
நேசம்-19
“என்னங்க இன்னும் காணோம்! எனக்கு பயமா இருக்குங்க!” வாசலையே பார்த்துக் கொண்டு நின்றார் செல்வி. காலை எழுந்ததும், மகளைக் காணாமல் பதறிவிட்டார். வீடு முழுதும் தேடியும் அவளைக் கண்டுபிடிக்க முடியாது போக, ஏதேதோ எண்ணங்கள் அவரை ஆக்கிரமிக்கத் துவங்கியிருந்தன.
“ஒருவேளை இந்தக் கல்யாணத்தில் அவளுக்கு விருப்பம் இல்லையாங்க! சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போயிருப்பா? அவளுக்கு ஃபோனை போட்டு பாருங்களேன்.!”
“ம்ப்ச்! செல்வி, சத்தங்காட்டாமல் இரு! நீயே ஊரைக் கூட்டிறாதே! செத்த பொறுமையாய் இரு!” எனச் சொல்லி மனைவியை அடக்கி வைத்தார் புவியரசன்.
தன் அலைபேசியை எடுத்து மகளுக்கு அழைத்துப் பார்த்தார். அழைப்பு சென்றுக் கொண்டிருந்ததே ஒழிய அவள் எடுக்கவே இல்லை. புவியரசனின் மனதிலும் மகளைப் பற்றின பதற்றம் ஓடிக் கொண்டே தான் இருந்தது. ஆனாலும் அவர் வெளிப்படையாய் காட்டிக்கொள்ளவில்லை.
“எடுத்தாளாங்க?”
“எடுத்தால் போனை பேசாமல் கையிலா வச்சிருக்கப் போறேன்.!” என அவர்கள் பதறிக் கொண்டிருந்த நேரம்தான் அதிவீரன் புவியரசனுக்கு அழைத்து, அழகுநிலா தன்னுடன் இருப்பதை மட்டும் மேலோட்டமாய் சொல்லியிருந்தான். அவர்கள் இருவரின் வருகையை எதிர்பார்த்து தான், வாசலையே பார்த்துக் கொண்டிருக்கிறார் செல்வி.
“விடிஞ்சும், விடியாமலும் என்னத்துக்கு இவள் வெளியில் போனாள்? அதுவும் மாப்பிள்ளை கூட போயிருக்கா! சொல்லிட்டு போயிருக்கலாம்ல?”
“உன் மவ இப்போ வருவா! நீயே கேளு!”
“எங்கண வந்துட்டு இருக்காங்களாம்? எங்கே போனாங்களாம்?!” கேள்வியாய் கேட்டுக் கொண்டிருந்த மனைவியை பார்வையால் பஸ்பமாக்கினார் புவியரசன்.
“இந்தாரு செல்வி! நான் என்ன பேசினேன் வச்சேன்னு கேட்டுகிட்டு இங்கணதானே நின்ன? அப்பறம் என்னத்துக்கு நொச்சு நொச்சுன்னு கேள்வியாய் கேட்டு சாவடிக்கிறே?” எனப் புவியரசன் குரலுயர்த்த அமைதியாய் நின்றார் செல்வி.
“ஒருநாள் பைக்கில் வந்து இறங்குனதுக்கே, அம்புட்டு பேச்சு பேசுனாளுங்க! இன்னைக்கு என்னவெல்லாம் பேசப் போறாளுங்களோ? இந்தப் பிள்ளை கொஞ்சம் யோசிச்சு செஞ்சுருக்கலாம். விடிஞ்சும் விடியாமலும் ஒரு ஆம்பிள்ளை கூட வந்து இறங்கினால் ஊரு என்ன பேசும்?”
“இந்தாரு செல்வி! நாம அந்தப் பையனுக்கு தானே புள்ளையைக் கட்டிக் கொடுக்கப் போறோம்? நீ ஏதும் வேற மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கியா?” எனக் கேட்ட கணவனைப் புரியாமல் பார்த்தார் செல்வி.
“நான் என்னத்துக்கு பார்க்கணும்? அதேன் உங்க மக அந்தப் பயலைத்தேன் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாளே?”
“அப்பறம் என்ன, வாயை மூடிட்டு இரு!” என அவர் மனைவியைத் திட்டிக் கொண்டிருந்த அதே நேரம், வாசலில் ஆட்டோ வந்து நிற்க, உள்ளிருந்து இறங்கினர் மாதவியும் இந்திரனும்.
மகளையும், வருங்கால மருமகனையும் எதிர்பார்த்து நின்றவர்கள், இவர்களின் வருகையில் கொஞ்சம் குழபித்தான் போனார்கள்.
