Loading

நேசம்-18

அடர்ந்த மயக்கம் மெதுவாக விலகிக் கொண்டிருந்தது. தலையின் உள்ளே யாரோ சுத்தியலால் அடிப்பது போல வலி. கண்ணிமைகள் கனமாக இருந்தன. பல முறை முயன்ற பிறகே அவள் கண்கள் மெதுவாகத் திறந்தன. முதலில் எதுவுமே தெளிவாகத் தெரியவில்லை. எல்லாம் தண்ணீர் தொட்டு துடைத்த கண்ணாடியைப் போல் மங்கலாய்த் தெரிந்தது.

சில நொடிகளில் பார்வை தெளிவாக, தன் உடல் கார் இருக்கையில் சாய்ந்திருப்பதை அழகுநிலா உணர்ந்தாள். அவள் சற்றே அசைய முயன்றாள். தலை கிறுகிறுவெனச் சுற்றியது.

“ம்ப்ச்!”என்று மெலிதாய் முனகினாள்.

சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.அந்த மகிழுந்தின் உள்ளே அவளைத் தவிர யாருமே இல்லை.

கதிரவனைத் தேடினாள். அவனைக் காணவில்லை. அவனைப் பற்றி நினைத்ததும் அவளுக்குக் கல்மண் தெரியாத அளவிற்குக் கோபம் வந்தது.எரிமலைக் குழம்பாய் வெடிக்கக் காத்திருந்த அவளின் கோபம், அவளது இதயத் துடிப்பை இன்னும் வேகப்படுத்தியது.

“மாமா!” என்று மெதுவாக அழைத்தாள்.பதில் இல்லை.
மெதுவாக எழுந்து உட்கார முயன்றாள். அப்போது தான் கார் சாலையின் ஓரமாக நின்றிருப்பதை உணர்ந்தாள்.ஜன்னல் வழியே பார்த்தாள்.அது அவளுக்குத் தெரியாத இடம்.சுற்றிலும் புல் வளர்ந்த காலி நிலம். தொலைவில் சில மரங்கள் மட்டும் தெரிந்தது. அவளுக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது.

அதே நேரம், வெளியே யாரோ பேசும் சத்தம் கேட்டது. அந்தக் குரலை கூர்ந்து கவனித்தாள். குரல் தெளிவாகக் கேட்கவில்லை என்றாலும் கூட, அது கதிரவனுடைய குரல் என்பதைச் சில நிமிடங்களிலேயே கணித்திருந்தாள்.அவன் யாரிடமோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.

“நீங்க சொன்ன மாதிரி பண்ணிட்டேன். அவளைக் கூட்டிட்டு வந்துட்டேன்.”அந்த வார்த்தைகள் அழகுநிலாவின் காதுகளில் தெளிவாக விழுந்தது.
அவளது இதயம் ஒரு கணம் நின்றது துடித்தது.

‘யாருக்கிட்டே பேசிட்டு இருக்கு இந்த மாமா?’ என மனதிற்குள் நினைத்தவளின் உள்ளத்தில் பயம் முளைத்திருந்தது.

“நான் இப்போ என்ன செய்யனும்ன்னு நீங்க சொல்லுங்க?” என்றான் கதிரவன். அவன் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போதே, மகிழுந்திலிருந்து மெதுவாக இறங்கினாள் அழகுநிலா. நீண்ட நேரம் அசையாமல் கிடந்ததால் கால்கள் மரத்துப் போயிருந்தது. மெதுவாகக் கால்களை நகர்த்தியவள், கீழே விழுந்துக் கிடந்த தன் அலைபேசியையும் கவனமாக எடுத்துக் கொண்டாள்.

 

மகிழுந்தின் பின்னிருக்கையிலிருந்து மெதுவாக இறங்கி, கதிரவனின் முன் சென்று நின்றவளின் விழிகளில் கோபம் அப்பியிருந்தது.

