
நேசம்-20
மழைவரும் அறிகுறித் தெரிந்தது. கழுவி விட்ட நீலக்கல் தரையாய் வானம் ஒரே நிறத்தை உள்வாங்கி நின்றது. தாங்கள் தங்கியிருந்த திருமண மண்டபத்தின் மொட்டை மாடியில் நின்று, நட்சத்திரமில்லாத வானத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அழகுநிலா.
பிறைநிலா தன்னந்தனியாய் வான் உலா சென்று கொண்டிருந்தது. இரவின் அந்த அமைதியான சூழல் அவளுக்கு நிரம்பவும் பிடித்திருந்தது. அதிவீரன் அவர்களின் நிச்சயதார்த்தம் அன்று அணிவித்த வைர மோதிரம் அவள் விரலில் நட்சத்திரமாய்ப் பளிச்சிட்டது.
விஷேஷத்திற்குத் தேவையான நாற்காலிகள் வந்து இறங்கியிருக்க, ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நாற்காலியின் உச்சியில் அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டிருந்தாள் கீர்த்தனா. விடிந்தால் திருமணம் என்னும் நிலையில், அழகுநிலாவின் திருமணத்திற்காக வந்திருந்தாள் கீர்த்தனா.
“அழகி! நீ நிஜமாவே கதிரு மாமா கிட்டே பேசுறது இல்லையாடி?” எனக் கேட்டாள் கீர்த்தனா.
‘இல்லை’ எனும் விதமாய் இடவலாமாய்த் தலையாட்டினாள் அழகுநிலா.
“ஏன்டி? இப்போதேன், உங்க மாமா நல்லாத்தானே இருக்கு. வேலைக்கெல்லாம் போகுதே! அப்பறமும் ஏன்டி?”
“எனக்குப் பேசணும்ன்னு தோணலை டி கீர்த்தனா! அன்னைக்கு மாமா ஃபோனில் இருந்து வந்த மெஸேஜைப் பார்த்துப் பயந்துட்டேன் டி! நிஜமாவே மாமாவுக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்னு தான் நினைச்சேன். அப்போதான் மாமா ஃபோன் பண்ணிச்சு. நம்ம மாமாதானேன்னு விடியாத காலை நேரத்தில், வெளியே போனேன். ஆனால் அது என் முகத்தில் மயக்க மருந்த ஸ்பிரே பண்ணி.. என் நம்பிக்கையைச் சுத்தமா உடைச்சுருச்சு. அப்பறம் எப்படிப் பேசச் சொல்லுற?” எனக் கேட்டாள் அழகுநிலா. கதிர் மீதான அவளுடைய கோபம் துளி குறையாமல் அப்படியே தான் இருந்தது.
“உங்க அண்ணே ஏன்டி இப்படி இருக்கு? நானும் பார்த்துட்டே தான் இருக்கேன். உனக்குச் செய்யணும்ன்னு சொன்னாலே மூஞ்சியைத் தான் தூக்குது!”
“அவன் அப்படித்தான்டி! சின்ன வயசில் இருந்தே அப்படித்தான். நான் பொறந்து அவனுக்குக் கிடைக்க வேண்டிய எல்லாப் பாசத்தையும் வாங்கிக்கிட்டேன்னு அவனுக்கு ஒரு எண்ணம். நான் அதையெல்லாம் கண்டுக்கிறது இல்லை டி! கல்யாணம் முடிஞ்சதும், அவன் சென்னைக்குக் கிளம்பிருவான்.!” என அனைத்தையுமே சாதாரணமாய் எதிர்கொண்டு கடக்கப் பழகியிருந்தாள் அழகுநிலா.
“இதையெல்லாம் பேசாதே டி கீர்த்தனா!” என அழகுநிலா சொல்லவும்,
“அப்பறம் உங்க ஆளு என்ன சொல்றாரு?” எனக் கேட்டு கண்சிமிட்டி சிரித்தாள்.
“அவங்களெல்லாம் எதுவும் சொல்லலை டி!” கீர்த்தனாவின் முகத்தைப் பார்த்து பேசாது, எங்கேயோ பார்த்து அவள் பேசுவதைப் பார்த்ததும் சத்தமாகச் சிரித்தாள் கீர்த்தனா.
“எதுவும் சொல்லாமல்தேன் வெட்கம் வருதாக்கும்? எங்குட்டோ சந்தோஷமா இருந்தால் சரிதான் டி! உன் முகம் முன்னை விட இப்போ அழகா இருக்குடி அழகி. உன் மனசில் இருக்கிற சந்தோஷம் உன் முகத்தில் தெரியுது டி! எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு தெரியுமா?” எனக் கீர்த்தனா சொல்ல, அழகுநிலாவின் முகத்தில் நாணப் பூக்கள் பூத்தன.