“என்னங்க! காலையிலிருந்து இந்த வீட்டில் நடக்கிறது ஒண்ணுமே புரியலைங்க. உங்க மவ சொல்லாமல் கொள்ளாமல் எங்கிட்டோ போய்ட்டா! இப்போ என்னடான்னா இவுக வந்துருக்காங்க! என்னதாங்க சங்கதி?” புரியாமல் செல்வி வினவிய அதே நேரம், உள்ளே நுழைந்திருந்தனர் இருவரும்.
“வாங்க மதினி! வாங்கண்ணே!” என வரவேற்றனர். செல்வி அவசரமாய் ஓடிப் போய் குடிக்க நீரெடுத்துக் கொடுத்துவிட்டு, புரியாமல் நின்றார்.
“வாரோம்ன்னு ஒண்ணும் சொல்லலை மதனி.? என்னமும் பிரச்சனையா?” வெளிப்படையாய் கேட்டே விட்டார் செல்வி.
“தம்பிதேன் இங்கண வந்துருங்கன்னு சொன்னான். நீங்க ஒண்ணும் சங்கடப் படாதீங்க. எல்லாம் அதி பார்த்துக்குவான். நாம என்ன இப்படியெல்லாம் நடக்கும்ன்னு எதிர்பார்த்தோமா என்ன?” என மாதவி சொல்ல, புரியாமல் புருவம் சுருக்கினர் செல்வியும் புவியரசனும்.
“என்ன சொல்றீங்க? எனக்கு ஒண்ணும் விளங்கலையே? ஏதும் பெரிய பிரச்சனையா?” பதற்றமாய் கேட்டார் செல்வி.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை மதனி! அதேன் அதி மருமகக் கூட இருக்கான்ல்ல பார்த்துக்குவான் விடுங்க! நீங்க பதறாம இருங்க! அவன் கிட்டக்க வந்துட்டோம்ன்னு சொன்னான்.” என மாதவி சொன்னது தான் அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் பதற்றத்தைக் கொடுத்தது.
“என்னங்க சொல்றாங்க இவிங்க! என்னமோ ஏதோன்னு திக்குன்னு இருக்குதுங்க! என்ன பஞ்சாயத்தை இழுத்துட்டு வரப் போறாளோ? தெரியலையே?” சத்தமில்லாமல் கணவனிடம் புலம்பத் துவங்கியிருந்தார் செல்வி.
“நீயும் பதறி, என்னைய என்னத்துக்கு பதற வைக்கிறவ? வந்தவங்களுக்கு டீயைப் போடு! சும்மா புலம்பாமல் இரு!” குளிர்சாதனப் பெட்டியிலிருந்து பாலை எடுத்து மனைவியிடம் கொடுத்தார் புவியரசன்.
“டீ குடிக்கிறீகளாண்ணே? டீ போடுறேன் மதனி!” என தேநீர் தயாரிக்க ஆரம்பித்த செல்வியின் விழிகள் நொடிக்கொருதரம் வாசலைத் தொட்டு தொட்டு மீண்டது. நேரம் செல்ல செல்ல அவரின் பதற்றம் இன்னும் கொஞ்சம் அதிகமானது. இன்னும் சில நிமிடங்கள் செல்வியின் பொறுமையைச் சோதித்த பின்னரே வந்து சேர்ந்தனர் அதிவீரனும் அழகுநிலாவும்.
வீட்டின் முன் வந்து நிற்கும் போலீஸ் ஜீப்பைப் பார்த்தைதும், செல்விக்கு நெஞ்சுவலி வரதாத குறைதான். அதுவும் இரவு உடையோடு இறங்கும் மகளைப் பார்த்து பதறிவிட்டார்.
பற்றாக்குறைக்கு ஊரே வெளியே கூடி நின்று அவள் காவல்துறை வாகனத்திலிருந்து இறங்குவதை வேடிக்கை பார்த்தது. மகள் இப்படியொரு கோலத்தில் இறங்குவதைப் பார்த்து, பதறி, ஓடிப்போய் அழகுநிலாவை அணைத்திருந்தார் செல்வி.
“அழகி! என்ன ஆச்சுடி? என்னத்துக்கு இந்தக் கோலத்தில் போயிருக்க? சொல்லிட்டு போயிருக்கலாம்ல?” என உள்ளே வந்தவளை அமரக் கூட விடாது பேசிக்கொண்டே இருந்த செல்வியை அதிவீரனின் தொண்டைச் செருமல் இடைநிறுத்தியது.
“உட்காருங்க மாப்ள! நின்னுட்டே இருக்கீங்க? தம்பிக்கு டீயைக் கொடு செல்வி!” என சூழ்நிலைப் புரிந்து மனைவியை விரட்டினார் புவியரசன்.
