Loading

புயல் 14

“இப்போ ஏன் இப்படி நடுங்கிப் போய் உக்காந்துட்டு இருக்க? பயப்படாத டி” பேருந்தின் காற்றுக்கு கலைந்த தன் தலைமுடியைக் கோதிவிட்டபடி பேசினான் ருத்ரன். இன்றுதான் அவளோடு வெளியே வந்திருக்கிறான். இப்படி காதல் செய்வது அவனுக்கு சுகானுபவமாக இருந்தது.

“உங்களுக்கு என்ன? நீங்க ஈசியா சொல்லுவீங்க எனக்குத்தான் பயமா இருக்கு”

“அதான் நான் இருக்கேனே. அப்பறம் ஏன் பயம்”

“வீட்டுக்குத் தெரிஞ்சால் பிரச்சனை ஆகும். அப்பாவை நினைச்சால் ரொம்ப பயமா இருக்கு” அவள் நடுங்கியதை சிரிப்புடன் பார்த்தான்.

பின் “உம்..மா…” என அவன் இழுக்க அவளது பயம் இருந்த இடம் தெரியாமல் போய் அங்கே ஒருவித அவஸ்தை வந்து குடியேறியது.

“ஏன்டி போன்ல பேசும் போது பார்க்கணும்னு சொல்லுற? சரின்னு வந்தால் பயமா இருக்குன்னு சொல்லுற? இதெல்லாம் நல்லாவா இருக்கு. மாமன் பாவம் இல்லையா? அம்புட்டு கஷ்டப்பட்டு கடையை மாத்திவிட்டு உன்னைப் பார்க்கத்தானே வந்தேன். ஆசையாய் பேசலைன்னா அப்பறம் எனக்கு கஷ்டமா இருக்கும்ல” அந்த மாயக்காரனின் மாயக்குரலில் அவள் அவஸ்தை இருமடங்கு அதிகமானது.

பேருந்தின் ஜன்னல் வழியாக வந்த காற்று அவளது முடிக்கற்றைகளோடு விளையாடிக் கொண்டிருக்க ருத்ரன் அதை அவளது காதோரம் சீர்படுத்தினான்.

அவனது தொடுகையில் அவள் மெல்ல நகர, “ரொம்ப பண்ணாத” என்றான் அவன் கடுகடுவென்று.

“என்ன ரொம்ப பண்ணாங்களாம்?” அவள் சீண்டினாள். இப்போது அவளுக்கு வாயாட பிடித்திருந்தது. பயத்தினைத்தான் அவன் போக்கிவிட்டிருந்தானே.

“லேசா தொட்டதுக்கே ரொம்பப் பண்ணுற? நீதான் என்னை மஞ்சள் தண்ணீர் ஊத்தி மானபங்கப் படுத்துனங்கிறதை அடிக்கடி மறந்துடுற?”

“அடச்சீ! மானபங்கம் படுத்துனேனா.. யோவ் என்னய்யா வார்த்தை இது..”

“ஆமா சின்னப்பையன் நான் பாட்டுக்குக் கடை உண்டு வீடு உண்டுன்னு இருந்தேன். நீதான் மஞ்சத் தண்ணீ ஊத்தி என் மனசைக் கெடுத்த. அதுமட்டுமா இப்படிப் பிடிச்சு முகம் முழுக்க மஞ்சள் தடவுன பாரு..” சொல்லும் போதே அவன் முகத்தில் அந்நாளின் பரவசம் குடி கொண்டிருக்க அவள் தான் ஆச்சர்யமாய் பார்த்தாள்.

“என்னைக் கெடுத்ததே நீதான்டி..” என்று சொல்ல “ஷ்ஷ் வாயை மூடுங்க ருத்ரன்” என்றாள் அவள் சுற்றும் முற்றும் பார்த்தபடி.

“ஹேய் உ ம் மா…” அவன் இப்படி இதழ் குவிக்கிறான் என்றாலே அவளுக்குள் படபடப்பு உற்பத்தி ஆகிவிடும்..

“உம்…மா… என்னைக் கொஞ்சம் பாரு உம்மா…” அவன் இழுக்க “அய்யோ அப்படிச் சொல்லாதீங்க” அவள் சிணுங்கினாள்..

“அப்போ உம்மா கொடு”

“என்ன?”

“இங்க குடு” கன்னத்தினை அவள் புறம் வாகாக திரும்பினான்.

“அதெல்லாம் முடியாது”

“நான் கொடுத்தால் கன்னத்தில தரமாட்டேன். பிறகு உன் இஷ்டம்”

“என்ன?” அவள் திடுக்கிட்டு விழிப்பது கூட ரசனையாக இருந்தது.

“என்ன குடுக்கவா உ…ம்மா…”

“நாம பஸ்ல இருக்கோம் ருத்ரன்..”

