Loading

தன் கையில் வைத்திருந்த ரிப்போர்ட்டை வெறித்த வண்ணம் அமர்ந்து இருந்தான் துஷ்யந்த்.

ரிப்போர்ட்டில் குறிப்பிட்டு இருந்தவை எவையும் திருப்திகரமானதாய் இல்லை.

உடனடியாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும்.

அன்று மதியம் போர்ட் மீட்டிங் முடிந்ததில் இருந்தே துஷ்யந்த் தனக்குத் தெரிந்த எல்லா இடங்களிலும் பரத்துக்குப் பொருத்தமான இதயத்தைப் பற்றித் தான் விசாரித்துக் கொண்டு இருந்தான்.

பொருத்தமான இதயம் கிடைக்கும் என்பது அவனுக்கு நிச்சயம்.

ஆனால் அதுவரை பரத்தின் உடல்நிலை சீராக இருக்க வேண்டுமே.

ஐந்து வயது சிறுவனுக்கு அளவுக்கு அதிகமான மருந்துகளும் கூட சோர்வைத் தான் ஏற்படுத்தும்.

என்ன தான் விஷேட இதய நிபுணராக இருந்தாலும் ஏனோ பரத் என்று வரும் போது மட்டும் துஷ்யந்த் அப்படியே செய்வதறியாது போகிறான்.

துஷ்யந்த் மருத்துவமனையில் இருந்து நேராக சகுந்தலா வீட்டுக்கு கிளம்ப, காலையில் இருந்ததை விட பரத் ஓரளவு சுறுசுறுப்பாகக் காணப்பட்டான்.

“சாக்லேட் அங்கிள்…” என்றவாறு ஓடி வந்து தன் கால்களைக் கட்டிக்கொண்ட சிறுவனை அள்ளி அணைத்துக் கொண்டான் துஷ்யந்த்.

அதனைக் கண்டு சகுந்தலாவின் முகத்தில் மெல்லிய புன்னகை.

“ஹவ் டூ யூ ஃபீல் சேம்ப்?” எனக் கேட்ட துஷ்யந்திடம், “பர்ஃபெக்ட்…” என்றான் பரத் பெருவிரலை உயர்த்திக் காட்டி.

“சேம்ப் உள்ள போய் விளையாடிட்டு இருங்க. அங்கிள் மம்மி கூட கொஞ்சம் பேசிட்டு வரேன்.” என பரத்தை உள்ளே அனுப்பி வைத்த துஷ்யந்த் சகுந்தலாவின் பக்கம் திரும்ப, “ஹேய் சில் டா… ஆல் ஓக்கே. ரிப்போர்ட் கூட ஓக்கே தான். மெடிகேஷன மட்டும் கொஞ்சம் சேன்ஜ் பண்ணலாம்.” என்றான் துஷ்யந்த் பதட்டமாகக் காணப்பட்டவளிடம்.

“நிஜமா தான் சொல்றீங்களா? ப்ளீஸ்… எதுன்னாலும் மறைக்காம சொல்லுங்க. இப்போ நீங்க நான் வருத்தப்படுவேன்னு மறைச்சி பின்ன ஒருநாள் அது தெரிய வரும் போது இன்னும் கஷ்டமா இருக்கும். உங்க முகமே நீங்க எதையோ என் கிட்ட இருந்து மறைக்கிறீங்கன்னு சொல்லுது. ப்ளீஸ் துஷ்யந்த்… சொல்லுங்க.” என்றாள் சகுந்தலா கெஞ்சலாக.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல சகுந்தலா. எவ்வளவு சீக்கிரம் ஹார்ட் ட்ரான்ஸ்ப்லான்ட் பண்ண முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பண்ணுறது நல்லது. வேற ஒன்னும் இல்ல. அதைப் பத்தி தான் நான் யோசிச்சிட்டு இருந்தேன். ஏன்னா பரத்தோட பாடி அவ்வளவு பெரிய சர்ஜரிய தாங்கிக்கணும்ல.” என்றான் துஷ்யந்த் சகுந்தலாவை சமாதானப்படுத்தும் விதமாக.

________________________________________________

அடுத்து வந்த நாட்கள் வழமை போன்று சாதாரணமாகக் கழிந்தன.

சகுந்தலா வீட்டில் இருந்தே வேலை செய்வதால் அவளுக்கு பரத்தை இருபத்தி நான்கு மணி நேரமும் கண்காணிக்க முடிந்தது.

