
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த நிரஞ்சனா சற்று தள்ளி வந்ததும் அவ்வளவு நேரம் அடக்கி வைத்து இருந்த அழுகையை எல்லாம் தேற்றுவார் யாரும் இன்றி கொட்டித் தீர்த்தாள்.
அவளின் நினைவுகள் அனைத்தும் துஷ்யந்தை முதன் முதலாக நேரில் சந்தித்த நாளை நோக்கிச் சென்றது.
துஷ்யந்த் எதிர்ப்பார்க்காத நேரம் காயத்ரி நிரஞ்சனாவுக்கு கைப்பேசியில் அழைத்து அவள் அழைப்பை ஏற்றதும் துஷ்யந்தின் கரத்தில் கைப்பேசியைத் திணித்து விட்டு அங்கிருந்து ஓடி விட, துஷ்யந்த் அதிர்ந்து நின்று விட்டான்.
மறுமுனையில் நிரஞ்சனா மூச்சு விடும் சத்தம் மட்டுமே கேட்க, துஷ்யந்திற்கோ என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என ஒன்றுமே புரியவில்லை.
ஆனால் நிரஞ்சனா வெகு நேரம் அழைப்பில் காத்து இருப்பதை உணர்ந்த துஷ்யந்த், “ஹலோ…” என்றான்.
துஷ்யந்தின் குரலைக் கேட்டதற்கே நிரஞ்சனாவின் அடி வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன.
கன்னங்கள் வேறு வெட்கச் சிவப்பைப் பூசிக்கொள்ள, நல்ல வேளையாக அதனைப் பார்க்க யாரும் அங்கே இருக்கவில்லை.
மறு முனையில் இருந்து எந்தப் பதிலும் வராததால், “ஹலோ…” என்றான் துஷ்யந்த் மீண்டும்.
அதில் தன்னிலை அடைந்த நிரஞ்சனா, “ஹ…ஹலோ…” என்றாள் மெல்லிய குரலில் வேகமாக.
“அது… நான்…” என துஷ்யந்த் வார்த்தைகள் வராது திணற, “சொ… சொல்லுங்க.” என்றாள் நிரஞ்சனா புன்னகையுடன்.
சில நொடிகள் அமைதி காத்த துஷ்யந்த், “நாளைக்கு ஃப்ரீயா இருந்தா மீட் பண்ணலாமா?” எனக் கேட்டான் பட்டென்று.
அதில் ஆனந்த அதிர்ச்சி அடைந்த நிரஞ்சனாவின் கால்கள் தரையில் நிற்கவில்லை.
மீண்டும் நிரஞ்சனாவிடம் இருந்து எந்தப் பதிலும் வராமல் போகவும் எங்கு தான் அப்படிக் கேட்டது அவளுக்குப் பிடிக்கவில்லையோ என எண்ணிய துஷ்யந்த், “உங்களுக்கு இஷ்டம் இல்லன்னா வேணாம். ஒரு பிரச்சினையும் இல்ல.” என்றான்.
துஷ்யந்த் வெளியே செல்லக் கேட்கவும் குதூகலம் அடைந்த நிரஞ்சனாவோ தன் அமைதியை துஷ்யந்த் தவறாக எண்ணிக் கொண்டதைப் புரிந்து, “இ..இல்ல இல்ல. எனக்கு ஓக்கே தான். எங்க மீட் பண்ணலாம்? எப்போ மீட் பண்ணலாம்? எத்தனை மணிக்கு?” எனக் கேட்டாள் நிரஞ்சனா வேகமாக.
எங்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகுமோ என்ற கவலை அவளுக்கு.
தான் பதில் அளிக்கக் கூட நேரம் தராமல் அடுத்து அடுத்ததாகக் கேள்விகளை அடுக்கிய நிரஞ்சனாவின் செயலில் துஷ்யந்தின் முகத்தில் மெல்லியதாய் ஒரு புன்னகை.
“ஹஹா… எத்தனை கேள்வி? நான் பதில் சொல்லலாமா? இல்ல இன்னும் ஏதாவது கேட்கணுமா?” எனக் கேட்டான் துஷ்யந்த் தன்னை மறந்து கிண்டலாக.