“இடம்தான் பிரச்சனையா?” அவன் கேட்க அவளுக்குத்தான் வியர்த்து வழிந்தது.

அருகே இருந்த மலைக் கோவிலில் ஏறி சாமி கும்பிட்டுவிட்டு அவள் கல்லூரி முடியும் முன்னரே அங்கு விட்டுவிட்டு ருத்ரன் அவனுக்குத் தேவையானதை வாங்கியும் கிளம்பியிருந்தான்.

அவன் அடாவடியில் திளைத்தவள் வீட்டிற்கு வர வாசலில் நின்ற ஆத்வி அவளைப் பார்த்த உடனே “மீட்டிங் எல்லாம் முடிஞ்சதா?” என்றான்.

“என்னடா..” என்ற போதே அவளது கன்னத்தில் அவன் கைவிரல்கள் பதிந்தது.

“என்ன காரியம் பண்ணிட்டு வந்துருக்க? யார் அவன். காலேஜ் போறேன்னு பொய் சொல்லிட்டு ஊர் சுத்துற அளவுக்கு வந்துட்டயா?” என அவன் பாட்டுக்கு அடிக்கிக் கொண்டே போக அவள்தான் சிலை போல் நின்றுவிட்டாள்.

“சொல்லு யார் அவன்..?”

“அது அது ஊருக்குப் போனேன்ல அங்க செல்வியோட ரிலேஷன். அந்த ஊர்ல தான் பெரிய கடை வச்சுருக்காங்க”

“மறந்துட்டு வேலையைப் பாரு” ஆத்வி சொல்ல அவளோ பாவமாய் பார்த்தாள்.

“அப்பா அம்மாகிட்ட இன்னும் சொல்லல. நீ இதோட இந்த நினைப்பை எல்லாம் மூட்டை கட்டிப் போட்டுடு.. அவன் நமக்கு வேண்டாம்” என்றான் அவன்.

“ஆத்வி அது வந்து..”

“ஏதாவது பேசுன சங்கை அறுத்துடுவேன்.. போ” என்றவன் வெளியேறிவிட அவள் ஆத்வியின் பரிணாமம் கண்டு பீதியில் உறைந்து போய்விட்டாள்.

அதைத் தகவலாய் ருத்ரனிடம் சொல்ல அப்போதுதான் கடைக்குச் சென்றவனால் அவளுக்கு பதில் சொல்லவும் முடியவில்லை.

இரவு நேரத்தில் அவன் முடிந்த அளவுக்கு சமாதனம் செய்ய அவளும் அவனுக்காக பொறுமையாக இருந்தாள்.

ஆத்வி மட்டும் அவளுடன் பேசுவதையே சுத்தமாக நிறுத்தியிருந்தான்.

கல்லூரியும் முடிந்திருக்க வெளியே பார்க்க முடியாமல் ருத்ரனும் தவித்துப் போய்விட்டான்.

டேய் ஆத்வி.. நீ மட்டும் கையில கிடைடா உன்னை.. என்று அவன் மீது கோபம் மட்டுமே கொள்ள முடிந்தது அவனால்.

ஆத்வி அதோடு நில்லாமல் அவனைப் பற்றியும் அவன் குடும்பத்தினைப் பற்றியும் விசாரிக்க ஆரம்பித்திருந்தான்.

ஏனோ அந்த தகவல்கள் எல்லாம் அவனுக்கு உவப்பானதாக இல்லை. அதுவும் மணியம்மாள் இருக்கும் வீட்டிற்குத் தன் அக்கா செல்வது சரியாகப் படாது என்பது புரிந்துப் போனது. உமாவிடம் சொல்லவும் அவன் ப்ரியப்படவில்லை‌. உமாவிடம் அதை அவன் தெளிவாக  சொல்லியிருந்தாலும் கூட அவள் ருத்ரனை வேண்டாம் என்று சொல்லப் போவதில்லை.. ருத்ரனும் விடப்போவதில்லை என்பது இருவரையும் பார்த்ததிலேயே தெரிந்துப் போனது. அதற்காக அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பது என்பது அக்காவுக்குத்தான் அவதி என நினைத்தவன் எப்படியாவது உமா மனதை மாற்றிவிட வேண்டும் என நினைத்துக் கொண்டான். உடன்பிறந்தவனாய் அவன் சரியாகத்தான் அனைத்தையும் நினைத்தான். ஆனால் விதி அவனையும் மீறி அவளது வாழ்க்கையை ருத்ரனுடன்தான் இணைத்துவிட்டது.

—————————–

“அம்மா! எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சுருக்கு. அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் ஆசைப்படுறேன்” மணியம்மாளிடம் அவனே சென்று பேசிட ருத்ரனா இது என்பது போல் பார்த்தார் அவர்.

