Loading

மருத்துவமனையில் துஷ்யந்த் தன் அறையில் சில மருத்துவ அறிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, அறைக் கதவு தட்டப்படும் ஓசையில், “கம் இன்.” என்றான் தலையை உயர்த்தாமலே.

மறு நொடியே, “சாக்லெட் அங்கிள்…” எனக் கத்திக் கொண்டு உள்ளே வந்தான் பரத். அவனைத் தொடர்ந்து சகுந்தலாவும்.

இருவரையும் கண்டதும் துஷ்யந்த்தின் முகம் பளிச்சிட்டது.

“ஹேய்… சேம்ப்… ஹவ் ஆர் யூ?” எனப் புன்னகையுடன் கேட்டவாறு பரத்தைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டான் துஷ்யந்த்.

“பிஸியா இருந்தீங்களா துஷ்யந்த்?” எனக் கேட்ட சகுந்தலாவுக்கு, “இல்ல சகுந்தலா. பரத்தோட ரிப்போர்ட்ஸ் தான் பார்த்துட்டு இருந்தேன்.” எனப் பதிலளித்த துஷ்யந்த், “சேம்ப். என் கப்போர்ட்ல ஸ்கெட்ச் புக் என்ட் பென்சில் இருக்கு. எடுத்து உங்களுக்கு பிடிச்சதா வரைங்க பார்க்கலாம்.” என பரத்திடம் கூறவும் துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடினான் சிறுவன்.

பரத் அங்கிருந்து சென்றதும், “ரி…ரிப்போர்ட் எல்லாம் ஓக்கே தானே.” எனக் கேட்டாள் சகுந்தலா பயத்துடன்.

“ம்ம்ம்… ஏஸ் யூ ஆல்ரெடி நோ, ஓக்கேன்னு சொல்ல முடியாது. உடனே ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணி ஆகணும். பட் கண்டிப்பா குணப்படுத்தலாம்.” என சகுந்தலாவை சமாதானப்படுத்திய துஷ்யந்த்துக்கு பரத்தின் உண்மையான நிலையைக் கூறி அவளை வருத்தப்பட வைக்க முடியவில்லை.

உண்மையைக் கூறின் பரத்துக்கு சிகிச்சை கொடுக்காமல் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து.

இன்னுமே அவனுக்கு பொருத்தமான இதயம் கிடைக்காததால் குறைந்த பட்சம் மற்ற சிகிச்சைகளையாவது அவசரமாக மேற்கொள்ள வேண்டும்.

துஷ்யந்த் அவ்வாறு கூறவும் சகுந்தலாவின் முகத்தில் மலர்ச்சி.

“நிஜமாவா சொல்றீங்க துஷ்யந்த்? எ…என் பையன் குணமாகுவான்ல.” என ஆசையாகக் கேட்ட சகுந்தலாவின் கண்களில் கண்ணீர்.

தன் நெஞ்சம் புகுந்தவளின் கண்ணீரைத் துடைத்து அவளைத் தன் தோளில் சாய்த்து அவளுக்காக தான் இருக்கிறேன் எனக் கூற துஷ்யந்த்தின் கைகள் பரபரத்தாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் சகுந்தலாவிடம் டிஷு பாக்ஸை நகர்த்தி விட்டு, “கண்டிப்பா சகுந்தலா. கடவுள் மேல நம்பிக்கை வை. பரத்துக்கு எதுவும் ஆகாது. இன்னைக்கே நாம ட்ரீட்மென்ட்ஸ் ஸ்டார்ட் பண்ணலாம். பட் ஃபர்ஸ்ட் ஒரு அம்மாவா நீ மென்டலி தயார் ஆகணும். அதுக்கு நீ ஸ்ட்ராங்கா இருக்கணும்.” என அறிவுறுத்தவும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு சம்மதமாகத் தலையசைத்தாள் சகுந்தலா.

