
துஷ்யந்த் கிளம்பிச் சென்ற பின் அங்கு சற்று நேரம் பேரமைதி நிலவியது.
“நீங்க ஒன்னும் தப்பா நினைக்க வேணாம் அண்ணா. அவன் எப்பவும் இப்படி தான். ஹாஸ்பிடல்னு சொன்னா வேற எதையும் யோசிக்க மாட்டான். அதுவும் இல்லாம அவனுக்கு இந்த ஜாப் அவ்வளவு பிடிக்கும். இதை ஜாப்னு சொல்றத விட என் பையனும் சரி, என் புருஷனும் சரி இதை மக்களுக்கு செய்ற சேவையா தான் பார்க்குறாங்க. ஆனா இந்தக் கல்யாணத்துல என் பையனுக்கு முழு சம்மதம். உங்க பொண்ண வேற அவனுக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. நீங்களே பார்த்தீங்க தானே.” என அவ் அமைதியைக் கலைத்தார் பரிமளம்.
“ஐயோ இதை நீ சொல்லி தானாம்மா நாங்க தெரிஞ்சிக்கணும்? எங்களுக்கு தெரியாதா மாப்பிள்ளைய பத்தி? எங்க எல்லாருக்கும் மாப்பிள்ளை கிட்ட பிடிச்சதே இந்த சுயநலம் இல்லாத அன்பும் அவரோட அர்ப்பணிப்பும் தானே.” என்றார் முரளி.
நிரஞ்சனாவின் முகம் இன்னும் தெளிவில்லாமல் இருக்க, அவளின் கரத்தை அழுத்தி ஆறுதல் அளித்த பரிமளம், “இப்போவே உன்ன பார்த்து என் பையன் தடுமாறி நிற்கிறான். எங்க இன்னும் இருந்தா அவனோட இமேஜ் டேமேஜ் ஆகிடுமோன்னு தான் பையன் ஓடிட்டான் போல.” என அவளின் காதில் மெதுவாகக் கூறவும் இவ்வளவு நேரமும் இருந்த இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தாள் நிரஞ்சனா.
“சரி விஷயத்துக்கு வருவோம். எங்களுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க பையன இனி சொல்லவும் வேணாம். இன்னைக்கு கல்யாணத்த முடிவு பண்ணுற விதமா பொண்ணுக்கு பூ வைக்கிறோம். நீங்க எல்லாரும் சேர்ந்து ஒரு நாள் நம்ம வீட்டுக்கு வாங்க. அன்னைக்கு நம்ம மிச்ச விஷயத்த பேசிக்கலாம். நீங்க என்ன சொல்றீங்க சம்பந்தி?” என முரளியிடம் கேட்டார் சந்திரசேகரன்.
“எங்களுக்கும் பரிபூரண சம்மதம் சம்மந்தி. நீங்க சொல்ற படியே பண்ணிடலாம். அன்னைக்கே கல்யாணத்துக்கு நாளும் குறிச்சிடலாம். அடுத்த வாரம் நாங்க நல்ல நாள் பார்த்து உங்க வீட்டுக்கு வரோம்.” என்றார் முரளி சந்தோஷமாக.
“அப்பா… எவ்வளவு சீக்கிரம் கல்யாணத்த நடத்த முடியுமோ நடத்துங்க. இல்லன்னா மாம்ஸ் அக்காவ தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிப்பார்.” எனக் கூறிச் சிரித்தாள் காயத்ரி.
அதனைக் கேட்டு அனைவரும் வாய் விட்டுச் சிரிக்க, நிரஞ்சனாவை வெட்கம் பிடுங்கித் தின்றது.
அவள் இப்போதே கல்யாணக் கனவுகள் காண ஆரம்பித்து விட்டாள்.
“அதுவும் சரி தான். எனக்கும் எப்போடா என் மருமகள வீட்டுக்கு கூட்டிட்டு போறதுன்னு இருக்கு. சீக்கிரமே கல்யாணத்த நடத்தலாம்.” என்ற பரிமளம் நிரஞ்சனாவின் தாடையைப் பிடித்து கொஞ்சினார்.
பின் பரிமளம் திருமணத்தை உறுதி செய்யும் விதமாக நிரஞ்சனாவின் தலையில் பூ வைத்து, அவள் கழுத்தில் ஒரு சிறிய தங்க மாலை ஒன்றைப் போட்டு விட்டார்.
இனிதே துஷ்யந்த் மற்றும் நிரஞ்சனாவின் திருமண வேலைகள் ஆரம்பமாகின.
____________________________________________________
இங்கோ நிரஞ்சனாவின் வீட்டில் இருந்து கிளம்பிய துஷ்யந்த் தன் காரை எடுத்துக் கொண்டு நேராக கடற்கரைக்குச் சென்றான்.