துஷ்யந்தும் நாள் தவறாமல் பரத்தை வந்து பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டு இருந்தான்.

பரத்தைப் பார்ப்பது மட்டும் தான் அவனது ஒரே நோக்கம். அவ்வாறு கூறி அவனது மனசாட்சியை அடக்கிக் கொண்டு இருந்தான்.

பரிமளம் கூட இடைக்கிடையே வந்து பரத்துடன் நேரம் செலவழித்து விட்டு செல்வார்.

பரத்தும் கூட ‘பாட்டி… பாட்டி…’ என அவருடன் நன்றாகவே ஒட்டிக் கொண்டான்.

சந்திரசேகரனுக்கு அவர்களை வந்து சந்திக்க நேரம் இல்லாத போதிலும் துஷ்யந்திடம் அடிக்கடி பரத்தைப் பற்றி விசாரித்துக் கொள்வார்.

அன்றைக்குப் பிறகு சகுந்தலா ரிஷிகேஷ் பற்றியே சுத்தமாக மறந்து விட்டாள்.

அவளுக்கு பரத்தைப் பற்றி நினைக்கவே நேரம் சரியாக இருந்தது.

துஷ்யந்திற்கு ஒரு பக்கம் பரத்தைப் பற்றிய கவலை என்றால் இன்னொரு பக்கமோ அவனின் மனதுடன் போராடுவது பெரும்பாடாக இருந்தது.

அவனின் காதல் கொண்ட உள்ளம் சகுந்தலாவைக் காணும் ஒவ்வொரு நொடியும் அவனை உயிரோடு வதைத்தது.

சகுந்தலாவை விட்டு விலகி இருந்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள முயற்சிக்கலாம் என நினைத்தால் அதனை செயற்படுத்த வழி இல்லாது பரத் தடையாக இருந்தான்.

ஏனென்றால் பரத்திற்கு இப்போது துஷ்யந்தின் துணை மிகவும் அவசியம்.

ஏன் அவனது தாய்க்கும் கூட என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் தன் மனதிடம் தோற்று விட்டால் அதன் மூலம் பல பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் மனதைக் கல்லாக்கிக் கொண்டு இருந்தான்.

சரியாக அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் சந்தர்ப்பத்தை பரிமளமே உருவாக்கினார்.

அன்று இரவு டியூட்டி முடிந்து வீட்டுக்கு வந்த துஷ்யந் குளித்து உடை மாற்றி வந்து சாப்பிட அமர்ந்தான்.

அவனுக்கு உணவைப் பரிமாறிய பரிமளம் துஷ்யந்த் சாப்பிடும் வரை அங்கிருந்து நகராது இருக்கவும் அவரைக் குழப்பமாக ஏறிட்டான் துஷ்யந்த்.

“ஏதாச்சும் சொல்லணுமா ம்மா என் கிட்ட?” எனக் கேட்ட மகனின் அருகில் ஒரு கவரை நகர்த்தி வைத்தார் பரிமளம்.

துஷ்யந்த் இன்னுமே தாயின் பதலுக்கு அவரின் முகம் பார்க்கவும் பரிமளம், “எல்லாம் நான் வாயாலயே சொல்லணுமா? அதைக் கொஞ்சம் எடுத்துப் பாருப்பா.” என்றார்.

தாயின் பதிலில் சட்டெனப் புன்னகைத்த துஷ்யந்த் கையைக் கழுவிக்கொண்டு வந்து அமர்ந்து பரிமளம் வைத்த கவரைக் கையில் எடுத்தான்.

உடனே அவனுக்கு விளங்கி விட்டது அது என்னவென்று.

உள்ளுக்குள் எதுவோ உடைவது போலவே உணர்ந்தான் துஷ்யந்த்.

ஆனால் துஷ்யந்தின் மனசாட்சியோ நேரம் பார்த்து அவனைப் பழி வாங்கியது.

‘அதான் சார்ட மனசுல எதுவும் இல்லையே. அப்புறம் எதுக்கு இந்தத் தயக்கம்?’ எனக் கேட்டது நக்கலாக.

அதன் பேச்சைத் தட்டி விட்டு பரிமளம் தந்த கவரைப் பிரித்தான் துஷ்யந்த்.

