Loading

புயல் 15

“அடடா நம்ம மச்சான். வாங்க மச்சான்” அவனது தோள் மேல் கைப் போட அதைத் தட்டியவன் உர்ரென்று முறைத்துப் பார்த்தான்.

“என்ன மச்சான் இவ்வளவு தூரம் நீயே வந்துருக்க. மாமனைப் பார்க்கணும்னு ஆசையாய் இருந்தால் மாமாவுக்கு ஒரே ஒரு மெசேஜ் மட்டும் போட்டுருக்கலாம்ல. மாமன் உன்னைத் தேடி ஓடி வந்துருப்பேன்ல”

“நான் கொஞ்சம் பேசணும்”

“என்ன பேசணும் மச்சான்”

“நீங்க உமாவை விட்டுடுங்க”

“ஆத்விக். என்னோட பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு. அப்படியென்ன வெறுப்பு உனக்கு. எங்க இரண்டு பேருக்கும் பிடிச்சுருக்கு. நீ ஏன் தேவையில்லாமல் குறுக்க வந்து நிக்குற. உமாவோட தம்பின்னு பார்க்குறேன். இல்லைன்னா பளார்னு ஒன்னு விட்டுருப்பேன்” அவளுக்காக அவன் கோபத்தினைக் கட்டுப்படுத்தினான்.

“உங்களுக்கு உமாவை ரொம்ப பிடிக்குமா?”

“என்னடா இது கிறுக்கு மாதிரி கேட்குற. அவளைப் பிடிச்சதால தானே நான் அவளைக் கல்யாணம் கட்டிக்கணும்னு நினைக்குறேன்”

“அப்போ அவ நல்லா இருக்கணும்னு நினைக்குறீங்கதானே”

அவன் ஆத்வியை முறைத்துப் பார்த்தான். அந்த பார்வை மேல சொல்லு என்பது போல் இருந்தது.

“அவ நல்லா இருக்கணும்னு நினைச்சால் நீங்க வேற பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிட்டுப் போயிடுங்க. இவளை விட்டுடுங்க”

“மச்சானுக்கு கன்னம் இரண்டும் துறுதுறுன்னு இருக்கும் போலயே. வாங்கிட்டுத்தான் போவேன்னு நினைக்கிறேன்” கையை தேய்த்துக் காட்டினான் அவன்.

“நான் சொல்லுறது புரியுதா இல்லை புரியாத மாதிரியே நடிக்கிறீங்களா எனக்குத் தெரியல?”

“அவ என் கூட இருந்தால்தான் நல்லா இருப்பா. அப்படியே நல்லா இல்லைன்னாலும் அவ என்கூட மட்டும்தான் இருக்கணும். நானா அவளைத் தேடிப் போகல. அவளாத்தான் என் வாழ்க்கையில வந்தா. அவளை விட்டுட்டு வேற ஆளைத் தேடிப் போற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை. என்னைப் பத்தி உனக்குத் தெரியலை ஆத்வி. எனக்கு வேணும்னா அது வேண்டும் தான்.. நானே வேண்டாம்னு முடிவு பண்ணால் மட்டும்தான் அது என்னை விட்டுப் போகும். இப்போ எனக்கு உமா வேண்டும். நீ இதுல ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணனும்னு நினைச்சால் உமாவைக் கூட்டிட்டு போய் தாலி கட்டிட்டு உங்க வீட்டு வாசல்ல வந்து நிப்பேன். உங்களால என்ன பண்ண முடியும். அப்பறம் உமாவை அடிச்சயாமே.. அது உங்க உடன்பிறப்பு பாடு. அதுல நான் தலையிடல. ஆனால் அவ கூட பேசு. பாவம் ரொம்ப வருத்தப்படுறா”

“அவ லைப் முழுக்க ஃபீல் பண்ணக் கூடாதுன்னு தான் நான் எல்லாம் பண்ணுறேன். அந்த லூசு அதைப் புரிஞ்சுக்க மாட்டேங்குது. உங்க குடும்பத்துக்கும் அவளுக்கும் செட் ஆகாது. அவ படிச்சுருக்கா. நீங்க படிக்கவே இல்லை. அதுவும் இல்லாமல் அவளால அந்த வீட்டுல அட்ஜெஸ்ட் பண்ணிக்க முடியாது”