மண்ணில் கால் புதைய நடந்தவனின் உள்ளம் எல்லாம் வெறுமை.
துளிர்த்து சில நாட்களே ஆனாலும் துஷ்யந்தின் மனதில் சகுந்தலா மீதான காதல் வேரூன்றி விருட்சமாய் வளர்ந்து இருந்தது.
நினைத்ததும் மறந்து விட இது ஒன்றும் பள்ளிப் பருவத்தில் பூத்த காதல் இல்லையே.
பல மனிதர்களைக் கடந்து, அவர்களுடன் பழகி, உலகத்தை சரியாகப் புரிந்து கொண்ட பின் பூத்த முதிர்ச்சியான காதல்.
அதனாலேயே துஷ்யந்தினால் அதில் இருந்து மீள்வது சற்று கடினமாக இருந்தது.
தான் சம்மதித்து திருமணமும் உறுதியான பின்னும் சகுந்தலாவை மனதில் நினைப்பது தன்னை நம்பி வரும் தன் வருங்கால மனைவிக்கும் தன் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ள தன் பெற்றோருக்கும் செய்யும் துரோகம் என்பது துஷ்யந்திற்கு புரிந்தது.
ஆனால் அவனின் மனதிற்கு அது புரிய வேண்டுமே.
சகுந்தலாவை விட்டு விலகிச் செல்லலாம் என்று பார்த்தால் பரத் அதற்குத் தடையாக இருந்தான்.
பரத்தைப் பற்றி நினைக்கும் போது ஏதோ ஒன்று துஷ்யந்தின் மனதைக் கசக்கிப் பிழிந்தது.
எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பரத்திற்கு இதய மாற்று அறுவை சிகிச்சையை நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்தவனின் கைப்பேசி அலறியது.
சகுந்தலா தான் அழைத்திருந்தாள்.
என்னவோ ஏதோவென அவசரமாக அழைப்பை ஏற்றான் துஷ்யந்த்.
காரணம் சகுந்தலா தானாக துஷ்யந்திற்கு அழைத்திருப்பது ஒரு சில முறை தான்.
அது கூட பரத் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒன்றாகவே இருக்கும்.
துஷ்யந்த் அழைப்பை ஏற்ற மறு நொடியே மறு முனையில் செவிப்பறைச் சவ்வைக் கிழிக்கும் அளவுக்கு பரத்தின் அழுகுரல் கேட்கவும் ஏகத்துக்கும் அதிர்ந்து விட்டான் துஷ்யந்த்.
“பரத்… பரத்… சகுந்தலா என்னாச்சு? பரத்துக்கு என்னாச்சு?” எனப் பதட்டமாகக் கேட்டவன் நொடியும் தாமதிக்காது கைப்பேசியைக் காதில் வைத்துக் கொண்டே ஓடிச் சென்று காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.
“துஷ்யந்த்… துஷ்யந்த்…” என்ற சகுந்தலாவும் விம்மிக் கொண்டே பேசவும் துஷ்யந்திற்கு தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது.
“ஓ காட்… சகுந்தலா கன்ட்ரோல் யுவர் செல்ஃப். முதல்ல என்ன நடந்திச்சுன்னு சொல்லு. பரத் ஏன் இப்படி அழுறான்? உனக்கு தெரியும் தானே பரத் இந்தளவுக்கு ஸ்ட்ரெய்ன் பண்ணக் கூடாதுன்னு.” என்ற துஷ்யந்திற்கு எவ்வளவு முயற்சித்தும் குரல் சற்று உயர்ந்தே வெளிப்பட்டது.
அது என்னவோ பரத் என்று வந்து விட்டால் துஷ்யந்திற்கு சகுந்தலா கூட இரண்டாம் பட்சம் தான்.
“எ…எனக்கு தெரியல துஷ்யந்த். ப்ளீஸ் நீங்க வாங்க. என்னால சமாளிக்க முடியல.” என அழுதாள் சகுந்தலா.
“ஓக்கே ஓக்கே… காம் டவுன். நான் வந்துட்டே இருக்கேன்.” என்றவன் பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்து விட்டான்.
துஷ்யந்தைக் கண்டதுமே பரத்தின் அழுகை மேலும் அதிகரிக்க, ஓடி வந்து அவனை தூக்கிக் கொண்டான் துஷ்யந்த்.
“சேம்ப் குட் போய் தானே. அழக் கூடாது. அங்கிள் சொல்றேன்ல.” என்ற துஷ்யந்த் பரத்தின் கண்ணீரைத் துடைத்து விட்டு அவனை சமாதானப்படுத்த, பரத்தோ துஷ்யந்தின் கழுத்தைக் கட்டிக் கொண்டு விடாமல் அழுதான்.