“பொண்ணு பெயர் நிரஞ்சனா. பொண்ணுக்கு இருபத்தைந்து வயசு. ஐந்தடி உயரம். அளவான வெய்ட். நல்லா படிச்சிருக்கா. ஆனா வீட்டோட இருக்குறது தான் பிடிக்கும்னு எந்த வேலைக்கும் போகலயாம். ஒரு வகைல நம்ம தூரத்து சொந்தம். என்ன தான் படிச்சிருந்தாலும் நம்ம கலாச்சாரத்த விட்டுக் கொடுக்காம இருக்கா. குடும்பத்துக்கு அடங்கிப் போற பொண்ணு. அதுக்காக வாய் இல்லாப் பூச்சி இல்ல. ரொம்பவே தைரியசாலி தான்.” என துஷ்யந்த் புகைப்படத்தைப் பார்க்கும் முன்பே பரிமளம் ஒரு லிஸ்ட்டையே அடுக்கிக்கொண்டு போக, வாய் விட்டே சத்தமாக சிரித்து விட்டான் துஷ்யந்த்.

அதன் பின்னர் தான் பரிமளம் தன் பேச்சை நிறுத்தினார்.

“பின்ன என்ன கண்ணா? நானும் வாரத்துக்கு ஒரு பொண்ணு ஃபோட்டோ காட்டுறேன். எல்லாத்தையும் ஏதாவது நொண்டி சாக்கு சொல்லி தட்டிக் கழிச்சிட்டே இருக்க. அதான் நீ சொன்ன எல்லா குவாலிஃபிக்கேஷனோடயும் இந்தத் தடவை பொண்ணைக் கொண்டு வந்திருக்கேன். இந்தப் பொண்ணுக்கு என்ன சொல்லப் போற?” எனக் கேட்டார் பரிமளம்.

“அம்மா… நான் இன்னும் பொண்ணு ஃபோட்டோ கூட பார்க்கல.” என்றான் துஷ்யந்த் சிரித்தபடி.

அதில் பரிமளம் தன் அவசரக்குடுக்கைத்தனத்தை எண்ணி நாக்கைக் கடித்துக்கொண்டு புன்னகைத்தார்.

என்ன தான் தாயிடம் சிரித்தவாறு பேசினாலும் துஷ்யந்தின் இதயமோ இரு மடங்கு வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது.

நீண்ட பெருமூச்சுடன் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான்.

நிஜமாகவே எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத ஒரு தோற்றம்.

ஆனால் துஷ்யந்தின் மனதில் தான் எதுவும் பதியவில்லை.

அங்கு அப் பெண்ணுக்குப் பதிலாக சகுந்தலாவின் முகம் தான் அவனுக்குத் தெரிந்தது.

“என்னப்பா? பிடிச்சிருக்கா?” எனக் கேட்டார் பரிமளம் ஆர்வமாக துஷ்யந்த் வெகுநேரம் அப் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு.

பரிமளத்தின் குரலில் தன்னிலை அடைந்த துஷ்யந்த் ஒரு நொடி தாயின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

அவரின் முகத்தில் இருந்த ஆர்வமும் மகிழ்ச்சியுமே துஷ்யந்திற்கு தான் எடுக்க வேண்டிய முடிவைக் கூறியது.

தொண்டையை செறுமி தன் மனப் போராட்டத்தை நிறுத்தியவன், “எனக்கு சம்மதம் மா. மேற்கொண்டு பேசுங்க.” என்றான் அமைதியாக.

துஷ்யந்தின் பதிலில் பரிமளத்திற்கு கை கால் ஓடவில்லை.

“நிஜமாவா கண்ணா சொல்ற? நிஜமாவா? ஐயோ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் பையனுக்கு கல்யாணம். கடவுளே…” என்றவாறு துஷ்யந்தின் நெற்றியில் முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அவருக்கு சந்தோஷத்தில் வயது குறைந்து விட்டது போல் இருந்தது.

தாயின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியே துஷ்யந்திற்கு போதுமானதாக இருந்தது.

சந்திரசேகரன் வந்ததுமே பரிமளம் அவரிடமும் தன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள, சந்திரசேகரனால் சில நொடிகளுக்கு அவரின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை.

“நிஜமாவே நம்ம பையன் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னானா? நீ ஒன்னும் அவன கட்டாயப்படுத்தலயே.” எனக் கேட்டார் சந்திரசேகரன் சந்தேகமாக.