தன் ஆர்வக்கோளாறை எண்ணி நாக்கைக் கடித்துக் கொண்டு தலையில் லேசாகத் தட்டிக் கொண்ட நிரஞ்சனா, “ஓ சாரி… நீங்க சொல்லுங்க.” என்றாள் வெட்கத்துடன்.
“நாளைக்கு மார்னிங் நான் ஃப்ரீ தான். எங்க ஹாஸ்பிடல் பக்கத்துல ஒரு கஃபே இருக்கு. உங்களுக்கு ஓக்கேன்னா அங்கயே மீட் பண்ணலாம்.” என்ற துஷ்யந்திடம் நொடி நேரம் கூட யோசிக்காது, “எனக்கு ஓக்கே தான்.” என்றாள் நிரஞ்சனா பட்டென்று.
படபட எனப் பேசும் நிரஞ்சனாவைப் பார்த்து துஷ்யந்தின் முகத்தில் புன்னகை.
“ஓக்கே… நான் டைம் அன்ட் லொக்கேஷன் அனுப்பி வைக்கிறேன். நான் வெச்சிடட்டா?” எனக் கேட்டான் துஷ்யந்த் அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டு.
முதல் தடவை பேசும் போதே இவ்வளவு சொதப்புகிறோமே என எண்ணிய நிரஞ்சனா இதற்கு மேலும் பேசினால் ஏதாவது உளறி வைத்து விடுவோம் என்பதால் சரி என்க, உடனே அழைப்பைத் துண்டித்தான் துஷ்யந்த்.
நிரஞ்சனாவோ அப்போதிலிருந்தே மறுநாள் தன்னவனைச் சந்திக்கப் போவதை எண்ணி கனா காண ஆரம்பித்தாள்.
மறுநாள் வழமைக்கு மாறாக அதிகாலையிலேயே எழுந்து கொண்ட நிரஞ்சனா காயத்ரியைப் படுத்தி எடுத்து விட்டாள்.
ஒவ்வொரு உடையாக அணிவதும் பின் அது நன்றாக இல்லை என்று கூறி வேறு ஒன்றை மாற்றுவதும் என இருந்தாள்.
போதாக்குறைக்கு தலை அலங்காரத்தைக் கூட விதவிதமாகப் போட்டு தங்கையிடம் அபிப்பிராயம் கேட்டாள்.
காயத்ரி சத்தியம் செய்யாத குறையாக நன்றாக இருப்பதாகக் கூறினால் கூட நிரஞ்சனா திருப்தி அடையவில்லை.
“ஆஹ்… என்னவோ பண்ணுக்கா நீ. மனுஷன காலைல தூங்கக் கூட விடாம எழுப்பி வெச்சிட்டு குரங்கு மாதிரி மாத்தி மாத்தி பண்ணிட்டு இருக்க. நான் கிளம்புறேன்.” எனக் கோபமாகக் கூறிய காயத்ரி அங்கிருந்து செல்ல முயல அவசரமாக அவளின் கரத்தைப் பிடித்து இழுத்துத் தடுத்தாள் நிரஞ்சனா.
உடனே கோபமாக நின்ற தங்கையிடம் காதில் கை வைத்து தான் மூத்தவள் என்பது கூட மறந்து சிறு பிள்ளை போல் மன்னிப்பு கேட்கும் நிரஞ்சனாவின் அழகைப் பார்த்து காயத்ரியின் முகத்தில் பெரிதாகப் புன்னகை படர்ந்தது.
“சரி சரி… உடனே இப்படி பாவமா மூஞ்ச வெச்சிக்காதே. இந்த ஹேர் ஸ்டைல் நல்லா தான் இருக்கு. இந்த ட்ரெஸ்ஸ போட்டுக்க.” என்ற காயத்ரி வெள்ளை நிறப் பூக்கள் கொத்தாக நிறைந்து இருந்த ஒரு வான் நீல நிற சுடிதாரைக் காட்டினாள்.