புவியரசன் சொன்னதைக் கேட்டு, அமைதியாய் நாற்காலியில் அமர்ந்தவன்,
“சொல்லிட்டு போறதுக்கு அவ ஒண்ணும், என்கூட ஊர்சுத்த வரலை! உங்க தம்பி அவளைக் கல்யாணம் பண்ணணும்ங்கிற எண்ணத்தோட கடத்த முயற்சி பண்ணியிருக்கார்.!” செல்வி சொன்ன வார்த்தைகளின் உள்ளர்த்தாம் புரிந்து, அவன் மொத்தமாய் விஷயத்தைப் போட்டு உடைக்க அதிர்ந்து போயிருந்தனர் செல்வியும் புவியரசும்.
“என்ன தம்பி சொல்றீங்க? கதிரா? நெசமாவே கதிர் இப்படி செஞ்சானா?” என செல்வி கேட்க,
“உங்க தம்பி தானே? உங்களுக்குத் தெரியாதா என்ன?” சுருக்கென அவன் பேசிவிட செல்வியின் முகம் சட்டென மாறியது.
“இவளுக்கு மட்டும் எதாவது ஆச்சு, நான் வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்! எப்போதான் உங்கப் பொண்ணை நீங்க நம்புவீங்க அத்த? சொல்லிட்டு போயிருக்கலாம்ன்னு கேட்குறீங்க? இனியும் நிலாவை இங்க விட்டு வைக்க எனக்கு பயமா இருக்கு. விட்டுக்குள்ளே இருந்தவளைக் காணோம்! வீட்டில் இருக்கிற ஒருத்தருக்கும் தெரியலை. உங்களால் பார்த்துக்க முடியலைன்னா சொல்லுங்க! இந்த நிமிஷமே தாலியைக் கட்டி என் பொண்டாட்டியாய் அவளைக் கூட்டிப் போக நான் தயார் தான்.!” என அவன் சொல்ல, அதிர்ந்து போய் நின்றிருந்தனர் செல்வியும், புவியரசனும்.
அழகுநிலாவோ, அவன் சொன்ன வார்த்தைகளின் வீரியத்தில் விலுக்கென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் வார்த்தைகளின் பின்னால் ஒளிந்திருந்த நேசத்தின் சாயலில் தன்னைப் போல் கண்கள் கலங்கியது அவளுக்கு.
“அதி! அமைதியாய் இரு!” மாதவி இடையிட்டு நிறுத்த முயன்றார். அன்னையை முறைத்துவிட்டு அசையாமல் நின்றான் அதிவீரன். அவன் கண்கள் அப்போதும் அழகுநிலாவைத் தான் தொட்டு தழுவி நின்றது. அவள் சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீரும் இன்னும் அவன் நெஞ்சை சுடுவதைப் போலத்தான் அவனுக்கு இருந்தது.
“அவள் பொறந்து வளர்ந்த வீடு தம்பி! இப்படி பேசாதீக!” செல்வி சொல்ல,
“பொறந்து வளர்ந்த வீட்டிலேயே அவளுக்கு பாதுகாப்பு இல்லையே?” அவன் சொன்ன வார்த்தைகள் சுருக்கென குத்தியது பெண்ணைப் பெற்றவர்களை.
“அதி! அமைதியாய் உட்காரு! ஏன் இப்படி பேசுற.?!” மகனின் கரம் பிடித்து இழுத்து அமர வைத்தார் மாதவி. தாயை முறைத்தபடியே நாற்காலியில் அமர்ந்தான் அதிவீரன்.
புவியரசனுக்கும், செல்விக்கும் அதிவீரனின் கோபத்தைப் பார்த்து, ஒற்றை வார்த்தையை உதிர்க்கக் கூட பயமாக இருந்தது.
“மாப்ள! நான் என்ன ஏதுன்னு விசாரிக்கிறேன். நீங்க சங்கடப் படாதீங்க! அவன் இனிமே என் மவ இருக்கிற திசைக்கே வரமாட்டான்! நான் பார்த்துக்கிறேன்.!” அழுத்தமாய் வார்த்தைகளை உச்சரித்ததிலேயே புவியரசனின் கோபம் செல்விக்குப் புரிந்தது.
