Loading

புயல் 10

 

மறுபடியும் அவளை இழுத்து வந்து காருக்குள் தள்ளுவதற்குள் ருத்ரனுக்கு போதும் என்றாகி விட்டது.

“ஏன்டி இப்படிப் பாடுபடுத்துற?” கண்ணாடியைக் கழட்டியவன் முகத்தில் இருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.

“உன்னால எப்பவும் என்னைப் புரிஞ்சுக்கவே முடியாது ருத்ரன். அதனாலதான் நான் பாடு படுத்துற மாதிரி உனக்குத் தோணுது” அவள் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

அங்கு மணியம்மாள் கோபத்தில் மூச்சு வாங்க அமர்ந்திருக்க கவிதா தான் துளைத்தெடுத்துவிட்டாள்.

“என்னம்மா?”

“கொஞ்சம் பேசாமல் இருடி.. “

“அவ என்ன சொன்னா? நீ ஏன் இப்படி இருக்க”

“அவளை நான் சாதாரணமா நினைச்சுட்டேன். ஆனால் அவ பேசுற பேச்சு இப்போ வித்தியாசமா இருக்கு‌. இவளை வேற மாதிரி தான் கவனிக்கணும்” என்றவரை புரியாத பாவனையுடன் பார்த்தாள் கவிதா.

“அம்மா என்ன பண்ணப் போற?”

அதற்கு பதில் எதுவும் அவர் சொல்லவில்லை. ஆனால் அவ்வளவு சீக்கிரம் உமாவிடம் தான் தோற்றுப் போவதில்லை என்ற உறுதி மட்டும் அவரிடம் இருந்தது.

————————–

கடையில், இவளைக் கண்டதுமே தங்களது வேலையை நிறுத்திவிட்டு ஒரு கணம் பார்த்து பின் வேலையை தொடர்ந்தார்கள்.

உள்ளே அமர வைத்தவன் அவளுக்கு முன்னால் அமர்ந்தான்.

அனைத்தும் சரியாக நடக்கிறதா என்று அவன் பார்த்துக் கொண்டிருக்க அவளோ “உன் தம்பி எங்க?” என்றுதான் முதல் கேள்வி கேட்டாள்.

“அவனை எதுக்குக் கேட்குற?”

“ஜஸ்ட் தெரிஞ்சுக்கலாம் தான்”

“அவனா? ஸ்டேட்டஸ் பார்த்திருப்பயே தங்கம். பின்ன ஏன் கேட்குற?”

 

“காரணமாத்தான் கேட்குறேன். இதுதான் அவன் உழைக்கிற லட்சணமா? இப்படி இருந்துதான் உங்க வீட்டை இந்த அளவுக்கு உயர்த்திக் கொண்டு வந்துருக்கானா..?”

“என்ன சொல்லுற தங்கம். எனக்குப் புரியல?” சத்தியமாக அவள் பேசுவது அவனுக்குப் புரியவே இல்லை.

“அப்படியே புரிஞ்சுட்டாலும் கிழிச்சுடுவ. அடப்போடா” இப்போது அவளிடம் சலிப்பு மட்டுமே.

“என்ன தங்கம் மாமனை இப்படியா கலாய்ப்ப”

 

“நான் கலாய்க்குறதை விடு. வீட்டுல உன்னை எந்த இடத்துல வச்சுருக்காங்கன்னு தெரியுமா?”

 

“உனக்கு தெரிஞ்சதுன்னா சொல்லேன் மாமன் கேட்குறேன்”

 

“அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு டவுட் இருக்கு”

“ஏன் தங்கம் டவுட்னா சந்தேகம்தானே.. கேளு கேளு”

“உன்னை உன் அம்மா குப்பைத் தொட்டியில இருந்து எடுத்து வந்தாங்களா?”

 

அவள் வழக்கமாக கிண்டல் தொனியில் கேட்கும் அதே வசனம் தான். இன்று ஒரு மாதிரி கேட்கவும் அவனுக்கு சற்று முன் நடந்தது அதற்கு முன் நடந்தது இன்னும் முன் நடந்தது என வரிசையாக ஞாபகத்திற்கு வர அவன் முகத்தில் கோபத்தின் சாயல்.

