Loading

துஷ்யந்த் சகுந்தலா இருவரின் பார்வையும் நேர்கோட்டில் சந்தித்தன.

இருவரின் விழிகளுமே உள்ளுக்குள் பூட்டி வைத்திருக்கும் உணர்வை வெளிக்காட்ட முடியாது விரக்தியை வெளிக்காட்டின.

ஆனால் அதனை ஒருவருக்கொருவர் உணர முடியாமல் போனது தான் விதியா?

இருவருமே சுற்றம் மறந்து நின்றிருந்தனர்.

பரத்தின் குரலில் தான் சட்டென தன்னிலை மீண்டனர்.

“சாக்லேட் அங்கிளுக்கு கல்யாணமா? அப்போ இனிமே பரத்த பார்க்க வர மாட்டீங்களா?” எனக் கேட்டான் பரத் ஏக்கமாக.

பரத்தின் உயரத்துக்கு மண்டியிட்ட துஷ்யந்த், “நான் எங்க இருந்தாலும் எப்போன்னாலும் என் சேம்ப்ப பார்க்க ஓடி வந்துடுவேன். சேம்ப்புக்கு என்னைப் பார்க்கணும் போல இருந்தாலும் அங்கிளுக்கு உடனே கால் பண்ணுங்க. நான் வந்துடுவேன். டீல்?” எனக் கேட்டான் சரி எனத் தலையசைத்த பரத்தின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

துஷ்யந்திற்கு ஏனோ பரத்தைப் பார்க்கும் போது சொல்லொணா உணர்வொன்று நெஞ்சைத் தாக்கும்.

பரத்தைக் காணாது துஷ்யந்தாலும் இருக்க முடியும் என்று தோன்றவில்லை.

சற்று நேரம் இருந்து விட்டு துஷ்யந்தும் பரிமளமும் கிளம்பிச் செல்ல, பரத்துக்கு உணவை ஊட்டி விட்டு உறங்க வைத்தாள் சகுந்தலா.

பின் அறையை சாத்திக்கொண்டு வாசல் திண்ணையில் வந்து அமர்ந்தவளின் நினைவுகள் தன் பள்ளிக் காலத்தை நோக்கி பின்னோக்கி நகர்ந்தன.

___________________________________________________

சகுந்தலாவின் ஒருதலைக் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே சென்றது.

போதாக்குறைக்கு வகுப்பில் வேறு துஷ்யந்தையும் சகுந்தலாவையும் சேர்த்து வைத்து கிண்டல் செய்ய, சகுந்தலாவோ துஷ்யந்த் அதற்கு ஏதாவது எதிர்வினை ஆற்ற மாட்டானா என எதிர்ப்பார்த்தாள்.

ஆனால் துஷ்யந்த் யாரின் பேச்சையும் கண்டுகொள்ளவில்லை.

எப்போதும் புத்தகமும் கையுமாகவே இருந்தான்.

துஷ்யந்த் புத்தகத்தில் மூழ்கி விட்டால் சுற்றி நடப்பவை எவையும் அவனின் கருத்தில் பதியாது.

அதனாலேயே அவனை இவர்களின் கேலி கிண்டலோ, சகுந்தலாவின் பார்வையோ பாதிக்கவில்லை.

ஆனால் சகுந்தலாவினால் தான் தன் காதலை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் போராட்டமாக இருந்தது.

சகுந்தலாவின் தோழிகளுக்கு கூட அவளின் ஒருதலைக் காதல் விவகாரம் தெரியாது.

அந்தளவுக்கு யாருக்கும் தெரியாதவாறு நடந்து கொள்வாள்.

ஆனால் தெரிய வேண்டியவனுக்கு கூட அவள் தெரியப்படுத்த முயலாலது தான் அவளின் போதாத காலம்.

இப்படியே நாட்கள் வேகமாக உருண்டோடி பள்ளி இறுதி நாளும் வந்து சேர்ந்தது.

அன்று ப்ளஸ் டூ மாணவர்களின் பிரியாவிடை வைபவம்.

அனைத்து மாணவர்களுமே தம் கலாச்சார உடையில் வந்திருந்தனர்.

ஆண்கள் வேஷ்டி சட்டையிலும் பெண்கள் சேலை மற்றும் தாவணியிலும் என நிகழ்ச்சி கலை கட்டியது.