“எத்தனை நாளுடி லீவு போட்டுருக்க.? மண்டோதரி உனக்கு லீவு கொடுத்துச்சா?”
“கொடுத்தாங்க டி! சனி ஞாயிறு சேர்த்து பத்து நாளுதேன் குடுத்துருக்காங்க! எக்ஸாம் டைம் லீவும் போட முடியாது டி! நான் இல்லாட்டி என் புள்ளைங்க தவிச்சு போயிருங்க பாவம்.!”
“நீ கவலைப் படாதே டி! அப்பப்போ நானும் உன் பிள்ளைகளைப் பார்த்துக்கிறேன். நல்லா லீவை என்ஜாய் பண்ணிட்டு பொறுமையாய் வா!” எனக் கீர்த்தனா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அழகுநிலாவின் அலைபேசி அழைத்தது.
“கீர்த்தனா! அத்தைதேன் பேசுறாங்க! நான் பேசிட்டு வர்றேன். நீ சாப்பிடப் போடி!” எனக் கீர்த்தனாவை அனுப்பியவள் அழைப்பை ஏற்றுப் பேசத் துவங்கினாள்.
இப்போதெல்லாம் அழகுநிலா அதிவீரனுடன் பேசுகிறாளோ இல்லையோ, அவன் அன்னை மாதவியுடன் மணிக்கணக்கில் பேசுவது வாடிக்கையாகியிருந்தது.
“அத்த!” சன்னக் குரலில் அவள் விளிக்க,
“விடிஞ்சா கல்யாணம்! நாளைக்கு இந்நேரம் நீ நம்ம வீட்டில் இருப்ப நிலாம்மா!” எனப் பேச்சைத் துவங்கினார் மாதவி.
“சாப்டீங்களா அத்த? உங்க மயன் வந்துட்டாரா.? தாலி கட்டவாச்சும் வருவாரா.? இல்லையா?” எனக் கோபமாய்க் கேட்டாள் அழகுநிலா.
“அதி உன்கிட்டே பேசலையா நிலாம்மா?”
“இல்லை! நான் ஃபோன் போட்டாலும் எடுக்க மாட்டேங்குறாங்க!” என அவள் சோகமாய்ச் சொல்ல,
“நான் ஃபோனைப் போட்டு சொல்றேன். என்ன ஏன் ஃபோன் போட்டிங்கன்னு வைவான். வாங்கிக்க வேண்டியதுதேன்!” எனச் சிரித்தபடியே சொன்னார் மாதவி.
“நீங்க எனக்காக வை வாங்க வேணாம்! அவங்க வரும்போது வரட்டும் விடுங்கத்த!” என அவள் சொல்ல,
“இதெல்லாம் புதுசு இல்லை நிலாம்மா! அவன் எப்போவும் எங்கக்கிட்டே அப்படித்தான். இப்போவாச்சு ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசுறான். பதில் சொல்றான். முன்னெல்லாம் பேசவே மாட்டான். அம்புட்டு அழுத்தம் அவன்.!” எனச் சொன்னார் மாதவி.
“அவ்வளவு கோவம் வருமா அவங்களுக்கு? என்கிட்டே நல்லாதேன் பேசுறாங்க!”
“உன்னை அவனுக்குப் பிடிச்சுருக்கு நிலாம்மா! நீ அவன் மனசுக்கு நெருக்கமா இருக்கப் போல, அதேன் உன்கிட்டே தயக்கமில்லாமல் பேசுறான்.!” எனச் சொன்னார் அவர்.
“என்கிட்டே பேசுறது இருக்கட்டும்! நானும் நிச்சயத்துக்குப் புடவை எடுத்தப்பவெல்லாம் கவனிக்கதேன் செஞ்சேன். ஏன் உங்க கிட்டேயும், மாமாகிட்டேயும் கோவமாவே பேசுறாங்க?” எனக் கேட்டாள் அழகுநிலா. இரண்டு முன்று முறைகள் நேரில் பார்த்த போதே, பெற்றோரிடம் அவன் பேசும் விதமும், நடந்துக்கொள்ளும் விதமும் கொஞ்சம் அழுத்தமாய் இருப்பதாகத்தான் அவளுக்குத் தோன்றியது.
முதலில் சொல்ல முடியாது என மறுத்தவர், பின் அவளின் வற்புறுத்தலால் மட்டுமே உண்மையைச் சொன்னார்.