“உமா இதைப் பத்தி நாம அப்பறமா பேசிக்கலாம்” என அவன் இருக்க அவள் அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் இல்லவே இல்லை.

“ஒருவேளை ஹாஸ்பிட்டல்ல இருந்து மாத்தி எடுத்துட்டு வந்துருப்பாங்களோ.. ச்சே ச்சே இருக்காது. அப்போ எல்லாம் வீட்டுலதானே பிள்ளை பெத்துக்கிட்டாங்க. எனக்கென்னவோ தவிட்டுக்கு வாங்கியிருப்பாங்கன்னு தான் தோணுது”

“உமா..” அவளை அடிக்க கை ஓங்கியவன் சட்டென அவளது நிலையைக் கருத்தில் கொண்டு பக்கத்தில் இருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து தன் கைகளுக்குள் அழுத்திக் கொண்டான்.

 

அதுதானே உண்மை அவள் அவனை சீண்ட ஆரம்பித்தாள்.

 

என்ன செய்வது எப்படி கோபத்தினைக் காட்டுவது என்று புரியாமல் அவன் சுவற்றிலேயே அந்த பேப்பர் வெயிட்டை ஓங்கி அடித்து தன் கரத்தினை விலக்காமல் அழுத்திக் கொள்ளவும் அந்த கண்ணாடி சில்லுகள் மொத்தமும் அவனது உள்ளங்கையை பதம் பார்த்தது.

“நீ பேசுன பேச்சுக்கு உன் வாயைத்தான் உடைச்சுருக்கணும். ஆனால் முடியலடி.. என்னைக் காயப்படுத்துற விஷயத்துல மட்டும் எப்படிடி நீ அவங்ககூட கூட்டுச் சேர்ந்துக்கிடுற” கையை உதறிவிட்டு அவன் பேச வழிந்த இரத்தம் அவள் மீது பட்டுத் தெறித்தது.

“பையித்தியமா ருத்ரா நீ”

“இன்னும் கொஞ்ச நாள்ல ஆகிடுவேன் எல்லாருக்கும் அதுதானே சந்தோஷம். உனக்கும் நான் வேண்டாம்தானே. நீ கிளம்பு கிளம்புடி.. “

 

வேண்டாம் வேண்டாம் என்று சொன்னவளை இழுத்து வந்ததே அவன்தானே என்பதை அறியாதவனாய் அவன் அவளிடமே தன் கோபம் மொத்தத்தையும் காட்டினான்.

 

இப்போது கைவழியே அதிக அளவில் இரத்தம் வழிய உடனே சரவணனுக்கு அழைத்தாள்.

 

அவன் வரும் வரை அவனது அதீத புலம்பல்களை கேட்க வேண்டியிருந்தது.

“நீ போடி. எனக்கொன்னும் நீ தேவை இல்லை” என்றுதான் விடாமல் அவனும் புலம்பிக் கொண்டிருந்தான்.

 

சரவணன் வந்து அவனது கையைப் பார்த்ததும் சப்பென கன்னத்திலேயே அறைந்தான்.

“என்னடா பண்ணி வச்சுருக்க?” கையை பிடிக்க வர அவனோ “நீ உன் வேலையைப் பார்த்துட்டுப் போ” என்றான் இவன் கையைக் காட்டாமலேயே.

“ப்ளட் இவ்வளவு போகுதுடா பாவி”

“போகட்டும் எனக்கென்ன?”

“உனக்கென்னவா? உன்னை நம்பி இப்போ உன்னோட பசங்க இரண்டு பேர் இருக்காங்க அது உனக்கு ஞாபகம் இருக்கா?”

 

அதைச் சொன்னதும் அவன் மறுக்காது கையை நீட்ட உமா ருத்ரனை முறைத்துக் கொண்டே நின்றிருந்தாள்.

 

இங்கேயே இருந்தால் அவனை ஏதாவது பேசிவிடுவோம் என்றெண்ணி அவள் கடைக்குள் நகர்ந்தாள்.

“உமா கடைக்குள்ள எல்லாம் போகாத. உனக்கு ஒரு மாதிரி இருக்கும்” அவன் சொல்ல அதைக் கேட்டால்தான் அவள் உமா இல்லையே..

