
அன்றுதான் அவளுக்கு கடைசி பரீட்சை. அதை எந்தவித பிரச்சனையும் இன்றி நல்ல விதமாகவே எழுதி முடித்துவிட்டு வெளியே வந்தாள்.
அவளை நோக்கி வேகமாக ஓடி வந்தால் மேகனா. “ஹே நில்லுப்பா ஒரு நிமிஷம் நில்லு” என்ற கத்தலுடன் அவளை பிடித்து நிறுத்த, என்ன என்பதை போல் பார்த்தால் ஆதனி.
“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்பா எப்படி சொல்றதுன்னு தெரியல. நான் சொல்றேன், என்ன தப்பா எல்லாம் எடுத்துக்க மாட்ட தானே” என்று அவளைப் பார்த்து கேட்க, அதற்கு ஆதனியோ ஒரு பதிலும் சொல்லாமல் அவளையே மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அது அது நேத்தே சொல்லணும்னு நினைச்சேன் பா ஆனா சொல்ல பயமா இருந்துச்சு இன்னிக்கு உன் கிட்ட சொல்லல நான் அது தப்பா ஆகிடும். நேத்து நீ மாட்டினதற்கு காரணம் நான் தான்” என்று கசங்கிய முகத்துடன் சொன்னாள்.
ஆனால் அதற்கு அவள் பதில் கொடுக்கும் முன்னே “என்னது”என்ற ஒரு ஆணின் குரல் கேட்டது.
அங்கே வேற யார் நிற்பார்கள், அதே குரு பிரசாத் தான். இவனுக்கு மட்டும் எப்படி தான் தெரியுமோ என்று தெரியவில்லை ஆதனிக்கு ஏதாவது ஒன்றென்றால் அவளுக்கு முன்பே இவனுக்கு மூக்கு வியர்த்து விடுகிறது.
“வாட் இஸ் திஸ் மேகனா. நான் இதை உன்கிட்ட இருந்தது எதிர்பார்க்கல. நீ எவ்வளவு நல்லா படிக்கிற பொண்ணு, உனக்கு எதுக்கு இது மாதிரி வேலை எல்லாம். அதுவும் உன்னால இன்னொரு ஸ்டுடென்டிற்கு பாதிப்பு என்று தெரிஞ்சும் சைலன்ட்டா இருந்திருக்க. உனக்கு நீ மட்டும் நல்லா இருந்தா போதுமா? இதோ நிக்கிற இவளுக்கு இவளுக்காக கூட அங்க பேச தெரியாமல் அழுதுகிட்டு இருந்தா, நான் மட்டும் அந்த நேரத்துக்கு சரியா போய் அந்த சீட்டை பாக்கலைன்னா இந்த நேரம் இவ்வளவு காலேஜ விட்டே வெளியே அனுப்பி இருப்பார்கள்.
அந்த கையெழுத்தை வச்சு மறுபடியும் கிளாஸ் புல்லா செக் பண்றதா தான் இருந்தாங்க. ஆனா அதுக்கு அப்புறமா நான் பேசி எக்ஸ்கியூஸ் வாங்கி இருக்கேன். ஆனா நான் இதை உன்கிட்ட இருந்து எதிர்ப் பார்க்கவில்லை” என்று அவளை கடுமையாக திட்டியவன், பின் கூட நிற்கும் ஆதனியை ஒரு கோப பார்வை பார்த்துவிட்டு முன்னோக்கி சென்றது விட்டான்.
ஆதனி மனதில் ‘இப்ப நான் என்ன செஞ்சுட்டேன் இவர் என்ன கோவமா பாத்துட்டு போறாரு’ என்று அவள் புரியாமல் முழித்துக் கொண்டு நின்றாள்.
அன்றிலிருந்து பத்து நாட்களுக்கு கல்லூரி விடுமுறை. இந்த செமஸ்டர் எப்பொழுதும் அவர்களுக்கு விடுமுறை சில நாட்களோ அல்லது வாரங்களோ தான் இருக்கும். அடுத்த செமஸ்டர் லேட்தான் ஒன்றரை மாதம் இருக்கும் இதுவே மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பான விஷயம் தான்.
