Loading

துஷ்யந்த் பதிலுக்கு சீண்டுவான் என எதிர்ப்பார்க்காத காயத்ரி வாய் அடைத்துப் போய் நிற்க, துஷ்யந்தின் பெற்றோர் கூட தம் மகனுக்கு இப்படி எல்லாம் பேச வருமா என ஆச்சரியமாக நோக்கினர்.

காரணம் அவர்களுக்குத் தெரிந்த வரையில் துஷ்யந்த் எப்போதுமே பேச்சிலும் சரி, நடத்தையிலும் சரி மிகுந்த முதிர்ச்சியுடன் நடந்து கொள்வான்.

காயத்ரி அமைதியாக நின்றது சில நொடிகள் தான்.

உடனே தன் பழைய குறும்பு தலைதூக்க, “அதனால தானா மாம்ஸ் மெசேஜ்ல கூட அக்கா கேக்குறதுக்கு எல்லாம் ஒத்தை வார்த்தைல பதில் சொல்லி வாயடைச்சி போய் நிற்பீங்க?” என காயத்ரி நக்கலாகக் கேட்கவும் சுற்றி நின்றவர்கள் வாய் விட்டுச் சிரிக்க, துஷ்யந்திற்கோ இதற்கு என்ன பதில் கூற என நிஜமாகவே தெரியவில்லை.

காயத்ரியும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள் நிரஞ்சனா துஷ்யந்திற்கு ஆர்வமாகக் குறுஞ்செய்தி அனுப்புவதும், துஷ்யந்த் அதற்கு ஒற்றை வார்த்தையில் பதில் அளிப்பதும், பின் நிரஞ்சனா முகம் வாடி நிற்பதும் என.

அதனால் தான் தன்னை மறந்து அதனைக் குத்திக் காட்டி இருந்தாள் காயத்ரி.

துஷ்யந்த் மௌனமாய் அமர்ந்து இருக்க, அவனையே பார்த்துக் கொண்டு இருந்த காயத்ரியின் புருவங்கள் குழப்பமாகச் சுருங்கின.

“நம்ம ஐயர் இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்திடுவார் சம்பந்தி. அவர் வந்ததும் நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் ஒரு நல்ல நாளா குறிக்கலாம்.” எனச் சந்திரசேகரன் கூறவும் அதனை ஆமோதித்துத் தலை அசைத்தார் முரளி.

ஆண்கள் வெளியே நின்று நாட்டு நடப்புகள் பேசிக் கொண்டிருக்க, பெண்கள் ஒரு பக்கம் அமர்ந்து மனம் திறந்து வேடிக்கையாகப் பேசிக் கொண்டு இருந்தனர்.

துஷ்யந்த் அங்கிருந்து அகன்று மாடிக்குச் செல்ல, அவனைப் பின் தொடர்ந்து சென்றாள் காயத்ரி.

ஏதோ யோசனையில் நடந்தவனின் முன் திடீரென காயத்ரி வந்து நிற்கவும் ஒரு‌ நொடி அதிர்ந்து இயல்புக்கு வந்தான் துஷ்யந்த்.

காயத்ரியோ மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு துஷ்யந்தையே அழுத்தமாக நோக்கினாள்.

காயத்ரியின் அழுத்தமான பார்வையின் காரணம் புரியாது துஷ்யந்த் குழப்பமாக நின்றது சில நொடிகளே.

பின் அவள் நின்ற கோலமும் அவளது பார்வையும் பள்ளி செல்லும் சிறுமி ஒருத்தி அப்பா வேலை விட்டு வரும் பொழுது தான் கேட்ட சிற்றுண்டியை வாங்கி வரவில்லை என தந்தையைக் கோபமாக நோக்குவது போலவே இருந்தது துஷ்யந்திற்கு.

காரணம் ஐந்தடியை விட குறைவாக, லேசாக பூசிய காயத்ரியின் தோற்றம்.

இப்போது கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கிறாள்.

துஷ்யந்த் அனைத்தும் மறந்து பக்கென சிரித்து விட, காயத்ரியோ தன் பார்வையை மாற்றாது அப்படியே நின்றாள்.