“எல்லாம் உன் தொம்பியாலேதேன்.. என்னத்துக்கு ஏழரையை இழுத்துக்கிட்டு திரியறான்? பொண்ணுக்கு பேசி முடிச்சுப்புட்டோம்ன்னு தெரிஞ்சும் இப்படி செஞ்சுருக்கான்னா எம்புட்டு திண்ணக்கம் இருக்கும் அவக்கு. என் கண்ணில் சிக்குனின்யான் செத்தான் வச்சுக்க!” தன் காதுக்குள் அடக்கப்பட்ட கோபத்துடன் பேசிய கணவனைப் பார்த்து செல்விக்கு பயமாக இருந்தது.
“இந்நேரம் அந்த இடத்தில் வேற யாராவது இருந்திருந்தால், கொன்னு புதைச்சிருப்பேன் மாமா! அத்தையோட தம்பியா இருக்கவும், கையைக் கட்டிக்கிட்டு அமைதியாய் உட்கார்ந்திருக்கேன். ஆனால், எல்லா நேரமும் அப்படி இருக்க மாட்டேன் மாமா! சொல்லி வைங்க!” அவனுடைய தெளிவான பேச்சும், அதிகாரமான தோரணையும், நிமிர்ந்து அமர்ந்திருக்கும் விதமும், புவியரசனிடம் அவன் மீதான நல்ல அபிப்ராயத்தை விதைத்திருந்தது.
“என்னங்க இந்த தம்பி இப்படி படக் படக்குன்னு பேசுது? நம்ம அழகி சமாளிச்சுருவாளா.? பயந்து வருதுங்க!” என செல்வி அங்கலாய்க்க,
“வாயை மூடிக்கிட்டு இரு சொல்லிட்டேன். நீ இழுத்து வச்ச வினைதேன் இப்படி நிறுத்தி வச்சிருக்கு. இதுவே அதிவீரன் இடத்தில் வேற எவனாச்சும் இருந்திருந்தான்னா, உன் மவ கதிருகூட ஓடிப் போய்ட்டான்னு சொல்லி கல்யாணத்தையே நிறுத்தியிருப்பான். மாப்பிள்ளை புரிஞ்சுக்கிறது மட்டுமில்லாமல், அவங்க குடும்பமும் சூழ்நிலையை என்ன ஏதுன்னு புரிஞ்சு அனுசரிச்சுக்கிறாங்களே, இதுக்கு மேலே நல்ல மாப்பிள்ளை நீ எந்த ஜில்லாவில் போய் தேடுனாலும் கிடைக்காது.! இத்தக் கல்யாணம் முடியும் மட்டும், நீ உன் வாயைத் திறந்து ஒத்தை வார்த்தைப் பேசக்கூடாது.!” அழுத்தம் திருத்தமாய் சொல்லி மனைவியின் வாயை மூடியிருந்தார் புவியரசன்.
அதன் பிறகான சில நிமிடங்கள் அமைதியிலேயே கழிந்தது. அழுத்தமான சூழ்நிலையை மாற்ற, மாதவி தான் பேச்சை முன்னெடுத்தார்.
“மதனி! வந்த புள்ளையை அப்படியே உட்கார வச்சிருக்கீக? அங்கேயும் இங்கேயும் அலைஞ்சு அலுப்பா போயிருக்கும். புள்ளையை குளிச்சு துணியை மாத்தச் சொல்லுங்க!” மாதவி சொல்லவும் அழகுநிலாவை உள்ளே அழைத்துப் போனார் செல்வி.
“நான்தேன் எல்லாத்தையும் பேசணுமா.? சொல்லித்தானே கூட்டியாந்தேன். புடிச்சு வச்ச கொழுக்கட்டை மாதிரி அப்படியே உட்கார்ந்துக்கோங்க!” பக்கத்தில் அமர்ந்திருந்த கணவனைப் பார்த்து மாதவி சொல்ல,
“வேற என்ன, நாளைக்கு புள்ளைகளுக்கு துணிமணியை எடுத்துட்டு ஆக வேண்டிய வேலையைப் பார்க்கலாம்ல?” என மனைவி சொன்னபடியே இந்திரன் கேட்க,
“செஞ்சுபுடுவோம்! நாளு வேற கிட்டக்க இல்லை. துணிமணியெல்லாம் தைக்கக் குடுக்கணும்ன்னு சொல்லுவாங்க! நாளைக்கே போவோம். நாங்க காலை வியாபாரத்தை முடிச்சுப்புட்டு கடையை அடைச்சுருவோம். பத்து மணிக்கா கெளம்புனா சரியா இருக்குமா சம்மந்தி?” என பதில் கேள்வி கேட்டார் புவியரசன்.