அங்கே அவரவர் தோழிகள் எங்கள் கூட புலம்பிக்கொண்டே சென்றிருந்தார்கள் ஒரு வாரத்தில் என்ன செய்ய முடியும் என்று.
எப்பொழுதும் போல் கல்லூரியில் இருந்து பேருந்து நிலையத்திற்கு நடந்து வர, அவள் ஏரும் பேருந்து வர இன்னும் 15 நிமிடங்கள் இருந்தது. ஆனால் மனம் முழுவதும் பயம் அப்பி இருந்தது. எங்கே கணேஷ் வந்து சண்டை போட்டு விடுவானோ, எதாவது தகராறு நடந்து விடுமோ, தன்னை மீண்டும் அந்த நரகத்திற்கு இழுத்து சென்று விடுவானோ என்று பயம் மட்டுமே இருந்தது.
சிறிது நேரத்திலேயே அவள் ஏரும் பேருந்தும் வந்துவிட உள்ளே வேகமாக ஏறிக் கொண்ட அவள் கண்கள் உள்ளே இருக்கும் நபர்களை ஒரு முறை பார்த்துக் கொண்டது அவளையும் மீறி.
அப்பொழுதுதான் அவளிடம் ஒரு ஆஸ்வாசமான நிம்மதி கிடைத்தது. அவளுக்கு தெரியும் அந்த நிம்மதி தற்காலிகமானது மட்டுமே என்று, இருந்தும் இந்த நிம்மதியை தான் மனம் தேடிக் கொண்டு இருக்கிறது.
அவள் அறியாத ஒன்று இரண்டு நாட்களாகவே குருவின் கண்கள் எங்கே இருந்தாலும் இவளின் மேலே தான் இருக்கிறது என்றும் இவளின் பாதுகாப்பிற்காக மட்டுமே காலையும் இவள் பின்னே தான் வந்தான், இதோ இப்பொழுதும் இவள் பின்னே தான் வண்டியில் சென்று கொண்டிருக்கிறான்.
அவ வீட்டுக்குள் பத்திரமாக சென்றதை தெரிந்து கொண்ட பின் தான் அவனே அவன் வீட்டுக்குள் சென்றான்.
மாலையும் வந்து மஞ்சள் வானம் இருள் பூசிக் கொள்ள ஆரம்பித்தது.
‘ஆரா நீ ஸ்ட்ராங் தான் திரும்ப உன்னால உன்னோட கடந்த காலத்தை திரும்பி பார்க்க முடியும். உன்னோட பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கவாவது நீ திரும்ப அதை எல்லாம் பார்த்து தான் ஆகனும். உன்னால என்ன நடந்தது என்று அவங்க கிட்ட சொல்ல முடியும். கண்டிப்பா முடியும்’ என்று தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து சொல்லிக்கொண்டு இருந்தவள் விழி பின்னே உடம்பு முடியாமல் படுத்து கிடக்கும் தன் ஆத்தாவின் மேல் விழுந்தது.
நேற்று கணேசன் தன்னை இழுத்துக்கொண்டு சென்றதில் தன்னால் என்ன செய்ய முடியும் என்று பயந்தவர், பயத்தோடு மட்டும் இல்லாமல் ஜூரத்தையும் சேர்த்து வாங்கி கொண்டார். அவர் வயதுக்கு சற்று அவதியகவே இருக்கிறது.
மெதுவாக வீட்டை விட்டு வெளியே வந்தவள், யாரவது ரோட்டில் இருக்கிறார்களா என்று நோட்டம் விட்டு, யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டே வெளியே வந்தாள். எதிரே இருக்கும் வீட்டின் தூரம் அவ்வளவு பெரியதாக இல்லை என்றாலும் கடக்கும் இவளுக்கு தூரம் பெரியதாக இருக்காதா என்றே தோன்றியது.
சீக்கிரம் சென்று விட்டால் அவளின் கடந்த காலமும் அவள் முன்னே வந்துவிடுமே. அந்த பயம் தான்.