உடனே அதனை அணிந்து வந்த நிரஞ்சனா காயத்ரியிடம் ஏதோ கேட்க வாய் திறக்க, அதற்குள் அவள் முன் கை நீட்டிப் பேச வேண்டாம் என இடையிட்ட காயத்ரி, “எல்லாம் நல்லா தான் இருக்கு. மாமாக்கும் நிச்சயம் பிடிக்கும். இதுக்கு மேல நீ லேட் பண்ணிட்டு இருந்தா மாமா கிளம்பி போய்டுவார்.” என்றாள் செல்லமாக மிரட்டியபடி.
நேரத்தைப் பார்த்த நிரஞ்சனாவும் உடனே துஷ்யந்தைக் காணக் கிளம்பினாள்.
நிரஞ்சனா வரும் வரை கஃபேயில் காத்து இருந்த துஷ்யந்த் நிரஞ்சனாவிடம் பேசுவதற்கு பல முறை ஒத்திகை பார்த்தான்.
ஏதோ ஒரு வேகத்தில் அவளிடம் சந்திக்கக் கேட்டு வந்து விட்டான்.
ஆனால் இப்போது தயக்கமாக இருந்தது.
துஷ்யந்த் ஏதேதோ யோசனையில் இருந்த நேரம் கஃபேயை அடைந்த நிரஞ்சனா துஷ்யந்தைத் தேடிச் சென்று அவன் முன்னால் அமர்ந்தான்.
ஏதோ அரவம் கேட்கவும் தான் தன்னிலை அடைந்த துஷ்யந்த் அவசரமாக எழுந்து நின்று, “ஓ சாரி சாரி. நான் கவனிக்கல.” என்றான் மன்னிப்பு வேண்டும் குரலில்.
“இட்ஸ் ஓக்கே. ஏன் டென்ஷனா இருக்கீங்க?” எனக் கேட்டு நிலைமையை சகஜமாக்க முயன்றாள் நிரஞ்சனா.
“நத்திங்…” என்ற துஷ்யந்திற்கு லேசாக வியர்த்து வழிந்தது.
துஷ்யந்தின் பதட்டத்தை வேறு விதமாக எடுத்துக் கொண்ட நிரஞ்சனாவின் முகமோ செவ்வானமாய் சிவந்தது.
“என்ன சாப்பிடுறீங்க?” எனக் கேட்டான் துஷ்யந்த் தன் பதட்டத்தை மறைத்துக் கொண்டு.
“எனித்திங்.” என்றாள் நிரஞ்சனா மெல்லிய குரலில் புன்னகையுடன்.
நிரஞ்சனா வந்ததில் இருந்தே துஷ்யந்தின் முகத்தை விட்டு பார்வையை அகற்றவில்லை.
அதுவே துஷ்யந்திற்கு நிரஞ்சனாவின் முகத்தை நோக்க சங்கடத்தை ஏற்படுத்தியது.
பின் துஷ்யந்தே வெய்ட்டரை அழைத்து இருவருக்கும் சேர்த்து ஆர்டர் செய்தான்.
அதே நேரம் அவனின் கைப்பேசி ஒலி எழுப்ப, “சாரி… ஜஸ்ட் அ மினிட்.” என்ற துஷ்யந்த் நிரஞ்சனா சம்மதமாகத் தலை அசைக்கவும் அழைப்பை ஏற்றுப் பேசினான்.
மருத்துவமனையில் இருந்து ஏதோ முக்கியமான விடயமாக அழைத்து இருக்க, துஷ்யந்தின் முகம் மிகவும் தீவிரமான பாவனையைக் காட்டியது.
நிரஞ்சனா விழி அகற்றாமல் தன்னவனையே ரசித்துப் பார்த்தாள்.
சற்று நேரத்தில் அமைப்பைத் துண்டித்து விட்டு நிரஞ்சனாவை நோக்கிய துஷ்யந்த் கண்டது என்னவோ முகத்தில் பெரும் புன்னகையுடன் அசையாமல் அமர்ந்து இருந்த நிரஞ்சனாவைத் தான்.
துஷ்யந்த் நிரஞ்சனாவின் முகத்தின் முன் கரத்தை ஆட்டவும் ஏதோ மயக்கத்தில் இருந்து விழித்தது போல் முழித்தாள் நிரஞ்சனா.