“இதெல்லாம் பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு இயல்பா இருக்குற விஷயம்தான்டா ஆத்வி மச்சான். அதுக்காக இப்படியா பேசுவ. அதுவும் கல்யாணத்தை நடக்கவே விட மாட்டேன்னு இருக்குறதுலாம் ரொம்பவே ஓவர்”

“அவளோட வாழ்க்கையைப் பத்தி பேசிட்டு இருக்கேன். நீ என்ன காமெடி பண்ணிட்டு இருக்கயா? உன் அம்மா வேண்டா வெறுப்பா முகத்தை வச்சுட்டு பேசும் போதே தெரியுது. அவங்களுக்கு இதுல விருப்பமே இல்லைன்னு. அந்த கோபம் எல்லாம் இவ மேலதான் திரும்பும்” மரியாதை எல்லாம் காணாமல் போயிருக்க அது கூட ருத்ரனுக்குப் பிடித்திருந்தது.

“டேய் அம்மா கோபமா இருக்குறது என்னமோ உண்மைதான். அதுக்குன்னு அதை உமா மேல காட்டுற அளவுக்கு அவங்க ஒன்னும் கல் நெஞ்சக்காரவங்க இல்லை ஆத்வி” மணியம்மாளின் மகனாய் அவருக்கு ஆதரவாய் பேசினான் ருத்ரன். பாவம் அவர் பற்றித் தெரியாமலேயே.

“ஆனால் உன் அப்பா..” எனச் சொல்ல வர ஆத்வியின் சட்டையைப் பிடித்தவன் “உமா மாதிரி இருக்கன்னு தான் உன்னை இவ்வளவு தூரம் பேச விட்டதே. நீ என்னடான்னா என் குடும்பத்தையே தரக் குறைவா பேசிட்டு போயிட்டே இருக்க. டேய் உமாதான்டா என் பொண்டாட்டி நீ முடிஞ்சால் கல்யாணத்தை நிப்பாட்டுடா. பார்க்கலாம். அவ என்கூட சந்தோஷமா இருக்குறதை நீ பார்க்கத்தானே போற.. இப்பக் கூட எனக்கு உன் மேல முழுசா கோபம் வர மாட்டேங்குது. உன்னை மாதிரி ஒரு தம்பி கிடைக்க உமாதான் குடுத்து வச்சுருக்கணும்” அவனது கண்களில் திடீரென தென்பட்ட அந்த வெறுமை ஆத்வியை அசைத்தது முதன்முறையாக.

அவனையேப் பார்த்தபடி நின்றவனை கண்டு என்ன நினைத்தானோ “உள்ளே வா ஆத்வி” என கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.

உள்ளே அமரச் சொன்னவன் அவனுக்காக காஃபி வாங்கி வந்து நீட்டினான்.

இம்முறை மறுக்க முடியவில்லை. வாங்கிக் கொண்டான்.

“ஆத்வி! எனக்கு தெரிஞ்சு நான் எனக்குன்னு எதுவும் ஆசைப்பட்டது இல்லைடா. இந்த கடைதான் என்னோட உலகம்னு ஆகிடுச்சு. காலையிலயே வந்துடுவேன்.. மாத்தி விடுறதுக்கு கூட ஆள் வரமாட்டாங்க..”

“வேலைக்கு ஆள் எல்லாம் இருக்கே” உள்ளே வரும் போது கவனித்ததை வைத்துக் கேட்டான் ஆத்விக். அக்காவிற்குச் சொந்தமானது என்பதில் எல்லாமே அவன் கருத்தில் பட்டது.