இதுவரை குடும்பம் கடை இது மட்டும்தான் பிள்ளைக்குத் தெரியும் என்பதை அறிந்தவருக்கு காதலிக்கவும் தெரியும் என்பதை காட்டியிருந்தான் ருத்ரன்.

“ருத்ரா! மூத்தவன் நீயே இப்படி இருந்தால் எப்படி டா. உன் தம்பி தங்கச்சி…”

“அம்மா அவளைப் பிடிச்சுருக்குன்னு சொல்லிட்டேன். சும்மா என்கிட்ட கேள்வி கேட்டுட்டே இருக்காதீங்க. என்னால அவளை வெளிய வச்சும் பார்க்க முடியல. அவ தம்பி ரொம்ப கோபமா இருக்குறதா வேற சொன்னா. இதுக்கு மேல அமைதியாய் இருந்தால் சரி வராது. எனக்கு அவதான் வேண்டும். சின்ன வயசுல இருந்து நான் உங்களுக்காகத்தானே உழைச்சுட்டு இருக்கேன். இப்போ நான் ஆசைப்பட்டுக் கேக்குறது இது மட்டும்தான். என்னோட கல்யாணத்தை வேகமா முடிச்சு வைங்க” என்று சொல்ல

“பொண்ணு யாரு?” என்று கேட்டார்.

“செல்வி இருக்குதுல அவளோட அத்தை மகதான்..”

“வேண்டாம்” மணியம்மாளிடம் தீவிரம் இருந்தது.

“வேண்டும்னு சொல்லிட்டேன் வேண்டாம்னு நீங்க சொன்னால் நான் கேட்பேன்னு நினைக்காதீங்க. அவளைக் கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணி இங்க கூட்டிட்டு வரவும் எனக்குத் தெரியும்”

அதன் பின் மணியம்மாள் எங்கிருந்து பேச..

அவனது முடிவில் இவ்வளவு உறுதியாக இருப்பான் என்பதை அவராலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இரண்டு நாட்கள் கடந்திருக்க ருத்ரனிடம் மணியம்மாள் பேச ஆரம்பித்தார்.

“ருத்ரா!”

“சொல்லுங்கம்மா என்னைக்குப் பொண்ணுப் பார்க்க போகலாம். அங்க வேற என் மச்சான் என் பொண்டாட்டியை ரொம்ப டார்ச்சர் பண்ணுறானாம்”

“அது வந்து ருத்ரா.. இங்க நம்ம வி எம் ஓனர் இருக்காருல”

“ஆமா! அந்த மாமாவுக்கு என்ன?”

“அவரோட மூத்த பொண்ணை உனக்குக் கொடுக்கிறேன்னு அப்பாகிட்ட பேசியிருக்காரு. அவங்க பெரிய இடம். நமக்கும் அப்படியொரு சப்போர்ட் இருந்தால் நல்லதுதானே”

“உங்க சின்ன மகனுக்கு வேணும்னா பேசி முடிங்க. என்னை விட்டுடுங்க. எனக்கு பொண்டாட்டி உமா மட்டும்தான்”

“ருத்ரா நல்லா யோசிச்சுப் பாரு.. அவங்களுக்கு தொழில் அது மட்டும் இல்லை.. நிறைய இருக்கு. தோட்டம் துரவுன்னு.. அவருக்கு பையனும் இல்லை. இரண்டு பொண்ணுங்கதான்”

“அதுக்குன்னு இரண்டையும் என்னையே கல்யாணம் பண்ணச் சொல்லுறீங்களா என்ன?” கடுப்பாகிப் போனான்.

“ச்சே இல்லைடா.. அம்மா சொல்லுறதை கொஞ்சம் பொறுமையாய் கேளு.. இந்த பொண்ணு ஒன்னும் இல்லாத வீடு”

“அம்மா தேவையில்லாததை எல்லாம் பேசாத. நான் சொன்னதை மட்டும் கேளு. இல்லை நானே அவளைக் கூட்டிட்டுப் போயிடுறேன்”

“இதுதான் முடிவா. அப்போ பெத்தவங்க பேச்சுக்கு மரியாதை இல்லை அப்படித்தானே”

“அவளை எனக்குப் பிடிச்சுருக்கு. நான் சந்தோஷமா வாழணும்னு நினைச்சால் அவளைப் பத்தி மட்டும் பேசு. சீக்கிரம் நல்ல நாள் பாரு” என்று முடித்துக் கொண்டான்.

 

முழுதாய் ஒரு வாரம் கடந்தபின் இதே உமாவின் வீட்டில் இருக்கிறார்கள் ருத்ரனின் குடும்பத்தார்கள்.

 

ஆத்விக் பயங்கர எரிச்சலில் இருந்தான். அவனுக்கு ருத்ரனைப் பார்க்க பார்க்க அவ்வளவு கோபம். கட்டுப்படுத்தி அவன் கடமைக்கே என்று நிற்க, மணியம்மாள் தான் “என் பையனுக்கு உங்க பொண்ணைக் கேட்டு வந்துருக்கோம்” என்று ஆரம்பித்தார்.

