஞ்ச நேரம் படுத்துவிட்டாள்.

அசந்து உறங்கியவள் விழிப்புத் தட்டி எழுந்த போது ஏழு மணி பத்து நிமிடம் ஆகியிருந்தது.

முகத்தைக் கழுவியவள் சமையல் அறைக்குள் நுழைந்த போது அங்கே ருத்ரன் இருந்தான். அவன் சமையல் செய்துக் கொண்டிருப்பதை அறிந்தவள் ஆச்சர்யமாக “நீங்க எப்ப வந்தீங்க?” என்று கிட்டே வந்தாள்.

அவளைக் கை நீட்டி தடுத்தவன் “நானே பார்த்துக்கிறேன்.. கிளம்பு” என்றான். அவன் முகத்தில் அளவிட முடியாத அளவுக்கு கோபம்.

“எதுக்கு இவ்வளவு கோபம்?”

ருத்ரன் சமையில் மட்டுமே கவனமாக இருந்தான்.

அவள் எண்ணற்ற கேள்விகள் கேட்டபோதும் அவன் அதே நிலையில் இருக்க அவளுக்கே அவனது செயலில் எதோ புரியவதைப் போலிருந்தது. இதற்கு மேல் இங்கிருந்து செய்ய ஒன்றுமில்லை என்பதை அறிந்த பெண்ணவளும் கிளம்பிவிட்டாள்.

அவள் கிளம்பியது, ‘அடப் போடா நீயே சமைச்சுக்கோ’ எனச் சொல்லாமல் சொல்லுவதைப் போலிருக்க அதுவேறு அவனுக்கு இன்னும் வெறியேற்றியது.

அவள் வெளியேறிய சமயம் ஹாலில் அம்மா என முணங்கியபடி இருந்த மணியம்மாள் மெல்ல சிரிப்பது உமாவினை எரிச்சலுக்கு உள்ளாக்கியது.

அவன் சமைத்து அன்னையை சாப்பிட வைத்து மாத்திரையும் எடுத்துக் கொடுத்த பின்னர் தான் உமாவிடம் சிடுசிடுப்புடன் பேசியது நினைப்பு வந்தது.

தற்போது வரைக்குமே அவள் கீழிறங்கி வரவில்லை. மேலே சென்றான் கோபத்துடனே.

அவள் பாட்டுக்கு படுத்திருந்தாள்.

“ஏய் உமா எழுந்திருடி” அவன் போட்டு உலுக்க எழுந்தாள்.

“என்ன?” பார்வையே கேள்வி எழுப்பியது.

“நீ பண்ணுறது சரியே இல்லை. என்னடி நினைச்சுட்டு இருக்க”

பதில் சொல்லவில்லை.

“உன்கிட்டதான் கேட்குறேன் உமா”

“சாப்பிட்டாங்களா உங்க அம்மா”

“ம்ம்.. நீ சாப்பிட வா”

“எனக்கு வேண்டாம். நீங்க சாப்பிட்டீங்களா. சாப்பிட்டால் படுத்துத் தூங்குங்க” அவள் படுத்துக் கொண்டாள்.

“நான்தான்டி கோபமா இருக்கணும். நீ என்னமோ முறுக்கிட்டு போற..” அவளைப் பிடித்து இழுக்க அவளோ “இப்போ என்னதான் உங்களுக்குப் பிரச்சனை” சலித்தபடி கேட்டாள்.

அவள் சாரி கேட்டிருந்தாள் ஒருவேளை ருத்ரன் அமைதியாய் இருந்திருப்பானோ என்னவோ. அவளோ எதுவுமே நடவாது போல இருக்க ருத்ரனுக்கு தாங்க முடியவில்லை. அம்மாவைக் கவனித்துக் கொள்ளவில்லை என்பதில் அவனுக்கு கொஞ்சம் கோபம்தான். காட்டி விடக் கூடாது என்றிருக்க இவளோ வலுக்கட்டாயமாக கோபப்படேன் என்ற ரீதியில் அவனை உசுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.

“என்ன பிரச்சனையா? சமைச்சுட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு எனக்கென்னன்னு போற. இப்பவும் உன் இஷ்டத்துக்கு இருக்க. என்ன கொழுப்பா?”

“ஆமாடா கொழுப்புத்தான் இப்போ அதுக்கு என்னங்கிற? “

“கோபத்தைக் கட்டுப்படுத்திட்டு இருக்கேன் உமா”

“இங்க பாரு இப்போ என்ன உன் அம்மாவைப் பார்த்துக்கல அதுதான் உன்னோட பிரச்சனையா.அதுசரி உங்க அம்மா விழுந்து மூனு நாள் ஆகிடுச்சு. இத்தனை நாளும் நீதான் வந்து பார்த்துக்கிட்டயா? என்னமோ நான் உங்க அம்மாவுக்கு சோறே போடாமல் கொடுமை படுத்துன மாதிரி பேசுற. இந்த வீட்டுல இருந்து பாருடா. உனக்குத் தெரியும். காலையில இருந்து எல்லா வேலையும் பார்த்துட்டு அந்த டயர்ட்ல தூங்கிட்டேன். அப்பவும் ஏழு மணிக்கு எழுந்து சமைச்சுக்கலாம்னு தான் தூங்குனேன். பத்து நிமிஷம் லேட் ஆகிடுச்சு. அதுக்குள்ள நீ செஃப் அவதாரம் எடுத்துட்டு என்னையே திட்டுவயா? நீ ஏழு மணிக்குலாம் வரமாட்டயே. இன்னைக்கு என்னவாம்?”

“அம்மாகிட்ட பேசிட்டு இருந்தேன். அவங்கதான்”

“ஓஹ்..” அது மட்டும் பேசியவள் மீண்டும் படுத்துக் கொண்டாள்.

“உமா..”

“ஏய் உமா..”

“உம்மா…”

“கம்முன்னு நீ படுக்கல.. அவ்வளவுதான் சொல்லிட்டேன்..”

“சாப்பிட வாடி”

“ஐ அம் நாட் ஹங்ரி.. லெட் மீ ஸ்லீப்..” போர்வையை போர்த்திக் கொள்ள அவனோ “அப்படின்னா?” என்றான்..

“எனக்குப் பசிக்கலை. என்னைத் தூங்கவிடுன்னு சொல்லுறேன்”

“ஏய் தங்கம்”

“தங்கம்னு வந்த முகத்தைக் கிழிச்சிவிட்டுடுவேன். உன் அம்மாவும் நீயும் பொரணி பேசுங்க போங்க” அவள் எத்தி தள்ளிவிட்டு படுத்துக் கொண்டாள்.

அதிலிருந்து அவள் ருத்ரனிடம் கூட பேச்சைக் குறைத்துக் கொண்டாள். தலைகீழாக நின்று அவளைச் சமாதானம் செய்து வழிக்குக் கொண்டு வந்த பிறகு அவன் வாழ்வினையே ஆட்டம் காணும் படி ஒருத்தி வந்து சேர்ந்தாள்.

புயல் தாக்கும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
15
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்