துஷ்யந்திற்கு பரத்தின் அழுகையைப் பார்த்து பயமாக இருந்தது.
சகுந்தலா ஒரு பக்கம் என்ன செய்ய எனப் புரியாமல் கண்ணீருடன் நிற்க, “என்ன தான் ஆச்சு சகுந்தலா? இப்போவாச்சும் சொல்லு.” எனக் கேட்டான் துஷ்யந்த் கோபமாக.
“சத்தியமா எனக்கும் தெரியல துஷ்யந்த். இன்னைக்கு காலைல இருந்தே சின்ன சின்ன விஷயத்துக்கும் பிடிவாதம் பிடிச்சிட்டு இருக்கான். இது வரைக்கும் பரத் இப்படி பிகேவ் பண்ணதே இல்ல. நானும் என்னால முடிஞ்ச அளவு சமாளிச்சுட்டு இருந்தேன். திடீர்னு ஊருக்குப் போகணும். இங்க இருக்க பிடிக்கலன்னு சொன்னான். நானும் இப்போ உடனே போக முடியாது. குணமானதும் போகலாம்னு சொன்னேன். அதைக் கேட்காம உடனே அழத் தொடங்கிட்டான். இப்படி தான் அப்போது இருந்தே கத்தி அழுதுட்டு இருக்கான். இடைல இடைல இங்க இருக்க பிடிக்கல. ஃப்ரெண்ட்ஸ் கிட்ட போகணும். எனக்கு வெளிய விளையாடப் போகணும்னு சொல்லி அழுறான். எவ்வளவு சமாதானப்படுத்தியும் சமாதானம் ஆகல. சத்தம் கூடப் போட்டுப் பார்த்துட்டேன்.” என விம்மிக் சகுந்தலா கூறிய சகுந்தலா கடைசி வார்த்தையைக் கூறும் போது குரல் உள்ளுக்குள் சென்று விட்டது.
துஷ்யந்த் அவளைக் கண்டிப்புடன் நோக்க, “நானும் என்ன தான் பண்ணுறது? பைத்தியம் பிடிக்க போறது போல இருக்கு. எனக்குப் பயமா இருக்கு. ஒருநாளும் இல்லாம திங்க்ஸ் எல்லாம் கூட தூக்கி வீசுறான்.” என சகுந்தலா கூறவும் தான் துஷ்யந்த் சுற்றியும் கவனித்தான்.
வீடே அல்லோலகல்லோகப்பட்டு இருந்தது.
பரத் இன்னுமே கால்களை அடித்துக்கொண்டு முரண்டு பிடித்தவாறு அழுது கொண்டிருந்தான்.
துஷ்யந்தால் ஓரளவுக்கு பரத்தின் மனநிலையைக் கணிக்க முடிந்தது.
பெரிதாக யாரும் இல்லாமல் தனியாக வளர்ந்ததாலும் இப்போது வீட்டிலேயே அடைந்து கிடப்பதாலும் சிறுவன் மற்றவரின் கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக இவ்வளவும் செய்கிறான் எனப் புரிந்தது துஷ்யந்திற்கு.
பரத்தின் வயதிற்கு இந் நடவடிக்கை சாதாரணம் தான்.
பெற்றோரின் கவனத்தைத் திருட பெரும்பாலான பிள்ளைகள் கையில் எடுக்கும் ஆயுதம் இது.
ஆனால் பரத்தின் விஷயத்தில் அவனின் இதயம் மிகவும் பலவீனமாக உள்ளதால் இந்தளவு சத்தமாக அழுவது அவனில் உடல்நிலையை மோசமாக்கி விடும்.
“சரி சரி… நாம போலாம். அங்கிள் கூட்டிட்டு போறேன். நாம போய் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் மீட் பண்ணலாம்.” என துஷ்யந்த் கூறவும் பரத்தின் அழுகையின் வீரியம் குறைந்தாலும் இன்னும் நிறுத்திய பாடில்லை.
“பட் நாட்டி போய்ஸ நான் கூட்டிட்டுப் போக மாட்டேன். குட் போய் போல அழாம சிரிச்சிட்டே இருந்தா மட்டும் தான் கூட்டிப் போவேன். என் சேம்ப் குட் போயா? நாட்டி போயா?” எனக் கேட்கவும் அவசரமாகக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு விம்மிக் கொண்டே, “குட் போய்…” என்றான்.
“கேட்கல…” என துஷ்யந்த் குறும்பாகக் கேட்கவும், “பரத் குட் போய்…” என்றான் சத்தமாகா.
“தட்ஸ் மை போய்…” என்ற துஷ்யந்த் பரத்தின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட, இப்போது தான் பரத்தின் முகத்தில் புன்னகை அரும்பியது.