 

அவள் பாட்டுக்கு வெளியேறியிருக்க “இவளை.. ச்சே என் பேச்சைக் கேட்கக் கூடாதுன்னே அம்புட்டையும் பண்ணுறா?” என சடைத்துக் கொண்டவன் வலியை பல்லைக் கடித்துத் தாங்கிக் கொண்டான்.

“இப்படியெல்லாம் பண்ணுறது சரியே இல்லை ருத்ரா. இன்னும் க்ளாஸ் பீஸஸ் உள்ள இருக்கும்னுதான் தோணுது. நீ ஹாஸ்பிட்டல் வா மொதல்ல” என அவன் சொல்ல “இதெல்லாம் ஒன்னுமே இல்லைடா. ஆனால் நான் நேசிச்சவங்க எல்லாருமே எனக்கு எதிரா இருக்குறதுதான் ரொம்பவே வலிக்குதுடா சரவணா” என்றான் வேதனையுடன்.

“அந்த நிலைமைக்கு காரணம் நீதான் ருத்ரா. நான் இதுல உமாவைத் தப்பு சொல்லவே மாட்டேன். தங்கச்சி இந்ந நிலைமையிலயும் உனக்கொன்னுன்னா பதறிட்டு நிக்குதே அதுவே சொல்லுது உன் மேல எவ்வளவு காதல் இருக்குன்னு. ஆனால் உனக்கு இருந்ததா தங்கச்சி மேல” நிதானமாக வினவினான் சரவணன்.

“இல்லாமலா அவதான் வேண்டும்னு கட்டுனேன்”

“கட்டுனதோட உன்னோட காதலுக்கு நீ கிளைமேக்ஸ் எழுதிட்ட ருத்ரா.. அது உனக்கு இன்னும் புரியல. உன்னைப் பொறுத்தவரை காதலிச்சோம் கல்யாணம் பண்ணோம் அவ்வளவுதான். அந்த கல்யாணத்துல உமாவுக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த பட்ச மரியாதையைக் கூட நீ வாங்கித் தரலை. அப்பறம் எப்படி அதைக் காதல்னு நீ அடையாளப்படுத்துற”

 

அவனை குற்றம் சாட்டினான் சரவணன். ருத்ரன் நண்பனை ஏறிட்டான். தான் என்ன செய்தாலும் ஆதரவு தரும் நண்பன் இவன்தானா என்ற ஐயம் அவனிடம் இருந்தது.

 

அவனது பார்வை கேட்கும் கேள்வி புரிந்தாலும் சரவணன் பேச வேண்டியதை பேச ஆரம்பித்தான்.

 

“அந்த பொண்ணுதான் வேண்டும்னு வீட்டுல பேசி கல்யாணம் பண்ணது எல்லாம் சரி ருத்ரன். அந்த பொண்ணை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வர்றோமே அவ அங்க எப்படி இருக்கா. அவளுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா என்னென்னு நீ விசாரிச்சுருக்க வேண்டாமா?”

 

“உன் தங்கச்சிக்கு வரிஞ்சு கட்டிட்டு வக்காலத்து வாங்குறயே அவ வாயைத் தொறந்து எதையாவது என்கிட்ட சொல்லியிருக்காளாடா? வீட்டுல இருக்குற பிரச்சனையை அவ சொல்லாமல் எனக்கா எப்படித் தெரியும். என் அம்மாவுக்கு இவளைப் பிடிக்கவே பிடிக்காதுங்கிறதே அவ போனதுக்கு அப்பறமாத்தான் எனக்கேப் புரிய வந்தது”

