
நேசம்-15
தந்தையிடம் பேசிவிட்டு, அறைக்குள் நுழைந்த அழகுநிலா, உடையை மாற்றிவிட்டு முகம் கழுவி வந்தாள். தலையை வாரி, கூந்தலை சுழற்றி பன் இன் ஹேர்ஸ்டைலில் அடக்கினாள்.
கண்ணாடியில் தன் உருவத்தை முன்னும் பின்னும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டாள். தன் தோற்றத்தில் திருப்தியானவள், அலைபேசியை எடுத்துக்கொண்டு, அறைக்குள் நுழைந்துவிட்டாள்.
படுக்கையின் அருகே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து அலைபேசியின் திரையை தடவிக் கொண்டிருந்தாள். அவனுக்கு வீடியோ அழைப்பை மேற்கொள்ள, அவளுக்கு பயமாக இருந்தது.
“என்ன பேசுறது? கால் பண்ணலைன்னு வைவாங்களோ? பயமா இருக்கே!”எனத் தனக்குத் தானே முனகிக் கொண்டவள், அலைபேசியைப் பார்த்தாள்.
ஒரு நிமிடம் தயங்கினாள். பின்னர் மெதுவாக ஒரு மூச்சை இழுத்து, அவனின் பெயர் சேமிக்கப்படாத எண்ணைத் திறந்தாள். அந்த எண்ணை அலைபேசியில் சேமிப்பதற்கான பொத்தானை க்ளுக்கினாள். அவன் எண்ணை எப்படி சேமிப்பதென அவளுக்குப் புரியவில்லை.. பெயரிட்டு சேமிக்கவும் விருப்பமில்லை. சிவப்பு நிற இதயக்குறியிட்டு அவன் எண்ணைச் சேமித்து வைத்தாள்.
எண்ணை அலைபேசியில் சேமித்ததும், புலனத்தில் (whatsapp) அவன் எண்ணைத் தொட்டாள். அவனின் முகப்புப் படம் அவளின் அலைபேசி திரையில் விரிந்தது. காவல்துறை சீருடையில் கம்பீரமாய் அவன் நின்றிருக்க, இவளோ கண்ணெடுக்காது அவனின் நிழற்படத்தைப் பார்த்திருந்தாள்.
“பார்க்க அழகாத்தேன் இருக்கீங்க! பேசத்தேன் பயமா இருக்கு! உங்களை மாதிரி வார்த்தையைக் கோர்த்துப் பேச எனக்குத் தெரியலையே?” எனத் தனக்குள் பேசியவள், மீண்டும் சில நொடிகள் யோசித்தாள். தயக்கம் அவளுக்குள் தாண்டவமாடியது.
அவளின் பொன் விரல்கள், வீடியோ அழைப்பு பொத்தானின் மேல் சில விநாடிகள் தயங்கியது.
“பேசலாமா? வேணாமா?” என்று மனதில் கேள்விகள் முளைத்தது. இறுதியாய் இல்லாத தைரியத்தை இழுத்துப் பிடித்து அழைப்பு குறியீட்டை அழுத்தினாள்.
சில விநாடிகள் திரையில் அவள் முகம் மட்டுமே தெரிந்தது. அழைப்பு சென்றுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு விநாடியும் யுகங்களாய் நகர்ந்தது அவளுக்கு.
“வேலையாய் இருக்காங்க போல!” என அவள் அழைப்பைத் துண்டிக்கப் போக, அவள் எதிர்பாரா கணப் பொழுதில், திரையில் அவன் முகம் தெரிந்தது.
“நிலா!” உயிர்வரைத் தீண்டும் அவன் விளிப்பில்,அழகுநிலா ஒரு கணம் பேசவே மறந்துவிட்டாள். அவன் ஒவ்வொரு முறை பெயர் சொல்லி அழைக்கும் தருணங்களில், அவள் பெயரே அவளுக்கு அழகாகத் தோன்றுகிறது. கம்பீரமும் மென்மையும் ஒருசேர அவன் அழைக்கும் விதத்தில், அவள் மயங்கத்தான் செய்கிறாள்.
“இப்படி வச்ச கண்ணு வாங்காமல் பார்த்துட்டு இருக்க, அவ்வளவு அழகா இருக்கேனா நான்?” எனச் சிரித்தபடி கேட்டான் அவன். அப்போது தான் வீட்டுக்கு வந்திருப்பான் போல, காவலர் சீருடையிலே தான் இருந்தான்.