“அழகி!” அவளை விளித்தபடி, காதிலிருந்த அலைபேசியைக் கீழிறக்கினான். இத்தனை நேரமாய் அவன் மீதிருந்த கோபம், அவன் முகத்தைப் பார்த்ததும், இன்னும் பன்மடங்காகப் பெருகியது. அதோடு அவனின் ‘அழகி!’ என்ற விளிப்பு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது.

“நான் சொல்றதைக் கேளு அழகி!” என அவன் எதையோ சொல்ல வரும் முன்னே அவனை ஓங்கி அறைந்திருந்தாள் அழகுநிலா. அவன் மீது அவ்வளவு கோபம் அவளுக்கு. அவனை அறைந்த கரம் தீயாய் எரிந்தது. கதிரவனோ, எதிர்வினை ஏதும் ஆற்றாது, கன்னத்தைப் பிடித்து நின்றான்.

“என்ன நினைச்சுட்டு இருக்கிற நீயி? நான் என்ன பொம்மையா மாமா.? இப்படிப் பொட்டல் வெளிக்கு நடுவில் வந்து நிறுத்தி வச்சிருக்கிற? நான் என்ன தப்பு பண்ணேன்? ஏன் எல்லாரும் என்னை வச்சு விளையாடுறீங்க?” கண்களில் கண்ணீர் ததும்ப, கோபத்தில் நுனிமுக்கு சிவக்க, அவனைப் பார்த்துக் கேட்டாள் அழகுநிலா.

“நான் செஞ்சது தப்புத்தேன். ஏதோ புத்திக்கெட்டுப் போய்ச் செஞ்சுட்டேன்!”

“தப்புதான்னு ஒத்துக்கிட்டா எல்லாம் மாறிடுமா? நீ பேசின வார்த்தைகள், பஞ்சாயத்தில் நிறுத்தினது எல்லாமே காணாமல் போயிருமா? சொல்லு மாமா! நீ செஞ்சதை தடம் தெரியாமல் அழிக்க முடியுமா உன்னால்?” அவளின் கேள்விக்குக் கதிரவனால் பதில் சொல்ல முடியவில்லை. மரமாய் அசையாமல் நின்றான்.

“உன்னால் ஒத்தை வார்த்தை கூடப் பேச முடியாதுன்னு எனக்குத் தெரியும். நீ அன்னைக்குச் சொன்னியே, ஒண்ணும் மண்ணுமா பழகினேன். நெதமும் ஒவ்வொருத்தன் கூடப் பைக்கில் வந்து இறங்குவேன்னு சொன்னியே, அதெல்லாம் உனக்கு வேணும்ன்னா வெறும் வார்த்தைகளா இருக்கலாம். நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உசுரோட என்னைக் கொன்னுடுச்சு மாமா!”

“ஏன் இந்த ஆம்பிள்ளைங்க இப்படி இருக்கீங்க? எந்த விஷயமா இருந்தாலும், ஒரு பொண்ணோட நடத்தையைதேன் குறிவச்சு அடிக்கிறீங்க! நான் அன்னைக்கு ஏன் அவரு கூடப் பைக்கில் வந்தேன்னு தெரியுமா? என் சூழ்நிலை என்னன்னு உனக்குத் தெரியுமா? எதைப் பத்தியும் தெரியாமல் என்னைப் பத்தி பேசுற உரிமை உனக்கு யார் கொடுத்தா? என்னைப் பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு?” கோபமும் ஆற்றாமையும் கேள்விகளாய் உதிர்ந்தன.

மனதில் அழுத்திக் கொண்டிருந்த அத்தனையும் வார்த்தைகளாய் உருப்பெற்றதும் சாபவிமோசம் அடைந்ததைப் போலிருந்தது அவளுக்கு.

“அழகி! கொஞ்சம் கோவப்படாமல் நான் சொல்றதைக் கேளு!”

