Loading

சந்திரசேகரன் கொண்டு வந்திருந்த தன் மெடிக்கல் கிட்டைத் திறந்து ஸ்டெத்தை எடுத்து பரத்தின் இதயத் துடிப்பை துஷ்யந்த் பரிசோதித்துக் கொண்டிருந்த நேரத்தில் சகுந்தலாவும் பரத்தின் மருந்துகளுடன் வந்து சேர்ந்தாள்.

பரத் இன்னுமே அசௌகரியமாக சிணுங்கிக் கொண்டிருக்க, துஷ்யந்த் பரத்திற்கு ஒரு ஊசியைப் போட்டு விட்டு பரத்தின் மருந்துகளையும் வழுக்கட்டாயமாகப் புகட்டினான்.

சகுந்தலா இன்னுமே பதட்டமாக பரிமளத்தின் கரத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்திலேயே பரத்தின் சிணுங்கல் நின்று அவன் முகம் சாதாரணமாக மாறி ஆழ்ந்த உறக்கத்திற்குள் நுழைந்தான்.

ஆனால் அதற்குள்ளாகவே முற்றாக வியர்த்துப் போய் இருந்தான் சிறுவன்.

டிஸ்யூ பேப்பரால் வியர்வையை லேசாக ஒற்றி எடுத்த துஷ்யந்த் பரத்தின் உறக்கம் கலையாதவாறு அவனை கட்டிலில் கிடத்திய பின் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை வெளிவிட்டான்.

பின் அனைவருக்கும் வெளியே வரும்படி கண் காட்டி விட்டு அறையை விட்டு வெளியேறினான் துஷ்யந்த்.

“என்னாச்சு ப்பா? இஸ் எவ்ரித்திங் ஓக்கே?” என சந்திரசேகரன் துஷ்யந்திடம் கேட்கவும் சகுந்தலாவும் அதே கேள்வியை முகத்தில் தாங்கி துஷ்யந்தின் முகத்தை ஏறிட்டாள்.

“நத்திங் டு வொரி டாட். ஆல் ஓக்கே. இன்னைக்கு கொஞ்சம் அதிகமா டயர்டானதால வந்தது. கூடவே எக்ஸ்ட்ரீம் சந்தோஷத்துல வேற இருந்தான் சேம்ப். அது தான் சடன்னா இவ்வளவு பாரத்தையும் அவன் ஹார்ட்டால தாங்கிக்க முடியல. அதான். நான் மெடிசின்ஸ் கொடுத்து இருக்கேன். இப்போ எல்லாம் ஓக்கே தான். எதுக்கும் நாளைக்கு ஒரு செக்கப் பண்ணிக்கலாம்.” என துஷ்யந்தின் வாய் கூறினாலும் அவனின் முகமோ இன்னும் விடியவில்லை.

இருந்த பதட்டத்தில் சகுந்தலா அதனைக் கவனிக்காவிடிலும் ஒரு வைத்தியராக அதனை சரியாகக் கண்டு கொண்டார் சந்திரசேகரன்.

ஆனால் அதைப் பற்றி விசாரிக்க இது சரியான நேரம் இல்லை என்பதால் அப்போதைக்கு அவர் அமைதியாக இருந்தார்.

துஷ்யந்தின் வார்த்தைகளில் சகுந்தலா ஓரளவு சமாதானம் ஆகி இருந்தாலும் இந்த எதிர்ப்பாராத சம்பவத்தில் முற்றாகத் தளர்ந்து போய் இருந்தாள் பெண்ணவள்.

துஷ்யந்தின் காதல் கொண்ட மனமோ தன் மனம் கவர்ந்தவளை அந்த நிலையில் காண முடியவில்லை.

அவளை அணைத்து ஆறுதல் சொல்ல முடியாத தன் நிலையை அறவே வெறுத்தான்.

ஆனால் சகுந்தலா இருக்கும் நிலைக்கு இப்போது அவளுக்கு ஒரு துணை நிச்சயம் தேவை என்பதால் பரிமளத்தின் பக்கம் திரும்பியவன், “அம்மா… ரொம்ப லேட் ஆகிடுச்சு. இன்னைக்கு நைட்டுக்கு நீங்க இங்கயே இவங்களுக்கு துணையா இருங்க. நான் காலைல வந்து உங்கள வீட்டுல விட்டுட்டு இவங்க ரெண்டு பேரையும் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன்.” என்றான் துஷ்யந்த்.