“இல்லை! அது வந்து நான்..” என பதில் பேசத் தடுமாறினாள் பெண்ணரசி.
“அப்போ நான் அழகா இல்லையா?” வசிகரமாய் சிரித்தபடியே அவன் கேட்க, இமைக்க மறந்து அவனைப் பார்த்தாள் அவள்.
“இப்படியே பார்த்துட்டே இருக்கத்தான் வீடியோ கால் பண்ணியா நிலா?” என அவன் கேட்க,
“நான் எங்கே பார்த்தேன். உங்களுக்குதேன் அப்படி தெரியுது!” சட்டென பார்வையைத் தழைத்தபடி பதில் சொன்னாள்.
“ம்ம்! நம்பிட்டேன்!” என்றவன் அட்டகாசமாய் சிரிக்க,
“என்னைப் பார்த்து என்னத்துக்கு சிரிக்கிறீங்க.? அப்பறம் நான் ஃபோனை வச்சிருவேன்!” எனச் சொன்னவளை அழுத்தமாய் பார்த்தான்.
“கட் பண்ணுங்க டீச்சரம்மா! நீங்க கட் பண்ணீங்கன்னா நான் ஒண்ணும் பண்ண மாட்டேன். நேராக உங்க வீட்டுக்கு தான் வந்து நிற்பேன்.!”
“ஆத்தி! வேணாம்! வேணாம்!” அவசரமாய் பதறினாள் அவள். அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கவின் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே ஓடி வந்திருந்தான்.
“அக்கா! என்ன பண்ணிட்டு இருக்க? எனக்கு ஹோம்வொர்க் சொல்லிக்குடு! சீக்கீரம் வா!” என கவின் அழைக்க, அவளோ பாவமாய் இணைப்பிலிருந்த அதிவீரனைப் பார்த்தாள்.
தமக்கையின் பார்வை தன் மீது இல்லாமல், எங்கே இருக்கிறது? எனக் கவனித்தவன்,
“ஐ! மாமா!” என அதிவீரனைப் பார்த்துப் புன்னகைத்தான்.
“மாமா! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! உங்க ட்ரெஸ்.. முடி, ஆர்ம்ஸ், மீசை எல்லாமே எனக்குப் பிடிச்சிருக்கு. நானும் பெருசா ஆனப்பறம் உங்களை மாதிரியே ஆகணும்!” என உற்சாக மிகுதியில், பேசிக்கொண்டே போனான்.
“நீ நல்லா படிச்சா என்னை விட பெரிய போலீஸ் ஆகலாம் கவின்.!”
“நெசமாவா மாமா?”
“ஆமா!”
“நான் பெரிய போலீசாகிட்டா நீங்க என்னைப் பார்த்து சல்யூட் பண்ணுவீங்களா?” என அவன் கேட்க, ‘ஆம்’ என அவன் தலையசக்க,
“அடேய்! அங்கிட்டு போடா! அஞ்சு நிமிஷத்தில் வர்ரேன்.!” என இளையவனை விரட்ட முயன்றாள் அழகுநிலா.
“அங்கிட்டு போடா கவின்! அக்கா வர்றேன் சொல்றேன்ல! நீ தங்கப்பிள்ளை தானே ப்ளீஸ்டா!” எனக் கொஞ்சினாள். கவினின் கன்னத்தைப் பிடித்து அவள் கொஞ்சும் அழகை அலைபேசியின் திரை வழியே பார்த்திருந்தான் அதிவீரன்.
ஆனால் கவினோ, நகரவே இல்லை. மாறாக அலைபேசியின் திரைக்கு இன்னும் அருகில் வந்து நின்றான்.
“மாமா! நீங்க எங்க வீட்டுக்கு எப்போ வருவீங்க?” என ஆர்வமாய் கேட்டான்.
அதிவீரன் அழகுநிலாவைப் பார்த்துச் சிரித்தான்.
“அது உங்க அக்கா கிட்டே தான் நீ கேட்கணும் கவின்! உங்க அக்கா தான் என்னை வர விட மாட்டேங்குறாங்க! ” என்று சிரித்தபடி பதில் சொன்னான்.