“எதையும் கேட்க முடியாது! கேட்கவும் மாட்டேன். நான் உன்னைப் பிடிக்கலைன்னு சொன்னது அவ்வளவு பெரிய குத்தமா மாமா? பிடிக்கலைன்னு சொல்ல கூட எனக்கு உரிமை இல்லையா? எனக்கு எது தேவை? எது பிடிச்சிருக்கு பிடிக்கலைன்னு எனக்கு முடிவெடுக்கத் தெரியும் மாமா! உன்னைத் தான் கல்யாணம் பண்ணணும்ன்னு எல்லாரும் என்னைச் சேர்ந்து அழுத்தும் போது, எனக்குச் சத்தியமா செத்துப் போய்டலாம்ன்னு தான் தோணுச்சு. ஆனால், என் மனசு உங்க யாருக்கும் புரியாது. ஒரு பொண்ணை அவ குடும்பத்தைச் சேர்ந்தவங்க தான் மரியாதையாய் முன்நிறுத்தணும். ஆனால் நீங்களே அசிங்கப் படுத்தும் போது, அவளுடைய நடத்தையைக் கேள்விக்குறியாக்கும் போது, அவள் என்ன செய்யணும்? வீட்டுக்குள்ளே இருக்கிறவங்களே இப்படி இருக்கும் போது, வெளியே நாங்க எங்கே போய்ப் பாதுகாப்பை தேடுறது?”

“அழகி போதும்!”

“முடியாது நான் நிறுத்த மாட்டேன். நான்தேன் நெதமும் ஒருத்தன் கூடப் பைக்கில் வர்ரவளாச்சே? நான் பேசினால் உனக்கு ஏன் வலிக்குது? நான் உன்னைத் திருத்துறதுக்காகவோ, என்னைப் புரிய வைக்கவோ இதையெல்லாம் பேசலை! உனக்குப் புரியும்ன்னு எனக்கு நம்பிக்கையும் இல்லை. என் மனசு ஆத்த மாட்டாமல் நான் பேசிட்டு போறேன்.!”

“என்னால் முடியலை அழகி! வேண்டாம் விடு! உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நெனைச்சேன் தான். உன்னை யாருக்கோ விட்டுக் கொடுக்க எனக்கு மனசு வரலை. எல்லாத்துக்கும் மேலே உன்னை எனக்குப் பிடிக்கும் அழகி!” என அவன் சொல்ல,

“ஓ! பிடிச்ச பொண்ணுன்னா என்ன வேணும்ன்னாலும் பேசுவியா? உனக்கும், எனக்கும் கல்யாணம் பேசினாய்ங்களே, என்கிட்டே சம்மதம் கேட்டுட்டா பேசினாங்க? இப்போ அதிவீரனை பொண்ணு பார்க்க வரச் சொன்னது, என்கிட்டே கேட்டு ஏற்பாடு பண்ணினாங்களா? ஒருவேளை எனக்கு அதிவீரனை பிடிக்காமல் இருந்திருந்தால், இந்தக் கல்யாணம் நடக்காமல் நின்னுரும்ன்னு நினைக்கிறியா?” கோபத்தின் விளிம்பில் நின்று கேட்டவள், கண்களைச் சிமிட்டி கண்ணீரை உள்ளிழுத்து மீண்டும் தொடர்ந்தாள்.

“எனக்கான எந்த விஷயத்திலும், என்கிட்டே கேட்டு செய்யாதப்போ, நீ என்மேலே கோபப்பட்டு என்ன ஆகிடப் போகுது சொல்லு? உன்னைய சொல்லி என்னத்துக்கு எங்க அம்மாவே கேட்டுச்சு, ஸ்கூலுக்குப் போறேன்னு சொல்லிட்டு, தினமும் பைக்கில் சுத்துறியான்னு கேட்டுச்சு. எல்லாரும் வெளியிலிருந்து என்னை ஜட்ஜ் மட்டுந்தேன் செய்றீங்க! என் மனசு உங்க யாருக்கும் புரியாது! ஒவ்வொரு வீட்டிலும் பொண்ணோட நிலைமை இதுதேன். சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் காலம் எவ்வளவுதேன் நவீனமானாலும், சில விஷயங்கள் மாறவே மாறாது இதுவும் அப்படித்தான்.!” அவள் சொன்ன வார்த்தைகளின் பின்னிருந்த அழுந்த்தங்கள், கதிரவனால் விளங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. ஆனால் அவள் தன்னால் வேதனைப்பட்டிருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது.
கதிரவன் பதில் பேசாது, தலைகுனிந்து நின்றான். அவள் சொன்ன வார்த்தைகள் அவனை ஒரே உலுக்காக உலுக்கியிருந்தது.
அவன் இதுவரை அவளை இத்தனை தூரம் காயப்படுத்தியிருக்கிறான் என்று அவனுக்கே நம்ப முடியவில்லை.