சகுந்தலா பார்த்துப் பார்த்து தயாராகி வந்திருந்தாள்.

இன்று எப்படியாவது துஷ்யந்திடம் காதலை சொல்லி விட வேண்டும் என்று காலையிலேயே கோயிலுக்கு சென்று வேண்டுதல் நிறைவேற்றி விட்டு வந்திருந்தாள்.

மயில் நீல நிறத்தில் ப்ரிண்டட் சேலை அணிந்து, கூந்தலைத் தளர்வாக ஒரு பக்கம் தோளில் போட்டு, நெற்றியில் குட்டியாய் ஒரு ஸ்டிக்கர் பொட்டு வைத்து, மையிட்ட விழிகளுடன் அன்ன நடை நடந்து வந்தவளின் மீதே அனைத்து ஆண்களின் பார்வையும் ஈயாய் மொய்த்தன.

சகுந்தலா சாதாரணமாகவே பேரழகி தான்.

ஆனால் யாரின் கண்ணையும் கவராத வண்ணம் இருக்கும் அவளின் நடை, உடை, பாவனையால் பெரிதாக ஆண்களின் கவனத்தை ஈர்த்ததில்லை.

ஆனால் இன்றோ மொத்த அழகின் உருவமாய் வந்து நின்றிருந்தாள்.

சுற்றியுள்ளவர்களின் பார்வை தன்னைத் தான் பின் தொடர்கின்றது என்பதைக் கவனிக்காமல் தன் உள்ளம் கவர்ந்தவனைத் தேடி சகுந்தலாவின் விழிகள் அலைபாய்ந்தன.

அதே நேரம் தூரத்தில் யாரோ ஒரு ஆசிரியர் ‘துஷ்யந்த்…’ என அழைக்கும் சத்தத்தில் சட்டென குரல் வந்த திசையில் திரும்பினாள்.

அங்கோ சொல்லி வைத்தாற் போல் மயில் நீல நிற ஷர்ட்டும் தங்க பார்டர் வைத்த வேஷ்டியும் அணிந்து நடந்து வந்து கொண்டிருந்தான் சகுந்தலாவின் கனவுக் கண்ணன்.

எப்போதும் பின்னால் வழித்து சீவி விட்டிருக்கும் முடியோ நெற்றியில் அலை மோத, ஷர்ட்டின் நீண்ட ஸ்லீவ்ஸை முழங்கை வரை மடித்து இருந்தவனைப் பார்க்கும் போது சகுந்தலாவிற்கு அவனை விட்டு பார்வையை விலக்க முடியவில்லை.

சகுந்தலாவைக் கடந்து துஷ்யந்த் செல்லும் அவனின் கை லேசாக அவள் சேலையில் உரசியதற்கே இறக்கை இல்லாமல் வானில் பறந்தாள் பெண்ணவள்.

அப்போது கூட துஷ்யந்தின் பார்வை சகுந்தலாவில் பதியவில்லை.

நிகழ்ச்சிகள் ஆரம்பமாக, சகுந்தலா அமர்ந்து இருந்த வரிசையில் சில இருக்கைகள் தள்ளித் தான் துஷ்யந்த் அமர்ந்து இருந்தான்.

ஆனால் சகுந்தலாவோ ஏதோ அவனுக்கு பக்கத்தில் அமர்ந்து இருப்பது போல் முகம் முழுவதும் வெட்கம் பூசி அவனைப் பார்வையால் கொள்ளை அடித்தாள்.

திடீரென துஷ்யந்த் எழுந்து எங்கோ கிளம்பிச் செல்ல, யாருக்கும் சந்தேகம் வராது சகுந்தலாவும் அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.

மேடையை விட்டு சற்றுத் தள்ளி துஷ்யந்த் நின்றிருக்க, சுற்றியும் நின்றிருந்த மாணவர்களால் அவனுடன் தனியே பேச சந்தர்ப்பம் தேடினாள்.

யாரும் அங்கிருந்து செல்வதைப் போல் தெரியாமல் இருக்க, வேறு வழியின்றி துஷ்யந்தின் பின் சில அடிகள் இடைவெளி விட்டு வந்து நின்றவள், “து…துஷ்யந்த்…” என அப் பெயருக்கே வலிக்காதவாறு அழைத்தாள்.