“சரிதேன்! ஆனால் இந்த சம்மந்திதேன் சரியில்லை. பேசாமல் பேர் சொல்லியே கூப்பிட்டுக்குவோம் புவி!” என இந்திரன் சொல்ல, அதற்கு சம்மதித்து புவியரசன் பேச, என ஆண்கள் தங்களுக்குள் வளவளக்க துவங்கியிருந்தனர். அதன் பின்னான நிமிடங்கள் கலகலப்பாக கழிய, அதிவீரனின் பார்வையோ, அழகுநிலாவின் அறையைத் தொட்டு தொட்டு மீண்டது. இங்கிருந்து கிளம்பும் முன், ஒருமுறை அவளைப் பார்த்துவிடலாமென இல்லாத பொறுமையை இழுத்துப் பிடித்து அமர்ந்திருந்தான்.
அதற்குள் மாதவியும், இந்திரனும் விடைபெற்று எழுந்து நின்றுவிட, கோபமாய் தாயை முறைத்தபடி எழுந்து நின்றான் அதிவீரன்.
“இவன் என்னத்துக்கு என்னை முறைக்கிறான்?” எனப் புலம்பியபடி புரியாமல் பார்த்த மாதவி, அவனின் பார்வை அழகுநிலாவின் அறையைத் தொட்டு நிற்பதை வைத்தே மகனின் மனதை அறிந்துக் கொண்டார்.
“மருகளை எங்க மதனி.? சொல்லிட்டு கிளபுறோம்!” என நாசூக்காக மாதவி சொல்லவும்,
“அழகி! அத்தை கிளம்புறாங்க பாரு!” என மகளை வெளியே அழைத்தார் செல்வி.
அழகான பேஸ்டல் பச்சை நிற சுடிதாரில், ஈரக்கூந்தலை விரித்துவிட்டபடி அவள் வந்து நின்ற தோற்றம் அதிவீரனின் மனதில் அச்சாகப் பதிந்தது. அவனின் கண்கள் அவளை விட்டு அகல மறுத்தது. காந்தவிசையால் இழுபடும் இரும்பைப் போல, தன்னையறியாமலே அவளை நோக்கி ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தான் அதிவீரன்.
“கிளம்பலாமா அதி?!” என்ற மாதவியின் குரலில்,
“எதுவா இருந்தாலும் கால் பண்ணு நிலா!” என அவளிடம் தலையசைத்து விடைபெற்று வெளியே வந்தவன்,
“நிலாவை எதுவும் சொல்லாதீங்க அத்த!” என செல்வியிடாமும் அறிவுறுத்திவிட்டு தான் கிளம்பினான்.
“பெத்து வளர்த்த நாங்களே ஒண்ணும் சொல்லக் கூடாதாம்.. பார்த்துக்கடி!” என செல்வி சலித்துக்கொள்ள, அழகுநிலாவின் முகம் புன்னகையால் நிறைந்திருந்தது.
*****
“என்ன நினைச்சு இருக்கிற கதிரு? உன்னை நம்பி வீட்டுக்குள்ளே விட்டதுக்கு, நீ எங்களுக்கு செய்ற நன்றிக்கடன் இது தானா.?” என செல்வி கத்திக் கொண்டிருக்க, வாசலில் மனைவியுடன் வந்திறங்கினான் இனியன்.
“பதில் பேசுடா! என்னத்துக்கு மௌனச் சாமியார் மாதிரி நிற்கிறே?”
“தெரியாமல் பண்ணிட்டேன்க்கா! இன்னும் வேற என்ன சொல்லணும்ன்னு எதிர்பார்க்கிறே?” எனக் கதிரவன் சொல்ல,
“அடிச்சு பல்லு கில்லெல்லாம் கழட்டிடுவேன் பார்த்துக்கோ! நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும் அது எங்கேயோ போகும்ன்னு சொல்லுவாங்க! அப்படித்தேன் நீ இருக்க! வெயிலுக்குள்ளே அலைஞ்சவனுக்குதேன் நிழலோட அருமை தெரியும். நிழலுக்குள்ளேயே இருந்து பழகினா இப்படித்தேன்.!” என கதிரவனை அடிக்கப் பாய்ந்திருந்தார் புவியரசன்.
செல்வி அவரைத் தடுக்க முயற்சிக்க, கதிரவனோ முன்னால் வந்து நின்றான்.
“அடி மாமா! என்னை அடிச்சு கொன்னுரு! உன் நிழலில் இருந்தே பழகிட்டேன். அதனால்தேன் எனக்கு ஊரு உலகம்ன்னு ஒண்ணும் தெரியலை. அழகிக்கு நான் செஞ்சது பெரிய துரோகம்தேன். அதுக்கு என்னை மன்னிச்சுரு மாமா!” தமக்கை கணவனின் காலிலேயே விழுந்துவிட்டான் கதிரவன்.
அதே நேரம்தான் இனியன் மனைவி ஷாலினியுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.