பரிமளம் பதிலுக்கு ஏதோ கூற வர, சகுந்தலாவின் பக்கம் ஜாடை காட்டியவன் கூறியதைப் புரிந்து கொண்ட அவன் தாயும், “சரி ப்பா. நான் பார்த்துக்குறேன். நீ எதையும் நினைச்சு வருத்தப்படாதே.” என்றவர் சகுந்தலாவின் கரத்தை ஆறுதலாகப் பற்றிக் கொண்டார்.

ஆனால் இவர்களின் பேச்சு எதையும் கிரகிக்கும் நிலையில் சகுந்தலா இருக்கவில்லை.

“அப்பா… நாம கிளம்பலாம். அம்மா… பார்த்துக்கோங்க.” என்ற துஷ்யந்தைத் தொடர்ந்து சந்திரசேகரனும் வெளியேறினார்.

புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது அவ் வீடு.

அதுவும் சகுந்தலாவின் மனமோ இன்னும் ஆழ் கடலாய் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சிகள். எத்தனை சம்பவங்கள். எத்தனை வகையான உணர்வுகளின் குவியல்.

அவளால் சட்டென அவற்றில் இருந்து மீள முடியவில்லை.

பரிமளம் தான் அவளை கட்டாயப்படுத்தி உறங்க வைத்தார்.

இங்கோ வீட்டுக்கு வந்ததில் இருந்தே ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த மகனையே விழி அகற்றாமல் நோக்கினார் சந்திரசேகரன்.

துஷ்யந்த் ஒன்றும் கூறாவிடினும் அவருக்கு ஒன்று மட்டும் புரிந்தது.

அது துஷ்யந்த் கூறியது போல் பரத்தின் நிலைமை அவ்வளவு சாதாரணமாக இல்லை என்பதே.

துஷ்யந்தின் அருகில் அமர்ந்து அவனின் தோளில் தட்டிக் கொடுத்த சந்திரசேகரன், “பரத்தோட ரியல் கண்டிஷன் என்ன கண்ணா?” எனக் கேட்டார் அமைதியாக.

சந்திரசேகரனின் கேள்வியில் துஷ்யந்த் அவரை அதிர்ந்து நோக்க, “உன் அப்பா கிட்ட வேணா நீ மறைக்கலாம் ப்பா. ஆனா ஆஸ் அ டாக்டரா என் கிட்ட இருந்து உன்னால மறைக்க முடியாது. இதைப் போல பல பேஷன்ட்ட கடந்து வந்தவன் நான். என்ன கண்ணா பிரச்சினை?” எனக் கேட்டார் சந்திரசேகரன்.

துஷ்யந்த் தலையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு அமைதி காக்க, “ஒரு வேளை பரத்தால…” என சந்திரசேகரன் இழுக்கும் போதே அவர் என்ன கேட்க வருகிறார் எனப் புரிந்து கொண்ட துஷ்யந்த், “அப்பா…” என அலறி விட்டான்.

துஷ்யந்தால் கற்பனையிலும் கூட அதனை எண்ணிப் பார்க்க முடியவில்லை.

“நோ ப்பா. பேச்சுக்கு கூட அப்படி சொல்லாதீங்க. வேணாம்… ப்ளீஸ்… சேம்ப்புக்கு ஒன்னும் இல்ல. அவனுக்கு ஒன்னும் இல்ல. என் சேம்ப்புக்கு எதுவும் ஆக நான் விட மாட்டேன். விட மாட்டேன்.” என துஷ்யந்த் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான்‌.

தான் சாதாரணமாகக் கேட்டதற்கு மகன் இந்தளவு எதிர்வினை ஆற்றியது சந்திரசேகரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஏற்கனவே அவர் மனதில் இருந்த சந்தேகத்துக்கு மேலும் வலு சேர்த்தது துஷ்யந்தின் இந்த நடவடிக்கை.

ஆனால் அவரின் ஒரு மனமோ ஒரு வைத்தியராகத் தான் ஒரு சிறு பிள்ளையின் மீது வைத்த தன்னலமற்ற அன்பினால் தான் மகன் இவ்வாறு நடந்து கொள்கிறான் என அவரை சமாதானம் செய்யப் பார்த்தது.

