Loading

புயல் 13

மஞ்சத் தண்ணி ஊத்து
மாமன் மேலே பாத்து
கொஞ்சிக் கொஞ்சி நீயாடு கூத்து

பாடலை முணங்கியபடி வெளியே இருந்த மூட்டையை எல்லாம் தூக்கி வைத்துக் கொண்டிருந்தான் ருத்ர தாண்டவன். அவனுக்கு அந்த கடைதான் எல்லாமே.

ஊரே திருவிழா கொண்டாட்டத்தில் மூழ்கிக் கிடந்தது. இன்றுதான் திருவிழாவின் நிறைவு நாள். கரகம் கலக்கியதும் ஊரே மஞ்சள் நீராட்டத்தில் களைகட்டியது. தேடி தேடி முறைப்பையன்கள் பெண்கள் மீது மஞ்சள் நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.

அவனது தம்பி வீரா எப்போதோ காணாமல் போயிருக்க இவன் மட்டும் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

‘நம்ம என்னைக்கு இந்த திருவிழா எல்லாம் கொண்டாடி.. டேய் ருத்ரா உனக்கு அவ்வளவுதான் அதிர்ஷ்டம்டா’ என அவன் புலம்பியபடி இருந்தவன் சட்டென அதிர்ந்துதான் போனான்.

“ஹேய்” என்ற அதிர்வில் அவன் வார்த்தைகளும் தன் மீது ஊற்றிய தண்ணீரில் நனைந்தே வெளி வந்தது.

மஞ்சள் நீர் மொத்தமும் மேனியை நனைத்திருக்க தன்னை நனைத்தது யாரென்று பார்த்தான் ருத்ர தாண்டவன்.

அந்த பெண்ணை இதற்கு முன் பார்த்ததே இல்லை அவன்.

“யார் நீ‌? மஞ்ச தண்ணீர் ஊத்துறதுக்கு எல்லாம் முறை பார்க்கணும். நீ பாட்டுக்கு இஷ்டத்துக்கு ஊத்துற?” கோபத்தில் பல்லைக் கடித்தான் அவன். யார் என்று தெரியாததால் வந்த கோபம் அது.

கடையை விட்டு இறங்கி வந்து வாசலில் நின்றதுக்கு இப்படி மொத்தமாக நனைத்துவிட்டாளே இந்த பெண் என்று அவனுக்கு எரிச்சலாக வந்தது. கண்கள் வேறு மஞ்சளின் தாக்கத்தால் எரிய ஆரம்பித்தது.

“அது வந்து நான் உமா.. அதோ அங்க இருக்காளே செல்வி அவளோட அத்தை பொண்ணு. அவதான் சொன்னா நீங்க அவளுக்கு அண்ணன் முறையாம் அப்போ நான் ஊத்தலாம்னு அதான் வந்து ஊத்துனேன். ஏன் தப்பா?”

“அப்போ முறை தெரிஞ்சுதான் ஊத்துனயா?”

“ஆமா”

“ஓஹ்.. சரி கண்ணெல்லாம் எரியுது. நல்ல தண்ணீ கொண்டு வா..” என்றான் அவன் கண்களைத் தேய்த்துக் கொண்டு..

ஓடிப் போய் வேறு கப்பில் நல்ல தண்ணீர் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள். அன்று ஆரம்பித்தது ருத்ரனுக்கு சொகுசு வாழ்க்கை..

அவளும் மஞ்சள் நீர் ஊற்றி விளையாடியதில் நனைந்து இருந்தாள். அவள் முகம் மட்டும் பார்த்து பேசியவன் பார்வை வயதின் தாக்கத்தால் கொஞ்சம் கீழிறங்கிட பட்டென்று கண்களைத் திருப்பிக் கொண்டான்.