நொடிக்கு ஒரு முறை நிரஞ்சனா காட்டிய முக பாவனைகளில் துஷ்யந்தின் முகத்தில் புன்னகை அரும்பியது.
அதற்குள் அவர்கள் ஆர்டர் செய்த உணவுப் பண்டங்களும் வந்து சேர, இருவரும் அமைதியாக சாப்பிட்டனர்.
நிரஞ்சனா வெகு நேரமாக துஷ்யந்தை அவதானித்துக் கொண்டு தான் இருக்கிறாள் அவன் ஏதோ பேச நினைப்பதும் பின் அமைதியாகுவதும் என இருப்பதை.
அதனால் நிரஞ்சனாவே தன் தயக்கம் விட்டு பேச்சைத் தொடங்கினாள்.
“அப்புறம்… என்ன விஷயமா வர சொன்னீங்க? என் கிட்ட ஏதாவது சொல்லணுமா?” எனக் கேட்டாள் நிரஞ்சனா.
“ம்ம்ம்… ஆமா… ஆனா நீங்க இதை எப்படி எடுத்துப்பீங்களோன்னு தான் தெரியல.” என்றான் துஷ்யந்த் தயக்கமாக.
“ஃபர்ஸ்ட் இந்த ஃபார்மலா நீங்க வாங்க போங்கன்னு ரொம்ப மரியாதையா பேச வேணாம். என்னவோ எனக்கு வயசாகிட்ட ஃபீல். அடுத்த விஷயம் எதுவா இருந்தாலும் ஓபன்னா பேசுங்க. நான் எதுவும் நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் உடனுக்குடனே வெளிப்படையா பேசி முடிக்கிறது தான் நம்ம ரிலேசன்ஷிப்புக்கு நல்லதுன்னு நான் நினைக்கிறேன்.” என்றாள் நிரஞ்சனா புன்னகையுடன்.
நிரஞ்சனாவின் முதிர்ச்சியான பேச்சு துஷ்யந்தை வெகுவாகக் கவர்ந்தது.
ஆனால் இதை விட்டால் பேச வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்பதால் ஒரு நீண்ட பெருமூச்சுடன் பேச ஆரம்பித்தான் துஷ்யந்த்.
“ஆக்சுவலி நான் இது வரை கல்யாணத்த பத்தி எல்லாம் யோசிச்சதே இல்ல. எனக்கு அதுக்கான நேரமும் இருந்தது இல்ல. எப்பவும் புத்தகமும் கையுமாவே இருப்பேன். சொல்லிக்குற மாதிரி ஃப்ரெண்ட்ஸ் கூட இல்ல எனக்கு. அம்மாவே சில சமயம் இதைப் பத்தி கலாய்ச்சும் வருத்தப்பட்டும் இருக்காங்க. அது வரைக்கும் அம்மா கல்யாணத்துக்கு கேட்கும் போதெல்லாம் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி பொண்ண செலெக்ட் பண்ண சொல்லிட்டேன். ஆனா எனக்குன்னு சின்ன சின்ன எதிர்ப்பார்ப்புகள் இருந்தது. வேற எதையும் நான் பெருசா எதிர்ப்பார்க்கல.” என்றான் துஷ்யந்த்.
அதுவரை துஷ்யந்த் பேசுவதை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டு இருந்த நிரஞ்சனாவிற்கு அவன் அடுத்து கூறிய விடயத்தில் சட்டென கண்கள் கலங்கிப் போயின.
“அப்போ தான் நானே எதிர்ப்பார்க்காத விதமா ஹாஸ்பிடல்ல சகுந்தலாவ மீட் பண்ணேன்.” எனும் போதே துஷ்யந்தின் முகத்தில் தன்னையும் மீறி ஒரு புன்னகை.
அந்த நாளுக்கே சென்று விட்டான் அவன்.
நிரஞ்சனா தான் அவள் கட்டிய கனவுக் கோட்டைகள் எல்லாம் வெறும் ஆகாயக் கோட்டை ஆகி விடுமோ எனக் கலக்கம் கொண்டாள்.