கணவனை முறைத்துப் பார்த்த பரிமளமோ, “என்னங்க பேசுறீங்க? நான் போய் என் பையன கட்டாயப்படுத்துவேனா? பொண்ண பார்த்ததுமே அவனுக்கு பிடிச்சு போச்சுங்க. உடனே சம்மதிச்சுட்டான்.” என்றார்.

ஆனால் இன்னுமே சந்திரசேகரனால் நம்ப முடியவில்லை.

சந்திரசேகரன் அவதானித்த வரைக்கும் துஷ்யந்தின் மனதில் என்ன இருக்கிறது என அவர் ஓரளவு கணித்து இருந்தார்.

என்ன தான் துஷ்யந்த் விரும்புவது நடப்பில் நடக்க சாத்தியம் இல்லை எனினும் இப்படி திடீரென அவன் திருமணத்துக்கு சம்மதிப்பான் என சந்திரசேகரன் எதிர்ப்பார்க்கவில்லை.

அவரின் முகம் குழப்பத்தைத் தத்தெடுத்திருக்க, கணவனைப் புரியாமல் பார்த்தார் பரிமளம்.

“என்னாச்சுங்க? இவ்வளவு நாளும் நம்ம பையன் கல்யாணத்துக்கு சம்மதிக்கலன்னு கவலைப்பட்டுட்டு இருந்தோம். ஆனா இப்போ அவனே சம்மதிச்சதுக்கு அப்புறம் நீங்க இழுத்துட்டு இருக்கீங்க.” என்றார் பரிமளம் கடுப்பாக.

மனைவியின் பேச்சில் சட்டென தன்னிலை அடைந்த சந்திரசேகரன், “ச்சே ச்சே… அப்படி எல்லாம் இல்ல மா. என் பையனுக்கு கல்யாணம்னா எனக்கும் சந்தோஷம் தானே.” என மனைவியை சமாதானப்படுத்தினார்.

மறுநாள் பரத்தைக் காணச் சென்ற பரிமளத்தின் முகம் அவ்வளவு சந்தோஷத்தைத் தத்தெடுத்து இருந்தது.

அதனைக் கவனித்த சகுந்தலா என்ன என வினவ, “நேத்து தான் துஷ்யந்த் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னான் மா. பொண்ண பார்த்ததுமே அவனுக்கு பிடிச்சுப் போச்சு. அதைக் கேட்டதுல இருந்து எனக்கு கையும் ஓடல. காலும் ஓடல. பையன் திரும்ப மனசு மாற முன்னாடி சட்டுபுட்டுன்னு கல்யாணத்த முடிச்சிடணும்.” என்றார் ஆர்வமாக.

ஒரு நொடி சகுந்தலாவுக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.

இவ்வளவு நாளும் உள்ளுக்குள் பூட்டி வைத்திருந்த ஏதோவொரு உணர்வு வெளியே வரத் துடித்தது.

ஆனால் மறு நொடியே அதனை முகத்தில் வெளிக்காட்டாது வரவழைக்கப்பட்ட புன்னகையுடன், “ரொம்ப சந்தோஷம் ஆன்ட்டி.” என்றாள் சகுந்தலா.

அதேநேரம் பரத்தை அழைத்துக் கொண்டு வெளியே சென்றிருந்த துஷ்யந்தும் பரத்துடன் வந்தான்.

“என்ன ம்மா ரொம்ப ப்ரைட்டா இருக்கு உங்க ஃபேஸ். அப்படி எதைப் பத்தி பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?” எனக் கேட்டான் துஷ்யந்த் புன்னகையுடன்.

“எல்லாம் உன் கல்யாணத்த பத்தி தான் ப்பா. அட… இன்னும் பொண்ணு ஃபோட்டோவ உனக்கு காட்டலயே ம்மா. இதோ இருக்கு பாரு.” என்ற பரிமளம் தன் கைப்பேசியில் இருந்த நிரஞ்சனாவின் புகைப்படத்தைக் காட்டினார்.

எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே அதனை வாங்கிப் பார்த்த சகுந்தலாவிற்கு மனதில் என்ன உணர்வு என்றே தெரியவில்லை.

பரிமளம் கூறியதில் இவ்வளவு நேரமும் புன்னகையுடன் இருந்த துஷ்யந்தின் முகம் சட்டென இறுகியது.

“வாழ்த்துக்கள்…” என்ற சகுந்தலாவின் குரலில் துஷ்யந்தும் அவளின் முகத்தையே நோக்க, இருவரும் பார்வையும் நேருக்கு நேர் சந்தித்தது.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
13
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்