“போய் வேற டிரஸ் மாத்திக்கோ”

“இன்னும் டைம் இருக்குன்னு செல்வி சொன்னா. நான் இன்னைக்கு அவளோடவே தோட்டத்துக்குப் போய்தான் குளிப்பேன். அதுவரைக்கும் இன்னும் யார் யார் முறையோ அவங்க மேல எல்லாம் ஊத்தணும். இதெல்லாம் ஜாலியா இருக்கு” என்று சொல்ல

‘டிரஸ் மாத்துன்னு சொல்லுறேன் கேட்காமல் பேசிட்டு இருக்களே பகவானே சோதிக்காத’ என்று நினைத்தவன் தன் இடுப்பில் இருந்த துண்டினை எடுத்து அவள் மீது விட்டெறிந்தான்.

“மேல போட்டுக்கோ”

மறுக்காமல் அவள் போர்த்திக் கொள்ள அவன் முகம் கழுவிக் கொண்டான்.

கழுவி முடித்து கண்களை அவன் திறக்கும் சமயம் மீண்டும் கண்களை மூடும் படி ஆகிவிட்டது.

மஞ்சளை குழைத்து அப்படியே முகத்தில் பூசி விட்டிருந்தாள் உமா.

“கழுவின பிறகு பூசணும்னுதான் வெயிட் பண்ணேன்.. வரட்டா ருத்ரா.. இப்போ அழகா இருக்கீங்க” என அவள் ஓடியிருக்க அவனோ தடுமாறி நின்றான்.

ஒரு பாக்கெட் மொத்தத்தையும் வேஸ்ட் பண்ணிட்டாளே பாவி.. இருபது ரூபாய்க்கு வித்துருக்கலாம் இப்படி இருந்தால் எப்படி இவளை வச்சு நாம குடும்பம் நடத்துறது என்று யோசித்தவன் தனது யோசனையைக் கண்டு தானே அதிர்ந்து போனான்.

டேய் நமக்கு செட்டாகாது.. விட்டுடு.. அந்த பொண்ணு பார்த்தாலே தெரியுது படிச்ச பொண்ணுன்னு என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான்.

ஆனாலும் கூட அவனது சிந்தனையில் நான் தோட்டத்துக்குப் போய் குளிக்கப் போறேன் என்று அவள் சொன்னது நினைவுக்கு வந்தது.

தோட்டத்துக்குப் போ ருத்ரா. அவளைப் பாரு என மனம் முரண்டு பிடிக்க சற்று நேரம் கட்டுப்படுத்திப் பார்த்தவன் விடாப்பிடியாக தனது தந்தையை வரவழைத்துவிட்டு கடையை அவர் வசம் ஒப்படைத்துவிட்டு மனம் போன போக்கிற்குச் சென்றுவிட்டான்.

முடிவில் இதோ தோட்டத்திற்கு வந்து நிற்கிறான்.

செல்வியுடன் பேசியபடி அவளும் வந்துக் கொண்டிருந்தாள்.

இன்னமும் தோளில் அவனது துண்டு கிடந்தது. அதையே குறுகுறுவென அவன் பார்க்க அதை உணர்ந்தாளோ என்னவோ அவளும் பார்வையை அவன் இருந்த திசையை நோக்கித் திருப்பினாள்.

ருத்ரனைக் கண்டதும் அவளுக்கு பயம் வந்துவிட்டது. அய்யோ இவன் எங்க இங்க? தோட்டத்துக்குப் போறோம்னு சொன்னதால இங்க வந்துட்டானா? என்று நினைத்தபடி செல்வியின் கையை இறுக்கிப் பிடித்தாள்.

“என்னடி”

“அங்க பாரு”

“ருத்ரா அண்ணன்..” அவளும் யோசனையானாள்.

“அண்ணனைப் பார்த்து நீ ஏன் பயப்படுற?” செல்வி கண்கள் இடுங்க கேட்க, “அது வந்து நீ அவங்க மேல ஊத்தலாம்னு சொன்ன தானே.. நானும் போய் ஊத்திட்டு வந்துட்டேன்” என்றாள்.

“என்னடி சொல்லுற? சொன்ன உடனே ஊத்திட்டயா?”

“இரண்டு தடவை ஊத்திட்டேன். கோபமா இருப்பாங்களோ. அதான் என்னைத் தேடி வந்துட்டாங்களா?”