“கதிரு மாமா! எந்திரி! எந்திரிங்கிறேன்ல்ல? இந்தாளு காலில் என்னத்துக்கு விழுற.? அப்படி என்ன தப்பு பண்ணிப்புட்ட நீ?” என தன் தாய் மாமனைத் தூக்கி நிறுத்தினான் இனியன்.
“என்னை விட்றா இனியா! நான் செஞ்சதுக்கு நான் அனுபாவிச்சுட்டு போறேன். நீ போ!” என கதிரவன் சொல்லியும் கேட்காமல் அடமாய் நின்றான் இனியன்.
“அவிங்க செஞ்சதுதேன் மாமா தப்பு! உனக்கு பொண்ணு தாரேன்னு சொல்லிப்புட்டு, இப்போ வெளியே மாப்பிள்ளை பார்த்து பேசியும் முடிச்சுப்புட்டாங்கா! நீ இப்படியே ஏமாளித்தனமா உட்கார்ந்திரு!” என இனியன் பேசுவதைக் கோபமாய் பற்களை நறநறத்தபடி பார்த்திருந்தார் புவியரசன்.
“யாரைச் சொல்லி என்ன ஆகப் போகுது இனியா? நீ என்கிட்டே கொஞ்ச நாளாய் பேசலையே.. இங்கே என்ன நடந்துச்சுன்னு உனக்குத் தெரியாது. உன் தங்கச்சிக்கே என்னைக் கட்டிக்க விருப்பம் இல்லாதப்போ, நாம இதில் ஒண்ணும் பேச முடியாது.!” இனி எதையும் சிக்கலாக்க விரும்பாத எண்ணத்திலேயே பதில் சொன்னான் கதிரவன்.
“அவளுக்கு பிடிச்சால் என்ன? பிடிக்காட்டி என்ன? வீட்டில் கையை நீட்டுறவனைத்தேன் அவ கட்டணும். பொம்பளப் பிள்ளைக்கு என்ன அம்புட்டு பிடிவாதம்.? எல்லாம் உன்னால்தேன் அழகி! கதிரைக் கட்டிக்கிட்டா நகை நட்டு பணமெல்லாம் கொஞ்சம்தேன் கிடைக்கும். இதுவே அந்நியத்தில் மாப்பிள்ளை பார்த்தால், அவிங்க கேட்கிறாய்ஙங்கன்னு அம்புட்டையும் சுரண்டிட்டு போகலாம்ன்னு திட்டம் போட்டுத்தானே இம்புட்டையும் செய்ற? விவரம்தேன் நீயி!” என இனியன் உடன் பிறந்தத் தங்கையைப் பார்த்துச் சொல்ல, அவன் வார்த்தைகளில் ஒட்டுமொத்தாமாய் வெறுத்துப் போனாள் அழகுநிலா.
“எனக்கு நகை நட்டு பணமெல்லாம் வேணாம்! இங்கிருந்து சுரண்டிட்டு போவணும்ன்னு எனக்கு ஆசையும் இல்லை! உனக்கு வேணும்ன்னா எல்லாத்தையும் நீயே வச்சுக்கண்ணே! எனக்கு பிடிச்சவங்களைதேன் நான் கல்யாணம் பண்ண முடியும். எனக்கு வேற யாரையும் பிடிக்கலை!” கதிரவனின் பெயாரைக் கூடச் சொல்ல விரும்பாது, வேண்டுமென்றே அவன் பெயரைத் தவிர்த்துவிட்டு பேசினாள் அழகுநிலா.
“நல்லா நடிக்கிற! உன் நடிப்புக்கு ஆஸ்கர் அவார்ட் தான் கொடுக்கணும்! உன் நடிப்பை இந்த வீட்டில் உள்ளவங்க வேணும்ன்னா நம்பலாம். நான் நம்ப மாட்டேன்!” என அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே,
‘பளார்!’ என்ற சத்தம் அந்தச் சூழ்நிலையை அமைதியாக்க, கன்னத்தைப் பிடித்துக் கொண்டு நின்றான் இனியன். சில நொடிகளில் என்ன நடந்ததென்று யாருக்குமே விளங்கவில்லை.
இனியனுக்கே தன்னை யார் அடித்ததென்பது புரியவில்லை. இனியனின் மனைவி ஷாலினி, அவனுக்கு விழுந்த அடியில், அரண்டுபோய் நின்றுவிட்டாள்.