இருந்தும் அது பற்றி விவாதிக்க இது சரியான சந்தர்ப்பம் இல்லை என்பதால் அதனை சற்று தள்ளிப் போட்டார்.

“எங்கே காம் டவுன் மை போய். ஜஸ்ட் ரிலாக்ஸ். அப்போ என்ன பிரச்சினைன்னு ஷேர் பண்ணு‌.” எனக் கேட்கவும் நீண்ட பெருமூச்சை வெளியிட்ட துஷ்யந்த், “நீங்க கேட்டது போல இல்லன்னாலும் நாம தாமதிக்குற ஒவ்வொரு நொடியுமே ரிஸ்க் தான் ப்பா. சகுந்தலா கிட்ட என்னால பரத்தோட ரியல் கண்டிஷன சொல்ல முடியல. அவ தாங்க மாட்டா. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சேம்ப்புக்கு ஹார்ட் ட்ரான்ஸ்ப்லான்ட் பண்ணி ஆகணும். என்ன பிரச்சினைன்னா பரத்தோட ப்ளட் க்ரூப் ஓ நெகடிவ். அதுக்கு பொருத்தமான ஹார்ட் கிடைக்குறது ரொம்ப ரேர். இன்னைக்கு கூட பார்த்தீங்க தானேப்பா கொஞ்சம் அதிகமா சந்தோஷமா இருந்ததுக்கே அவன் ஹார்ட்டால அதைத் தாங்க முடியல. சின்ன பையன் ப்பா அவன். அவன் கிட்ட போய் சிரிக்காதே, அதை செய்யாதே, இதை செய்யாதேன்னு சொல்ல முடியுமா? அப்படி சொல்றது நிலைமைய இன்னும் மோசமாக்கும்.” என்றான் கலக்கமாக.

அதில் அவன் சொல்லாமல் விட்ட பலதும் கூட சந்திரசேகரனால் புரிந்து கொள்ள முடிந்தது.

“சோ பரத்தோட கண்டிஷன பொருத்தவரை ஃபிஃப்டி ஃபிஃப்டி சான்ஸ் தான். ஆம் ஐ கரெக்ட்?” எனக் கேட்ட தந்தையிடம் ஆமோதிப்பாய் தலை அசைத்தான் தனையன்.

“ஓக்கே. நாம ஏன் வீணா நெகடிவ்வா திங்க் பண்ணணும். உனக்கு துணையா இன்னும் சில பெஸ்ட் கார்டியோலஜிஸ்ட வர வைக்கலாம். எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமையும்னு சொல்லுவாங்க. நாம பாசிட்டிவ்வா திங்க் பண்ணலாம். நிச்சயம் நல்லதே நடக்கும். இந்த விஷயத்துல உனக்கு என்ன சப்போர்ட் வேணும்னாலும் என் கிட்ட தயங்காம என் கிட்ட கேளு. இப்போ கொஞ்சம் நேரம் நல்லா தூங்கி எழு. நம்ம மூளைக்கு ரெஸ்ட் கிடைச்சா தான் நம்மளால தெளிவா சிந்திக்க முடியும். குட் நைட் மை சன்.” என்றவர் துஷ்யந்தின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு அங்கிருந்து அகன்றார்.

___________________________________________________

மறுநாள் காலையே சகுந்தலாவின் வீட்டுக்கு கிளம்பிய துஷ்யந்த் பரிமளத்தை வீட்டில் கொண்டு சென்று விட்டு விட்டு சகுந்தலாவையும் பரத்தையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குக் கிளம்பினான்.

முன் தினம் இருந்த உற்சாகம் எதுவும் அன்று பரத்திடம் காணப்படவில்லை.

காலையில் எழுந்ததில் இருந்தே மிகவும் சோர்வாகக் காணப்பட்டான்.

வழமையாக துஷ்யந்தைக் கண்டதுமே துள்ளிக்கொண்டு ஓடி வரும் சிறுவனோ இன்று துஷ்யந்த் வந்ததும் எதுவும் பேசாமல் அவன் மடியில் அமர்ந்து கழுத்தைக் கட்டிக் கொண்டான்.

இதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சகுந்தலாவிற்கு தொண்டை அடைத்தது.

துஷ்யந்த் என்ன தான் சமாதான வார்த்தைகள் கூறி இருந்தாலும் பரிசோதனை முடிவுகள் தெரியும் வரை சகுந்தலாவால் சாதாரணமாக இருக்க முடியவில்லை.

“என் பையனுக்கு எதுவும் இருக்காது தானே துஷ்யந்த்.” எனத் தனக்கு அருகில் பரத்தைக் கையில் வைத்துக்கொண்டு அமர்ந்து வந்தவளின் கேள்வியில் ஒரு கரம் ஸ்டியரிங் வீலில் இருக்க, மறு கரத்தை எடுத்து சகுந்தலாவின் கரத்தை அழுத்தி ஆறுதல் சொல்லக் கொண்டு சென்றான்.

மறு நொடியே தான் செய்ய நினைத்த காரியம் உணர்ந்து அவசரமாக உள்ளங்கையை அழுத்தமாக மடக்கிக் கொண்டான் துஷ்யந்த்.

இதை எதையும் கவனிக்கும் மனநிலையில் சகுந்தலா இருக்கவில்லை.

தலையை இட வலமாக அசைத்து தன்னை சமன் செய்து கொண்டவனோ, “சகுந்தலா… இது நீ ரொம்ப தைரியமா இருக்க வேண்டிய நேரம். சேம்ப்புக்கு ஒன்னும் இல்ல. நான் அவனுக்கு எதுவும் நடக்க விட மாட்டேன். என் மேல நம்பிக்கை இல்லையா?” எனக் கேட்டான் துஷ்யந்த்.

கண நேரம் கூட யோசிக்காத சகுந்தலாவோ மறு நொடியே, “என்னை விட அதிகமா நம்புறேன்.” என்றாள் பாதையை வெறித்த வண்ணம்.

துஷ்யந்த் அதற்கு பதில் ஏதும் கூறாவிடினும் அவன் மனதுக்கு சகுந்தலாவின் வார்த்தைகள் இதமாக இருந்தது என்னவோ உண்மை தான்.

மருத்துவமனை வந்ததும் துஷ்யந்தே முன் நின்று பரத்திற்கான அனைத்துப் பரிசோதனைகளையும் மேற்கொண்டான்.

அதற்கே மேலும் சோர்வு அடைந்து விட்டான் பரத்.

“மம்மி… போதும். வீட்டுக்கு போகணும்.” என அடம் பிடிக்கவே ஆரம்பித்து விடவும் சகுந்தலாவால் அவனை சமாளிக்க முடியவில்லை.

ஏன் துஷ்யந்தின் பேச்சு கூட அன்று எடுபடவில்லை.

வேறு வழியின்றி விரைவாக அனைத்துப் பரிசோதனைகளையும் முடித்துக் கொண்டு இருவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான் துஷ்யந்த்.

“நாங்களே போய் இருப்போம்ல. உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் துஷ்யந்த்?” எனக் கேட்ட சகுந்தலாவை துஷ்யந்த் ஒரு பார்வை தான் பார்த்தான்.

அத்துடன் கப்சிப் என வாயை மூடிக் கொண்டாள் சகுந்தலா.

பரத் பாதி வழியிலேயே உறங்கி விட்டிருக்க, இருவரையும் வீட்டில் விட்டு விட்டு கிளம்பினான் துஷ்யந்த்.

“எதைப் பத்தியும் யோசிச்சு கவலைப்படாதே. சேம்ப்புக்கு கூடிய சீக்கிரம் குணமாகும். எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. ஈவ்னிங் பரத்தோட ரிப்போர்ட் வந்துடும். நான் ஈவ்னிங் வந்து பார்க்குறேன். என்ன சரின்னா உடனே எனக்கு கால் பண்ணு. ஒருவேளை நான் கால் அட்டன்ட் பண்ணலன்னா ஹாஸ்பிட்டல் லைனுக்கு கால் பண்ணு. அப்படி இல்லையா அப்பாவுக்கோ அம்மாவுக்கோ கால் பண்ணு. முடிஞ்ச வரை நான் சீக்கிரம் வரப் பார்க்குறேன்.” எனப் போகும் போது சொல்லி விட்டே கிளம்பினான்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
15
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்