கேட்டை திறந்து உள்ளே போக ஆள் நடமாட்டம் இருப்பது போல் தெரியவில்லை. பார்க்கிங் ஏரியாவை பார்க்க அங்கே குருவின் வண்டி இருந்தது. அதில் நம்பிக்கை வந்து ‘மேலே தான் இருப்பான்’ என்ற எண்ணத்தில் மேலே வந்தாள்.
அங்கே ஒரு புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டு இருந்தான் குரு பிரசாத். இவளை பார்த்ததும் “என்ன இந்த பக்கம், ஓ… ஒரு வழிய உன் கதையை சொல்ல வந்துட்டியா” என்று மெலிய சிரிப்புடன் கேட்க,
அவனை பார்த்தவள் கண்களை இறுக மூடிக்கொண்டு “சொல்ல கூடாதுனு நான் என்றைக்கும் நினைச்சதே இல்லை. நீங்க கூட இருக்கிற வரை என் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வரல. நீங்க போனதுக்கு அப்பறமா கூட கொஞ்சம் நாள் நல்லா தான் இருந்தோம்” என்று சொல்லிக்கொண்டு இருந்தவள் கண் முன்னே அப்பொழுதோ நடந்த நிகழ்வுகள்…..
“ஹே சங்கரி எங்க அந்த கொழுப்பெடுத்த சிறுக்கி, படிச்சி பாஸ் பண்ண வக்கு இல்லை இதுல எனக்கு அது வேண்டும் இது வேண்டும்னு வக்கணையா கேக்க மட்டும் தெரியுதோ? எனக்கு நம்பிக்கை எல்லாம் சுத்தமா இல்ல, இவ எங்க இருந்து பரீட்சையில் தேர போற?” என்று கோபகமா கேட்க,
“கண்டிப்பா தேறிடுவாங்க நீங்க கவலை படாதீங்க” என்ற சங்கரிக்கு என்றும் அவரின் கணவன், கோபாலன் தான் முதன்மை.
ஆம் பிள்ளையை விட கணவனே அவளுக்கு முக்கியம். பல வருடங்களாக குழந்தை பேறு இல்லாமல் தவிக்கும் போது, சுற்றம் அவர்களில் காயத்திற்கு மருந்தாக இல்லாமல் மேலும் காயத்தை கீறி விட்டு வேடிக்கை பார்த்தனர்.
எத்தனையோ முறை கோபாலனிடம் குழந்தைக்காக அடுத்த கல்யாணம் செய்து கொள்ள சொல்லும் பொழுது, அவர் அன்றைக் கூறிய ஒரு வார்த்தை தான் இன்றுவரை உழைக்காமல் உண்டு கொண்டிருக்கிறார்.
“புள்ள முக்கியம் தான் ஆனா அதை விட எனக்கு என் பொண்டாட்டி முக்கியமே. இல்லாத ஒரு உசுருக்காக உயிரோடு இருக்கிற என்னுடைய உசுர கஷ்டப்படுத்த முடியாது. புள்ளை இல்லாம கூட இந்த கோபால் வழ்ந்துடுவான். ஆனால் பொண்டாட்டி இல்லாமல் வாழ முடியாது” என்று கூறிய வார்த்தைகள் மட்டுமே இன்றுவரை சங்கரியின் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும்.
பல வருட தவத்திற்கு பிறகு கருவுற்றிருந்தாள் சங்கரி. கோபாலன் ஆண் மகவை எதிர்ப்பார்த்து இருக்க, பிறந்ததோ பெண்ணவள். அன்று தொடங்கியது இந்த வெறுப்பு. பெண்ணாக பிறந்ததால் உண்டான வெறுப்பு அல்ல. தன் எதிர்பார்ப்பு பொய்யனாதால் உண்டான வெறுப்பு.
அந்த வெறுப்பு ஒவ்வொரு விஷயத்திலும் வெளியே வந்துவிடும். கணவனின் கோபத்தை இவள் அதிகம் ஆக்குகிறாளே என்று, தன் மகளின் மேல் அவளும் கோபத்தை வளர்த்துக் கொண்டாள்.