“என்னாச்சு கொழுந்தியா பாப்பா? ஏன் அப்படி பார்க்குற?” எனக் கேட்ட துஷ்யந்திற்கு இன்னுமே சிரிப்பை அடக்க முடியவில்லை.

சிரித்துக் கொண்டே காயத்ரியின் தலையில் கரத்தை வைத்து அழுத்திய துஷ்யந்த், “நிஜமாவே எனக்கு இப்படி ஒரு தங்கச்சி இல்லையேன்னு இன்னைக்கு ஃபீல் பண்ணுறேன். பார்க்க அப்படியே க்யூட்டா குட்டி பாப்பா மாதிரி இருக்க.” என்கவும் கோப மூச்சுகளை வெளியிட்டாள் காயத்ரி.

போதாக்குறைக்கு காயத்ரியின் முகம் கோபத்தில் தக்காளி போல் சிவக்க, அதற்கு மேல் தாங்க முடியாமல் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தான் துஷ்யந்த்.

“மாமா…” என இம்முறை சிணுங்கிக் கொண்டே காயத்ரி தரையில் கோபமாக காலை உதைக்க, “ஓக்கே ஓக்கே… சிரிக்கல. சிரிக்கல.” என்ற துஷ்யந்த் வெகுநேரம் கழித்தே அமைதி ஆகினான்.

“சரி சொல்லு. என்ன விஷயம்? ஏன் கோபமா இருக்க?” எனக் கேட்ட துஷ்யந்திற்கு இத்தனை நாள் நிரஞ்சனாவுடன் கூட வராத நெருக்கம் காயத்ரியின் மீது வந்தது.

அவனது சொந்தத் தங்கை போல் இயல்பாக, உரிமையாகப் பேசினான்.

அது காயத்ரிக்கும் புரிந்தது.

“நிஜமா உங்களுக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதமா?” என காயத்ரி சட்டெனக் கேட்கவும் துஷ்யந்த் ஒரு நொடி அதிர்ந்து, முகம் இறுகி, மறு நொடியே அதனை காயத்ரிக்குத் தெரியாமல் மறைத்தான்.

முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டவன், “என்ன? ஏன் சடன்னா இப்படி ஒரு சந்தேகம்?” என துஷ்யந்த் கேட்கவும், “சொல்லுங்க மாமா.” என்ற காயத்ரியின் தோற்றமே இன்று இக் கேள்விக்கு பதில் அளிக்காமல் துஷ்யந்தை விடப் போவதில்லை என்பது போலவே இருந்தது.

காயத்ரியின் பார்வை தன்னைத் துளைப்பதைக் கண்டு, “என் சம்மதம் இல்லாமலா இவ்வளவு தூரம் ஏற்பாடுகள் நடக்கும்?” எனப் பதிலுக்குக் கேட்டான் துஷ்யந்த்.

“அப்போ என் அக்காவ பிடிச்சு தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சீங்களா?” எனக் கேட்ட காயத்ரியிடம், “இந்தளவு தூரம் வந்த அப்புறமும் அதுல உனக்கு சந்தேகமாடா?” எனக் கேட்ட துஷ்யந்த் சாமர்த்தியமாக காயத்ரியின் கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் தவிர்த்தான்.

ஆனால் காயத்ரி இருந்த யோசனையில் அதனை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

அதன் பின்னர் தான் காயத்ரியின் முகம் இயல்புக்குத் திரும்பியது.

“தேங்க் காட்…” என்றவாறு நெஞ்சில் கை வைத்தவளை புன்னகையுடன் ஏறிட்டான் துஷ்யந்த்.

“நிஜமாவே ரொம்ப பயந்துட்டேன் மாமா. நீங்க வேற இன்னுமே அக்கா கூட‌ சரியா பேசல. அன்னைக்கு வேற பாதில கிளம்பிப் போய்ட்டீங்க. எங்க உங்களுக்கு பிடிக்காம இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சீங்களோன்னு நினைச்சேன்.” என காயத்ரி கூறவும் துஷ்யந்த் பதிலேதும் கூறாமல் புன்னகை மாறாமல் நின்றான்.