“அப்படியெல்லாம் இருக்காது. அண்ணன் நல்ல மாதிரி தான்” என்றாள் செல்வி.

அப்போதுதான் தோளில் கிடந்த துண்டினை அவள் கவனித்தாள். இது அவனோடது தானே. அதை வாங்கத்தான் வந்துருப்பானோ என்று நினைத்தவள் “இருடி வர்றேன்” என்று அவனை நெருங்கினாள்.

“நீங்க துண்டுக்காகத்தானே வந்தீங்க ருத்ரன். நான் வாஷ் பண்ணிக் குடுத்துறேன்”

“துண்டுக்காக வந்தேனா.‌ அடிங்.. கண்ணை மூடிட்டு இருக்கும் போதே மஞ்சளைத் தேச்சுட்டு ஓடுற நீ. அவ்வளவு கொழுப்பா உனக்கு” கோபமாய் அவன் கத்தினான்.

அவன் கோபத்தில் அரண்டு பின் நகர்ந்தவள்

“ருத்ரன் அது.. கழுவினதும் மறுபடியும் தேய்ச்சால் என்னென்னு தோணுச்சு. நான் தேய்க்கலாம் தானே எனக்கு உரிமை இருக்குல” தயக்கமாய் பேசினாள்

“ஓஹ்.. உரிமை.. ம்ம் இருக்கு” என்றவன் பார்வை இப்போது உரிமையோட பதிந்தது.

அவள் தயங்கியபடி “போகலாமா ருத்ரன்” என்றிட “என்ன ருத்ரன்? நீதான் எனக்கு பேர் வச்சயா என்ன? ஒழுங்கா மாமான்னு சொல்லு” என்றான்.

“மாமாவா”

“ஆமா”

“சரி மாமா. நான் கிளம்புறேன்” என்றிட அடுத்த நொடி ருத்ரனின் கைப்பிடியில் இருந்தாள். அவனது ஒரு கரம் அவளது தலையை அழுத்தமாக பற்றி இருக்க இன்னொரு கரம் முகத்தில் மொத்த மஞ்சளையும் தேய்த்திருந்தது.

ஒரு பாக்கெட்டுக்கே கணக்குப் பார்த்தவன் பல பாக்கெட்களை கணக்கில்லாமல் அவளது முகத்தில் அப்பியிருந்தான்.

“இப்போத்தான் அழகா அம்சமா இருக்க. போ..”

அவனை முறைக்கக் கூட அவளால் முடியவில்லை. பேசவும் முடியவில்லை. வாய் கண் என்று சகலமும் மஞ்சள் மயம் தான்.

முகம் மொத்ததும் அவ்வளவு எரிந்தது.

“நானும் மஞ்சத் தண்ணீ நிறைய பொண்ணுங்க மேல ஊத்தியிருக்கேன்.‌ உன் மேல ஊத்தும் போது மட்டும் ஒரு மாதிரி நல்லா இருக்கு.. எனக்கு உன்னை பிடிச்சுருக்குன்னு நினைக்குறேன்..” என்று அவன் சொல்லவும் அவனது துண்டை எடுத்து முகத்தினை அழுந்த துடைத்தவள் அவனிடமே அதை நீட்டி “சாரி ருத்ரன். இங்க மஞ்சத் தண்ணீ ஊத்துறது எல்லாம் பெரிய விஷயம் இல்லை முறை இருந்தால் போதும்னு சொன்னாங்க. அதான் வந்து ஊத்துனேன். நீங்க இப்படி சீரியசா எடுத்துக்குவீங்கன்னு தெரிஞ்சிருந்தால் நான் உங்க பக்கம் கூட திரும்பியிருக்க மாட்டேன்” அவள் சொல்லித் திரும்ப “ஏய் நில்லுடி” என்றான் இவன்.

அதில் தொனித்த கோபத்தில் அவள் திரும்பினாள். உள்ளே கிடுகிடுவென நடுங்கியது. சும்மா போனவனை சீண்டி விட்டுடுட்டோமா என அவளுக்குள் பதட்டம் அதிகமானது.