“அதி பனிரெண்டாவது படிக்கும் போது, டியூஷனில் ஒரு பிள்ளைக்கு லவ் லெட்டர் கொடுத்துட்டான்னு ஒரு பஞ்சாயத்து. டியூஷன் மிஸ் கூப்பிடவும், நானும் உங்க மாமாவும்தேன் போனோம். நான் லெட்டர் எழுதலைன்னு அதி சொன்னான் நாங்கதேன் கேட்கவே இல்லை.அந்த லெட்டரில் வித் லவ் அதின்னு போட்டிருந்துச்சு.!அதைப் பார்த்ததும், அங்கணையே வச்சு அடி வெளுத்துப்புட்டாரு உங்க மாமா! நானும் கோவத்தில் என்ன ஏதுன்னு விசாரிக்காமல் வஞ்சுப்புட்டேன்.”
“ஆனால் உண்மைக்குமே அவன் லெட்டர் எழுதலை. வித் லவ் ஆதின்னு இங்லீஷில் எழுதியிருந்ததைப் பார்த்துத் தப்பா புரிஞ்சுக்கிட்டோம்ன்னு ரொம்ப நாள்செண்டுதேன் எங்களுக்குத் தெரியும். ஆனால் உண்மை தெரியும் முன்னவே எங்க பிள்ளை எங்களை விட்டு விலகிட்டான். நாங்க அவனை நம்பலைன்னு அவனுக்கு அவ்வளவு கோவம். ஸ்கூல் முடிச்சதும், ஹாஸ்டல் போனவன்தேன். வேலை, ட்ரான்ஸ்பர் அது இதுன்னு வீட்டுப்பக்கமே வர்ரதில்லை அவன். அதுக்குப் பின்னாடிதேன் ரொம்ப அழுத்தமா பிடிவாதக்காரனா மாறிட்டான். ஏதோ உன்னைப் பார்த்ததும்தேன் கொஞ்சம் மாறியிருக்கான்.!” என மாதவி சொன்னதும் அதிவீரனின் நிலை அவளுக்குப் புரிந்தது.
அன்று தன் வீட்டில் தன் அன்னையிடம் அவளுக்காகப் பரிந்து பேசியது. “எப்போதான் அவளை நம்புவீங்க?” “அவளை எதுவும் சொல்லாதீங்க அத்த!” என அவன் சொன்னவை அத்தனையும் அவன் பாதிக்கப்பட்டதின் வெளிப்பாடுகள் தான் எனப் புரிந்துக்கொண்டாள் அழகுநிலா.
“அவனை நினைச்சு நாங்க வருந்தாத நாளில்லை! இவன் கல்யாணம் பண்ணுவானான்னு எங்களுக்கே சந்தேகமா இருந்துச்சு. இன்னைக்கு இந்த நிமிஷம் வரைக்கும் அவனை நம்பாமல் போய்ட்டோமேன்னு குத்தவுணர்ச்சிச்சாதேன் இருக்கு. எந்தச் சாமி புண்ணியமோ, நீ வந்துதேன் அவன் மாறணும்ன்னு இருந்திருக்கு!” என நெகிழ்ச்சியுடன் சொன்னார் மாதவி.
இதுவரை அவள் அறிந்திடாத, அதிவீரனின் இரசியப் பக்கங்கள் அவன்மீதான நேசத்தை இன்னும் கொஞ்சம் கூட்டத்தான் செய்தது. அவன் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவன் என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தாள் அழகுநிலா. இன்னும் சில நிமிடங்களுக்கு மாதவியிடம் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்தவள், அலைபேசி திரையைப் பார்க்க அதிவீரனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.
“ஐயோ! இவங்க கூப்பிட்டிருக்காங்க! கவனிக்காமல் அத்தையோட பேசிட்டு இருந்திருக்கேன். வைவாங்களோ?” எனப் புலம்பியபடியே அவனுக்கு அழைப்பெடுக்க, அலைபேசியின் சத்தம் அவளுக்கு நெருக்கத்தில் கேட்டது. சுற்றிலும் தேடி, சத்தம் வந்த திசையை நோக்கி நகர்ந்தவள், மாடியின் பக்கவாட்டில் இருந்த திண்டில் அமர்ந்திருந்தவனைக் கண்டு கொண்டாள்.
தன்னை அழைத்துப் பார்த்துவிட்டு, தன்னைத் தேடித்தான் வந்திருக்கிறான் என்பதையும் புரிந்துக் கொண்டாள் அவள்.