“இரண்டு வருஷமா உமா உன்கூடவேதான் வீட்டுல இருக்குது. அந்த வீட்டோட மூத்த மருமகளா எல்லாத்தையும் அவ பார்த்துருக்கா. அப்படி இருக்க நீ இப்படிச் சொல்லுறது உனக்கே அசிங்கமா படலை. அப்போ நீ உமாவை எந்த இடத்துல வச்சுருக்க. உன் அம்மாவை இதுவரைக்கும் எந்த இடத்துலயாவது விட்டுக் கொடுத்துருக்கயா.. உமாகிட்ட கூட நீ விட்டுக் குடுத்தது இல்லைதானே.. எனக்குத் தெரியும் மண்டபத்துலயே பார்த்தேனே. உன் அம்மா பேசினதுக்கு பதில் பேச வந்த உமா கையைப் பிடிச்சு நீ அழுத்துனதை.. அப்போ கொடுத்த அழுத்தத்தைத் தான் நீ இன்னமும் கொடுத்துட்டே இருக்கடா” உண்மையை புட்டு புட்டு வைத்தான் மருத்துவன்.

“அப்போ தப்புலாம் நான்தான் பண்ணேனா”

“ஆமா” சரவணன் வாயால் அதைக் கேட்க கைவலியை விட மனம் அதிகமாக வலித்தது.

 

எதுவும் பேசாமல் அமைதியாக அவன் இருக்க சரவணன் மெல்ல “அவளை அவங்க வீட்டுல விட்டுடேன். குழந்தை விஷயம் உங்களுக்கு இருக்குற பிரச்சனையைத் தீர்த்துடும்னு நான் நினைச்சேன். நீ இப்படி நடந்துக்கிறது குழந்தைங்களை சுமந்துட்டு இருக்குற பொண்ணோட மனநிலையை ரொம்பவே அபெக்ட் பண்ணும்னு இப்போ புரிஞ்சு போயிடுச்சு. நான் உடனே ஆத்விக்கு போன் பண்ணுறேன் டா. அவன் வந்து உமாவைக் கூட்டிட்டு போகட்டும்” என்றான்.

“உமாவை எங்க அனுப்பலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்க டாக்டர்”

அவளது கேள்வியில் திரும்பினான் அவன்.

“சொல்லுங்க டாக்டர்”

“உங்க அம்மா வீட்டுக்குத்தான் மா”

“ஏன் டாக்டர்?”

“உன்னோட ஹெல்த் கண்டிஷன்..”

“ப்ச் நான் நேத்தும் இதே ஹெல்த் கண்டிஷனோடு தான் உங்க கிளினிக் வந்தேன். உடனே உங்க தோஸ்த்துக்கு போன் பண்ணி என்னை டென்ஷன் பண்ணதே நீங்கதான். இன்னைக்கு என்ன புதுசா அக்கறை?”

“அது உமா “

“நான் இருந்தால் உங்க நண்பருக்கு ஏதாவது ஆகிடும்னு பயப்படுறீங்க அப்படித்தானே”

 

ஒருவகையில் அதுவும் உண்மைதான். அதனால் அவன் மௌனமாக அவளை ஏறிட்டான்.

“அவனோட உசுருக்கு என்னால எல்லாம் எதுவும் ஆகிடாது. நீங்க கவலையேப் பட வேண்டாம் டாக்டர். அண்ட் நான் எங்கேயும் கிளம்பப் போறது இல்லை. இப்பவாவது என்னோட உரிமையை நான் எடுத்துக்கணும்னு நினைக்கிறேன். இத்தனை நாளும் எதுவும் பேசிடக் கூடாதுன்னு நான் நினைச்சு அமைதியாய் போனதுக்கு நிறைய அனுபவிச்சுட்டேன். அந்த வலியெல்லாம் எல்லாருக்கும் திருப்பித் தரணும்னு தோணுது. இல்லைன்னா என் பசங்க  கூட என்னை எல்லாம் மதிக்க மாட்டாங்க. அப்பறம் உங்க ப்ரண்ட்க்கு தலையில அடிப்பட்டதுல நிறைய விஷயத்தை மறந்துட்டாருன்னு நினைக்கிறேன். அதான்.. நேத்து என்னை வலுக்கட்டாயமாக இழுத்துட்டு வந்தது அவர்னே மறந்துட்டு இப்போ என்னை விட்டுட்டு போயிடுன்னு புலம்புறார். கிளினிக் கூட்டிட்டுப் போயிட்டு எதுக்கும் ஒரு சிடி ஸ்கேன் எடுத்துடுங்க. மூளை எல்லாம் குழம்பி போயிருக்கப் போகுது” இவையனைத்தையும் அவள் சரவணனைப் பார்த்தே சொல்ல

“உமா என்னைப் பார்த்துப் பேசுடி” என்றான் ருத்ரன்.