“அழகி நான்!”

“பேசாதே!” கோபமாய்க் கத்தினாள் அவள்.

“இப்போ நீ என்ன சொன்னாலும், இனிமே உன்மேல் எனக்கு நம்பிக்கை வராது மாமா! நீ யார் சொன்னதுக்காக மயங்க வச்சு தூக்கிட்டு வந்தேன்னு எனக்குத் தெரியாது. ஆனால் உன்மேல் இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சில்லு சில்லா உடைச்சுட்ட!” எனச் சொல்லிவிட்டு அவள் திரும்பி நடக்கத் தொடங்கியிருந்தாள்.

“அழகி! எங்க போற?” பதற்றமாகக் கேட்டான் கதிரவன்.

“எங்கேயாச்சும் போய்த் தொலையுறேன். போறேன். உன் மூஞ்சியைப் பார்க்கவே எனக்கு அருவருப்பா இருக்கு!” என்றாள் அவனைத் திரும்பிப் பார்க்காமலே.சாலையின் ஓரமாக இருந்த அந்த வெறிச்சோடிய பரந்தவெளியில் இலக்கில்லாமல் வேகமாக நடக்கத் தொடங்கியிருந்தாள்.

கதிரவன் ஒரு கணம் தயங்கி நின்றான்.பின்னர் அவளுக்குப் பின்னால் வேகமாக ஓடினான்.

“அழகி! ஒரு நிமிஷம் நில்லு!. தயவு செஞ்சு நான் சொல்றதை கேளு!”அவள் சட்டென நின்று கோபமாய்த் திரும்பினாள்.

“என்ன கேட்கணும்? இன்னும் என்னை அவமானப்படுத்த எதாச்சும் மிச்சமிருக்கா?”அவள் கண்கள் சிவந்தது.
கதிரவன் சற்று திகைத்து நின்றான். அவளுக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.பின் மெல்லிய குரலில் சொன்னான்.

“நீ நினைக்கிற மாதிரி இல்லை. ஒருநிமிஷம் நான் சொல்றதைக் கேளு!”

“அப்போ வேற எப்படி?”அவள் கிண்டலாய் சிரித்தாள்.

“நீ இப்போ போன்ல பேசினது யாருகிட்டே? அவளைக் கூட்டிட்டு வந்துட்டேன்ன்னு சொன்னியே? அது யாருகிட்டே?”அந்த கேள்விக்குப் பதில் சொல்லாமல் கதிரவன் அமைதியாய் நின்றான்.
அவன் பதில் சொல்லாமல் நின்றதைப் பார்த்ததும் அழகுநிலாவின் இதயம் வேகமாகத் துடித்தது.

“இன்னும் நான் உன்னை நம்புவேன்னு நினைக்கிறியா மாமா நீயி?”அவள் குரல் நடுங்கியது.

“ஒரு காலத்தில், என்னோட பாசமான கதிர் மாமாவா எனக்கு எல்லாமாக இருந்த.. இப்போ நீ ஒண்ணுமில்லாமல் ஆகிட்ட! என் வாழ்க்கையில் நீ இனிமேட்டுக்கு இல்லவே இல்லை மாமா!” அவளின் வார்த்தைகள் கதிருக்கு செருப்பால் அடித்ததைப் போல் இருந்தது.