“குட்… முதல் வேலையா நாம மெடிகேஷன்ஸ் ஆரம்பிக்கலாம். பரத் ஆல்ரெடி யூஸ் பண்ணிட்டு இருக்குற மெடிசின்ஸ் இனி கன்ட்னியூ பண்ண வேணாம். நான் புதுசா எழுதி தரேன். முதல்ல பரத்தோட ப்ளெட் ப்ரஷர நார்மல்ல வெச்சிக்கணும். நெக்ஸ்ட் ஹெல்த்தி டயட் ப்ளேன். NDCM ஆல பாதிக்கப்பட்ட அநேகமான பசங்க சாப்பாட்ட விட்டு கொஞ்சம் தூரமா இருப்பாங்க. பட் நான் பார்த்த வரைக்கும் பரத்துக்கு அந்தப் பிரச்சினை இல்ல. அது போக அவன் இன்னும் சின்ன பையன். சோ அதுக்கேத்தது போல நான் நியூட்ரிஷனிஸ்ட் கிட்ட ரிஃபர் பண்ணிட்டு டயட் ப்ளேன் ரெடி பண்ணி தரேன். முடிஞ்ச அளவுக்கு அதையே ஃபாலோ பண்ணுங்க. இருந்துட்டு நின்னு எக்செப்ஷன் இருக்கலாம். தப்பில்ல. அவன் ஆசைப்பட்டு ஏதாவது கேட்டா, ஐ மீன் ரொம்ப அன்ஹெல்த்தியா இல்லாத ஃபூட் எதுவா இருந்தாலும் பண்ணி கொடுங்க. பிரச்சினை இல்ல. பட் எல்லாத்துக்கும் முன்னாடி ஒரு மைனர் சர்ஜரி பண்ணி ஆகணும்.” என்றான் துஷ்யந்த்.

“சர்ஜரியா?” என அதிர்ந்தாள் சகுந்தலா.

“எதுக்கு இவ்வளவு ஷாக் சகுந்தலா? டெக்னாலஜி இப்போ எவ்வளவோ வளர்ந்து இருக்கு. ஒரு சின்ன சர்ஜரி தான். அவ்வளவா வலி கூட இருக்காது. பரத்தோட ஹார்ட் ஆக்டிவிட்டிய மானிட்டர் பண்ணுறதுக்காக ஒரு மினி கார்டியக் மானிட்டர் அவன் செஸ்ட்ல இம்ப்ளான்ட் பண்ணுவோம். அது மூலமா பரத்தோட கண்டிஷன டாக்டர்ஸால உடனுக்குடன் தெரிஞ்சிக்க முடியும்.” என்றான் துஷ்யந்த்.

“ம்ம்ம்… எப்போ சர்ஜரி?” எனக் கேட்டாள் சகுந்தலா இரு மனதாக சம்மதித்தபடி.

“மைனர் சர்ஜரி தானே. நாளைக்கே பண்ணலாம்.” என்ற துஷ்யந்த் சகுந்தலாவின் முகம் வாடியே இருக்கவும், “சகுந்தலா. இப்பவே இந்த சின்ன சர்ஜரிக்காக ஃபீல் பண்ண ஆரம்பிச்சா எப்படி? பரத்தோட கண்டிஷன் உனக்கு நல்லாவே தெரியும். பரத்துக்கு பொருத்தமான டோனர் கிடைச்சதும் ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்ட் சர்ஜரி பண்ண வேண்டி இருக்கு. நீயே இப்படி அழுது ஃபீல் பண்ணிட்டு இருந்தா பரத் எப்படி சம்மதிப்பான்?” எனக் கேட்டான் துஷ்யந்த்.

“என்ன இருந்தாலும் நான் பெத்தவ இல்லையா? நீங்க டாக்டர். டெய்லி இதை மாதிரி நிறைய சர்ஜரி பண்ணுவீங்க. அதனால இதெல்லாம் பெரிசா தெரியாது. ஆனா எனக்கு அப்படியா? பரத் உங்களுக்கு ஜஸ்ட் பேஷன்ட் தான். ஆனா என்னோட பையன்.” என்றாள் சகுந்தலா கண்ணீருடன்.

சகுந்தலாவின் மன அழுத்தம் அவளை அவ்வாறு பேச வைக்கிறது எனப் புரிந்து கொண்ட துஷ்யந்த் எதுவும் கூறாது சகுந்தலாவையே அழுத்தமாக நோக்கினான்.