“போயிட்டு வாங்க நிறைய பேசலாம். அதுவரைக்கும் நான் இங்கயே இருக்கேன். இந்த உரிமையை எல்லாம் தூக்கிக் குடுத்துடலையே..” அவள் கண்களைச் சுருக்கிக் கேட்டாள்.

“உமா அது வந்து” சரவணன் வாய் திறக்க “சரவணா எதுவும் பேசாத.. வா போகலாம்” என அவன் வாய் பொத்தி அழைத்துச் சென்றான் இவன்.

வெளியே,

“நீ தப்பு பண்ணுற ருத்ரா. பாவம்டா உமா. இந்த பாவம் எல்லாம் உன்னை சும்மா விடாது டா. இதுதான் உண்மையின்னு சொல்லி உமாகிட்ட மன்னிப்பு கேளுடா. உமா மன்னிச்சுடும்டா”

“அதெல்லாம் முடியாது. நான் இப்படித்தான். இதுக்காக ஃபீல் பண்ணினால் பண்ணிட்டே இருக்கட்டும்”

 

“அப்போ சொன்னேன் நீ லவ் பண்ணுறதை ஸ்டாப் பண்ணிட்டன்னு. அதை உண்மையின்னு ப்ரூப் பண்ணிட்ட பார்த்தியா?”

என்ற போது அவனுக்கு டார்லிங் என்ற பெயரில் இருந்து அழைப்பு வந்திருக்க அதை எடுத்த வேகத்தில் சரவணனிடம் இருந்து விலகி சென்று பேசினான்.

“என்னாச்சு. வர்றேன்னு சொன்னீங்கள்ல” எடுத்த உடனே எதிர்ப்பக்கம் இருந்து குரல் வந்தது.

“அதுக்குள்ள உமா என்கூடவே கிளம்பி வந்துட்டா. இன்னைக்கு மீட் பண்ண முடியாதுன்னு தான் நினைக்கிறேன்”

“அதெல்லாம் முடியாது நீங்க வந்துதான் ஆகணும்”

“ப்ச் டார்ச்சர் பண்ணாத”

“யாரு நானா? இதுக்கு முன்னாடி எல்லாம் நான் வேண்டாம்னா கூட வந்து பார்த்துட்டுப் போவீங்க. இப்போ என்ன? என்னை அவாய்ட் பண்ண நினைக்குறீங்களா?”

“அடச்சே உடனே டிராமாவை ஆரம்பிச்சுடாத. கையில வேற அடிபட்டுருக்கு. நான் சரவணன் கூடத்தான் போயிட்டு இருக்கேன்”

“அய்யோ அப்போ நான் கிளினிக்கே வர்றேன்” என்று அவனிடம் சொல்ல “ஏற்கனவே இவன் வேற பயங்கர எரிச்சல்ல இருக்கான். நீ வந்தால் அவனே என்னை கொலை பண்ணிடுவான். வேண்டாம்” என்றான்.

 

“நான் வருவேன்” என்றதோடு அழைப்பு நின்றுவிட “இங்கிட்டு இவ தொல்லை அங்கிட்டு அதொரு தொல்லை. இதுங்களுக்கு மத்தியில.. டேய் ருத்ரா ரொம்ப கஷ்டம் டா..” மேலே பார்த்துப் புலம்பிக் கொண்டே நகர கண்ணாடி வழியே உமா அவனைத்தான் பார்த்தபடி நின்றிருந்தாள்.

 

மருத்துவமனையில் அவனது காயத்தினை சுத்தம் செய்து கட்டுப் போட்ட பிறகு சரவணனுடன் பேசியபடியே வெளியே வந்த ருத்ரன் மீது மோதி ஆத்விக் நின்றான்.

“அட மச்சி” சிரிப்புடன் பார்க்க அவனோ கையைப் பார்த்துவிட்டு “உனக்கெல்லாம் இது தேவைதான்டா” எனச் சொன்னான்.