“என் அக்கா வெகுளி இல்லன்னாலும் என்னைப் போல ஓப்பன் டைப்பும் கிடையாது. அவ யார் மேலயாவது பாசம் வெச்சிட்டா அதை ரொம்ப எக்ஸ்ட்ரீமாவே வைப்பா. இதனால அவ ஸ்கூல், காலேஜ்ல எல்லாம் நிறையவே ஹர்ட் ஆகி இருக்கா. அவ வேலைக்கு எங்கேயும் போகாம வீட்டுலயே இருக்க விரும்புறதுக்கு அதுவும் ஒரு காரணம். என்னவோ தெரியல. உங்களைப் பார்த்ததுமே அவளுக்கு பிடிச்சு போச்சு. அப்போ இருந்தே உங்க கூட வாழுற வாழ்க்கைய கற்பனை பண்ண ஆரம்பிச்சிட்டா. ஏன் அதுல வாழவே ஆரம்பிச்சிட்டான்னு சொல்லணும். அவ ரொம்ப தைரியசாலி தான். ஆனா அவள உடைக்கிற ஒரே விஷயம் பாசம். என்ன தான் அவ ஒருத்தர் மேல அளவுக்கு அதிகமா பாசம் வெச்சாலும் அதே போல ஆப்பசிட் பர்சனும் தன் மேல பாசம் வைக்கணும்னு எல்லாம் அவ நினைக்க மாட்டா. அதுல ஒரு பர்சன்ட்டாவது அவளுக்கு ரிட்டர்ன் கிடைச்சா போதும்னு தான் நினைப்பா. முக்கியமா என் அக்கா ரொம்பவே பாசிட்டிவ் மைன்ட். யாரையுமே, யாரோட செய்கைகளையுமே தப்பா நினைக்க மாட்டா. அவங்களோட செய்கைகளுக்கு பின்னால ஏதாவது ஆழமான காயம் இருப்பதா தான் நினைப்பா. ஏன் இப்போ கூட உங்க கூட பேசுறதுக்கு அவ்வளவு ஆசை இருக்கு அவ மனசுல. ஆனா நீங்க சரியா மெசேஜ் பண்ணாததுக்கு கூட நீங்க பிஸியா இருப்பீங்க, தூங்கி இருப்பீங்க இப்படி ஏதாவது ஒரு ரீசன் சொல்லி தன்னை சமாதானப்படுத்திப்பா.” என்ற காயத்ரி சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.

காயத்ரியின் பேச்சை மௌனமாய் நின்று காதில் வாங்கினான் துஷ்யந்த்.

“ஆனா மாமா… மத்தவங்களும் நீங்களும் ஒன்னு இல்ல தானே. மத்தவங்களோட செய்கைகளுக்கு ஏதாவது காரணம் சொல்லி தன்னை சமாதானப்படுத்திக்குறவ உங்க விஷயத்துல மட்டும் என்ன தான் உங்க பக்க நியாயத்த பார்த்தாலும் அப்படியே சோகம் ஆகிடுறா. உங்க மேல நிறைய எக்ஸ்பெக்டேஷன் வெச்சிருக்கா. அவ வாடிப் போய் நிற்கிறத ஒரு தங்கச்சியா என்னால பார்த்துட்டு இருக்க முடியல. உங்களுக்கு தோணலாம் சின்ன பொண்ணு எனக்கு இந்தப் பேச்சு எல்லாம் எதுக்குன்னு. ஆனா எங்க அக்காவுக்காக நான் எப்போவும் எந்த சந்தர்ப்பத்துலயும் நிற்பேன்.” என்றவளின் குரலில் அவ்வளவு உறுதி.

ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்ட துஷ்யந்த், “உன் வயசுக்கு நீ இவ்வளவு தூரம் உங்க அக்காவுக்காக யோசிக்குறது பெரிய விஷயம் டா. நான் உன்ன தப்பா நினைக்கவே இல்ல. திரும்பவும் சொல்றேன். எனக்கு இப்படி ஒரு தங்கச்சி இல்லையேன்னு நிஜமா நான் ஃபீல் பண்ணுறேன்.‌ உங்க அக்கா ரொம்பவே கொடுத்து வெச்சவ.” என்கவும் காயத்ரியின் முகத்தில் புன்னகை.