அதன் பின் தான் சகுந்தலாவுக்கு அவளின் வார்த்தைகளின் வீரியம் புரிந்தது.

“சாரி…” எனத் தயக்கமாக கூறிய சகுந்தலாவிடம், “ஓக்கே கூல். ஐ ப்ராமிஸ் யூ. பரத்த குணப்படுத்த வேண்டியது என் பொறுப்பு. இப்போ போய் இந்த மெடிசின்ஸ வாங்கிட்டு வா. பரத்த நான் பார்த்துக்குறேன்.” என அனுப்பி வைத்தான் துஷ்யந்த்.

சகுந்தலாவை மருந்துகளை வாங்க கீழே அனுப்பி வைத்து விட்டு பரத்தின் அருகே சென்றான் துஷ்யந்த்.

“அங்கிள்… இங்க பாருங்க. நல்லா இருக்கா?” என தான் வரைந்த சித்திரத்தைக் காட்டிக் கேட்டான் பரத்.

ஒரு இளம் பெண்ணும் அவளின் மகனும் தனியாக விளையாடிக் கொண்டிருக்க, தூரத்தில் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டி அவர்களை நோக்கி நடந்து வந்தான் ஒருவன்.

அச் சித்திரத்தைப் பார்க்கும் போதே பரத் தம்மைத் தான் சித்திரமாக வரைந்துள்ளான் என்று புரிந்து கொண்ட துஷ்யந்த்தின் மனதில் என்னவென புரிந்து கொள்ள முடியாத ஒரு ஏக்கம் வந்து சென்றது.

அதனை முகத்தில் காட்டிக் கொள்ளாதவன், “வாவ் சேம்ப். சோ பியூட்டிஃபுல். உனக்கு ட்ராவிங் ரொம்ப பிடிக்குமா?” எனக் கேட்டான் துஷ்யந்த்.

“ஆமா அங்கிள். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் விட நான் தான் சூப்பரா ட்ராவிங் பண்ணுவேன்னு எங்க டீச்சர் சொல்லுவாங்க.” என உற்சாகமாகக் கூறிய பரத் மறு நொடியே முகம் வாடிப் போய், “ஐ மிஸ் மை ஃப்ரெண்ட்ஸ் அங்கிள். எனக்கும் அவங்கள போல திரும்ப ஸ்கூல் போக ஆசையா இருக்கு. பட் மம்மி நோ சொல்லிட்டாங்க.” என்றான் வருத்தமாக.

பரத்தைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்ட துஷ்யந்த், “மம்மி பரத்தோட நல்லதுக்கு தானே சொல்லி இருப்பாங்க. பரத் ரொம்ப இன்டலிஜென்ட் தானே. சோ மத்த பசங்க போல ப்ரீ ஸ்கூல் எல்லாம் போக வேண்டிய அவசியம் இல்ல. பரத்தோட ஹெல்த் ரெகவர் ஆனதும் டேரெக்டா ஸ்கூலுக்கே போகலாம்.” என்கவும் பரத்தின் கண்கள் அகல விரிந்தன.

“நிஜமாவா சாக்லெட் அங்கிள்?” என ஆவலாகக் கேட்ட பரத்திடம், “ஆமா சேம்ப். பட் அதுக்கு பரத் ஹெல்த்தியா இருந்தா தானே மம்மி ஓக்கே சொல்லுவாங்க. ஹெல்த்தியா இருக்க என்ன பண்ணணும்? ஹெல்த்தி ஃபூட்ஸ் சாப்பிடணும். ட்ரீட்மென்ட்ஸ் எல்லாம் குட் பாய் போல எடுத்துக்கணும்.” என்றான் துஷ்யந்த்.

“ட்ரீட்மென்ட்டா? வேணாம் அங்கிள். எனக்கு மெடிசின்ஸ் எல்லாம் பிடிக்கல. ஆப்பரேஷன் பண்ணா வலிக்குமாம். என் ஃப்ரெண்ட்ஸ் சொல்லி இருக்காங்க.” என்றான் பரத் பிடிவாதமாக.

துஷ்யந்த், “மெடிசின்ஸ் சாப்பிடலன்னா, ட்ரீட்மெண்ட் சரியா எடுத்துக்கலன்னா எப்படி பரத் க்யூர் ஆவீங்க? அப்போ உங்க ஃப்ரெண்ட்ஸ் போல ஸ்கூல் போக வேணாமா?” எனக் கேட்கவும், “போகணும் தான். பட் ட்ரீட்மென்ட் வேணாம் அங்கிள்.” என சிணுங்கினான்.

“பரத் மெடிசின்ஸ், ட்ரீட்மென்ட் சரியா எடுத்துக்கலன்னா மம்மி எப்படி உங்கள ஃப்ரெண்ட்ஸ் கூட விளையாட விடுவாங்க? மம்மி பாவம் இல்லையா? பரத் க்யூர் ஆனா தானே மம்மி ஹேப்பியா இருப்பாங்க.” என்ற துஷ்யந்த் அறிந்திருந்தான்‌ பரத் தன் தாயின் மீது வைத்துள்ள பாசம் பற்றி.

சில நிமிட யோசனைக்கு பின் மனமேயின்றி பரத் சம்மதமாகத் தலையாட்டவும், “குட் பாய்…” என்ற துஷ்யந்த் பரத்தின் இரு கன்னத்தில் மாறி மாறி முத்தமிட, சிறுவனின் முகத்தில் புன்னகை.

அதே நேரம் சகுந்தலாவும் மருந்துடன் வர, துஷ்யந்த்தைப் பார்த்து கண்களால் பரத்தைப் பற்றிக் கேட்க, தன் கண்களை மூடித் திறந்து அவளை ஆறுதல் படுத்தினான் துஷ்யந்த்.

மறுநாளே பரத்துக்கு கார்டியக் மானிட்டரைப் பொருத்தும் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஏதேதோ கூறி பரத்தின் மனதை மாற்றி சம்மதிக்க வைத்த துஷ்யந்த்துக்கு சகுந்தலாவை சமாதானப்படுத்தும் வழி தான் தெரியவில்லை.

மாலை அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, அன்று காலை முதல் பரத்தை நொடி நேரம் கூட பிரியாது அவனை அணைத்தவாறே கவலையுடன் காணப்பட்டாள் சகுந்தலா.

“சகுந்தலா. நீயே இப்படி இருந்தா பரத் எப்படி தைரியமா இருப்பான்? உன்ன பார்த்து அவன் பயப்பட மாட்டானா?” எனக் கேட்டான் துஷ்யந்த் சற்று அதட்டலாக.

“துஷ்யந்த். பரத்துக்கு எதுவும் ஆகாது இல்லயா?” எனப் பதட்டமாகக் கேட்ட சகுந்தலாவை முறைத்த துஷ்யந்த், “இது ஜஸ்ட் ஒரு சின்ன சர்ஜரி தான் சகுந்தலா. அவ்வளவு நேரம் கூட எடுக்காது. இதுக்கே இப்படி பண்ணா நெக்ஸ்ட் ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்ட் பண்ணுறது எப்படி?” எனக் கேட்டான்.

எவ்வளவு சமாதானம் கூறியும் சகுந்தலாவின் மனம் திருப்தி அடையவில்லை.

ஒருவித பயத்துடனே காணப்பட்டாள். இறுதியில் துஷ்யந்த்தே சலிப்படைந்து சகுந்தலாவை அவள் போக்கில் விட்டு விட்டான்.

அறுவை சிகிச்சை ஆரம்பமானதும் எங்கும் நகராமல் ஒரு இடத்திலேயே அமர்ந்து தனக்கு தெரிந்த அனைத்து கடவுள்களிடமும் தன் மகனுக்காக வேண்டுதல் வைத்தாள் சகுந்தலா.

முதலில் பரத்திற்கு அனஸ்டீசியா கொடுத்து விட்டு அவனை மயக்கமடையச் செய்தனர்.

தோள்பட்டை எலும்புக்கு சற்று கீழே மானிட்டரை பொருத்துவதற்காக ஒரு அங்குல நீளமான கீறல் போட்டு அதனுள் மினி கார்டியக் மானிட்டரைப் பொருத்தினர்.

இதயத்தில் இருந்து வரும் சமிக்ஞைகள் உடனுக்குடன் இம் மானிட்டருக்கு அனுப்பப்படும்.

அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்ததும் பரத்தை வார்டுக்கு மாற்றினர்.

சகுந்தலா பரத் கண் விழிக்கும் வரை அவனுடனே இருந்தாள்.

சற்று நேரத்தில் கண் விழித்த பரத் ஒரே அழுகை. மருத்துவமனையையே இரண்டாக்கி விட்டான்.

அனஸ்டீசியா கொடுத்த பின்னர் நோயாளிகள் மூன்று விதமாக நடந்து கொள்வர்.

முதல் வகையினர் உறங்கிக் கொண்டே இருப்பர். இரண்டாவது வகையினர் வளவளத்துக்கொண்டு திரும்பத் திரும்ப ஒரே விடயத்தைக் கூறிக் கொண்டிருப்பர். மூன்றாவது வகையினர் எதற்கெடுத்தாலும் அழுவர். அழுது கொண்டே இருப்பர்.

பரத்தும் மூன்றாவது வகையினர் போல் அழுது கொண்டே இருந்தான்.

நல்ல வேளை தனியார் மருத்துவமனை என்பதால் தனியறை கிடைத்திருந்தது.

இல்லாவிடில் பரத் அழுத அழுகைக்கு மற்ற நோயாளிகள் என்னவோ ஏதோவென அச்சம் அடைந்திருப்பர்.

சகுந்தலா எவ்வளவோ பரத்தின் அழுகையை நிறுத்த முயன்றும் எதுவும் பயனளிக்கவில்லை. இறுதியில் தன் மகன் படும் வேதனையைப் பார்த்து அவளும் பரத்துடன் சேர்ந்து கண் கலங்கினாள்.

சகுந்தலாவை பார்வையால் அதட்டிய துஷ்யந்த் பரத்திடம் பேச்சுக் கொடுத்தவாறு அவனை சமாதானப்படுத்த முயல, எதற்கும் மசியவில்லை சிறுவன்.

துஷ்யந்த் நீட்டிய சாக்லெட்டையும் வாங்கிக்கொண்டு பரத் தன் அழுகையைத் தொடர, ஐயோ என்றானது துஷ்யந்த்திற்கு.

ஒரு கட்டத்தில் அழுது அழுதே களைத்துப் போய் உறங்கி விட்டான் பரத்.

அதன் பின் தான் துஷ்யந்த்தாலும் சகுந்தலாவாலும் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

பரத் உறங்கிய நேரம் பார்த்து அவனின் மானிட்டர் சரியாக வேலை செய்கிறதா எனப் பரிசோதித்தான் துஷ்யந்த்.

சகுந்தலா உறங்கும் மகனையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருக்க, “இனிமே இன்னும் கேர்ஃபுல்லா இருக்கணும் சகுந்தலா. பரத்துக்கு நல்ல ரெஸ்ட் தேவை. அதே நேரம் எனர்ஜிய ரொம்ப வேஸ்ட் பண்ணக் கூடாது. அவன் கூடவே இருந்து எல்லாம் பார்த்துக்கணும்.” என்ற துஷ்யந்த்திடம் சரி எனத் தலையசைத்த சகுந்தலா பரத்திடமிருந்து பார்வையைத் திருப்பவே இல்லை.

சகுந்தலாவின் முகத்தில் இருந்த கவலை துஷ்யந்த்தின் மனதை வதைத்தது. அவளை அணைத்து ஆறுதலளிக்க பரபரத்த கைகளை பாக்கெட்டுக்குள் போட்டு அடக்கினான்.

தாய்க்கும் தனையனுக்கும் தனிமையைக் கொடுத்து விட்டு வெளியேறிய துஷ்யந்த் மற்ற நோயாளிகளைக் காணச் சென்றான்.

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
10
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. இவங்களுக்குள்ள காதல் வருமா 🤔