அவள் அந்த வார்த்தையை அவள் உதிர்க்கும் போதே, அண்மையில் அதிவேகமாக வரும் வாகனத்தின் சத்தம் கேட்க, அந்த ஜீப் புழுதியைக் கிளப்பியபடி வந்து அவர்கள் முன் நின்றது. டயர் உரசிய சத்தம் அந்தச் சூழலின் அமைதியை உடைத்தது. எப்போதும் போல், இராஜ தோரணையோடு வந்திறங்கினான் அதிவீரன்.

காவலர் சீருடை அவனின் தோரணையை இன்னும் கம்பீரமாக்கியது.
அதிவீரன் நிதானமாய்க் காவல்துறை வாகனத்திலிருந்து இறங்கினான். அவன் கண்கள் அழகுநிலாவில் மட்டுமே மையம் கொண்டிருந்தது. கண்கள் கலங்கி, தலை கலைந்து, இரவு உடையுடன், கசங்கிய முகமாய் அவள் நின்ற தோற்றம், அவன் மனதை வலிக்கச் செய்தது. அழுத்தமான காலடிகளுடன் அவளை நெருங்கி வந்தவன்,

“நிலா..!” என அவளின் பெயரை விளித்தான். அவனின் அழைப்பு முழுதாய் முடியும் முன்னே, அவன் மார்பில் தஞ்சம் புகுந்திருந்தாள் அழகுநிலா. அவளின் வெதுவெதுப்பான கண்ணீர் அவன் மார்பைச் நனைத்தது. அவன் சட்டை நனைத்த ஒவ்வொரு துளி கண்ணீரும் கோபமாய்க் கதிரவன் மீது திரும்ப, அவனைப் பொசுக்கிவிடும் ஆக்ரோஷத்தோடு முறைத்தான் அதிவீரன்.

“நிலா! அழாதே! நீ என்கிட்டே இருக்கே! நான் வந்துட்டேன்ல்ல!” அவனின் சமாதானங்கள் அவளிடம் எடுபடவே இல்லை.

“நிலா! என்னைப் பாரு! பாருன்னு சொல்றேன்ல்ல?” நாடியை நிமிர்த்தித் தன் விழிகளைப் பார்க்க வைத்தவன்,

“உனக்கு ஒண்ணும் ஆக விடமாட்டேன் நிலாப்பொண்ணு! உன் மாமாவால் உன்னை ஒண்ணும் செய்ய முடியாதுன்னு எனக்குத் தெரியும்.” என அழுத்தமாய் உச்சரித்தவன், கதிரவனைப் பார்த்தபடியே மீண்டும் தொடர்ந்தான்.

“நீ லொக்கேஷன் அனுப்பும் முன்னமே எங்க டீம் உன்னை ஃபாலோ பண்ணிட்டு தான் இருந்தாங்க! நீ என் உசுரு நிலா!” தன் இறுகிய அணைப்பிற்குள் அழுது வடிந்து ஈர இமைகளுடன் நின்றவளின் நெற்றியில் தன் முத்தத்தைப் பதித்தான் அதிவீரன். உடல் முழுதும் கூசிச் சிலிர்க்க, அவனை அண்ணாந்து பார்த்தபடி, அவனுக்குள் இன்னும் கொஞ்சம் புதைந்து நின்றவளை, கண்கள் மின்னப் பார்த்தவன், தன் கைவளைவிற்குள் அவளை நிறுத்திக் கொண்டான்.

“நீங்க இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது, யாரோ ரோட்டில் போற பொண்ணு இல்லை கதிரவன். இவள் உங்க வீட்டுப் பொண்ணு தானே? எப்படி இப்படியொரு விஷயத்தைச் செய்ய உங்களுக்கு மனசு வந்துச்சு? உங்க வீட்டுப் பொண்ணையே இப்படி நைட் ட்ரெஸ்ஸோட ரோட்டில் நிறுத்தியிருக்கீங்க? உங்களை மட்டும் நம்பி வர்ரப் பொண்ணை இதைவிடக் கேவலமா நடத்துவீங்க போல? உங்க மேலே அவள் வச்சிருந்த நம்பிக்கைக்கு நல்ல பதிலடி கொடுத்துட்டீங்க! இதுவே இந்த இடத்தில் வேற யாராவது இருந்திருந்தால், இங்கே நடந்திருக்கிறதே வேற! என் நிலாவுக்குச் சொந்தமா போய்ட்டீங்க! அதனால் தான் இப்போ வரை மரியாதையாய் பேசிட்டு இருக்கேன்!” என அழுத்தமான குரலில் அமர்த்தலாய் சொன்னவனின் குரல் சாதாரணமாக இருந்தாலும், அவன் கண்களில் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது.