அவரது பார்வையெல்லாம் உமாவைத்தான் எரித்தது.

இதென்ன இந்தம்மா இப்படிப் பார்க்குது என்ற எண்ணத்தோடு ஆத்வி உமாவுக்கு அருகே நின்றான்.

அதில் உமாவுக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.

ருத்ரன் இருவரையும் தான் பார்த்தான். தனது தம்பியைப் பார்த்தான். அவனோ உனக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் மொபைலில் கவனமாக இருந்தான்.

கவிதா அதைவிட மணியம்மாள் காதுக்குள் குசுகுசுவென்று எதையோ பேசிக் கொண்டிருந்தாள்

இதுதான் என் குடும்பம் என்று அறிமுகப் படுத்துவது மாதிரியா இருக்கிறது என்று அவன் மனதிற்குள் ஒரு மூலையில் இருந்தாலும் காதல் என்பதால் இப்படி விட்டேத்தியாக இருக்கிறார்கள் என்று முடிவுக்கு வந்தான். அங்கேதான் அவனும் தவறு செய்தான்.

உமாவின் தந்தை பேச ஆரம்பிக்கும் முன் ஆத்விக் “நாங்க யோசிச்சுச் சொல்லுறோம்” என்றுவிட்டான். உமா அவனைப் பார்க்க அவன் இதுதான் எங்களோட முடிவு என்று உறுதியாக இருந்துவிட்டான்.

உமாவின் போன் அதிரத் தொடங்கிய வேளையிலேயே அவளது மனமும் சேர்ந்தே அதிர்ந்தது. ருத்ரன் கோபப்படுவானே.. இவனை எப்படிச் சமாளிப்பது?

“ருத்ரன்..”

“உன் தம்பி என்னமோ யோசிச்சு சொல்லுறோம்னு சொல்லுறான் என்னவாம்?” கோபமாகத்தான் கேட்டான்.

“அது அது.. அவனுக்கு கொஞ்சம் கோபம்”

“எங்க வீட்டுலயும் தான் எல்லாருக்கும் நான் பண்ணது பிடிக்கல. ஆனாலும் அவங்க என்னோட விருப்பத்துக்கு சரின்னு தானே சொன்னாங்க. அவனுக்கு மட்டும் என்ன பிரச்சனை. நீ பேச வேண்டியதுதானே”

“அவன் தான் என்கூட பேசுறதே இல்லையே ருத்ரன்”

“ரொம்ப பண்ணுறான். அவனை தூக்கிப் போட்டு மிதிக்கணும்னு தோணுது. ஆனால் அவன் உன்னை ஜெராக்ஸ் எடுத்தது போல இருக்கானா.‌ கோபத்தைக் கூட காட்ட முடியல”

“என் தம்பியை சைட் அடிச்சீங்களா?” அவள் கோபம் போல் கேட்டாள்.

“ம்ம் லைட்டா”

“அடப்பாவி”

“சைட் அடிக்குற அளவுக்கு வொர்த் பீஸ் தான்டி உன் தம்பி”

“நல்லவேளை எனக்குத் தம்பி மட்டும்தான். தங்கச்சி இருந்தால் என்னை விட்டு அவளைக் கல்யாணம் பண்ணாலும் பண்ணுவீங்க போல”

“ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்லை ருத்ரன். அவனுக்கு உமா போதும்”

“நம்பலாமா?”

“நம்பு டி. எனக்கு நீதான்”

“உங்க அம்மாவுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லையா ருத்ரா” குரல் உள்ளே போய்விட்டது அவளுக்கு.

“அப்படியெல்லாம் இல்லை உமா. ஏற்கனவே எனக்கு ஒரு பொண்ணு பார்த்து வச்சுருப்பாக்க போல. அதனால கொஞ்சம் கடுப்புல இருக்காங்க. கல்யாணம் முடியட்டும். அதுக்குப்பிறகு அவங்களால என்ன செய்ய முடியும். உன்னை ரொம்ப நல்லாப் பார்த்துக்குவாங்க உமா. அவங்களை விடு. மாமன் உன்னை நல்லாப் பார்த்துக்குவேன்” என்றான் அவன்.

“நல்லாப் பார்த்துக்குவீங்களா? ருத்ரன் பேச்சே விவகாரமா இருக்கே”

“இப்போதைக்கு பேச மட்டும்தானே முடியுது. எப்போ நான்? அடியே அடியே.. ச்சே கட் பண்ணிட்டா..” என சிரிப்போடு திரும்பியவன் எதிரே கோப முகத்தோடு நின்றிருந்தான் ஆத்விக்.

 

புயல் தாக்கும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
21
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்