“அது இந்த வருசம் கொஞ்சம் கடையை மாத்தி கட்டினோம். அதுல இருந்துதான் வேலைக்கு ஆள் போட்டதே.. இன்னும் இரண்டு மூனு பேர் போடணும்.. அப்போத்தான் இப்போ இருக்குற சூழ்நிலையில சரி வரும். அதுவரைக்கும் நான்தான் இங்க பார்த்தாகணும்..”

“ஏன் உங்க தம்பி இருக்காங்கள்ல”

“இருக்கான்.. அவன் வர்றதுலாம் ஏதோ ஒரு மணி நேரம் பொழுது போறதுக்கு மட்டும் வருவான்‌. அந்த நேரத்துலதான் நான் போய் சாப்பிட்டு வரணும். அதுவே ஏதோ வெட்டி முறிச்சது போல நடிச்சுட்டு போவான். என்ன பண்ணுறது இதுதான் தொழில்னு ஆகிடுச்சு. நாமதானே மூத்தப் பையனா பொறுப்பா பார்த்துக்கணும். பார்த்துக்கிட்டேன் டா. நான் ரெஸ்ட் எடுத்ததா சரித்ரம் இருந்தது இல்லை. எனக்குன்னு எதுவும் யோசிச்சதும் இல்லை. உன் அக்கா என் மேல மஞ்ச தண்ணீ ஊத்துனா டா.. அப்போத்தான் என் வாழ்க்கையில ஒரு பிடிப்பு கிடைச்சது மாதிரி இருந்தது. அன்னைக்கு இருந்து எனக்கு அவ ஞாபகம் தான். அவ என் கூடவே இருக்கணும்னு ஆசை.. கண்டிப்பா அவ பிடிக்கலைன்னு சொன்னால் திரும்பி வந்துருப்பேன். அவ பிடிச்சுருக்குன்னு சொல்லும் போது  சந்தோஷம் தாங்க முடியல. அன்னைக்கு வெளிய போனதுதான் என் வாழ்நாள்ல மறக்க முடியாத ஒன்னு. இதுவரைக்கும் நான் இவ்வளவு நேரம் வெளிய சுத்துனதே இல்லை. எனக்கே அதெல்லாம் வித்தியாசமா இருந்தது. எனக்கு நீ சொல்லுற படிப்பு, குடும்ப சூழ்நிலை, என் வீட்ல இருக்க ஆட்களோட மனநிலை இதெல்லாம் பெருசா தெரியல டா.. இப்போதைக்கு என்னோட ஒட்டுமொத்த சந்தோஷமும் உமா மட்டும்தான். தயவு செஞ்சு குழப்பம் பண்ணாமல் இரு ஆத்வி..” என அவனிடம் பேச இப்படிக் கெஞ்சுபவனை ஆத்விக்கு பிடித்துத் தொலைந்தது.

ஆக, அக்கா தம்பி இருவரையும் ருத்ர தாண்டவன் பேசிப் பேசியே வசியம் செய்துவிட்டான்.

“எனக்கு உமா சந்தோஷமா இருந்தால் போதும் மாமா.. அவ எந்த சூழ்நிலையிலயும் தோத்துப் போய் என்ட்ட வரவே கூடாது அதுமட்டும்தான் என்னோட ஆசை. அவளை பத்திரமா பார்த்துக்குவீங்கதானே..” ஆத்வி கேட்டதை நிறைவேற்ற போவதில்லை என்பதை அறியாமலேயே  ருத்ரன் வேகமாய் கண்கள் மின்ன “மச்சி நீ மாமான்னு கூப்பிட்ட.. உமா சம்மதம் சொன்ன போது இருந்ததை விட இப்போ இன்னும் ஜிவ்வுன்னு இருக்குடா. எங்க இன்னொரு தடவை கூப்பிடு” என்றான்.

“நான் உங்ககிட்ட பேசி வேண்டாம்னு சொல்ல வச்சுடணும்னு நினைச்சு வந்தேன்” சலிப்பாய் பேச, “இப்போ மாமனை விட முடியாதுன்னு தோணுதுல அதுதான்டா ருத்ரன்” என்றான் சிரிப்பாய். உண்மையிலேயே அவனுக்கு ஆத்விக் சம்மதம் சொன்னதில் அவ்வளவு மகிழ்வு.