தன்னை எரிக்கும் அதிவீரனின் பார்வையில் உள்ளுக்குள் குளிர் பிறந்தது கதிரவனுக்கு. அவனை நிமிர்ந்து பார்க்கவிடாமல், மனமெனும் மாயக் குளத்தில், பாசியாய்ப் படிந்திருந்த குற்றவுணர்வு, கதிரவனைத் தடுத்தது.

“அது.. வந்து நான்..!” கதிரவனால் பதில் பேச முடியவில்லை.

அவன் மனம் சிலமணி நேரத்திற்கு முன் நடந்தவைகளை அலசிப் பார்த்தது.
என்னதான், இராஜேந்திரன் மற்றும் சுந்தரமூர்த்தியின் திட்டத்திற்குக் கதிரவன் ஒப்புக் கொண்டாலும், அவன் மனதில் ஒருவித உறுத்தல் இருந்து கொண்டுதான் இருந்தது.

ஆனாலும் அழகுநிலாவை தனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை என்கிற கோபமும் அவனுக்குள் இருந்தது.
அதன் காரணமாகவே, அவர்களின் திட்டப்படி, செயல்படுத்த அவன் முனைந்தான். அதே நேரம், அன்று அதீத போதையின் விளைவாய் வாந்தி எடுத்ததன் காரணமாக அவனுக்கு முக்கால்வாசி போதை தெளிந்திருந்தது.

 

இருந்தாலும், பாரமாகக் கனத்த தலையைத் தூக்க முடியாது அவன் கண்மூடிப் படுத்திருக்க, இராஜேந்திரனும், சுந்தரமூர்த்தியும் பேசிய அத்தனையையும் கேட்டிருந்தான். அவர்கள் தன்னை வைத்து அழகுநிலாவைக் கடத்தி, அதிவீரனைப் பழிவாங்க திட்டமிடுவதை அறிந்திருந்தான்.

அதனால் அவர்கள் அறியாமல் தனியாக இன்னொரு திட்டத்தைத் தீட்டியிருந்தான் கதிரவன். அவர்களின் திட்டப்படியே அழகுநிலாவைக் கடத்தி வந்துவிட வேண்டும். ஆனால், அவளை அவர்கள் வசம் ஒப்படைத்துவிடக் கூடாதென்பதை உறுதியாக முடிவு செய்து கொண்டான். எல்லாம் அவன் திட்டப்படியே நடந்தது. அழகுநிலாவைக் கடத்தி, மாற்று வழியில் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான் அவன்.

“மாமா! ஏன் இப்படிச் செய்ற? ஏன் நீ இப்படி மாறின.? நான் சொல்லாமலே புரிஞ்சுப்பியே மாமா? இப்போ என்னை உனக்குப் புரியலையா? எனக்கு அவங்களைப் பிடிச்சுருக்கு மாமா! நீ என்னைக் கொன்னாலும் கூட, ,என்னால் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது! என் மனசு முழுக்க அதிவீரன் மட்டுந்தேன் இருக்காங்க! பேசாமல் நான் செத்துப் போய்ட்டா எல்லாம் முடிஞ்சுரும்ல்ல? பேசாமல் நான் செத்துறவா?” என்ற அவளின் குரலில் பின்னால் திரும்பிப் பார்த்தான் கதிரவன்.

“முழிச்சுட்டாளா?” எனப் பதற்றமாய் அவளை ஆராய்ந்தான். அவள் கண்கள் மூடியிருந்தன. மயக்கத்தின் விளிம்பில் தன்னையறியாமல் உளறிக் கொண்டிருக்கும் அவளின் புலம்பல்கள், அவனிடம் உணர்வுரீதியாய் தாக்கத்தை ஏற்படுத்தியது.