“அக்கா! நீ ஏன் அப்படி சொன்ன? மாமாவை வரச் சொல்லுக்கா! அக்கா ப்ளீஸ்!” அழகுநிலாவைப் பிடித்து உலுக்கினான் கவின்.
“ஏன்டா? என்னை போட்டு படுத்தாதே கவினு! உங்க மிஸ்ஸுக்கிட்டே வீட்டில் படிக்கவே மாட்றான்னு சொல்லி குடுத்துருவேன். நீ போ! ஹோம்வொர்க் நோட் கொண்டு வா! நான் சொல்லிக் கொடுக்குறேன்!” எனச் சொன்னாள் அவள்.
“எடுத்துட்டு வர்ரேன்.! அதுவரை நீ ஃபோன் கட் பண்ணக் கூடாது. நான் வர்ரதுக்குள்ளே ஃபோனை கட் பண்ணின.. அக்கா மாமாகிட்டே பேசுறாள்ன்னு அம்மாக்கிட்டே சொல்லிக் குடுத்துருவேன்.!” என அவளை மிரட்டிவிட்டு வெளியே ஓடிப்போனான்.
அவன் சென்றதும் அறை முழுக்க அமைதியே ஆட்சி செய்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே அமைதியாய் அமர்ந்திருந்தனர்.
“நிலா!”
“கவின் வந்துருவான். இப்போ நான் கட் பண்ணவா? வேணாமா? கட் பண்ணினால் வீட்டுக்கு வருவீங்களா?” தயக்கமும் ஆர்வமுமாய் வினவினாள் அவள்.
“நீ வரச் சொன்னால் வர வேண்டியது தான்.!”
“நான் சொல்ல மாட்டேன்! உங்களை வரச் சொல்லிப்புட்டு யார் வசவு வாங்குறது?” என அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே,
“அழகி! வந்து விளக்கேத்தி வெச்சுட்டு போடி! இன்னைக்கு என்ன அடைக்கோழியாட்டம், அறைக்குள்ளே அடைஞ்சு கிடக்குறவ?!” தலையை நீட்டி செல்வி பார்க்க பதறிவிட்டாள் அவள்.
சட்டென அலைபேசியைக் கவிழ்த்து வைத்துவிட்டு, அமைதியாய் அமர்ந்துக் கொண்டாள்.
“இந்த ரெண்டு நிமிஷம் வர்ரேன்மா!” என அவள் பதில் சொல்ல,
“வெரசா வா! விளக்கு வச்சுப்புட்டு பிறகு என்னமும் செய்!” சொல்லிவிட்டு, கதவைத் திறந்துவிட்டு வெளியே சென்றுவிட்டார் செல்வி.
தன் தாய் சென்றுவிட்டாரா, எனக் கோழிக்குஞ்சாய் தலையை நீட்டி எட்டிப் பார்த்தவள், அலைபேசியை மெதுவாய் திருப்பி, அவனைப் பார்க்க, அவனோ, அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
“இவ்வளவு பயமா உனக்கு.? என்கிட்டே தான் பேசுறேன்னு சொல்ல வேண்டியது தானே? நாம ஒண்ணும் தப்பு செய்யலை நிலா!” என அவன் சொல்வதெல்லாம் அவள் தலையில் ஏறவே இல்லை. திறந்திருந்த கதவின் வழியே செல்வி பார்த்துவிடுவாரோ? என்ற பயம் தான் அவள் முகத்தில் தெரிந்தது.
“நான் அப்பறம் பேசுறேன்! அம்மா பார்த்தால் வைவாங்க!’ என அவள் தன்னைப் போல் சொல்லிக் கொண்டே போக,
“நிலா!”
“நி..லா..!”என இருமுறை அழைத்தும், அவள் திரும்பாமல், கதவைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.