புவியரசன் தான் அவனை அடித்திருப்பார் என தந்தையைப் பார்த்தாள் அழகுநிலா. அவரோ கையைக்கட்டி அமைதியாய் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். செல்வி கோபமாய் நின்ற தோரணையும், அவர் கரத்தை உதறியதையும் வைத்தே, அவர் தான் இனியனை அடித்திருக்கிறார் என்பதை அறிந்து தன் அன்னையை ஆச்சர்யமாய் பார்த்தாள் அழகுநிலா.
“என்னடா, ரொம்பத்தேன் எகிறிக்கிட்டு திரியுற.? உனக்கு இப்போ என்ன பிரச்சனை? எங்க மவளுக்கு நாங்க செய்றோம், உனக்கு ஏன் எரியுது? நீ சம்பாதிச்ச காசா? சொல்லுடா, தங்கச்சிக்கு கல்யாணம்ன்னு அவளுக்கு தலையிலிருந்து கால் வரை தங்கமா போட்டு இழைச்சுட்டியா? இம்புட்டு பேச்சு பேசுற? கதிருக்கு கட்டிக் கொடுத்தால், இருக்கிறதைப் போட்டு அனுப்பிருவோம்ன்னு நினைச்சியா.? யாருக்கு கட்டிக் கொடுத்தாலும், நாங்க எங்க பிள்ளைக்கு சபை நிறைக்க செய்வோம். அவளுக்கு அப்பன் ஆத்தா வீட்டுச் சீருன்னு அவளுக்கு உரிமை இருக்கு. கல்யாணத்துக்கு அப்பறமும், இந்த வீட்டைச் சுரண்டி எடுத்துட்டு போற உரிமையும் இருக்கு! எம் மவ இம்புட்டு வருஷமா சம்பாதிச்சு இந்த வீட்டுக்குன்னு பொதுவில் அந்த பணத்தைப் போட்டுருக்காடா மகனே! நீ எம்புட்டு காசு பெத்தவிங்களுக்குன்னு சம்பாதிச்சு கொடுத்த சொல்லு?” இனியனின் முகத்தில் ஈயாடவில்லை. செல்வியின் ஒவ்வொரு கேள்வியும் சாட்டையால் அடித்ததைப் போல் இருந்தது இனியனுக்கு.
“நீ என்னத்துக்குடி விட்டுக் கொடுக்கிற.? அம்புட்டு பெரியமனசுக்காரியா நீயி.? என் அப்பன் வீடு கேட்டு வாங்கிட்டு போற உரிமை எனக்கு இருக்குன்னு சொல்லணும் டி கூறுகெட்டவளே! இப்படி இருந்தால் போற இடத்தில் எப்படி பொழைக்கப் போற? எங்கக்கிட்டே மட்டுமில்லை, உன் அண்ணேங்கிட்டேயும் கேட்டு வாங்குற உரிமை உனக்கு இருக்கு அழகி! செய்ற கடமையும் அவனுக்கு இருக்கு! புத்தியோட பிழைச்சுக்க பாரு சொல்லிட்டேன்!” என மகளையும் சேர்த்து வைத்து செய்துவிட்டார் செல்வி.
“இந்தாரு இனியா! உனக்கானது உனக்குக் கிடக்கும். வந்தோமா, கல்யாண வேலையைப் பார்த்தோமா, கல்யாணத்தை முடிச்சுட்டு, பொட்டியைக் கட்டிப்புட்டு ஊரைப் பார்த்து போனோமான்னு இருக்கணும். கொழுப்பெடுத்து போய், எகத்தாளமா என்னமாவது செஞ்சேன்னு வையி, அம்புட்டுதேன் சொல்லிப்புட்டேன். இம்புட்டு பேசுற நீயீ, நாங்க கை நீட்டின பொண்ணைத்தேன் கட்டுனியா? எம் மவளாச்சும் நாங்க பார்த்த மாப்பிள்ளையைத்தேன் கட்டப் போறா! லவ் கிவ்வுன்னு உன்னைய மாதிரி வந்து நிக்கலை பாரு!” என செல்வி பேசவும் முகம் செத்துவிட்டது இனியனுக்கு.
“எவனாவது இந்தக் கல்யாணத்தில் ஏழரையைக் கூட்டணும்ன்னு நினைச்சீங்க, நான் மனுஷியா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.!” எனக் கதிரவனையும் இனியனையும் பார்த்துச் சொல்லிவிட்டு செல்வி கடைக்குள் நுழைய, தன் மனைவியை புன்னகையுடன் பார்த்திருந்தார் புவியரசன்.
******
மூன்று நாட்களாகியும் வருமான வரிச் சோதனை முடிவுக்கு வராமல், இன்னும் தேடுதல் வேட்டை நடந்துக் கொண்டிருந்தது. தோண்டத் தோண்ட புதையலாய் பதுக்கி வைத்த, பணம், தங்கம், முக்கிய ஆவணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வந்துகொண்டே இருந்தன.