“பேசாமல் நான் செத்துறவா?” என்ற வார்த்தைகள் கதிரவனின் உள்ளத்தை உளி கொண்டு உடைத்தது. குழந்தை போல் கண்மூடிப் படுத்திருந்தவள், அவன் கண்களுக்கு, அவன் தூக்கி வளர்த்த சின்ன வயது அழகுநிலாவாகத் தான் தெரிந்தாள். அதற்கு மேல் கதிரவனால் முன்னேறி செல்ல முடியவில்லை. அது அவனின் நொடிநேர மனமாற்றம் அல்ல, தான் தூக்கி வளர்த்த தமக்கை மகளின் வார்த்தைகளைத் தாண்டிப் போக முடியாத கையறுநிலை.

 

என்னதான் இடையில் வந்த தீயப் பழக்கவழக்கங்களால், அவன் மாறியிருந்தாலும், உள்ளுக்குள் அவன் அவனாகவே இருந்திருக்கிறான்.

அதற்கு மேல் முன்னேற மனம் வராது சாலையோராமாய்த் தென்பட்ட காலி நிலத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, அதிவீரனுக்கும் தான் இருக்கும் இடத்தை அழைத்துச் சொல்லிவிட்டான். அதைத் தவிர, வேறு என்ன செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை.

 

தன் சிந்தனையிலிருந்து வெளியே வந்தவன், தயக்கமாய் அதிவீரனை நிமிர்ந்து பார்த்தான்.

“நான் அழகியைக் கல்யாணம் பண்ணணும்ன்னு நினைச்சுதேன் இத்தனையும் செஞ்சேன். ஆனால் கடைசியில் அவளைப் பணயமா வெச்சு, என் ஆசையை நிறைவேத்திக்க எனக்கு மனசு ஒப்பலை. அவ மனசில் நான் இல்லைன்னு எனக்குப் புரியறதுக்குள்ளே என்னவெல்லாமோ நடந்துருச்சு!”

“அவ மனசு முழுக்க நீங்கதேன் இருக்கீங்க! நான் பெரிய தப்புப் பண்ணிட்டேன். நான் செஞ்ச எதையும் நியாயப்படுத்தனும்னு நினைக்கலை! செஞ்சது எதையும் என்னால் மாத்தவும் முடியாது. மன்னிப்பு கேட்கிறதைத் தவிர எனக்கு வேற வழியும் தெரியலை. மன்னிச்சுருங்க! மன்னிச்சுரு அழகி!” எனக் கையெடுத்துக் கும்பிட்டவன், விறுவிறுவென நடந்துவிட்டான். ஓய்ந்து போய்த் தளர்ந்த நடையுடன் செல்லும் கதிரவனின் புறமுதுகை வெறித்திருந்தாள் அழகுநிலா.

அவள் அவனைத் திரும்ப அழைக்கவில்லை. அழைக்க விரும்பவும் இல்லை. அவன் செய்த செயல்களும், அவன் உதிர்த்துப் போன வார்த்தைகளும், அவள் மனதிற்குள் ஆறாத இரணத்தை ஆழமாய்த் தந்திருந்தது.

 

அதிவீரனின் கரம் கோர்த்து அவன் தோள் சாய்ந்து அவள் நின்றிருக்க, அவள் கண்களிலிருந்து கதிரவன் புள்ளியாய் மறைந்து போயிருந்தான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 33

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
34
+1
5
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. கதிரோட மனநிலை சரிதான். வில்லன் இனியன் தான். அதி நிலா கியூட்.

  2. கதிருக்கு புத்தி வந்துடுச்சு…. அவனோட தப்பை உணர்ந்துட்டான்….. அதுக்குள்ள நிலா மனசை தான் கஷ்டப்படுத்திட்டான்…
    நைஸ் அப்டேட் ❤️❤️❤️❤️