இதில் ரொம்ப பாவமானது யார் என்றால் அவர்கள் பெற்ற மகள் தான். தாய் தந்தை பாசத்தை முழுவதுமாக அனுபவிக்காமல் தனியே கஷ்ட்டப்படுகிறாள்.
தற்பொழுது மொட்டை மாடியில் மடியில் புத்தகங்களை வைத்துக்கொண்டு வாயில் ஒரு பென்சிலை கடித்துக்கொண்டே யோசித்துக் கொண்டிருந்தாள்.
“இந்த வானத்தை அதே மாதிரி அதே கலரில் இந்த பேப்பரில் கலர் பண்ணிட்டா, நான் நாளைக்கு எக்ஸாம்ல பாஸ் பண்ணிடுவேன்” என்று சிரித்துக் கொண்டு அவளுக்கு மிகவும் பிடித்த ஓவியத்தை கையில் எடுத்துக் கொண்டாள்.
பள்ளி படிப்பு வரை அவளுக்கு கவலை இல்லை. அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாள், செலவும் அவ்வளவாக இருப்பதில்லை. ஆனால் பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரியில் சேர வேண்டுமே. இவள் எடுக்கும் மதிப்பெண்களுக்கு அரசு கல்லூரியில் சேர வாய்ப்பு கம்மியே.
ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டதல்ல. படிப்பில் என்றும் அவளுக்கு ஆர்வம் இருந்ததில்லை. வாழ்க்கை பல பாடங்களை கற்பிக்கப்பட்ட பின் தனித்து நின்ற பின்பு தானே படிப்பின் அருமை புரிகிறது.
அழகாக ஒரு ஓவியத்தை வரைந்து குடு குடு என கீழே வந்தவள் தன் அன்னையிடம் “அம்மா இத பாருங்க எல்லாம் இந்த தடவை வானம் அவ்வளவு சூப்பரா வந்திருக்கு” இது கையில் வைத்திருந்த ஓவியத்தை காட்ட,
அவர் அதை கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் கூட பரவாயில்லை, இந்த ஓவியத்தை காகிதமாக கூட மதிக்காமல் அதை சுக்கு நூறாக கிழித்து விட்டு,
“உன்கிட்ட எத்தனை முறை சொல்லி இருக்கேன் இந்த கருமத்தை எல்லாம் பண்ணாம படின்னு உனக்கு பரீட்சையில பாஸ் ஆகணும்னு ஒண்ணுமே கிடையாது நீ உங்க அப்பாக்கு எந்த பெருமையும் வாங்கித் தந்ததில்லை தயவு செஞ்சு இந்த பரிட்சையில் பெயில் ஆயிட்டு போயிட்டு ஒரு தலை குனிய வச்சுடாத” என்று பேசிக்கொண்டே இருந்தவர், கண்டுகொள்ளவே இல்லை அவள் கண்ணில் தோன்றிய வலியை.
கீழே நூறு துண்டுகளாக இருந்த ஓவியத்தை பொறுக்கிக் கொண்டு அவளது சென்றாள் ஆதனி.
அவள் சென்றதை கூட கண்டு கொள்ளாமல் சங்கரியின் புலம்பல்கள் தொடர்ந்து.
“ஐயோ மாசம் பொறக்க இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு வட்டிக்கு கைல ஒத்த பைசா கூட இல்ல. இந்த மனுஷன் வேற நிலைமை புரியாமல் கடன் வாங்கி ஆடம்பரமா இருக்கணும்னு என்னென்னமோ வாங்கி போட்டு இருக்காரு. எதோ இத்தனை நாள் மேல் வீட்டில் குடியிருந்ததால அந்த காசை வைத்து சமாளிச்சிட்டேன். இனி மேல குடி வர வரைக்கும் என்ன செய்யப் போறேன்னு தெரியல, இது எதுவும் அந்த மனுஷனுக்கு புரிய மாட்டேங்குது. இவர் பாட்டுக்கு கடனா வாங்கிட்டு போறாரு, யாரு திருப்பி கட்டுவா? நமக்கு என்ன பையனா இருக்கான்”
என்று இரவு சமையலை செய்ய தொடங்கினார். அவரும் என்னதான் செய்வார் இருக்கும் அனைத்து கோபங்களுக்கும் வருத்தங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் வடிக்கால் ஆக்கிப் போனவள் தானே அவர் மகள்.