“நிலா! என்னைப் பாரு!” என்ற அவனின் அழுத்தமான, கரகரக் குரலில் அவசரமாய் அவன் புறம் திரும்பினாள். அவனோ மந்தகாசப் புன்னகையுடன் அமைதியாய் அமர்ந்திருக்க,
“விளையாடாதீங்க, போலீஸ்காரரே! அம்மா மட்டும் பார்த்துச்சு, ‘கல்யாணத்துக்கு முன்னாடி என்ன பேச்சு வேண்டி கிடக்குன்னு’ கொன்னு குழிதோண்டி புதைச்சுரும்! நான் அப்பறம் கூப்பிடட்டுமா?” என அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவன் முகம் நெருங்கி வருவது அலைபேசி திரையில் தெரிய, அவன் என்ன செய்கிறான்? எனப் புரியாமல் அவள் குழம்பிய முகத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அலைபேசி திரை வழியே தன் முதல் முத்தத்தைப் பரிசளித்திருந்தான் அதிவீரன்.
அவள் சத்தியமாய் இப்படியொன்றை எதிர்பார்க்கவில்லை. என்னதான் அவனின் இதழ் தீண்டலை அவள் உணரவில்லை என்றாலும், அவனின் அடர் மீசைக்குள் புதந்திருந்த வன்மையான உதடுகளின் ஸ்பரிசத்தை உணர்வதைப் போல் அவளுக்குள் பிரம்மை எழ, சிலநொடிகள் உறைந்துவிட்டாள் பெண்.
அவளின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. கன்னங்கள் சிவப்பைப் பூசிக்கொள்ள தயக்கமாய் அவனை விழியுயர்த்திப் பார்த்தாள். வெட்கம் பிடுங்கித் தின்றது. உச்சி முதல் பாதம் வரை, இனம்புரியா உணர்வு ஆட்கொண்டு அவளை ஆட்டுவித்தது.
“லவ் யூ! நிலாப்பொண்ணு! அப்பறம் கூப்பிடு! ஆனால் சீக்கிரம் கூப்பிடு, காக்க வச்சிடாதே!” எனச் சொல்லிவிட்டு அவன் இணைப்பை நிறுத்தியிருக்க, இன்னுமும் இருளடைந்த அலைபேசி திரையையே வெறித்துக் கொண்டிருந்தாள்.
அதிவீரன் எனும் மாயச் சுழலில் அகப்பட்டுக் கொண்டவளின் நெஞ்சம் கொஞ்சமாய் தள்ளாடியது. தள்ளாடும் பூவனமாய் பெண்ணவள் தவித்துக் கிடக்க, ஆணவனோ, அவன் தந்த ஒற்றை முத்தத்தில் அவள் முகம் காட்டிய வர்ணஜாலங்களை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான். அவன் கரம் எப்போதும் போல் மீசையின் நுனியை முறுக்கியது.
******
பத்தாவது முறையாக அலைபேசி அலறி, அழைப்பு நிற்கப் போகும் தருணத்தில் அழைப்பை ஏற்றிருந்தான் கதிரவன். அவன் அலைபேசியை எடுத்ததும், செல்வியின் நீண்ட பெருமூச்சு அவன் செவிகளில் விழுந்தது. கதிரவன் அலைபேசியை செவிக்குக் கொடுத்திருந்தாலும், ஒற்றை வார்த்தை பேசவில்லை.
“ஹலோ!”
“என்னடா கதிரு, பதிலே பேச மாட்டேங்குற?”
“அப்படி என்னடா நாங்க செஞ்சுப்புட்டோம்?”
“நீ காதில்தேன் ஃபோனை வச்சிருக்க, ஆனாலும் பேசமாட்ட? உடம்பொறந்த என்கிட்டேயே அம்புட்டு வீம்பா கதிரு உனக்கு? எனக்கு பின்னாடி பொறந்த உனக்கு வீம்பு இருக்கும் போது, உனக்கு முன்னே பிறந்த எனக்கு இருக்காதா? நான் சொல்ல வேண்டியதை சொல்லிருறேன்.. வாரதும் வராததும் உன் விருப்பந்தேன்.!”
“நம்ம அழகி கல்யாணத்துக்கு தேதி வச்சாச்சுடா கதிரு! தாய் மாமனா நீதேன் முன்னே நின்னு நடத்தணும். நம்ம வீட்டுக் கல்யாணம் டா!”
“அதுக்கு நான் என்ன செய்யணும்?” அத்தனை நேரமாய் பேசாமலிருந்தவனின் மௌனம் உடைந்தது.
“என்னடா இப்படி கேட்கிற? நீ தானே தாய் மாமன்.!”
“உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்காக்கா?”
“நெனைப்பு இல்லாமதேன் உனக்கு ஃபோன் போட்டு சொல்றேனா? உன் மாமா உன்னை வரச் சொன்னாரு டா! உன்கிட்டே பேசணும்ன்னு சொன்னாரு! கொஞ்சம் வந்துட்டு போடா கதிரு!”
“அந்தாளு மூஞ்சியெல்லாம் வந்து பார்க்க முடியாது. அந்தாளு என்ன பேசுவாருன்னு எனக்குத் தெரியும். நானெல்லாம் வர மாட்டேன்.!”
“என்னத்துக்குடா இப்படி வீம்பு பிடிச்சு திரியுற? நம்ம அப்பாவுக்குப் பிறகு, உன்னையும் அம்மாவையும், அரவணைச்சு ஆதரவு தந்தது யாருன்னு நெனைச்சுப் பாரு கதிரு! அவரு மட்டும் இல்லைன்னா என்ன செஞ்சிருப்போம் சொல்லு? நீ இருக்கிற அந்த ஒத்தை வீட்டைத் தவிர அப்பா உனக்குன்னு என்னத்தை விட்டுட்டு போனாரு சொல்லு? இந்தா இப்போ வரைக்குமே யாரு வீட்டு காசை நீ செலவு பண்ணிட்டு திரியுற? எல்லாத்தையும் நெனைச்சுப் பார்க்கணும் கதிரு. இப்போவும் அந்த மனுஷன், ஒரு நல்ல வேலையில் உன்னை இருத்திப்புட மாட்டோமான்னு பாடாத்தேன் படுறாரு! நீ என்னடான்னா கொஞ்சமும் புரிஞ்சுக்க மாட்டேங்குற?!”
“என்னக்கா சொல்லிக் காட்டுறியா?”
“ஆமாடா! சொல்லிக் காட்டுறேன்னு வச்சுக்க! வேற என்னையும் என்னதேன் செய்யச் சொல்ற? ஒத்தை பொட்டப் புள்ளையை பெத்து வச்சிருக்கேன் டா! அவ மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கையை அமைச்சுக் குடுக்க, நான் இம்புட்டு போராடணுமா? அதுவும் வெளியாளுங்கக் கூடப் போராடினாக் கூட பரவாயில்லை! வீட்டுக்குள்ளேயே இருக்கிற உங்கக் கிட்ட நாங்க போராடணுமாடா? என் உடன் பொறந்தவன், நீயும் என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்குற! நான் பெத்த இனியன் பயலும் புரிஞ்சுக்க மாட்டேங்குறான். உள் வீட்டுக்குள்ளே இருக்கிற நீங்களே இப்படி இருந்தால், நான் எங்கதேன் போறது சொல்லு கதிரு?” என செல்வி கேட்க கதிரவன் பதிலே பேசவில்லை.
“பதில் பேசுடா! நீ காதில்தேன் போனை வச்சுருக்கண்டு எனக்குத் தெரியும்! என்னதான்டா செய்யலாம்ன்னு இருக்கீக நீயும் இனியனும்?!” என அவர் எதேச்சையாய் கேட்க அதிர்ந்து விட்டான் கதிரவன்.
“அதெல்லாம் நாங்க ஒண்ணும் செய்யலை!”
“நீங்க என்னமோ பண்ணிப்புட்டு போங்க! அழகிக்கு வர்ர ஞாயிறு நிச்சயம் பண்ணலாம்ன்னு முடிவு செஞ்சுருக்கோம்! தாய் மாமனா வருவியா இல்லையாண்டு சொல்லிப்புடு. நீ வரலைன்னா நம்ம சித்தப்பா மயன் திவாகர் இருக்கான்ல்ல அவனைக் கூப்பிட்டுக்கிறேன். ஒரு ஃபோனை எடுத்து என்கிட்டே பேசவே இம்புட்டு யோசிக்கிற உன்னை நம்புறதா வேணாமான்னு எனக்கு சத்தியமா தெரியலை கதிரு!”
“எனக்குப் பதிலா யாரைக் கூப்பிடணும்ங்கிற வரைக்கும், முடிவு பண்ணி வச்சிட்டியாக்கா? நான் தேவையில்லைண்டு முடிவு பண்ணீட்டிக தானே அம்புட்டு பேரும்.!”
“நானும் என்னதேன் செய்யட்டும் சொல்லு? நான் புடிச்ச முயலுக்கு மூணுகாலுன்னு நீ பிடிச்ச பிடியிலேயே நிற்கிற. அழகிதேன் உன்னைக் கட்ட விருப்பம் இல்லைன்னு சொல்லிப்புட்டாளே! அதுக்குப் பிறகும் அவளைக் கட்டாயப்படுத்தி உனக்கு கட்டி வைக்கச் சொல்லுறியா? நாளைப் பின்னே உனக்கு கல்யாணம் முடிஞ்சு பிள்ளை வரும்ல்ல, உன் மவ இப்படியொரு நிலையில் நின்னால் நீ என்ன செய்வ? நல்லா யோசிச்சு பாரு கதிரு!”
“இப்போ என்ன? இப்படியெல்லாம் பேசி என் மனசைக் கரைக்கப் பார்க்குறியா? அப்போ எனக்கு அழகியைக் கட்டிக் குடுக்குறேன்னு நீ சொல்லியிருக்கக் கூடாது. ஏன் சொன்ன? நீ செஞ்சதுததேன் தப்பு! என் மனசில் ஆசையை வளர்த்துட்டு, வெளியில் மாப்பிள்ளை பார்த்தால் நான் கேட்கக் கூடாதா? கேட்கக் கூட எனக்கு உரிமை இல்லையா?”
“யப்பா சாமி! நான்தேன்டா தப்பு பண்ணிட்டேன். எல்லாத்துக்கும் காரணமே நான்தேன்! உன் காலில் விழணுமா? விழுறேன்டா! .இன்னும் என்னத்தை செஞ்சா உன் மனசாறும்? சொல்லுடா செய்றேன்.!” அழுகையும் கோபமுமாய் செல்வி கேட்க,
“அதேன், எனக்கு பதில் சபையில் நிறுத்த இன்னொருத்தனைப் பார்த்து வச்சிட்டியே, அப்பறம் எதுக்கு இம்புட்டு நடிப்பு நடிக்கிற? கல்யாணவீட்டுக்காரவுக, உங்களுக்கு நிறைய சோலி கிடக்கும். நீ போய் உன் சோலியைப் பாரு! கதிருன்னு ஒருத்தன் இருந்தியான்.. அவன் செத்துட்டான்னு நினைச்சுக்கோ!” எனச் சொல்லிவிட்டு இணைப்பை நிறுத்திவிட்டான் கதிரவன்.
“ஏன்டி! கிறுக்கா பிடிச்சுருக்கு உனக்கு? திவாகரைக் கூப்பிட்டுருக்குன்னு என்னத்துக்கு அவன்கிட்டே சொல்லிட்டு கிடக்க? சும்மாவே அவன் ஆடுவியான். இனி உன் தொம்பி சலங்கைக் கட்டி ஆடுவியான் நீ பாரு!” தன் முதுகிற்கு பின்னிருந்து கேட்ட கணவனின் குரலில் திரும்பிப் பார்த்தார் செல்வி.
“அப்பறம் அவனுக்குச் சொல்ல வேணாமாங்க? சும்மாவே எனக்குச் சொல்லலைன்னு தவ்விக்கிட்டு திரியுறான். தேதி வச்சிருக்குன்னு சொன்னாவாச்சும் வருவான்னு நினைச்சேன். மூஞ்சியில் அடிச்ச மாதிரி ஃபோனை வச்சுப்புட்டான் கிறுக்குப் பய!”
“அக்காளும் தம்பியும் ஒண்ணு போலத்தேன் இருக்கீக? அவன்கிட்டே கொஞ்சம் நீக்கு போக்கா பேசணும் செல்வி! அவன் என்னதேன் படக்குன்னு பேசினாலும், பாசத்துக்கு மட்டுந்தேன் மசிவான். நீ என்னடான்னா நீ வரலைன்னா திவாகரை முன்னே நிறுத்துவேன்னு சொல்லிப்புட்ட. அவன் ஏடாகூடமாய் என்னத்தையாவது செஞ்சு தொலைக்கப் போறான் பாரு.! இனியன் கிட்டே, நீ இப்படி பேசியிருக்கணும். அப்பதேன் அவனுக்கு உறைக்கும்.! கதிருக்கிட்டே கொஞ்சம் நிதானமாத்தேன் பேசணும். யாருக்கிட்டே எப்படி பேசணும்ன்னே உனக்கு இன்னுமும் தெரியலை செல்வி!” என புவியரசு சொல்லவும்,
“ஆமா! உங்களுதேன் எல்லாம் தெரியும்! உங்கக்கிட்டே பேசி ஜெய்க்க முடியுமா? நீங்கதேன் பட்டம் வாங்கிருக்கிகளே?” எனக் கணவனிடம் செல்வி சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம்,
கையிலிருந்த அலைபேசியை மேஜையின் மேல் தூக்கி வீசினான் கதிரவன். ‘பட்’ என்ற சத்ததுடன் மேசையின் மீது விழுந்து, பின் நழுவி கீழே விழுந்திருந்தது.
அலைபேசியின் திரையில் விரிசல்கள் விழுந்திருந்தன. எதையும் கவனிக்காது, சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்த கதிரவனின் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தன.அவன் மனம் தன்னுடைய இடத்தில் வேறொருவனை நிறுத்துவதை ஏற்க மறுத்தது.
அவன் கரம் அவசரமாய் நீண்டு கண் முன்னால் இருந்த மது கோப்பையை எடுக்க, கண்ணாடி குவளையிலிருந்த தங்க நிற திரவத்தை வாய்க்குள் சரித்திருந்தான் கதிரவன். அவனை நிறுத்த விடாமல் பக்த்திலிருந்து ஒருவன் மீண்டும் மீண்டும் ஊற்றிக் கொடுக்க, கோபத்தில் சிவந்திருந்த அவன் கண்கள் மதுவின் போதையில் இரத்தமெனச் சிவந்தது.
ஒரே மூச்சில் இடைவெளி எடுக்காமல் மது அருந்திக் கொண்டிருந்தக் கதிரவனை, எதிரே மெத்திருக்கையில் அமர்ந்தபடி அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தார் இராஜேந்திரன். நினைத்ததை சாதித்துவிட்ட தோரணை அவர் பார்வையில் தெரிந்தது. அவர் இதழ்களில் வன்மப் புன்னகை வழிந்தது.
“எம் மவளையே ஒளிச்சு வச்சு எனக்கே ஆட்டம் காட்டுறியா டா? அதிவீரா..! இந்த இராஜேந்திரனைப் பத்தி உனக்கு தெரியாதுல்ல.? சீக்கிரமே தெரிஞ்சுப்ப!” என அவர் தனக்குள் வன்மத்துடன் சொல்லிக் கொண்டார். அவரின் கண்கள் அதிவீரன் மீதானக் கோபத்தில் நெருப்பு கங்குகளாய் ஜொலித்தது. அவர் கரம் நாற்காலியின் கைப்பிடியை இறுகப் பற்றியது.
அதே நேரம்,
நகரத்தின் மறுபுறம்,
தன் அறையின் ஜன்னலருகே நின்றபடி, அலைபேசியின் திரையில் அழகுநிலாவின் புகைப்படத்தை இரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான் அதிவீரன். அவன் உதடுகள் சன்னமான புன்னகையில் மலர்ந்தது. மீண்டும் மீண்டும் அவள் விழிகளில் விழுந்து தொலைய ஆசைக் கொண்டது ஆணவன் மனம்.
“இன்னும் கொஞ்ச நாள்தான் நிலா! என் பக்கத்திலேயே எனக்கு நெருக்கமா.. என் கைக்குள்ளேயே இருக்கப் போற! காத்துட்டு இருக்கேன் உனக்காக!”
நேசம் நிறைந்த விழிகளுடன் அவன் மெதுவாக முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அதி உன்னோட கல்யாணத்தை நடக்க விடக் கூடாதுன்னு பெரிய சதி நடந்துட்டு இருக்கு நீ போட்டோ வச்சு கனவு கண்டுட்டு இருக்க….
மூளை இல்லாத கதிரவனை கைக்குள்ள போட்டுகிட்டு வன்மம் பிடிச்ச இனியனும் ஜாதி வெறி பிடிச்ச ராஜேந்திரனும் எதோ திட்டம் போடுறாங்க அலார்ட் ஆகுங்க போலீஸ்கார்….
போலீஸ்கார் அலர்ட் ஆகிருவாரு டா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💜