துஷ்யந்த் பின்னால் திரும்பாமலேயே “ம்ம்ம்…” எனச் சொல்லவும், “உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும். ரொம்ப அவசரம். ப்ளீஸ்… நியூ பில்டிங் பின்னால இருக்குற மா மரத்துக்கு கிட்ட கொஞ்சம் வரீங்களா? ரொம்ப நேரம் எல்லாம் ஆகாது. ப்ளீஸ்…” என்றாள் சகுந்தலா வேகமாக.

அதற்கே அவளுக்கு மூச்சு வாங்கியது.

இதில் தன் காதலை வேறு சொல்லப் போகிறாளாம்.

“ஓக்கே…” என துஷ்யந்திடமிருந்து பதில் வரவும் ஏதோ தன் காதலுக்கு அவன் பச்சைக் கொடி காட்டி விட்டது போல் துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடினாள் சகுந்தலா.

சகுந்தலா சென்று சில நிமிடங்கள் கழித்து பின்னால் திரும்பிப் பார்த்த துஷ்யந்த் அங்கு யாரும் இல்லாமல் போகவும் தன் காதில் மாட்டி இருந்து எயார்பொட்ஸ் இரண்டையும் கழற்றி கையில் எடுத்தான்.

இங்கு சகுந்தலாவோ துஷ்யந்தின் வரவை எதிர்ப்பார்த்து வெகுநேரம் காத்திருந்தாள்.

நேரம் செல்லச் செல்ல அவளின் உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் தொடங்கியது.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் காத்திருந்தாள்.

ஆனால் கடைசி வரை துஷ்யந்த் வரவே இல்லை.

இவ்வளவு நேரமும் இருந்த சந்தோஷம் எல்லாம் எங்கோ ஒளிந்துகொள்ள, விட்டால் அழுது விடுவாள் போல் காணப்பட்டாள் சகுந்தலா.

முகம் சிவந்து கண்கள் கலங்கிப் போயின‌.

தான் அழுது யாராவது பார்த்து விட்டால் வீணாக பேசுபொருள் ஆகி விடுவோம் என்பதால் அவசரமாக முகத்தை சரி செய்து கொண்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றாள்.

அங்கு சென்றவளின் கண்கள் துஷ்யந்தைத் தான் தேடின.

ஆனால் விடை என்னவோ பூச்சியம் தான்.

அவனுக்கு தன்னிடம் பேசக் கூட விருப்பம் இல்லை போல என்று நினைத்த சகுந்தலா அதன் காரணமாகத் தான் அவள் அழைத்தும் துஷ்யந்த் வராமல் போனான் என முடிவு செய்தாள்.

அதற்கு மேல் அங்கு நிற்க சகுந்தலாவால் சற்றும் முடியவில்லை.

உடனே அங்கிருந்து கிளம்பி வீட்டுக்குச் சென்றாள்.

வீட்டுக்குச் சென்று கட்டிலில் விழுந்தவளோ ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.

___________________________________________________

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த சகுந்தலா பரத் சிணுங்கும் சத்தம் கேட்டே நிகழ்காலத்திற்கு வந்தாள்.

கன்னங்கள் இரண்டும் ஈரமாய் இருக்க, அதன் பின்னரே இவ்வளவு நேரமும் தான் அழுது இருக்கிறோம் என்பதையே சகுந்தலா உணர்ந்தாள்.

நீண்ட பெருமூச்சுடன் முகத்தை அழுத்தத் துடைத்தவள் சில நொடிகள் கண்களை மூடி தன் மனதுக்கு கடிவாளம் இட்டு விட்டு மகனைக் காணச் சென்றாள்.

மறுநாள் துஷ்யந்தின் வீடு வெகு பரபரப்பாகக் காணப்பட்டது.

பரிமளம் ஒரு இடத்தில் நிற்காமல் பணியாட்களுக்கு வேலைகளை ஏவிக்கொண்டு இருந்தார்.

சந்திரசேகரனும் யாருடனோ தீவிரமாகக் கைப்பேசியில் பேசிக்கொண்டு இருந்தார்.

துஷ்யந்தோ முகத்தை உர் என வைத்துக் கொண்டு தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்து இருந்தான்.