நாட்கள் வேகமாக போட்டி போட்டுக் கொண்டு ஓடியது. அன்று மதியம் பொழுதுபோக்கிற்காக டிவியை போட்டுவிட்டு அதிலும் அடுத்தவர் குடும்பத்து சண்டைகளை பார்த்துக் கொண்டிருக்கிறது, அவரின் அலைப்பேசி ஒலி எழுப்பியது.
அதில் “எக்கா எங்க கிடக்கிற, இங்க உன் புருஷன் ரோட்ல மயக்கம் போட்டு விழுந்து கிடக்கிறாரு. பக்கத்துல கிடக்கிற பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்துரு” என்று ஒருவன் தகவல் சொல்ல, பதறி அடித்துக் கொண்டு சென்றாள்.
மருத்துவமனைக்கு உசுரை கையில் பிடித்துக் கொண்டு சென்றவருக்கு, அவர்கள் சொன்ன செய்தியில் இடியே இறங்கி விட்டது அவர் தலையில்.
“இவ்வளவு நாள் இதை கண்டுக்காம இருந்த இருக்கீங்க. இப்ப நோயோட கடைசி ஸ்டேச்சுல இருக்காங்க பேஷன்ட். இவங்களுக்கு வந்து கருத்து எலும்பு மஜ்ஜை புற்று நோய்” என அவருக்கோ ஒன்றும் புரியவில்லை. இத்தனை நாள் சாதரணமாக இருந்த மனுஷன் எப்படி ஒரே நாளில் சீர்குலைந்து போக முடியும் என்ற கேள்வி குறி தான் சங்கரிக்கு பெரிதும் இருந்தது.
டாக்டர் சென்ற பல மணி நேரம் கழித்து தான் கண்களை திறந்தான் கோபாலன்.
பேச முடியாத நிலைமையிலும் தன் கண் முன்னே கண்கலங்கி நிற்கும் மனைவியை கண்டவனுக்கு உள்ளம் பதைபதைத்தது.
மெதுவாக “என்ன மன்னிச்சிடு மா என்னால மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கை சுத்தமா இல்ல. வயசு பொண்ணோட ஒண்ணு தனியா இந்த உலகத்துல விட்டுட்டு போறேன் நினைக்கும் போதே கஷ்டமா இருக்கு” என்றவருக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை மூச்சுத் திணற மெதுவாக கண்களை மூடிக்கொண்டார்.
விஷயம் அறிந்து ஆதினி மருத்துவமனைக வருவதற்கு முன்னே அங்கே வந்து சேர்ந்து இருந்தான் அந்த ஏரியாவின் பிரபல ரவுடியும், வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் வட்டிக்காரன் கணேசன்.
“எனக்கா லட்சக்கணக்குல காச வாங்கிட்டு வட்டியும் கொடுக்காமல் அசலும் கொடுக்காம இங்கு வந்து படுத்துட்டு இருக்கான் உன் புருஷன்” என்று எப்பொழுதும் போல் நக்கல் தொணியிலே ஆரம்பித்தான்.
“தம்பி உன் கணக்கை எல்லாம் பைர்சல் பண்ணனும் தான் பாத்துட்டு இருக்கேன். ஆனா காப்பாற்ற முடியாத ஒரு நோய் வந்து கடைசி கட்டத்துல இருக்காரு இப்ப நான் என்ன பண்ணுவேன்” என்று கலங்கிய கண்களை தன் சேலையின் முந்தானையால் துடித்துக் கொண்டே பாவமாக சொல்ல,
“கேள்விப்பட்டேன் கேள்விப்பட்டேன் இப்பதான் அந்த டாக்டரையும் பார்த்துட்டு வரேன். கொஞ்சம் செலவாகும் போல, ஆப்ரேஷன் பண்ணா பொழைச்சிடுவாருன்னு தான் சொல்லிட்டு இருக்காங்க” தந்திரப் பேச்சுகளால் அவரை தன் பக்கம் இழுக்க முனைந்தான்.