என்னதான் இவனோடு பேசினாலும் ஆத்விக் உமாவிடம் முகம் திருப்பிக் கொண்டுதான் இருந்தான்.

ஆத்விக் வந்து பேசியதை ருத்ரன் உமாவிடம் சொல்லி சொல்லி வெறுப்பேற்றினான். அவளோ ருத்ரனை திட்டிவிட்டு ஆத்விக்கை பார்க்கும் போதெல்லாம் பாவமாய் முகத்தை வைத்திருந்தாள். தம்பி காரன் கண்டு கொள்ளவே இல்லை.

திருமண நாளும் வந்தது. இடைப்பட்ட நாட்களில் ருத்ரனும் உமாவும் பார்த்துக் கொள்ளவே இல்லை. கல்யாணத்துக்கு துணி எடுக்கையிலாவது பார்க்க சந்தர்ப்பம் வாய்க்கும் என்று உமா நினைத்திருக்க, மணியம்மாள் அதற்கும் பெரிய ஆப்பாக வைத்துவிட்டார் அவர்களே தனியாக சென்று எடுத்துவிடுவதாக கூறி.

இதுவரை காதலர்களாக இருந்தவர்கள் இன்று கணவன் மனைவியென்னும் உறவில் இணையப் போகிறார்கள். எதையோ சாதித்த பெருமிதம் ருத்ரனின் முகத்தில்.

ருத்ரன் முகத்தினைக் காணக்காண மணியம்மாளுக்கு வயிறு காந்தியது. பெற்ற வயிறை பத்த வச்சுட்டான் பாவி என்று திட்டியபடியே இருந்தார்.

அந்த ஆளு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியிருந்தால் எப்படி இருந்திருக்கும் இதுவே ஓட, கவிதா பேசியது வீரா பேசியது கூட அவருக்கு ஒட்டவில்லை.

அவரது பார்வை மொத்ததும் ருத்ரன் அருகே இருந்த உமா மீதுதான். அந்த பார்வையை அவளும் உணர்ந்தாளோ என்னவோ அவள் மாமியாரைப் பார்க்க அவர் இன்னமும் பார்வையை மாற்றவே இல்லை.

இந்தம்மா ஏன் இப்படிப் பார்க்குது என்று நினைத்தவள் அப்போதுதான் தாலி கட்டி தன் பாதியாய் மாறியிருந்த ருத்ரனின் இடுப்பில் லேசாக குத்த, அருகே சரவணனிடம் பேசிக் கொண்டிருந்தவன் “என்னடி” எனக் கேட்டான் ஆசையாய்..

“அது‌.‌..” என்ன சொல்ல வந்தோம் என்பதையே மறந்து போனாள் அந்த பார்வையில் அவனது வார்த்தையில்.

“என்ன உம்..மா…”

சுத்தம் இனி எங்கிருந்து மணியம்மாள் எல்லாம் ஞாபகத்தில் இருக்கப் போகிறார்?

கனவு லோகத்தில் இருவரும் சஞ்சாரம் செய்துக் கொண்டிருக்க,

ஆத்வி அவனருகே வந்து “மாமா.. நீங்க இரண்டு பேரும் சாப்பிட்டுருங்க. அதுக்கப்பறம் உங்க வீட்டுக்குக் கூப்பிட்டுப் போறதா சொன்னாங்க” என்றவனின் முகம் கொஞ்சம் சுணங்கியிருந்தது போல இருந்தது.

“மாப்ள என்னடா? முகம் வாடிப் போயிருக்கு. என்னடா விஷயம்? முதல்ல நீ சாப்பிட்டயா?” அவனது கரிசனம் உமாவை மெச்சுதலோடு பார்க்க வைத்தது.

“சாப்பிட லேட் ஆகும் மாமா.. எனக்கு நேத்து இருந்து பயங்கர வேலை அதான்.. நீங்க வாங்க” அவன் அவர்களை அழைக்க “வர்றோம் டா” என்று சொன்னவன் அவள் பக்கம் திரும்பினான்.