“உண்மை தான். நான் உன் அக்கா கூட இன்னுமே சரியா பேசல. ஹாஸ்பிடல், இமர்ஜன்சி கேஸ் இப்படியே என் நேரம் போறதால அவ்வளவு தூரம் நான் இதைப் பத்தி யோசிக்கல. அது என் தப்பு தான். ஆனா ஒன்னு மட்டும் உறுதியா சொல்றேன். எந்த சந்தர்ப்பத்துலயும் உன் அக்காவ நான் கஷ்டப்படுத்த மாட்டேன். அதே நேரம் என்னால முடிஞ்ச அளவுக்கு அவ எக்ஸ்பெக்டேஷன்ஸ பூர்த்தி செய்வேன். இதை நீ நம்பலாம்.” என துஷ்யந்த் கூறவும், “தேங்க்ஸ் மாமா.” என்றாள் காயத்ரி மனநிறைவான புன்னகையுடன்.

“இனிமே இப்படி நடக்காம நான் பார்த்துக்குறேன்டா. அன்ட் ஒன் பர்சன்ட் என்ன? என்னால முடிஞ்சளவு மேக்சிமம் பாசத்த நான் உங்க அக்காவுக்கு திருப்பி கொடுப்பேன்.” என்றான் துஷ்யந்த் புன்னகையுடன்.

“நிரஞ்சனா கூட நானும் பேச வேண்டி இருக்கு. சோ கண்டிப்பா ஒத்த வார்த்தை இல்லாம நிறைய பேசுவேன்.” என்ற துஷ்யந்திடம், “அதுக்கு ஏன் இன்னும் வெய்ட் பண்ணிட்டு இருக்கீங்க மாம்ஸ்? இப்பவே பேசினாப் போச்சு.” என்ற காயத்ரி துஷ்யந்த் சுதாகரிக்கும் முன் நிரஞ்சனாவிற்கு அழைப்பை ஏற்படுத்தி இருந்தாள்.

அதற்காகவே காத்திருந்தது போல் நிரஞ்சனா உடனே அழைப்பை ஏற்க, உடனே அதனை ஸ்பீக்கரில் போட்டாள் காயத்ரி.

துஷ்யந்தோ காயத்ரியின அதிரடியில் அதிர்ந்து நின்றிருந்தான்.

“என்னாச்சு காயு? அங்க என்ன நடக்குது? டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்களா? அவர் வீட்டுல இருக்காரா? என்னைப் பத்தி ஏதாவது கேட்டாரா? ஏன் அமைதியா இருக்க? ஏதாவது பதில் பேசு.” என மறுமுனையில் இருந்த நிரஞ்னா கேள்விகளை அடுக்க, அவளின் குரலில் தெரிந்த ஆசையிலும் ஆர்வத்திலும் துஷ்யந்திற்கு ஒரு மாதிரியாக இருந்தது.

“ப்பா… முதல்ல கொஞ்சம் மூச்ச விடுக்கா. என்னைப் பேச விட்டா தானே நான் பதில் சொல்ல முடியும்.” என காயத்ரி சலிப்பாகக் கூற, “சரி சரி சொல்லு. நான் பேசல.” என்றாள் நிரஞ்சனா அவசரமாக.

“அதை ஏன் என் கிட்ட கேட்குற? உன் ஆளு கிட்டயே கேட்டுக்கோ. நான் உங்க ரெண்டு பேருக்கும் இடைல நந்தியா இருக்கலப்பா. நான் போறேன்.” என்ற காயத்ரி துஷ்யந்தின் கரத்தில் கைப்பேசியைத் திணித்து விட்டு கீழே இறங்கிச் சென்றாள்.

இதனை கிஞ்சித்தும் எதிர்ப்பார்க்காத துஷ்யந்த் அதிர்ந்து நின்றிருக்க, என்ன பேசுவது என்று தெரியாமல் மறுமுனையில் இருந்த நிரஞ்சனாவும் மௌனமே உருவாய் இருந்தாள்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
12
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்