“அப்படியாப்பா” என்றவர், தன் கணவனை எப்படியாவது காப்பாத்திட முடியாதா என்ற ஏக்கம் அவரின் கண்களில் தெரிந்தது.
அதை தான் அவன் தனக்கு சாதகமாக உபயோகித்துக் கொண்டான். அவன் சொன்னதை எல்லாம் அப்போதே அவர் நம்ப ஆரம்பித்து விட்டார்.
“ஆப்ரேஷன் பண்ண நிறைய செலவு ஆகுமே அக்கா. அதுக்கு என்ன பண்ண போறீங்க” என்று நயவஞ்சகமாக கேட்க,
“ஆமா ஆமா செலவு ஆகும் தானே, என்னப்பா ஒரு லட்சம் இரண்டு லட்சம் இருக்குமா?” என்று அவர் கேட்க,
“நீங்க இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க அக்கா அவர் ஒரு ஆப்ரேஷன் செய்ய மட்டும் பத்து லட்சம் ஆகலாம், இங்க ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்கிறது, பெட் சார்ஜஸ், ரூம் அப்படித்தான் பார்த்தா ஒரு அஞ்சு லட்சம் ஆகும் அக்கா” என்று வார்த்தைக்கு வார்த்தை அக்கா என்று அழைத்தே அவரை நிலை குலைய வைத்தான்.
“என்னது 15 லட்சத்துக்கு மேலாகுமா” என்று அவருக்கு அப்போதே கண்கள் இருட்டிக் கொண்டு வர ஆரம்பித்தது.
நாளை என்ற ஒன்றே அவர்களின் அன்றைய ஒரு நாள் வருமானத்தை ஓடுகிறது. இதில் எத்தனை லட்சங்களைச் சொன்னால் அவர்களும் என்ன தான் செய்வார்கள். நன்றாக யோசிக்கும் மூளை கூட மழுங்கி தானே போகும்.
“அதுக்கு தான் அக்கா என்கிட்ட ஒரு வழி இருக்கு. நான் நம்ம பாப்பா ஆதனியை கல்யாணம் பண்ணிக்கிறேன். என் சொத்தே அவளுக்கு தானே, நான் மாமாவோட ஆபரேஷன் செலவை ஏத்துக்குறேன்” என்று உறவு முறையை வைத்து அழைத்தான். அதில் இருந்த அழுத்தம் கண்டிப்பாக நடத்திக் காட்டுவேன் என்றே இருந்தது.
சங்கரி தான் கணவன் என்று வரும்பொழுது யாரையும் பலிக் கொடுக்க தயாராகி விடுவாளே. அவரின் கண்களுக்கு பெற்ற மகள் தெரியவில்லை, அவள் வயது தெரியவில்லை, எதிரே இருப்பவனின் வஞ்சக சொல் புரியவில்லை, அவனின் வயது கண்கள் விழவில்லை, அவள் மூளையில் ஓடிக் கொண்டிருந்தது எல்லாமே கணவனை காப்பாற்றி விட வேண்டும் என்பது மட்டுமே.
இதில் பலியாகி போனது ஆதனியின் வாழ்க்கை தான்.
நிகழ்காலத்தில் குரு “உங்க அம்மாவுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. வாழ்ந்த மனுஷனுக்காக வாழ வேண்டிய உன்னைய பலி கொடுத்து இருக்காங்க. உன்மையாலுமே அவங்க உன்னை பெற்ற அம்மாவா. என்னால நம்பமுடியவில்லை” என்று அதிர்ச்சியுடன் கேட்க,
அதற்கு கசந்த புன்னகை மட்டுமே அவளின் பதில்.
அவள் மனதில் தோன்றியது ஒன்றே. இதற்கும் மேல் நடந்ததை சொன்னால் இவனின் மனம் எப்படி தாங்கும் என்பது மட்டுமே. அவள் வாழ்வின் கசப்புகள் தான் எவ்வளவோ???