அன்று தான் பெண் பார்க்க நிரஞ்சனாவின் வீட்டுக்கு செல்ல இருந்தார்கள்.

திருமணத்துக்கு சம்மதம் சொன்னதும் தன் வேலை அத்துடன் முடிந்தது என்று துஷ்யந்த் எண்ணி இருக்க, அவனின் தாயோ மருத்துவமனை கிளம்பத் தயாராகி வந்தவனை வலுக்கட்டாயமாக லீவ் போட வைத்து அவனும் பெண் பார்க்கும் சடங்கிற்கு வந்தே ஆக வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

துஷ்யந்தின் பாட்சா எதுவுமே பரிமளத்திடம் செல்லுபடியாகவில்லை.

“அம்மா… நீங்க ரெண்டு பேரும் இருந்தா போதாதா? நான் எதுக்கு? அதான் ஃபோட்டோ பார்த்து ஓக்கே சொல்லிட்டேனே.” என்றான் துஷ்யந்த் கடுப்பாக.

“ஃபோட்டோ பார்த்தா போதுமா? நேர்ல போய் பார்த்து, ரெண்டு பேரும் பேசி முழு மனசா சம்மதிச்சு, அப்புறம் பூ வெச்சிட்டு வந்தா தானே கல்யாணம் பேசி வெச்சதா இருக்கும். கல்யாணம் பண்ணிக்க போறவன் நீ தானே. அப்புறம் நீ இல்லாம எப்படி?” எனக் கேட்டார் பரிமளம்.

“அதுக்கு உங்களுக்கு இன்னைக்கு தானா கிடைச்சது? இப்படி திடீர்னு சொன்னா எப்படி? நேத்து கூட ஒரு வார்த்தை சொல்லலயே.” எனக் கேட்ட துஷ்யந்திற்கு எப்படியாவது இதிலிருந்து கழன்று கொள்ளும் எண்ணம்.

“இன்னைக்கு தான் நல்ல நாள். அதான் எதுக்கு லேட் பண்ணிக்கிட்டுன்னு இன்னைக்கே பொண்ணு பார்க்க போறோம். நேத்து தான் ஜோசியர் கிட்ட பேச நேரம் கிடைச்சது. அவரும் ரொம்ப காலம் தாழ்த்தாம சீக்கிரமே கல்யாணத்த நடத்த சொன்னார்.” என்ற பரிமளம் இன்னுமே ஒரு இடத்தில் நிற்கவில்லை.

பணியாட்களை வைத்து வேலை செய்தும் கூட அவருக்கு தலைக்கு மேல் வேலை இருப்பது போல் எண்ணம்.

ஒரே மகனின் திருமணம். சொல்லவும் வேண்டுமா இனி?

துஷ்யந்தும் ஏதேதோ சொல்லிப் பார்த்தான்.

எதுவுமே செல்லுபடி ஆகவில்லை பரிமளத்திடம்.

தான் துஷ்யந்தின் தாய் என்பதை நிரூபித்தார் அவர்.

எப்படியோ அது இது என சமாளித்து பெண் வீட்டுக்குக்குக் கிளம்பிச் சென்றனர் மூவரும்.

துஷ்யந்தின் வீடு போல் இல்லாவிடிலும் ஓரளவு வசதியாகக் காணப்பட்டது நிரஞ்சனாவின் வீடு.

நிரஞ்சனாவின் தந்தை முரளியும் தாய் வேணியும் வாசலுக்கே வந்து அவர்களை வரவேற்றனர்.

“வாங்க வாங்க… வாங்க சம்பந்தி. வாம்மா தங்கச்சி. வாங்க மாப்பிள்ளை…” என வரவேற்ற முரளியைப் பார்த்து வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் தலை அசைத்தான் துஷ்யந்த்.

என்ன தான் மனதைக் கல்லாக்கிக் கொண்டு திருமணத்துக்கு சம்மதித்து இருந்தாலும் இப்படி ஒவ்வொரு நிகழ்வும் அடுத்து அடுத்து நடைபெற, துஷ்யந்தால் அவற்றை சமாளிக்க முடியவே இல்லை.

அவனின் இதயம் அவ்வளவு பாரமாக இருந்தது.

பெருமூச்சுடன் தன் பெற்றோரைப் பின் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்தான் துஷ்யந்த்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
16
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்