“இன்னும் கண்ணுக்கு மேல எல்லாம் மஞ்சளா இருக்கு. ரொம்பவே எரியும். இரு நான் துடைச்சு விடுறேன்” சொன்னதோடு இல்லாமல் அவளை நெருங்கித் துடைத்தவன் “இந்த வருஷம் மட்டும் இல்லாமல் வர்ற வருஷம் எல்லாம் நான் மட்டும்தான்டி உன் மேல மஞ்ச தண்ணீ ஊத்துவேன். தெரிஞ்சோ தெரியாமலே நீயே என்கிட்ட வந்து உன்னோட உரிமையை எடுத்துக்கிட்ட. இனி அந்த உரிமையை யாருக்கும் நான் தரமாட்டேன்” என்றவனின் விழிகளைத்தான் அவள் பார்த்தாள்.

“என்ன பார்க்குற?”

“ருத்ரன் இதெல்லாம் சரிவராது.. நான் அப்படியெல்லாம் நினைக்கல. நான் இன்னைக்கு ஊருக்குக் கிளம்பிடுவேன்”

“சரிவராதா.. அதையும் பார்க்கலாம் இந்த துண்டைக் கொடு.. நம்மளோட காதல் சின்னமா நான் வச்சுக்கிறேன். துவைக்க எல்லாம் வேண்டாம்” என வாங்கிக் கொண்டான்.

“காதலே இல்லை. இதுல நினைவுச் சின்னம் வேற” அவள் முணங்கினாள்.

“என்ன முணுமுணுப்பு. போ”

“இட்ஸ் இரிட்டேட்டிங் ருத்ரன். நீங்களும் மஞ்ச தண்ணீ ஊத்துனீங்க. நானும் ஊத்துனேன் சரியாப் போச்சு அதோட நாம இதை முடிச்சுக்கலாம் ஓகேதானே..”

“என்னமோ சொன்ன.. அதுக்கு என்ன அர்த்தம். ஏன்னா மாமன் பத்தாப்பு பெயில்.. அதுவும் அந்த இழவெடுத்த இங்கிலிஷ்ல தான்”

திரும்பிப் பார்க்காமல் ஓடியே விட்டாள் அவள்.

ஊருக்குச் சென்றவள் அதன் பின் அவனைப் பற்றி எப்பவாவது நினைப்பதுண்டு. அதோடு அவ்வளவுதான்.

நாம டீஸ் பண்ணோம். அதான் பதிலுக்கு அவரும் பண்ணியிருக்கார் என்று அவளும் அவனை மறந்து தனது படிப்பில் கவனம் செலுத்தியிருந்தாள். அவளுக்கு அது இறுதி ஆண்டு.

அவள் கல்லூரி விட்டு வெளியே வரும் போது அவளை இடிப்பது போல் வந்து நின்ற அந்த வண்டியைக் கண்டதும் “கண்ணு தெரியலையா..?” என்றவள் வாயை உடனே மூடிக்கொண்டாள்.

கண்ணாடி போட்டுக் கொண்டு அழகாய் இருந்த ருத்ரன் அவளை நொடியில் கவர்ந்தான்.

“ஹேய் தங்கம் எப்படி இருக்க?” என்ற குரல் அவளை நடப்புக்குக் கொண்டு வர,

“என் பேர் உமா.. உமா மகேஸ்வரி” இயல்பாய் காட்டிக் கொண்டாள்.

“எனக்கு தங்கம்னு கூப்பிடத்தான் பிடிச்சுருக்கு”

“நீங்க ஏன் இங்க வந்தீங்க?”

“என் மேல மஞ்சள் தடவிட்டு போன மைனா இந்த மகளிர் கல்லூரியிலதான் படிக்கிறதா கேள்விப் பட்டேன். வந்து பார்க்கலைன்னா மைனா கோச்சுக்காதா தங்கம்”

“அதான் அங்கேயே நாம பேசி முடிச்சுக்கிட்டோம்ல ருத்ரன்”

“மாமான்னு சொல்லணும். இல்லை வாயை உடைச்சுடுவேன்” கோபமே இல்லாத குரலில் அவன் சொன்னான்.