“என் ஸ்கூல்மேட் அவ. அதுநாள் வரை எனக்கு அப்படி ஒரு உணர்வு தோணினதே இல்ல. இந்தப் படத்துல, கதைல எல்லாம் சொல்லுவாங்களே பார்த்ததும் ஸ்பார்க்னு. அப்படி தான் இருந்துச்சு எனக்கும். ஸ்கூல்ல கூட நான் அவ கூட பேசினதே இல்ல. ஆனா இத்தனை வருஷம் கழிச்சு பார்த்ததும் ஏனோ ஒரு வித்தியாசமான உணர்வு. இதுக்கு பெயர் தான் காதலான்னு எனக்கு தெரியல. ஆனா எனக்கு அந்த உணர்வு பிடிச்சு இருந்தது. அப்போ நான் நினைக்கவே இல்ல துளிர்த்து சில நிமிஷமே ஆன அந்த உணர்வு அப்போவே கருகிப் போய்டும்னு.” என்ற துஷ்யந்தின் குரலில் அவ்வளவு வலி.
அவ்வளவு நேரம் தனக்குள் உடைந்து போய் இருந்த நிரஞ்சனா தன் மனம் கவர்ந்தவனின் குரலிலும் முகத்திலும் தெரிந்த வலியில் அவ் வேதனையைத் தானே உணர்ந்து துஷ்யந்திற்காகக் கவலைப்பட்டாள்.
“அவ பையனுக்கு ரொம்ப சிவியரான ஒரு ஹார்ட் டிசீஸ். அதுக்கு ட்ரீட்மென்ட் எடுக்க தான் வந்து இருந்தா. அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? இல்ல யாரையாவது காதலிக்கிறாளா? எதுவுமே தெரியாம பார்த்ததும் எனக்குள்ள ஆசைய வளர்த்துக்கிட்ட என் மேல தான் எனக்கு எல்லா கோவமும். டீனேஜ் பையன் போல கொஞ்ச நேரத்துக்குள்ள நடந்துக்கிட்டேன். அந்த நிமிஷமே அந்த உணர்வ எனக்குள்ள போட்டு பூட்டி வெச்சிட்டேன். அவ பையன் பரத்… என்னோட குட்டி சேம்ப். அது சகுந்தலாவோட பையன்னு தெரிய வர முன்னாடியே அவனோட அம்மாவ போலவே சட்டுன்னு என் மனசுக்குள்ள நுழைஞ்சிட்டான். சாக்லேட் அங்கிள்னு ரொம்ப உரிமையா கூப்பிடுவான். அப்புறம் தான் தெரிஞ்சது சகுந்தலா இஸ் அ டிவோர்ஸி. அதுக்காக நான் திரும்ப அந்த உணர்வுக்கு உயிர் கொடுக்க நினைக்கல. ஏன்னா எனக்கு என்னோட அம்மா அப்பாவோட சந்தோஷம் முக்கியம். அவங்க நல்லவங்க தான். இல்லன்னு சொல்லல. எனக்காக அவங்க எதையும் செய்வாங்க. நான் ஆசைப்பட்டத நிச்சயம் நடத்திக் கொடுப்பாங்க. ஆனா அது முழு மனசோட நடக்குமான்னு கேட்டா சந்தேகம் தான். என்னைப் பெத்து வளர்த்து சமூகத்துல இவ்வளவு பெரிய இடத்துக்கு கொண்டு வந்த அவங்கள ஒரு சங்கடமான சூழ்நிலைல நிறுத்த நான் விரும்பல. கஷ்டமா தான் இருந்துச்சு. ஆனா இது தான் வாழ்க்கைன்னு ஏத்துக்க பழகிட்டேன்.” என்ற துஷ்யந்தின் விழிகள் ஈரமாகின.
அவனுக்கு எதிரில் அமர்ந்து இருந்த நிரஞ்சனாவும் தன்னை மறந்து கண்ணீர் வடித்தாள் தன்னவனுக்காக.


மின்னலே என் நெஞ்சிலே - பிரியதர்ஷினி S