அவளுக்குப் பிடித்தாற் போல், அடர்நீல நிற சட்டையும், வெள்ளை பேண்ட்டும் அணிந்திருந்தவனை அவள் கண்கள் இரசனையாய் மொய்த்தது. தனக்காக வெள்ளை சட்டையை விடுத்து, வேறு வண்ணத்தில் அணிந்திருக்கிறான் என்பதே அவளுக்கு அத்தனை சந்தோஷமாய் இருந்தது. அவளின் உற்சாகமும் மகிழ்ச்சியும் அவள் கண்களில் மின்னியது.
“எப்போ வந்தீங்க? கூப்பிட்டுருக்கலாம்ல.? எம்புட்டு நேராமா இங்கண உட்கார்ந்திருக்கீங்க.?” என அவள் வரிசையாய் கேள்வி கேட்க, அவனோ அசையாமல் அவளையே பார்த்திருக்க, அவஸ்தையாய் தொண்டைக்குழி ஏறி இறங்கியது அவளுக்கு.
“அம்மா கூப்பிடுவாங்க நான் போறேன்!” என அவள் நகர முயல, சட்டெனத் திண்டிலிருந்து குதித்து, அவளைத் தன் அணைப்பிற்குள் கொண்டு வந்திருந்தான் அதிவீரன்.
“என்ன செய்றீங்க?” அவனின் மார்பு முட்டி நின்று, அவன் விழிகளைப் பார்க்கத் தயங்கி, இமை தழைத்து தரையைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தாள் அழகுநிலா. அவன் அப்போதும் பதில் பேசாமல் நின்றிருக்க, அவன் பார்வை அவளில் மட்டுமே அழுத்தமாய் மையம் கொண்டிருந்தது. அவனின் நெருக்கத்தில் இனம்புரியா உணர்வுகள் மெதுவாக மொட்டவிழத் துவங்கியிருந்தது.
“ஏங்க!”என அவள் சின்னக் குரலில் அவள் அழைக்க,
“என்னங்க?” என அவளுக்குப் பதில் சொன்னபடியே தன் உதடுகளால், அவளின் இதழுரசினான் அதிவீரன். அவளுக்கோ சட்டென உயரழுத்த மின்சாரம் பாய்ந்த உணர்வு.
“எவ்வளவு நேரம்தான் மாமியார்கிட்டேயே பேசுவீங்க.? இந்த மாமனையும் கொஞ்சம் கவனிங்க டீச்சரம்மா!” மந்தகாசப் புன்னகையுடன் சொன்னவன், அழுத்தமாய் அவள் இதழ்களில் இதழ்பதித்தான் அவன். உடல் முழுதும் கூசிச் சிலிர்க்க, தன் பொன் விரல்களால் அவன் மார்புச் சட்டையை இறுகப்பற்றி அவனுள் புதைந்தாள் அழகுநிலா.
“விடுங்க! யாராவது வந்துருவாங்க!” அவன் முகம் பார்க்கத் தயங்கி அவள் விலகிய நேரம், அதீத பளிச்சிடலுடன் நீண்ட நெடிய வெள்ளிக் கம்பியாய் மின்னல் வெட்ட, அதைத் தொடர்ந்து வானம் அதிரக் கேட்டது இடிமுழக்கம். அதில் திடுக்கிட்டு அதிர்ந்தவள், அவனின் மார்புக்கூட்டில் முகம் புதைத்து அவனை இறுக அணைத்திருந்தாள். அவளின் உரிமையான செயலில் சத்தமாய்ச் சிரித்தவன், தன்னோடு இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கொண்டான்.
“சிரிக்காதீங்க!” செல்லமாய் அவனிடம் சிணுங்கி அண்ணாந்து அவனைப் பார்த்து நின்றாள் பெண்.
“சிரிக்க வைக்கிறீங்க டீச்சரம்மா!” என அவன் சொன்ன அதே நேரம் இயற்கையே அவர்களை ஆசிர்வதிக்கும் விதமாய் அவள் நெற்றியில் விழுந்தது மழைத்துளி. சில நிமிடங்களிலேயே ஒருதுளி, இருதுளி எனப் பெரும்துளிகளாய் விழுந்து சடசடக்க ஆரம்பிக்க, பெருமழையின் பேரிரிரைச்சலோடு, அவர்களின் நேசமும், கல்யாணக் கனவுகளுடன் காதலையும் சுமந்தபடி ரீங்காரமிசைத்துக் கொண்டிருந்தது.
********
விடியற்காலையின் மிதமான மஞ்சள் ஒளி, திருமண மண்டபத்தின் ஜன்னல்கள் வழியாக உள்ளே வழிந்தது.
இன்னும் முழுமையாக வெளிச்சம் பரவவில்லை. ஆனாலும் மண்டபம் முழுக்க ஏற்கனவே விழாக்கோலம் பூண்டிருந்தது. மல்லிகைப்பூவின் வாசனை காற்றில் கலந்திருந்தது.நாதஸ்வரத்தின் மென்மையான இசை அந்தக் காலைப் பொழுதை இன்னும் அழகாக மாற்றிக் கொண்டிருந்தது. இருபக்கமும் சொந்தபந்தங்கள் அதிகமென்பதால், மண்டபமே நிரம்பி வழிந்தது.
மணமகள் அறையில் ஆளுயரக் கண்ணாடி முன் அமைதியாக அமர்ந்திருந்தாள் அழகுநிலா. அரக்கு வண்ணத்தில் தங்க சரிகையிட்ட காஞ்சிப்பட்டுச் சேலை அவளின் மேனியை அழகாய்த் தழுவியிருந்தது.
கூந்தலை மல்லிகைப்பூ சரம் அலங்கரித்திருந்தது. அவள் அணிந்திருந்த ஆன்டிக் அணிமணிகள் அவள் அழகுக்கு இன்னும் கொஞ்சம் அழகு சேர்த்தது.
“அக்கா! மாமாவும் என்னை மாதிரியே வேட்டி சட்டையெல்லாம் போட்டு, அழகா இருக்காரு!” எனக் கவின் வந்து சொல்லவும் அழகுநிலாவின் முகம் முழுநிலவாய் ஒளிர்ந்தது.
“கவினு! அங்கேயும் இங்கேயும் ஓடிக்கிட்டே திரியாமல் உட்காரு டா!” என மகனை விரட்டினார் செல்வி.
“மதினி! எல்லாம் முடிஞ்சுருச்சு.! பொண்ணைக் கூப்பிட்டால் மட்டும் குரல் குடுங்க!” எனச் செல்வியிடம் சொன்ன மாதவி,
“கீர்த்தனா! இந்தப் பொட்டு மட்டும் சரியா வச்சி விடும்மா!” எனச் சொன்னார். மிதமான ஒப்பனையில் தேவதையென ஜெலித்தவளை திருப்தியாய் பார்த்த மாதவி,
“அழகா இருக்க நிலாம்மா!” என்றபடி அவளின் முகம் வழித்து நெட்டிமுறித்தார்.
“மதனி! அழகியைக் கூட்டிட்டு வாங்க! நல்ல நேரம் முடியும் முன்னே தாலி கட்டணும்ன்னு சொல்றாங்க!”
“கீர்த்தனா பொண்ணைக் கூட்டிட்டு வாம்மா!” என்ற குரல்களின் நடுவே அழைத்துவரப்பட்டு அதிவீரனின் அருகே அமரவைக்கப்பட்டாள்.
“இன்னைக்கு எக்ஸ்ட்ரீம் அழகா இருக்கீங்க டீச்சரம்மா!” என அவன் அவளை இரசித்தபடியே சொல்ல,
“நீங்களும்தேன் போலீஸ்காரரே!” எனப் பட்டு வேட்டி சட்டையில், கம்பீரமாய் மிளிர்ந்தவனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே சொன்னாள் அழகுநிலா. அதன் அதிவீரன் குடும்பத்தைச் சேர்ந்த வயதில் மூத்தவர் தாலியெடுத்துக் கொடுக்க,
“ஐ லவ் யூ நிலாப்பொண்ணு!” என அவளின் காதோரம் அவன் சொல்ல, அவள் தன்னைக் கண்ணோடு கண்பார்த்த அந்தத் தருணத்தில், மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்டிருந்த மீனாட்சி சுந்தரேஷ்வரர் தாலியை அவளின் பொன் கழுத்தில் அணிவித்து, தன்னில் சரிபாதியாய் இணைத்துக் கொண்டான் அதிவீரன்.
அதிவீரன் தாலியை எடுத்து அவளின் கழுத்தில் கட்டிய அந்த நொடி, அழகுநிலாவின் கண்களில் கண்ணீர் துளிகள் மின்னின. அவள் வாழ்க்கையில் அந்த நொடி என்றும் மறக்க முடியாத ஒன்றாக அவளுக்குள் ஆழப்பதிந்தது.
நெற்றிச்சுட்டி தொட்டாடும் உச்சி வகிட்டில் குங்குமம் வைத்தவன், அவள் நெற்றியில் மென்முத்தமும் பதித்தான். இருவரின் குடும்ப உறவுகளும், மலர்தூவி மனமாற வாழ்த்த இனிதே நடந்தேறியது அழகுநிலா-அதிவீரனின் திருமண வைபவம்.
******
திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்து மண்டபம் மெதுவாக இயல்புக்கு திரும்பிக் கொண்டிருந்தது. அதிகாலையே விழித்தது, பின் நடந்த திருமணச் சடங்குகள், புகைப்படக் கருவியின் வெளிச்சம் என அனைத்தும் ஒரே நேரத்தில் அவளைச் சோர்வடையச் செய்திருந்தது.
தன் மனம் நிறைந்தவனின் மனைவியாக அதிவீரனின் வீட்டின் வாசலில் நிற்கும் போது அழகுநிலாவின் மனம் வித்தியாசமான உணர்வுகளால் நிரம்பியிருந்தது.
மாதவி ஆரத்தி எடுத்தபடி சிரித்துக் கொண்டே,
“வா நிலாம்மா… வலது காலை எடுத்து வைத்து வாங்க!” என்றார்.அவள் மெதுவாக அவன் கரத்தோடு தன் கரத்தைக் கோர்த்தபடி, வலக்கால் பதித்து உள்ளே நுழைந்தாள். அதன் பின் பூஜையறையில் விளக்கேற்றுதல், பாலும் பழமும் என மற்ற சடங்குகள் அவளை உள்ளிழுத்துக் கொண்டன.
அந்தி சாயும் வரையுமே அவள் பெற்றோர் உடனிருக்க அவளுக்குப் பெரிதாய் எதுவுமே தெரியவில்லை. ஆனால், விருந்து முடிந்து அவர்கள் கிளம்பவும், அவள் முகம் சட்டென மாறியது.
“அழகி! கிளாம்புறோம் டா! பார்த்துக்கோ! என்னமா இருந்தாலும் அப்பாவுக்கு ஃபோன் போடு! அப்பா வந்துருவேன். சூதானமா இருக்கணும்!”
“வெளாட்டுத்தனமா இருக்காதே டி! நீ இன்னும் சின்னப் பிள்ளை இல்லை.!” எனச் செல்வியும், புவியரசனும் கிளம்ப, அவர்கள் சொன்னதற்கெல்லாம் தாலையை ஆட்டிவிட்டு, இதழ்கடித்து அழுகையை அடிக்கியபடி நின்றாள்.
“ம்மா! அக்காவை ஏன் விட்டுட்டு போறோம்? அக்காவை நம்ம வீட்டுக்கு கூட்டிப் போகலாம்மா! எனக்கு யாரு ஹோம்வொர்க் சொல்லித் தருவா.? சாயங்காலாம் யாருகூட வீட்டுக்கு வருவேன்? ம்மா! எனக்கு அக்கா வேணும்! அக்கா நீ மாமாவைக் கூப்பிட்டுகிட்டு நம்ம வீட்டுக்கு வந்துரு!” என அவளின் கரம் பற்றி இழுக்க உடைந்துவிட்டாள்.
இனியனுக்கும், கதிரவனுக்கும் கூட, இத்தனை நாள் நம்மோடு இருந்த பெண்ணை இப்படி விட்டுச் செல்கிறோமே? என்ற உணர்வு உள்ளே என்னமோ செய்தது.
“அழகி! பார்த்துக்க! நான் என்னவெல்லாமோ பேசிட்டேன். எதுவும் மனசில் வச்சுக்காதே! அது உன் வீடு, உனக்கு ஆயுசுக்கும் உரிமை இருக்கு அந்த வீட்டில். செல்லமா வளர்ந்த பொண்ணு! பார்த்துக்கோங்க மாப்ள!” என இனியன் சொன்ன அந்த நொடி, அவள் கண்களில் கண்ணீர் கரையுடைக்க நேரம் பார்த்துக் காத்திருந்தது. கதிரவன் வேறு தன் பங்கிற்கு,
“உன்னால் முடிஞ்சால் என்னை மன்னிச்சுரு அழகி! நீ நல்லா இருக்கணும்!” எனச் சொல்லிவிட்டு செல்ல, அடக்கி வைத்திருந்த அழுகையில் முகம் சிவக்க நின்றிருந்தவளின் கண்ணீர் கரையுடைத்துக் கன்னங்களில் வழிந்தது.
“நிலா! ஏன் அழற?”
“கஷ்டமா இருக்கு!” தொண்டை அடைக்கச் சொன்னவளின் கரத்தை இறுகப் பற்றியவன், ஆறுதலாய் அவளைத் தோள் சாய்த்துக் கொண்டான்.
“ஏய் அழகி! என்னத்துக்கு டி அழற? இது நீ ஆசைப்பட்ட வாழ்க்கை டி! உங்க அப்பா அம்மா இங்கணதேன் இருப்பாங்க! ஓடிப் போயிற மாட்டாங்க! அவங்களைச் சிரிச்ச முகமா வழியனுப்பாமல் அழுதுட்டு கிடக்க.!” என அதட்டி மிரட்டி தோழியைச் சிரிக்க வைத்தாள் கீர்த்தனா.
“பார்த்துக்கோங்க அண்ணே! என் ஃப்ரெண்ட் கண்ணிலிருந்து கண்ணீர் வந்துச்சுன்னா நான் உங்களைத்தேன் கேட்பேன்!” என அனைவரிடமும் விடைபெற்றுக் கீர்த்தனா கிளம்ப,
“கீர்த்தனா இந்நேரத்தில் ஒத்தைக்குப் போகவேணாம்! டேய் கரீஷு! பிள்ளையைக் கூட்டிப் போய்ப் பஸ் ஏத்தி விட்டுட்டு வா! போய்ட்டு ஃபோன் போடும்மா கீர்த்தனா!” என மாதவி அடுக்களைக்குள்ளிருந்து குரல் கொடுக்க, அன்னையின் விளிப்பில் ஹரீஷ் முறைத்தபடி நிற்க, தோழிகள் இருவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
“நீங்களுமா அண்ணி சிரிக்கிறீங்க? உங்க ப்ரெண்ட் கிட்டே சொல்லி வைங்க!” என ஹரிஷ் சொல்ல,
“டேய்! நம்ம அண்ணிதேன் சிரிச்சா சிரிச்சுட்டு போவட்டும். நீ போய் அந்தப் பிள்ளையை விட்டுட்டு வா!” என மாதவி சொல்லவும், முறைத்துக் கொண்டே அவன் செல்ல, இத்தனை நேரம் கனமாய் இருந்த சூழல், கொஞ்சம் இயல்பாய் மாறியிருந்தது.
********
அன்று அவன் பெண்பார்க்க வந்தபோது அவள் உடுத்தியிருந்த அதே புடவை. கத்தரிப்பூ நிறத்தில், தங்கக்கரை வைத்த புடவையைத் தான் அணிந்திருந்தாள்.
அமைதியாய் இருந்த அந்த அறையில், அவளின் இதயத் துடிப்பு அவளுக்கே கேட்கும் போலப் பதற்றமாய் இருந்தது. அவளின் கூந்தல் நீளத்திற்கு நெருங்கத் தொடுத்த மல்லிச்சங்களை வைத்துவிட்டிருந்தார் மாதவி.
அதன் சுகந்தம் அறை முழுவதும் நிரம்பியிருந்தது. தன் பக்கத்தில் அமர்ந்து, தன்னைப் பார்க்காமல், தலைகவிழ்ந்து அமர்ந்திருக்கும் மனையாளை பார்வையால் வருடிக் கொண்டிருந்தான் அதிவீரன்.
“நிலா!” கிறக்கமான அவனின் அழைப்பு அவளுக்குள் பயத்தையும் பதற்றத்தையும் விதைத்தது.
“ஏன் இவ்வளவு பதற்றம்? உனக்குப் பிடிக்காமலோ, உன்னைக் கஷ்டப்படுத்தும் மாதிரியோ எதுவும் நடந்துடாது.. புரியுதா?”
எனச் சொன்னவன் அவள் கரத்தோடு கரம் கோர்த்துக் கொண்டான்.அவன் வார்த்தைகளில் இருந்த நம்பிக்கை அவளின் மனதை மெதுவாக அமைதிப்படுத்தியது.
அவன் கரத்துடன் பிணைந்திருந்த அவளின் விரல்கள் காற்றுக்குத் தள்ளாடும் மலரைப் போல நடுங்கின.
நடுங்கும் அவளின் விரல்களின் நுனியில் மென்மையாய் மென் முத்தம் பதித்தான் அவன். அவனவளோ இன்னும் வெட்கத்தில் தலை குனிந்து கொண்டிருந்தாள்.அவன் மெதுவாக அவளின் நாடியை நிமிர்த்தினான்.
அந்த நொடியில் இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. அவனின் ஆழ்ந்த கருந்துளைக் கண்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய்க் கரைந்து காணாமல் போய்க் கொண்டிருந்தாள் அழகுநிலா.
அவன் பார்வையில் அவள் மீதான நேசமும் காதலும் நிறைந்துக் கிடக்க, அவனின் விழியெனும் நேசப் பெருவெளியில் விரும்பியே தொலைந்தாள் அவனின் நிலா.