வருமான வரித்துறையினர் முன் அமர்ந்திருந்த சுந்தரமூர்த்தியின் நெற்றி முழுதும் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன. கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்வியும் அவரது மனதை பதைபதைக்க வைத்தது. எவ்வளவு முயன்றாலும் சரியான பதிலை சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.
“இந்த அளவுக்கு சொத்துக்கள் எப்படி வந்தது, சார்? எதுக்குமே சரியான சோர்ஸ் இல்லையே?”
“இந்த பணத்துக்கான சோர்ஸ் என்ன? எதுக்குமே பதில் சொல்லலைன்னா எல்லாத்தையும் சீஸ் பண்ணுறதையும், உங்களைக் கைது பண்ணுறதையும் தவிர எங்களுக்கு வேற வழியில்லை.!” என அந்த அதிகாரி சொல்ல அமைதியாய் அமர்ந்திருந்தார் சுந்தரமூர்த்தி.
ஒரு காலத்தில் அதிகாரத்தின் அகந்தையோடு தலை நிமிர்ந்து நடந்தவர், இப்போது அந்த நாற்காலியில் சுருண்டு அமர்ந்திருந்தார். அவர் மனதில் ஒன்று மட்டுமே திரும்ப திரும்ப ஓடிக் கொண்டிருந்தது.
‘இந்த அதிவீரனைச் சந்திக்காமல் இருந்திருக்கலாம்!’ என்றுதான் தோன்றியது.அவன் பெயர் நினைவுக்கு வந்தவுடன் அவர் முகம் கோபமாய் மாறியது.
‘இந்தப் பய நிறைய க்ரௌண்ட் வொர்க் செஞ்சு தான் என்னை சிக்க வச்சிருக்கான்! அவன்தான் எல்லாத்துக்கும் காரணம்ன்னு தெரிஞ்சும் என்னால் ஒண்ணும் செய்ய முடியலை. இனிமே செய்யவும் முடியாது. பதவியும் போய் பணமும் போய், இப்படி பத்துக்கு பத்து ரூமில், ஒடுங்கி உட்கார வச்சிட்டான்! நீ கில்லாடி தான் டா அதிவீரா!’ எனத் தனக்குள் புலம்பியவருக்கு, ,அதிவீரனை விட, இராஜேந்திரன் மீது தான் அதிகக் கோபம் வந்தது.
இராஜேந்திரன் அமைச்சர் பற்றிய சொத்து விபரங்கள், இரகசிய ஆவணங்கள், லாக்கர்கள் எனத் தனக்குத் தெரிந்த அனைத்தையும் வெளிப்படையாக வருமான வரித்துறையினரிடம் ஒப்பித்து சரணடைந்துவிட்டார். சில கோடிகள் அபராததத்தோடு இராஜேந்திரன் தப்பித்துவிட, சுந்தரமூர்த்தி தான் வசமாக சிக்கிக் கொண்டார்.
நாம் விதைத்ததன் பலனை என்றாவது ஒருநாள் அறுத்து தானே தீர வேண்டும். ஆனால் சுந்தரமூர்த்தியின் அறுவடைக்கான நாளை குறித்தவன் அதிவீரன் மட்டுமே! அவர் இந்த வழக்கிலிருந்து வெளியே வரவே ஆண்டுகள் தேவைப்படுமே! இனி அவருக்கு அதிவீரனைப் பற்றி யோசிக்கக் கூட நேரமிருக்காது.
அவன் மட்டும் சுதாரிக்காமல் விட்டிருந்தால், திரும்பவும் பணி மாற்றம், பதவி மாற்றமெனச் சுத்தலில் தான் விட்டிருப்பார்கள். அவன் சுதாரித்ததோடு மட்டுமல்லாமல், எப்படி பிழைக்க வேண்டுமென்பதையும் தன் அனுபவங்களின் மூலமாய் கற்றுக் கொண்டான் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அதி வாவ். செல்வி கலக்கிட்டாங்க இனியனை கேள்வி கேட்டது அறை விட்டது.
மிக்க நன்றி கலை மா 💜
செல்வி இன்னைக்கு தான் ரொம்ப சரியா பேசியிருக்காங்க 👌 இனியன் ஒழுங்கா கல்யாண சாப்பாட்டை சாப்பிட்டு கிளம்புற வழியைப் பாரு இல்ல வில்லத்தனம் பண்ணுவேன்னு அடம்பிடிச்சேன்னா அதிகிட்ட செமயா வாங்குவ… 😒
மிக்க நன்றி டா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💛