“உங்க அக்காகிட்ட அடிவாங்கிட்டு வந்து நிக்குற மாமனுக்கு ஆறுதல் சொல்லணும் மச்சான். ஆறுதல்னா எப்படித் தெரியுமா? நேத்து நான் குடுத்ததை திருப்பிக் கொடுத்து ஆறுதல் தரணும். எங்கே கொடு பார்க்கலாம்”

“உன் வாயிலயே அடிச்சுருக்கணும் எங்க அக்கா”

“நீ வேணும்னா அந்த வாயை அடையேன் மச்சான்..” என அவனை நோக்கி நகர “அய்யே ச்சீ” என நகர்ந்தான் அவன்.

 

ருத்ரனின் சேட்டையைப் பார்த்தவன் “பையனைக் கூட விட்டு வைக்க மாட்டயா நீ” என்றவன் ஆத்விக்கிடம் “என்ன ஆத்விக்?” என்றான்.

“அக்காவோட ஹெல்த் கண்டிஷன் இப்போ ஓகேவா‌? நாங்க அவளை கூட்டிட்டு பெரியம்மா ஊருக்குப் போறதா இருக்கோம். அங்க ஒரு விசேஷம். டிராவல் பண்ணலாமா என்னென்னு ஒரு தடவை கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்”

“அவ என்கூடத்தான் இருப்பேன்னு சொல்லிட்டா”

“டாக்டர் நீங்க சொல்லுங்க? நான் உங்ககிட்ட தான் கேக்குறேன்”

“ரொம்ப பண்ணுற மச்சான் நீ. நான் பேசிட்டு இருக்கேன் நீ என்னடான்னா அவன்கிட்ட பேசிட்டு இருக்க. உனக்கு வாங்குனது எல்லாம் பத்தாது போலயே” என்றபோதே கன்னத்தினை துடைத்துக் கொண்டான் ஆத்விக்.

மறக்குமா மாமன் எண்ணம்.. மயக்குதே பஞ்சவர்ணம்

மடியிலே ஊஞ்சல் போட

மானே வா..

இஞ்சி இடுப்பழகி…கா.. ஆ..

ருத்ரன் அவனையே பார்த்து பாட்டும் பாட “யோவ் உன்னை இப்போ நொறுக்க போறேன் பாரு..” கடுப்போடு கத்தினான்.

“நொறுக்கிக்கோ, இறுக்கிக்கோ, என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ” ருத்ரன் சிரித்தான். வலியெல்லாம் இப்போது மாயமானது போலிருந்தது.

“டேய் இதையெல்லாம் நீ உமாவைப் பார்த்துச் சொல்லணும். இங்க பாரு ஆத்வி. இப்போதைக்கு டிராவல் எல்லாம் வேண்டாம். அவங்க இங்கேயே இருக்கட்டும். உமாகூட ஏதோ முடிவு பண்ணிட்டுத்தான் இந்த தறுதலை கூட இருக்கான்னு புரியுது”

“அவ பையித்தியம் மாதிரி என்னென்னவோ பண்ணிட்டு இருக்கா டாக்டர். அதான் அவளை இங்க இருந்துக் கூட்டிட்டுப் போயிடலாம்னு பார்த்தேன். இந்த ஆள் மூஞ்சுலயே முழிச்சுட்டு இருந்தால் அந்த பையித்தியம் ஜாஸ்தி தான் ஆகும்”

 

“அப்போ நீயும் வந்து கூடவே இரு” என இவன் சரசமாக பேசியபடி அவன் தோளில் கைபோட அங்கோ அவள் கடையில் வேலை செய்துக் கொண்டிருந்த பழனிச்சாமி என்பவரிடம் பேசியபடி நின்றிருந்தாள்.

அவரிடம் பேசியதில் இருந்து அவளுக்கு நெஞ்சே வலிப்பது போல்தான் இருந்தது. மீண்டும் மீண்டும் அசை போட்டபடி இருந்தவள் ருத்ரன் மண்டையை பிளக்க வேண்டும் போல் ஆத்திரம் வர அதை அடக்கிக் கொண்டு அவன் வருகைக்காக காத்திருந்தாள்.

 

புயல் தாக்கும்..

 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
21
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்