அவளின் மதி முகத்தைத் தன் இரு கரங்களால் தாங்கியவன் மெதுவாக அவள் நெற்றியில் இதழ்பதித்தான். மீசை அழுந்த பதிய அவனிட்ட முத்தத்தில் அவள் மொத்தமாய் அவனிடம் சரணடைந்தாள் அவள்.
அந்த நொடியில் அவள் கரங்கள் தன்னையும் அறியாமலே அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டது.அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்ட அவளின் வெட்கமும் நம்பிக்கையும் அவனுக்குப் புரிந்தது.
அவளை இன்னும் நெருக்கமாய் அருகே இழுத்துக் கொண்டவன், அவள் செவிகளுக்குள் கிசுகிசுப்பபாய்ச் சொன்னான்,
“லவ் யூ நிலாப்பொண்ணு! , என்னோட நிலா. இந்த அதிவீரனைச் சொந்தம் கொண்டாட வந்த அழகுநிலா!” என்ற அவனின் மயக்கும் குரலில் அவள் நிமிர்ந்து பார்க்க, அவள் கண்களைப் பார்த்தாபடியே, அவள் இதழோடு இணை சேர்த்தான் அதிவீரன். நொடிகள் கடந்து நிமிடங்களாய் கடந்த இதழ் முத்தத்தை, மூச்சுவிடத் திணற, அவன் மார்பில் கைவைத்து தள்ளி முடித்து வைத்தாள் அவளின் அழகு மனையாள்.
“மூச்சு விட முடியாலைங்க!” என அவள் சன்னமாய் முனக, அவள் காதுக்குள் அவன் உரைத்த வரைமுறையில்லா இரகசியங்களில்,
“ச்சீ போங்க! நீங்க ரொம்ப டர்ட்டியா பேசுறீங்க!” என அவன் மீதே சரிந்தவளை,
“பொண்டாடிக்கிட்டே உத்தமனாய் இருந்து என்னத்தைச் சாதிக்கப் போறேன்?” ,என்றவன், தன் தன் ஆக்டோபஸ் கரங்களால் ஆக்கிரமித்துக் கொண்டான் அதிவீரன். அவன் ஒவ்வொரு முத்தத்திற்கும், கிறங்கி, மயங்கி, இயைந்து, இழைந்து அவனோடு இணைந்தவள் கண்கள் நிறையக் காதலோடு அவனைப் பார்த்திருந்தாள். மோக நதீ தீரத்தில் மோகனமாய் மூழ்கி முத்தெடுத்து, களைத்து, கலைந்து இருவரும் ஒன்றாற்ய் கரை சேர,
“ஏங்க..!” என்ற அவளின் இன்ப முனகலை..
“என்னங்க?” என அவள் கன்னக்கதுப்பில் இதழ்பதித்து முடித்து வைத்தான் அவளின் அதிவீரன்.
நாணம் கொண்டு அவன் மார்பிலேயே முகம்புதைத்து அவனை அவஸ்தைக்கு உள்ளாக்கினாள் பெண்.
“ரொம்பக் கஷ்டப்படுத்திடேனா?” என்ற அவனின் கேள்விக்கு ‘இல்லையென’ இடவலமாய்த் தலையசைத்து, அவன் இதழில் தன் இதழைப் பொருத்தி, அவன் முடித்து வைத்ததை மீண்டும் துவக்கி வைத்தாள் நிலா.
மனைவியிடம் தன்னை ஒப்புக்கொடுத்து, மந்தகாசப் புன்னகையுடன் அவன் அவளைப் பார்த்திருக்க, அவன் அகம் புறம் அத்தனையும் ஆட்சி செய்து கொண்டிருந்தாள் அதிவீரனின் அழகுநிலா.
அந்த அமைதியான இரவு, அவர்களின் புதிய வாழ்க்கையின் முதல் இனிய இரவாக மாறியது. அவர்களின் நேசப் பெருவெளியில் காதல் பூக்கள் மலர்ந்து மணம் பரப்ப துவங்கியிருக்க, அவர்களின் ஆயுள் முழுமைக்கும் அதன் வாசம் நிலைத்திருக்கட்டும்.
“இதயம் இரண்டு்ம் தூரம்தான்
இதழ்கள் நான்கும் அருகில்தான்
இதழ்கள் வழியே
இதயம் தொடுவது காதலே..!”
(நேசப்பெருவெளியில்..- நிறைந்தது)
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Super story ❤️❤️❤️❤️
அதிவீரன் நிலா lovely pair 😍😍😍😍😍 நைஸ் எண்டிங்…. ❣️
மிக்க நன்றி டா ❤💚 தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💙
கதை அருமை. வாழ்த்துகள் சகி. வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி கலை மா. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 😍