“ருத்ரன் நீங்க நினைக்குறது எல்லாம் நடக்காது. போய் உங்க பொழப்பை மட்டும் பாருங்க.‌ என் பின்னாடி வர்றது எல்லாம் தேவையில்லாத வேலை. வீட்டுக்குத் தெரிஞ்சால் பிரச்சனைதான் வரும். கிளம்புங்க”

“அதெல்லாம் என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கிறேன். நீ சரின்னு சொல்லு” சரின்னு சொல்லித்தான் ஆகணும் என்று பிடிவாதமாய் நிற்பவனை என்ன செய்வது என்று அவளுக்குப் புரியவில்லை.

“ப்ளீஸ் ருத்ரன். நீங்க போயிடுங்க”

“மாட்டேன்”

“நான் பிடிக்கலைன்னு சொல்லுறேன்ல அப்பறம் ஏன் தொல்லை பண்ணுறீங்க?”

“உனக்குப் பிடிக்கலையா?” கூர்ந்து பார்த்தவன் “பிடிக்காமலா சாமி ஊர்வலத்துல நீ என்னைப் பார்த்துட்டே வந்த” என பட்டென்று கேட்டுவிட்டான்.

“யாரு நானா? தயவு செஞ்சு கண்ணாடி போடுங்க ருத்ரன்” அழகாய் சமாளித்தாள்.

“கண்ணாடி போட்டுட்டு தான் இருந்தேன் டி. நீ என்னை பார்த்த. பார்த்துட்டு செல்விகிட்ட திரும்பி கேட்ட.. அவ சொன்னதும் மறுபடியும் ஒரு தடவைப் பார்த்த. கரெக்டா சொல்லுறேனா? உனக்குப் பிடிச்சுருக்கப் போய்தானே அவகிட்ட கேட்டுட்டு வந்து என் மேல மஞ்சத் தண்ணீ ஊத்துன”

அவன் பக்கத்தில் இருந்து பார்த்தது போல புட்டு புட்டு வைத்ததில் அவளது தலை தன்னால் கீழே குனிந்தது. அதெல்லாம் உண்மைதானே..

“ஹேய் தங்கம். ஏன் தலையை குனிஞ்சுட்டீங்க. அப்படித்தான்டா பார்ப்பேன்னு என்னைப் பார்த்துச் சொல்லுங்க தங்கம்” ருத்ரனின் சிரிப்பில் அவளுக்குள் மாட்டிக் கொண்ட அவஸ்தை. இதெல்லாம் தேவையா உமா என அவள் மனதோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்க

“உ ம்…மா….மா..  என்னைக் கொஞ்சம் பாரு உம்…..மா” அவளது அவஸ்தையினை இரசித்தவன் சொன்ன தொனியில் அவள் சட்டென்று நிமிர்ந்து முறைத்தாள்.

“படம் நிறைய பார்ப்பீங்களோ..”

“அதிகமா பார்த்தது இல்லை. கடையிலேயே நேரம் சரியா இருக்கும். எப்பவாவது வீட்டுல சாப்பிடும் போது ஆதித்யா பார்க்குறதோட சரி.. அதுல தான் இந்த காமெடி பார்த்தேன். அதுவும் உன்னைப் பார்த்ததுக்கு அப்பறம்தான். இந்த விஷயத்தை விடு நம்ம விஷயத்துக்கு வா”

“கல்யாணம் விளையாட்டு விஷயம் இல்லை ருத்ரன். இரண்டு வீட்டுலயும் சம்மதிக்கணும்” அவளிடம் இது ஒத்துவராது என்ற மனப்பான்மை இருப்பது அவனுக்குப் பிடிபட்டது.

“அதை நான் பார்த்துக்கிறேன். நீ என்னைக் கல்யாணம் பண்ண சம்மதம்னு மட்டும் சொல்லு” என விடாப்பிடியாய் கேட்க,

அன்று முதல் விரும்பியே சிக்கிக் கொண்டாள் அவனது அடாவடியில்.

புயல் தாக்கும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
20
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment