
நிரஞ்சனா சென்றதும் துஷ்யந்தின் கரத்தை உதறி விட்ட சகுந்தலா, “என்ன பண்ணிட்டு இருக்கீங்க துஷ்யந்த்? நிரஞ்சனா எந்த அளவுக்கு ஹர்ட் ஆகி இருந்தா இப்படி எல்லாம் பேசி இருப்பா? உங்க யாருக்குமே அவள தடுக்கணும்னு கூட தோணலயா? அந்தப் பொண்ணு மனசு எந்தளவுக்கு கஷ்டப்பட்டு இருக்கும்? ஆக்சிடன்ட்டா நடந்த ஒரு விஷயத்துக்காக ஏன் உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையையும் நீங்க அழிச்சிக்குறீங்க? நான் தான் என் பையன கூட்டிட்டு எங்காவது தூரமா போய்டுறேன்னு சொல்றேன்ல.” எனக் கேட்டாள் ஆதங்கமாக.
துஷ்யந்த் சகுந்தலாவின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காது அமைதியாக அவளின் முகத்தை வெறித்தான்.
“ஐயோ… திரும்ப திரும்ப என்னை இவ்வளவு பெரிய பாவத்த பண்ண வைக்குறீங்களே. நான் தான் அதிஷ்டம் கெட்டவ. நான் பண்ண பாவம் தான் உங்க எல்லாரையும் பிடிச்சு இருக்கு.” எனக் கதறியவாறு தன் தலையில் அடித்துக் கொண்டாள் சகுந்தலா.
உடனே ஓடி வந்து அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்ட பரிமளத்தின் கண்களிலும் கண்ணீர்.
சகுந்தலாவின் வார்த்தைகளில் துஷ்யந்த் அடைந்த கோபத்திற்கு அளவே இல்லை.
கண்கள் கோபத்தில் சிவக்க, முகம் இறுகிப் போய் சகுந்தலாவை முறைத்துப் பார்த்தவன் எதுவும் கூறாது வேகமாக அங்கிருந்து கிளம்பினான்.
போகும் மகனையே கண்கள் பனிக்கப் பார்த்துக் கொண்டு இருந்த சந்திரசேகரனின் மனதில் தாள முடியாத அளவுக்கு வலி.
ஏதோ ஒரு வகையில் துஷ்யந்தின் இந்த நிலைக்கு தாமும் காரணம் ஆகி விட்டோமே என்ற எண்ணமே அவரை வாட்டி வதைத்தது.
தம் பாசம் அவனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வருவதற்குப் பதிலாக இவ்வளவு பெரிய வலியையும் சங்கடத்தையும் கொடுத்து இருக்கிறதே எனக் கவலை கொண்டார்.
பரத்திற்கான இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உரிய ஏற்பாடுகளை செய்து விட்டு பரத்தைக் காணச் சென்றான் துஷ்யந்த்.
அதே நேரம் சகுந்தலாவும் அழுது சிவந்த விழிகளுடன் பரத்தின் அருகில் அமர்ந்து இருந்தாள்.
பரிமளமும் சந்திரசேகரனும் கூட அங்கு தான் இருந்தனர்.
அப் பெரியவர்களால் தம் பேரனை விட்டு ஒரு நொடி கூட பிரிந்து இருக்க முடியவில்லை.
ஆரம்பத்தில் சகுந்தலாவுடன் சேர்த்து யாரோ புகைப்படம் எடுத்ததற்கே கோபத்தில் வார்த்தைகளை விட்டு இருந்த பரிமளம் கூட பரத் தம் வீட்டு வாரிசு என அறிந்ததில் இருந்து முற்றாக மாறி விட்டார்.
“சேம்ப்… ஹவ் டூ யூ டூ?” எனக் கேட்டவாறு உள்ளே நுழைந்தான் துஷ்யந்த்.
துஷ்யந்தின் குரலில் கண்கள் பளிச்சிட அவன் திசை பார்த்த பரத் பெரிதாகப் புன்னகைத்துக் கொண்டு துஷ்யந்தை நோக்கி கரத்தை நீட்டினான்.
முன்பு போல் பரத் உற்சாகமாகப் பேசாவிட்டாலும் அவன் முகத்தில் இருந்த புன்னகையே துஷ்யந்திற்குப் போதுமானதாக இருந்தது.
பரத்தை நெருங்கி அவன் கரத்தைப் பிடித்துக் கொண்ட துஷ்யந்த், “அப்புறம் சேம்ப்… இப்போ ஹேப்பியா? ஆப்பரேஷனுக்கு ரெடியா? இனிமேல் பரத் சூப்பர் ஹீரோஸ் போலவே ஓடி ஆடி ஆக்டிவ்வா இருக்கலாம்.” என்றான் புன்னகையுடன்.
இவ்வளவு நடந்த பிறகும் கொஞ்சம் கூட சலனமே இல்லாமல் எப்படி துஷ்யந்தால் சாதாரணமாக இருக்க முடிகிறது என்ற கேள்வியுடன் பாதி முறைப்பும் கோபமுமாக அவனை ஏறிட்டாள் சகுந்தலா.
துஷ்யந்த் அவள் பக்கம் கூட திரும்பவில்லை.
ஆனால் அவனது முதுகை ஏதோ ஊசியாயத் துளைக்கும் உணர்விலேயே புரிந்து கொண்டான் அது சகுந்தலா தான் என்று.
துஷ்யந்த் அறுவை சிகிச்சையைப் பற்றிக் கூறியதும் இவ்வளவு நேரமும் புன்னகையுடன் இருந்த பரத்தின் முகம் மாறியது.
“என்னாச்சு சேம்ப்? ஏன் சோகமா இருக்க?” எனக் கேட்டான் துஷ்யந்த் பரிவாக.
துஷ்யந்தின் முகத்தை சில நொடிகள் ஏறிட்ட பரத் பின் தன் அருகில் அமர்ந்து இருந்த சகுந்தலாவையும் அதே பார்வை பார்த்தான்.
பரத்தின் பார்வை சகுந்தலாவின் அடி வயிற்றில் புளியைக் கரைத்தது.
“என்ன சேம்ப்? ஏதாவது சொல்லணுமா?” எனக் கேட்ட துஷ்யந்தின் குரலில் மீண்டும் அவன் முகம் பார்த்த பரத், “அப்பா…” என்றான்.
அதனைக் கேட்டு அனைவருக்குமே அதிர்ச்சி.
ரிஷிகேஷைப் பற்றித் தான் பரத் கேட்கிறான் என அனைவரும் எண்ணினர்.
துஷ்யந்தின் முகமோ இறுகிப் போனது.
இப்போதே சத்தமாக அனைவருக்கும் கேட்கும்படி, ‘நான் தான் உன்னோட அப்பா…’ எனக் கூற வேண்டும் போல இருந்தது துஷ்யந்திற்கு.
ஆனால் பரத்தின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அமைதி காத்தான்.
“பரத்… பேசாம இரு. இத்தனை வருஷமா நான் தானே உன்ன தனியா வளர்த்தேன். நேத்து வந்தவன் மேல அவ்வளவு பாசமா இப்போ? அப்பாவும் இல்ல ஒரு மண்ணும் இல்ல.” என்றாள் சகுந்தலா கோபமாக.
அவள் என்னவோ ரிஷிகேஷை மனதில் வைத்துத் தான் இவ்வாறு கூறினாள்.
ஆனால் துஷ்யந்தின் இதயமோ சகுந்தலா தன்னைத் தான் அவ்வாறு கூறினான் என்பது போல எண்ணி அவளை அடிபட்ட பார்வை பார்த்தான்.
சகுந்தலா தான் அதனைக் கவனிக்கவில்லை.
அடுத்து அடுத்து நடந்த சம்பவங்களில் அவன் தன்னிலை மறந்து காணப்பட்டாள்.
“அம்மாடி… என்னம்மா பேசுற? அதுவும் உடம்பு சரி இல்லாம இருக்குற பையன் கிட்ட. இந்தச் சின்ன வயசுல அவனுக்கு என்ன தெரிய போகுது? பெரியவங்க நாம தான் அதுக்கேத்த போல சொல்லி புரிய வைக்கணும்.” எனக் கடிந்து கொண்டார் பரிமளம்.
அதன் பின்னர் தான் தன் தவறை உணர்ந்து கொண்ட சகுந்தலாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
“பரத் அம்மா…” என சகுந்தலா ஏதோ கூற வாய் திறக்க, “அப்பா…” என்றான் பரத் இம்முறை சற்று சத்தமாகவே துஷ்யந்தைத் தெளிவாக சுட்டிக் காட்டியபடி.
அனைவருக்கும் சில நொடிகள் அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை.
துஷ்யந்தோ ஆனந்த அதிர்ச்சியில் இருந்தான்.
சட்டென ஆண்மகன் அவனின் கண்கள் கலங்கிப் போயின.
“அப்பா…” என பரத் மீண்டும் அழைக்கவே, அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் பரத்தின் அருகில் மண்டியிட்டு ஒரு கையால் லேசாக அவனை அணைத்துக் கொண்டு, “சேம்ப்…” என்றவாறு கண்ணீர் வடித்தான் துஷ்யந்த்.
அதனைக் கண்டு அனைவரின் இதயமும் நெகிழ்ந்து போயின.
சகுந்தலாவிற்கோ என்ன உணர்வு என்றே தெரியவில்லை.
இதனை ஏற்கவும் முடியாமல் ஒதுக்கவும் முடியாமல் உடைந்து போய் விட்டாள்.
“சாக்லேட் அங்கிள்… நீங்க தானே என் அப்பா. எனக்கு கேட்டுச்சு எல்லாரும் பேசினது.” என பரத் மெல்லிய குரலில் கூறவும் ஆமோதிப்பாகத் தலை அசைத்த துஷ்யந்திற்கு இன்னுமே தன் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு விலகி நின்ற துஷ்யந்த், “ஆமாடா கண்ணா. தான் தான் உன்னோட அப்பா. என் பரத் நீ. என்னோட சேம்ப். முதல் நாள் கேட்டியே நான் தான் உன்னோட டாடியான்னு. இப்போ சொல்றேன் கண்ணா. நான் தான் உன்னோட டாடி. பரத் குணம் ஆகி வந்ததும் என் சேம்ப் ஆசைப்பட்ட எல்லாத்தையும் அப்பா நிறைவேத்துறேன். உன் ஃப்ரெண்ட்ஸ் போலவே அப்பா கூட பைக்ல சுத்தலாம். ஹேப்பியா?” எனக் கேட்டான் புன்னகையுடன்.
உடனே புன்னகையுடன் தலை அசைத்தான் பரத்.
சகுந்தலா நடக்கும் எதையும் தடுக்க வழி இல்லாமல் கல்லாய் சமைந்து இருந்தாள்.
பரத்தின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் இட்ட துஷ்யந்த், “அப்போ என் சேம்ப் ஆப்பரேஷனுக்கு ரெடியா?” எனக் கேட்டான் ஆவலாக.
அக் கேள்வியில் உடனே முகம் மாறிய பரத் மறுப்பாகத் தலை அசைக்க, அனைவருமே அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்ன சேம்ப் சொல்ற? சீக்கிரம் ஆப்பரேஷன் முடிஞ்சிடும். என் பையனுக்கு வலிக்காம அப்பா பார்த்துப்பேன்.” என சமாதானமாகக் கூறிய துஷ்யந்த் பரத் பயத்தில் தான் இவ்வாறு கூறுகிறான் என நினைத்தான்.
ஆனால் சிறுவனோ மீண்டும் மறுப்பார்கள் தலை அசைக்கவும் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
“பரத்…” என சகுந்தலா ஏதோ கூற முயல, சட்டென அவளின் கரத்தை இழுத்து துஷ்யந்திடம் நீட்டிய பரத், “என் மம்மிய கல்யாணம் பண்ணிக்கோங்க அப்பா.” என்றான்.
அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போக, “பரத்…” என்றாள் சகுந்தலா அதட்டலாக.
உடனே சிறுவனின் முகம் வாடி விட, துஷ்யந்திற்கோ தன் மகனின் வருத்தமான முகத்தைப் பார்க்க இயலவில்லை.
“சகுந்தலா…” என அவளை அதட்டி எதுவும் பேச வேண்டாம் என சைகை காட்டிய துஷ்யந்த், “சேம்ப்… என் பையன் குட் போய் தானே. அப்பா சொன்னா கேட்பீங்க தானே. முதல்ல பரத் நல்லபடியா ஆப்பரேஷன முடிச்சிட்டு வருவீங்களாம். அப்புறம் நாம வீட்டுக்குப் போய் இதைப் பத்தி எல்லாம் பேசலாம்.” என மகனை சமாதானப்படுத்த முயன்றான்.
பரத்தோ தன் செவிகளை இரு கையாலும் மூடிக்கொண்டு கண்களை இறுக்கி மூடிக்கொண்டு, “மாட்டேன் மாட்டேன். ஆப்பரேஷன் பண்ண மாட்டேன். நீங்களும் மம்மியும் கல்யாணம் பண்ணிக்கலன்னா ஆப்பரேஷன் பண்ண மாட்டேன்.” எனக் கத்தினான்.
சத்தமாகக் கத்தியால் பரத்திற்குத் திடீரென மூச்சு விடவே சிரமமாக இருந்தது.
“பரத்…” என அனைவரும் பதற, ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்து இருந்த துஷ்யந்த் அவசரமாக பரத்திற்கு ஆக்சிஜன் மாஸ்க்கை மாட்டி விட்டான்.
அதன் பின்னர் தான் பரத்தினால் ஓரளவுக்கு சாதாரணமாக மூச்சு விட முடிந்தது.
ஆனால் இதற்கே பரத்தின் முகம் களையிழந்து போய் இமை ஓரம் நீர் கசிந்து இருந்தது.
துஷ்யந்திற்கும் சகுந்தலாவிற்கும் பரத்தின் நிலையைப் பார்த்து உள்ளம் உடைந்து போனது.
“ஏன் சேம்ப் இப்படி பண்ணுற? அப்பா தான் சொல்றேனே நாம இதைப் பத்தி அப்புறமும் பேசலாம்னு.” என்றான் துஷ்யந்த் ஆதங்கமாக.
பரத்தோ கண்ணீருடன் மறுப்பாகத் தலை அசைத்தான்.
துஷ்யந்த் மற்றும் சகுந்தலாவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
அந்த அளவுக்கு பிடிவாதமாகக் காணப்பட்டான் பரத்.
சகுந்தலாவிற்கோ தன்னால் துஷ்யந்தின் வாழ்க்கை பாழாகி விடுமோ என்று பயம்.
துஷ்யந்திற்கோ சகுந்தலாவின் முழு சம்மதம் இன்றி அவளின் கரம் பிடிக்கப் பயம்.
இப்படி இருவரும் அவரவர் தம் எண்ணப்போக்கில் சுழன்றனர்.
“என்னங்க… நீங்க உடனே போய் தாலியும் குங்குமமும் வாங்கிட்டு வாங்க.” எனக் கணவருக்கு உத்தரவு இட்டார் பரிமளம்.
துஷ்யந்தும் சகுந்தலாவும் பரிமளத்தின் அதிரடியில் அவரை அதிர்ச்சியுடன் ஏறிட, சந்திரசேகரனுக்கோ மனைவியின் எண்ணம் தெளிவாகவே புரிந்தது.
துஷ்யந்த் இருக்கும் நிலையில் பரத்தை நிச்சயம் பிரியவும் மாட்டான், இவ்வளவு நடந்த பின்பும் இனி திருமணம் பற்றிய எண்ணமே அவனுக்கு வராது என துஷ்யந்தைப் பெற்ற இருவருக்கும் நன்றாகப் புரிந்தது.
இந்தக் காலத்தில் சகுந்தலாவும் நிச்சயம் இதற்கு சம்மதிக்கப் போவது இல்லை.
சகுந்தலா சம்மதிக்காவிட்டால் துஷ்யந்த் கடைசி வரையிலும் தனி மரமாகவே நிற்பான் என்பதால் தான் இதனை விட்டால் இப்படி ஒரு வாய்ப்பு அமையாது என்று உடனடியாகத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார் பரிமளம்.
“இதோ இப்போவே போய்ட்டு எடுத்துட்டு வரேன் பரி.” எனப் புன்னகையுடன் கூறிய சந்திரசேகரன் அவசரமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