சகுந்தலா இன்னுமே கண்ணீருடன் நின்றிருக்க, அப்போது தான் துஷ்யந்திற்கு அவளுடன் சற்று கடுமையாக நடந்து கொண்டு விட்டோம் என்பதே புரிந்தது.
“சேம்ப் இப்போ குட் போய் போல நீங்க தூக்கிப் போட்ட டாய்ஸ் எல்லாம் எடுத்து வைப்பீங்களாம்.” என துஷ்யந்த் கூறவும் சரி எனத் தலை அசைத்து விட்டு இறங்கி ஓடினான் சிறுவன்.
பரத் அங்கிருந்து அகன்றதும் சமையலறைக்குச் சென்று ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்த துஷ்யந்த் அதனை சகுந்தலாவிடம் நீட்ட, மறுக்காமல் அதனை வாங்கிக் குடித்தாள் அவள்.
ஜில் என்ற தண்ணீர் உட் செல்லவும் சகுந்தலாவுக்கு ஓரளவு அமைதியாகவும் எதுவும் பேசாமல் சோஃபாவில் சென்று அமர்ந்தாள்.
அவளுக்கு எதிரே அமர்ந்த துஷ்யந்த் தானே பேச்சை ஆரம்பித்தான்.
“ஆர் யூ ஆல் ரைட்?” என்ற துஷ்யந்தின் கேள்விக்கு தலையை மேலும் கீழும் ஆட்டினாள் பெண்ணவள்.
“ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் சாரி சகந்தலா. உன் நிலமையை புரிஞ்சிக்காம நானும் உன் கிட்ட சத்தமா பேசி இருக்கக் கூடாது.” என்றான் துஷ்யந்த் நிஜமான வருத்தத்துடன்.
“சாரி எல்லாம் வேணாம். நானும் தப்பு தான்.” என்றாள் சகுந்தலா உணர்ந்து.
“ஓக்கே லீவ் இட். முதல்ல ஒரு பேரென்ட்டா நீ ஒரு விஷயத்த புரிஞ்சிக்கணும் சகுந்தலா. பரத்னு இல்ல. பரத்தோட வயசுல இருக்குற சின்ன பசங்க நிறைய பேர் இப்படி ரியாக்ட் பண்ணுவாங்க. இது நார்மல் தான். அதுக்கு காரணம் என்னன்னு தெரிஞ்சிக்கணும் நாம. நம்ம கவனத்த அவங்க பக்கம் திருப்ப தான் பசங்க இப்படி நடந்துக்குறாங்க. அதுக்கு நிறைய ரீசன்ஸ் இருக்கலாம். அதைத் தெரிஞ்சிக்க நாம அவங்க வழில தான் போகணும். சத்தம் போடுறதாலயோ, அடிக்கிறதாலயோ அது இன்னும் மோசமா தான் மாறுமே தவிர சால்வ் ஆகாது. அதுக்காக அவங்க சொல்றதுக்கு எல்லாம் தலையாட்ட சொல்லல. ரெண்டு பக்கமும் ஃபிஃப்டி ஃபிஃப்டி வர போல கண்டிஷன்ஸ் முன் வெச்சி அதை செய்யலாம். பட் அதை அவங்க விரும்பி, உணர்ந்து, புரிஞ்சு செய்யணும். இப்போ நான் அதைத் தான் பண்ணேன். நெக்ஸ்ட் பரத் விஷயம் ரொம்ப சென்சிட்டிவ். இப்போ நாம அவன பார்த்து பார்த்து ஹேன்டில் பண்ணணும். ஏன்னு நான் சொல்ல வேண்டியது இல்ல. உனக்கே தெரிஞ்சிருக்கும். எனக்கு தெரிஞ்சு பரத் இப்போ ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணுறான். என்ன தான் நீயோ, நானோ, என் பேரென்ட்ஸோ அவன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணாலும் அவன் வயசு பிள்ளைகளோட இருக்குறது போல வராது. ஏன்னா அவங்க உலகமே தனி. அதுக்குள்ள நம்ம போறது ரொம்ப கஷ்டம். போக முயற்சிக்கலாம். அதுக்கு நிறையவே அஃபோர்ட் போடணும். ஆனா இப்போ நம்ம கிட்ட அவ்வளவு டைம் இல்ல. ஹார்ட் ட்ரான்ஸ்ப்லான்ட் சக்சஸா முடியும் வரை பரத்த கொஞ்சம் பார்த்து ஹேண்டில் பண்ணணும். புரிஞ்சதா?” எனக் கேட்டான் துஷ்யந்த்.
ஆம் எனத் தலை அசைத்த சகுந்தலாவின் முகத்தில் பார்வையை நிலைக்க விட்ட துஷ்யந்தின் முகத்தில் ஏகப்பட்ட சிந்தனை ரேகைகள்.


மின்னலே என் நெஞ்சிலே - பிரியதர்ஷினி S