அவள் நெற்றி முழுக்க விபூதி நிரம்பியிருந்தது.

“நான் துடைச்சு விடுறேன்டி” என அவன் துடைக்க ஆரம்பிக்க அவள் பார்வை அவனைக் குற்றம் சாட்ட ஆரம்பித்திருந்தது.

“எதுக்காம் இப்படிப் பார்க்குறாங்க என் தங்கம்”

“எதுக்குன்னு தெரியாது”

“அவன் என்கிட்ட பேசுறதுல உனக்கு என்னடி பிரச்சனை?”

“என்கிட்ட பேசாமல் அவனுக்கு உங்ககிட்ட மட்டும் என்ன பேச்சு”

“பொறாமைப் படுறயா?”

“வருத்தப்படுறேன். அது கூட உங்களுக்கு தெரியலையா?” அவளின் பதிலில் நெற்றியைத் துடைத்துக் கொண்டிருந்தவன் விரல்கள் வேலை நிறுத்தம் செய்தது.

“பேசுவான்டி.. நீ கவலைப்படாத”

“உங்ககிட்டயாவது நல்லா பேசுறான்ல அதுவே எனக்குப் போதும்” அடுத்து ஆத்வியைப் பத்தி அவள் பேசவே இல்லை.

ஆத்வியின் முகம் நேரம் ஆக ஆக இன்னும் சுருங்கித்தான் இருந்தது. அதைக் கவனித்தவன் சரவணனை அனுப்பி என்னவென்று விசாரிக்க சொன்னான்.

அவனோடு என்ன பேசினானோ சரவணனும் அமைதியாய் வந்து நிற்க,” என்னாச்சு சரவணா?” என்றான்.

பாவம் ரொம்ப டயர்ட் போல.. விடு ருத்ரா” என்று சரவணன் சொல்ல பக்கத்தில் இருந்த உமாவிற்குத்தான் உறுத்திக் கொண்டே இருந்தது.

“என்னாச்சு அண்ணா?” அவளும் அவனிடம் விசாரணையை ஆரம்பிக்க அவன் “அடடா புருஷனும் பொண்டாட்டியும் உங்களுக்குள்ள பேசிக்கிட்டாதான் என்னவாம்..” என்று செல்லமாக அவன் கடிந்துக் கொள்ளவும் அது அவர்களிடம் வேலை செய்தது. ஆத்விக்கை மறந்து போய் தங்களுக்குள் அவர்கள் தொலைந்து விட சரவணன் மீண்டும் ஆத்விக்கை நெருங்கி வந்தான்.

“ருத்ரன்கிட்ட சொன்னால் அவன் பார்த்துப்பான்டா ஆத்விக்..” மனம் கேட்கவில்லை அவனுக்கு.

“தேவையில்லை அண்ணா..” தன்மையாய் அவன் மறுத்துவிட ஆத்விக்கை நினைத்து அவனுக்குள்ளும் பெருமிதம்.

“நானுமே ருத்ரனோட அம்மா இப்படியெல்லாம் பேசுவாங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை” அந்த பேச்சினை அவன் ஆரம்பிக்க,

“பட் நான் எதிர்பார்த்தேன் தான் அண்ணா. சோ பெருசா எதுவும் தோணலை. எனக்கு அங்க இருக்குறவ சந்தோஷமா இருந்தால் போதும் அண்ணா. அவளை மாமா பார்த்துக்குவாங்கன்னு நம்பிக்கை இருக்கு. அதுக்காகத்தான் நான் சரின்னு சொன்னேன். மத்தபடி இதெல்லாம் எனக்கொன்னும் கஷ்டம் இல்லை அண்ணா. நாங்க அவங்க அளவுக்கு இல்லைதான். அதுதான் தெரியுமே” அவன் இயல்பாக பேசியிருந்தாலும் அவன் மனதில் என்ன ஓடுகிறதென்பதை சரவணனால் அறிந்துக் கொள்ள முடிந்தது.

 

புயல் தாக்கும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
17
+1
0
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்